Published:Updated:

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

Published:Updated:
புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

ம் காலத்தின் பெறுமதிமிக்கக் கலைகளில் ஒன்றான நவீன ஓவியம், இன்றளவும் நம்மிடையே அதிகமும் அறியப்படாத, பிடிபடாத புதிர்ப் பிரதேசம். இதன் காரணமாக, சிந்தனைகளிலும் அழகியலிலும் நம்மை மேம்படுத்தக்கூடிய செழுமையான அனுபவங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, இன்றைய பிற கலைச் சாதனங்களோடு ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், முனைப்புடன் இயங்கும் பலரும்கூட, நவீன ஓவியம் குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கேலிப் பொருளாகப் பார்த்து நையாண்டி செய்யும் மனோபாவமும் இருக்கிறது. நம்முடைய சமகாலத்தில் சில தமிழ்த் திரைப்படங்கள், நவீன ஓவியத்தை நகைச்சுவைக் காட்சிக்கான ஒரு பொருளாகவே பயன்படுத்தியிருக்கின்றன. நவீன ஓவியம் என்பது ஒரு பேத்தல் வேலை என்றும், அதை ரசிப்பதாக பாவனை செய்பவர்கள் பம்மாத்துப் பேர்வழிகள் என்பதுமான எண்ணத்தை வெகு மக்களிடம் உருவாக்கும் கைங்கரியத்தை அவை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகின்றன. ஒரு கலை சார்ந்த படைப்பாளிகள், இன்னொரு கலை சார்ந்த படைப்பாளிகளை எவ்விதப் புரிதலும் இல்லாமல் நையாண்டி செய்வது வேதனைக்குரிய விஷயம்.

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன ஓவியம் அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று இல்லைதான். ஏனென்றால், அது புதியது. முற்றிலும் புதியது. எந்தவொரு புத்தாக்கமும் அதுவரை நாம் அறிந்திராத ஒன்றாகவே இருக்கும். அறியப்படாதவற்றை அடைவதன் மூலமே, நம் கலை அனுபவம் செழுமையடையும். அறியப்படாதவற்றை அடைவதற்கான ஒரே வழி, அவற்றோடு பயணிப்பதற்கு நாம் பிரயாசைகளும் பயிற்சிகளும் மேற்கொள்வதுதான். நவீன ஓவியம் புரிந்துகொள்ளச் சிரமமாக இருப்பதற்கு, அது தன் வெளியீட்டு நுட்பங்களில் புதுப்புதுக் கோலங்கள் கொண்டிருப்பதுதான் அடிப்படைப் பிரச்னை. அதில் உள்ளுறைந்திருக்கும் சிந்தனை முறைகளும், குறியீடுகளும், குறியீட்டு ரீதியான சிதைப்புகளும், வண்ணங்களின் பிரத்யேக அர்த்தங்களும், படைப்பாளியின் உள்ளார்ந்த தனித்துவமும் அவற்றோடு பயணிப்பதில் சில இடர்களையும் சிரமங்களையும் நமக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் பிரயாசைகள் மூலம் அவை சில புரிதல்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். அது நம் கலை அனுபவ எல்லைகளை வெகுவாக விஸ்தரிக்கும்.

நவீன ஓவியம் தோன்றுவதற்கும் எழுச்சி பெறுவதற்கும் அசுரப் பாய்ச்சல்கள் நிகழ்த்துவதற்கும் முன்பாக, ஓவியக் கலையானது காலம் காலமாக நுண்கலையாகவும், பல நூற்றாண்டுகளாகச் சமயம் சார்ந்த கருத்து மற்றும் அழகியல் வெளிப்பாடாகவும் இருந்து வந்தது. மனிதத் தோற்றங்களையும், பிற உயிரினத் தோற்றங்களையும் இயற்கைக் காட்சிகள் மற்றும் வாழ்வியல் காட்சிகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்துவதே அதன் சிறப்பாகவும் வசீகரமாகவும் இருந்தன. நமக்கு அறிமுகமானவற்றை அற்புதமாகக் காட்சிப்படுத்தும் திறனே அதன் வியப்பூட்டும் சாதனையாக உணரப்பட்டது. ஆக, மரபான ஓவியங்கள் தோற்றங்களைப் பிரதிபலிப்பதையும் பிரதிநிதித்துவப் படுத்துவதையும் கலை வெளிப்பாடுகளாகக் கொண்டிருந்தபோது, நவீன ஓவியம் இந்த முறைமையை முற்றிலுமாகப் புறக்கணித்தது. நவீன ஓவியம் உருவாகவும் ஒரு புதிய திசையில் பயணிக்கவும் வரலாற்றுப் பின்புலமே காரணம்.

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

19-ம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த தொழிற் புரட்சிதான் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகும். இதன் புலர்தலில் உருவானதுதான் நவீன யுகம். வரலாற்றில் தனிமனிதன் உருவானான். புதுப்புது தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளும் அவை பரவலான பயன்பாட்டுக்கு உள்ளானதும் மனித வாழ்வின் திசையையும் விசையையும் துரிதகதியில் மாற்றியமைத்தன.

காண்கலைகளில் ஒன்றாக, ஒரு முக்கியத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாக, புகைப்படக் கருவி தோன்றியது. புகைப்படக் கருவியின் தொழில்நுட்ப வளர்ச்சி, வெகு விரைவிலேயே அதிநுட்பமான மாற்றங்களுக்கு உட்பட்டு, சில தலைமுறைக்குள்ளாகவே எந்தவொரு காட்சியையும் மிகத் துல்லியமாக வசப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிட்டது. வெகுமக்கள் எளிதில் அடையக்கூடிய ஒன்றாகவும் அது அமைந்தது. ஒன்றைப் பிரதிபலிக்கும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது போலச் செய்யும் மரபான ஓவியக் கலைக்கு இது மிகப் பெரிய சவாலாகியது. ஓவியப் படைப்பாளிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளானார்கள். ஓவியத்தைவிடவும் நுட்பமான வெளிப்பாட்டைப் புகைப்படத்தால் கைப்பற்ற முடிந்ததால் ஏற்பட்ட நெருக்கடி. அதன் விளைவாக, ஓவியங்கள் தம் காலத்தோடு கொண்ட உறவில் அகப்படுத்திய தம் தனித்துவமிக்க பார்வையை, புதிய வெளியீட்டு பாணிகளில் தங்களுடைய ஆளுமையின் ரேகைகளைப் பதிவுசெய்யத் தொடங்கினர். தோற்றங்களை அல்ல; தோற்றங்களில் உறைந்திருக்கும் சாரத்தை அகப்படுத்துவதே கலை என்ற கோட்பாட்டு உத்வேகத்துடன் முதலாவதாக, இம்ப்ரஸனிஸம் தோன்றியது. 19 -ம் நூற்றாண்டின் பிற்பாதியில் செசானிடமிருந்து இந்த நவீன ஓவிய இயக்கம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, கலை ஊடகங்களின் வரலாற்றில் ஒரு நூற்றாண்டுக்குள்ளாக, பிரமிப்பூட்டும் பல்வேறு எழுச்சிகளும் இயக்கங்களும் உருவாகி, நவீன ஓவியம், கலை ஊடகங்களுக்கிடையே பெரும் ஆதிக்கம் செலுத்தியது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து பல்வேறு கலை இயக்கங்கள் முழு வீச்சோடும், உத்வேகத்தோடும் காலத்தினதும் கலையினதும் தேவைகளை நிறைவுசெய்யும் முகமாக எழுந்தன. ஒவ்வொரு கலை இயக்கமும் தனதான கலைக் கோட்பாடுகளைப் பிரகடனப் படுத்தியும், அதன் அவசியத்தை முன்னிறுத்தியும் செயல்பட்டன. இந்தப் பிரகடனங்கள் இலக்கிய உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதிலும் புதிய அலைகள் உருவாக வழி செய்தன. இம்ப்ரஸனிசத்திலிருந்து தொடங்கிய நவீன கலை இயக்கம், ஒன்றை மேவிய ஒன்றாக, ஒன்றை நிராகரித்த ஒன்றாக, ஒன்றைக் கடந்த ஒன்றாகப் பிரிந்து பிரிந்து, எக்ஸ்பிரஸனிசம், ஃபூவிசம், ஃப்யூச்சரிசம், சிம்பாலிசம், டாடாயிசம், க்யூபிசம், சர்ரியலிசம், மிஸ்டிஸிசம், அப்ஸ்ட்ராக்ட், பின் நவீனத்துவம் என வடிவரீதியாகவும், கருத்துரீதியாகவும், வெளியீட்டம்சங்கள்ரீதியாகவும், படைப்புப்பொருள் மற்றும் நோக்கம்ரீதியாகவும், மாறுபட்ட அணுகுமுறைகளோடு விரிந்து செழித்தது. தொழில் புரட்சிக்கு வித்திட்ட பிரான்ஸ் நாடே பல்வேறு கலை எழுச்சிகளுக்கான கேந்திர மையமாகவும் விளங்கியது.

ஒவ்வொர் இயக்கமும் அதன் தோற்றத்திலேயே, தொடக்க அலை வீச்சிலேயே உயர்ந்த படைப்பாக்கங்களைக் கண்டுவிட்டிருக்கின்றன. பிரவாகமெடுக்கும் ஆற்றலோடு ஒரு கலை எழுச்சி நிகழ்ந்து, அதன் எல்லைகளும் சாந்தியங்களும் முற்றிலுமாக வசப்படுத்தப்படுகின்றன. பின்னர் அது நிலைபெறத் தொடங்கியதும் தேக்கமடைய, பிறிதோர் இயக்கத்தின் எழுச்சி புத்தாற்றலோடும் உத்வேகத்தோடும், புதிய கலை நோக்கங்களோடும், நம்பிக்கையோடும் தோற்றம் கொள்கிறது. மீண்டும் ஓர் இயக்கம் எழுச்சி பெறுகிறது. இச்சுழற்சியிலேயே நவீன ஓவியம் ஓர் உயரிய மரபைத் தொடர்ந்து கட்டமைத்து வந்திருக்கிறது. மாறுபட்ட சாத்தியங்களைத் தேடிக் கண்டடையும் ஒரு மாபெரும் கலைப் பயணம் இது.

புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

இனி, இத்தொடரில் இந்த நெடும் பயணத்தின் பல்வேறு பாதைகளினூடாக நாம் பயணிக்க முயற்சிக்கலாம். நவீன ஓவியத்தின் தொடக்க அலையான இம்ப்ரஸினிசத்திலிருந்து இன்று வரையான ஓவிய இயக்கங்கள் மற்றும் போக்குகள் பற்றித் தொடர்ந்து அவதானிக்
கலாம். ஒவ்வொர் இயக்கத்தின் தோற்றத்துக்குமான காலம், பின்புலம், அதன் கோட்பாடுகள், கலை நம்பிக்கைகள், சிந்தனை முறைகள், வடிவ மற்றும் அழகியல் வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதோடு, அந்த ஓவிய பாணி சார்ந்த ஒரு சிறந்த ஓவியத்தை முன்வைத்து அதன் நுட்பங்களையும் படைப்புக்கூறுகளையும் பரிசீலிக்கலாம். அதன் மொழியோடு பரிச்சயம் செய்துகொள்ள முயற்சிக்கலாம். இவற்றின் மூலம் நவீன ஓவியத்தைப் புரிந்து கொள்வதற்கான சில பாதைகளை நாம் கண்டடைய  முடியும்.

அழகியல் அனுபவங்களின் அவசியத்தை உணர்ந்து, அதற்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள விழையும் திறந்த மனதோடும் வேட்கையோடும், நம் பயணம் அமைந்தால், நம் வாழ்வும் மனமும் புதிதாய் மலர்வதை நிச்சயம் உணரலாம். அதற்கு அடிப்படையாக, முதலில் நாம் நவீன ஓவியத்தைக் கவனிக்கவும் பின்னர் அதை உன்னிப்பாகப் பார்க்கவும் பழக வேண்டும். இதற்கான பயிற்சியை நம் கண்கள் பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, அதனோடு உறவுகொள்ளவும் உரையாடவும், அதன் வழி சிந்திக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு நம் மனதிற்கும் மூளைக்கும் போதுமான பயிற்சியையும் ஞானத்தையும் அளிக்க வேண்டும். நவீன ஓவியங்கள், அவற்றுக்கான பிரத்தியேக மொழியோடு நம்முடன் உரையாடும் குணாம்சத்தோடுதான் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் மொழியை நாம் அறியாததால், அவற்றின் பேச்சு நமக்குப் புரியாததால், நாம் அவற்றை அந்நியமாக உணர்கிறோம். இத்தொடர் மூலம் நாம் நவீன ஓவியத்தோடு ஓர் உரையாடலைத் தொடங்கலாம். இத்தொடக்கம், மிகவும் பெறுமதியான கலை அனுபவங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

பாதை நீளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism