Published:Updated:

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

படங்கள் : ப.சரவணகுமார்

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்
“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

“சுயம்புவப் பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு..? பிழைக்கத் தெரியாத பனங்காட்டுப் பெறப்பு. எதுவும் அவ்வளவு லேசா மண்டையில ஏறாது. சப்பாணிப் பய... குழந்தையில இருந்தே அவன் சீக்காளி. இப்போ, ரொம்ப வீக்காயிட்டான். இருதயமும் வீக்காயிருச்சு. வைத்தியம் பண்ணி மருந்து, மாத்திரை திங்கலாம்னா, டெஸ்ட் பண்ணக்கூட உடம்பு தாக்காதுங்கான் டாக்டர்...”

அவஸ்தைகளை மறைத்து, குழந்தையைப்போல குலுங்கிச் சிரிக்கிறார் மு.சுயம்புலிங்கம். கரிசக்காட்டுப் படைப்பாளி. எளிய மொழியில் விளிம்பு மனிதர்களின் வெள்ளந்தி வாழ்க்கையை பதிவு செய்தவர். `நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்’ கவிதைத் தொகுப்பும், `ஒரு பனங்காட்டுக் கிராமம்’ சிறுகதைத் தொகுப்பும் சுயம்புலிங்கத்தை இலக்கிய தளத்தில் ஆழப் பதிவுசெய்தவை. 28 சிறுகதைகள் அடங்கிய `நீர்மாலை’ சிறுகதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. பனங்காட்டு வாழ்க்கையின் வெம்மை தாங்காமல் சென்னைக்குப் பெயர்ந்து, பலசரக்குக் கடை தொடங்கி, சைக்கிளில் கருப்பட்டி கடலைமிட்டாய் விற்றது வரை வெம்பாடுபட்ட சுயம்புலிங்கம், எல்லா தருணங்களிலும் எழுத்தை தவம்போலச் சுமந்து திரிந்தவர். பெருங்களத்தூரின் ஓர் ஒதுக்குப்புறத் தெருவில், இடுப்பில் கட்டிய மேல்துண்டோடு, எனக்குக் கதவு திறந்தார் சுயம்புலிங்கம்.

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!“நான் பெறந்த ஊரு வேப்பலோடை. தூத்துக்குடிக்குப் பக்கத்துல சுத்திலும் பனங்காடு சூழ இருக்கு. என்னைப் பெத்த அம்மையும் அய்யாவும் ரொம்ப அருமையான ஆளுக்க. எங்க அய்யா பேரு முனியசாமி. தலைச்சுமை யாவாரி. கருப்பட்டி சீஸன்ல கருப்பட்டியும், கருவாடு சீசன்ல கருவாடும் சுமந்துபோயி சுத்துப்பட்டு கிராமங்கள்ல கூவி வித்துட்டு வருவாரு. ரொம்பச் சின்ன யாவாரம். பெருசா அவருக்குக் கை கொடுக்கலே. கொஞ்ச நாளு, உப்பளத்துல அத்தக்கூலியா வேலைக்குப் போனாரு. கடைசிக் காலத்துலயும், எங்க அம்மைகூடப் பொறந்த தம்பி வீட்டுல சோறு பொங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாரு.

எங்க அம்மை, எப்பவும் ரெண்டாளு வேலை பார்ப்பா. காட்டு வேலை, வீட்டு வேலைனு சாகுற வரைக்கும் ஓய்வே இல்லாம உழைச்சுக் கொட்டுனா. அம்மை பேரு, பெரிய பிராட்டி. ஆளு கல்லு மாதிரி... கஷ்டத்தைத் தாங்கித் தாங்கி காய்ச்சுப்போன சாமி. மொத்தம் எங்க அம்மை பெத்தது ஒம்போது பிள்ளை. முதல்ல பெறந்த ஆறு புள்ளைவளும் அடுத்தடுத்து செத்துப்போச்சு. எல்லாத்துக்கும் பத்து வயசு, பதினோரு வயசு... ஒரு பையன் செத்து, சுடுகாட்டுல புதைச்சுட்டு வீட்டுக்கு வந்தா, இன்னொரு பொண்ணு செத்துக்கிடப்பாளாம்... இப்படிப் பாவப்பட்ட கதை எங்க அம்மையோடது. எல்லாத்தையும் சகிச்சுட்டுத்தான் எங்களையும் பெத்தெடுத்தா. எனக்கு முந்தி ஒரு அக்கா, எனக்குப் பிந்தி ஒரு தங்கை. அக்காவும் தங்கையும் அம்மைக்கு இணையான உழைப்பாளிங்க.

நான்தான் கள்ளன். ஒரு வேலையும் செய்ய மாட்டேன். நோஞ்சான் கணக்காத் திரிவேன். படிப்பே வராது. ஒண்ணாப்புல ரெண்டு வருஷம், ஆறாப்புல ரெண்டு வருஷம் படிச்சேன். ரெண்டு முறை தேர்வு எழுதித்தான் பத்தாப்பு தேறுனேன். அம்மைக்கு ரொம்பவே ஆசை... “நீ பத்தாப்பு வரைக்கும் வந்துட்டே... அப்படியே வாத்தியாரு வேலைக்குப் படிச்சிரு. ஒரு வாத்தியாரு பொண்ணை கட்டிவச்சுர்றேன்”னு ரொம்ப அருமையாச் சொன்னா. ஆனா, எம் மண்டைக்குத்தான் எதுவுமே சரியா ஏறலே. எல்லா சர்ட்டிஃபிகேட்டையும் தீயைவெச்சுக் கொளுத்திட்டு, மதுரையில இருந்த ஒரு பலசரக்குக் கடையில வேலைக்குச் சேந்துட்டேன். அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் இந்த ஓட்டம். எங்கேயும் நாலைஞ்சு மாசத்துக்கு மேல தங்குறதில்லை. ஒரு வேலையை ஒழுங்காக் கத்துக்கலே. அப்பாவப்போலவே எனக்கும் யாவாரம் சரியா வரலே. விவசாயம் பண்ணாலும் நட்டம்தான் வருது. ஒரு கடை கண்ணியில போய் வேலை செஞ்சாலும் உடம்பு வணங்க மாட்டேங்கு. அம்மையும் அய்யாவும் கடுங்கஷ்டப்பட்டு சேத்துவெச்ச வயக்காட்டை வித்தேன். புஞ்சைக் காட்டை வித்தேன். இருக்கிற நகையெல்லாம் வித்தேன். இருந்த வீட்டையும் வித்தேன்... இருந்ததையெல்லாம் வித்து வித்துதான், சுயம்பு காலத்தைத் தள்ளியிருக்கான்.

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்சென்னைக்கு வந்து முப்பத்தொம்போது வருஷமாச்சு. எங்க பெரியம்மை மக பொட்டுக்கடை (மாட்டுத் தீவனக் கடை) வச்சிருந்தா. அவாதான் எனக்கு நெடுங்காலம் சோறு போட்டா. நல்லது கெட்டதெல்லாம் கத்துத்தந்தா. ஆனா, எதுவும் எம் மண்டைக்கு ஏறலே. முட்டாய் கடை வச்சேன். ஜவுளிக்கடையில வேலை பார்த்தேன். எல்லாப் பாடும் பட்டாச்சு.

எங்கூர்ல ஆத்தியப்பன்னு ஒருத்தன் இருந்தான். கூடப் படிச்ச ஆளு. நல்லா வரைவான். எழுதவும் செய்வான். ஆயன்னு பேரை மாத்திவெச்சுக்கிட்டான். அவன் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துனான். ஒரு நாளு அதைக் கையில குடுத்து, `இதுக்குஒரு கவிதை எழுதித் தாடா’னு கேட்டான். யோசிச்சு யோசிச்சு ஒண்ணு எழுதிக் கொடுத்தேன். அதை அந்தப் பத்திரிகையில போட்டான். அதோட அம்புட்டுதான், நம்ப எழுத்து. பிழைப்பே தவிப்பாக் கிடக்கும்போது எழுத்து எங்கேயிருந்து வரும்..?

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்

சென்னையில அக்கா  வோட பொட்டுக்கடையில இருந்தப்போ ஞாயித்துக்கிழமை கடைக்கு லீவு. பக்கத்துல ஒரு லைப்ரரி... அங்கே போவேன். மெள்ள மெள்ள படிக்கிற வேலை பிடிச்சுப்போச்சு. இதுதான்னு இல்லாம, எல்லாத்தையும் படிச்சேன். எழுதவும் செய்யலாமேனு தோணுச்சு. இயல்பாவே, சுயம்பு யார்கூடவும் ஒட்ட மாட்டான். மத்தவங்ககூட பேசக்கூட தைரியமில்லாத ஆளு. ஆனா, சுயம்புவோட வாழ்க்கையிலயே ஆயிரம் கதையிருக்கே... அதையே எழுதலாம்னு ஆரம்பிச்சேன்.

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்`மக்கள் எழுத்தாளர் சங்கம்’னு ஒரு அமைப்பு... நான் படிக்கப்போற நூலகத்துல மாசம் ஒருமுறை கூட்டம் நடக்கும். அதுல கடைசி வரிசையில போயி உட்கார்ந்திருப்பேன். தி.க.சி.. செந்தில்நாதன், கார்க்கி, இளவேனில்னு பலபேர் இருப்பாங்க. ஆர்வக்கோளாறுல நான் ஒரு கதை எழுதிப் படிச்சேன். எல்லாப் பேரும் எழுந்து போயிட்டாங்க.

அந்தக் கூட்டத்திலதான் எனக்கு `தாமரை’ அறிமுகமாச்சு. தி.க.சி மூலமா அதுல ஒரு கதை வந்துச்சு. செந்தில்நாதன், `சிகரம்’ பத்திரிகையில கதை வாங்கிப் போடுவாரு. அதே வேகத்துல, `நாட்டுப்பூக்கள்’னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சேன். ஆனா, அதை சீண்டக்கூட ஆளில்லை. கோணங்கிதான் அதைக் கொண்டாடினார். `கல்குதிரை’யில சிறப்பிதழ் எல்லாம் கொண்டுவந்தார். அப்பறம், கி.ரா என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, `கரிசல்காட்டுத் திரட்டு’ல கதைகளை வாங்கிப் போட்டார். அதுக்குப் பெறவுதான் சுயம்புவுக்கு அடையாளமெல்லாம்...

நான் ரொம்ப எழுதின ஆளு கிடையாது. மொத்தமா சேர்த்தா எம்பத்தஞ்சு கதை இருக்கும். கொஞ்சம்போல கவிதை எழுதியிருக்கேன். எனக்கு வார்த்தைகளை வளர்க்கப் பிடிக்காது. அப்படி எழுதுற பயிற்சிக்காகத்தான் கவிதை எழுதுறேன். இந்தக் காலத்துப் பிள்ளைகள் சொல்ற நவீனமும் எனக்கு வராது. சுயம்பு சாதாரணமான ஆளு. எனக்கு எங்க மொழி, எங்க வார்த்தைதான்.

`காலச்சுவடு’ போடப்போற `நீர்மாலை’ புஸ்தகத்துல 28 கதைகள் இருக்கு. ஆடுகளைப் பத்தி மட்டுமே நாலு கதை. கோயில்ல ஆடு வெட்டுறது பத்தி ஒரு கதை. இன்னொரு கதை, வீட்டுல கிடா அறுக்கிறதைப் பத்தி. இன்னொரு கதை, காட்டுல கிடா வெட்டி கூட்டாஞ்சோறு சாப்பிட்டதைப் பத்தி. அடுத்த கதை, வீட்டுல கைவளப்பா வளர்த்த ஒரு கிடா, அதுல திங்கக் கறியில்லாம கொழுப்பாப்போன கதை.

“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்!” - சுயம்புலிங்கம்


இப்போ சங்க இலக்கியங்கள் மேல ஆசை வந்திருக்கு. நற்றிணை, பத்துப்பாட்டெல்லாம் படிக்கிறேன். ஆங்கிலம், இந்தி, மலையாளம் கத்துக்குறேன். மலையாளத்தை மொழிபெயர்க்கணும்கிற ஆசையும் இருக்கு. ஆனா, உடம்பு ஒத்துழைக்குமானு புரியலே. அப்பப்போ அசத்திப் போட்டுடுது. முதுகு, கழுத்தெல்லாம் வலியெடுக்குது. புள்ளைகதான் வெச்சுச் சமாளிக்கிதாங்க. நாலு பயலுகளுக்கும்... ஒரு அப்பனா அவங்களுக்கு நான் எதுவும் செய்யலே. நல்ல பள்ளிக்கூடத்துல, நல்ல கல்லூரியில சேர்க்கலே. அவங்களா படிச்சுக்கிட்டாங்க. ஒரு வேலை வாங்கிக் கொடுக்கக்கூடத் தெரியலே. `சரி... இந்தா பணம்... போயி ஒரு தொழில் தொடங்கு’னு சொல்லக்கூட முடியலே. `அப்பன் வேலைக்காக மாட்டான்’னு புரிஞ்சுக்கிட்டு, அவனவன் படிச்சு ஆளுக்கொரு பொழப்பைத் தேடிக்கிட்டான். காலாகாலத்துல பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கக்கூட முடியலே. அவ்வளவு பலவீனமா இருக்கேன்.

சுயம்பு, எழுத்தாளனெல்லாம் இல்லை. நிறைய பேரு சுயம்புவை அப்படி ஏத்துக்கிறதும் இல்லை. அவன் எழுதுறதெல்லாம் வெறும் செய்திகள். அவனைப் பாதிக்கிற செய்திகள். வேறெந்த எழுத்தாளன்கிட்டயும் அவன் போறதில்லை. அவன் உலகம் ரொம்பச் சின்னது. கை முடங்குற வரைக்கும் எழுதுவான். அவன் எழுதாமவிட்ட செய்திகளை அவனுக்குப் பெறவு, யாராவது வந்து எழுதுவாங்க.”

எழுத்தாக்கம்: வெ.நீலகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism