Published:Updated:

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா
பிரீமியம் ஸ்டோரி
அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

படங்கள்: அ.குரூஸ்தனம்

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

படங்கள்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா
பிரீமியம் ஸ்டோரி
அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா
அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

கீழே விழுந்து முட்டியைத் தரை நக்கி வைக்க, மண்ணைத் தெள்ளி புண்ணை சொஸ்தப்படுத்தியபடி, கீழே சரிந்த மிதிவண்டியை நிமிர்த்தி மனந்தளராது ஊடுகால் விடும் சாகசத்தின் சிறுபிள்ளை களைத்தான் பணிந்து ஏற்றுக்கொள்ளும் திமிர்ந்த மிதிவண்டிகள். மிதிவண்டிகளைக் காமுறும் பால்யத்தில் வீட்டிற்கு மிதி வண்டியுடன் வருபவர்கள் தெய்வங்கள்தான்.

வண்டியை வாசலில் விட்டுவிட்டு உள்ளே தெய்வம் பேசிக்கொண்டு இருக்கையில், மிதிவண்டியை நைஸாகக் கிளப்பிக்கொண்டு போகும் சாகசம் அலாதியானது.

அளவில் பெரிய மிதிவண்டி படும் வதை சொல்லி மாளாது. ஊனமுறாமல் வீடு திரும்பும் வண்டிகள் புண்ணியம் செய்தவை. மிதிவண்டிகளை ஓட்டும் பெரியவர்கள்தான் அவற்றைக் குழந்தைகளின் கைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், ஊடுகால் விட்டு டக்கடிக்கும் சிறுசுகளிடம் சிக்கி மிதிவண்டி சிரமப்படவே செய்யும்.

தமிழ் இலக்கியப் பரப்பில், கிட்டத்தட்ட இதேபோலத்தான் ‘விமர்சன மிதிவண்டி’ பூட்டப்படாமல், அனாதையாக, பொறுப்பற்று, மழையிலும் வெயிலிலும் வெகுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதை ஓட்டிச் செல்லவேண்டிய பெரியவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. விளைவு? அவ்வழியாகப் போகும் வரும் சிறுபிள்ளைகள் எல்லாம் அதைத் தள்ளிக்கொண்டு போய் ஊடுகால் விட்டு தெருத்தெருவாக டக்கடித்துக் கொண்டிருக்கின்றன.

அப்படியான ஒரு சிறுபிள்ளையின் செய்கையாகவே நானும் இங்கு பலரும் ஜல்லியடித்த சாலைகளில் ‘விமர்சன மிதிவண்டியை’ உருட்டியபடி இருக்கிறோம். ஆனாலும், சுவரில் சாத்தி வைத்து விமர்சன மிதிவண்டியைத் துருவேறப் பண்ணுவதைக் காட்டிலும் குரங்குப்பெடல் போட்டு வண்டியை நகர்த்திக்கொண்டிருக்கும் சிறுபிள்ளையின் செய்கை நமது காலத்தின் அறமாகிறது. இந்த எளிய அறத்தின் வெளிச்சத்தில் வைத்தே ரமேஷ் பிரேதனின் கவிதைகள் குறித்து நானும் பேசும்படியாகிறது.

ரமேஷின் கவிதைகள் பற்றி எழுத ‘மனநோயர்  காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ என்ற நூலை மீள்வாசிப்பு செய்தேன். மூன்று கவிதை நூல்களின் பெருந்தொகையாகத் தொகுக்கப்பட்ட இந்தத் தொகுப்பை வாசிக்கையில், நான்கு வழிச்சாலையைக் குறுக்காகக் கடக்கும் சிறுநத்தையின் தீராத்தொலைவு அவஸ்தையை உணரும்படியானது. வாசிப்பு சுகம் தரும் கவிதைகள் அல்ல இவை. பதற்றத்தையும் துயரத்தையும் குற்றஉணர்வையும் பரிதாபத்தையும், பேதலிப்பையும் வாசிப்பவனிடத்தில் சரித்துப்போகும் தொந்தரவு மிகுந்த கவிதைகள் இவை.

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

இந்தத் தொந்தரவுத் தன்மை, இக்கவிதைகளின் உடலில் இருந்து வழியும் பசிய ரத்தத்தின் பிசுபிசுப்பாக இருக்கிறது. அட்டையின் கடிவாயிலிருந்து தடையற்று வெளியேறும் உறையாத ரத்தப்போக்கென ‘தற்கழிவிரக்கம்’ பீறிடும் ரமேஷின் துயரார்ந்த கவிதைகளே மொத்தத் தொகுப்பையும் அடைத்து நிற்கின்றன.

முன்னட்டை, பின்னட்டை வாசகம். ஆசிரியர் குறிப்பு முன் பிரஸ்தாபங்கள், சமர்ப்பணம் எனச் சகல உமிகளையும் ஊதிவிட்டுக் கவிதைத் தானியங்களை மட்டும் தெள்ளிக்  கையிலெடுத்துக்கொள்ளும் வாசிப்பு முறையே எனக்கு இயல்பானது.

ஆனாலும்கூட இத்தொகுப்பை வாசிக்கும் போது ரமேஷின் குரலில் ஒலிக்கும் ரமேஷின் துயரத்திற்குக் காது கொடுப்பதான உணர்வு ஏன் ஏற்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதை ஒருவகையான வாசிப்புக் கோளாறு என்று யாரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வேன்தான்.

இந்த இடத்தில் ‘கசாப்புக் கவிதை’ என்ற தலைப்பிலான கவிதையில் ரமேஷின் எச்சரிக்கை வாசகங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

‘நான் என்று எழுதினால்
ரமேஷ் ஆகிவிடுகிறேன்
நீ என்று எழுதினால்
நீயாகி விடுகிறாய்
விமர்சகரின் வாசிப்பில்
எத்தனை வறிய சோகம்’


இந்தப் புரிதலோடு கவிதைகளுக்குள் பயணப்பட்டாலும் நூலின் பல கவிதைகள் “தற்புலம்பலின்” நிறம் கொண்டவையாகவே இருக்கின்றன.

‘திருப்பிப் போட்டு திருப்பிப்போட்டு
செருப்படி கொடுக்கிறார்கள்’


‘வாழ்வது அவமானம்
சாவது கேவலம்
உன்னை என்ன செய்யலாம்

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா


பாரி’


‘இரைப்பையில் கற்பூரம் எரிகிறது’

என்பன போன்ற தற்புலம்பல் வரிகளை உருவி எடுத்துவிட்டால், நூல் மெலிந்து விடும் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.

‘ஒரு கவிஞன் தனது கவிதைகளில் தனது துயரத்தை எழுதிச் செல்லக் கூடாதா?’ என்று யாரேனும் பேச்சைப் பெருக்கினால் நல்லதென்றே நான் கருதுகிறேன்.
‘எனது பூனைக்கு உணவு வேண்டும்’
‘பசிக்கிறது என்ன செய்ய
யாரைத் தொலைபேசியில் அழைக்கலாம்’
‘நாற்சாலை நடுவே
நிற்கிறேன்
பசிக்கிறது
என்ன செய்யலாம்’


இப்படி கவிதைகள் நெடுகிலும் தான் பசித்திருக்கும் துயர் வார்த்தைப்படுகிறது.

‘தவிரவும்,
முதலையை
கட்டிப்புரண்டு உருண்டு
புணர்ந்து
சிராய்ப்புகளோடு குருதி கசிய
கனவில் கன்னி கழிந்தேன்’


என்பன போன்ற காமத்தின் அலைக்கழிப்பும் கவிதைகளுக்குள் வைக்கப்படுகிறது. நடப்பில், ஒருவனது, துயரம் இன்னொருவனது துயரத்தால் மோசமாகக் கேலி செய்யப்பட்டுவிடலாம். ஒரு துயரம் இன்னொரு துயரத்தைப் படு குள்ளமாக மாற்றிவிடலாம்.

துயர ஒப்பீட்டு பீர்பாலியத்தின்படி, வாசிப்பவனது துயரம் சற்று உயரமானது எனில் இந்தக் கவிதைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.இந்தத் தர்க்கங்களைத் தாண்டி...

‘மூச்சு முட்டக் குடித்துமட்டையாகும் நண்பர்களைக் காணபொறாமையாக இருக்கிறது’

என்ற கவிதை மற்றும் மகளுடன் உரையாடும்படியான கவிதைகள் உள்ளிட்ட சில கவிதைகள் ‘தற்புலம்பல்’ சாயல் இருப்பினும், வாசிப்பில் நெகிழச் செய்துவிடுகின்றன. தற்புலம்பலின் கூறுகள்கொண்ட கவிதைகளைவிடவும் பிற கவிதைகள் என்னளவில் முக்கியமானவை. தமிழ்ச் சூழலின் தார்ச்சாலையில், அரைவேக்காடுகளின்  லாரிச்  சக்கரத்தின் கீழ் ‘பின்நவீனம்’ என்கிற பிராணி சிக்கி குடல் பிதுங்கிக்கிடக்கும் சித்திரத்தை

‘பல்கலைக்கழகத்தில் ஒரு
பன்றி

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா


பின் நவீனத்துவம் பற்றிப் பேசுகிறது
அதன் பின்பகுதிதான் பெரியது
மண்டைக்குள் வெற்றிடம்’


‘பின் நவீனத்துவம்
பொறுக்கிகளின் புகலிடம்
இவர்கள் வாழைப்பூ அல்ல
வெங்காயம்’


போன்ற வரிகளினூடாக வரைய முற்படுகிறார். ஓர் ஆணின் குரல் என்பது ஆணின் குரல்தான். பெண் குரலில் அல்லது பெண் குரலின் சாயலில் ஓர் ஆண் பேசுவதில் பாசாங்கின் கரகரப்பு இருக்கவே செய்கிறது.

‘தெய்வங்களில்
பெண் தெய்வங்களுக்கு மட்டும்
நான் சாராயம்
வாங்கி வருகிறேன்’


‘யோனியின் வாசனை
இல்லாத வார்த்தையை
நான் எழுத மாட்டேன்’


என்று எழுதிச் செல்லும் ரமேஷின் வரிகளில் பாசாங்கின் துர்நிழல் படர்ந்திருக்கவில்லை. ஏனெனில் ரமேஷால் இப்படிச் சொல்ல முடிகிறது

‘அருவருப்பாக இருக்கிறது
ஆணாக வாழ’


 ‘சங்க காலத்துப் பெண் வேண்டும் என்றேன்’ என, தனது காலத்தைப் பதினென் மேல் கணக்கில் நிறுத்திக்கொண்டு, பாரதியையும் பாரதிதாசனையும் முயங்குமொரு பாண்டிச்சேரி மனஅமைப்புடன் ஈழக் கொடுநினைவுகளின் அகநெருக்கடிகளினூடாக துல்லியமற்ற தமிழ்த் தேசிய மனச்சித்திரம் கொண்டலைகிறார் ரமேஷ்.

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா

ஈழம் தொடர்பான கவிதைகளை இப்போது யார் எழுதினாலும் அதில் ஒரு போலி விசும்பலின் அருவருப்பை உணரமுடிகிறது. இனப்படுகொலையின் துர்சாட்சியாளர்கள் நாம். அது பற்றி எழுதாதிருப்பதே அறம்.

‘தெரியவில்லை மகனே எனக்கு
உன் மார்பில் துளைத்த மூன்று
தோட்டாக்களின் புண்களைப் புரிந்துகொள்ள’


‘ஈழத்தை இழந்த பிறகு
எப்படிக் காதல் கவிதை எழுதுவது’


இப்படியான ஈழம் தொடர்பான வரிகள், குற்றஉணர்வும் ஆற்றாமையும் கொண்டவையாக இருப்பது சற்று ஆறுதலானது.

‘உணவு மேசை மீது
அள்ளி வைக்கப்பட்ட பூனை’


என்ற வரிகளில் ‘அள்ளிவைக்கப்பட்ட பூனை’ என்ற இடத்தில் வெகுநேரம் நிற்கும்படியாகிறது. இதேபோல் கவித்துவமிக்க பல்வேறு வரிகளை ரமேஷிடம் தரிசிக்க முடிகிறது.

‘படுகளம்’ என்கிற கவிதையைத் தனித்துப் பேச வேண்டும்.

‘ராஜ ராஜ சோழனின் வாள்
பத்து நூற்றாண்டுகளாக
வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு
இன்று என் தந்தையிடமிருந்து
என் கைக்கு வந்திருக்கிறது

அங்கிருந்து வரும் குரலை அலட்சியம் செய்யாதீர் - லிபி ஆரண்யா


என் மகனின் தலையை சீவி
வாளோடு சேர்த்து
நடுவீட்டில் குழி தோண்டி
புதைத்துவிட்டேன்’


அந்த வாள் என்பது சாதியாக இருக்கலாம். மதமாக இருக்கலாம். அன்றி, பரம்பரைப் பெருமிதமாக, சொத்துடைமையாகக்கூட இருக்கலாம். எதுவாயினும், நூற்றாண்டுகளைக் கடந்த நாள்பட்ட வியாதிகள் எதையும் முடித்துவைக்கிற கவிதை அது.

‘எனது கழிப்பறையின்
கோப்பை
புத்தரின் முகம் போல்
இருக்கிறது’


என்று புத்தனை ஓரிடத்தில் நிறுத்தி வைக்கும் ரமேஷ் தனது தொடர்ந்த வாசிப்பு மற்றும் உரையாடல் வழியாகவே வள்ளலாரை வந்தடைந்திருக்க வேண்டும்.

‘ராமலிங்கரின் வெள்ளை ஆடையில்
பாலச்சந்திரனின் குருதி’


இப்படி எழுதும்படியாக ரமேஷின் அகமும் புறமும் தொந்தரவான இடமொன்றில் சுழன்றபடியிருக்கிறது. ஒருவகையில் யோசித்துப்பார்த்தால், இந்த உலகம் ஒரு பெரிய ‘ஆதித்யா’ சேனல்தான். கைவிட இயலாத எளிய அறங்களைச் சுமந்துகொண்டிருக்கும் ஒருவன்தான் அதை ‘அழுவாச்சி’ சேனலாக மாற்றித் தொலைக்கிறான். ரமேஷின் எழுத்துகள் அப்படியானவை.

பொதுவாக, தீவிரமான எழுத்துக்கு வாழ்க்கைப்படுதல் என்பது சொந்த சவுக்கில் தன்னையே அடித்துக்கொள்வதுதான். அதிலும் கவிதைக்கு வாழ்க்கைப்படுதல் என்பது சவுக்கின் மீது கொஞ்சம் ‘மாஞ்சா’ தடவிக்கொள்வதுதான். ரமேஷ் கொஞ்சம் ஆங்காரமாகவே தன்மீது சவுக்கைச் சொடுக்கிக்கொள்பவர்தான். ஒருவகையில் அதுவே அவரது கவிதைகளை உயிர்ப்பாகவும் வைத்திருக்கிறது.

தனது எலும்புகளில் அரசியலையும், தனது நாளங்களில் கலையையும் வரித்துக் கொண்ட ஒருவன் வாதைகளை வருந்தி அழைப்பவனாகவே இருக்கவியலும். ஒரு கவிஞனின் இருப்பிடம் வாதைகளின் கூடாரமென்றாவது இப்படியாகத்தான்.

எளிய அறங்கள் தீயும் வாசனைகொண்ட நமது துர்காலமோ பதற்றமூட்டும் ஒரு கவிஞனை மனநோயர் காப்பகத்திற்கே ஆற்றுப்படுத்துகிறது. வேறு எந்த இடத்தைவிடவும் இவ்விடம் அவனுக்கும் சௌகர்யமாகவே படுகிறது. மனநோயர் காப்பகத்திலிருந்து வரும் குரலுக்குக் காதுகொடுக்காத உலகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது. ரமேஷின் குரல் அப்படியானதுதான்.