கட்டுரைகள்
Published:Updated:

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

விஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்... ‘அதிலே நல்ல ஆசிரியர்கள், நல்ல டாக்டர்கள், நல்ல நண்பர்கள், நல்ல போலீஸ் ஆபீஸர்கள் எல்லோரும் வந்து போகிறார்கள்.’

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்


நல்ல திமிங்கிலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அது பற்றி அறியும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்தது.

அவருடைய பெயர் சுகப்பிரம்மம்.

வயது 53. வெள்ளை அரைக்கை சட்டை அணிந்திருந்தார். மெல்லிய வசீகரிக்கும் குறுந்தாடி. அன்று ரொறொன்றோவில் நல்ல வெயில். யன்னல் வழியாகப் பாய்ந்த வெளிச்சம் அவர் முகத்திலும் மேசையிலும் ஒளிப்பொட்டுகளைச் சிதறவிட்டது. பக்கத்தில் இருந்த மகளின் வயது 16. நீள்வட்டக் கண்ணாடி. சிரித்த முகம். பேசும்போது அடிக்கடி கீழே குனிந்து பார்த்தார். `நீலோற்பலம் போன்ற கண்கள்’ என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றியது. சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் சுகப்பிரம்மமும் அவருடன் படகில் வந்தவர்களும் அட்லான்டிக் சமுத்திரத்தில் உயிருக்குப் போராடியபோது, ஒரு கப்பல் தலைவர் அவர்களைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி கூறுவதற்காக சுகப்பிரம்மம் தன் மனைவியுடனும், இரு மகள்களுடனும் 2,700 கி.மீ பயணம் சென்று அன்றுதான் திரும்பியிருந்தார். 

``இலங்கையிலிருந்து நேராக கனடா வந்தீர்களா?’’


``1983-ம் ஆண்டு, ஜூலை மாதம் ஓர் இரவில்  நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்.  அப்பாவின் புடவைக் கடையை  எரித்தார்கள்.  பிறந்த ஊரிலேயே அகதிகள் ஆக்கப்பட்டோம்.  எனக்கு வயது 21. எந்த நேரம் ராணுவம் வந்தாலும், என்னை பிடித்துக்கொண்டு போய்விடும். ஒரு குற்றமும் செய்யத் தேவைஇல்லை. தமிழனாக இருப்பதே குற்றம்தானே. என் மாமா வெளிநாடு புறப்பட்டபோது, என்னையும் அழைத்துப் போனார்.  கிழக்கு ஜேர்மனிக்கு விசா தேவை இல்லை. அங்கே விமானத்தில் போய், பின்னர் மேற்கு ஜேர்மனிக்குள் நுழைந்தோம். எங்களுக்காகக் காத்திருந்ததுபோல போலீஸ் எங்களைக் கைதுசெய்து, அகதி முகாமுக்கு அனுப்பியது. தங்குவதற்கு இடமும் படுக்கையும் உணவும் கிடைத்தாலும் அதுவும் ஒரு சிறைதான்.

சிலர் கள்ளக் கப்பலில் கனடா போகத் திட்டமிட்டார்கள். ஆளுக்கு  5,000 டொலர் கட்டவேண்டும். அதற்கும் மாமாதான் பணம் கொடுத்தார். கனடா பற்றி எனக்கு எதுவித அறிவும் கிடையாது. இரவு விமானத்தில் தூங்கிய சமயம் ஜேர்மனி வந்ததுபோல, கப்பலில் தூக்கம் போட்டால் கனடா வந்துவிடும் என்று நினைத்தேன்.

1986-ம் ஆண்டு ஜூலை மாதப் பின்னிரவில்  ரகசியமாக  வாகனம் ஒன்றில் புறப்பட்டோம். இருட்டிலே பிரமாண்டமான கப்பலின் உருவம் தெரிந்தது. ஆட்களின் முகங்கள் தெரியவில்லை. கப்பல்காரன் அவசர அவசரமாக எங்களைக் கீழ்த்தளத்துக்கு அனுப்பிவிட்டு, மேல்கதவை மூடினான்.  அது ஒரு சாமான் கப்பல். நான்கு பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட நாங்கள் 155 பேர். சாமான்கள் அடுக்கும் ஒடுக்கமான இடத்தில் நாங்கள் நெருக்கியடித்து உட்கார்ந்தோம்.

மூன்று நாட்கள் கப்பல் திகிலூட்டியபடி குலுக்கியது. எங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை. ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு வீசி எறியப்பட்டோம். வாந்தி எடுத்து பின்னர், அதன் மேலேயே கிடந்தோம். ஒருவரும் எட்டிப் பார்க்க வில்லை. கதவு மறுபக்கம் பூட்டியபடியே கிடந்தது. ஆங்கில சினிமாப் படங்களில் அடிமைக் கப்பல்களைப் பார்த்திருந்தேன். அதேதான். கப்பல்  அமைதியடைந்த பின்னர் முதன்முறையாக மேல் கதவு திறந்தது. டின் உணவுகளும் தண்ணீரும் தந்த பின்னர் கதவு மூடிக்கொண்டது. ஆடு மாடுகளைக்கூட ஒருவர் கொஞ்சம் கருணையுடன் நடத்துவார். ‘பூட்ட வேண்டாம். எதற்காகப் பூட்டுகிறீர்கள்?’ என்று அலறியபோது செம்பட்டை  முடிக்காரன் ‘கதவு இருப்பது பூட்டுவதற்குத்தானே?’ என்றான்.

13 நாட்கள் கழிந்த நிலையில், ஒருநாள் மாலை கதவு திறந்து வெளிச்சம் பாய்ந்தது. எங்களை மேலே வரச் சொன்னபோது என்ன ஏது என்று கேட்காமல் இடித்துப் பிடித்துக்கொண்டு மேலே வந்தோம். மூட்டை முடிச்சுகளைத் தூக்கியபோது அவற்றை அங்கேயே விடச்சொல்லி கட்டளை பிறந்தது. கண்களைக் கூசிக்கொண்டு பார்த்தோம். செம்பட்டைத் தலைமுடிக்காரன் ‘கனடா, கனடா’  என்றான். மகிழ்ச்சி தொடங்கிய அதே கணம் அது முடிவுக்கும் வந்தது.

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

இரண்டு படகுகள் கடலில்  இறக்கப்பட்டன. ‘மேற்கு நோக்கி படகைச் செலுத்துங்கள், கரை வந்துவிடும்.’ ஆட்கள் சரிசமாகப் பிரிக்கப்பட்டார்கள். முதல் படகில் மோட்டார் இருந்தது.  நான் ஏறியது இரண்டாவது படகில்தான். அதை முதல் படகுடன் கயிற்றினால் பிணைத்திருந்தார்கள்.   திரும்பிப் பார்த்தபோது கப்பல் மறைந்துவிட்டது. எங்கள் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. 13 நாட்கள் கப்பல் அடித்தளத்தில் அனுபவித்த நரகத்திலும் பார்க்க பத்துமடங்கு நரகம் காத்துக்கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியாது.

பலமணி நேரம் முயன்ற பின்னர் மோட்டார் வேலைசெய்ய ஆரம்பித்தது. முழு இருட்டு கவிந்துவிட்டதால், முதல் படகில் இருந்தவர்களைத் தெரியவில்லை. அழுகைச் சத்தம் மாத்திரமே கேட்டது. இன்ஜின் விசையை அதிகரிக்க அதிகரிக்க, படகுகள் ஒன்றையொன்று சுற்றினவே ஒழிய நேரே போகவில்லை. அடுத்த நாள் காலை விடிந்தபோது எங்கே இறக்கிவிடப்பட்டதோ, அங்கேயே படகு நின்றது. உணவு இல்லை, தண்ணீர் இல்லை. அப்பொழுதுதான் நாங்கள் எப்படியான ஆபத்தில் மாட்டியிருக்கிறோம் என்பதை முதன்முதலாக உணர்ந்தோம்.

இன்னோர் ஆபத்தும் இருந்தது. தண்ணீரின் மட்டம் படகின் விளிம்போடு இருந்தது. அனைவரும் அசையாமல் அதே இடத்தில் இருக்க வேண்டும்; எழும்பினால், படகு சாய்ந்து தண்ணீர் உள்ளே புகுந்துவிடும்.  நாள் முழுக்க சூரியன் எரித்தது.  எனக்குப் பக்கத்தில் இருந்தவனுக்கு 18 வயது இருக்கும். ‘அண்ணை’ என்றான். திரும்பிப் பார்த்தேன். பச்சை நிறப் பற்களால் சிரித்தான். அவனுடைய காதலிதான் அவனுக்குப் பணம் கட்டி அனுப்பினாளாம். திடீரென்று விம்மி விம்மி அழத் தொடங்கினான். `என்ன?’ என்று கேட்டேன். ‘அண்ணை, மரணம் பயணத்தைத் தொடங்கி விட்டது.  ஐயோ, நான் சாகப்போறேன். பனியில் விறைத்துச்சாவேனோ அல்லது மூச்சு முட்டிச் சாவேனோ? இங்கே திமிங்கிலம் இருக்காமே... ஒருவேளை அது என்னைக் கடித்துத் தின்னுமோ? அண்ணை இனித் தாங்க முடியாது’ என்றான். சிறுநீர் கால்களில் வழிந்து கீழே ஓடியது. ஒருவரும் ஒன்றுமே சொல்லவில்லை. தாங்க முடியாத நாற்றம் எங்களைச் சூழ்ந்தது.

அன்று இரவு மழை பெய்தது. நீரைக் கைகளால் ஏந்தி, தாகத்தைத் தீர்த்தோம். அதே சமயம் படகில் நீர் வேகமாக நிரம்பியது. ஆசனத்தில் அமர்ந்தபடியே யாரோ விட்டுப்போன பிளாஸ்டிக் கிண்ணத்தால் நீரை அகற்றினோம். அடுத்த நாள் விடிந்தபோது படகு நிற்கிறதா, நகர்கிறதா என்றே தெரியவில்லை. முதன்முறையாக திமிங்கிலம் ஒன்றைப் பார்த்தோம். மூச்செடுக்கத் தண்ணீருக்கு மேலே வரும்போது தண்ணீரை விசிறி அடித்தது. பிறகு மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கியது. அது என்ன செய்தது என்பது 30 வருடங் களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவரும்.

அது மோசமான நாளும் மகிழ்ச்சியான நாளும். முதல் படகில் இருந்த கைக்குழந்தை தொடர்ந்து அழுதது. சட்டென்று அது அழுகையை நிறுத்தியதும், தாய் கடலுக்குள் பாய முயன்றாள். அவள் பாய்ந்திருந்தால், முழுப் படகும் கவிழ்ந்திருக்கும். அப்போதுதான் தூரத்தில் பொட்டுப்போல ஒன்று தெரிந்து, அது வரவரப் பெரிதாகியது. ஒருவருடைய டீசேர்ட்டைக் கழற்றி துடுப்பிலே மாட்டி, சுழற்றினோம்.  சுழற்றியவர் படகின் நடுவே நிற்க, மற்றவர்கள் அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். கப்பல் எங்களை நோக்கி வர ஆரம்பித்தது.

மீன்பிடிக் கப்பலில் வந்தவர் பெயர் கஸ் டால்டன். சீட்டுக்கட்டில் காணப்படும் ஜாக் போன்ற அகலமான மார்பு. கருணையான கண்கள். எங்களை மீட்டு  தண்ணீரும் உணவும் தந்தார். அதைத் தொடர்ந்து கனடிய எல்லைக் காவல் கப்பலுக்கு அறிவித்தார். எல்லைக் காவல் கப்பல் அருகில் வந்ததும், அதன் உயரத்தைப் பார்த்துப் பிரமித்தோம். மீன்பிடிக் கப்பலில் இருந்து அதற்கு மாறவேண்டும். நீண்ட கயிற்று ஏணியில் ஏறியபோது எனக்கு முன்னே ஏறியவர் கைதவறி  என் நெஞ்சின் மீது வந்து விழுந்தார். நான் மறுபடியும் மீன்பிடிக் கப்பலில் விழுந்தேன். கண் விழித்தபோது சென்ற் ஜோன் ஆஸ்பத்திரியில் இருந்தேன். கனடா மண்ணில் நான் கால்வைக்கவே இல்லை. என்னைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.’’

``கனடாவில் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்தது?’’

``ரொறொன்ரோ வந்து மூன்று நாட்களில் தண்ணீர் மெத்தை செய்யும் தொழிற்சாலை  ஒன்றில் வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலை செய்து உயர்ந்தேன். ஏழு வருடங்களில் என் பெற்றோரை வரவழைத்தேன். 1995-ம் ஆண்டில் என் முதல் வீட்டை வாங்கினேன். மணமுடித்தேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள்.  படகிலே தொடர்ந்து அழுத குழந்தை, இன்று ஒரு டாக்டர். பச்சைப் பல்காரன், விருந்து மண்டபம் ஒன்றுக்கு சொந்தக்காரன். வாழ்க்கை அமைதியாக ஓடியது. ஒரேயொரு குறைதான். எங்களைக் காப்பாற்றிய கப்பல் தலைவரை மறுபடியும் சந்தித்து நன்றி கூறவில்லையே என்று. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 11-ம் தேதி வரும்போது என் உடம்பு பதறத் தொடங்கும். அன்று முழுக்கப் பிரமை பிடித்தவன்போல இருப்பேன். 30 வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் 2016-ல் என் ஆசை நிறைவேறியுள்ளது.’’ 

``அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?’’

``நான், என் மனைவி, இரண்டு மகள்களுடன் நியூஃபவுண்ட் லாண்ட் போனேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஏறிய படகு கரையில் கிடந்தது. மூன்று நாட்கள் படகில் நான் அமர்ந்திருந்த அதே இடத்தில் உட்கார்ந்தேன். அந்தக் கணமே என்னையறியாமல் அழுகை பீறிட்டது. நிறுத்த முடியாமல் அழுதேன். மனைவி, பிள்ளைகள்  தேற்றி சமநிலை அடைந்தேன். மீன்பிடிக் கப்பல் தலைவர் கஸ் டால்டனை சந்தித்தோம். அவருக்கு வயது 85. நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறோம் என்று அறிந்தபோது கண்கலங்கினார். 155 உயிர்களைக் காப்பாற்றிய ஒருவருக்கு நன்றி என்ற  வார்த்தை போதுமானதாக இல்லை.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதும் ஏறக்குறைய எங்கள் படகு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில்தான். கொஞ்சம் வடக்கு நோக்கி படகு நகர்ந்திருந்தால், எங்கள் படகும் பனிப்பாறைகளில் மோதிச் சிதறியிருக்கும். அன்று நாங்கள் உயிர்தப்பியது ஓர் அற்புதம்தான். அப்பொழுது அது தெரியாது; பின்னர்தான் அறிந்துகொண்டேன்.’’

``உங்களை நடுக்கடலில் தவிக்கவிட்டுப்போன கப்பல்காரன் பிடிபட்டானா?’’

``ஏறக்குறைய ஒரு மில்லியன் டொலர்களை நாங்கள் அவனுக்குக் கொடுத்திருந்தோம். 155 அகதிகளைக் கொல்ல முயன்ற அவன் ஒரு வெள்ளைக்காரன். எங்களைக் கொல்வதற்கு நாங்கள் அவனிடமே பணத்தைக் கொடுத்தோம். இரண்டு படகுகளில் அட்லான்டிக் சமுத்திரத்தில் இரவு தொடங்கும் வேளை எங்களை இறக்கிய அந்தக் கணமே அவனுக்குத் தெரியும், நாங்கள் இறக்கப்போகிறோம் என்பது. ‘கனடா ஐந்து கிலோமீட்டர் தூரம்தான்’ என்று எங்களிடம் சொன்னான். ஆனால் உண்மையில் அது 300 கிலோமீட்டர் தூரம். எத்தனைக் கொடூர நெஞ்சக்காரனாக அவன் இருந்திருப்பான்.

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

எங்களைக் காப்பாற்றிய கஸ் டால்டனும் ஒரு வெள்ளைக்காரர்தான். அவருடைய மீன்பிடிக் கப்பலில் போதிய இடம் இல்லை. ஆகவே, அவர் எங்களைக் கப்பலில் ஏற்றுவதற்காக, ஏற்கெனவே பிடித்த மீன்களைத் திரும்பவும் கடலில் கொட்டினார். அது அவருடைய மூன்று மாதகால வருமானம். இவர் கனடாவின் ஆதிகுடியைச் சேர்ந்தவர். கொலம்பஸ் வருவதற்கு 600 வருடங்கள் முன்னரே வந்து குடியேறியவர்களின் வழி வந்தவர். இந்தப் பிரதேசம் ஆபத்தானது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாவிட்டால் இங்கே வாழ முடியாது. இதுதான் இவர்களின் ஆதிப்பண்பு.’’ 

``அது சரி. நீங்கள் திமிங்கிலம் பற்றிச் சொல்லவில்லையே?’’

``நாங்கள் மூன்று நாட்கள் கடலில் தவித்தபோது திமிங்கிலம் ஒன்றை அண்மையில் கண்டோம். கடல் ஆழத்திலிருந்து மேலே வரும்போது தண்ணீரைச் சீறி அடிக்கும். பின்னர் வேண்டிய காற்றை உள்ளே இழுத்துக்
கொண்டு கீழே போய்விடும். அந்த ஆபத்திலும் திமிங்கிலத்தைக் கண்டபோது ஒரு மகிழ்ச்சி இருந்தது. எங்களைப்போல மூச்சுவிடும் இன்னொரு ஜீவராசி அங்கே தோன்றியது துணிச்சலைக் கொடுத்தது.  திமிங்கிலம் எங்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று கஸ் டால்டன் சொன்னார். அந்த நீர்ப்பரப்பில் மிக ஆபத்தான நீர்ச்சுழல் ஒன்று இருக்கிறது. அது படகுகளை ஒரேயடியாக உள்ளே இழுத்து மூழ்கடித்துவிடும்.  எங்கள் படகு நீர்ச்சுழலை நெருங்க முடியாதபடி திமிங்கிலம் தடுத்தது என்று சொன்னார். திமிங்கிலங்கள் அப்படி முன்னரும் செய்திருக்கின்றனவாம். அதுதான் உண்மை. மனிதன் திமிங்கிலத்துக்கு தீமை

நல்ல திமிங்கிலம் - அ.முத்துலிங்கம்

செய்கிறான். திமிங்கிலம் அவனைக் காப்பாற்றுகிறது.

`நம்பமுடியவில்லை’ என்றேன்.

திமிங்கிலம் ஒன்றையும் எதிர்பார்த்து உதவவில்லை. கஸ் டால்டனும் அப்படித்தான்.  கடலில் தப்பிய சம்பவத்துக்குப் பின்னர் என் வாழ்க்கை மாறிவிட்டது. நான் ஒன்றையுமே எதிர்பார்ப்பது இல்லை. பிள்ளைகளும் அப்படித்தான். என் மகள் அடிக்கடி சொல்வாள். “‘விதையை ஊன்றிக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; முளைக்காவிட்டால் உரம்.”

நான் விடைபெற்றேன். நீலோற்பலக் கண்களுடைய பெண்ணும் புறப்பட்டாள். இலங்கையில் பிறக்காவிட்டாலும் இலங்கையின் தேசிய மலர்க் கண்களை அவள் பெற்றிருந்தாள். ஆதிப்பண்பைப் பின்பற்றுவதற்கு இன்னொரு தலைமுறை உருவாகிவிட்டது.