Published:Updated:

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்
பிரீமியம் ஸ்டோரி
ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

ஓவியங்கள் : டிராட்ஸ்கி மருது

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

ஓவியங்கள் : டிராட்ஸ்கி மருது

Published:Updated:
ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்
பிரீமியம் ஸ்டோரி
ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்
ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

2002.06.3

விசுவமடு, சோதியா படையணி முகாம்.

அக்காக்கள் அந்தப் பெரிய பள்ளத்தை நிரவிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி இருந்தாள் கெளஷல்யா. அவள் கையில் ஒரு குதிரை பொம்மை இருந்தது. தனிமையில் இருக்கும்போது அப்பொம்மையை வைத்தே விளயாடிக்கொண்டிருப்பாள். மாலதியக்கா இருக்கச் சொன்ன தென்னங்குற்றியில் கால்களைக் காற்றில் உலவவிட்டபடி கையில் குதிரை பொம்மையுடன், துர்க்கா அக்கா கொடுத்த கண்டோசைக் கடித்துக்கொண்டிருந்த கெளஷல்யாவைப் பற்றித்தான்  கிடங்கை  மூடிக்கொண்டிருக்கும் பெண் போராளிகளும் பேசிக்கொண்டிருந்தனர்.

“கெளசின்ர அப்பா நேற்றும் தாய்க்கு அடிச்சுப் போட்டாராமடி.”

“அந்தாள விதுசாக்காட்ட சொல்லி ஒருக்கா கூப்பிட்டு வொன் பண்ணிவிடோணும்.”

“கெளசி அழுதவளோ?”

“ஓம். பாவம் அவள் சின்னப்பிள்ளை. இஞ்சதான் ஓடி வந்தவள்.”

“பிறகு?”

நாங்கள் ஓடிப்போனம், அந்தாள் தூசணத்தால கெளசின்ர அம்மாவைப் பேசிக்கொண்டு  நிண்டது,  எங்களக் கண்டதும் ஆள் கப்சிப்பா வீட்டுக்கு பின்னால போட்டுது.’’

“பாவம் அவா.”

 “ஏன் சண்டையாம்?”

“கெளசிய ஏன் எங்கட பேசுக்கு விட்டதெண்டு கேட்டு அடிச்சவராம்.”

“அந்தாளுக்கு குடிச்சிச்சிட்டு மனிசிய அடிக்க ஒரு காரணம் தேவையடி துர்க்கா.”

கெளசியை எல்லோரும் பார்த்தனர், அவள் அவர்களைப் பார்த்து கண்ணை சிமிட்டிச் சிரித்தாள். அவளுடைய வட்ட முகம் அவள் அணிந்திருந்த பாவாடை சட்டையில் ஆங்காங்கே மின்னிய சிக்குவின்ஸ்களைப்போல பளிச்சிட்டது. எல்லாப் பாவத்தையும் கழுவிவிடும் ஒரு புன்னகை அவளிடமிருந்ததை அவர்கள் உணர்ந்தனர். ஆனால், யோகேந்திரநாதனுக்குத் தன்னுடைய குழந்தையின் தேவதைத் தன்மைகள் தெரிந்ததேயில்லை.

கெளஷல்யா பற்றி வீரவேங்கை நிலவழகி எழுதிய டயரிக்குறிப்பு:


யோகேந்திரநாதன் நெடுந்தீவில் இருந்து பஞ்சம் பிழைக்க தந்தையோடும் தாயோடும் விசுவமடுவில் குடியேறியவர். தன்னுடைய 20-வது வயதில் தந்தையின் வெற்றிலைக் கடையைப் பொறுப்பேற்றார். மேரி செபஸ்ரினாவை காதலித்து திருமணம் செய்தபோது அவருக்கு வயது 25. செபஸ்ரினா கொழும்பைச் சேர்ந்த இலங்கை பறங்கிய இனத்துப்பெண். நன்றாகத் தமிழ் கதைப்பாள். கொழும்பில் உறவினர் வீட்டுக்குப்போன இடத்தில் அவள் மீது காதல் கொண்டு அவளைக் கல்யாணம் செய்து அவளோடு அங்கேயே இருந்துவிட்டார். அங்கே பிறந்தவள்தான் கெளஷல்யா. தன்னுடைய பேர்த் சேட்டிபிக்கட்  இங்கிலீசில் இருப்பதாய் தன்னுடைய பள்ளிக்கூடத் தோழிகளுக்கும், பேசில் பெண் போராளிகளுக்கும் சொல்லி அவள் புளகாங்கிதம் அடைவதுண்டு. கெளஷல்யா  ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு வன்னிக்கான பாதை திறக்க, யோகேந்திரநாதன் விசுவமடுவிற்குத் திரும்பி மறுபடியும் தன்னுடைய வெற்றிலைக் கடையை ஆரம்பித்தார்.

அவர் திடீரென்று விசுவமடுவிற்குத் திரும்பியது ஏன் என்று செபஸ்ரினா கேட்கவில்லை. இராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தியென்று வாழும் பெண்களில் ஒருத்தியாக இருந்தாள் அவள்.  அவர்களுடைய வீட்டிற்கு அருகில் எங்களுடைய சோதியா படையணியின் முகாம் இருந்தது. விதுசாக்காவின் பொறுப்பில் 60 பெண் போராளிகள் இருந்தோம்.

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


 விசுவமடுவிற்கு வந்த பிறகு யோகேந்திரநாதன் முற்றிலும் மாறிப்போனார். எப்போதும் குடித்துவிட்டு வந்து செபஸ்ரினாவைப் போட்டு அடித்தார். அடிக்கடி அவருக்கு அவளுடைய உணவில் உப்பு இல்லாமல் இருந்தது. அடிக்கடி அவள் கொமினிக்கேசனுக்கு சென்று அவளுடைய குடும்பத்துடன் தொலைபேசியில் கதைப்பதால், தான் சம்பாதிக்கும் பணம் கரைந்துபோவதாகக் குழறினார். கெளஷல்யாவிடும் சின்னத் தவறுக்குக்கூட அவளுடைய பிஞ்சுக்காலில் சிவந்து கன்றிப்போகுமளவிற்கு அடித்தார். வாரத்தில் மூன்றுநாள் யாழ்ப்பாணத்திற்கு வெற்றிலை விற்றுவருவதாகப் புறப்பட்டுவிடுவார். செபஸ்ரினாவிற்கு கொழும்பில் இருந்து அம்மா காசு அனுப்புவது அவருக்கு இன்னும் தெரியாது. அதைச் சொன்னால், அந்தப் பணமும் சாராயக்கடைக்குப் போய்விடும் என்று அந்த அபலைப்பெண் உணர்ந்திருந்தாள். அவளுடைய ஒரே நிம்மதி கெளஷல்யா மட்டும்தான். கணவன் அடித்து கன்றிப்போன தோளிலும், சிகரெட் காயங்கள் ஆறாத மார்பிலும் தன்னுடைய குழந்தையைத் தூக்கிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம், சந்தை, சேர்ச் என்று போய்வருவாள். அவளுக்கு கெளஷல்யா மட்டுமே ஒரே ஆறுதல்.

ஒருநாள் நானும் இசையரசியும் சைக்கிளில் வரும்போது கெளஷல்யாவைத் இடுப்பில் தூக்கியவாறு செபஸ்ரினா வந்துகொண்டிருந்தாள். கொளுத்தும் வெய்யிலில் தன்னுடைய சேலைத் தலைப்பால் கெளஷியின் தலையை மூடியிருந்தாள். வலது தோளில் கெளஷிக்குப் பிரியமான ‘யுனிக்கோன்’ குதிரையின் படம் போட்ட புத்தகப்பை தொங்கியது. அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான் ஜென்ஸ் சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன்.இசையரசி லெடீஸ் சைக்கிளில். நான் கெளஷியை  சைக்கிள் பாரில் ஏற்றிக்கொள்ள, இசையரசி செபஸ்ரினாவை தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டாள். இசையரசியால் பின்னால் செபஸ்ரினாவை ஏற்றிக்கொண்டு கைகளில் துவக்கையும் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க கஸ்ரமாக இருக்கவே, செபஸ்ரினா துவக்கை ஏதோ சுவாமிப் பிரசாதத்தை வாங்குவதைப்போல் பயபக்தியுடன் வாங்கி வைத்துக்கொண்டாள்.

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்


என்னுடைய சைக்கிள் பாரில் அமர்ந்திருந்த கெளஷல்யா, செபஸ்ரினாவிடம் அந்தத் துவக்கைத் தரும்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டே வந்தாள்,  அன்று வரும் வழியில் செபஸ்ரினா அவளுடைய கதையைச் சொல்லிக்கொண்டே வந்தாள். அழுதாள். இடைக்கிட எல்லாம், `கர்த்தர்விட்ட வழி!’ என்று கண்கலங்கினாள். இறுதியாக, ``அவருக்கு யாழ்ப்பாணத்தில ஆரோடையோ தொடர்பெண்டு கதைக்கினம், ஆனா நான் நம்பேல!’’ என்றாள். அதைச் சொல்லும்போது அவளுடைய கண்கள் பனிக்கவில்லை. குரலில் ஒரு விரக்தி ஏறிக்கிடந்தது. அப்போது கௌஷல்யா துவக்கைக் கேட்டு மீண்டும் அடம்பிடித்தாள்.

அதன் பிறகு எங்களுக்கு ஓய்வு நேரம் வரும்போது அல்லது சாப்பாட்டு நேரத்தில் கெளஷியைத் தூக்கி வந்துவிடுவோம் அல்லது அவளே ஓடி வந்துவிடுவாள். எங்களுடன் விளையாடுவாள். விதுசாக்கா என்றால், எங்களுக்கு சரியான பயம். கொஞ்சம் கண்டிப்பான பொறுப்பாளர். ஆனால் கெளஷி, விதுசாக்காவின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டு அவான்ர கன்னத்தில் அறைவாள். ‘விதுசாக்காவை அடிக்கக் கூடிய ஒரே ஆள் கெளஷிதானடி’ என்று சொல்லிச் சிரிப்போம். எங்களுடைய அதிகபட்ச சந்தோஷமாக கெளஷி மாறிப்போனாள்.

2008.03.23

யோககேந்திரநாதன், கெளஷல்யா தரம் 10 விசுவமடு மகாவித்தியாலயம் கெளஷல்யா எழுதிய அம்மா, அப்பா மற்றும் குதிரை

பற்றிய குறிப்பு :


அம்மா எத்தனைத் தடவை அழுதாளோ  அத்தனை தடவை நான் அப்பாவை வெறுக்கிறேன், சே! இல்லை... அவர் எனக்கு அப்பா இல்லை. எங்களுக்குத் துணையா அக்காக்கள் இருக்கினம் . அம்மா இருக்கிறா.எனக்கு ஆர் அப்பா? எனக்கு என்ர ஜேசுதான் அப்பா. ஓம்! நான் அவரின்ர குழந்தை, அம்மா அப்பிடித்தான் சொல்லித் தந்தவா. ஜேசு எனக்கு எல்லாம் கொண்டுவந்து தருவார் எண்டு அம்மா சொல்லுவா. எனக்கு எப்பவும் குதிரைதான் பிடிக்கும். அம்மா எனக்கு சின்னன்ல இருந்து கதை சொல்லுவா. அதில வாற குதிரையள எனக்குப் பிடிக்கும். அம்மா கதையில சொல்லும்போது எனக்கு குதிரை பத்தோட பதினொண்டாத்தான் தெரியும். ஒருநாள் அப்பாவோட யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு போனன், அப்ப நான் ஏழாம் வகுப்பு. அப்பத்தான் நிஜத்தில  கண்ணால குதிரையைக்கண்டனான். என்ன வடிவு. எனக்குப் பார்த்ததும் பிடிச்சிட்டு. தொட்டுப் பார்க்கோணும், ஏறிப் பார்க்கோணும் எண்டு விருப்பமா இருந்தது. அதுக்குப் பிறகுதான் எனக்கு குதிரையில அவ்வளவு விருப்பம் வந்தது. அண்டைக்கு குதிரைய ரோட்டில ஆமிக்காரன் கொண்டு போனத பார்த்ததில இருந்து எனக்கும் ஒரு குதிரை வச்சிருக்கோணும் எண்டு ஆசையா இருந்தது. ஆசுப்பத்திரிக்கு போய் மூட்டு வருத்தத்துக்கு மருந்து எடுத்த பிறகு, ‘குலம் கூல் பார்ல’ அப்பா எனக்கு டீயும் வடையும் வாங்கித் ததந்தவர். எனக்கு மிளகாய் எண்டா புழுத்த பயம். அப்பா என்ர வடைய வாங்கி மிளகாயைப் பிச்சு எடுத்துத் தந்தார். அப்ப நான் அப்பாட்ட கேட்டன்.

“அப்பா எனக்கு குதிரை வாங்கித் தாங்கோவன்.”

“வீட்ல அம்மா எத்தின விளையாட்டிச் சாமான் வாங்கி குவிச்சுவச்சிருக்கிறாள். அதை விளையாடு.”

“விளையாட்டுக் குதிரை இல்லையப்பா, உம்மையான குதிரை.”

“உனக்கென்ன விசரோ? எழும்பி வா பஸ் வெளிக்கிடப் போகுது.”

நான் முகத்தைத் தொங்கப்போட்டபடி வந்து அம்மாட்ட கேட்டன்.

“நீ உழச்சு வாங்கு குட்டியம்மா” என்றாள். வாங்கோணும்.

பேசில அக்காக்களிடமும் சொன்னன், ``நீ வாங்குவாய் செல்லம்’’ என்று முத்தம் கொடுத்தார்கள். நிலவழகி அக்கா எனக்கு ஒரு குதிரை பொம்மை வாங்கித் தந்தவா. முகாமாலைச் சண்டையில் நிலாக்கா வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டதும் நான் அந்த பொம்மையைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதனான். எப்பவும் நான் படுக்கேக்க, அக்கா தந்த குதிரையத்தான் கட்டிப்பிடிச்சுக்கொள்ளுவன்.

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

அண்டைக்கு வீட்ட நடந்த சண்டை இன்னும் கண்ணுக்க நிக்குது. அது நடந்து ரெண்டு வருசம் ஆகீட்டு. அண்டைக்கு நான் வழமைபோல பேசில அக்காக்களோட விளையாடிக்கொண்டு நிண்டனான். அம்மா திடீரெண்டு அய்யோ எண்டு குழறிக் கேட்டுது. அக்காக்கள் எல்லாம் பதிறியடிச்சுக்கொண்டு எங்கட வீட்ட ஓடிச்சினம் நானும் பின்னால ஓடினன். அம்மா எங்கட சாணம் மொழுகின திண்ணையில் தலையப் பிடிச்சுக்கொண்டு இருந்தா. அம்மான்ர கையெல்லாம் ஒரே ரத்தம். தலையால வந்த ரத்தம் அம்மான்ர முழங்கையில இருந்து வடிஞ்சுகொண்டு இருந்தது. அப்பா, அம்மாவைக் கோபமாக தூசணத்தால் திட்டிக்கொண்டு  படலையைத் திறந்தபடி வெளியில போக வெளிக்கிட்டார். அப்பத்தான் விதுசாக்கான்ர கை அப்பான்ர கன்னத்தில ஒரு பெரிய அறை விட்டது. அப்பா தடுமாறிப்போய் விழுந்தார். அவருக்கு நல்ல வெறி. எழும்பி விதுசாக்காவை அடிக்கப் பார்த்தார். அதுக்குள் பக்கத்து வீட்டுக்காரர் சிலபேர் அவரைப் பிடித்து இழுத்து  நிப்பாட்டிட்டினம்.  ஈழநிலா அக்கா என்னைத் தூக்கினா. நான் அவாவ இடறிட்டு அம்மாட்டை ஓடினன். அம்மா மயங்கீட்டா. உடனே அம்மான்ர தலைக்கு துணியால சுத்தி ஆசுப்பத்திரிக்கு கொண்டுபோச்சினம். விதுசாக்கா வோக்கிய எடுத்து காவல் துறைக்கு அறிவிச்சா. காவல் துறை வந்து அப்பாவைக் கூட்டிக்கொண்டு போனது. அண்டைக்குதான் அவரை நான் கடைசியாக் கண்டது. நான் அம்மா வீட்ட வரும் வரைக்கும் பேசிலதான் நிண்டன். என்னை அக்காக்கள் மாறி மாறி மோட்டார் சைக்கிள்ல அம்மாவைப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போவினம். அக்காக்கள்தான் அம்மாக்கு சாப்பாடு குடுத்தவை. துர்க்கா அக்கா, அம்மாவோட துணைக்கு நிண்டவா.
அப்பா அதுக்குப் பிறகு வரேல்ல. நான் அடிக்கடி அம்மாட்ட சொல்லுவன்.

``எங்களுக்கு அக்காக்கள் இருக்கினம்தானே.”

“ஓமடி ராசாத்தி.”

“அம்மா நான் நல்லா படிச்சு உன்னை ராணி மாதிரி வச்சிருப்பன்.”

அம்மா “ஓம். நீ என் ராசகுமாரிதானே” என்று சிரிப்பாள்.

ஓம். நான் ராசகுமாரிதான். குதிரைதான் இல்ல.


2016.06.20

பல்கலைக்கழகப் பேருந்து  குறிகட்டுவன் இறங்கு துறையில் எங்களை இறக்கிவிட்டது.

குறிகட்டுவனில், தரித்து நின்ற படகுகளைப் பார்க்க எனக்குப் பயமாகத்தான் இருந்தது  23 வயதாகின்றது எனக்கு. ஆனால், ஒரு நாளும் படகில் சென்ற அனுபவம் வாய்க்கவில்லை. மாத்தளனில் காலில் காயப்பட்டு மயங்கிய பின்னர் என்னைக் கப்பலில்தான் திருகோணமலைக்குக் கொண்டுவந்ததாக அம்மா சொன்னாள். அதனால் அந்தக் கப்பல் பயணம் எனக்குத் தெரியாது. எனவே குமுதினியில் இன்று நெடுந்தீவு போவதுதான் என்னுடைய முதலாவது கடல் பயணம். கடல் என்றால், எப்போதும் எனக்குப் பயம். குறிகட்டுவனில் நின்று கடலைப் பார்த்தேன். நையினாதீவு அருகில் தெரிந்தது.

திருவிழாக்காலம். ஆதலால், மக்கள் அதிகமாக நையினா தீவுப் படகுகளைப் பிடித்து கோயிலுக்குப் போய்கொண்டி ருந்தனர். வழமைபோல நையினா தீவு விகாரைக்குச் செல்லும் சிங்கள மக்கள் தனி லைனில் கைகளில் தாமரைகளை ஏந்தியபடி நகர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் குமுதினிக்குக் காத்திருந்தோம். காலை வேளைக் கடல் மெள்ள மெள்ள விம்மிக் கொண்டிருந்தது. கடல் பூமிக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு உலகமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் நம்பினேன். குமுதினி வந்து தரித்து நின்றாள். விதுசாக்கா ஒருநாள் மாவீரர் தினத்தில் உரையாற்றும் போது, குமுதினிப் படுகொலை பற்றி கண்ணீருடன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நடுக்கடலில் குமுதினி ரத்தத்தாலும் மரணத்தாலும் நிரப்பப்பட்டாள், ஒட்டுமொத்த தமிழ்ச்சனமும் அழுதது என்றாள் விதுசாக்கா. அக்காவின் உறவினர் யாரோ கொல்லப்பட்டதாக  துர்க்கா அக்கா கிசுகிசுத்ததும் ஞாபகம் வந்தது.

குமுதினியில் ஏறியபோது, ஏதோ ஒரு வெக்கை உடலில் மோதியது. என்னுடைய தோழிகளும் நண்பர்களும் ஏறினார்கள், நெடுந்தீவு மக்களும் ஏறினார்கள். எண்ணெய் ஏறிய முகங்களை அளந்தேன்.  அனேகமாக யாழ்ப்பாணம் டவுனுக்கோ அல்லது வைத்தியசாலைக்கோ போய்விட்டு வருபவர்களாக இருக்கும். அவர்களுக்குப் படகுப் பயணம் இயல்பான ஒன்றுதான். குமுதினி அவர்களை வயிற்றுக்குள் வைத்து பலமுறை சுமந்து சென்றிருப்பாள்.

“குழந்தைப்பிள்ளைக்காரருக்கு இடம் குடுங்கோ” ஓட்டி ஒருவர் பெரிய குரலில் சொன்னார். நாங்கள் மேல்தளத்தில் நிற்க முடிவுசெய்தோம். வெய்யிலுக்குக் குடைகளை எடுத்துக்கொண்டோம். நாங்கள் நெடுந்தீவிற்கு அங்கிருக்கும் மரபுரிமைச் சின்னங்களை ஆய்வுசெய்யப் புறப்பட்டிருந்தோம்.

அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவர் நெடுந்தீவில்தான் பிறந்தார். தன்னுடைய ஊர் பற்றி அடிக்கடி சிலாகித்துக்கொள்வார். எனக்கு குதிரைகள் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். எப்போதாவது என்னை அபூர்வமாகத் தூக்கி மடியில் வைத்துக்கொள்வார். நெடுந்தீவில் குதிரைகள் இருக்கின்றன என்று சொல்வார். குதிரைகள் என்றதும் நான் குதூகலமாகி, அவர் வாயை ஆவலாகப் பார்க்க ஆரம்பிப்பேன். ஆனால் மேலே சொல்ல மாட்டார். அவருக்கு அது ஒரு சாதாரண விடயம்தானே. அவருக்கு நான் ஒரு இராஜகுமாரியென்றும்  என்னிடம் குதிரையில்லை என்றும் தெரியாது. அது அம்மாக்கும் அக்காக்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்

அக்காக்கள்..! “அம்மா, எங்களுக்கு அக்காக்கள் இருக்கிறார்கள்” அப்போது நான் அம்மாவிடம் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் இல்லாமல் போன பின்னர்தான், அம்மாவையும் என்னையும் மோசமான ஆண் உலகால் நெருங்கிவர முடிந்தது. ஆண் துணையில்லாத வீடு என்பது இந்த உலகத்திற்கு என்னவாய் எல்லாம் தெரிகின்றது. எவ்வளவு கொடூரமான நாக்குகள் இருக்கின்றன பலருக்கு. இரத்தமும் சதையுமாலன்றிப்  பழிச்சொற்களால் செய்யப்பட்ட நாக்குகள்.

 விஸ்வமடுவில் இருந்து எனக்கு கம்பஸ் கிடைத்ததும் யாழ்ப்பாணம் ஓடிவந்ததற்கு  அதுவும் ஒரு காரணம். நலன்புரி முகாமில் விடுதலையாகி வந்து பழையபடி விஸ்வமடுவில் இருந்தோம். அம்மா ஏ.எல் மட்டும் கொன்வன்ரில் ஆங்கில மொழியில் படித்தவள். நிறைய வாசிப்பாள். அம்மாவையும் என்னையும் அம்மம்மா கொழும்பிற்கு வரும்படி அழைத்தாள். ஆனால், அம்மா போகவில்லை. நான் பல்கலைக்கழகம் நுழைந்தவுடன் யாழ்ப்பாணம் வந்துவிட்டோம். அம்மா ஒரு நேசரியில் டீச்சராக இருந்தாள். எனக்கும் அம்மாவிற்கும் போதுமான வருமானம். என்னுடைய பல்கலைக்கழக உதவிப்பணத்தில் படிப்பினைப் பார்த்துக்கொண்டேன். வீட்டில் அயல் வீட்டுப் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்தேன். அப்பாவுடன் இருக்கும்போதும், முகாமில் இருக்கும்போதும் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும்போது இந்த வாழ்க்கை எனக்கும் அம்மாவிற்கும் நிம்மதியான ஒன்றுதான்.  வனிதா அன்ரிதான் எங்களுக்கு எல்லாமுமாய் இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் அம்மாவின் பால்யகாலத் தோழியான வனிதா அன்ரி வீட்டில் நாங்கள் இருந்தோம். வனிதா அன்ரி கல்யாணமாகி அவருடைய கணவர் சவுதியில் இருந்தார். வருஷத்தில் ஒருமுறைதான் வருவார். மற்றபடி வனிதா அன்ரிக்கு நாங்களும் அவர் எங்களுக்கும் துணையாக இருந்தோம். ஆனாலுமங்கும் சில நாக்குகள் மோசமாவே இருந்தன. வனிதா அன்ரி மிகவும் தைரியசாலி. ஏதும் கதைப்பவர்களை ரெண்டில் ஒன்று பார்த்துவிடுவாள். எனக்கு வனிதா அன்ரியைப் பார்க்கும்போது விதுசாக்காவின் ஞாபகம் வரும். அக்காக்களை அடிக்கடி நினைத்து அழுவேன்.

யார் யார் உயிருடன் இருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். 2009 ஜனவரியில் அவர்களின் முகாம் கலைக்கப்பட்டபோது, என்னிடம் வந்து விடை பெற்றுப்போனார்கள். அழுது குழறினேன். அம்மாவும் அழுதுவிட்டாள். அம்மாவிற்குத் தைரியம் சொல்லிவிட்டு, அம்மாவின் கையில சங்கிலி ஒன்றை விதுசாக்கா கொடுத்துவிட்டுப்போனார். அங்கிருந்த 60 போராளிகளுக்கும் நானொரு மகளாக இருந்தேன். மார்ச் மாசத்தில் விதுசாக்கா வீரச்சாவடைந்ததாக அறிவித்தார்கள். ஈழநிலாக்கா, தமிழ்நதியக்கா, துர்க்காக்கா என்று அடுத்தடுத்து சந்தனப்பேழைகளில் வந்தனர். எனக்கு சாவு என்பது என்னவென்று விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் எல்லாவற்றையும் சொல்லித்தந்த என்னுடைய அக்காக்கள் சாவையும் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு சொல்லித்தந்துவிட்டுப் போனார்கள்.

குமுதினிக்குள் இறங்கினோம். ஓர் வெம்மை குமுதினிக்குள் இருந்து வந்து உடலில் மோதியது. தோழிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு இறங்கினேன். நண்பர்கள் படகில் இருக்கும் நெடுந்தீவு மக்களுக்கு இதழ்களை விநியோகிக்கத் தொடங்கினர். நான் படகின் யன்னலால் கடல் பரப்பைப் பார்த்தபடியிருந்தேன். எப்போதும் அம்மாவின் வயிற்றில் ஏறிப் படுத்துக்கொள்வேன், அடிக்கடி அம்மா எதையாவது யோசித்து யோசித்து பெருமூச்செறிவாள். அப்போது அவளுடைய வயிறு விம்மி விம்மி எழுந்து அடங்கும். அழுதால், நான் கண்டுபிடித்துவிடுவேன். பிறகு, அவளுடைய சோகம் என்னிடம் வந்துவிடுமென்று என்னிடம் எப்போதும் சிரித்துக்கொண்டு, தன்னுடலுக்குள் தன் துன்பமெல்லாம் அடக்கிவைத்திருந்தவள். அந்த விம்மல் அவளுடைய பெருமூச்சில் தெரியும். இன்று கடலைப் பார்க்கும்போது அதன்  சலனம் அம்மாவின் பெருமூச்சில் விம்மும் மார்பினைப்போல எனக்குத் தெரிந்தது. அலைகளின் சலனம் குமுதினியை சற்று அசைக்கவே நண்பியொருத்தி “என்னடி இப்பவே இப்பிடி ஆட்டுது” என்று பயந்தாள். நான் கடலையே பார்த்தபடியிருந்தேன். சிங்கள மக்கள், வெள்ளைக்காரர்கள், நெடுந்தீவுக்காரர்கள் என்று பல முகங்கள் வியர்க்க விறுவிறுக்க படகினுள் அடைந்துகொண்டனர். குமுதினி மெள்ள நகர ஆரம்பித்தாள்.

நெடுந்தீவு முருகைக்கற்களால் செய்யப்பட்ட தேசம். பெருநிலத்தின் குணங்குறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கடல் நிலம். கற்களை அடுக்கிக் கட்டிய மக்களின் மதில்சுவர்கள் ஒன்றுக்கொன்று தம்முடைய சொரசொரப்பான உடலால் பின்னிப்பிணைந்து கிடந்தன. கடற்படையின் முகாம்கள் புதுப் பாத்திரமொன்றில் திடீரென ஆங்காங்கே உருவான துருக்களைப்போல சிங்களப் பெயர்ப்பலகைகளுடன் இருந்தன. சொற்பமான மனிதர்களையே அங்கே காண முடிந்தது. இலங்கையின் மிகப்பெரிய தீவு அது. தொன்மையான சரித்திரத்தையும் மரபுகளையும் கொண்டு நின்றது. அங்கு வாழ்ந்த பலகுடிகள் இடம்பெயர்ந்து போன பிறகு பாதி நிலம் தரிசாக, கற்கள் சிதறிப்போய்க்கிடக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஆல மரங்கள், விழுதுகள் விழுந்த மூத்த ஆலமரங்கள், எங்கும் முருகைக்கற்கள். நாங்கள் ஒவ்வோர் இடமாகப் பார்த்தோம். நான் குதிரைகளைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஏற்கெனவே கட்டையாகி, பராமரிப்பற்று நொஞ்சுபோய் இருந்த அந்தக் குதிரைகளை நான் போட்டோக்களில் பார்த்திருக்கின்றேன், ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் விட்டுப்போன மிச்சங்களின் மிச்சங்களாய் நொடிந்து போய் அந்தக்குதிரைகள் அங்கே துன்பத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தன. பலகதைகளுக்குச் சொந்தமான பழைய தொன்மங்களின் வழித்தோன்றல்கள், `குல்சாரி’ நாவலில் வரும் `குலுங்கா நடையான்’ என்ற குதிரை அப்படித் தான் இருக்கும்.

 அப்பா தன்னுடைய அம்மாவின் ஊரைப் பற்றி சொன்னது ஞாபகம் வந்தது. விதுசாக்கா கொடுத்த அடியுடன் காவல்துறை அவரைப் பிடித்துக்கொண்டு போனபோது அவரின் முகம் அதே காட்சியோடு என்னுள் பதிந்து கிடக்கின்றது. அவர் யாழ்ப்பாணம் வந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டதாக அம்மாவுக்கு யாரோ சொன்னதை நான் அப்போது கேட்டிருக்கிறேன். ஆனால் அப்பா போனதன் பின்னர் அம்மா நிம்மதியாக இருந்தாள் என்று நினைத்தேன். இடைக்கிட அவளிடமிருந்து வெளிப்படும் விம்மலுக்கு ஒரே மருந்தாக நான் மட்டுமே இருந்தேன். ஊரில் இருப்பவர்களின் கதைகளுக்கு அம்மா முகம் கொடுத்தபோது ஒருநாள் “அப்பா இருந்திருக்கலாமடி” என்று சொல்லிவிட்டாள். எனக்குக் கோபம்தான் வந்தது. ``அவர் உன்னை அடிச்சே சாக்கொல்லியிருப்பார் அம்மா.’’ என்னை அணைத்துக்கொண்டு அழுதாள். “நீயும் பெரிய பிள்ளை ஆகிட்டயடி. அதுதான் பயமாக்கிடக்கு!.”

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்


அம்மா எனக்குள் குறைவான ஆசைகளை மட்டும் உருவாக்கும் தன்மையை வளர்த்திருந்தாள். அத்தோடு அவளிடமில்லாத தைரியத்தை நான் கொண்டிருப்பதாய் சொல்வாள். விதுசாக்காவைப் போலவே நானும் கதைப்பதாய் சொன்னாள் . எனக்கு அது பெருமையாய் இருக்கும். தவிர நானொரு ராஜகுமாரியல்லவா, குதிரையில்லாத ராஜகுமாரி. எனக்கிருந்த அதிகபட்ச ஆசையே குதிரை மட்டும்தான் போலும். என்னுடைய சிறுபிராயத்தை நினைத்து சிரித்துக்கொள்வேன். அல்லது அழுவேன்.

அன்று மதியத்தின் பின்னர்தான் குதிரைகள் நிற்கும் வெளிகளுக்குப் போனோம். நீண்ட இந்துக்கடல் சிறுகாடுகளுக்கு அப்பால் தெரிந்தது. கடற்கரைகளில் உள்ள புல் நிலங்களில் செம்மண் நிறத்தில் அந்த குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் குட்டிகளோடும் கூட்டம் கூட்டமாயும் தனியாகவும் அவை மேய்ந்துகொண்டிருந்த அவற்றின் தோற்றம் பரிதாபமாய் இருந்தது.  இவற்றில் ஏறி எந்த அலெக்சாண்டரும் போர் புரிய முடியாது. இவற்றில் ஏறி எந்த பிருத்விராஜனும் காதலியை இரட்சிக்கச் செல்ல முடியாது. ஆனாலும், அவற்றை எனக்குப் பிடித்துக்கொண்டது. அவை குதிரைகள். அவை அப்படி இருப்பது அவற்றின் தவறல்லவே.

என்னுடைய நண்பர்கள் அவை குதிரைகளா, போனிகளா, கோவேறுக் கழுதைகளா என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். நான் அவர்களைவிட்டு விலகி, வெய்யிலில் நடந்து அவற்றின் அருகில் போனேன். என் அருகாமையைக் கண்டு விலகி மெள்ள ஓடின. எனக்கு அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் அவை என் அருகில் நிற்கப் பயந்தன. நண்பர்கள் என்னைப்பார்த்து சிரித்தார்கள். சிலர் நாகதாளிப்பழங்களைப் பிடுங்கி உண்ணத் தொடங்கினார்கள். சிலர் கமராக்களை உயிர்பித்து படங்களை எடுக்கத் தொடங்கினார்கள்.

எனக்குள் குதிரைகளைக் கண்டதும் எங்கிருந்தோ ஓர் இனம்புரியாத குதூகலம் தொற்றிக்கொண்டது. அக்காக்களை நினைத்துக்கொண்டேன். அவர்களுடன் விளையாடுவதுபோல் ஒரு பிரமை அந்த குதிரைகளை நெருங்கிச் செல்லும்போது எனக்குள் எழுந்தது. கொளுத்தும் வெய்யில் எனக்கொரு பொருட்டாயில்லை.

அப்போது சற்றுத்தள்ளி ஒரு வெளியில் அவனைக் கண்டேன். ஒரு சிறுவன்.  அவன் உயரமே உள்ள குதிரையொன்றின் மீது ஏறி அந்த வெளியில் உச்சி வெய்யிலில் போய்க்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என்னுடைய நண்பர்கள்  உற்சாகமானார்கள். அவனைக் கை தட்டி அழைத்தார்கள். ரப்பர் கயிற்றால் கட்டப்பட்ட அந்தக் குதிரையை எங்கள் பக்கம் திருப்பி மெள்ள மெள்ள நடத்தி வந்தான். நண்பர்கள் சிலர், “அய்யோ பாவம், குதிரை நொஞ்சான்போல இருக்கு. அதில உந்தப் பெடியன் ஏறி வாறான்” என்று பரிதாபப்பட்டார்கள்.
அவன் நெருங்கி வர அவனுடைய முகம் எனக்குத் தெரிந்தது. அவனை விட்டுவிட்டு நான் குதிரையை ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தேன். அவன் நன்றாக நெருங்கி வந்த பின்னால்தான் அவனைப் பார்த்தேன். தூசி ஏறிய தலை, தெத்திப்பல், கரிய தேகம் குதிரையின் நிறத்தில் ஒரு சேட்டும் நீலநிறப் பள்ளிச்சீருடைக் காற்சட்டையும் அணிந்திருந்தான். அவன் முகத்தை நான் முதலில் எங்கோ பார்த்த பிரமை தட்டியது. ஆனால் அது பிடிபடாமல் போகவே. நண்பர்களுடன் இணைந்து குதிரையை நெருங்கினேன்.

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்


“தொட்டுப் பாக்கட்டோ?” அவனிடம் கேட்டேன். சிரித்தபடி தலையாட்டினான்.

தோழியொருத்தி “வேண்டாமடி கடிக்கும்” என்றாள்.

அதற்கு அவன், “இல்லை ஒண்டும் செய்யாது தொடுங்கோ.”

நான் தைரியமாக அதன் பிடரி முடியை வருடினேன்.

அதன் மேல் ஏற வேண்டும்போல் இருந்தது. அவன் வயதில் இருந்திருந்தால், ஏறியிருப்பேன். எனக்கு அவன் மேல் பொறாமையாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் அவனைப் பேட்டி எடுத்தனர். குறிப்புக்களை மளமளவென எழுத ஆரம்பித்தனர்.

“இது குதிரையோ, கோவேறு கழுதையோ?’’

“குதிரைதான்.”

“இது ஆரன்ற குதிர.”

“என்ர.”

“எத்தின வருசமா வளக்கிறீர்?”

“மூண்டு வருஷம்.”

“பள்ளிக்கூடம் போறேல்லயோ?”

சிரித்தான்.

“அப்பா என்ன செய்யிறார்?”

“அப்பா இல்ல.”

“என்ன நடந்தது?”

“ஆமி சுட்டது.”

“அம்மா?”

“இருக்கிறா.”

``வீடெங்க?

சொன்னான்.

‘‘நீர் ஒரே பிள்ளையோ?’’

“இல்ல தங்கச்சி இருக்கு.”

‘‘உம்மட பேர் என்ன?’’

“கனீஸ்ரன்.”

‘‘முழுப்பெயர் சொல்லும்?’’

“யோகேந்திரநாதன் கனீஸ்ரன்.”

குதிரையைத் தடவிக்கொடுத்தபடி நின்றிருந்த என்னுடைய காதினுள் அவனுடைய முழுப்பெயர் வந்து வீழ்ந்த போது சட்டென்று அவனை மீண்டும் பார்த்தேன்.

தெத்திப்பல்

நீட்டு முகம்

ராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்


கருப்புத்தோல்

அந்தக் கண்கள்.

திருப்பிக்கேட்டேன். ‘‘உங்கட அப்பான்ர பேர் என்ன எண்டு சொன்னனீர்?’’

‘‘யோகேந்திரநாதன்.’’
 
‘‘என்ன வேலை செய்தவர்?’’

‘‘வெத்திலக் கடை வச்சிருந்தவர்.’’

எனக்கு நிலம் எல்லாம் சுழல்வது போலிருந்தது. கண்களில் நீர் திரள்வதை உணர்ந்தேன். சட்டென்று கண்களை அவனிடம் இருந்து விலகி,  தள்ளிப்போனேன். சட்டென்று அவனுடைய குதிரை என் ஹாண்ட் பாக்கை கடித்து என்னை நிறுத்தியது. அவன் சட்டென்று அதை அதட்டினான். விட்டுவிட்டது.

நண்பனொருத்தன், ‘‘குதிரைக்கு என்ன பெயர்?’’ என்றான்.

“பேர் ஒண்டும் இல்லை.”

அவன் விடைபெறத் தயாரானான். குதிரையில் ஏறிக்கொண்டான். எனக்கு அவன் முகத்தைப் பார்க்க ஏதோ செய்தது.

``கெளஷி, அவனுக்குக் காசேதும் இருந்தா குடுத்து விடு, நாங்கள் கான்பாக்க வான்லயே விட்டிட்டு வந்திட்டம்.’’

கண்களை துடைத்துக்கொண்டு. பையில் இருந்து நூறு ரூபா தாளை எடுத்து நீட்டினேன்.

அவன், “இல்லை வேண்டாம்.’’

“ஏதாவது வாங்கிச் சாப்பிடும் பிடியும்.”

“இல்ல... வேண்டாம்” உறுதியாகச் சொன்னான். சொல்லியபடி குதிரையைத்  தட்டிவிட்டான்.

எனக்கு ஏமாற்றமாய் இருந்தது.

அவன் என்னுடைய காசை ஏன் வாங்க வேண்டும்? அவன் இந்த ஏழையின் காசை ஏன் வாங்க வேண்டும்?

அவனிடம் குதிரையிருக்கிறது.

ஓம்… அவனொரு ராஜகுமாரன்.