Published:Updated:

கதலி - சிறுகதை

கதலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
கதலி - சிறுகதை

எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: ஸ்யாம்

கதலி - சிறுகதை

சாதுலாலின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவரது வலது இமையை அவன் பார்க்க முயற்சிசெய்தான். சாதுலாலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் தெரிவது, அவருடைய வலது இமையும் அதன் மேல் இருக்கும் மருவும்தான். சாதுலாலுக்கு பிறவியிலே வலது கண் இமைக்கு மேலாக மரு ஒன்று இருந்தது, அவருடைய அழகுக்குக் காரணமாக அமைந்தது. வயதான காலத்தில் அந்த மரு, பழுத்தக் கனி ஒன்று மரத்தின் கிளையில் இருந்து தொங்கிக்கொண்டிருப்பதுபோல, அவருடைய இமையில் இருந்து பூமியைப் பார்த்தபடி அல்லது சாதுலாலின் பெருவிரலைப் பார்த்து தலை குனிந்திருப்பதை, அவன்  இரண்டு முறை  பார்த்திருக்கிறான்.

ஹரிக்கு இரண்டு முறை சாதுலாலை அருகே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் அவன் சாதுவின் முகத்தைப் பார்க்காமல், அந்த மருவை  மட்டும்  பார்த்துவிட்டு  வந்துவிட்டான்.

`சாதுவை முதன்முதலில் பார்க்கிறவர்கள் இப்படித்தான். நான் சாதுவின் முகத்தைப் பார்ப்பதற்கு ஒரு வருஷத்துக்கு மேலானது என்றால் என்ன சொல்வது...' என்று ராம் சொன்னதை அவன் நினைத்தான். ராம்தான் அவனை சாதுவிடம் அழைத்துச் சென்றது. ராமை பஜனை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் தேடினான். ராம் தனது குடும்பத்துடன் பஜனைக்கு முன்கூட்டியே வந்து அமர்ந்துகொள்வார்.

ஒருமுறை,  சிவப்பான  அவருடைய முகத்தில் கருநிறத்தில் இருந்த அந்த மருவை, அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடவேண்டும் என ராம் கேட்டுக்கொண்டபோது சாதுலால் மறுத்து விட்டார். `தனிமையில் இருக்கும்போது நானும் எனது இமையின் மேல் இருக்கும் மருவும், பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். அதையும் என்னிடம் இருந்து நீக்கிவிட்டால் நான் யாருடன் பேசுவேன்?’ என குழந்தையின் பிஞ்சுவிரல்களை நீவிக்கொள்வதுபோல அந்த மருவைத் தடவிக் கொண்டு சொல்லிவிட்டார். சிறிய கருநிறமான அந்த மருதான் அவரை அதிர்ஷ்டசாலி ஆக்கியது என்று, பலரும் பேசிக்கொள்வதை ஹரி  கேட்டிருக்கிறான்.  சாதுலாலைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். எது உண்மை எனத் தெரியவில்லை.

சாதுலால் எங்கு இருந்து வந்தவர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பாக, ஐப்பசி மாத மழைக்காலத்தில் ஜவுளிக்கடையின் வாசலில் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தவரை, அந்தக் கடைக்காரர் பார்த்த தாகவும், அவருக்குப் பழைய சேலைத் துணியைக் கொடுத்துப் போத்திக்கொள்ள சொன்னதாகவும்  ஜவுளிக்கடை பஜாரில் பேசிக்கொள்வார்கள்.

சாதுலால் சில நாட்கள் யாருடனும் பேசாமல் இருப்பார். திடீரென ஏதாவது ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்து, ஓர் இடத்தில் அமர்ந்துகொள்வார். ஜவுளிக்கடைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அவரை இழுத்து தெருவில் விடுவார்கள். சிறிது நேரத்தில் அந்தக் கடையில் வியாபாரம் மும்முரமாக நடக்கும். இனிப்புத் துண்டைக் கவ்விச் செல்வதற்கு எங்கெங்கு இருந்தோ வரும் எறும்புக் கூட்டத்தைப் போல, அந்த ஜவுளிக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழைந்து, துணி வியாபாரம் செய்வார்கள். பத்து தினங்களுக்கு ஒருமுறை சாதுலால் ஏதாவது ஒரு ஜவுளிக்கடையில் நுழைந்து அமர்ந்துகொள்வார். பிறகு அந்தக் கடையில், வியாபாரத்துக்கு என  கூட்டம் கூடும்.

ராம் புதிதாக ஜவுளிக்கடை தொடங்கிய நேரம். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாமலும் வியாபாரம் இல்லாமலும் இருந்த நாட்கள் அவை. கூடவே, திருமணம் முடிந்த அன்றே அவரது மனைவி சண்டையிட்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்ட வேதனை வேறு. தெருவில் ஜவுளிக்கடை பஜாரில் அவரது பெயர் கேவலமாகப் பேசப்பட்டு வந்தது. ராம் என்ன செய்வது எனத் தெரியாமல் மனதுக்குள் அழுதார்.

காலையில் கடை திறந்ததும் சாதுலால் கடைக்குள் புகுந்து அமர்ந்துகொண்டார்.  ராமிடம், ``எனக்கு வாழைப்பழம் வேண்டும்’' எனக் கேட்டார்.    ராம் என்ன நினைத்தாரோ அவரது காலில் விழுந்தார். ராம் அழுத கண்களுடனும் வணங்கிய கரங்களுடனும் தன் முன் நின்றிருந்ததைக் கண்ட சாதுலால், அவனைக் கட்டித் தழுவினார். ராம் தன்னை அணைத்துக்கொண்ட அடுத்த நொடியில், தன் மனைவியை அணைத்துக்கொண்டபோது உண்டான நறுமணத்தை உணர்ந்து அவரை விலக்கிவிட்டார். அப்போது தனது உடலில் பெருவிரலில் இருந்து தலையின் உச்சி வரை, கோடுபோல ஏதோ ஒன்று ஊர்ந்துபோவது தெரிந்தது; நடுமுதுகு குளிர்ந்து உடல் குலுங்கி நின்றது.

ராம் கடையை விட்டுச்சென்று அவருக்காக வாழைப்பழங்கள் வாங்கித் தந்தார். வாழைப்பழங் களைச் சாப்பிட்ட சாதுலால், அவரை அழைத்து முத்தமிட்டார். தான் சாப்பிட்ட மீதிப் பழத்தை அவருக்குத் தந்தார். தயங்கிய ராமைப் பார்த்து, ``சாப்பிடு... சாப்பிடு...’’ என்று இருமுறை சிரித்தபடி சொன்னார். ராம் சாப்பிட்டதும், அவர் கடையைவிட்டு வெளியேறினார்.

ராமுக்கு அதன் பிறகுதான் அனைத்தும் சேர்ந்தது. சண்டையிட்டுச் சென்ற அவரது மனைவி அவளாக வீடு வந்து சேர்ந்தாள்.

ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தனது கடையின் கிளை ஸ்தாபனத்தை மற்றொரு பஜாரில் திறந்தார். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய சாதுலாலுக்கு, தங்கிக்கொள்ள பழமாங்கால் புரத்துக்குப் போகும் பாதையில் சிறிய இடத்தில் குடிசைப் போட்டுக் கொடுத்தார். மூன்று வேளைகளும் சமைத்துப் பரிமாற சமையற்காரனை வேலைக்கு வைத்தார்.

சாதுவின் வீட்டில் நடக்கும் பஜனையில் கலந்துகொள்வார் ராம். அவர் காலில் விழுந்து வணங்கி, `` `நீ எல்லாம் ஆம்பளையா?’னு காறித் துப்பிட்டுப்போன என் மனைவி திரும்பி வந்துட்டா. எனக்கு ஒரு ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கு. உங்களைச் சந்திச்ச அதிர்ஷ்டம்தான் சாது. என் வாழ்க்கையிலே இதைவிட சந்தோஷம் எதுவும் இல்லை. என் மனைவி என்னை ஆம்பளைனு ஒப்புக்கிட்டா’’ என்று குழந்தையைப்போல அழுவார். சாதுலால் அவரது கண்களைத் துடைத்துவிட்டுச் சிரிப்பார்.

``எனக்கு ஒரு புடவை வேண்டும். என் உடம்பில் போத்திக்கொள்ள நல்ல புடவையாகக் கொண்டுவா ராம்’’ என்று அவரிடம் கேட்டார் சாதுலால்.

ராம் புதிதாக ஒரு புடவையை எடுத்துக்கொண்டு போய் சாதுலாலிடம் தந்துவிட்டு, ``சாதுலால்... எனக்கு ஒரே ஒரு ஆண் குழந்தைதானா, இன்னொரு குழந்தை கிடையாதா?’’ எனக் கேட்டதற்கு, ``நீயும் உனது மனைவியும் வாழையைப் போன்றவர்கள். கதலி... மலடி என்றாலும் வாழை வாழைதான்’’ என்று சொன்னார் சாதுலால்.

``சாது எனக்கு இன்னொரு குழந்தை வேணும்.’’

``வாழையில் ஒரு குலை தள்ளிய பிறகு எந்த வாழை அதே இடத்தில் இன்னொரு குலையைத் தந்திருக்கிறது?’’

ராமின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைக் கண்ட சாது, அவனை அணைத்துக் கொண்டார். ராம் அவருடைய உடலில் இருந்து வரும் நறுமணத்தை உணர்ந்தான். அது அவனுடைய மனைவியின் உடலில் இருந்து வெளிவரும் நறுமணம்போல இல்லை. பதிலாக வெயில் ஏறிய ஆற்றங்கரை மணலின் வாசத்தைப்போல் இருந்தது.

ஹரிக்கு, சாதுலாலை அறிமுகம் செய்துவைத்தது ராம்தான். இந்தப் பத்து வருடங்களில், ராம் பலருக்கும் சாதுலாலை அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு உதவியாக இருந்தார். ராமைப்போல ஜவுளிக்கடை வைத்திருக்கிற அவரது உறவினவர்கள் பலரும், சாதுவின் புகைப்படத்தைத் தங்களது கடைகளில் வைத்திருப்பதை ஹரி பார்த்திருக்கிறான். வண்ணவண்ணச் சேலையைப் போத்திக்கொண்டு  நின்றபடியும் அமர்ந்தபடியும் காட்சிதரும் சாதுவின் புகைப்படத்தை, ஜவுளிக்கடைகளின் முகப்பில் வைத்திருக்கிறார்கள். ஹரியும் தனது கடையில் சாதுவின் புகைப்படத்தை வைத்திருக்கிறான்.

ஹரி, மிட்ஷோ தியேட்டருக்கு அருகில் பீடா கடை வைத்திருக்கிறான். அங்கே சாதுவின் படத்தை வைத்த பிறகுதான் அவனுக்கு வியாபாரம் கூடியது. மிட்ஷோ தியேட்டருக்கு வருகிறவர்கள், அவனது கடைக்கு வந்து பீடா வாங்கிச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்.

``சாதுவின் படத்தை கடையில் தொங்கவிடுவது பெரிது அல்ல. ஒவ்வொரு வாரமும் சாதுவின் வீட்டுக்கு வந்து பஜனையில் கலந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக அவர் உனக்கு குழந்தை வரம் தருவார்’’ என்று ராம் சொன்னவுடன், ஹரியும் அவனது மனைவி ஊர்மிளாவும் பஜனைக்குக் கிளம்பினார்கள்.

ஹரிக்கும் ஊர்மிளாவுக்கும், தங்களுக்குத் திருமணமாகி இன்னமும் குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. சாதுவின் பஜனையில் கலந்துகொண்ட குழந்தை இல்லாத தம்பதியினர் பலருக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகி யிருக்கிறது என்பது ஹரிக்கும் ஊர்மிளாவுக்கும் தெரியும். ஊர்மிளாவைப் பஜனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அவனுக்குப் பெரும்பாடு ஆகி விட்டது. அவளது வெட்கமும் இயலாமையின் துயரமும் கலந்த முகத்தை, பலரும் ஏளனத்துடன் பார்த்து, கடந்துசெல்வதை ஹரி கவனித்திருக்கிறான்.

பஜனை தொடங்குவதற்கு முன்பாகச் செல்ல வேண்டும் என ஹரி பலமுறை நினைத்திருக்கிறான். வழக்கம்போல தாமதமாகிவிடும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலையில் ஊர்மிளாவோடு சண்டை போட்டுக் கொண்டுதான் பஜனைக்குப் புறப்படுகிறான். ஒவ்வொரு முறையும் தாமதமாக வருவதால்தான், சாதுவின் முன்னால் உட்காரக்கூடிய சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்க வில்லை என ஹரி நினைத்தான். ஊர்மிளா வீட்டைவிட்டுப் புறப்படுவதற்கு நேரமாகி விடுகிறது. அவளுக்கு புடவையைத் தேர்வுசெய்வதில் பெரும் குழப்பம் உண்டாகும். வீட்டைவிட்டு வெளியே புறப்படுவதற்குள், குறைந்தது ஐந்து ஆறு சேலைகளையாவது மாற்றி மாற்றி உடுத்தி,  தன்னை அழகு பார்த்துக்கொள்வாள்.

“ஏதாவது ஒரு சேலையைக் கட்டிக்கொண்டு வரக் கூடாதா?” என்று ஹரி அவளுடன் சண்டையிடுவான். 
 
``பத்து பேர் வர்றாங்க. இல்லைன்னா இருபது பேர் வர்றாங்க. இதுக்கு எதுக்கு அவசரப்படுறீங்க?’’ என்றாள் ஊர்மிளா.

ஊர்மிளா சொல்வதை எதையும் அவன் காது கொடுத்துக் கேட்பது இல்லை. திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, அவனுக்கு அவளிடம் இருந்த ஈடுபாடு முழுமையாகக் குறைந்துவிட்டது. குழந்தை இல்லை என்பது அவனுக்குப் பெரும் கவலையாகவும் அவமானமாகவும் இருந்தது. அந்த அவமானத்தோடும் கவலையோடும்தான் சாதுவைப் பார்க்க பஜனைக்குச் சென்றான்.

ஹரி ஞாயிற்றுக்கிழமை தனது பீடா கடையை மூடிவிடுவான். அன்று முழுக்க ஊர்மிளாவோடு வீட்டில் இருப்பான். வீட்டு வேலைகள் செய்வதும், கடைக்குச் சென்று வருதுமாக அன்றைய நாளைக் கழிப்பான். துவைத்த புடவைகளை மாடியில் இருந்து எடுத்து வரும்போது, அவனும் சாதுலாலைப் போல புடவைகளை தன் மேல் போத்திக்கொள்வான். சாதுவைப் போல முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பான். தானும் சாதுலால் போல் ஆகிவிட்டால் என்ன என்று யோசிப்பான். பிறகு அவனுக்கு வெட்கம் வந்து புடவையை  மடிக்கத் தொடங்கிவிடுவான்.

சாதுலாலுக்கு எண்பது வயது முடிந்துவிட்டது. அவரை தினமும் மாலைவேளையில் சந்திப்பதற்காகப் பலரும் வருகிறார்கள். பெண்கள் எப்போதாவது அழுதபடி வருவார்கள். அவர்களுக்குத் தன்னிடம் இருக்கும் பழங்களையும் புடவையையும் எடுத்துத் தருவார். இளம்தம்பதிகளுக்கு தான் சாப்பிட்ட பழங்களைத் தருவார். சாதுலால் தரும்  பழங்களைச் சாப்பிடும் குழந்தையற்றப் பெண் கர்ப்பவதியாவாள் என்ற விஷயம், நகரம் முழுவதும் அறிந்ததுதான். சாதுவிடம் இருந்து பழங்களை வாங்குவதற்காகவே குழந்தையற்றவர்கள் பலரும், ஞாயிறுதோறும் அவருடைய  ஆசிரமத்துக்கு வந்தார்கள்.

கதலி - சிறுகதை

சாதுலாலின் வீடு நகரத்தில் இருந்து பழமாங்கால் புரத்துக்குப் போகும் பாதையில், ஆலமரங்களுக்கு நடுவே இருக்கிறது.  முதன்முதலாக ஹரி சாதுவைச் சந்தித்தபோது ஸ்பெஷல் ஸ்வீட் பீடா செய்துகொண்டு போனான். பீடாவை அவருடைய பாதத்துக்கு இடையே வைத்து வணங்கினான். பீடாவை சாதுலால் எடுத்துச் சுவைத்தார். பாதி பீடாவைச் சுவைத்துவிட்டு, மறுபாதியை கையில் வைத்துக்கொண்டு பஜனையில் இருந்த பெண்ணை அழைத்தார். அவள் களைப்புற்று, முகம் வெளிறி, காய்ந்த உதடும் வற்றிய உடலுமாக வந்தாள்.  அவள் சாதுவிடம் இருந்து பீடாவை வாங்கிச் சுவைத்தாள்.

சாதுலால் அவளைப் பார்த்துச் சிரித்தார். அந்தப் பெண் சாதுவின் அருகே சென்று, “சாது எனக்குத் தீட்டு ஏற்பட்டால் கட்டிக்கட்டியாக ரத்தப்போக்குப் போகிறது. இது நான்கு ஐந்து நாட்களுக்குப் பொழுது எல்லாம் வடியும்.

என் கால்கள் அந்தச் சமயத்தில் நடுங்குகின்றன. அடிவயிற்றில் கத்தியை வைத்துக் கீறியதுபோன்ற வலி. எனக்கு இதில் இருந்து என்றுமே விடுதலை இல்லையா, நான் வாழ்நாள் எல்லாம் இப்படித்தான் இருக்க வேண்டுமா?” என அழுதபடி கேட்டாள். அவள் அழுவதைப் பார்க்க முடியாதவனாக ஹரி முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

“நீ சாப்பிட்ட இனிப்பான வெற்றிலை உனது அடிவயிற்று நோவைக் குணமாக்கிவிடும் என நம்புவாய் என நினைக்கிறேன்” என்றார் சாதுலால்.

அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றதை ஹரி பார்த்தான். இனிப்பு பீடா எப்படி அந்தப் பெண்ணின் உபாதையைப் போக்கும் என்று புரியாதவனாக ஹரி இருந்தான். அதன் பிறகு சாதுலால் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஹரி முறை வரும்போது அவனிடம், “வெற்றிலை எப்படி அந்தப் பெண்ணின் வலியைக் குணமாக்கும் என நினைக்கிறாயா?” என்று கேட்டார். அவன் ஆச்சர்யமாக ஆமாம் என்பதுபோல பார்த்தான்.  தன் முன் நின்றிருந்தவர்களுக்கு இனிப்பும் பழங்களும் கொடுத்துவிட்டு, ஹரியை உள்ளறைக்கு அழைத்துச் சென்றார்.

தனது உடலில் போத்தியிருந்த புடவை ஒன்றை எடுத்து, அவனது உடலில் போத்திவிட்டார். அடுத்த நொடியில் ஒரு பெண் வலியால் துடிக்கிற சத்தம் கேட்டது. அது அடுத்தடுத்த நொடிகளில் பெருகி பலருடைய குரல்களாகத் தொடர்ந்து கேட்டது. அவன் பயந்துபோய் தன் மேல் இருந்த புடவையை விலக்கினான். பெண்ணின் கதறல் இப்போது கேட்க வில்லை. புடவையை சாதுலாலிடம் தந்துவிட்டு அவரைப் பார்த்தான். சாதுலால் அவனிடம் இருந்து வாங்கிய புடவையை ஏதோ குழந்தையை தோள் மேல் போட்டுக்கொள்வதுபோல போட்டுக்கொண்டு அவனிடம், தன்னை நிர்வாணமாகக் காட்டினார். ஹரி அவரது நிர்வாணத்தைப் பார்த்து முகத்தைப் பொத்தியவனாக அழுதான். அவனால் அங்கு நிற்க முடியவில்லை. சாதுவின் குடிசையைவிட்டு ஓடினான். அதன் பிறகு ஊர்மிளாவோடு பேசுவதையும் வீட்டுக்குச் செல்வதையும் மறந்தான்.
 
2

ரண்டு ஞாயிற்றுக்கிழமை ஹரி, சாதுலாலைச் சந்திக்கச் செல்லவில்லை. ஊர்மிளா மட்டும் பழமாங்கால்புரத்துக்கு வந்துசென்றதை அறிந்த ராம், அவனைச் சந்திப்பதற்காக பீடா கடைக்கு வந்தார். ஹரி கரும்பச்சை நிற வெற்றிலையை கையில் பிடித்து, அதில் படிந்திருக்கும் நரம்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். ராம் திடீரென அவனது முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றார். சற்றுக் கூர்ந்துபார்த்தவர், ஹரியின் கண்கள் வெற்றிலையை விட்டு மாறாதிருந்ததோடு, பச்சை நிறமாக இருப்பதைப் பார்த்தார். அவனது முகம் சிறிது மாற்றம் அடைந்திருந்ததை அவரால் உணர முடிந்தது.

``ஹரி...’’ என்று சற்று கோபத்துடன் அவனை அழைத்தார். ஹரி திரும்பிப் பார்த்தான். ராமுக்கு சாதுலால் தன்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல தோன்றியது. கண் இமைக்கும் நேரம்தான். மனம் அதிர்ந்து பார்த்த ராம், ``ஹரி... ஹரி...’’ என்று நிதானம் இழந்தவனாக தெரு என்று பாராமல் கத்தினார். அவரை ஹரி ஏறிட்டுப் பார்த்தான்.

``ராம் அண்ணாவா, வாங்க. நீங்க வருவீங்கனுதான் இந்த வெற்றிலையை வெச்சிருந்தேன்’’ என்று தனது கையில் இருந்த வெற்றிலையை ராமிடம் தந்தான்.

ஏன் தன்னிடம் வெற்றிலையைத் தருகிறான் என்ற யோசனையோடு ராம் வாங்கிக்கொண்டார். முதிர்ந்த வெற்றிலையில் படிந்திருந்த நரம்புகளின் கோடுகளும், வெற்றிலையின் கரும்பச்சை நிறமும் அதன் வடிவமும் ராமுக்கு மயக்கத்தைத் தந்தன.

``ராம் அண்ணா... வெற்றிலைக் கட்டுப் பிரித்தபோது கையில் கிடைத்தது. ஆண் வெற்றிலை இது. எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது பாருங்கள்’’ என்றான்.

ராம் வெற்றிலையைப் பார்த்துவிட்டு அவனது முகத்தைப் பார்த்தார். ஹரி அவரிடம், ``யாருக்கும் இதைத் தரப்போவது இல்லை. பீடாவாக மடித்து, நானே மென்று, தின்று, சாற்றை விழுங்கப்போகிறேன்’’ என்று அவரிடம் இருந்த வெற்றிலையை வாங்கினான்.

``ஏன் நீ இரண்டு வாரமாக சாதுலாலைப் பார்க்க வரலை. உடம்புக்குச் சுகம் இல்லையா ஹரி?’’ என்று கேட்டார்.

அவன் எதுவும் பேசவில்லை. டப்பாவில் இருந்த பாக்குத்தூளைப் பார்த்தவனாக அமர்ந்திருந்தான். தன் முன்னர் இருந்த வட்டக்கல்லின் மேல் அடுக்கியிருந்த வெற்றிலைகளின் மேல் நீரைத் தெளிப்பதும், வெற்றிலையை எடுத்து உதறித் திரும்பவும் அடுக்கவுமாக இருந்தான். ராம் அவனது செயலைப் பார்த்துவிட்டுக் கோபமாக, ``ஹரி’’ என்று அதிர்ந்து அழைத்தார்.

ஹரி திரும்பி அவரைப் பார்த்துச் சிரித்தான். ராம் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தார். அவருக்கு மனதுக்குள் தான் சாதுலாலுடன் பேசிக்​கொண்டிருக்கிறோமா இல்லை ஹரியிடம் பேசிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் உருவானது. 

3
தா
ன் எதற்காக இவ்வளவு நேரம் அழுதபடி இருந்தோம் என்ற குழப்பத்துடன் சாதுலாலைப் பார்த்தார் ராம். சாதுலால் அமைதியாக அவரைப் பார்த்தார். புதன்கிழமை மாலை நேரத்தில் அவசரஅவசரமாக பழமாங்கால் புரத்துக்கு வந்த ராம், சாதுலாலின் முன்பாக அமர்ந்து எதுவும் பேசாமல் அழுதார். சாதுலாலும் ராமின் விருப்பப்படி அழுது முடியட்டும் எனக் காத்திருந்தார். ராமின் அறியாத மனம் அழுது அழுது கண்ணீராகக் கரைந்தது. இன்னும் அழுதால் தன்னில் இருந்து உயிரும் கண்ணீராக வெளிவந்துவிடும் எனத் தோன்றியது ராமுக்கு. ஏதோ ஒரு தருணத்தில் அழுகையை நிறுத்திக் கொண்டார். கண்களைத் துடைத்து சாதுலாலைப் பார்த்தார். ராமின் உடலும் மனமும் கணநேரம் அதிர்ந்து அடங்கியது. ஹரியின் குளிர்ந்த கண்களும் சிவந்த முகமும் தன் முன்பாகத் தெரிவதை அவர் பார்த்தார். சாதுலாலின் முகம் புகைமூட்டத்தின் ஊடே மறைந்து அந்த முகத்துக்குப் பதிலாக, ஹரியின் முகம் தெரிவதுபோல உணர்ந்தவர் எழுந்து நின்றார்.

``ஏன் ராம் இவ்வளவு அழுகை உனக்கு? ஏன் இவ்வளவு துயரத்தை மனதுக்குள் அடக்கி வைக்கிறாய்?’’ எனக் கேட்டார் சாதுலால். ராமுக்கு அவர் பேசுவது தெரிந்தது; அவர் பேசுவதைக் கேட்க முடிந்தது. ஆனால், தன் காதுகளுக்குள் ஹரி பேசுவதைப்போல ஒலித்ததைக் கேட்டுக் குழம்பியவராக கண்களை மூடிக்கொண்டார். கைகூப்பி தலைக்கு மேல் வணங்கியவர், யாரை எங்கு பார்க்கிறேன் என்றே தெரியவில்லையே எனத் திரும்பவும் அழத் தொடங்கினார்.

சாதுலால் அவரைப் பார்த்து, ``என்னிடம் வந்தவனுக்கு என் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டேன் ராம். அவன் கதறி அழும் ஓலம் அன்று இரவு முழுக்க என் காதுக்குள் கேட்டது ராம். அவன் திரும்பவும் என்னைப் பார்க்க வர மாட்டான். அவன் இனிமேல் சாதுலாலைத் தேட மாட்டான். பதிலாக தனக்குள் இருக்கும் சாதுலாலைத் தேடத் தொடங்கியிருக்கிறான் என்பதை உன் அழுகையின் மூலம் நம்புகிறேன் ராம்’’ என்று சொன்னார். அவர் பேசுவது புரியாதவராக நின்றிருந்தார் ராம்.

சாதுலால் தனது உடலின் மேல் போத்தியிருந்த புடவையை மேலும் இறுக்கிக்கட்டி யாரும் தனது உடலைப் பார்த்துவிடாதபடி மறைத்தார்.

``உடலில் இருக்கும் நோவுகளை அகற்றுவது ஒன்றுதான் மனிதனுக்குத் தெரியாத ஒன்று. தன் நோவுகளை அகற்றுபவனைக் கொண்டாடுகிறவன், அந்த நோவுகளின் பிறப்பையும் இறப்பையும் அறியும்போது அச்சமுறுகிறான்’’ என்று சாதுலால் சொன்னதும், ராம் அவரது முகத்தைப் பார்த்தான். சாதுவின் முகமாகத்தான் தெரிந்தது. ஆனால் தனது காதுக்குள்ளாக ஹரி பேசுவதுபோல கேட்டது. ஏன் ஹரி பேசுவதுபோல தனது காதுக்குள் கேட்கிறது என அச்சமும் குழப்புமாக இருந்தது.

``சாதுலால், உங்களை நான் ஹரியிடம் பார்த்தேன். நீங்கள் வெற்றிலை மடித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது எனது கண்களுக்கு. இங்கு நீங்கள் பேசுவது அவன் பேசுவதுபோல் இருக்கிறது’’ என்று சொன்னதும் சாதுலால் சிரித்தார்.

``நோவுகளை இடமாற்றிக்கொள்வதுபோல உடலின் அடையாளத்தையும் இடமாற்றிக் கொள்ள வேண்டியதுதான் ராம்’’ என்று சொன்னார். ராம் எதுவும் புரியாதவனாக வீட்டுக்குப் புறப்பட்டான்.

4
சா
துலால் இறந்துபோனதை யாரும் நம்பவில்லை. அவரது நண்பர்கள் குடிசையின் பின்பாக உள்ள இடத்தில் அவரை அடக்கம் செய்து சமாதி எழுப்பினார்கள். வீட்டின் பின்பாகவே சாது விழுந்து இறந்துகிடந்தார். மழையில் நனைந்த பிறந்த அணில்குட்டியைத் தூக்கி வீட்டுக்குள் கொண்டு வரச்சென்றவர், வழுக்கி விழுந்து பின்னந்தலையில் பலமாக அடிவிழுந்து இறந்துபோனார். ஹரி அவரது உடலைக் குளிப்பாட்டும்போது பார்க்கவில்லை. பதிலாக அவரது குடிசைக்குள் சென்று கொடியில் உலர்ந்துகொண்டிருந்த புடவைகளை எடுத்து தன் மேல் போர்த்தியவன், சாதுவின் மூங்கில் நார்பெட்டியைத் திறந்து, அதில் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். குழந்தையின் புகைப்படம் அது. அதில் `கதலி' என எழுதியிருந்தது. ``கதலி... கதலி...’’ என ஹரி அழைத்தான்.

சமாதியின் அருகில் நின்றிருந்தவர்கள் சாதுவின் குரல் கேட்டு குடிசைக்குள்ளே வந்தார்கள். ஹரி பேசுவது சாதுவின் குரல் என ஒலிப்பதாக அங்கு இருந்தவர்கள் பேசிக்கொண்டதை ராம் கேட்டார். செம்மண் சமாதியின் முகப்பில் தீபம் ஏற்றப்பட்டதும், அங்கு இருந்தவர்கள் அவரவர்களின் வீட்டுக்குச் சென்றனர்.

ஹரி புடவைகளை மடித்து மூங்கில் கூடையில் அடுக்கினான். ராம் அவனைப் பார்த்து, ``நீ வீட்டுக்கு வரவில்லையா?’’ என்று கேட்டார்.

ஹரி அவரிடம், ``என் வீட்டில்தானே இருக்கிறேன் ராம் அண்ணா. வேறு எங்கு போகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டதும், ராம் தன்னை அறியாமல் ``சாதுலால்... சாதுலால்...’’ என்று அரற்றியபடி கைகூப்பி வணங்கி ஹரியைத் தழுவிக் கொண்டார்.

ராம், தனது மகனை அணைத்து முத்தம் கொடுக்கும்போது குழந்தையின் மேல் இருக்கும் நறுமணத்தை அவனிடம் உணர்ந்தார்.

ஹரி அவரை விலக்கிவிட்டு, ``ராம் அண்ணா... ஊர்மிளா கர்ப்பமாக இருக்கிறாள். உங்களுக்குத் தெரியுமா சாதுவின் முகத்தில் இருக்கும் மரு போல கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் முகத்திலும் மரு இருக்கிறது. நான் அதைப் பார்த்தேன். எனக்கு சாதுலால் காட்டினார்’’ என்றவன், தனது கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான். ராம் அவனிடம் இருந்து புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். அந்தப் படத்தில் குழந்தையின் முகத்தில் சிறிய மரு ஒன்று புள்ளிவைத்ததுபோல் இருந்தது.

``நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன். எனக்கு மகள்தான் பிறக்கப்போகிறாள். அவளுக்கு `கதலி' எனப் பெயர் சூட்டப்போகிறேன்’’ என்று சொன்னான் ஹரி. ராம் ஒன்றும் பேசாமல் அங்கு இருந்து வெளியேறினார்!