Published:Updated:

1930 - 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்! கதை சொல்லிகளின் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
1930 - 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்! கதை சொல்லிகளின் கதை
1930 - 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்! கதை சொல்லிகளின் கதை

சாத்திர சம்பிரதாயங்களுக்குள் அமிழ்ந்து கிடந்த அந்தத் தலைமுறைக் குடும்பங்களுக்குள்ளிருந்து, இப்பெண் ஆளுமைகள் எழுத்து வெளிக்குள் வந்து அசாத்தியமான சாதனைகள் படைத்தது வியப்புக்குரியதே.

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

பாகம்- 16- ராஜாஜி

பாகம்-17 -அநுத்தமா

பாகம்-20- ல.சா.ரா

                                                                                                              பாகம்-21 -  விந்தன்

                                                                                                             பாகம்-22- மா.அரங்கநாதன்

                                                                                                              பாகம்-23- ஜி.நாகராஜன்

இந்தக் காலகட்டத்தில் கதை எழுதிய ஆண்களில் வ.வே.சு.அய்யர் முதல் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி வரை எல்லோருமே (நான்கைந்து பேரைத் தவிர) பார்ப்பன வகுப்பில் பிறந்தவர்கள்தான். அதேபோல பெண்களிலும் சிறுகதை முன்னோடிகள் எல்லோருமே அந்த வகுப்பில் பிறந்தவர்களே. கல்வி அறிவும், ஆதரவான குடும்பச் சூழலும், அதற்கான நேரமும் அவர்களுக்கே வாய்த்ததால் இது நிகழ்ந்திருக்க வேண்டும். பொதுவாக இவர்கள் வசதியான குடும்பத்துப் பெண்களாகவும் இருந்தனர். ஆனாலும், சாஸ்த்திர சம்பிரதாயங்களுக்குள் அமிழ்ந்து கிடந்த அந்தத் தலைமுறைக் குடும்பங்களுக்குள்ளிருந்து இந்தப் பெண் ஆளுமைகள் எழுத்துவெளிக்குள் வந்து அசாத்தியமான சாதனைகள் படைத்தது வியப்புக்குரியதே!

பொதுவாக இந்த ஆளுமைகள் எல்லோருமே நாவலாசிரியர்களாகவே அறியப்பட்டனர். நாவலில் சாதனைகள் படைத்தனர். சிறுகதைகளும் எழுதி வரலாற்றின் பகுதியான காரணத்தால், அவர்களைப் பற்றி சிறுகுறிப்புகளாவது எழுதிச் சேர்ப்பது அவசியம். அநுத்தமாவைத் தவிர பிற படைப்பாளிகளின் தொகுப்புகள் இப்போது கிடைக்கவில்லை. இணையதளங்களிலும் இவர்களின் கதைகள் ஒன்றிரண்டைத் தவிர அதிகம் இல்லை. இந்தச் சூழலில் எழுத்தாளர் அ.வெண்ணிலா தொகுத்த `மீதமிருக்கும் சொற்கள்-பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற நூலும், குங்குமம் தோழி பதிவேற்றம் செய்தவையுமே இவர்களின் படைப்புகள் பற்றிய அறிமுகத்தைப் பெற நமக்கு உதவுகின்றன.

அந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிடுவது... `வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்மணி பார்த்தசாரதி, குமுதினி, லட்சுமி, கோமகள், கமலா சடகோபன், அநுத்தமா, எம்.எஸ்.கமலா, எஸ்.கமலாம்பாள் ஆகியோரின் கதைகள், குடும்ப எல்லையைத் தாண்டாதவையாகவே உள்ளன. அதாவது, குடும்பத்துக்குள் உருவாகும் சிக்கல்கள், குழந்தை வளர்ப்பில் பிரச்னை, கணவனின் சந்தேகம் இப்படியான விஷயங்களே. அதிகம்போனால் பெண் பார்த்து ஒதுக்கும் கொடுமை, வரதட்சணை, சீர் செய்வது தொடர்பான பிரச்னை ஆகியவற்றை இவை தாண்டுவதில்லை. சில கதைகள் ஆணுலகம் உருவாக்கும் அச்சுப் பிரதிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்கின்றன.'

இது, நூறு சதவிகிதம் உண்மை. ஆனாலும், நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. பெண்கள் நாவல், கதைகள் போன்றவற்றை வாசிப்பதே தப்பு என்கிற சமூக மனநிலை அழுத்தமாக இருந்த காலத்தில், அதை உடைத்துக்கொண்டு இந்தப் பெண்கள் வாசித்தது மட்டுமின்றி ஆண்களுக்குச் சமமாக எழுதவும் செய்தார்கள் என்பதே பெரிய காரியம்தான். அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதட்டுமே! சாதி அடுக்கில் எந்தப் பிரிவில் இருந்தாலும் இவர்கள் பெண்கள் அல்லவா?

`நாவலும் வாசிப்பும்' என்கிற மிக முக்கியமான தன்னுடைய ஆய்வு நூலில் ஆ.இரா.வேங்கடாசலபதி அந்தக் காலத்திய மனநிலையை இப்படி எழுதுகிறார்... `பெண்கள் பெருமளவில் நாவல்களைப் படிக்கத் தொடங்கியது, நடுத்தரவர்க்க அறிவாளர்களைப் பெரிதும் கலக்கமுறச் செய்திருக்கிறது. நாவல் பற்றிய விவாதங்களில் ஏராளமான குறிப்புகள் விரவிக்கிடக்கின்றன.'

நாவல் படிப்பதே சுவர்க்கமென நினைத்துள்ள பெண்களைப் பற்றி சுதந்திரச் சங்கு குறிப்பிடுவது... ` `நம் பெண்மணிகளுக்கு நகைப் பைத்தியத்துக்கு அடுத்தபடி நாவல் பித்தென்று சொல்லலாம்' என்றது பஞ்சாமிர்தம் (அ.மாதவய்யா நடத்திய இதழ்). இதன் தொடர்பில் மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்தவர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதி. நாவல்களைப் படிப்போரில் பெரும்பாலானோர் `வேலையற்ற ஸ்திரீகள், வீட்டுக்கு ஆகாத நாள்களில் பொழுதைக் கழிக்க வழி தெரியாத பூவையர்கள்’ என்று ரசக்குறைவாக, ஆணாதிக்க மனப்பாங்கோடு' அவர் குறிப்பிடுகிறார்.

இத்தனை எதிர்மறையான சூழலில் அன்று இந்தப் பெண் எழுத்தாளர்கள் எழுதவந்தனர்.

1. வை.மு.கோதைநாயகி அம்மாள் (1901-1960)

ஒரு நாள்கூட பள்ளிக்குப் போகாமல் 115 நாவல்களை எழுதிய ஆளுமை இவர். தமிழில் நாவல் எழுதிய முதல் பெண். 35 ஆண்டுகள் தனி ஆளாய்  (கணவர், மகன் உதவியுடன்) `ஜகன்மோகினி'  எனும் இதழை நடத்தியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூகசேவகி, இசைக்கலைஞர் எனப் பல பரிமாணங்களில் தன்னை நிறுவிக்கொண்டவர்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். தந்தை நீர்வளூர் என்.எஸ்.வெங்கடாச்சாரியார். தாயார் பட்டம்மாள். 1907-ம் ஆண்டு கோதைக்கு ஐந்தரை வயது ஆனபோது அதே திருவல்லிக்கேணியில் ஏழு வயதான வை.மு.பார்த்தசாரதியுடன் திருமணம் நடைபெற்றது. பால்ய விவாகம் எனப்படும் குழந்தைத் திருமணங்கள் தடை செய்யப்படாத காலம் அது. மாமனார் வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே, தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்றவர்கள்; ஆழ்வார் பாசுரங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள். மூத்த மாமனார் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கும், நன்னூலுக்கும் உரை எழுதியவர். அதனாலேயே பள்ளிக்குக்கூடச் சென்றிராத வை.மு-வுக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது.

`வைதேகி’ அவரது முதல் நாவல். `ஜகன்மோகினி' இதழில், தொடர்களாகவும் தனியாகவும் எனத் தொடர்ந்து 115 நாவல்களை எழுதினார். அவருடைய இலக்கிய இயக்கம் முழுமையாக `ஜகன்மோகினி' இதழை மையமிட்டே தொடர்ந்தது. நாவல்களில் கவனம் செலுத்திய அளவுக்கு சிறுகதையில் அவர் கவனம் செலுத்தவில்லை. `பஷமாலிகா’ (1947-ல் ஐந்தாம் பதிப்பு கண்டது) மற்றும் `பெண் தர்மம்’ (1946) ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் ஜகன்மோகினி காரியாலய வெளியீடாக வெளிவந்துள்ளன.

அவருடைய `காலச்சக்கரம்' சிறுகதை:

`சலசலவென்ற ஓசையுடன் நதியின் துல்லியமான தெளிந்த ஜலம் சங்கீதத்துக்கு சுருதி கூட்டுவது போன்று இனிமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சிலர், கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருப்போரும் நடப்போருமாக இருந்தனர். அந்தி நேரத்தின் வெகுஅழகிய தோற்றம் மக்களின் மனதைப் பரவசப்படுத்துகிறது. சிலுசிலுப்பான காற்றும், கீழ்த்திசையில் சந்திரன் ஜகஜோதியாகத் தன் குளிர்ந்த பார்வையுடன் தோன்றும் காட்சியும் ஒன்றுகூடி எல்லோரையும் ஆனந்த சாகரத்தில் அழுத்திவிட்டன. விண்மீன்கள் ஒன்றோடொன்று ஷேமலாபங்களை விசாரித்துக்கொண்டு, தங்கள் எஜமானனாகிய சந்திரனின் வரவை எதிர்பார்த்து நிற்பதுபோல கூட்டம் கூட்டமாகப் பிரகாசிக்கின்றன.

இத்தகைய அற்புதமான ஆனந்த வேளையில் அந்த நதிக்கரையின் தென் அண்டைப் பக்கத்தில் மிகவும் சாதாரணமான சிறிய வீட்டில் வாசற்புறம் உள்ள அறையில் மினுக்மினுக்கென விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கயிற்றுக்கட்டிலில் வாடித் துவண்டு தளர்ந்த தேகமும் குழி விழுந்த கண்களும், எண்ணெயை அறியாத காற்றில் பறக்கும் தலை மயிரும், கண்ணிலிருந்து நீர் பெருகி கன்னத்தின் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் பரிதாபகரமான தோற்றத்துடன் சோகப் பதுமையோ அல்லது உயிருள்ள பாவையோ என ஐயுறும்படிக்கு இளநங்கையான சுபாஷினி படுத்தவாறு கீழ்த்திசையில் தோன்றும் சந்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுபாஷினியும் பாஸ்கரனும் சிறு வயது முதல் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ``சுபாஷினி, உன்னை உன் தந்தை தனியேவிட்டு இறந்தார் என்று நீ விசனிக்காதே! நான் உன்னை கைவிட மாட்டேன் என்பதை உன் தாயாருக்கும் உறுதி கூறிவிடு! நானும் நீயும் இனி வேறல்ல. என் படிப்பு முடியட்டும். நான் உன்னை விவாகம் செய்துகொள்கிறேன்” என்று சத்தியம் செய்துவிட்டுப்போன பாஸ்கரன், போனவன் போனவன்தான். தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் கடிதம் எழுதி எழுதிக் காத்திருக்கிறாள் சுபாஷினி.

`எனக்கு மேல்நாடுகள் சுற்றவும், உயர்ந்த படிப்புகள் படிக்கவும் என்னை மீறிய ஆசை சில வருஷமாக வாட்டுகிறது. அதற்கு நமது விவாகம் இடம்கொடாது. ஆகையால், உன் எண்ணத்தை மாற்றிவிடு. கோடீஸ்வரரான கோவிந்தருடைய பெண்ணை நிச்சயம் செய்திருப்பது உண்மையே. 15 ஆயிரம் வரதட்சணை. அது தவிர சீர் வகைகள். அதுவும் தவிர, சீமை முதலிய வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவைக்கும் பொறுப்பு யாவும் அவருடையதே. இத்தனையையும் எப்படி ஒரு காதலுக்காக விடுவது?' என்று கடைசியாக ஒரு கடிதம் போட்டுத் தப்பிக்கிறான் பாஸ்கரன்.

காலச்சக்கரம் சுழல்கிறது. பெண்பார்க்கும்போது காட்டிய பெண் வேறு. பாஸ்கரனுக்குக் கட்டிவைத்த பெண் வேறு. கண்பார்வை இல்லாத பெண்ணை ஏமாற்றிக் கட்டிவைத்துவிடுகிறார்கள். வெளிநாட்டில் படித்துப் பெரிய டாக்டர் ஆனாலும் அவனுக்கு அவன் விரும்பிய காதல் வாழ்க்கை அமையவில்லை. சுபாஷினியின் அம்மா அவளுடைய கடன்களையெல்லாம் அடைத்து வரதட்சணையும் இல்லாமல் தன் மகளைக் கட்டிக்கொள்ளச் சம்மதித்த பையனுக்கு மணம் செய்விக்கிறாள். அந்தோ! அவனுக்கு காக்கா வலிப்பு. ஏமாற்றிக் கல்யாணம் செய்துவிடுகிறார்கள். சுபாஷினிக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் காக்கா வலிப்பு. மூன்று நோயாளிகளைப் பராமரித்து வறுமையில் வாடி, சீக்கிரமே சாகிறாள் சுபாஷினி.

அவள் சாகும் தருணத்தில் பாஸ்கரன் அவளைத் தேடி வருகிறான். அவள் சாவைக் கண்ணாரக் கண்டு கதறுகிறான் எனக் கதை முடிகிறது. இன்றைய மருத்துவ அறிவின்படி பார்த்தால், கதையில் சில முக்கிய பலவீனங்களை நம்மால் காண முடியும்.

வளமான தமிழ் வார்த்தைப் பிரயோகமும் நடையும் `பிராமணாள் பாஷை’ என்று மக்கள் அழைக்கும் சம்ஸ்கிருதச் சொற்கள் இடையிடையே விரவியதுமான ஒரு மொழிநடை அவருடையது. காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்று காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். வேலூர் சிறையில் இருக்கும்போதும் தொடர்ந்து எழுதிக்கொண்டும் கணவர் உதவியுடன் `ஜகன்மோகினி’ இதழை நிறுத்தாமல் நடத்தியவர். பன்முகப் பரிமாணம்கொண்ட அவர், 1956-ம் ஆண்டில் தன்னுடைய ஒரே மகன் எதிர்பாராமல் காலமான புத்திர சோகத்தில் முடங்கிப் படுத்தார். ராஜாஜியின் வற்புறுத்தலால் இன்னும் இரண்டு ஆண்டுகள் `ஜகன்மோகினி'யைக் கொண்டுவந்தார். பிறகு முடியாமல் படுக்கையில் வீழ்ந்து 1960-ம் ஆண்டில் காலமானார்.

எண்ணற்ற பெண் எழுத்தாளர்களை `ஜகன்மோகினி’யில் எழுதவைத்து எழுத்தாளர்களாக ஒரு படை வரிசையையே களத்தில் இறக்கிவிட்ட பெருமையே அவரது சாதனைகளின் உச்சம் எனக் கருதுகிறேன். அவருடைய வாழ்க்கைக் குறிப்பை எழுதிய இரா.பிரேமா குறிப்பிடும் இந்த வரிகளை நாமும் ஆமோதிக்க வேண்டும்.

` `ஜகன்மோகினி' பத்திரிகை தமிழ்நாட்டின் கலாசார அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரிய சேவை செய்துள்ளது. எழுத்தறிவு பெறாது `வீடே உலகம்', `சமையலே கதி' என முடங்கிக்கிடந்த பெண்மணிகளிடையே எழுத்து வாசனை ஊட்டி வெளியுலக அறிவைக் கொடுத்தது. `ஜகன்மோகினி'யில் வெளியான கதை, கட்டுரைகள் அவர்களுக்கு இலக்கிய அறிமுகத்தையும் உலக அறிவையும் ஊட்டியது. ஆணாதிக்கச் சமூகத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று பல பெண் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ள வை.மு.கோ அம்மையாரின் கொடை வரலாற்றில் இடம் பெறத்தக்கதாகும்.'

2. கமலா விருத்தாச்சலம் – (1917-1925)

`வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.

என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் – புதுமைப்பித்தனின் `சம்சார பந்தம்’ என்னும் நூலில்.

புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலேயே, கமலா கதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். `கிராம ஊழியன்', `தினமணி' இதழ்களில் அவருடைய கதைகள் வெளிவந்தன. `காசுமாலை' என்கிற சிறுகதைத் தொகுப்பு 1971-ம் ஆண்டில் வந்துள்ளது.

1931-ம் ஆண்டில் புதுமைப்பித்தனை மணந்த அவர், 1948-ம் ஆண்டில் அவர் மறையும் காலம் வரையிலும் அவரோடு சேர்ந்து வாழ்ந்த ஆண்டுகள் பத்துக்குள்தான் இருக்கும். புதுமைப்பித்தன் இடைவிடாமல் கமலாவுக்கு எழுதிய கடிதங்களில்தான் இருவரும் வாழ்ந்தார்கள். துன்பமும் கண்ணீரும் சேர்ந்து வாழும் ஏக்கமுமாக அவர்கள் வாழ்க்கை முடிந்தது. தன் இறுதி நாள்களில் உதவி கேட்டு தமிழக-இலங்கை வாசகர்கள், எழுத்தாளர்களிடம் மன்றாட்டை வைத்த புதுமைப்பித்தனுக்கு யாரும் உதவவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசு லாட்டரிச்சீட்டில் கமலாவுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தைக்கொண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டை வாங்கினார். புதுமைப்பித்தன் மனைவி என்றால் அந்தப் பகுதியில் யாருக்கும் தெரியாது. லாட்டரியில் வீடு வாங்கின அம்மா என்றால்தான் தெரியும்.

குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் புதுமைப்பித்தன் சொன்னதுபோல சாகாவரம் பெற்ற கதைகளை எழுதியிருக்கிறார் என உறுதியாகச் சொல்ல முடியும்.

`திறந்த ஜன்னல்' என்கிற அவரது சிறுகதை:

``சீ, மணி என்ன ஆச்சு... இன்னுமா தூக்கம்? எருமைமாட்டுத் தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே எதிர் அறையில் இருந்து கதவைத் திறந்துகொண்டு, ராதை படுத்திருக்கும் அறையில் நுழைந்தான் வேணு.

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடி, தலையில் ஓர் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு அயர்ந்த தூக்கத்தில் இருந்த ராதை, தற்செயலாக அப்போதுதான் திரும்பிப் படுப்பதற்காகப் புரண்டாள்.

`எருமைமாட்டுத் தூக்கம்' என்ற கடைசி வார்த்தையைக் கேட்டு, சட்டென எழுந்து உட்கார்ந்தாள். கலைந்து கிடக்கும் தலை மயிரை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளியவண்ணம் படபடவென எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே பார்த்தாள். வெயிலின் அடையாளத்தைப் பார்த்து மணி 4 என்பதை அறிந்துகொண்டாள். குழாயடியில் போய் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு, அடுப்பங்கரைக்குள் நுழைந்துவிட்டாள். அடுப்பைப் பற்றவைத்து காபி போட்டாள். `ஐயோ! மணி `4 ஆயிற்றே. அவர்கள் வெளியில் போக வேண்டுமே’ என்று விசிறியால் அடுப்பை வீசிக்கொண்டே அதன் முன் உட்கார்ந்தாள். `அவர் புறப்பட்டுவிடுவாரோ!’ என்று அடிக்கடி அந்த இடத்தில் இருந்தபடியே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவ்வளவு அவசரமாக வேலையில் கவனம் இருந்தும், வேணு சொல்லிக்கொண்டு வந்த `எருமைமாட்டுத் தூக்கம்’ என்ற வார்த்தையும் அடிக்கடி அவள் ஞாபகத்துக்கு வந்துகொண்டிருந்தது. `ஆமாம்... நிஜம்தான். எருமைமாட்டுத் தூக்கம், பாழுந்தூக்கம் என்றைக்குத்தான் என்னைவிட்டுத் தொலையுமோ அல்லது முழிப்பில்லா தூக்கம் என்றுதான் வருமோ' என்றெல்லாம் நினைத்துக்கொண்டே அடுப்புக்கு வீசிறிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் காபியும் தயாராகிவிட்டது. காபியை வடிக்கட்டி, பால் சர்க்கரை சேர்க்கவேண்டியதுதான் பாக்கி. வேணு சட்டை போட்டுக்கொண்டு வெளியில் போகப் புறப்பட்டுவிட்டான்.

``கொஞ்சம் இருங்கள், இதோ காபி ஆகிவிட்டது. கொண்டுவருகிறேன்” என்று காபியைச் சேர்க்கப்போனாள்.

அதற்குள் வேணு ``ஆமாம், மணி 5 அடிக்கப்போகிறது. எனக்கு அவசரமாக இன்று வெளியில் போகவேண்டும் என எப்பவோ சொன்னது” என்று சொல்லிக்கொண்டே வாசற்படி வரை வந்துவிட்டான்.

ராதை சட்டெனச் சென்று அவன் முன் பாய்ந்து, கதவை மூடினாள். ``காபி ஆகிவிட்டது எடுத்து வருகிறேன். சூடு ஜாஸ்தியாக இருந்ததால் ஆற்றிக்கொண்டிருந்தேன். நீங்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்” என்றாள். அவள் குரலில் சிறிது கோபமும் வருத்தமும் கலந்திருந்தன. எப்போதாவது ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டால், கெஞ்சி மன்றாடி, அவன் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்கும் ராதைக்கு, இன்று கோபம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது. ``எவ்வளவு நேரம் ஆனாலும் இன்று காபி சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே, காபி எடுத்து வருவதற்காக அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

அவள் அடுப்பங்கரைக்குள் சென்றதும், `சீ இந்தப் பிடிவாதம் ஆகாது. அதைத்தான் இன்று பார்ப்போம்' என்று நினைத்துக்கொண்டு வெளியில் போக கதவைத் திறந்தான் வேணு.

``இதோ கொண்டு வந்துவிட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று சொல்லிக்கொண்டே, ராதை கையில் காபியோடு அவன் அருகில் வேகமாக வந்தாள்.

``உங்கள் உத்தரவுப்படிதான் நடக்க வேண்டுமோ, அதைத்தான் இன்று பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, வேணு வெளியில் சென்றுவிட்டான்.

ராதைக்கு, கோபம், தூக்கம் இரண்டும் விஷக்கடிபோல் உச்சஸ்தாயில் ஏறிவிட்டன. கதவை `படார்’ என அடைத்துத் தாழ் போட்டாள். காபியை தானும் சாப்பிடாமல், தர்மாஸ் ஃபிளாஸ்கில் விட்டுவைத்துவிட்டு, கூடத்தில் கிடந்த சாய்வு நாற்காலியில் வந்து படுத்துக்கொண்டாள்.

இப்படித் தொடங்கும் இந்தக் கதை, ராதைக்கும் வேணுவுக்கும் இடையில் நடக்கும் மௌன யுத்தத்தை நுட்பமாகச் சொல்கிறது. இரவு, அதிகாலை, மதியம், மாலை என்கிற தலைப்புகளில் அந்தக் காலத்திய இருவரின் மனநிலைகளைப் படம்பிடித்துச் செல்கிறது. கணவனின் அறையில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பார்த்தால், எதிர்வீட்டுப் பெண் நிற்பது தெரிகிறது. அவளைப் பார்ப்பதில் வேணுவுக்கு ஓர் இன்பம். அதை ராதை அறியாமல் செய்ய முயல்கிறான். ஆனால், ராதைக்கு இது தெரியும். கணவனின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாள். அவனிடம் நேருக்குநேர் கேட்க வேண்டும் என நித்தமும் நினைக்கிறாள். தைரியமின்றித் தள்ளிப்போடுகிறாள்.

மதிய உணவுக்குப் பிறகு அவனுடைய அறையில் அவனோடு இருக்கிறாள். ஜன்னலுக்கு வெளியே எதிர்வீட்டுப் பெண் நிற்பதைக் கண்டு வேணு தன் மனைவியை வெளியே அனுப்ப நினைக்கிறான். ஏதேதோ நைச்சியமாகப் பேசி அவளை அறையைவிட்டு அனுப்ப நாடகமாடுகிறான். அவளும் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பெண் நிற்பதைப் பார்த்துவிடுகிறாள். விஷக்கடிபோல கோபம் அவள் தலைக்கு ஏறுகிறது. அறையைவிட்டுப் போக மறுக்கிறாள். கோபம் வந்து அவன் அவளை இழுத்து வெளியே தள்ளிக் கதவைப் பூட்டிக்கொள்கிறான்.

வெளியில் தள்ளப்பட்ட ராதைக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு நின்ற துக்கம், உடைப்பட்ட மதகு வெள்ளம்போல் கண்ணீராக அவள் புடவையை நனைத்தது. `இனி என்ன செய்வது?’ என்ற கேள்வியைக்கூட அவளால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. சட்டென அவள் மனதில் `தற்கொலை ஒன்றுதான் இதற்கு ஆறுதல் அளிக்கும்’ எனத் தோன்றிற்று.

அதற்கு வழி என்னவென நான்கு பக்கங்களிலும் சுற்றி நோக்கினாள். அண்ணாந்து உயர நோக்கினாள். அவள் கண்ணில் ஒன்றும் படவில்லை. எப்படி தற்கொலை பண்ணிக்கொள்வது என ஒன்றன்பின் ஒன்றாக பல கேள்விகள் அவள் மனதில் எழ ஆரம்பித்தன. விஷம், திராவகம் என்றால், நினைத்த உடனே எங்கிருந்து கிடைக்கும்? என்ன செய்வது என அவள் மனம் எவ்வளவு போராடியும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. நேரம் ஆக ஆக அவள் தற்கொலை என்பது எளிதான காரியமல்ல என்பதை உணர்ந்தாள்.

இந்தச் சந்தேகத்தில்கூட அவன்மேல் அவளுக்கு வெறுப்பு ஏற்படவேயில்லை. அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். `ஏன் என்னிடம் நேரில் சொல்லி, தன் விருப்பத்தை நிவர்த்தித்துக்கொள்ளக் கூடாது. பொய் சொல்லி என்னை ஏன் துரத்த வேண்டும்?’ என்றுதான் பட்டது அவளுக்கு. தன் நினைப்புக்கு முடிவில்லாமல்போகிறதே என்ற வருத்தம் ஒருபக்கம்; அன்பில்லாதவருடன் எவ்வளவு நாள்கள் வாழ்க்கை நடத்துவது என்பது மறுபக்கம். ஒரு வழியும் தெரியாமல் வெளியில் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள்.

வீட்டைவிட்டு வெளியே போவது என முடிவெடுக்கிறாள். ஆனால், அதையும் மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும். அவன் மனம் வருந்தும்படி செய்யக் கூடாது என நினைக்கிறாள். நகைகளை எல்லாம் கழற்றி வைக்கிறாள். அவனுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கிறாள். வாசலுக்குப் போவதும் திரும்ப வருவதுமாகத் தவிக்கிறாள். அப்போது கணவன் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கிறது. கதவிடுக்கில் ஒளிந்துகொள்கிறாள்.

அவன் வந்து அவள் கடிதத்தைப் படிக்கிறான். மனம் குற்ற உணர்வுகொள்கிறது. உடனே அவளைத் தேடிச் செல்ல தயாராகிறான். அப்போது அவள் ஒளிந்திருப்பதை தற்செயலாகப் பார்க்கிறான்.

ராதை பயத்தினால் நடுங்கி சிறு குழந்தைபோல் உடம்பை ஒடுக்கி, புடவையை ஒதுக்கி கூட்டிப் பிடித்து கதவு மூலையோடு நெருங்கி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.

பயந்து வெறுவிப்போய் நின்றுகொண்டிருந்த ராதை வேணுவைப் பார்த்ததும், திடுக்கிட்டு அவன் முகத்தையே கூர்ந்து நோக்கி, அசைவற்று அப்படியே நின்றுவிட்டாள்.

வேணுவும் ஐந்து நிமிடம் வரை அவளையே பார்த்து நின்றான்.

``ஏன் ராதை இங்கு வந்து நிற்கிறாய்? வா, மேலே போவோம்'' என்று அழைத்தான் மெதுவாக. அவன் குரலில் பரிதாபம், மன்னிப்பு இரண்டும் கலந்திருந்ததாகப்பட்டது ராதைக்கு. பதில் பேசாமல் அவன் பின் மாடிப்படிகளில் கால் வைத்து ஏறினாள். இப்படி கதையை முடிக்கிறார்.

19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்துப் பெண் நோரா இப்சனின் `பொம்மை வீடு' கதையில் சந்தேகப்பட்ட கணவனைவிட்டுத் தைரியமாக வெளியேறினாள். ஆனால், 20-ம் நூற்றாண்டிலும் கணவனைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறக்கூட முடியாதவளாகத் தமிழ்ப் பெண் இருக்கிறாள் என்பதை ஜீவனுள்ள கதையாக வடித்திருக்கிறார். புதுமைப்பித்தனின் `கல்யாணி’ போல இந்தப் பெண் வெகு இயல்பான கதாபாத்திரமாக யதார்த்தத்துடன் படைக்கப்பட்டிருக்கிறாள்.

புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து ஒரு பகுதியுடன் இந்தக் கட்டுரையை நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும்.

`கண்ணா... நீயே யோசித்துப்பார். உனக்கு ஒரு நல்ல சாமான் வாங்கிக்கொடுத்து நீ சந்தோஷமாகப் போட்டுக்கொள்வதைப் பார்த்து ஆனந்தப்பட இதுவரை கொடுத்துவையாத பாவி நான். என்னைப் பொறுத்தவரை நீ களங்கமற்றவள்தான். அதனால்தான் நான் உன்மேல் இப்படி வெறி பிடித்த மாதிரி உன் உயிருடன் ஒட்டிக்கிடக்கிறேன். கண்ணா, இங்கு உன் நினைவுதான் என் உடலுக்கும் உயிருக்கும் உணவாக தேகத்திலும் மனதிலும் தெம்பு கொடுத்துக்கொண்டு வருகிறது. நீ இங்கு வந்துவிட்டால், உன் மனம் சமாதானமடைந்துவிடும்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு