Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: சந்தான கிருஷ்ணன்

சொல்வனம்

ஓவியம்: சந்தான கிருஷ்ணன்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

தூக்கம் வராத இரவில்...

தூக்கம் வராத இந்த இரவை
பூனையின் நகமெனப் பிராண்டுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
பசித்த யாசகனொருவன்
உணவுக்காக வீட்டுக் கதவைத் தட்டுவதுபோல
இந்த இரவைத் தட்டுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
விதைத்த பூமி விளைச்சலைக் கொடுத்திட
ஆகாயம் நோக்கி மழை வேண்டி இறைஞ்சும்
மேட்டாங்காட்டு விவசாயி என
இந்த இரவை இறைஞ்சுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்.
நடுக்கடலுக்குச் சென்று
மீனுக்கு வலைவீசும் மீனவனாக
இந்த இரவின் மீது எனை வீசுகிறேன்
சத்தம் கேட்டு யாரும் எழுந்திட வேண்டாம்
உங்களைச் சலனப்படுத்தவோ
உறக்கம் கெடுக்கவோ
நான் விரும்பவில்லை
நிம்மதியாக உறங்குங்கள்
உங்களின் எதையும் நான் தேடவில்லை
என் தூக்கத்தையே தேடுகிறேன்.


- சௌவி

சொல்வனம்

வீடு

தங்கைக்கும் எனக்கும் நம்ம வீடு.
அப்பாவின் நண்பர்களுக்கு
கிருஷ்ணமூர்த்தி வீடு.
அம்மாவின் தோழிகளுக்கு இந்துமதி வீடு.
விடுமுறைக்கு வரும் வாண்டுகளுக்கு
அத்தை - மாமா வீடு.
வழி சொல்லும் கடைக்காரருக்கு
தெருமுனையில் இரண்டாவது வீடு.
இப்படியான நாளொன்றில்தான்
வந்துசேர்ந்தது அந்த யாருக்கோவான கடிதம்.
தபால்காரர் கூற்றுப்படி
இதே `மூன்றின் கீழ் நாற்பது’ வீட்டில் வசித்த
முந்தைய குடித்தனக்காரருக்கானது அது.
புரிந்தவளாகத் திரும்பியபோதுதான் தெரிந்தது
வீடு எங்கும் நிறைந்திருக்கும்
வெவ்வேறு வீடுகள்.


- சுபா செந்தில்குமார்

சவால்

ஒரு பிராட் பிட்டை
ஒரு டாம்க்ரூஸை
எதிர்பார்த்ததாகச் சொன்னவளிடம்
காலம்
என்னைத்தானா கொண்டுசேர்க்க வேண்டும்?
அவள் உத்தரத்தையும்
நான் தரைவிரிப்பையும் பார்த்தபடி
எப்படியோ அது நடந்து முடிந்தது.
வளைகாப்புக்கு அழைத்திருந்தோம்.
வந்தவர்கள் அவளை
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்த,
அன்றிரவு படுக்கையில் உறங்கு முன்
ஒரு பிராட் பிட்டை
ஒரு டாம்குரூஸை
வளர்த்துக்காட்டுமாறு
நெஞ்சார வாழ்த்திய பின்புதான்
நிம்மதியாக உறக்கம் வந்தது
எனக்கு.


- ராம் ப்ரசாத்