Published:Updated:

அடுத்து என்ன? - சு.வேணுகோபால்

அடுத்து என்ன? - சு.வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சு.வேணுகோபால்

மேதமையின் உலகை எழுதுகிறேன்படம் : தி.விஜய்

அடுத்து என்ன? - சு.வேணுகோபால்

மேதமையின் உலகை எழுதுகிறேன்படம் : தி.விஜய்

Published:Updated:
அடுத்து என்ன? - சு.வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - சு.வேணுகோபால்
அடுத்து என்ன? - சு.வேணுகோபால்

ரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்!

மலையடிவாரத்தில் இருக்கும் எங்கள் தோட்டத்திற்குக் கூட்டமாக யானைகள் வரும். இரைதேடி வந்த யானைகள் வெங்காயம் நட்ட காட்டிற்குள் இறங்கி ஈரத்தில் ஒன்றின் வாலை ஒன்று பற்றிப் போகும். கொட்டத்தில் உப்பு மூட்டையோ, அரிசி மூட்டையோ வைத்திருந்தால், ஒரே போடாக துதிக்கையில் போட்டு சாக்கைப் பிளந்து அள்ளித் தின்றுவிட்டுப் போகும். தொட்டி நீர் எட்டாமல் தவதாயப்படும் குட்டிகளுக்கு, தாயோ, அக்காவோ நீரூட்டி அழைத்துச் செல்லும். ‘குறை’ நிலத்தில் ஈரம் இருந்தால், அருகம்புல் சீப்பையோ, இனிக்கம்புல் சீப்பையோ பறித்து எடுத்து, புல்லின் வேரில் ஒட்டிய மண்ணை முன்னங்காலில் தட்டி உதிர்த்து உண்ணுவதைத் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். உடம்பெல்லாம் செம்மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு வழிதப்பி வந்த இரண்டு பெண்யானைகளால் நான் விரட்டப்பட்டதும்கூட உண்டு.

பெரும்பாலும் மலையில் நீர் இல்லாத காலத்தில்தான் அவை எங்கள் தோட்டங்களைத் தேடிவரும். பெரியவர்கள் யானை வராமல் இருக்க மாலை நேரத்தில் வழித்தடத்தை நோக்கி தீபம் ஏற்றிவைத்து, “கஜேந்திரா... நாலு வாழைத்தாரு இருக்கு... நல்லதுக்குப் பொல்லதுக்கு இருக்கு... கை வெச்சுராத” என்று வணங்குவர். யானைகள் தோட்டங்களுக்குள் இறங்குவதும் விவசாயிகள் வெடிபோட்டு, தீப்பந்தம் ஏற்றி விரட்டுவதும், சில சமயம் கும்கி கொண்டு வந்து விரட்டுவதும் உண்டு. ஆனால் தரையோடு தரையாக குடிசை வீடுகளில் வாழும் மலைசாதி மலசர்களை இந்த யானைக்கூட்டம் ஒன்றுமே செய்ததில்லை.

காடும் காடுசார்ந்த யானைகளின் நிலமெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. தண்டவாளத்தைக் கடந்த கர்ப்பிணி யானையை எக்ஸ்பிரஸ் ரயில் அடித்து, துள்ளத் துடிக்க சாகடித்துச் சென்றது. நிலவு நாளில் மலையின் ‘ராக்கோடு’ வழியாக இறங்கி, துடுக்குத்தனமாக வந்த இளம்வயதுக் குட்டி யானை, மின்வேலியில் கால்வைத்துச் செத்தது. இரவெல்லாம் யானைக் கூட்டம் அதனை மீட்டுக்கொண்டு செல்ல அல்லாடியது. தீவனம் இல்லாமல் இருட்டுப் பள்ள ஓடையில் இறந்துகிடந்த தாயைத் தூக்கி நிறுத்த, குட்டி படாதபாடுபட்டது. பிடித்துச் சென்ற இளங்கொம்பன் ரோசத்தால் உணவு உண்ணாமலே எங்கள் முன் மாண்டுபோனது என எவ்வளவோ காட்சிகள்...

இது எனக்குத் தெரிந்த உலகம். நான் வாழும் உலகம். மானிட சமுதாயத்தைவிட ஒரு யானைக்கூட்டம் தங்களுக்குள் எவ்வளவு மகத்தான உறவைப் பேணி வாழ்கிறது என்பதைச் சொல்கிறது நாவல். 500 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு விட்டாலும் 20 நாட்களில் தன் தாய்வழி உறவுக் கூட்டத்தை வந்தடைந்து துள்ளிக் குதித்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிற மேதமையின் உலகை எழுதுகிறேன்.

இந்த யானைகளின் உலகமும் அதன் வருகையில் அல்லாடுகிற மலையடிவார விவசாயிகளின் உலகமும் பிரிக்க முடியாத ஒருவித முரணில் தத்தளிப்பதைப் பற்றி எழுதிச் செல்கிறேன். வெகு அபூர்வமான சிலர் தங்கள் லட்சியக் கனவுகளால் சின்னாபின்னம் ஆகிப்போகிற கையறு நிலைகளை இந்த நாவலில் சொல்கிறேன். நாவலுக்கு இன்னும் பேர் வைக்கவில்லை. ‘ராக்கோடு’, ‘குன்றேறி வரும் வேழம்’ என்றோ ‘மாமலை’ என்றோ பெயர் வைக்கலாம். வேறு துல்லியமான பெயர்கூட வைக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism