Published:Updated:

வயிறு முதற்றே உலகு - கவிதைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வயிறு முதற்றே உலகு - கவிதைகள்
வயிறு முதற்றே உலகு - கவிதைகள்

கதிர்பாரதி, ஓவியம்: செந்தில்

பிரீமியம் ஸ்டோரி

1
வயிற்றின் பின்னாலே சேவித்துக்கொண்டு
நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் மனதை
சாட்சிவைத்துச் சொல்ல 
இரண்டு வரிகளுண்டு... 
கண்களுக்குள் பொழிகின்றன நூறு நிலவுகள்
வயிற்றுக்குள் எரிகிறது ஒரே ஒரு சூரியன்.

2
மனம் ஒரு மந்திரச்சாவி
அதை வயிற்றுக்கு விற்று
வண்டிக்கு பெட்ரோல் நிரப்பும்போது
வாழ்வின் மைலேஜில்தான்
எத்துணை விரைவு... எவ்வளவு கனிவு.

3
ஆழக் குழி தோண்டி
அதிலொரு வயிற்றை இட்டு
ஆசுவாசமாய் அண்ணாந்து பார்த்தால்
நெடுநெடுவென தொண்ணூறு வயிறுகள்.
எனில்
வயிறு குலுங்கச் சிரிக்கும் நண்பனே
நீயே மனம் குலுங்கவும் சிரிக்கிறாய்.

வயிறு முதற்றே உலகு - கவிதைகள்

4
தன்னைச் சுற்றிலும் வலைபின்னி
எட்டுக்காலியெனப் படுத்திருக்கிறது வயிறு.
பின்னலிடை சிக்கிய மனமே
அதன் ஒவ்வொரு காலின் அடியிலும்
ஒரு யுகாந்திரப் பசி.

5
மனதில்
புத்தன் வசிக்கிறான்
சித்தன் வசிக்கிறான்
சமயங்களில் பித்தனும் வசிக்கிறான்
மறுப்பதற்கில்லை.
ஆனாலும் மகிமைசால் மனமோ
வயிற்றில் அல்லவா போய் வசிக்கிறது.
6
வயிற்றுக்குள் பெருச்சாளி ஒன்று வாழ்ந்துவருகிறது
பசியைக் கடித்துண்டு
அது வளர்ந்தும் வருகிறது
அதற்கு எதிராகவே பூனையை  வளர்க்கவேண்டியிருக்கிறது
அதுவோ புலிப்பாய்ச்சல் பாயவேண்டியிருக்கிறது.

7
வாரத்துக்கு ஏழு நாள்
மாதத்துக்கு முப்பது நாள்
வருடத்துக்கு முன்னூற்றுச் சொச்ச நாள்
வயிற்றுக்கோ எல்லாம் ஒரே நாள்
ஒரே நாளுக்குள் ஓடி முடியும் கடிகாரத்தை
வயிற்றுக்குக் கட்டிவிட்டிருக்கிறது வாழ்வு.

8
வயிற்றிடம் சிரித்தபடி சொன்னது மனம்...
நாளொன்றுக்கு மும்முறையே
உனக்கு வேலை
எனக்கோ நாள் முழுக்க வேலை 
உன்னிலும் நானே வலியன்.
சிரிப்பு அடக்கி வயிறு கேட்டது...
நானும் உன்னைப்போல
உழைக்கட்டுமா தோழா?
துணிவிருந்தால் சரியெனச் சொல் மனமே.

9
தியான மல்லி, யோக முல்லை
இன்ப சாமந்தி, சிரிப்புக் கொழுந்து என
ஒன்றின் அருகில் ஒன்றை அடுக்கி
மனக்கதம்பம் தயாரிக்கும் மனவான்களே
அதை வளையமாக மடித்து
வயிற்றுக்கு வைப்பது எங்ஙனம் அறியீரோ.

10
குடலாகச் சுருண்டு படுத்திருக்கும் மரவட்டை
தன் எண்ணிறைந்த கால்களுடன்
அலைஅலையாய்க் கிளம்பிவிட்டது வேட்டைக்கு
அதன் எதிர் நிற்கும் கடவுள் யார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு