Published:Updated:

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

Published:Updated:
அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்
அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால், எல்லாம் சௌக்கியமே...’ என்றுதான் கண்ணதாசன் எழுதினார். நாம் இருக்கவேண்டிய இடத்தைவிட்டு எங்கும் செல்லாமல் இன்றுபோல் என்றும் வாழ்வதுதான் பாதுகாப்பானது. ஆனால்,  இச்சிறுவாழ்வில் கண்ணிறைந்து காணத்தக்க மகத்தான இடங்களை நோக்கி எறும்புபோல் ஊர்ந்தேனும் சென்றுவிட வேண்டும் என்றுதான் உள்ளம் துடிக்கிறது. வரலாற்றின் தொல் நிலங்களில் பல நூறு தலைமுறைகளுக்கு முந்திய மாந்தர்கள் நடமாடிய தலங்களைக் கண்ணாரக் கண்டுவிட வேண்டும் என்பது என் நெடுநாள் உளவேட்கை. 2,500 ஆண்டுகள் பழைமையான (பல்வேறு ஆதாரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன) அஜந்தா குகைகளை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். இதுபோன்ற பயணங்களுக்கு எல்லாரிடமும் பணம் இருக்கிறது, போய்க் காண வேண்டும் என்னும் ஆசை மனமும் இருக்கிறது. ஆனால், பார்த்துக்கொண்டிருக்கிற பண்ணையத்தையும் பிழைப்பையும் விட்டகன்று, பத்து நாள்கள் வெளியேறத்தக்க சூழ்நிலைதான் இல்லை. என்னையும் அத்தகைய இடர்கள் கால்களைப் பற்றி இழுத்தனதாம். இம்முறை எது வரினும் நில்லேன் என்று துணிந்து கிளம்பிவிட்டேன்.

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


ஔரங்காபாத்திலிருந்து வடக்காகச் செல்லும் சாலையில் 108 கி.மீ தூரத்தில் அஜந்தா குகைகள் இருக்கின்றன. மழையால் ஊர் நசநசத்திருந்தது. சிற்றோடைகள் மலை விளிம்புகள் தாண்டி, பத்து நிமிடப் பயணத்தில் குகைப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இறங்கியதும் சிங்கவால் குரங்குகளின் கூட்டம் வரவேற்றன. குரங்குகளுக்கே உரிய தாவு விளையாட்டுகள் ஏதும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தன. 1,200 ஆண்டுகளாக பௌத்த துறவிகள் தியானத்தில் நிலைத்திருந்த அவ்விடத்தில் குரங்களும் அதே அமைதிக்குப் பரிணாமம் பெற்றுவிட்டனவோ!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்த ஓர் ஆங்கிலேய அதிகாரி, புலியைத் துரத்திச் செல்கையில் இந்தப் பகுதியைக் கண்டறிந்தாராம். இதன் தொன்மையையும் ஓவியப் பேரழகுகளையும் கண்டு வியந்த ஐரோப்பியர்கள் இக்குகைகளை உலகுக்கு அறியச் செய்தனர்.   

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அஜந்தாவில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 28 குகைகளைச் சுற்றுலா பயணியர் காண்பதற்காக ஒழுங்கு செய்து, விளக்குகளை அமைத்துப் பராமரிக்கின்றனர். `இந்தியாவில் காணத்தகுந்த தொன்மையான இடங்கள்’ என்ற பட்டியலில் அஜந்தா குகைகள் முதல் ஐந்துக்குள் வருவதால், அன்றாடம் ஏராளமான வெளிநாட்டுப் பயணியர் வருகின்றனர். மும்பையில் வந்திறங்கும் அவர்களுடைய பட்டியலில் முதல்இடத்தில் இருப்பவை இக்குகைகள்தாம். வனப்பகுதி, பாழ்பட்ட இடம் என்பதால், மிரண்டுவிட வேண்டாம். வண்டி நிறுத்தத்திலிருந்து கடைசிக் குகை வரை குகைக்கு ஒருவர் வீதம் சீருடை அணிந்த காவலர்கள், பாதுகாப்புக்குக் காவல்துறைக் குழு, குகைகளுக்கிடையே உள்ள பகுதியில் சுற்றுலாத் துறை அலுவலகம், துப்புரவுப் பணியாளர்கள் என அவ்விடம் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது. குழந்தைகளோடும் குடும்பத்தோடும் அச்சமின்றிச் செல்லலாம். நாடெங்கிலுமுள்ள நுண்கலைக் கல்லூரிகளின் மாணவ மாணவியரின் சுற்றுலாக் குழுக்கள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் அஜந்தா குகைகளுக்கு விடுமுறை தினம்.

 நாங்கள் சென்றபோது,  நல்ல சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. வகோரா நதியில் மிதமான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது. குகைப் பள்ளத்தாக்கு வளைவின் முடிவில் வகோரா நதி அருவியாய்க் கொட்டி இறங்குகிறது. அதன் மெல்லிய இரைச்சல் குகைகளுக்குள் மந்திர ஒலிபோல் தொடர்ந்து மயக்குவது. மூச்சொலியைக் கவனிப்பது மட்டுமில்லை, வீழாற்றின் ஒலியும் மனத்தை ஒடுக்குவதுதானே!

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

தபதி நதியின் துணையாறுகளில் ஒன்று! வகோரா நதி. அந்த ஆறு அஜந்தா குகைப் பகுதியில் குதிரைக் குளம்பு வடிவத்தில் கொக்கிபோல் வளைந்து திரும்புகிறது. நதி பாயும் பகுதி ஆழமான பள்ளத்தாக்கு. பள்ளத்தாக்கிலிருந்து 73 மீட்டர்கள் உயரத்துக்கு இருமருங்கும் செங்குத்தான மலைச்சுவர்கள் இருக்கின்றன. பள்ளத்தாக்கின் வெளிவிளிம்பு மலைச்சுவர்களில் வரிசையாகக் குடையப்பட்ட குகைகளின் தொடர்ச்சிதான் அஜந்தா குகைகள். குடைவரைக் கோயில்கள் என்ற வகையில் வரும் இக்குகையமைப்புகளின் பெரும் வளாகம் தன் பொற்காலத்தில் ஆயிரமாயிரம் பௌத்த துறவிகள், பயிற்சியாளர்கள், தியான அப்பியாசிகளின் தனியுலகமாகச் செம்மாந்து இருந்தது. சைதன்ய பிரகாரங்கள், பௌத்த விகாரைகள் ஆகியவற்றின் தொகுதியாக அவ்விடம் விளங்கிற்று.

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்புகைப்படங்களில் சிறுகுடைவுபோல் தோன்றும் குகைகளை நேரில் பார்க்கையில் பேருருவாய் இருக்கின்றன. ஒவ்வொரு குகையும் ஒரு திருமண மண்டபத்தைப்போல பிரமாண்டமாக இருக்கின்றது. குடைந்து எடுக்கப்பட்ட கற்களையும் பாறைகளையும் எங்கே அகற்றி மறைத்தனர் என்பதைக்கூட இன்று கணிக்க முடியாது. அத்தனை உடைவுகளையும் முற்றாக அப்புறப்படுத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு குகையிலிருந்தும் கீழேயுள்ள ஓடைக்குச் செல்ல தனித் தனிப் படிக்கட்டுகள் இருந்திருக்கின்றன. தற்காலத்தில் அவை சிதைந்துவிட்டன. எல்லா குகைகளிலும் நால்வர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்குத் திரட்சியான தூண் விதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரையை சமதளமாக, மட்டம் பிறழாமல் அமைத்திருக்கின்றனர். குகைக்குள் கற்றரை என்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது. குகைக்கு முன்பாகவே தூண் விதானங்களும் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த வாயிலும் வரவேற்கின்றன. குகைக்கு உள்ளேயும் வரிசைவரிசையாகத் தூண்கள் உள்ளன. முடிவாக, கருவறை போன்ற தனியறையில் தியான புத்தரின் பிரமாண்ட சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. உள் மண்டபங்களின் பக்கவாட்டுச் சுவர்களில் சிற்றறைகளாகக் குடையப்பட்டிருக்கின்றன. அந்தச் சிற்றறைகளில் பௌத்த பிக்குகள் எவ்வித இடையூறுமின்றி, தியானத்தில் மூழ்கியிருப்பர். பெருங்குடைவுகள், தூண்கள், விதானங்கள், மண்டபங்கள் என்பனவற்றால் ஒரு வியப்பு என்றால், இன்றும் நிறம் மங்காத பேரழகு கொஞ்சும் அரிய ஓவியங்கள்தாம் அஜந்தா குகைகளின் உச்ச வியப்பு.

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

அத்தனை பெரிய உட்குடைவு மண்டபங்கள் அனைத்திலும் தரைத்தளத்தைத் தவிர்த்து, பிற எல்லாச் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கூரையிலும் பக்கவாட்டுச் சுவர்களிலும் என எங்கெங்கும் ஓவியங்களின் பெருங்கடல். அம்மாம் பெரிய குகை மண்டபத்துக்குள் நுழைந்ததும் நிறத்தெழிலார்ந்த நூறாயிரம் ஓவியங்களின் தொகுதியைப் பார்த்தால், சொர்க்கத்தில் இருக்கின்றோமா என்ற மயக்கம்தான் ஏற்படும். அவர்கள் என்னென்று நினைத்து இவற்றை ஆக்கினர், வாழ்ந்தனர் என்று கற்பனையால்கூட கணிக்க முடியவில்லை.

 ஓவியங்களை வரைவதற்கு அக்காலத்தினர் செய்த செயல்முறை, நுண்மையினும் நுண்மையானதாக இருக்கிறது. முதலில், சுவரின்/கூரையின் கற்பரப்பின் மீது சிறு புள்ளிகளை இட்டு, சாந்துக் கலவை ஒட்டுவதற்கேற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். பிறகு தனித்துவமான களிமண், கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, கற்பரப்பில் பூசுவதற்கேற்ற மென்சாந்து போன்ற ஒரு கலவையைத் தயாரித்திருக்கின்றனர். அந்தச் சாந்து கற்சுவரில் பன்முறைகளில் மெல்லிய படிவாகத் தேய்த்துத் தேய்த்துப் பூசப்பட்டிருக்கிறது. அந்தப் பூச்சினைக் நன்கு காயவிட்டு, எலுமிச்சைச் சாறுகொண்டு கழுவித் தூய்மைப் படுத்தியிருக்கின்றனர். செம்மரப்பட்டைகள், மரக்குழம்புகள், இலைதழைகள், மூலிகைச் சாறுகள் ஆகியவற்றைக் கடைந்து, வேண்டிய வண்ணத்திலான நிறக்குழம்புகளைத் தயாரித்திருக்கின்றனர். ஓர் ஓவியத்தில் பல்வேறு அடுக்குகளாக நிறக்குழம்பைத் தொட்டு நுணுக்கமாக வரைந்திருக்கின்றனர். இத்தகைய வேலைத்திறத்தால்தான் 2,500 ஆண்டுகள் கடந்து அவ்வோவியங்கள் சிதைவின் மீதமாக, பேரழகுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. பல்வேறு ஆடவர் பெண்டிர் தோற்றங்கள், அரசர் அரசவைக் காட்சிகள், விலங்குகள், பறவைகள், மரஞ்செடி கொடிகள், துறவியர் நிலைகள், கோலமிட்டது போன்ற நேரான வளைவான கோட்டு வேலைப்பாடுகள் என எண்ணரிய ஓவியங்கள். புத்த ஜாதகக் கதைகளிலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் காணப்படுகின்றன. ஓவியங்களில் துலங்கும் பெண்கள் பேரழகியராக விளங்குகின்றனர். இடைச் சிற்றாடைகளோடும் கொடியுடல்களோடும் கொங்கைகளோடும் காணப்படுகின்ற அப்பாவையர் பல நூறு தலைமுறைகளுக்கு முந்தைய நம் தாய்வழி நிலையினர் என்று எண்ணும்போதே சிலிர்க்கிறது. அரசர்கள் தலையில் அழகிய முடியையும் மார்பில் மாலைகளையும் அணிமணிக்கோவைகளையும் அணிந்தவர்களாகவும் இன்முகத்தினராகவும் காட்சி தருகின்றனர். போதிசத்துவர்களைக் குறிக்கின்ற சிற்பங்களையும் ஓவியங்களையும் காண முடிகிறது. அஜந்தா குகை ஓவியங்களில் போர்க் காட்சிகள் அரிதினும் அரிதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்

வாகதர்கள், சாதவாகனர்கள், குப்தர்கள், இராட்டிரகூடர்கள் என்று பல்வேறு அரசாட்சிகளிலும் பௌத்த மதம் செழித்துப் பரவியிருந்தது. அக்காலக் கட்டங்களில் ஒவ்வோர் அரசரும் அரசகுமாரர்களும் மந்திரிப் பிரதானிகளும் தம் கொடையருட் காணிக்கைபோல் இந்தக் குடைவரைக் கோயில்கள் அமைத்துத் தந்திருக்கின்றனர். அவர்களே தம் இறுதிக் காலத்தில் துறவுபூண்டு இங்கு வாழ்ந்தும் மடிந்திருக்கலாம். இங்கிருந்து பரவிய சிற்ப ஓவியக் கலை அடிப்படைகள்தாம் சீனா முதற்கொண்டு பௌத்த மதம் பரவிய எல்லா கீழைத்தேயங்களிலும் மேலாண்மை செலுத்துவதாகக் கூறுகின்றனர். இந்தியாவுக்கு வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங் அஜந்தா குகைக் கோயில்களைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார்.  

அஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன் 30 குகைகளில் ஒவ்வொரு குகையைப் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதலாம். அவ்வளவு தீராத செய்திகளும் வியப்பான வரலாற்றுத் தரவுகளும் உள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் குகைகளையும் ஓவிய சிற்பங்களையும் கண்டு கண்டு களைத்துப்போய் அமர்ந்துவிட்டேன்.  அடுத்தடுத்த குகைகளில் நுழைய நுழைய வியப்பின் அதிர்வு மட்டம் கூடிக்கொண்டே போனால், யாரால்தான் தாங்க முடியும்? கடைசி இரண்டு குகைகள் அரைகுறைச் செதுக்கங்களோடு விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. குகைகளைச் செதுக்க எத்தகைய முறைமைகள் கையாளப்பட்டன என்பதற்கு அவை சான்றாகத் திகழ்கின்றன. இசைக்குகை என்று ஒன்றிருக்கிறது. ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று சொன்னால், அடுத்த அரை நிமிடத்துக்கு அது ‘அம்ம்ம் நம்ம் ஆம்ம்ம்’ என்று எதிரொலித்துக்
கொண்டே இருக்கிறது. ஹீனயான பௌத்தத்துக்கும் மகாயான பௌத்தத்துக்கும் உள்ள வேறுபாடுகளோடும் சில குகைகள் இருக்கின்றன. கடைசிக் குகைகளில் `சயன புத்தர்’ என்றொரு சிலை இருக்கிறது. புத்தரின் துயில்கோலத்தில் அமைந்த அந்த பிரமாண்டமான சிற்பம் நெஞ்சைவிட்டு அகலாதது.

தொங்கு பாலத்தின் வழியாகப் பள்ளத்தாக்கில் இறங்கி, குகை வரிசைகளின் தொகுத்த காட்சியினைக் கண்டேன். நான் முழு நிறைவை உணர்ந்த அபூர்வமான பொழுதுகளில் அதுவும் ஒன்று. திரும்புமிடத்தை நோக்கி மெள்ள நடந்து வந்தேன். மழை அன்பாகப் பெய்து
கொண்டிருந்தது. அதில் நனைந்ததைக்கூட உணர முடியாத ‘நினைவற்ற மீள் நடை’ அது என்றுதான் சொல்ல வேண்டும். `வாழ்விலே ஒருநாள்’ என்று ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒருநாளை `அஜந்தா குகைகள்’ எடுத்துக்கொள்ளட்டும்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism