Published:Updated:

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

படங்கள் : கே.ராஜசேகரன்

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்
கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

`நாகமுனி’ என்றுதான் நான் அவனை அழைப்பேன். அவனது பெற்றோர் இட்ட பெயர் என்னவென்பது எனக்கு நினைவில்லை. அவனோடு மலைகள்தோறும் அலைந்து திரிந்திருக்கிறேன். `லட்சுமி’ என்று பெயர்வைத்திருந்த அவனது செல்ல நாயோடு, அவனும் நானுமாக இரவும் பகலும் மலைகளில் கிடந்திருக்கிறோம்.

சிறு மரங்கள் நிறைந்த கரட்டுக்காட்டில், அடர்ந்த புதருக்குள் போவது எளிதான காரியம் அல்ல. படுத்துக்கொண்டே உள்நுழைந்து போக வேண்டும், உடலைத் துளியும் மேலே தூக்க முடியாது, மேலே விரிந்துகிடப்பது முழுவதும் முள்பந்தல். பாம்பு ஊர்வதைப்போலத்தான் ஊர்ந்துகொண்டே உள்ளே போக வேண்டும். ஒருமுறை புதரொன்றுக்குள் நாகமுனி உள்ளே போனான். சுமார் 30 அடி தூரத்தைக் கடந்திருப்பான், உராய்ந்த நிலையில் உள்ளே போய்க்கொண்டிருக்கும்போது சுருண்டுகிடந்த கருநாகம் ஒன்று அவனது முகத்துக்கு அருகில் படம் விரித்து எழுந்தது. ஊர்ந்து போகிறவனின் கைகள் இரண்டும் மண்ணோடு மண்ணாக மார்புக்கு அடியில்தான் இருக்கும். கையைத் தூக்க முடியாது, கத்த முடியாது, அசைய முடியாது. அதைவிட முக்கியம் அவனைப்போலவே ஊர்ந்து பின்னால் போய்க்கொண்டிருந்த லட்சுமி, பாம்பைப் பார்த்துவிட்டால் பாய்ந்து முன் நகரும் அந்தச் சத்தம் கேட்டாலே, ஓர் அடி இடைவெளியில் இருக்கும் நாகமுனியின் முகத்தில் சீறி இறங்கும் கருநாகத்தின் படம்.

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!புதருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த எனக்கும் உள்ளுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பயங்கர நிகழ்வு எதுவும் தெரியாது. மிக நீண்ட நேரம் கழித்து, நாகமுனி வெளியில் வந்தான். இடது கண் கருவிழியில் முள் இறங்கியிருந்தது. வலியால் துடித்தபடி இருந்தான். அவனது கையில் இருந்த துண்டால் கண்ணை அப்படியே கட்டலாம் என்று நான் முயன்றபோது “வேண்டாம் அதில் விஷம் இருக்கலாம்” என்றான். எனக்கு அப்போது புரியவில்லை.

பெரும்பாடுபட்டு மலையிலிருந்து இறங்கி வந்து, மருத்துவமனையில் சேர்த்தோம். நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் இடக்கண் கருவிழியின் வெள்ளைத்தழும்போடு, பார்வைக் குறைவோடு அவன் வீடு திரும்பினான். 

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

உள்ளே என்ன நடந்தது என்று அவன் சொன்னதைக் கேட்டபோது ரத்தமே உறைந்துவிடுவதுபோல் இருந்தது. அசாத்தியமான துணிவோடு, அடுத்த நிமிடத்தை எதிர்கொள்ளும் கதாநாயகர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது வாழ்க்கை. நமக்குத்தான் அவர்களோடு சேர்ந்து நடக்க வாய்ப்பது இல்லை.

நாகமுனியின் காடு பற்றிய அறிவு கண்டு எண்ணற்ற முறை வியந்திருக்கிறேன். எண்ணிக்கைக்கு உட்பட்ட முறை உறைந்திருக்கிறேன். காட்டில் கிடக்கும் எந்த ஒரு காலடித் தடத்தையும் வைத்து அது என்ன விலங்கென்று கணப்பொழுதில் சொல்லிவிடுவான். `நாய்த்தடம் விரிஞ்சதுபோல் இருக்கும்’, `நரித்தடம் குத்துனாப்ல இருக்கும்’, `காட்டுப் பூனையின் தடம் சிறுத்தை தடம் மாதிரியே இருக்கும்’, `கீரித்தடம் பெருச்சாளித்தடம் மாதிரி இருக்கும்’... என்று சொல்லிக்கொண்டே போவான். காட்டில் அவனோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.

காட்டைப் பற்றிய அவனது அவதானிப்பைத் தனியே தொகுத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. `வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்ற கவிதையைப் படித்தபோது, `அடடா... நாகமுனிக்கு வேலையில்லாமல் செய்துவிட்டானே இளங்கோ’ என்று கேலியாகப் பேசிச் சிரித்தது உண்டு.

சங்க இலக்கிய வாசிப்பு தீவிரப்பட்ட காலத்தில் நமது பழங்கவிதைகள் எங்கும் எண்ணற்ற நாகமுனிகள் வெவ்வேறு பெயர்களில் கவிதை எழுதியிருப்பது கண்டு வியந்துபோயிருக்கிறேன்.

எவ்வளவு நுட்பமான அவதானிப்புகளோடு உயிரினங்களின் காலடித் தடங்களைப் பற்றி சங்கக் கவிதைகள் பதிவுசெய்துள்ளன. சங்க இலக்கியத்தில் மிக அதிகமாக இடம்பெறும் பறவை, மயிலாகத்தான் இருக்கும். 84 இடங்களில் மயிலைக் காணமுடிகிறது. ஆனால், மயிலைப் பற்றியதோர் உவமை இருக்குமா என்று தேடினால், மயிலின் காலடி எப்படி இருக்கும் என்று ஓர் உவமை சொல்லப்பட்டுள்ளது. `நொச்சி இலை, மயிலின் காலடிபோல் இருக்கிறது’ என்று சொல்கிறான் கொல்லன் அழிசி என்ற புலவன்.

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்என்னவொரு பொருத்தமான, அழகு மிகுந்த உவமை இது. மயிலின் காலடி முன்னோக்கி மூன்று விரல்களை உடையது, நொச்சியிலையை அச்செடுத்து செய்ததைப்போல அப்படியே இருக்கும். `மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி’ என்பது உவமையல்ல; வார்த்தையால் செய்யப்பட்ட வார்ப்பு. இதே உவமையை, பெயர் அறிய முடியாத நற்றிணைப் புலவனும் கையாள்கிறான். (115-வது பாடலில்.)

விலங்கினங்களில் மிக அதிகமான முறை குறிப்பிடப்பட்டது மானாக இருக்கலாம். ஏறக்குறைய 93 இடங்களில் துள்ளிக்குதிக்கிறது மான். ஆனால், மானைப் பற்றிய உவமையைத் தேடினால், மானின் காலடி எப்படி இருக்கும் என்று உவமை சொல்கிறான் நம்பிகுட்டுவன் எனும் புலவன். `அடப்பங் கொடியின் இலை கவட்டிலையாக இருக்கும். அது மானின் காலடிக் குளம்பைப் போன்று உள்ளது’ என்கிறார் குறுந்தொகைப் பாடலில்.

புலியைப் பற்றி சங்கக் கவிதையில் எத்தனையோ உவமைகள், வர்ணனைகள் உள்ளன. ஆனால், `புலியின் விரல்கள் பிஞ்சு வாழைக்காயைப் போன்று இருக்கும்’ என்றும், `புலியின் காலடி, வாழைக்காயின் குலை போலிருக்கும்’ என்றும் குறிஞ்சிக்கலியில் கபிலர் கூறுவது சற்றே பதறவைக்கும் அழகு. அதேபோல, யானையின் காலடியை, `பறையடி’ என்றும், யானைக்குட்டியின் காலடியை, `துடியடி’ என்றும் சொல்கிறது சங்க இலக்கியம்.

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

சங்க இலக்கியத்தில் விலங்குகளின் காலடிகள் பற்றி உவமைகளின் உச்சத்தை தொட்டுச் சென்றுள்ளனர் நமது கவி முன்னோடிகள். இவை எல்லாம் கவிதைகள். சரி, சங்ககால விலங்கின் காலடி ஒன்று காணக் கிடைத்தால் எப்படி இருக்கும்?

சற்றே ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய கேள்விதான். ஆனால், இந்தக் கேள்விக்கான பதில் இப்போது நம் கையருகில் இருக்கிறது என்பது நம்ப முடியாத உண்மை.

சங்ககாலத்தில் நிகழ்ந்த நிகழ்வு இது. மக்கள் கட்டடம் கட்ட, மண் குழைத்து, செங்கல் அறுக்கின்றனர். அறுத்த செங்கல்லை வெயிலில் காயவைக்கின்றனர். ஈரத்தோடு இருக்கும் அந்தச் செங்கல்லில் மிதித்துப் பாய்ந்தோடுகிறது விலங்கு ஒன்று. அதன் ஒரு காலடித்தடம், அப்படியே அந்தச் செங்கல்லில் பதிகிறது. வெயிலில் காய்ந்த செங்கலை எடுத்து சூளையில் சுடுகின்றனர். பின்னர் கட்டப்படும் கட்டடத்தில் ஏறி நிற்கும் எண்ணற்ற கற்களில் அதுவும் ஒன்றாக நிற்கிறது.

சுமார் 2,400 ஆண்டுகளுக்குப் பின்னர், அமர்நாத் இராமகிருஷ்ணன் தலையிலான குழு கீழடியில் அகழாய்வை நடத்துகிறபோது, சங்ககாலத்தில் கட்டப்பட்ட செங்கல் கட்டடம் ஒன்றின் இடிந்த பகுதி கண்டறியப்படுகிறது. அந்தச் சுவற்றின் மேலே இருக்கும் செங்கல், ஈரத்தோடு அறுத்து காயவைத்தபோது விலங்கொன்று மிதித்து ஓடிய செங்கல். அதன் காலடித்தடத்தைத் தாங்கியபடி அச்சுக் குலையாமல் அப்படியே இருக்கிறது.

பாய்ந்தோடிய அந்த விலங்கின் பாய்ச்சல் எத்தனை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ளது என்பதை நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது. `இது எந்த விலங்கின் காலடித்தடம் என்பதை அதற்குரிய அறிஞர்களுக்கு அனுப்பி, கண்டறிய வேண்டும்’ என்றனர் தொல்லியலாளர்கள்.

காலடித்தடங்களைப் பற்றிய நுட்பமான அவதானிப்புகளைக் கொண்ட சங்கப் புலவர்களை இன்று அழைத்துவர முடியாது. ஆனால், நாகமுனியை சங்ககாலத்து காலடியை நோக்கி

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

அழைத்துச் செல்ல முடியும்.

அவனை அழைத்துச் சென்றேன். பார்த்ததும் சொன்னான்... “நாயின் காலடி” என்று. ஆனால், மிக உயரமான நாய். இதுபோன்ற நாய்கள் ஒன்று சேர்ந்தால், புலியும் அஞ்சும். நாகமுனி வியந்து சொன்ன குறிப்புகள் அன்று முழுவதும் நீண்டன.

வெறும் 38 சென்டி மீட்டர் நீளம்கொண்ட ஒரு செங்கல்லில் பதிந்துள்ள காலடியைப் பார்த்ததும், பள்ளிப் படிப்பைத் தாண்டாத நாகமுனியால் அது எதனுடைய காலடி என்று சொல்ல முடிகிறது. ஆனால், 110 ஏக்கர் பரப்பளவில் புதைந்துகிடக்கும் ஒரு நாகரிகத்தின் காலடியை இரண்டு ஆண்டுகளாக உணரவும் முடியாமல், அறியவும் முடியாமல் கிடக்கிற அரசுகளை என்னெவென்று சொல்வது?
***
ஒருவழியாக தமிழக அரசு கீழடியில் அருங்காட்சியம் அமைக்கத் தேவையான இரண்டு ஏக்கர் நிலத்தைத் தர முன்வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அருங்காட்சியகப் பிரிவு மெளனமாகப் பதுங்குவதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவெங்கும் 44 கள அருங்காட்சியகங்கள் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் இருப்பதோ ஒரே ஓர் அருங்காட்சியகம் மட்டுமே; அதுவும் சென்னை கோட்டைக்குள் இருக்கிறது. கர்நாடகத்தில் ஆறு மத்திய கள அருங்காட்சியகங்களும், ஆந்திராவில் நான்கு அருங்காட்சியகங்களும் உள்ளன.

கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அந்தத் துறையின் மைசூர் கிட்டங்கிக்குப் போனால் என்ன ஆகும் என்பதற்கு நம்மிடம் முன்னுதாரணங்கள் உள்ளன. தமிழகத்திலிருந்து படியெடுக்கப்பட்ட பல்லாயிரம் கல்வெட்டுக்கள் மைசூரில்தான் இருக்கின்றன. அவற்றை நமது பல்கலைக்கழகங்களாலேயே அணுகவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இயலாத நிலைதான் இன்று வரை நீடிக்கிறது.

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்

இந்த நிலையில்தான் கீழடி அகழாய்வில் கிடைத்தப் பொருட்களை இங்கே கள அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசிடம் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. ஆனால், மக்களின் அரசு அந்தப் பொறுப்பையும் மக்களிடம் கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. 

கீழடி போலவே 2014-ம் ஆண்டு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட இடம் குஜராத்தில் உள்ள வாட்நகர். (Vadnagar) இது மோடியின் சொந்த ஊர். அங்கு அடுத்த ஆண்டு அகழாய்வுப் பணி தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்னரே வழங்கிவிட்டது. ஆனால், இந்தக் கட்டுரை எழுதப்படுவது வரை கீழடியில் அடுத்த ஆண்டு அகழாய்வுப் பணியைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இதனை வலியுறுத்தி முன்னெடுக்கக் குரலற்றுக் கிடக்கிறது தமிழகம். 110 ஏக்கர் பரப்பில் 2,000 ஆண்டு பழமையானதொரு நகரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ஆனால், இதனைத் தமிழகத்தின் முக்கிய செய்தியாக மாற்றவே முடியாத நிலை. 

சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சமாகக் கிடைத்துள்ள பெரும் துறைமுக நகரம் தொழவீரா. குஜராத், கட்ச் பகுதியில் 80 ஹெக்டர் பரப்பளவுகொண்ட இந்த நகர் முழுமையையும் பாதுகாத்து, திறந்தவெளி அருங்காட்சியகமாகப் பராமரித்து வருகிறது மத்திய அரசு. ஏறக்குறைய அதே போன்றதொரு திட்டத்தோடு அணுகப்படவேண்டிய இடம்தான் கீழடி.

மத்திய அகழாய்வுத் துறையினர் 2013-14-ம் ஆண்டு வைகைக் கரை கிராமங்களில் நடத்திய ஆய்வில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 293 கிராமங்களை அடையாளம் கண்டனர். அவற்றில் ஒன்றாகத்தான் கீழடியைத் தேர்வுசெய்து பணியைத் தொடங்கினர். 

கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்அவர்கள் கண்டறிந்த பிற இடங்களில் பெரும்பான்மையானவற்றில் இப்போதே ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அங்கெல்லாம் நிரந்தரக் கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன. கம்பம் நகரின் பக்கத்தில் உள்ள உத்தமபுரத்தில் 2005-ம் ஆண்டு ரோமானியக் காசுகள் எடுக்கப்பட்டன. அவ்விடம் முழுவதும் இப்பொழுது வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. ஆண்டிபட்டி-வத்தலக்குண்டு சாலையில் உள்ள மூனாண்டிபட்டியில் கண்டறியப்பட்ட கல்படுகை இப்பொழுது இல்லை. எங்கே என்று விசாரித்தால், பாலம் கட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகச் சொல்கின்றனர். அதேபோல `மிகச் சிறந்த தொல்லியல் மேடு’ எனக் கருதப்படும் நரிக்குடிக்கும் பக்கத்தில் உள்ள அல்லிநகரத்தில், அந்த மேடு முழுக்க இப்போது பிளாட் போடப்பட்டுவிட்டது. இப்படி கண்ணுக்கு முன்னால் அழிவுகள் இறுதிப்படுத்தப்படுகின்றன.

கீழடியின் மிக முக்கிய சவாலே இங்கு தொடர்ந்து நடத்தவேண்டிய அகழாய்வில்தான் இருக்கிறது. மத்திய, மாநில அரசு தொடர்ந்து அகழாய்வு செய்தால், அடுத்த 20 வருடங்களுக்கு ஆய்வு செய்ய முடியும். அது வரை அல்லது ஆய்வுகள் நடக்கும் காலம் வரை இந்த இடம் அதே தன்மையில் இருக்குமா என்பதுதான் கேள்வி.

இவ்விடம் தென்னந்தோப்பாக இருந்ததால்தான் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு எந்த ஒரு கட்டுமானமும் நிகழாமல், அடிமண் சேதப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால், இனி நிலைமை எப்படி மாறும் என்பது தெரியாது.

பட்டுப்போன மரங்கள், அல்லது மரமற்ற இடைவெளிகளைப் பார்த்துப் பார்த்தே அகழாய்வை எத்தனை ஆண்டுகாலம் தொடர முடியும்? இதற்கிடையில் இந்தப் பகுதியில் புதிதாக உருவாகும் ஒரு செங்கல் சூளை எண்ணற்ற அடையாளங்களை அடியோடு அழித்து முடித்துவிடும்.

இந்த ஆண்டு அகழாய்வில் ஒரு தொழிற்சாலைப் பகுதி கண்டறியப்படக் காரணம், சுமார் 150 அடி நீள, அகலங்களைக் கொண்ட வெற்றிடம் கிடைத்ததுதான். பரந்துவிரிந்த இந்த தென்னந்தோப்புக்கு இடையில் அப்படியொரு வெற்றிடம் உருவாகக் காரணம், அந்த இடத்தில் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மேலே போவதால், கீழே தென்னையை நடாமல் விட்டுவைத்துள்ளனர். மின்சாரத்தால் கண்டறியப்பட்ட ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய தொழிற்சாலை இது என்றுகூடச் சொல்லலாம்.

கீழடிக்கு இன்றைய அவசரத் தேவை, இதுபோன்ற உயர் அழுத்தத்தை உருவாக்கக்கூடிய குரல்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடம் சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகளை ஒரு நிலை எடுக்கவைப்பது இன்றைய அவசியத் தேவை.

தமிழக அறிவுச் சமூகத்தின் கூட்டுக் குரல் உறுதிபட ஒலிக்கவேண்டிய நேரம் இது. கீழடி நிலத்தைப் பாதுகாப்பது என்பது முதற்பெரும் பணி. ஒரு பெரும் நாகரிகத்தின் அடையாளங்களைத் தாங்கி நிற்கும் இந்தத் தொல்லியல் மேட்டைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அது சாதாரண செயல் அல்ல. பெரும் பொருளாதார லாபம் கிடைக்காத, அதே நேரத்தில் நிர்வாகரீதியில் சற்றே தலைவலியை உருவாக்கும் இந்தப் பணியை பொறுப்போடு செய்து முடிக்க ஓர் அரசியல் திறன் தேவைப்படுகிறது. அதனை உருவாக்க அனைத்து முனைகளிலும் இருந்து இயங்கவேண்டிய தேவையுள்ளது.

இது மட்டுமின்றி, அகழாய்வை விரிந்த அளவு மேற்கொள்ளவும், கள அருங்காட்சியம் அமைக்கவும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திச் செய்து முடிக்கும் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
  
அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் அழிப்பதற்கும் பின்னால் உள்ள அரசியல் பட்டவர்த்தனமாக வெளிப்படும் நாடாக இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார். அதற்காக மாநில அரசு 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுக்கிறது.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள 5,300 பொருட்களில் ஒன்றுகூட மத அடையாளம் சார்ந்த பொருட்கள் இல்லை. பெரு மதங்களின் ஆதிக்கம் உருவாகாத ஒரு காலகட்டத்தின் அபூர்வக் கண்டெடுப்புதான் கீழடி. அந்த அடையாளங்களைப் பாதுகாப்பது என்பது, தமிழ்ச் சமூகத்தின் அர்த்தம் மிக்க பண்பாட்டு சாரத்தைப் பாதுகாப்பதாகும்.

அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்க முயலுவதும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கத் தயங்குவதும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளே. இதில் நாம் என்ன நிலையெடுக்கப்போகிறோம் என்பதே கேள்வி. 

ஒருமுறை வெளிப்பட்டுவிட்ட ஒன்றை முழுமையாக வென்றெடுப்பது மட்டுமே ஒரே வழி. விட்டுவைப்பது எதுவும் மிஞ்சாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism