Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

இம்ப்ரஷனிஸம் முதல் அலை

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

இம்ப்ரஷனிஸம் முதல் அலை

Published:Updated:
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

தொழில் புரட்சியின் விளைவாகப் பிறந்த நவீன யுகத்தின் கலை வடிவமாகத் தோன்றியது, நவீன ஓவியம். அதன் முதல் அலையாக எழுந்தது ‘இம்ப்ரஷனிஸம்’ என்ற கலை இயக்கம். படைப்புப் பொருள்ரீதியாகவும் வெளியீட்டுப் பாணிரீதியாகவும், அது தொழில்மயமாகவும் நகரமயமாகவும் உருமாறிய பாரீஸ் நகரில் முகிழ்த்த கலை வடிவம். அது காலத்தால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முந்தைய யதார்த்த ஓவிய மரபானது, புகைப்படக் கலையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பின் புதிய சாத்தியங்களை இழந்தது. அதன் காரணமாக, ஓவியக் கலை பெரும் சவாலை எதிர்கொண்டது. புதிய சிந்தனைகளோடும், வெளியீட்டு நுட்பங்களோடும் அது இந்தச் சவாலை எதிர்கொண்டு புத்தெழுச்சி பெற்றது.  அபாரமான பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டன. அதுவரை, தோற்றத்தைப் பிரதிபலித்த ஓவியக் கலை புதிய சிந்தனைக்கு ஆளானது. ‘தோற்றத்தைப் பிரதிபலிப்பது அல்ல; மாறாக, தனதான உலகைத் தோற்றப்படுத்துவது’ என்ற அடிப்படை நியதி உருவானது.

முதல் அலையாக உருவாகிய இம்ப்ரஷனிஸ இயக்கத்துக்கு முந்தைய யதார்த்த ஓவிய மரபானது, நிகழ்கால வாழ்வியக்கத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது. எனில், இம்ப்ரஷனிஸம் தம் கால வாழ்வியக்க சலனத்தின் ஒரு கணத்தை வெகு அநாயசமாக, ஓவியக் கலை மரபின் கூறுகளைப் புறக்கணித்து ஒரு மனப் படிமமாக வசப்படுத்தும் முனைப்பு கொண்டதாக அமைந்தது. 1860 முதல் 1910 வரையான 50 ஆண்டுகள், தோற்றம் - வளர்ச்சி - தேய்வு என நீடித்தது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


தூய, சுதந்திரமான ஓவிய ஆக்கமென்பது அதன் நோக்கமாகவும், பொருளாகவும், வெளிப்பாடாகவும் இருந்தது. பொருளும் வண்ணமும் ஒளியும் இசைமை பெறுவதை அடிப்படையாகக்கொண்டது. வண்ணத்திலும், வண்ணத்தில் ஒளியின் ஜாலத்தை வசப்படுத்துவதிலும் இம்ப்ரஷனிஸவாதிகள் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்களை வண்ணங்களின் ஓசை என்றோ, இம்ப்ரஷனிஸவாதிகளின் இசை என்றோ கொள்ளலாம். அவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்புகள் எவ்வித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் அவதானிப்பு மற்றும் உள்ளுணர்வின் மூலமாக அமைந்தன.

1874-ல் இம்ப்ரஷனிஸவாதிகள் கூட்டாகச் சேர்ந்து தங்கள் முதல் கண்காட்சியை பாரீஸ் நகரில் நிகழ்த்தினார்கள். நட்புக்கும் தோழமைக்கும் கூட்டியக்கச் செயல்பாட்டுக்கும் இந்த இயக்கம் பெயர் பெற்றிருந்தது. அதன் விளைவாக அமைந்ததுதான் முதல் கண்காட்சி. இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் சிந்தனையாளரும் முன்னோடிப் படைப்பாளியும் மேதையுமான கிளாடு மோனே (1840 -1926)யின் ‘Impression: Sunrise’ (மனப்பதிவு: சூரியோதயம்) என்ற ஓவியம் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றது.

1878-ல் அவர்கள் மீண்டும் கூட்டாக நடத்திய மூன்றாவது கண்காட்சிக்கான பொதுத் தலைப்பாக அந்த ஓவியத்தின் தலைப்பான ‘இம்ப்ரஷன்’ என்பதையே முன்வைத்தார்கள். அதுவே அவர்கள் இயக்கத்துக்கான பொதுப் பெயராகவும் ஆகியது. அதுவே, அந்த இயக்கம் இம்ப்ரஷனிஸம் எனப் பெயர் பெறவும் காரணமாயிற்று.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

‘இம்ப்ரஷனிஸம்’ என்ற சொல்லாட்சி, அதற்கு முன்பாக ஓவியக் கலையில் வரைமாதிரிகள் (Sketches) பற்றிய உரையாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஓவியர், தன் படைப்பை கேன்வாஸில் உருவாக்குவதற்கு முன்பாக, ஒரு தாளில் வரி வடிவமாக வரைந்துகொள்வதுதான் ‘வரைமாதிரி’ எனப்படுவது. இம்ப்ரஷனிஸ ஓவியங்கள் வரைமாதிரிகளின் குணாம்சங்களை - சுருக்கம், வேகம், அகத்தூண்டல், தன்னிச்சையான தூரிகைத் தீட்டல்களை தன் இயல்புகளாகக் கொண்டிருக்கின்றன. இத்தன்மைகள் ‘இம்ப்ரஷன்: சூரியோதயம்’ ஓவியத்தில் வெளிப்பாடு பெற்றிருப்பதைக் காணலாம். அதே சமயம் அது ஒரு வரைமாதிரி அல்ல; வரைமாதிரியின் குணாம்சங்களைக் கொண்ட ஓவியம். மேலும், ஓர் ஓவியன் ஒரு காட்சியைப் பார்ப்பதற்கும் அதை உணர்வதற்குமான குறுக்குவெட்டுத் தோற்றத்தை அது வசப்படுத்தியிருக்கிறது.

கிளாடு மோனேயின் ‘இம்ப்ரஷன்: சூரியோதயம்’ ஓவியமானது அதிகாலை ஒளியில் வெளிப்படும்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

ஒரு துறைமுகக் காட்சி. ஏனோதானோவென்று, எவ்வித நயங்களுமற்று, தத்ரூபச் சித்தரிப்பு அறவே புறக்கணிக்கப்பட்டு, ஒரு வரைமாதிரியின் அநாயசமான தன்மையோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியம், அன்று மரபான கல்வித்துறைசார் கலை விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டதில் ஆச்சரியப்பட ஏதுவும் இல்லை. எனினும் இந்த ஓவியமும் அதன் தலைப்பும்தான் இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் எழுச்சிக்கு வித்திட்டன.

நகரும் காட்சிப் படிமத்தின் ஒரு கணத்தை, மனம் கிரஹித்து உணர்ந்த விதத்தில் வெளிப்படுத்தும் படைப்பு இது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மோனே தன் மனம் அவதானித்த ஒரு காட்சியை, அதன் ஒரு தருணத்தை, அது ஏற்படுத்திய மனக்கிளர்ச்சியை ஒளியின் ஜாலத்தோடு ஆழ்ந்த மனப்பதிவாக இந்த ஓவியத்தில் பதிவுசெய்துள்ளார்.

இம்ப்ரஷனிஸவாதிகள் ஒருபோதும் கதை சொல்வது இல்லை. மாறாக, சலனத்தின் ஒரு கணத்தை அது விளைவித்த மனஅதிர்வைத் தம் படைப்புகளில் அகப்படுத்தினார்கள். கண்கள் பார்ப்பதிலிருந்தும், மனம் கிரஹிப்பதிலிருந்துமே இவர்களுடைய படைப்புகள் உருவாகின்றன. மூளை அறிவதிலிருந்து அல்ல. அதன் காரணமாக, எந்தவொன்றுமே - ரயில் நிலையப் புகைமேகங்கள், ஒளிப் பிரவாகத்தில் ஒளிரும் தோட்டம், நதியில் செல்லும் படகுக் காட்சி, மரங்கள் அடர்ந்த பாதைகளில் நிறைந்திருக்கும் மனிதர்கள், பனி படர்ந்த நிலம் - ஒரு கலைப்படைப்பின் பொருளாகியது. பெரும்பாலும் இம்ப்ரஷனிஸவாதிகள் தங்களுடைய பணிக்கூடத்திலிருந்து வரைவது இல்லை. மாறாக, வெளிப்புறங்களிலேயே, படைப்புக்கான காட்சி முன்பாகவே தங்களுடைய ஓவியங்களைத் தீட்டினார்கள்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

மோனேயின் ‘இம்ப்ரஷன்: சூரியோதயம்’ ஓவியக் காட்சி இப்படியாக அமைந்திருக்கிறது: பனி மேவிய நீர் மற்றும் வானம், படகுகள் மற்றும் கப்பல்களின் மூட்டமான வரிவடிவம், சிவப்புச் சூரிய உதயமும் தண்ணீரில் அதன் பிரதிபலிப்பும், இந்த ஓவியம் ஒரு சூழலை, தட்பவெப்ப நிலையைக் கொண்டிருக்கிறது. அது நிறைவடையாத ஒரு தன்மையோடும் ஒப்பனைகளற்றும் இருப்பது நம் கற்பனைக்கு இடமளிக்கிறது. அது ஒரு காட்சியை முழுமையாகவோ தத்ரூபமாகவோ சொல்லவில்லை. ஆனால், அதைப் பார்க்கும் ஒரு பார்வையாளன், ஒரு கணம் பிறப்பிக்கும் அழகுக்குள் பிரவேசிக்கிறான். அந்த ஓவியத்தில் ஒளி நிகழ்த்தும் ஜாலத்தின் மாயம் இது.

பாரீஸ் தொழில்மய நகரமாகத் துரித கதியில் வளர்ச்சி பெற்றதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த நகரமயமாதலும் இம்ப்ரஷனிஸவாதிகளின் ஓவியப் பொருள்களாகின. பெரும்பாலான இம்ப்ரஷனிஸ ஓவியர்கள் பாரீஸ் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் காட்சிகளையே ஓவியப் பொருளாகக் கொண்டனர். கிளாடு மோனேயின் மற்றொரு ஓவியமான ‘செயின்ட்-லசாரே ரயில் நிலையம்’ பாரீஸ் நகரின் பிரதான அம்சத்தைக் கைப்பற்றிய ஒன்று. ரயில் போக்குவரத்தின் விரிவாக்கம் பயணத்தை மக்களுக்கு மிகவும் சுலபமாக்கியது. அது, பாரீஸ் நகரத்துக்கு மக்கள் கூட்டத்தைத் திரள்திரளாகக் கொண்டுவந்தது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

செயின்ட் லசாரே ரயில் நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதோடு, ஆரவாரம் மிகுந்த நவீன வணிகப் பகுதியான கிராண்ட்ஸ் பொலிவார்டுக்கு மிக அருகில் இருப்பது, நீராவி எஞ்சின் புகையோடு ரயில் நிலையத்துக்குள் புகும் ரயிலையும், அப்பகுதியின் உயிரோட்டத்தையும் குறுகிய தூரிகைத் தீட்டல்கள் மூலம் வெகு அநாயகமாக வசப்படுத்தியிருக்கிறார். பாரீஸ் நகரின் ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், பின்புலப் பனி மூட்டத்தினூடாக வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சித்திரம். தீவிரத்தன்மையோடு நகரும் வண்ணப் பயன்பாடு, நகர வாழ்க்கையின் சூழலையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, அந்தக் கணத்தின் தட்பவெப்ப நிலை வசமாகியிருக்கிறது.

நவீன யுக ஓவியக் கலையின், காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் புதிய அலையை உருவாக்கிய படைப்பு மேதை, மோனே. அவர் தம் ஓவியங்களை வெளிப்புறங்களிலேயே படைத்தார். அந்த அனுபவங்கள் ஒளி மற்றும் வண்ணங்களின் மீது அவருடைய கவனம் குவிய ஏதுவாகின. வரையும் கணத்திய சூழல் மற்றும் தட்பவெப்பத்தினை ஓவியத்தில் தீட்ட அவை வழி அமைத்தன.

ஒளி மற்றும் வண்ணம் பற்றிய மோனேயின் தீவிரமான பயிற்சியின் அடையாளமாக, ஒரே பொருள் பற்றி, வெவ்வேறு தருணங்களில் அவர் உருவாக்கிய தொடர் வரிசை ஓவியங்களை, நாம் காண முடியும். உதாரணமாக, ‘ரோயூன் கதிட்ரல்’ கட்டடத்தை அவர் 40 பார்வைகளில் தீட்டியிருக்கிறார். அந்தத் கோயிலைக் கிட்டத்தட்ட ஒரே இடத்திலிருந்தபடி, ஒரே விதமான பார்வைக் கோணத்தில், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் அல்லது வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளில் வரைந்திருக்கிறார். இங்கு தரப்பட்டிருக்கும் அந்த ஓவியங்களில் ஒன்று, ஒளிப்பிரவாகத்தில் அந்தக் கட்டடம் மிளிர்வதை வசப்படுத்தியிருக்கிறது. ஒளியின் இயக்கத்தை அதில் நாம் காணலாம்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்

மோனேயின் கலைக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள, பின்னாளில் அவர் தன் மாணவர் ஒருவரிடம் வெளிப்படுத்திய ஒரு கருத்து உதவும்:

“நீ வரைவதற்காக வெளியில் செல்லும்போது, உன் முன்னால் இருப்பவற்றை - மரம், வீடு, நிலம் அல்லது எதுவாக இருந்தாலும் அவற்றை மறப்பதற்கு முயற்சி செய். இங்கு நீல வண்ண சிறு சதுரம், இந்த இடத்தில் இளம் சிவப்பு நீள்சதுரம், இங்கு ஒரு மஞ்சள் கீறல் என அது உனக்கு எப்படிப் பதிந்ததோ அப்படியாக அதை வரை. உன் முன்னிருக்கும் காட்சி உன்னுடைய சொந்த மனப்படிமமாக உருவாகும் வகையில் வண்ணத்தையும் வடிவத்தையும் அமைத்துக்கொள்.”

இம்ப்ரஷனிஸவாதிகளின் ஓவியங்கள் தம் கால வாழ்வு குறித்த தீவிரப் பரிசீலனை சார்ந்தவை அல்ல. அவர்களுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு மனோபாவத்தின் வழிபாடு என அவற்றைக்கொள்ளலாம். அவை அறிவுலகம் சார்ந்தவை அல்ல; புலன்களுக்கானவை.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்கிளாடு மோனேயின் தடத்தில் எட்கர் டெகாஸ், கமிலி பிஸ்ஸாரோ, ஆல்ஃப்ரெட் சிசிலி, ரெனாய்ர் போன்றோர் இம்ப்ரஷனிஸ இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் ஒளி, வண்ணம், நிழல் ஆகிய அம்சங்களில் தங்கள் ஓவியப் பரிசோதனைகளை மேலெடுத்துச் சென்றனர்.

சமகாலத்திய வாழ்வியக்க சலனத்தின் ஒரு குறிப்பிட்ட கணத்தின் மனப் படிமங்களாக அமைந்த இம்ப்ரஷனிஸ ஓவியங்களை பெரும்பாலான விமர்சகர்களும் பெரும்பகுதிப் பார்வையாளர்களும்,
1880-களின் பிற்பாதியில் தீவிர கலைத்தன்மை கொண்டவையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதே சமயம், சில தீவிர கலை விமர்சகர்களும்,  அந்த இயக்கக் குணாம்சங்கள் குறித்து அதிருப்தியுற்று விலகிய படைப்பாளிகளும் வேறு சிந்தனைகளை முன்வைத்தனர். ஒரு சித்திரத்துக்கான கலை மரபின் பல்வேறு முக்கிய அழகியல் அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து சலனத்தின் ஒரு கணத்தைக் கைப்பற்றுவதில் அவர்கள் கொண்ட பிரயாசைகள் வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளாகின. இம்ப்ரஷனிஸக் கலைக் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் மீது அடுத்தகட்டப் படைப்பாளிகள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். தன்னுடைய 40 வயதளவில் நிலக் காட்சிகளின் மனப்பதிவுகளை வரையத் தொடங்கிய பால் காகின், பின்னாளில் தன்னுடைய ஓவிய உலகை உருவாக்க வேறு வடிவங்களையும் சாத்தியங்களையும் கண்டடைய முற்பட்டார். இந்தக் காலகட்டத்தில் இம்ப்ரஷனிஸம் என்பது பொக்கானது, அர்த்தமற்றது என்று அவர் கருதினார்.

ஓவியப் பரப்பில் மிக முக்கிய ஆளுமைகளாக வெளிப்பட்ட பால் செசான், வின்சென்ட் வான்கா, பால் காகின் ஆகிய மூவரும் 1880-களில் கோடு, வடிவம், வண்ணம் ஆகியவற்றின் பிரத்தியேகத் தன்மைகளையும், அழகியல் கூறுகளையும் வெகுநுட்பமாக அணுகினார்கள். இவர்களுடைய தீர்க்கமான அணுகுமுறையே தொடக்கத்தில் பின் - இம்ப்ரஷனிஸம் என அறியப்பட்டது. அதுவே அதன் வளர்ச்சியில் எக்ஸ்பிரஷனிஸம் என்ற அடுத்தகட்ட நகர்வுக்கும் பாய்ச்சலுக்கும் அவர்களை இட்டுச் சென்றது.

பாதை நீளும்...