Published:Updated:

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

படம் : கண்டராதித்தன்

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

படம் : கண்டராதித்தன்

Published:Updated:
நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்
நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

விதை என்பது, மொழியினால் உருவாக்கப்படும் சொற்களின் விளையாட்டு என்ற புரிதலில் கவிஞருடன் வாசகரும் ஒத்திசைவது நிகழ்கிறது. இரவுவேளையில் வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் பார்வையாளர்கள் மனதில் உருவாக்கிடும் சித்திரங்கள் போலக் கவிதைகள், வாசிப்பில் கிளர்த்தும் அனுபவங்கள்தான் முக்கியமானவை. மொழியின் துல்லியத்தைச் சிதைத்து அர்த்தமாகும் கவிதை வரிகள், மனித மனதுக்கு நெருக்கமாக இருப்பது, ஒருவகையில் விநோதம். பொதுவாகக் கவிதைமொழி உருவாக்கும் உணர்வலைகள், வாழ்க்கையனுபவங்களுடன் நெருக்கமாக உள்ளன. சொற்களில் இருந்து விடுவிக்கப்படும் அர்த்தமானது, கலங்கலாகவும் பித்துமொழியாகவும் உருமாறுவது, கவிதையில் மட்டும் சாத்தியமாகிறது. நீண்ட பாரம்பரியமான கவிதை மரபு தொடர்கிற தமிழ்ச் சூழலில் அண்மைக் காலத்தில் பெருகியுள்ள கவிஞர்களின் புதிய சொற்கள் உற்சாகமளிக்கின்றன. அந்த வரிசையில் குறைந்த எண்ணிக்கையில் கவிதைகள் எழுதியுள்ள ஸ்ரீநேசன், தனித்து விளங்குகிறார்.

காலத்தின் முன் ஒரு செடி (2002), ஏரிக்கரையில் வசிப்பவன் (2010) என்ற இரு தொகுப்புகளுடன், ‘கல்குதிரை’ உள்ளிட்ட சிறுபத்திரிகைகளில் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. நவ கவிஞர்களில் ஸ்ரீநேசனின் வரிகள், வாசகருடன் உறவாடி, இட்டுச் செல்லும் இடமானது ஏழு கடல், ஏழு மலைகளுக்கப்பால் பரந்துள்ளது. ஸ்ரீநேசனின் எளிய கவிதை வரிகள் வாசிப்பில் தரும் நெருக்கமானது, மனதை வருடுகிறது.

‘காலத்தின் முன் ஒரு செடி’ என்ற கவிதைத் தொகுதியின் தலைப்பு உணர்த்தும் மன உணர்வு முக்கியமானது. சிறிய செடியானது காற்றில் குதூகலிக்கலாம் அல்லது வீசும் புயலில் தடுமாறி, வேரோடு பிடுங்கி எறியப்படலாம். எதுவும் நடப்பதற்கான சாத்தியத்துடன் காலவெளியில் காற்றுடன் உறவாடும் செடிதான் கவிஞர் குறிப்பிட விழைவதா? செடி போலக் காற்றில் திளைப்பது ஒருவகையில் கவிஞர் ஸ்ரீநேசன்தானா  அல்லது சகல மனிதர்களுமா? புவியில் தனிமனித இருப்பானது  செடியைப் போன்றது என்ற பார்வை, ‘ஏலி ஏலி லாமா சபக்தனி’ என தேவகுமாரன் சிலுவையில் தொங்கியபோது கதறியதன் இன்னொரு வெளிப்பாடுதான்.

ஸ்ரீநேசனின் `கொலை விண்ணப்பம்’  என்கிற கவிதையின் வரிகள், சமூக இருப்பினை அரசியல் தளத்தில் காட்சிப்படுத்துகிறது. `வேட்கை விண்ணப்பம்,  வேண்டல் விண்ணப்பம்’ என வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் போல இவர் கொலை விண்ணப்பம் பாடியிருப்பது, கவிதைக்குக் கூடுதல் பரிமாணத்தைத் தந்துள்ளது. பஞ்சமா பாதகங்களில் முதலாவதாகக் கருதப்படும் கொலையை முன்வைத்து தன்னிலையைப் பெரிய அளவில் யாரும் பதிவாக்கிடாத சூழலில் அழுத்தமான மொழியில் ஸ்ரீநேசன் எழுதியிருப்பது, அதிர்ச்சியைத் தருகிறது. வரிகளில் கவிஞரின் நெகிழ்ச்சியான மனநிலை வெளிப்படுகிறது. இவரது ஈரம் ததும்பிடும் கவிதை வரிகள், முடிவற்ற உரையாடல்களை உருவாக்குகின்றன.  

கொலை விண்ணப்பம்

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள்
மோசமான காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப்படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
…..............

அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும்
என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சுவாக் கத்தியால் குத்துங்கள்
…...........

ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில் கண்ணெதிரே
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும்போது பாறாங்கல்லால்
தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.


கொலை என்ற ஒற்றைச் சொல், கொடூரமாக உயிரைப் போக்குதல் என்ற புரிதல் நிலவுகிற சூழலில், இறுதியிலும் இறுதியாக அன்பை யாசிக்கிற வரிகள், தமிழ்க் கவிதையுலகு கட்டமைத்துள்ள புனைவுக்குச் சவால் விடுகின்றன. இதுவரையிலும் யாரும் எதிர்கொண்டிராத இடத்திலிருந்து, வாழ்வின் வலியைச் சொல்கிறது, கவிதை. விழுமியங்களின் சிதைவு ஒருபுறம் எனில், இருத்தல் என்பது துரோகம் உள்ளிட்ட அற்பமானவைகளினால் இன்னொருபுறம் ததும்புகிறது. இருவேறு எதிரெதிர் புள்ளிகளுக்கிடையில் தத்தளிக்கிற மனநிலையில், சகமனிதர்கள் மீதான விருப்பும் வெறுப்பும் சமநிலையில் கொந்தளிக்கின்றன. வதையை முன்னிறுத்தி நிலக்காட்சி போல விரியும் பிம்பம், வாசிப்பில் கிளர்த்தும் உணர்வலை தனித்துவமானது, கவிதையின் இறுதி வரிகள், நிச்சயம் கவிஞருடையவை அல்ல. ‘தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக அன்பையாவது செலுத்துங்கள்’ என உருக்கத்துடன் விடுக்கப்படுகிற வேண்டுகோள், கவிதையானது தனக்குள்ளாக உருவாக்கியிருக்கிற அரசியலின் வெளிப்பாடு. கவிதையின் தொடக்க வரிகள் நேரடியாகப் புறவாழ்க்கையின் நெருக்கடி காரணமாகத் தன்னையே வதைக்குள்ளாக்கும் மனதைப் பதிவாக்கிவிட்டு, இறுதியில் வாழ்வின் யதார்த்தத்தை நேரடியாக எதிர்கொண்டுள்ளது. அகமனப் பதிவாக அவ்வப்போது ஏற்படுகிற அனுபவங்கள், ஒரு புள்ளியில் தகித்துப் பிழம்பாகக் கொப்பளிப்பதுபோல ஸ்ரீநேசனின் கவிதை வெளிப்பட்டுள்ளது.

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன  கவிதை என்றாலே, திருகலான மொழியில் கலங்கலாக இருக்க வேண்டும் என்பது கவிதையாக்கத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது. கவிஞரின் குறிப்பிட்ட மனநிலையின் வெளிப்பாடு கவிதை வரிகளாக மாறும்போது, விதிக்கப்பட்ட நெறிமுறை என எதுவும் இருக்க முடியாது. இந்நிலையில் கவிதையானது எளிமையாக இருக்கக் கூடாது; நேர்ப்பொருளில் கூறலாகாது; இருண்மையான சொற்களில் இருக்க வேண்டும்; இறுக்கமும் செறிவுமாக அமைய வேண்டும் எனச் செயற்கையாகக் கட்டமைப்பது நடைபெறுகிறது. கவிஞரின் அகத்தில் காட்சிப்படுகிற சொற்களின் தேர்வென்பது, ஒருவகையில் அபோதமான நிலையில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஸ்ரீநேசன் போன்ற மொழி ஆளுமைமிக்க கவிஞர்களின் வெளிப்
பாடுகள், கவிதையைப் புதியதாக்குகின்றன.

வெளியூரிலிருந்து
ஏதோ காரணம்
வந்த பேருந்து வழியில் பழுதடைந்திருக்கலாம்
 ….....  

ஆட்கள் அடங்கிய நடமாட்டமில்லாத
நிலைய நள்ளிரவில்

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்


பேருந்தை விட்டு இறங்குகிறாள்
நகரத்திலிருந்து
கிராமத்திற்குச் செல்பவளாக
அதன் பாதையில்
பயந்தும் துணிந்தும் நடந்தவள் தன்னைத்
திரும்பிப் பார்த்தவாறு
கடக்கும்
சைக்கிள்காரனிடம் தன்னை
அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுகிறாள்
ஏற்றிக் கொண்டவுடன்
பெருமூச்சு விட்டு
இயேசு வந்தீர்கள் என்கிறாள்
நீங்கள்கூட பார்த்திருக்கலாம்
நள்ளிரவில்
கிராமத்துச் சாலையில்
தன் சைக்கிள் பின்புறத்தில்
இயேசு ஓர் இளம் பெண்ணை
அமர்த்திச் செல்வதை.


நள்ளிரவு என்ற சொல் உருவாக்கும் புனைவுவெளியில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் என விரியும் கவிதை வரிகள், சுவாரஸ்யமளிக்கின்றன. பேருந்து செல்லாத ஊருக்குப் பின்னிரவில் ஒற்றையாகத் தனியாக நடந்து செல்லும் இளம்பெண் என்ற காட்சி, இயல்பானது எனினும், அந்நிகழ்வின் பின்னர் பொதிந்துள்ள பயம் அல்லது திகில் குறித்த ஸ்ரீநேசனின் பார்வையானது, கவிதையில் நுட்பமாகப் பொதிந்துள்ளது. விசுவாசிகளைத் துயரங்களில் இருந்து மீட்பவராக இயேசு பூமிக்கு வர இருக்கிறார் என்ற நம்பிக்கை காலந்தோறும் தொடர்கிறது. எதுவும் நடப்பதற்கான சாத்தியம் நிலவுகிற சூழலில், அந்தப் பெண் கருதுகிற இயேசுவே வில்லானாகும் நிலையைப் பின்புலமாகக் கொண்ட ஸ்ரீநேசனின் கவிதை வரிகள், இருப்பினைப் பகடியான மொழியில் கலைத்துப் போடுகின்றன. ‘நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார்’ கவிதை நுண்ணரசியல் சார்ந்து ஆண்xபெண் உறவைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

கிராமத்து இரவுவேளையில் எப்போதாவது நடைபெறுகிற சம்பவத்தை ஸ்ரீநேசன் கவிதையாக்கும்போது, துயரப்பட்டுப் பாரம் சுமக்கிற பெண் என உருவகித்து, அவளுக்குச் சிறிய உதவி செய்கிறவரை இயேசு எனக் கற்பிதம் செய்வது, கவிதையை வேறு தளத்திற்கு மாற்றுகிறது. புறவாழ்க்கையின் யதார்த்தம் அகவாழ்வில் நுட்பமான மாறுதல்களை உருவாக்குகின்றது; இன்ப துன்பத்தை நிர்ணயிக்கின்றது. இங்கே சூழலின் அழுத்தம் காரணமாகத் தோன்றும் மனவுணர்வுகள், நெகிழ்ச்சியான மொழியில் கவிதையாகி யுள்ளன. மேலும் கவிதையின் அர்த்தமானது  எளிமையாகவும் நேர்ப்பொருளிலும் அமைந்துள்ளது. “காலூன்றி நிற்கும் பூமியின் அதிர்வுகளும் அதற்கான எதிர்வினைகளும் கவிதைக்குரிய தருணங்களை நிகழ்த்து கின்றன. இந்தத் தருணங்களை நிலைநிறுத்திக் காலத்தின் பகுதியாக்குவதும் அனுபவப் பொதுமையாக்குவதுமே கவிஞனின் பணியாகிறது. வாசகன் தனது வாசிப்பில் இந்தத் தருணத்தை மீட்டுருவாக்குகிறான், மீட்டுருவாக்கத்தில்தான் எந்தக் கவிதையும் அனுபவமாகிறது” என்ற கவிஞர் சுகுமாரனின் மதிப்பீடு, இங்கு ஒப்பு நோக்கினுக்குரியது.

கவிதையில் மிகையதார்த்தமானது சொற்களை வேறு ஒன்றாக உருமாற்றுகிறது. எல்லாம் இயல்பானதாக இயங்குகின்றன என்ற பொதுப்புத்திக்கு மாற்றாகக் கவிதை, ஆலிஸின் உலகினுக்கு வாசகனை இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது. ‘புகைப்பவர்கள்’ என்ற கவிதையில் ஸ்ரீநேசன் சித்திரித்துள்ள சம்பவம் சர்ரியலிசத்தன்மையுடன் விரிந்துள்ளது.

நான் பாறையின் மீது
படுத்தவாறு புகைத்துக்கொண்டிருந்தேன்
அவ்வழியில் வந்த ஒருவன்
புகைக்க சிகரெட் ஒன்று கிடைக்குமா என்றான்

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்


இல்லை எனவே இல்லை என்றேன்
அவனோ சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
என்னையே எடுத்து வாயில் வைத்து
கொளுத்தி புகைத்தவாறு நடக்கிறான்
நீங்கள் நம்ப மாட்டீர்கள்
தீக்குச்சியையும் பெட்டியையும்
நான்தான் தரவேண்டியிருந்தது.


என்ன உலகம் இது… என்ன மனிதர்கள் இவர்கள் எனச் சலிப்புடன் தொடங்கும் கவிதை சாதாரணமான நிகழ்ச்சியைச் சொல்வது போல இருக்கிறது. தற்செயலாக வந்தவன், புகைக்க சிகரெட் கேட்பதும், இல்லை என்றவுடன், கவிதை சொல்லியைச் சிகரெட்டாகக் கொளுத்திப் புகைத்தவாறு நடந்தான் என்பது பூடகத்தன்மை மிக்கதாகிவிட்டது. ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உருவாக்குகிற மனம் பண்ணுகிற மாயம்தான் கவிதையின் சாரமாகியுள்ளது. பொதுவாக ஸ்ரீநேசனின் மிகைநடப்பியல் கவிதைகள் எல்லாம், கனவு மனம் புனைகிற விநோதமான நினைப்புதான். கட்டற்றுப் பொங்குகிற மனதின் வேட்கையும் விழைவுகளும் புனைகிற காட்சிகள் அளவற்றவை. உற்சாகமும் கொண்டாட்டமும் ததும்பிடும் கனவுகள் என்பதற்கு மாற்றாக வதையும் வன்மமும் நிரம்பிய சூழலைக் கற்பிதம் செய்வது கவிஞரின் விசித்திரமான மனநிலையின் வெளிப்பாடுதான்.

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்

‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ என்ற ஸ்ரீநேசனின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் தலைப்பு தரும் அனுபவம் மண் சார்ந்து விரிகிறது. இழந்துபோனதன் ஏக்கமும் வெறுமையும் இயற்கை மீதான அளவுக்கு அதிகமான பிரியமும் எனச் சூழலைப் பதிவாக்கியுள்ள கவிதைகள், வாசிப்பில் கவர்ச்சியானவை. கவிதை வரிகளின் ஊடான பயணம், வாசகனை அத்துவான வெளிக்கு இட்டுச் செல்கிறது. ஒருபோதும் திரும்பவியலாத நிலவெளியில் பயணிப்பதான மனோபாவம், ஸ்ரீநேசனின் ஏரி சார்ந்த கவிதைகளுக்கு வனப்பை அளிக்கிறது. ஏரி என்ற சொல் தருகிற போதம் ஒருபுறமும், ஏரியைக் கண்டவுடன் மனம் இயற்கையுடன் ஒத்திசைகிற அனுபவம் இன்னொருபுறமுமாய்  ஏரிக்கரையில் தத்தளிக்கிறவனுடன் வாசகனும் இணைகிறான்.

ஸ்ரீநேசனின் இயற்கை மீதான நேசத்தின் இன்னொரு வெளிப்பாடாக மலை பற்றிய கவிதைகள் விளங்குகின்றன. எதிரே பரந்து விரிந்திருக்கும் ஏரியைப் போலவே விண்ணைத் தழுவி நிற்கும் மலை உருவாக்கும் மனப்பதிவுகள் முக்கியமானவை. ‘கனவு மலை’ கவிதையில் தானாக உருவாகும் மாயம் காரணமாக அழகும் கவர்ச்சியும் உருவாகியுள்ளது.

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்


நின்று நின்று சலித்த மலை ஒரு நாள் அமர்ந்துகொண்டது
அமர்ந்து அமர்ந்து சலித்த மலை
ஒரு நாள் படுத்துக்கொண்டது
படுத்துப் படுத்து சலித்த மலை
ஒரு நாள் தூங்கத் தொடங்கியது
தூங்கித் தூங்கி சலித்த மலை
ஒரு நாள் கனவு காணத் தொடங்கியது...


பின் மலை கண்ட கனவு பற்றிய  ஸ்ரீநேசனின் விவரிப்பு ஒரு மாய உலகினுள் நம்மை இட்டுச் செல்கிறது. ஒன்றின் மீது தனது கருத்தை இட்டுச் சொல்கிற சங்கக் கவிதை மரபின் தொடர்ச்சியை ஸ்ரீநேசனின் கவிதையாக்கத்தில் காண முடிகிறது. மலை என்பது பேராற்றல் மிக்க அதியற்புதமான அணங்கு, சூர், வரையர மகளிர் போன்ற பெண் தெய்வங்கள் உறைந்திருக்குமிடம் என்ற சங்க காலத்து நம்பிக்கையின் புதிய வெளிப்பாடாகவும் ஸ்ரீநேசனின் மலை பற்றிய கவிதையைக் கருத முடியும்.
`உதிரும் இரவு, யாத்ரிகன், காலமும் அவனும், அந்தி, நிலவு காணல், தனியன், பரிசு, யாருமில்லாத ஏரிக்கரை, மாய மரம்’ போன்ற கவிதைகள் ஸ்ரீநேசனின் கவிதைச் செழுமைக்கு அடையாளமாக உள்ளன. பொதுவாக ஸ்ரீநேசனின் கவிதைகள் மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் கவிதையின் உச்சமும், உரைநடையின் வேகமும் கலந்து வாசகருடன் நேரடியாக உறவாடுகின்றன.   
 
‘மோல்டிங்’ ஆகவும் ‘நகல்’ எடுப்பதும் இன்று துரிதமாக நடைபெறுகிற தமிழ்ச் சூழலில், அசலான மொழியாளுகையுடன் வெளியாகியுள்ள ஸ்ரீநேசனின் கவிதைகள் தனித்துவமானவை. புதியனவற்றைப் புதிய மொழியில் பேசுவதுதான் சமகாலக் கவிதையின் சாரமாகும் என்ற நிலையில் ஸ்ரீநேசனின் கவிதை வரிகள், நேர்த்தியும் அழகும் கூடிக் கலந்து உருக்கொண்டுள்ளன. அவருடைய புதிய பாடுபொருள்கள் கவிதைக்கு இயல்பாகவே நிகழ்காலத் தன்மையைப் பெற்றுத் தருகின்றன. ஸ்ரீநேசனின் கவிதைகள், சமகால மனிதனைக் கவிதை மொழியின் வழியே திடுக்கிடவைத்து, உள்ளுணர்வைத் தூண்டுகிற இயல்புடையன. அதேவேளையில் அவருடைய கவிதை மொழியானது, மரபான தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்திற்கு வளம் சேர்க்கிறது. அதுவே ஸ்ரீநேசனின் ஆகப் பெரிய பலம்.