Published:Updated:

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

Published:Updated:
மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்
மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

லைகள் உதிர்ந்துபோய் கனடாவின் குளிர் காலம் வாசலில் நின்றது. நானும் நேர்காணல் செய்வதற்காக வாசலில் நின்றேன். இரவு நகர்ந்துகொண்டிருந்தது. கனடிய நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தமிழர். அவர் பெயர் ஆனந்தசங்கரி. பெயரின் கடைசிப் பகுதியை முன்னுக்கு வைத்து ‘கரி ஆனந்தசங்கரி’ என்று கனடிய முறைப்படி அவர் அழைக்கப்படுகிறார்.

சரியான நேரத்துக்கு வேகமாக காரை அவரே ஓட்டிவந்தார். தன்னுடைய கறுப்பு மேல்கோட்டை கழற்றிவிட்டு வெள்ளை நீளக்கை சேர்ட்டுடன் முன்னால் அமர்ந்தார். அவர் முகத்தை எந்த நேரமும்  மறையாத புன்னகை நிறைத்திருந்தது. சிரிப்புக்குக் காரணம் இருந்தது. அவர் சரித்திரம் படைத்திருந்தார். 2016 அக்டோபர் 5-ம் தேதி கனடிய நாடாளுமன்றத்தில் கரி ஆனந்தசங்கரி கொண்டுவந்த பிரேரணை, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பத்து மாகாணங்களும், மூன்று பிரதேசங்களும் கொண்ட கனடா நாடு, இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்திருக்கிறது.

``தமிழ் மரபுத் திங்கள்  அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அளவற்ற மகிழ்ச்சி தரும் விசயம் இது. நீங்கள் ஸ்காபரோ – ரூஜ்பார்க் தொகுதி சார்பாக நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி ஒரு வருடம்கூட நிறைவாகவில்லை. 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நீங்கள் ஒருவரே தமிழர். இந்தப் பெரிய சாதனையை எப்படி நிகழ்த்த முடிந்தது? இது கனடாவின் வரலாற்றிலும், தமிழர்களின் சரித்திரத்திலும் முக்கியமான நாள் அல்லவா?’’

``கடின உழைப்பு மாத்திரமல்ல,  இதிலே கொஞ்சம் அதிர்ஷ்டமும் கலந்திருக்கிறது. கனடிய நாடாளுமன்றத்தில் தனிநபர் முன்மொழிவுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 30 இடங்கள் அதிர்ஷ்டச்சீட்டு மூலம் தீர்மானிக்கப்படும். அப்படித்தான் எனக்கு ஓர் இடம் கிடைத்தது. நாடு தழுவிய வகையில் தமிழ் கனடியர்கள் கனடாவுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் பற்றி எடுத்துக் கூறினேன். எல்லாக் கட்சி ஆதரவாளர்களையும் சந்தித்தேன். தமிழ் மொழி, எங்கள் மரபு, நீண்ட வரலாறு இவற்றை அவர்களுக்கு விரிவாக விளக்கவேண்டி நேர்ந்தது. ஆனாலும் ஆதரவு இலகுவாகக் கிடைக்கவில்லை. ஒரேயொரு கட்சி கடைசி நாள் வரை இழுத்தடித்தது. ஆதரவு தர முடியாது என்றே கூறினார்கள். ஆனால், வாக்கெடுப்பின்போது மனம் மாறி ஆதரவளித்ததால், ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேறியது.’’

``அடுத்து என்ன?’’

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


``முதன்முதலாக மேசையில் இடம் கிடைத்திருக்கிறது. அது எத்தனை பெரிய விசயம். மைய நீரோட்டத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இத்தனை நாளும் நாம் வெளியே நின்றோம். புலம்பெயர்ந்த தமிழர்கள் கனடிய சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், தமிழ் மொழியினதும், மரபினதும், பண்பாட்டினதும் செழுமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கும் முகமாகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழர்கள் தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றவேண்டும். அதற்காகத்தான் சனவரி மாதம் மரபுத் திங்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்படும். இதைத் தொடர்ந்து இன்னொரு முக்கியமான சம்பவமும் இடம்பெற்றது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட, தமிழருக்கான அனைத்துக் கட்சி ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 140 உறுப்பினர்களில் ஒரேயொருவர்தான் தமிழர். உறுப்பினர்கள் பல நாட்டவர், பல மொழி பேசுபவர்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள், இருந்தாலும் ஒன்றுகூடியிருக்கிறார்கள். கனடிய அரசுக்கு அடுத்த நிலையில் நின்று இந்த ஒன்றியம் தமிழர்களுக்காகப் பாடுபடும்.’’

``கொண்டாட்டங்களுடன் எங்கள் கடமை முடிந்ததா?’’

``கொண்டாட்டங்கள் ஓர் ஆரம்பம்தான். கனடாவின் மைய நீரோட்டத்துடன் கலந்துகொள்வதற்கான  ஓர் ஏற்பாடு. கனடாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் 2016 டிசெம்பர் 31-ல் ஆரம்பமாகிறது. தமிழ் மரபுத் திங்களைத் தொடங்க  இதைவிடச் சிறந்த நாள் கிடைக்காது. மேசையில் கிடைத்த இடத்தை வலுவாகப் பிடிப்பதுடன் நாங்கள் விரிவாக்கவும் வேண்டும். கறுப்பின மக்கள் வரலாறு, ஆசியா மரபுக் கொண்டாட்டங்கள்போல தமிழ் மரபுக் கொண்டாட்டங்களும் ஆழமான விசயங்களுக்கு எம்மை இட்டுச் செல்லும். ஏற்கெனவே கனடா பல்கலைக்கழகங்கள் நடத்திவரும் தமிழியல் மாநாடுகள் முக்கியமானவை. ஹார்வார்ட் தமிழ் இருக்கைபோல கனடாவிலும் இருக்கைகள் உருவாகவேண்டும்.  எங்கள் இனம்சார்ந்த சட்டத்துறை மாற்றங்கள் அவசியம். ஏற்கெனவே செயல்பட்டு வரும் தமிழ் மொழிக் கல்வியை ஊக்குவிப்பதும் ஒரு வழி. என்.சிவலிங்கம் விருது, தமிழ் இலக்கியத் தோட்ட விருது போன்றவற்றையும் மேம்படுத்தலாம்.’’

``தமிழ் வளர்ச்சிக்கு கனடிய அரசாங்கத்திடம் இருந்து எதிர்காலத்தில் நிதி கிடைக்குமா?’’

``கனடிய அரசு இதற்காக நிதி ஒதுக்க முடியாது. கனடாவில் அரசு சார்பான பல கொடை நிறுவனங்கள் உள்ளன. நிதி விண்ணப்பங்களில் கனடிய அரசின் தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரத்தைக் குறிப்பிடவேண்டும். இந்த அங்கீகாரமானது நிச்சயம் நிதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும்.’’

``தமிழ் மரபுத் திங்கள் அங்கீகரிக்கப்பட்டபோது இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?’’

``அவர்களுக்கு மகிழ்ச்சி தராத விசயம்தான். இந்தப் பிரேரணை வெற்றி பெறக் கூடாது என்று அவர்கள் முயன்றதாகவும் தகவல் கிடைத்தது. அது எங்களுக்குப் பொருட்டே இல்லை. இலங்கை அரசுக்கு இங்கே ஒரு செய்தி இருக்கிறது. அதுதான் முக்கியம். கனடா போன்ற ஒரு நாட்டிலே மிகச் சிறுபான்மையான ஓர் இனத்துக்கு சரிசமமான இடம் கிடைத்திருக்கிறது. கனடா சனத்தொகையில் தமிழர்கள் ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை.  பல்கலாச்சாரத்துக்கு கனடாவில் கிடைக்கும் ஆதரவு முக்கியமானது. இதற்காகத்தான் நாங்கள் இலங்கையில் பல வருடங்களாகப் போராடினோம். கனடாவில்  எங்கள் உரிமைகள் மதிக்கப்படுகின்றன. இதைப் பார்த்தாவது இலங்கை அரசு தனது மனத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.’’

``உங்கள் பின்னணியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? எப்படி தமிழ் மக்களின்

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

பிரச்னைகளில் உங்களுக்கு இத்தனை ஈடுபாடு வந்தது?’’

``நான் பிறந்து வளர்ந்தது இலங்கையில்தான். சிறுவயதிலேயே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதப்படுவதைக் கண்டேன். ஒடுக்குமுறை என்ன என்பதை அந்த வயதிலேயே தெரிந்துகொண்டேன். ஏழுவயதில் நாட்டைவிட்டு வெளியேறினோம். எட்டு வயதுச் சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபையில் பெரிய பதவி வகித்த பெண்மணி ஒருவரைச் சந்தித்தேன். உலகம் எங்கும் மனிதாபிமானத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றியும், அடக்குமுறை பற்றியும் அவர் கூறினார். எனக்கு முழுவதும் புரியவில்லை. ஆனால், மனிதனை மனிதன் ஒடுக்குவது மிகவும் கொடூரமான ஒன்று.  அவர் செய்த பணியில் எனக்கு பெருமதிப்பு ஏற்பட்டது.

1983-ல் இலங்கையில் நடந்த இனஒழிப்புக்கு எதிராக மாணவர்கள் டப்ளின் நகரில் எதிர்க் குரல் கொடுத்தபோது நானும் அதில் பங்கெடுத்தேன். பின்னர் கனடாவில் பொது வாழ்வில் ஈடுபட்டு பலவிதமான அமைப்புகளை தலைமையேற்று நடத்தினேன். அதில் முக்கியமானது மனிதஉரிமை மீறலை எதிர்ப்பது. உலகம் மிகப் பெரியது. அதில் எல்லோருக்கும் தேவையான வெளி இருக்கிறது என்பதை புரியவைப்பதுதான் முக்கியம். மனிதநேயம் மூலம் எதையும் வெல்லலாம். எங்களுக்கான அடையாளத்தை இழக்கக் கூடாது. என்னுடைய பிள்ளைகளுக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும்  நான் ஒரு நல்ல நாட்டையும், மேலான உலகத்தையும் விட்டுப் போகவேண்டும் என்பதுதான் என்னுடைய தீவிரமான சிந்தனை.’’

``கனடாவுக்கு அகதிகள் ஏற்றி வந்த இரண்டு கப்பல்களை நீங்கள் சந்தித்து உதவிகள் புரிந்திருக்கிறீர்கள். அதுபற்றிக் கூறுங்கள்?’’

``முதல் கப்பல் 76 அகதிகளுடன் 2009-ல் வந்தது. இரண்டு நாட்களில் அதிலே வந்த அகதிகளைச் சந்தித்து ஆகவேண்டிய உதவிகளைச் செய்தேன். இன்றும் சிலர் நன்றியுடன் என்னை வந்து பார்க்கிறார்கள்.  இரண்டாவது கப்பல் 492 அகதிகளுடன் 2010-ம் ஆண்டு வந்தது.  நடுக்கடலில் கப்பல் வந்தபோதே பத்திரிகைகள் ’கனடாவுக்கு பயங்கரவாதிகள் வருகிறார்கள்’ என்று பொறுப்பில்லாமல்  எழுதி மக்களைக் கலங்கடித்தன. பத்திரிகைகளுக்கு விற்பனைதான் தேவை.  கப்பல் கரைக்கு வந்தபோது நான் அங்கே நின்றேன். பத்திரிகைகாரர்களும் நின்றார்கள். கப்பலில் வந்திறங்கிய சில பெண்மணிகளை கூட்டிவந்து ஊடகங்களுக்கு  அறிமுகம்  செய்துவைத்தேன். ஒருவர் மூதாட்டி. இரண்டாமவர் உடம்பில் சீழ்பிடித்து ஆறாத பல காயங்களுடன் இருந்தார். இன்னொரு பெண்மணி ஒன்றுமே பேசாமல் வெறித்த பார்வையுடன் நின்றார். அவருடைய கதையை மற்றவர்கள் சொன்னார்கள். கணவரையும் மூன்று குழந்தைகளையும் பதுங்கு குழியில் விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்க வெளியே ஓடினார். திரும்பி வந்தபோது கணவரும் மூன்று பிள்ளைகளும்  குண்டு விழுந்து இறந்துபோய்க் கிடந்தனர்.  `பாருங்கள், இவர்கள்தான் பயங்கரவாதிகள்’ என அறிமுகப்படுத்தினேன். ஊடகக்காரர்கள்  ஒன்றுமே பேசவில்லை. பயங்கரவாதிகளுக்கும் அகதிகளுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்குப் புரிந்திருக்கும்.’’

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்

``ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் கனடாவிலும், உலக அரங்கிலும்  தமிழர்களுடைய நிலை எப்படி இருக்கும்?’’

``இருக்கும் தடைகளை எல்லாம் மீறி உன்னதமான ஓர் இடத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள்.  வர்த்தகம், தொழில்நுட்பம், இலக்கியம் மற்றும் கலைகள் எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பார்கள். ஒவ்வொரு வாரமும் கனடாவில் குறைந்தது இரண்டு புத்தகங்களின் வெளியீடு நடக்கின்றன.  ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. நாடகங்கள், நாட்டுக்கூத்து, நடனம் என அவையும் சிறப்பாக நடக்கின்றன. தமிழ் கல்வி கற்போரும் அதிகரித்துள்ளனர்.  தமிழில் இளங்கலை,  முதுகலை வகுப்புகளில் கனடியத் தமிழர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள். அது இன்னும் விரிவாகும்.

உலக அரங்கைப் பார்ப்போமானால், அங்கேயும் நல்ல செய்திதான். கயானா பிரதமர் மோசஸ் நாகமுத்து என்பவர் தமிழர்.  தென்னாப்பிரிக்கா அரசு, தமிழ் மொழியைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறது. மொரீசியஸில் 60,000 தமிழர்கள் வசிக்கிறார்கள். ஈழப்போரின்போது தமிழர்களுக்கு இறுதி வரை  ஆதரவு கொடுத்த ஒரே நாடு மொரீசியஸ்தான்.

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்நான் கனடாவின் பல மாகாணங்களுக்கும், பின்தங்கிய பிராந்தியங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். தமிழர்கள் இல்லாத பிரதேசமே கிடையாது. ஆர்க்கிடிக் வட்டத்தின் சமீபத்தில் இருக்கும் ’யெல்லோனைவ்’ என்ற மோசமான குளிர் பிரதேசத்தில்  ஒரு தமிழர் பாதுகாப்பு  நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இன்னொருவர்,  ஏழு வருடங்களுக்கு முன் கனடாவுக்கு அகதியாக வந்தவர். அவருடைய நிறுவனத்தை சமீபத்தில் திறந்துவைத்தேன். பெரிய படிப்பு இல்லாதவர். அவருடைய வருமானம் ஒரு மருத்துவருடைய  வருமானத்துக்கு சமமாக இருந்தது. இது ஆரம்பம்தான். ஒளிகூடிய  எதிர்காலம் இனிமேல்தான் வரப்போகிறது.’’

``அரசியலில் தொடர்வீர்களா?’’

``அரசியல் எனக்கு வாழ்தொழில் அல்ல. இது ஓர் அழைப்பு என்றே கருதுகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு. அரசியலில் இருப்பவர்கள் அழுதுகொண்டுதான் வீடு திரும்புவார்கள்  என்று படித்திருக்கிறேன். என் விசயத்தில் அது நடக்கக் கூடாது. என் கடமை முடிந்தது என்று தோன்றும்போது, நான் விலகிவிடுவேன். இளைய தலைமுறையினர் யாராவது ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வருவார்.’’

``ஓய்வுபெற்ற பின்னர்  என்ன செய்வதாக உத்தேசம்?’’

``கனடாவின் ஆதிகுடிகளுக்காக என் மீதி வாழ்நாளைக் கழிப்பேன். அவர்கள் நலனுக்காகப் பாடுபடுவேன். நாங்கள் அவர்களிடமிருந்து நாட்டின் பெயரைப் பறித்துக்கொண்டு அவர்களை துரத்திவிட்டோம். இலங்கையில் தமிழர்களுக்கு நடந்ததை நினைக்கும்போது, அதே தவறை நாங்கள் இங்கு ஆதிகுடிகள் மீது செலுத்துகிறோமோ என்ற ஐயம் எனக்கு அடிக்கடி எழும். அவர்கள் சமத்துவம் அடைந்துவிட்டால், என் வாழ்நாள் பயனை அடைந்தவன் ஆவேன்.’’

``மன்னிக்கவும். இது ஒரு நீண்ட கேள்வி. கனடா சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்துவிட்டது. அத்துடன், தமிழுக்கான அனைத்துக் கட்சி ஒன்றியம் இப்பொழுது உருவாகிவிட்டதாலும் இது முக்கியமாகிறது. 40 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில் ஒரேயொரு தமிழர். அது நீங்கள்தான். பல மொழிக்காரர்கள், பல நாடுகளைப் பிறப்பிடமாகக்கொண்டவர்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த அமைப்பு பெரும் பலம் வாய்ந்தது. இதன் செயல்பாடு  கனடிய அரசின் ஆசியுடன் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓலஃவ் கிரிம்ஸன் என்பவர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. மைக்கிரோசொஃப்ட் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட செயலியில் ஐஸ்லாந்து மொழியை இணைக்கவில்லை.  கிரிம்ஸன் கோபத்தோடு பில்கேட்ஸை அழைத்துப் பேசினார். ‘எதற்காக ஐஸ்லாந்து மொழி சேர்க்கப்படவில்லை?’ பில் கேட்ஸ் சொன்னார். ‘ஐஸ்லாந்தின் சனத்தொகை 3 லட்சம்தான். குறைந்தது ஒரு மில்லியன் மக்கள் பேசும் மொழியைத்தான் நாங்கள் கணக்கில் எடுப்போம்.’ கிரிம்ஸனுக்கு கோபம் வந்தது. வாதாடினார். இறுதியில் ஐஸ்லாந்து மொழியை மைக்ரோசொஃப்ட் ஏற்றுக்கொண்டது.

உலக அரங்கில் தமிழுக்காக வாதாட யார் இருக்கிறார்கள்? தமிழுக்கு ஒரு நாடு இல்லை. கொடி இல்லை. கிரிம்ஸன்போல அதிபர் இல்லை. ஓர் இக்கட்டான சமயத்தில், கனடாவில் உருவாக்கப்பட்ட  தமிழருக்கான அனைத்துக் கட்சி ஒன்றியம் உலக அரங்கில் தமிழுக்காக வாதாடுமா?


``நேரடியாக அப்படியொன்றும் செயல்பட முடியாது. தமிழ் அமைப்புகள்  உலக அரங்கில் முக்கியமான பொதுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலும்போது, நிச்சயமாக கனடாவின் அனைத்துக் கட்சி ஒன்றியமும் தமிழர்களுக்குப் பக்கபலமாக நிற்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.’’

நேர்காணல் முடிந்து நான் வீடு திரும்பியபோது நேரம் நடு இரவை நெருங்கியது. கனடாவின் ரோடுகள் அமைதியாகிவிட்டன. அவர் பேசியதில் எனக்கு நிறையப் பிடித்தது, ’என்ன சாதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு  ‘மேசையில் இடம் கிடைத்திருக்கிறது’ என்று சொன்ன பதில்தான். மேசைக்கு பக்கத்தில் நிற்கத் தேவை இல்லை. கீழே இருக்கத் தேவையில்லை. அதிலே இருந்து உதிர்வதைப் பொறுக்கத் தேவை இல்லை. சரிசமமான இடம்.  மற்ற  நாடுகளும் சரிசமமான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

மேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்


தென்னாப்பிரிக்காவின் நவி பிள்ளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் கடமையாற்றினார். கம்சாயினி குணரத்தினம் என்ற ஈழத்துப் பெண், நோர்வேயில் ஒஸ்லோ நகரத்து துணைத் தலைவராகியிருக்கிறார். தமிழ்மொழியைப் பாடத்திட்டத்தில்  சேர்ப்பதற்கான  சட்டமூலம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மரபுத் திங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. இதை ஆரம்பித்தது நீதன் சண்; தொடர்ந்து லோகன் கணபதி; இறுதியில் ராதிகா சிற்சபைஈசன். இப்பொழுது தமிழ் மரபுத் திங்களைத் தாண்டி தமிழருக்கான அனைத்துக் கட்சி  ஒன்றியம் உருவாகி
விட்டது. இதற்கெல்லாம் காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் அயராத உழைப்பு. கனடாவின் அனைத்துக் கட்சி  ஒன்றியம்போல அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் உருவாகினால், இவற்றின் ஒன்றுபட்ட பலம் ஒரு நாட்டின் பலத்திலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

தமிழ் மொழிக்கு சொந்தமாக ஒரு நாடில்லை. ‘இலமென்றி அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.’ இது குறள். ஒன்றும் இல்லையே என உழைக்காமல் வாடுபவர்களைக் காணும்போது நிலமகள் சிரிப்பாளாம்.
கடினமான, நியாயமான உழைப்புதான் முக்கியம். அது இருந்தால், நாங்கள் ஒரு புது நிலத்தையே உண்டாக்கலாம்.