Published:Updated:

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்
பிரீமியம் ஸ்டோரி
‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

Published:Updated:
‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்
பிரீமியம் ஸ்டோரி
‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்
‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

கண்விழித்தபோது, ஜேக்கப் ஒருவாறாக டாலியைக் கொல்வதற்கான மனநிலையை அடைந்துவிட்டிருந்தார். கடும் பனி. அறுபது வருடங்களாக இந்தப் பனியை அவர் உடல் அறிந்திருந்தது. எதிர்வரும் கோடையின் துவக்கம் லேசான எரிச்சலை அவரிடத்தில் தோற்றுவித்திருந்தது. சுற்றுலா என்ற பெயரில், மனித இரைச்சல் மிகுந்த கோடையை அவர் வெறுத்தார். காட்டின் பாடல் மனிதனின் அமைதியில் இருக்கிறது என்பது அவரது நம்பிக்கை.

‘ஸ்தோத்திரம் காலையே…’ என்று மெல்லிய குரலில் சொல்லியவாறு கம்பளியை விலக்கி எழுந்தார். டாலியின் அசைவு தென்படவில்லை. பறவைகளின் குரல்கள் கூரையில் சாரலாய் விழுந்துகொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரல் மட்டும் அவரிடம் புன்னகையை வரவழைத்தது. கோடையின் பெரும் மகிழ்ச்சி அது மட்டும்தான். காஷ்மீர் குருவிகள். கைலாயத்தில் இருந்து கொடைக்கானலுக்குக் கோடையில் வரும். சாம்பலும் வெள்ளையுமாய் வாலை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, பெரும்பாலும் தரைகளில் நடந்துகொண்டிருக்கும். அதற்கு, `கிரேட் ஹிமாலயன் டெய்ல்’ என்று பெயர். ஆனால், ஜேக்கப்புக்கு அது காஷ்மீர் குருவி.

கொடைக்கானலுக்கு ஃபிலோமி வந்த புதிதில், அவருக்கு அதைக் காட்டிக்கொடுத்தாள். அந்தக் குருவியை அவள், `ஜேக்கப் குருவி’ என்றே அழைத்தாள். அது ஓர் இடத்தில் நிற்காது. தனது வாலை நிற்காமல் ஆட்டிக்கொண்டே விநாடிக்கு விநாடி இடம் மாறும். எப்பொழுதுமே ஓர் உற்சாகமான பறவை. `தூங்குமோ தூங்காதோ... அப்படியே உன்னை மாதிரி மேன’ என்பாள்.

காலைக்கடனை முடித்துவிட்டு, சமையலறையில் இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்தார். அனிச்சையாகக் கண்ணாடிக் கோப்பையில் குறிப்பிட்ட அளவு திரவம் நிரம்பியது. மெதுவாக வாயில் கவிழ்த்தபோது, டாலியின் நிராசையான முனகல் கட்டிலுக்குக் கீழிருந்து கேட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்னான கோடையின் ஒரு காலையில், ஃபிலோமினா எழும்ப மறந்துவிட்டாள். அன்று, பதினெட்டு காஷ்மீர் குருவிகள் வீட்டு முன் மரக்கிளையில் அமர்ந்து கூவிக்கொண்டிருந்ததைக் கண்டார். அன்றிரவுதான் டாலியின் தொடையில் காயம் உண்டானது. அந்தக் காயம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்


அன்று காலையிலிருந்தே ஃபிலோமினாவை அடக்கம் செய்யும் பணியில் கிடந்தார். கல்லறையில் அதிகப் பனிமூட்டம். இடையில் ஒரு சாரல் விழுந்தபோது டாலியின் துயரமானதோர் ஒலியைக் கேட்டார். எங்கோ வெகு தொலைவிலிருந்து வரும் ஓலம்போல, பாதாள அறையிலிருந்து வரும் வலி மிகுந்த குரல்போல அல்லது ஃபிலோமினா தன் கனவில் சொல்லும் ஸ்தோத்திரம்போல இருந்தது அந்த ஒலி. கல்லறையில் உறவினர்களும் நண்பர்களும் வேறொரு காலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாகப் பட்டது அவருக்கு.

பிணப்பெட்டியில் அவள் மிகமிக அமைதியாகப் படுத்திருந்தாள். சிவந்து சுருங்கிய உதடுகள்கொண்ட அவளது சிறிய வாய், ஒரு வெட்டுக்காயம்போல உயிர்ப்புடன் இருந்தது. ஓர் ஈ, சதா சுற்றிச் சுற்றி வந்து அந்த வாயைத் தின்ன முயன்றது. இந்தப் பனியில் எங்கிருந்து வந்தது அது என்று அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நாற்பது வருடங்கள் அவரை வழிநடத்திய வாய். இறப்பதற்கு முந்தின இரவு, உறங்கும் முன்பு டாலியிடம் எதையோ பேசிக்கொண்டிருந்த வாய். என்னவென்று கேட்டதற்கு டாலியின்  குரைப்பு மட்டுமே பதிலாக வந்தது. அவள் இறந்த நாளின் இரவு வரை டாலியை அவர் பார்க்கவில்லை.

ஃபிலோமினா இல்லாமல் போன முதல் இரவிலும் மழை வந்தது. பகலில் நிறைந்து கிடந்த பறவைகளைக் காணவில்லை. இரவுகளில் அவை இலைகளாகிவிடும் என்று ஃபிலோமினா சொல்லியிருக்கிறாள். மறுநாள் வேலைக்காரன் முருகையன்தான் டாலியின் காயத்தைக் கண்டு சொன்னான். பின்னங்காலின் இடது தொடையில் ஒழுங்கற்ற சிறுவட்டமாகச் சிவந்து இருந்தது. ‘எங்கேயோ இடித்துக்கொண்டிருக்கலாம். கழுவிவிடு’ என்றார். பின் அந்தக் காயத்தை மறந்துபோனார். சில நாட்களில் ஃபிலோமினாவின் இடத்தை சிக்னேச்சர் விஸ்கி எடுத்துக்கொண்டது. ஜேக்கப்புக்கு கணங்கள் பூதமாகிவிட்ட நாட்கள் அவை.

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

பொதுவாக, தனது வாழ்க்கையில் ஜேக்கப்புக்கு கேள்விகள் ஏதும் இல்லை. தாயின் வழியில் வந்த சிறு நிலத்தில் வீடும் ஒரு காட்டேஜும், தந்தை வழியில் வந்த பேக்கரித் தொழிலும், கர்த்தரின் ஸ்தோத்திரமும் அவரைப் பாதுகாத்தது என்று எண்ணியிருந்தார். ஆனால், அனைத்தையும் – அவரையும் சேர்த்து – பாதுகாத்து வந்தது ஃபிலோமினாதான் என்றும், அத்தனை வருடங்களிலும் ஸ்தோத்திரம் என்று அவர் ஃபிலோமினாவைத்தான் அழைத்துக் கொண்டிருந்தார் என்றும், அவள் இறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவருக்குத் தெரிந்துவிட்டது. திடகாத்திரமான உடம்பு எடை இழந்து, உதிரும் இலை காற்றில் தடுமாறுவதுபோல உணர்ந்தார். அதே நேரத்தில், தனது எடையற்ற உடலைத் தாங்க முடியாத அளவுக்குப் பாரமாகவும் உணர்ந்தார். அவரால் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தினமும் எழுந்தவுடன் ஸ்தோத்திரம் சொல்லி காலையைத் தொழுதவுடன் 60 மில்லி விஸ்கியை எடுத்துக்கொள்வார். சரியாக 90 நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 60 மில்லி விஸ்கி. மிதமான போதையில் மந்தமான தெளிவற்ற நாட்களை அவர் விரும்பத் தொடங்கியிருந்தார். மேலும், தனது காலை நடையையும் கைவிட்டிருந்தார். முருகையனின் நேர்த்தியான செயல்பாடுகளால் பேக்கரி வேலைகள் சிக்கலின்றி நடந்தேறியது. அவன் சேவைகள் டாலியையும் அவரையும் இயல்பு நிலையிலேயே வைத்திருந்தன. டாலி எப்போதும் ஜேக்கப்பின் பார்வை தூரத்திலேயே இருந்தாலும், அவருக்கு அதன் உருவம் குவிமையத்திலிருந்து விலகியிருந்தது. டாலியின் தொடையில் இருந்த புண் ஆறாமல் உள்பக்கம் சீழ்வைக்கத் தொடங்கியிருந்ததை யாரும் உணரவில்லை. 

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்


அந்த நாட்களில் பகல் முழுவதும் அவர் கிறிஸ்டியின் கீழ் அமர்ந்துகிடந்தார். கிறிஸ்டி, வட்டக்கானல் வனச்சூழலில் அறியப்பட்ட மிகப் பெரிய கொட்லா மரம். இரு நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் மிக்கேயில் கோல்டுஃபீல்டு தனது மனைவியின் ஞாபகமாக அந்த மரத்துக்கு  `கிறிஸ்டி’ என்ற பெயர் வைத்தானாம். இப்போது கிறிஸ்டி அந்தச் சுற்று வட்டாரத்தின் ஓர் அடையாளம்; சிறுதெய்வம். அது தனக்குள் ஒரு பிரபஞ்சத்தைக்கொண்டிருப்பதாக ஜேக்கப் நினைத்துக்கொள்வார். முன்பெல்லாம் தினமும் காலை நடையில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வார்கள். சில நேரம் ஃபிலோமியும் கூட வருவாள். அவளுக்கு கொட்லாம் பழங்கள் மிகவும் பிடிக்கும். செருப்பைக் கழற்றி மரத்தடியில் போட்டுவிட்டு கதவைத் திறந்து வீட்டில் நுழைவதுபோல அந்த மரத்தில் ஏறுவாள். “என்ன கிறிஸ்டி, எனக்கு நல்ல பழங்களா வெச்சிருக்கியா... என்ன கிழக்கால இலைகளைக் காணோம்… எதுக்கு இங்க ஈரம் பண்ணிவெச்சிருக்க… கோச்சுக்காத கிறிஸ்டி, போன மாசம் பூராம் வர முடியல… ஜேக்கப் உங்கிட்ட ஒழுங்கா நடந்துக்கிடுதா...” எல்லா கேள்விகளுக்கும் மரத்திடம் இருந்து பதில் கிடைப்பதுபோல அவளது பாவனைகள் இருக்கும். சில பழங்களை மேலிருந்தவாறு டாலியை நோக்கி எறிவாள். அது சிணுங்கிக்கொண்டே உருண்டோடும் பழங்களைப் பார்த்து ஓடத் தொடங்கும்.

அவள் இறந்துபோன இரண்டு வாரங்களில், தினமும் காலையில் தனது தோள் பையில் விஸ்கி பாட்டிலையும் சில பிரெட்களையும் எடுத்துக்கொண்டு கிறிஸ்டியிடம் போகத் தொடங்கியிருந்தார். ‘ஸ்தோத்திரம் கிறிஸ்டி…’ என்றுவிட்டு வாகாக ஏதாவது ஒரு வேர்ப்பக்கம் சாய்ந்து அமர்ந்துகொள்வார். பையை ஓரமாக வைத்துவிட்டு, பாட்டிலை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு கண்களை மூடி அமர்ந்து கொள்வார். அந்தப் பையில் எப்போதும் ஒரு பைபிள் புத்தகம் இருக்கும். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சேர்ந்த பதிப்பு அது. எப்போதும் பையினுள் இருக்கும் அந்தப் புத்தகத்தை ஒருமுறைகூட அவர் வெளியில் எடுத்தது இல்லை. அவ்வப்போது குடித்துக்கொண்டு எந்தச் சிந்தனையும் அற்று, பகல் கடக்கும் வரை அங்கே இருப்பார். மாலையில் பசி உணரும்போது கிளம்பி வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு முறையும் மரத்தைவிட்டு அவர் கிளம்பிய சிறிது நேரத்தில், அதுவரை ஒரு பள்ளத்தில் படுத்துக்கிடக்கும் டாலி எழுந்து கிறிஸ்டியின் அருகில் வரும். அதை ஒரு சுற்று சுற்றிவந்து ஏதாவது ஒரு வேர்ப்பக்கம் இயற்கையின் அழைப்புக்கு செவிசாய்க்கும். பின் வீட்டைப் பார்த்து ஓடும்.

போன கோடையின் கடைசி வாரம் சிலர், ஜேக்கப்பின் காட்டேஜில் இருமாத வாடகைக்குக் குடியேறினார்கள். அவர்கள் ஐந்து பேர். டில்லியிலிருந்து இரண்டு பேர்; இத்தாலியிலிருந்து மூன்று பேர். அவர்களில் இருவர் பெண்கள். அவர்கள் வந்த மறுநாள் இரவு விருந்தை ஏற்பாடு செய்தார்கள். நொதித்த திரவங்களும் வேறு பிராந்திய உணவுகளுமான விருந்தில் அன்று அவர் ஒரு புகையையும் எடுத்துக்கொண்டார். கருத்த பிசின் போன்ற ஈரம் தோய்ந்த சிறு துகள்கள் சிகரெட்டில் ஊடேற்றி அளிக்கப்பட்டன. விநாடிகளில் கறுப்பு வெள்ளையிலான ஒரு காற்று வளையம் அவரது இடது கண் பக்கமும், வானவில் வண்ணத்திலான மற்றொரு காற்று வளையம் அவரது வலது கண் பக்கமும் தோன்றி, எதிர்ரெதிர் திசையில் சுழலத் தொடங்கின. ஏதோ ஒரு குவிமையத்தில் காஷ்மீர் குருவிமீது அமர்ந்து ஃபிலோமினா பறந்துபோவதைக் கண்டார். மறுநாள் விடியலில் தனது கழிப்பறையில் ஏறக்குறைய நிர்வாணமாக விழுந்துகிடந்தவரின் முகத்தை நக்கிக்கொண்டிருந்தது டாலி.

அந்தக் கணத்தில் ஜேக்கப்பின் கண்களின் குவிமையத்திற்கு டாலி நிரம்பிவிட்டது. நிதானமாகவே எழுந்து அமர்ந்தார். இடது கண் புருவத்தில் வலி தெரிந்தது. இரவு என்ன நடந்தது என்று நினைவுகளைச் சுரண்டியும் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. கழிப்பறையை விட்டு வெளியேவந்து கட்டிலில் அமர்ந்துகொண்டார். கடுமையாக தாகம் எடுத்தது. கட்டிலின் கீழிருந்த பாட்டிலை எடுத்து நீரைக் குடித்தார். பனிக் குளிர்வைத் தாங்கமாட்டாமல் வயிறு இறுகியது. தாகம் தீரவில்லை. டாலி கழிப்பறையின் கதவருகே நின்றுகொண்டிருந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நாயின் கண்களை அவர் நேரடியாகப் பார்த்தார். அந்தக் கண்கள், வெள்ளைக் கண்கள். அந்தக் கறுப்பு நாய் திடீரென்று அவர் கண்களுக்குள் பாய்ந்து மூளைக்குள் விழுந்துவிட்டதுபோல ஒரு காட்சி மயக்கம் அவருக்குள் தோன்றியது. சிறிது நேரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர், மெதுவாகத் தலையை அசைத்து அழைத்தார். ஓர் ஊழியனின் காத்திருப்புபோல விருட்டென்று அவரருகே ஓடி வந்தது. கதிரின் ஈர்ப்பில் கரைந்துவிடும் பனியின் வாஞ்சைபோல தன்னுள் ஏற்பட்ட ஓர் உணர்வை எதிர்கொள்ள மாட்டாமல், அவரது வாயிலிருந்து வெளியேறியது ஒரு ஸ்தோத்திரச் சொல். அவர் இரண்டு கைகளிலும் டாலியின் முகத்தை ஏந்திக்கொண்டு சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். கல்ப கோடி வருடங்களாக வராத இரண்டு துளிகள் அவர் கண்களில் திரண்டன. சட்டென்று கைகளை விலக்கிவிட்டு எழுந்து சென்று தனது விஸ்கி பாட்டிலை எடுத்தார். பின்னாலேயே வந்த டாலி, அவரது கால்களில் முண்டிக் கொண்டிருந்தது. அப்போதுதான் முதன்முதலில் டாலியின் நடையில் ஒரு சுண்டுதல் இருப்பதைக் கண்டார்.

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்

டாக்டர் பைரவமூர்த்தி, கொடைக்கானல் நகரத்தின் மூத்த கால்நடை மருத்துவர். ஜேக்கப்பின்  பழைய நண்பர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஜேக்கப்பைத் திட்டிக்கொண்டே டாலியின் காயத்துக்கு மருத்துவம் செய்தார். அது ஒரு சிறிய அறுவைசிகிச்சை. மருத்துவம் முடிந்து மயக்கத்தில் இருந்து அது விழிக்க இரண்டு மணி நேரம் பிடித்தது. டாலியின் பின்பக்கம் முழுவதும் முடி நீக்கம் செய்யப்பட்ட லேசான சிவந்த தோலைப் பார்த்துக்கொண்டிருந்தார். கறுப்பு நிறத்தைத் தவிர டாலியை எப்படியும் கற்பனை செய்ய முடியவில்லை அவரால். டாக்டர் வாங்கிக் கொடுத்த எலுமிச்சைத் தேநீரை அருந்தியவாறு அவரது நினைவுகள் பின் வாங்கின. பத்து வருடங்களுக்கு முன்னானதொரு மழை நாளின் விடியல் பொழுதில், முதன்முதலில் அந்த நாயை ஜேக்கப்பும் ஃபிலோமினாவும் பார்த்தார்கள். சுற்றுச்சுவர் கேட்டின் முனையில் மழையில் நனைந்து வெடவெடத்துக் கொண்டிருந்தது. உள்ளங்கையில் ஏந்தும் அளவுக்குக் குட்டி. இருட்டின் ஒரு சுளைபோல முழுக்கறுப்பு. ஈரமாய் நடுங்கிக் குழறிக்கொண்டிருந்ததைத் தூக்கிக்கொண்டாள் ஃபிலோமினா. இரண்டு உள்ளங்கைகளிலும் அது ஒடுங்கிக்கொண்டு அவளைப் பார்த்தது. ‘பாரு ஜேக்கு இந்தக் கண்ண... அது மட்டுந்தான் வெள்ளை... வெள்ளைனாலும் அப்படி ஒரு வெள்ளை... அப்படியே அதுக்குள்ள நுழைஞ்சு போயிடலாம்... நேரா அதோட மனசுக்குள்ள போறதுக்கான பாதை மாதிரி இருக்கில்ல...’ என்றாள். ஜேக்கப்பும் பார்த்தார் அதன் கண்களை. நிர்மலமான வெள்ளைக் கண்கள். பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு நாய் இவ்வளவு கறுப்பாகவா இருக்கும் என்று எண்ணினார். கூடவே ஒரு நாயின் கண்கள் இவ்வளவு வெள்ளையாகவா இருக்கும் என்றும் ஆச்சர்யம் கொண்டார். நிமிடங்களில் அது ஜேக்கப்பைப் போலவே ஃபிலோமினாவின் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றானது. டாலி என்று பெயர் வைத்தாள். ‘அது ஆம்பள நாய்மா...’ என்றார். ‘அதனாலதான் அந்தப் பேர் வெச்சேன்...’ என்று அவள் சொன்னதும் பிரபஞ்சத்தில் அந்த முரட்டு நாயின் பெயர் டாலி என்று உறுதியாகிவிட்டது.

‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்


மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் டாலி, தனது இருப்பிடத்தை ஜேக்கப்பின் இரண்டடித் தொலைவுக்குள் வைத்துக் கொண்டது. தினமும் காலையில் எழுந்து தனது பணிகளை முடித்துவிட்டு, விஸ்கியைக் குடித்துவிட்டு, டாலியை அழைத்துக் கொண்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். அதன் காயத்தைக் கழுவுவது, பிறகு ஈரத்தை உலர்த்துவது, மருந்து தடவி கட்டுப் போடுவது என அடுத்த இரண்டு வாரங்கள் ஜேக்கப்புக்குப் புது வேலை உண்டாகிவிட்டிருந்தது. முருகையனை அந்த வேலையைச் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டார். காயத்துக்குக் கட்டு போடும் வரை ஒரு மணி நேரம் அதனுடன் எதையாவது பேசத் தொடங்கியிருந்தார். காரணமில்லாமல் அவர் தனக்குத்தானே எதையாவது சொல்வதுபோல, டாலியிடம் பேசிக்கொண்டிருப்பார். அருகில் அமர்ந்து ஃபிலோமி அவரைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று அவரது உள்ளம் நம்பத் தொடங்கியிருந்தது. மருந்து போட்டு விட்டு எழுந்து சென்று குளித்துவிட்டு, மீண்டும் அந்த நேரப் பங்கைக் குடித்துவிட்டு, எப்பொழுதும் போலப் பையை எடுத்துக்கொண்டு கிறிஸ்டியிடம் செல்வார். கூடவே டாலியும் செல்லும்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகும் டாலியின் சுண்டும் நடை குறையவில்லை. காயத்தின் வடு இருந்தது. கூடவே தோலில் லேசான நாற்றம் பரவியிருந்தது. மீண்டும் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர் பைரவமூர்த்தி, பூஞ்சைத் தொற்று இருக்கிறது என்று ஒரு மாதத்துக்கு மருந்து கொடுத்தார். டாலிக்கு மருந்து போடும் வேலை என்பது அன்றாடம் ஆகிவிட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், டாலிக்கு மருந்து போடும் வேலை என்பது அவருக்கு உலகின் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. சில நாட்களில் அந்தப் புண் சற்று ஆறத் தொடங்கியதைக் கண்டு, தனக்குள் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டார். ஆனாலும் அவர் மருந்துகட்டும் பழக்கத்தைத் தொடர்ந்தார். அப்படியான நாட்களில், சரியாக ஃபிலோமி இறந்த இரண்டாவது வருடத் திவசத்தின் இரவில், வீட்டு முற்றத்தில் படுத்துக்கிடந்த டாலி, இன்னதென்று சொல்ல முடியாத ஒலி அலையில் ஒரு நீண்ட ஊளையை எழுப்பியது. சட்டென்று ஜேக்கப் கண் விழித்தார். மயிர்க்கால்கள் நட்டுக்கொள்ளும் அளவுக்கு அவரது உடம்பில் சிலிர்ப்பு ஏற்பட்டது. சுற்றிலும் பத்து பதினைந்து வீட்டிலும்கூட டாலியின் ஊளை கடும் அதிர்வை ஏற்படுத்தியது.

டாலி நினைத்து நினைத்து ஊளையிடத் தொடங்கியிருந்தது. அதன் பூஞ்சைத்தொற்றும் அதிகமாகிவிட்டிருந்தது. அதைக் குளிப்பாட்டி மருந்துபோடுவது, உணவு சமைப்பது, அதை ஏறக்குறைய தூக்கிக் கொண்டு ஃபிலோமினா, கிரிஸ்டியிடம் செல்வது என்று தனது வேலையில் மிகக் கவனமாக இருந்தார். பத்து நாட்களுக்கு மேல் அக்கம் பக்கத்தார்களால் அந்த ஊளையைச் சகிக்க முடியவில்லை. தெருவிலும் பக்கத்து வீடுகளிலும் கடுமையான எதிர்ப்புகள் உண்டாகியிருந்தன. ஆனால், ஜேக்கப் அது பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. முருகையன்கூட, ‘எங்கனாச்சும் விட்டுட்டு வந்திடவா?’ என்று கேட்டான். மூர்க்கமாக மறுத்துவிட்டார். ஓரிரு வாரங்களில் டாலி மிகவும் சுணங்கிவிட்டது. தொற்றுப் புண்ணில் அப்பிய மருந்தின் மணமும் ஊளை ஒலியும் அவருக்கு ஒருவித நிம்மதியான பொழுதுகளை வழங்குவதாக நம்பினார். மற்றவர்களுடைய எதிர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க... அவரது வீம்பும் அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக  கிறிஸ்டியிடம் போவதையும் நிறுத்திவிட்டார். வீட்டை விட்டு வெளியே போவதைத் தவிர்த்திருந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இஸ்ரேலில் வசிக்கும் மகளிடம் இருந்து வந்த கடிதத்தை முருகையன் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அதை மேசை மீது வைக்கச் சொன்னார். அதை அவர் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு துணியை எடுத்து பீழை வழியும் டாலியின் கண்களைத் துடைத்துவிட்டவாறு அவரது மகளின் முகத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தார். அவரால் தனது மகளின் முகத்தை சரியாக நினைவுக்குக் கொண்டுவர இயலவில்லை. அனிச்சையாக, `ஸ்தோத்திரம் மகளே...’ என அவர் வாய் உச்சரித்தது. டாலி ஊளையிடத் தொடங்கியது.

அன்று மாலையில் மேல் வீட்டு சிவராஜன் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவர் போகும்போது, ‘தயவுசெஞ்சு தலைக்கு ஊத்திவிட்டுருங்க ஜேக்கப் ஆசீர்...’ என்றுவிட்டுச் சென்றார். அவர் ஒருவர்தான் ஜேக்கப்பை முழுப்பெயர் கொண்டு அழைப்பவர்.  அன்றிரவு ஃபிலோமினா அவருக்குத் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டிவிடுவதுபோல கனவு கண்டார். மறுநாள் எழுந்ததும் பைரவமூர்த்தியைப் போய்ப் பார்த்தார் ஜேக்கப். ‘அது எங்க குலதெய்வம்டா… அந்தப் பாவத்த நான் செய்ய மாட்டேன்… மருந்து எழுதித் தர்றேன்… அதை நீயே  செஞ்சிடு…’ என்றார். மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு மருந்துக் கடைக்குப் போனார். கடைக்காரன் மருந்தைக் கொடுத்துவிட்டு, ‘`ஸ்தோத்திரம் பெரியப்பா… யாருக்கு இந்த மருந்து’’ என்று கேட்டான். அந்தக் கேள்விக்கு ஜேக்கப் ஆசீரிடம் உறுதியான பதில் இல்லை.