கட்டுரைகள்
Published:Updated:

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்

ல்லதங்காளின் கதையை எழுதத் தொடங்கினால், அதன் கடைசி அத்தியாயம் பென்னி குவிக்கில் முடியும். பென்னி குவிக்கைப் பற்றி எழுதத் தொடங்கினால், அதன் முதல் அத்தியாயத்தில் நல்லதங்காள் இடம்பெறுவாள். மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஓர் ஆங்கிலப் பொறியாளனுக்கும், தனது  ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி எறிந்துவிட்டு, தானும் விழுந்து செத்த நல்லதங்காளுக்கும் என்ன சம்பந்தம்? திகைப்பூட்டும் எல்லைகளை மிக எளிதாக முடிச்சிட்டு இணைக்கும் ஆற்றல் வரலாற்றுக்கு உண்டு.

இந்தக் கதை தண்ணீரைப் பற்றியதா... கண்ணீரைப் பற்றியதா... அராஜகமான சுரண்டலைப் பற்றியதா... அன்புமயமான கருணையைப் பற்றியதா... வாழ்வைப் பற்றியதா... சாவைப்பற்றியதா...

என்பதையெல்லாம் எளிதில் முடிவு செய்துவிட முடியாது. ஆனால், வரலாற்றின் பக்கங்களுக்குள் பொதிந்துகிடக்கும் உண்மையை அறிய முயன்றால், முடிவுசெய்வதில் தடுமாற்றம் ஏற்படாது.

வரலாற்றில் அதுவரை ஏற்பட்டிராத எண்ணற்ற பஞ்சங்களை 19-ம் நூற்றாண்டில் இந்த நாடு சந்தித்தது. நினைத்துப்பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும் என்பார்களே, அப்படி ஒரு புள்ளிவிவரம் இது. ஒரே நூற்றாண்டில் 27 பஞ்சங்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பஞ்சம் என, நூற்றாண்டு முழுவதும் பஞ்சம் வரிசைகட்டி வந்தது.

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்


பஞ்சத்தின் கோரத் தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். தொடக்கத்தில் பலியானவர்களின் விவரங்களை எண்ணிக்கையில் சொல்லிக்கொண்டிருந்த அரசாங்கம், ஒரு கட்டத்துக்குப் பின் மரண பயங்கரத்தை எண்களின் மூலம் சொல்வதில் இருந்து பின்வாங்கி, சதவிகிதத்தில் சொல்லத் தொடங்கியது. அதாவது பஞ்சம் முடிந்த ஆண்டில், அந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 20 சதவிகிதம் குறைந்தது என்று பதிவுசெய்தது. பதிவான புள்ளிவிவரங்கள் தரும் எண்ணிக்கையே அதிரவைக்கிறது. ஆனால் உண்மை என்பது, இந்தப் புள்ளிவிவரங்களின் பெருக்குத்தொகையைக் கொண்டது.

கார்ல் மார்க்ஸ், `இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ (1855) என்ற கட்டுரையில் குறிப்பிடுவது போன்று, “அனாதி காலந்தொட்டு ஆசியாவின் அரசாங்கங்களில் மூன்று துறைகள் இருந்தன. ஒன்று, உள்நாட்டைக் கொள்ளையடிக்கும் நிதித் துறை. இரண்டு, வெளிநாட்டைக் கொள்ளையடிக்கும் போர்த் துறை. இரண்டையும் ஆக்கிரமிப்பாளர்களான பிரிட்டிஷார் அப்படியே நடைமுறைப்படுத்தினர். ஆனால், மூன்றாவது துறையான நீர்ப்பாசன நிர்வாகத்தை மேற்கொள்ளும் பொது மராமத்துத் துறையை பிரிட்டிஷார் முழுமுற்றாகக் கைவிட்டனர்.” அதன் விளைவு, விவசாய உற்பத்தி கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள், சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் தங்களின் ஆட்சி நிர்வாகத்தை, சிறப்பாகவோ, மோசமாகவோ, படுமோசமாகவோ, எப்படி நடத்தியிருந்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாகச் செய்தனர். ஒவ்வோர் ஆட்சியாளனும் தனது ஆட்சிக்காலத்தில்  ஒரு சில குளங்களையாவது புதிதாகத் தோண்டியிருப்பான், பல குளங்களை தூர்வாரியிருப்பான். ஏனென்றால், அதுதான் அவனது பொருளாதாரத்தின் அடிப்படை ஆதாரம். அந்த ஆதாரத்தைப் பெருக்கும் பொருட்டு இதுபோன்ற செயல்களே தலையாய தர்மங்களாகச் சொல்லப்பட்டு வந்தன.

குளந்தொட்டு கோடு பதித்து, வழி சீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி – வளந்தொட்டு
பாகு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்கடுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது.


என்கிறது சிறுபஞ்சமூலம். `குளம் வெட்டி, கலுங்கு அமைப்பித்தல், மரம் நடுதல், சாலை அமைத்தல், உழுவயல் ஆக்குதல், கிணறு தோண்டுதல் ஆகிய ஐந்து பணிகளைச் செய்பவன் சொர்க்கத்துக்குப் போவான்’ என்கிறது. தேவைகளில் இருந்தே தர்மங்களும் நியதிகளும் நிலைபெறுகின்றன. தனிமனிதத் தேவையும், அரசின் தேவையும் இணையும்போது, அந்த நியதிகள் காலகாலத்துக்கான நியதிகளாக நிலைகொள்கின்றன.

பிரிட்டிஷார் இந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய பின்னர், இந்தப் பணிகள் முழுமுற்றாக ஒழிக்கப்பட்டன. வேளாண்மைக்கான ஆதாரப் பணிகள் சுமார் 100 ஆண்டுகள் தேங்கிப்போய் நின்றன. இன்னொரு பக்கம், இங்குள்ள விவசாயிகள் உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குப் பதிலாக, இங்கிலாந்து நெசவாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களான பருத்தி மற்றும் அவுரிகளைப் பயிரிடச் செய்யச் சொல்லி அதன் சாகுபடியைப் பன்மடங்கு அதிகப்படுத்தினர். இதே காலத்தில் இங்கு உற்பத்தியான உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் பலமடங்கு அதிகரித்தது.

27 முறை பஞ்சம் ஏற்பட்ட 19-ம் நூற்றாண்டின் இறுதி 50 ஆண்டுகளில்தான் (1850-1900) உணவு தானிய ஏற்றுமதியை  14  மடங்கு அதிகரித்தது காலனிய அரசு. இதன் விளைவாக, அதுவரை கண்டிராத பட்டினிச் சாவுகளை இந்த தேசம் கண்டது. எந்த ஒரு மனிதனையும் நடுங்கச்செய்யும் புள்ளிவிவரங்களை காலனிய அரசு பதிவுசெய்துவைத்துள்ளது.

ஆண்டுகள்                பட்டினிச் சாவுகள்

1800 – 1825                   10, 00, 000

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்


1826 – 1850                    4, 00, 000

1851 – 1875                   50, 00, 000

1876 – 1900                 1, 50, 00, 000


பட்டினிச் சாவுகளில் இருந்து தப்பிக்க மனிதன் செடி கொடிகளையும், புல் பூண்டுகளையும் சேகரித்துத் தின்னத் தொடங்கினான். அடிமை வர்த்தகம் பெருகியது. பெண்களும் குழந்தைகளும் சிறிது தானியங்களுக்காக விற்கப்பட்டனர்.

19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்தப் பஞ்சங்களில் மகா கோரமானது, தமிழ் ஆண்டான தாது வருடத்தில் ஏற்பட்ட பஞ்சம் (1876-1877). இந்த ஆண்டில் நிகழ்ந்த பேரழிவுகள் இந்த மண் அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் இன்று வரை பார்த்திராதவை. பொதுவாக, தென்னிந்தியா முழுவதும் இந்தப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டாலும், அதன் கோரத் தாண்டவத்தால் முழுமுற்றாக உருக்குலைந்தது தென்தமிழகம்.

பஞ்சம் ஏற்படுத்திய இந்தக் கொடூரமான வாழ்வியல் நெருக்கடியில் இருந்து தப்பிப் பிழைக்க வழியற்று, மனிதர்கள் தவித்தபோது, காலனிய அரசு `குடியேற்ற அவசரச் சட்டம்’ கொண்டுவந்தது, (1/1876, இந்தியச் சட்டம் 5/1877) அதன்படி எண்ணிலடங்கா மக்கள் கூட்டம் பிரிட்டனின் காலனி நாடுகளுக்குக் கூலிகளாக இடம்பெயர்ந்தது. தாதுப் பஞ்சம் ஏற்பட்ட 1877-ம் ஆண்டு மட்டும் தனுஷ்கோடியில் இருந்து சிலோனுக்குச் சென்றவர்கள் 1,84,919 பேர். பிரிட்டிஷாரின் அவசரச் சட்டம் அவர்களின் காலனி நாடுகளான டெமரரா, ஜமைக்கா, மொரீஷியஸ், பிஜித் தீவுகள், லிவார்ட் தீவுகள், விண்ட்வார்ட் தீவுகள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்களைக் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் கொத்தடிமைகளாகக் கொண்டு போய்ச் சேர்த்தது.  

எந்த வழியிலாவது உயிர் பிழைத்து, வாழ்ந்துவிட மாட்டோமா என்ற தவிப்பில் பல லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டனர். உலகம் முழுவதும் நடந்ததைப்போலத்தான் இங்கும் பஞ்சத்தின் எண்ணிக்கை குற்றத்தின் எண்ணிக்கையைப் பலமடங்கு உயர்த்தியது. பட்டினியால் சாவதற்கு முன், பொது நியதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உடைத்துக்கொண்டு வாழ முயற்சிசெய்யும் கடைசி வாய்ப்பையும் மக்கள் கூட்டம் முடிந்தவரை பயன்படுத்தியுள்ளது. வேட்டையாடி உயிர்பிழைக்கும் மிருகத்தின் மனநிலைக்கு ஒவ்வொரு மனிதனும் தள்ளப்பட்டான். பொதுவெளி கொடுங்காடாக மாறியது.

வரலாறு முழுவதும் தனது அனுபவத்தால் மனிதன் உருத்திரட்டி வைத்திருந்த நாகரிகக் கோட்பாடுகளையும், அறச் சிந்தனைகளையும், ஒழுக்க விழுமியங்களையும் ரத்தம் ஒழுக ஒழுக மனிதன் கடித்துக் குதறிக்கொண்டிருந்தான். தனது கண்ணுக்கு முன் இருக்கும் இரையாக ஒவ்வொருவனும் மற்றவனைக் கருதும் நிலை ஏற்பட்டது. காலனியச் சுரண்டலின் கொடூரத்தை தாது வருடத்தின் ஒற்றை நாளுக்குள் நின்று பார்த்தால்தான், அதை முழுமையாக உணர முடியும்.

ஒருகாலத்தில் 32 வகை தானங்கள் என்று பட்டியலிட்டு, `அவற்றில் சிறந்தது அன்னதானம்’ என்று நியதி சொன்னார்கள். அதுவும் யார் யாருக்கு இட வேண்டும் என்று பட்டியலிட்டார்கள். `சாதுக்களுக்கு, ஏழைகளுக்கு, குருடர்களுக்கு, முடவர்களுக்கு, திக்கற்ற விருத்தர்களுக்கு, சக்தியற்ற பலஹீனர்களுக்கு, திசை தப்பி வந்த செல்வர்களுக்கு, செய்யாக் குற்றத்தின் பொருட்டு சிறைப்பட்டவர்களுக்கு அன்னமிடல் வழக்கம்’ என்று விதி வகுத்திருந்தனர்.

தானம் இடுபவர்கள் உருவாக்கிய `அன்னதானம்’ என்ற அலங்கார வார்த்தையை உடைத்துக்கொண்டு, பட்டினியின் குரலான, `கஞ்சித்தொட்டி’ என்ற புதிய சொல் புழக்கத்துக்கு வந்தது. `இட்டார்க் கிட்ட பலன்’ என்ற நம்பிக்கை இந்தியர்களுக்குப் பொய்த்தது. ஆனால், பிரிட்டிஷாருக்கு நிலைத்தது. அவர்கள் உயிர்காக்க கையளவு கஞ்சியை ஊற்றி சென்னைக்கு வடக்கே பக்கிங்ஹாம் கால்வாயைத் தோண்டினர். மதுரைக்குத் தெற்கே தூத்துக்குடி வரை புதிதாக புகைவண்டிக்கான வழித்தடத்தை உருவாக்கினர். இவை எல்லாம் சின்னப் பலன்கள். அவற்றைவிடப் பெரும் பலனை அடைய வழி தேடியது அரசு.

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்

இந்தக் கொடூரமான பஞ்சத்தால் ஏற்பட்ட பெரும் இழப்புக்குப் பின் நாடாளுமன்றம் `பஞ்ச கமிஷன்’ ஒன்றை அமைத்தது. அந்த கமிஷனின் பொறுப்புகள் பற்றி முன்னுரையில் கூறுகிறது... `மக்களைத் துன்புறுத்தாது அரசுக்குக் கணிசமாக லாபம் தரும் வகையில் பாசனப் பணிகளை உருவாக்கவும் நிர்வகிக்கவுமான சிறந்த வழிமுறைகளைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.’

அந்தப் பஞ்ச கமிஷன் முக்கியமான சில நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் பரிந்துரைத்தது. `துங்கபத்ரா நீரைச் சேமித்து, பெல்லாரியின் வறட்சிப் பகுதிக்குப் பயன்படுத்தும் திட்டம், சேலத்தில் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், மதுரையில் பெரியாறு நீர்த்தேக்கம், கஞ்சத்தில் ருஷிகுல்யா, நெல்லூரில் சங்கம் ஆகிய திட்டங்களை முடிக்க வேண்டும். கர்னூல்-கடப்பா வாய்க்கால் திட்டத்தை மதராஸ் இரிகேஷன் கம்பெனியிடமிருந்து அரசுக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறுகிறது.

அது தந்த அறிக்கையின் அடிப்படையில், தென் மாவட்டங்களின் மீட்சிக்கான திட்டமாக பெரியார் அணைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் முழுவீச்சில் நடந்தன. இந்தத் திட்டத்துக்கான தலைமைப் பொறியாளராக ஜான் பென்னி குவிக் நியமிக்கப்பட்டார்.

இது இப்படியிருக்க, தாது வருடத்தின் உச்சத்தில் ஒரு பெண் நிகழ்த்திய கொலை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது. அவள் பெயர் நல்லதங்காள். பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி, கணவன் வீட்டில் வாழ வழி இல்லாமல், தனது சகோதரனின் வீட்டுக்குப் போகிறாள். சகோதரனின் மனைவியோ, `நாங்களே என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில் இவள் வேறு ஏழு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாளே’ என்று நிலைதடுமாறுகிறாள். உணவுக்கான தானியங்கள் இன்றி வீட்டின் சூழல் மேலும் மேலும் மோசமடைய, நிலைமையைச் சமாளிக்க முடியாத நல்லதங்காள், சகோதரன் வெளியில் போயிருந்தபோது தனது ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறுகிறாள். வழியில் தென்பட்ட பாழுங்கிணறு அவளின் பார்வைக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. தனது திருமணத்துக்காக சகோதரன் கொடுத்த பச்சை நிறப் புடவையைக் கிணற்றுமேட்டில் வைத்துவிட்டு, ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு பின் தானும் விழுந்து செத்துப்போனாள்.

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்


தாது வருடத்தில் எண்ணிலடங்கா மரணங்களைச் சந்தித்த சமூகம், ஒரு தாய் தனது குழந்தைகளின் மீது நிகழ்த்திய மரணத்தைக் கேள்விப்பட்டு நிலைகுலைந்து போனது. ஏனென்றால், தாய்மையின் மீது காலகாலமாகக் கட்டியமைக்கப்பட்ட எல்லா நம்பிக்கைகளையும் இந்தக் கொலைகள் தவிடுபொடியாக்கின.

எது தாய்மை என்பது கேள்விக்குள்ளானது. ஒரு வாய் சோற்றை அளித்து குழந்தைகளின் உயிர் காக்க முடியாத தாய், துடித்து மாயும் பிஞ்சுகளின் வேதனையை நிறுத்த வேறு என்ன செய்வாள்? தன் முகத்தை, இமைக்காமல் பார்த்துக்கொண்டி ருக்கும் குழந்தைகளுக்கு தனது கரத்தால் மரணத்தை அளிக்க முடிவுசெய்தபோது, அவளது ஆழ்மனதில் பொங்கிய கருணையே அந்தச் செயலுக்கான பலத்தைக் கொடுத்துள்ளது. தாயின் கருணை, கொலைகளின் மூலமும் வெளிப்படும் என்பதை அறிந்தபோது சமூகம் நிலைகுலைந்துபோனது.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலை, மொத்தச் சமூகத்தையும் பித்துப்பிடிக்கச் செய்தது. உயிர்மிஞ்சிய எல்லோரையும் குற்றஉணர்வுக்குத் தள்ளிய நிகழ்வு இது. ஏனென்றால், அந்தப் பஞ்ச காலத்தில் சக மனிதனின் கதறலுக்குச் செவிமடுக்காமல், தனது சேமிப்பைப் பகிர்ந்துகொள்ளாதவர்களே உயிர்பிழைத்து மிஞ்சினர். எனவே, நல்லதங்காளின் மரணம் உயிர்பிழைத்து வாழ்பவர்களின் மனதில் ஏதோ ஒரு வகையில் குற்றஉணர்வை உருவாக்கியது.

பஞ்சகாலம் முடிந்து வாழ்வு மீண்ட பிறகும், அந்தக் குற்றஉணர்விலிருந்து மீள வழி இல்லாத மக்கள் கூட்டம், நல்லதங்காளைத் தெய்வமாக்கியது. மழைக்கான தெய்வம், வெயிலுக்கான தெய்வம், கண்மாய் தெய்வங்கள், நீர்நிலை தெய்வங்கள்தான் அதுவரை தமிழகத்தில் இருந்தன. ஆனால், முதன்முறையாக பஞ்சத்துக்கான தெய்வம் ஒன்று தோன்றியது. நல்லதங்காள் பஞ்சத்தின் தெய்வமானாள். அதன் பிறகு நல்லதங்காளைப் பற்றி விதவிதமான கதைகள் முளைத்தன. நாட்டார் மரபில் நல்லதங்காளின் கதைப் பாடல்கள் காற்றெங்கும் பரவின. அவளது கண்ணீர் உறைந்துவிடாமல் கதைகளின் வழியே நூற்றாண்டுகளைக் கடந்தும் கசிந்துகொண்டே இருக்கிறது.

சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் தாது வருடத்துப் பஞ்சம் பற்றி பல ஆயிரம் பக்கத் தரவுகள் இருக்கின்றன. ஆனால், இத்தனை ஆயிரம் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பஞ்சத்தின் கொடூரத்தை, அதைவிட உக்கிரமாக ஒரே ஒரு கதையின் வழியாக மக்கள் தங்களின் வாழ்வுக்குள் பதிவுசெய்து வைத்துக்கொண்டனர். அதனைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தியபடியே இருக்கின்றனர்.

கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்


சில ஆண்டுகளுக்கு முன்னர் `இது நல்லதங்காள் வருஷம் (தாது வருஷம்). எனவே, இந்த ஆண்டில் அண்ணன்கள் எல்லாம் தங்கைகளுக்கு பச்சை நிறச் சேலை எடுத்துத்தர வேண்டும்’ என்ற செய்தி எங்கும் பரவியது நினைவிருக்கும். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பச்சையத்துக்கான ஏக்கமும் தேவையும் மாறப்போவதே இல்லை. இந்தக் கதை மனிதத் தேவையில் இருந்து உருவாக்கப்பட்ட இயற்கையின் தேவதையைப் பற்றிய கதை.

ஒரு  சமூகம் தனது வரலாற்று நினைவுகளில் இருந்தே குறியீடுகளை உருவாக்கிக்கொள்கிறது. இன்றளவும் பென்னி குவிக் நினைக்கப்படுவதும் போற்றப்படுவதும் ஒருவித நன்றி உணர்வின் குறியீடுதான். ஆனால், காலனியச் சுரண்டல் அரசியலைக் கழித்துவிட்டு, வெறும் வள்ளல் தன்மையோடு அவரது பிம்பத்தைக் கட்டமைப்பது இந்த வரலாற்றுக்குச் செய்யும் துரோகமாகும். அதே நேரத்தில் குற்ற உணர்வில் இருந்து மேலெழுந்த நல்லதங்காளின் கதையை, மதினியின் கொடூரத்தையும் அண்ணனின் அன்பையும் போற்றும் உறவுசார் கதையாக மாற்றுவது வரலாற்று அறியாமை.  

கிணற்றுமேட்டில் நல்லதங்காள் வைத்துவிட்டுப் போன பச்சை நிறப் புடவை என்பது குறியீடு. பஞ்சத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மனித சமூகம் மீள விழையும் போராட்டத்தின் அடையாளம். இயற்கையையும் சூழலையும் பேணவேண்டிய தாய்மையின் குறியீடு.