Published:Updated:

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு
பிரீமியம் ஸ்டோரி
கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

சந்திப்பு: வெய்யில், இளங்கோ கிருஷ்ணன் - படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

சந்திப்பு: வெய்யில், இளங்கோ கிருஷ்ணன் - படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு
பிரீமியம் ஸ்டோரி
கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு
கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

வீன ஓவிய உலகில் அன்பினாலும் மரியாதையாலும் ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறவர், ஓவியர் சந்ரு. ஓவியம், சிற்பம், கவிதை, சிறுகதை, சிற்றிதழ்களுடனான இயக்கம் எனத் தனது கலை, இலக்கிய எல்லையை மனம்போல விரித்துக்கொண்டவர். சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். தொடர்ந்து, நவீன ஓவியவெளிக்குத் தனது பங்களிப்பைச் செய்துவருபவர். ‘ஒரு கலைஞன், தனது கலை குறித்து மக்களிடம் உரையாட வேண்டும்’ என்று விரும்பும் சந்ருவை, சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டில் சந்தித்தோம்...

பேரக் குழந்தைகளைப் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டே நுழைந்தவர், வாங்கி வந்த இனிப்புப் பலகாரங்களை அவர்களிடம் கொடுத்தார். சட்டையைக் கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு, வியர்வை பளபளக்க வந்து அமர்ந்தார். 

“ஓவியத்துக்கும் உங்களுக்குமான முதல் தொடர்பு எப்படி ஏற்பட்டது? எப்போது ஓவியர் ஆக வேண்டும் என முடிவுசெய்தீர்கள்?”

“பிறவிக் கலைஞன் என்கிற கருத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. எல்லா சிறுவர்களையும் போலவே நானும் வரைந்தேன். சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். என் தாய்மாமா கே.பி.சிவம் ஒரு ஆர்ட்டிஸ்ட். நல்ல ஆளுமை. ஓவியர் என்ற பிம்பத்தின் மீது எனக்கு விருப்பம் உருவாக, அவர்தான் முதல் காரணமாக இருந்தார்.

ஒருநாள் பள்ளி இடைவேளையில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு கார் வந்து நின்றது. கார் கதவை ஒயிலாகத் திறந்துவைத்துக்கொண்டு, அதில் கால்வைத்தபடி ஒருவர் காகிதத்தில் ஏதோ வரையத் தொடங்கினார். அவரைச் சுற்றிலும் பலர் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் படத்தைக் காட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என்னை ரொம்பவே பாதித்தது. இதே மாதிரி ஓவியனாகி, கார் வாங்கி அதைத் திறந்துவைத்துக்கொண்டு நாமும் ஓவியம் வரைய வேண்டும் என அப்போது முடிவு செய்துகொண்டேன். விவரம் தெரிந்த பிறகுதான் அவர் ஓவியர் அல்ல, ஆர்க்கிடெக்ட் இன்ஜினீயர் என்று அறிந்தேன். முடிவுசெய்தது எல்லாம் சரிதான். ஆனால், இன்று வரை கார் வாங்க

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

முடியவில்லை (வாய்விட்டுச் சிரிக்கிறார்).”

“ஓவியக் கல்லூரியில் எப்படிச் சேர்ந்தீர்கள்?”

“ஒருமுறை வேலை முடிந்து எனது மாமாவும் அவரது சகாக்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘லைஃப்,’ ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ போன்ற பத்திரிகைகளின் மையத்தில் வெளியாகும் நவீன ஓவியங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘நாமும் மாஞ்சு மாஞ்சு காலண்டருக்குப் படம் போடுறோம். ஆனால், நூறு ரூபாகூட சம்பாதிக்க முடியலை. இந்த ஓவியங்கள் எல்லாம் லட்சக்கணக்குல விக்குது. வருங்காலத்துல நம்ம காலண்டர்கள்லேயேகூட இது எல்லாம் வந்தாலும் வரும். நம்ம பையன் ஒருத்தனை இந்த மாதிரி ஓவியங்களைப் பற்றி படிக்க அனுப்பணும்’ என்று சொன்னார். ‘யார் பேச்சையும் கேட்காத ஒரு பய வேணுமே’ என யோசித்தவர், ‘இவந்தான் சரியான ஆளு’ என என்னைக் கைகாட்டினார். ‘நானும் ரௌடிதான்’ என வண்டி ஏறிவிட்டேன். ஓவியக் கல்லூரியில் படிக்கும் விருப்பத்தில் அல்ல, சென்னை நகரத்துக்கு வரும் ஆவலிலேயே இங்கு வந்தேன்.” 

“கல்லூரி அனுபவம் எப்படியிருந்தது?”

“கலை என்றால் என்ன என்பதை எனக்கு இந்த அகாடமிக் இன்ஸ்டிட்டியூஷன் கற்றுத்தரவில்லை. ஆனால், எது கலை இல்லை என்பதை அறிந்துகொள்ள இந்தக் கூடாரங்கள் எனக்கு உதவின. கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் மிகக் குழப்பமான மனநிலைக்கு ஆளானேன். வாழ்வு என்னோடு அப்படிச் சூதாட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது. வாழ்வதா, சாவதா என்கிற நிலைக்குச் சென்றேன். இறுதியில், வாழ்வது என்ற முடிவுக்கு வந்தேன்.

கலை பற்றிய தேடல் மிகுந்தது. ‘எது கலை’ என்கிற கேள்வி தீவிரமாக எழுந்தது. ஊரில் இருந்தவரை என்னை ரவிவர்மாவாக நினைத்துக்கொண்டிருந்தேன். கல்லூரியோ, ‘பிக்காஸோதான் உலக ஓவியன்’ என்றது. நான் இரண்டில் இருந்தும் விலகினேன். அப்படியானால் நான் யார்? எனக்கு ‘நான்’ என்பதே ரகசியமாக இருந்தது. ஆமாம், I am the Secret. இதுவரை, யார் கையும்படாத சீக்ரெட். அங்கு இருந்து எனக்கான ஓவிய உலகைத் தேடத் தொடங்கினேன்.”

“அப்படியானால், கல்லூரிக் காலத்தில் எந்த ஆசிரியரும் உங்களுக்குக் கலையைக் கற்றுத் தரவில்லையா, உங்களைக் கவரவில்லையா?”


“இருந்தார்கள். ஏ.பி.சந்தானராஜ் சார் இருந்தார். அவர் ஒரு ரியல் மாஸ்டர். அவரிடம் ஒரு கலைஞனுக்கான அடிப்படைத் திறன் இருந்தது. அதாவது, பார்த்ததைப் பார்த்ததுபோலவே நுட்பமாக வரைவதும், அதே சமயம் அதை இல்லாமல் அழித்து, ஆக்குவதும் அவரால் முடியும். அதற்கு எல்லாம் ஓர் ஆளுமை வேண்டும். ஒரு வீட்டைக் கட்டி அழிப்பதை விளையாட்டாகச் செய்வது குழந்தைகளுக்கும் நல்ல கலைஞனுக்கும் மட்டுமே கைகூடும். அவர் அசல் கலைஞனாக இருந்தார்.

அப்புறம், முனுசாமி சார் பற்றிச் சொல்ல வேண்டும். உலகமயப் போக்கு (Globalization) தொடங்கிய காலம் அது. உலகம் முழுக்க மூன்றாம் உலக நாடுகளின் கலாசாரத்தின் மீது மேற்கின் வலுவான ஆதிக்கம் தொடங்கியிருந்தது. இதில் இருந்து நாம் எப்படி மீள்வது? கலை வழியாக நாம் அதன் மீது எப்படித் தாக்குதல் தொடுப்பது? நமக்கான புதிய பாதைகளை எப்படிக் கண்டறிவது எனப் பல முக்கியமான திறப்புகளை, உரையாடல்கள் வழியாக எனக்குள் உண்டாக்கியவர் அவர்.

எல்லோரையும் தாண்டி, என் தோள்மேல் கைபோட்டு வளர்த்தவர் என்று மகிழ்ச்சியோடும் உரிமையோடும் நான் சொல்ல விரும்புவது, கன்னியப்பன் சார். கலைக்கான எல்லா மூலக்கூறுகளும் நம்மைச் சுற்றிலும், நமது வாழ்விலும்தான் இருக்கின்றன என்று உணர்த்தியவர். அவரது மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை உண்டு.”

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

“கல்லூரி முடித்து, ரவிவர்மா, பிக்காஸோ போன்ற பிரமிப்புகளில் இருந்து விலகி, கலை குறித்த உங்களது சுய பரிசீலனைக்குப் பிறகு உங்களைப் பாதித்த ஓவியர்கள் யார்?”

“ஓவியர்கள் குறித்துச் சொல்வதைவிட, பாதித்த ஓவியங்களை அல்லது அது எனக்குள் எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லலாம். மார்ஷெல் டுஷம்ப் மோனலிசாவுக்கு மீசை போட்டது, ‘நீரூற்று’ என்று பெயரிட்டு ஒரு யூரினல் (Urinal)-ஐ கண்காட்சியில் கலைப்பொருளாகக் காட்சிப்படுத்தியது போன்ற விஷயங்கள் என்னைப் பாதித்தன. அன்றைய காலகட்டத்தின் அழகுணர்ச்சி சார்ந்த மதிப்பீடுகளின் மீது டுஷம்ப் கேள்வியை எழுப்புகிறார். பிறகு, பல கேள்விகள் கலையின் மீது எழுகின்றன. ஒரு வெற்றுச் சுவரில், வெறுமையான ஒரு கேன்வாஸில் பார்வையாளன் பார்ப்பதற்கு எதுவுமே இல்லையா? அப்போது, அவனுக்குள் உருவாகும் உணர்வுகள் என்னென்ன? அது எல்லாம் முக்கியமானவை இல்லையா? என்று கேள்விகள் நீள்கின்றன.

நான் ஓவியக் கல்லூரியில் வேலைசெய்தபோது, பிரின்ஸிபால் அறைக்கு அருகில் ஒரு பன்னீர்ப்பூ மரம் நின்றிருந்தது. ஒருநாள் அது விழுந்துவிட்டது. விழுந்த ஏழெட்டு நாட்களில், அங்கு நிறைய செடிகள் முளைத்திருந்தன. பன்னீர்ப்பூ மரத்தின் விதையைப் பார்த்ததே இல்லையே. இவை எப்படி இங்கு முளைத்தன என்று யோசித்துக்கொண்டிருந்தேன். விழுந்த மரத்தின் பகுதியை ஒரு மாணவன் எட்டி உதைத்துவிட்டுப் போனான். அதில் ஒரு துண்டு, பாதையில் வந்து விழுந்தது. நான் அதை எடுத்துப் பார்த்தேன். அதன் சல்லி வேர்களில் இருந்து செடிகள் முளைத்து எழுந்திருந்தன. ‘அடடா... தெய்வமே!’ என்று மகிழ்ந்தேன்; பரவசமானேன். அத்தனை மாணவர்களையும் அழைத்து,  “வாழ்வதுதான் சிறந்த கலை. வாங்க மரம் நடுவோம்... உயிர் உள்ள கலையை அனுபவிப்போம்” என்று உற்சாகமாகச் சொன்னேன். பின் மரம் நடுவதையே ஒரு கலைக் கண்காட்சியாக நடத்தினோம். பிறகுதான் தெரிந்தது. மார்ஷெல் டுஷம்ப்பும் இதே மாதிரி வேலைகளைச் செய்திருக்கிறார் என்று. மனதுக்கு எவ்வளவு பிடித்தாலும் ஒரு மனிதனின் கலைப் படைப்பை நாம் ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி விமர்சித்துவிட முடியும். ஆனால், பாறையைப் பிளந்துகொண்டு முளைக்கும் ஒரு செடியை நீங்கள் எந்த விமர்சனமும் இன்றிப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.”

“விமர்சனங்களுக்கு வெளியே, சமூகத்தில் ஒரு கலைஞனுக்கான இடம், தேவை என்னவாக இருக்கிறது?”

  “தகவல் பரிமாற்றம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. ஒரு மலர்  தன் வாசனையாலும், ஒரு நாய் தனது வாலாட்டலாலும் நம்மிடம் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. ஆனால், தகவல் பதிவு என்பதை உலகத்து உயிர்களில் மனிதன் மட்டும்தான் செய்கிறான். ஒரு நாய் மற்றொரு நாயை ஆபத்து என்று கருதினால், அதை விரட்டியடித்துவிட்டு அதன் இடத்தில் படுத்துக்கொள்ளும். அதன் வேலை அவ்வளவுதான். ஆனால், மனிதன் தான் விரட்டியடித்த விஷயத்தைப் பதிவுசெய்கிறான். ஆதிகாலத்தில் குகைகளில் பாறைகளில் கீறலாக, ஓவியமாகத் தீட்டினான். பிறகு, மொழியில் சொற்களாக, உளிகொண்டு சிலையாக, இசையாக எனத் தான் அனுபவித்து, உணர்ந்த விஷயத்தைக் கலையாகப் பதிவுசெய்கிறான். ஏன் பதிவுசெய்கிறான்? தான் உணர்ந்த விஷயத்தைப் பிறிதொரு மனிதனுக்கும் கடத்த வேண்டும், அவனுக்கும் அது அனுபவமாக மாற வேண்டும் என்கிற அன்பில் இருந்து பொறுப்புஉணர்வில் இருந்து இது பிறக்கிறது.

மனிதர்களில் எல்லோரும் கலையாகப் பதிவுசெய்கிறார்களா என்றால், இல்லை. குறிப்பிட்ட ஒருவன்தான் தன் கையில் எழுதுகோலையோ, தூரிகையையோ, யாழையோ தூக்குகிறான். உலகை, வாழ்வைக் குறித்த விசாரணையை சமூகத்தின் பொருட்டுக் கலைகளின் வழியே செய்கிறான். சமூகம் அவனை ‘கலைஞன்’ என்று அழைக்கிறது. அதே சமயம் எழுதுகிற, வரைகிற எல்லோரும் கலைஞனா என்றால், எனக்குக் கிறிஸ்து சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ‘தனக்கு அருகில் இருப்பவனை நேசிக்காமல், அரூபமாய் இருக்கும் பிதாவை நேசிப்பதாகச் சொல்கிறவன் பொய்யன்.’ பிதா, என்கிற இடத்தில் கலை என்று வைத்தும் பொருள்கொள்ளலாம்.”

“தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் ‘கிளாஸிக்’ என்று சொல்வதுபோல, ஓவியத்தில் தமிழுக்கு நெருக்கமான ‘கிளாஸிக்’ அடையாளம் என்று எதைச் சொல்வீர்கள்? தமிழுக்கான மரபார்ந்த பாணி என்று ஏதேனும் உள்ளதா?”

“வரலாற்றாசிரியர்கள் நமக்குச் சங்க காலம் என்று தந்திருக்கும் காலத்தின்படி பார்த்தால், அந்தக் காலகட்டத்தின் ஓவியம் தொடர்பான தமிழ்க் கலை அழகியலுக்கான Visual Reference இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓவியம் குறித்த தகவல்கள் உண்டே தவிர, ஓவியங்கள் நம்மிடம் இல்லை. ‘ஓவியம் அந்தச் சுவரில் இருந்தது, இந்தக் கூடத்தில் இருந்தது’ என்றும் ‘அதில் என்ன வரையப்பட்டிருந்தது, என்றும் பாடல்களில் சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, அது எப்படி வரையப்பட்டது என்று சொல்லப் படவில்லை. பல்லவர் காலகட்டத்துக்குப் பிறகுதான் நமக்கு ஓவியம் சார்ந்த சான்றுகள் கிடைக்கின்றன.”

“அப்படியானால், நம் மரபான ஓவியங்களைக் கண்டறிவது எப்படி?”

“சந்ரு இந்த இலையைப் பார்த்தால், இப்படித்தான் வரைவார் என்று உங்களால் ஓரளவு யூகிக்க முடியும் அல்லவா? அப்படித்தான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் இயற்கைச் சூழல், சமூகநிலை, அதில் தனிநபரின் வாழ்க்கை, அதில் இருந்து உருவாகும் உளவியல், அது வெளிப்படுத்தும் உணர்வு, கற்பனை, அதைத் தெளிவாக வெளிப்படுத்தும் கலையில் அவர் எவ்வளவு பயிற்சி உள்ளவர் என நாம் நூல்பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு மரத்தைச் சகோதரியாகப் பாவிக்கும் சங்கக் கவிதைப் பெண்ணின் மனநிலையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? இயற்கையையும் மனிதனையும் பிரித்துப் பார்க்க இயலாத ஒரு தொனி விளங்குகிறது அல்லவா? சங்க இலக்கியக் காலகட்டத்துக்கு நெருக்கமான காலத்தில் உருவான அஜந்தா ஓவியங்களில் நமது சங்கக் கவிதையின் மனநிலைகளை வாசிக்க முடியும். ஒருவகையில், அந்த ஓவியங்கள் நமக்கு நெருக்கமாக இருக்கின்றன.”

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

“உங்களால் அந்த ஓவியங்களைக் கற்பனையில் பார்க்க முடிகிறதா? தீட்ட முடியுமா?”

“சங்க கால ஓவியத்தின் சாயல் என்னவாக இருந்திருக்கும் என்பதுதான்  செம்மொழித் துறைக்காக நான் செய்துகொண்டிருக்கும் ஆய்வே. இந்த ஆய்வுக்குள் நான் போவதற்கு முன் என்னிடம் கேட்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான உருவத்தில் அஜந்தா, சித்தன்ன வாசல் ஓவியங்களைப் போன்ற சாயலில் ஒன்றை நான் வரைந்து தந்திருப்பேன். ஆனால், இப்போது நான் அதற்கு முந்தைய வடிவத்தை நோக்கிச் செல்ல விரும்புகிறேன். அதை நெருங்குவதற்கான வழித்தடத்தை உருவாக்கப் பிரயாசைப்படுகிறேன்.”

“மேற்கத்தியக் கலை உலகில் கட்டுடைப்பாகவும் மீறலாகவும் செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிகள், மிக இயல்பாக, எந்த ஆரவாரமும் இன்றி நம் மரபில் செய்யப்பட்டுள்ளன  என நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது உண்மைதானா?”


“ஆமாம். அப்படிச் சொல்வதில் ஓர் அரசியல் இருக்கிறது. அதே சமயம் உண்மையும்தான். சங்கரன்கோவிலில் பூலித்தேவர் மண்டபம் இருக்கிறது அல்லவா? அங்கே மரச்சிற்பம் ஒன்று இருக்கிறது. அது ஒரு பெண் சிற்பம். அந்தப் பெண்ணுக்கு அந்தச் சிற்பி முறுக்குமீசை கொடுத்திருக்கிறான். டுஷம்ப், மோனலிசாவுக்கு மீசை போட்ட சங்கதியே அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், வெகு இயல்பாக அதை அவன் செய்திருக்கிறான். அதற்கான ஒரு கலைமரபு நம்மிடம் இருந்ததாலேயே, இது சாத்தியமாகி இருக்கிறது.”

“கோயில் என்கிற அமைப்புக்கு வெளியே ஓவியம் என்கிற கலை வேறு வகையில் மக்களால்

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

பேணப்பட்டிருக்கிறதா?”

“எல்லா கலைகளும் எல்லா காலத்திலும் சாமான்யர்களால் பயிலப்பட்டு வருவதுதான். அவர்களுடைய உழைப்பிடத்தில், வாழிடத்தில் அவை நிகழும். உடனே, நீங்கள் செவ்வியல், நாட்டாரியல் என்கிற வார்த்தைகளைக் கொண்டுவருவீர்கள். ஒரு குடியானவன் தன் மகளுக்குச் செய்து கொடுக்கும் மரப்பாச்சி பொம்மையில் கலை இல்லையா? குழந்தைகள் செய்துகொள்ளும் காகிதக் கப்பல், களிமண் பொம்மைகளில் கலை இல்லையா? பெண்கள் அவ்வளவு நுட்பமாக முடையும் கூடைகளில் கலை இல்லையா? நீங்கள் கோயிலில் இருப்பவைதான் கலை என்று நம்பிப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள்.”

“ஓவியத்தில் இஸங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?”

“கலையைப் பொறுத்தவரை யாருக்குச் சொல்கிறோம், ஏன் சொல்கிறோம், என்ன சொல்கிறோம் என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். மற்றபடி, பொருளுக்கான வடிவத்தை அதுவே தேர்ந்துகொள்ளும். ஒரு விபத்தை, மரணத்தைப் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அதை என் மனைவியிடம் ஒரு மாதிரியும், என் மகனிடம் ஒரு மாதிரியும், பக்கத்து வீட்டுக்காரரிடம் வேறு மாதிரியும்தானே சொல்ல முடியும். என் பேத்தியிடம் சொல்வதற்கு எனக்கு வேறு மொழியும் கதையும் கவனமும் வேண்டும் அல்லவா? எனவே, விஷயத்துக்குப் பிறகுதான் இஸங்கள் எல்லாம். சொல்லப்போனால், விஷயங்கள்தான் இஸங்களைத் தீர்மானிக்கின்றன. இஸங்கள் விஷயங்களைத் தீர்மானிப்பது இல்லை.”

“ஓர் ஓவியன் தினமும் வரைய வேண்டுமா?”

“அது குறிப்பிட்ட ஒருவரின் தேவையைப் பொறுத்தது. மற்றபடி, தினமும் வரைந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படி ஒரு பிரச்னை இருந்தால், அதை நோய்மை என்றுதான் சொல்ல வேண்டும்.”  

“வரைவதற்கு என்று பிரத்யேகமான சூழலோ, மனநிலையோ, தருணமோ உங்களுக்குத் தேவைப்படுகிறதா? உங்களுக்குப் படைப்பு மனநிலை தரக்கூடிய விஷயம் ஏதேனும் உண்டா?”

“அது, இது என்று எதுவும் இல்லை. படைப்பூக்கக் காரணி என எதையும் சார்ந்து ஒரு படைப்பாளி இருக்கவேண்டியது இல்லை. கலைஞனுக்குள் படைப்பு மனநிலை உருவாவது என்பதே ஒரு விந்தையான விஷயம்தான். அந்தத் தருணத்தை  விந்தைகொள்வதே அதைப் பதிவுசெய்வதில் கலைஞனைத் தீவிரப்படுத்தும் என்று நம்புகிறேன்.”

“அதுசரி... ஆனால், குறிப்பிட்ட ஒரு காட்சி, ஒரு சொல், ஒரு வாசனை, ஒரு மனநிலை, ஒரு சம்பவம் பற்றிய எண்ணம் ஆகியவை ஒரு கலைஞனைத் திரும்பத் திரும்பப் படைப்பு மனநிலைக்குத் தூண்டுவதும் இயல்புதானே?”

“ஒரு கவிஞனை அந்தக் காட்சிதான் இந்தக் கவிதையை எழுதவைத்தது என்றால், நல்லதுதான். அது நடக்கட்டும். இந்த ஓவியனை அந்த வாசனைதான் வரையவைத்தது என்றால், அற்புதம்தான். ஆனால், அந்தக் கவிஞனுக்கோ, ஓவியனுக்கோ அந்தக் காட்சியும் வாசனையும் கிடைத்தால்தான் படைப்பில் இயங்க முடியும் என்பது பலவீனம். நோய்மை.”

“இதை உடனே வரைந்தாக வேண்டும்; எழுதியாக வேண்டும் என்பதைப் போன்ற அழுத்தம் உருவாவது உண்டா? பல கவிஞர்கள் கவிஅழுத்தத்தில் சிகரெட் அட்டைகளில் எழுதிக்கொண்டதாகச் சொல்லுவது உண்டு...”

“ஒரு தருணத்தில் உள்ளுக்குள் ஒரு தெறிப்பு வந்துவிழுகிறது. அந்தக் கரு சக்தி உடையதாக இருந்தால், அது தொடர்ச்சியாக நமக்குள் விசாரணைக்கு உள்ளாகிறது. பின், ஒரு பூனைக்குட்டி தனது குட்டிகளை ஈனுவதற்கு முன்பு ஓர் இடத்தைத் தயார் செய்யுமே, அது மாதிரி நாமும் ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். அந்தக் குட்டியை ஓவியத்தில் அல்லது கவிதையில் ஈனுகிறோம். அழுத்தம் எழும்போது எதில் ஈன வேண்டும் என்பது அந்தக் காலத்தின், சூழலின் வாய்ப்பைப் பொறுத்தது.”

“கோட்டோவியங்கள், முழுவண்ண ஓவியங்கள் (Filled Paintings) இவை இரண்டையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் குறித்துச் சொல்லமுடியுமா?”


“எனது ஆசிரியர், முனுசாமி சார் சொன்னதையே சொல்கிறேன். ‘நீ நினைத்த நேரத்தில் கோயிலுக்குப் போய் பிரார்த்திப்பது ஓர் அனுபவம். திருவிழாவில் கூட்டத்தோடு கூட்டமாக, மேளதாளத்தோடு புத்தாடையில், முறைப்பெண்களை ரசித்தபடி நண்பர்களோடு போய் பிரார்த்திப்பது ஓர்அனுபவம். இரண்டுமே கோயிலுக்குப் போகிற அனுபவம்தான். ஆனால், இரண்டுமே வேறு வேறு. பிரார்த்தனை ஒன்றுதான்’ என்பார்.கோட்டோவியம் எப்போதும் வரைய எளிமையானது; உடனே சாத்தியமாவது. நான் என் மாணவப் பருவம் முழுக்கவே காகிதத்தில்தான் கிறுக்கினேன். கேன்வாஸ் வாங்கக் காசு இல்லை (சிரிக்கிறார்).”

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

“வண்ணங்களுக்கான அர்த்தப்படுத்தல்கள், பயன்பாடுகள் பற்றிச் சொல்ல முடியுமா?”

“வண்ணங்களை அர்த்தப்படுத்துதல், பயன்படுத்துதலைப் பொறுத்தவரை, பொதுவான புரிதல்கள், சமூகம் சார்ந்த புரிதல்கள், வாய்ப்பு (Availability) சார்ந்த புரிதல்களும், பயன்பாடுகளும் உள்ளன. கறுப்பு நிறத்தைத் துக்கத்தின் நிறமாக ஒரு சமூகம் பாவித்தால், மற்றொரு சமூகம் வெண்மையைத் துக்கமாகப் பாவிக்கும். இது, சமூகத்துக்குச் சமூகம் மாறும். ஏதேனும் ஒரு வண்ணத்துக்கு ஒரு சமூகத்தில் சிறப்பான இடம் இருக்கலாம். அதே சமயம், இருள் என்பது  பொதுவான அர்த்தத்தில் அச்சம்தரும் விஷயமாக இருக்கிறது. இது எல்லா சமூகத்துக்கும் பொது.

ஓர் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறேன். ஓர் இடத்தில் எனக்குச் சிவப்பு வண்ணம் தேவைப்படுகிறது. ஆனால், என்னிடம் இல்லை. நான் அந்த நேரத்தில் கையில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இருக்கும் பச்சை நிறத்தை, சிவப்பு தரும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அதைத் தீவிரப்படுத்துவேன். ஓர் அடர் இருளை வரைய வேண்டும். கறுப்பு வண்ணம் இல்லை என்றால், இருக்கும் நீலத்தையே மேலும் மேலும் அடர்த்தியாக்கி அங்கே ஓர் அழுத்தத்தை உருவாக்குவேன். இப்படி, வண்ணங்கள் Availabilty சார்ந்தும் அர்த்தம்பெறுகின்றன. பயன்படுத்தப் படுகின்றன.”

“ஓவியர்கள் தங்களுக்கு என ஒரு தனித்த பாணியைக் கொண்டிருப்பது பற்றி, ஒரு குறிப்பிட்ட  உருவம் அதிகமாக ஒருவரது படைப்பில் இடம்பெறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” 

“என் நண்பன் வந்து கேட்கிறான்,

‘என்ன சந்ரு ஜாலியா?’

 ‘ஆமாம். ஒரு புறாவைப்போல.’

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

என் ஆசிரியர் வந்து கேட்கிறார்,

‘என்ன சந்ரு ஜாலியா?’

‘ஆமாம். ஒரு பருந்தைப்போல.’

என் பேத்தி வந்து கேட்கிறாள்,

‘என்ன தாத்தா ஜாலியா?’

‘ஆமாம். ஒரு தேன்சிட்டைப்போல.’

உணர்வு ஒன்றுதான். அது வெளிப்படும் இடங்களைப் பொறுத்து, அதன் உக்கிரம் உருமாற்றம்கொள்கிறது அல்லவா? அது நிகழாமல் ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ,  பாணியையோ மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பதில் என்ன இருக்கிறது? ‘அந்தக் கணம்’ அதில் உக்கிரமாக உண்மையாக இடம்பெற வேண்டும். அதுதான் முக்கியம்.

ஓர் ஓவியனின் ஓவியத்தை அவனது பெயர் இல்லாமலேயே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது என்றாலே, அவர் நோய்மைக்குள் சிக்கிக்கொண்டுவிட்டார் என்றுதான் அர்த்தம். ஒரு கலைஞன் தொடர்ந்து தன்னை அழித்துக்கொண்டே முன்னேற வேண்டும் என்றே நான் சொல்வேன். ஆனால், பாணிகளுக்கு ஒரு வர்த்தகம் இருப்பதால், அதன் தேவை உடையவர்களுக்கு அந்த அடையாளமும் தனித்தன்மையும் தேவைப்படுகின்றன.” 

“கலைஞன், தன் கலை குறித்து மக்களுடன் உரையாட வேண்டுமா?”

“ஒரு கலைஞன், மக்களுடன் அவசியம் உரையாட வேண்டும். நீங்கள் ஓர் உணவைச் சமைக்கிறீர்கள். சாப்பிடுகிறவர், ‘நல்லாருக்கே... இதுல என்னென்ன சேர்த்திருக்கீங்க?’ என்று கேட்டால், ‘இன்னின்ன விஷயத்தை எல்லாம் அதில் சேர்த்திருக்கிறேன். அதானாலதான், இந்தச் சுவை வந்திருக்கு’ என்று சொல்கிற அளவுக் காவது உரையாடல் நடக்க வேண்டும்.”

“ஆனால், பெரும்பாலான கலைஞர்கள் படைப்பின் அர்த்த மர்மங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே அந்தப் படைப்பின் வாழ்நாளை நீட்டிக்கும் என்று சொல்கிறார்களே?”

“விளக்கினால் மாட்டிக்கொள்வோம் என்று நினைக்கிறார்களோ என்னவோ? (சிரிப்பு). ஓவியத்தை வியாபாரம் செய்கிற இடத்தில் மட்டும், ‘இந்தக் கோடு அந்த அர்த்தத்தைக் குறிக்கிறது. அந்த வண்ணம் இதில் இருந்து புதிதாக எடுக்கப்பட்டது. அது, இது... என ஏராளமானதும் சொல்கிறார்களே... அதைப் பார்வையாளர்களிடமும் சொல்லவேண்டியதுதானே?

அப்புறம், பார்வையாளர்களும் மெனக்கெட்டு ஓவியங்களை அர்த்தப்படுத்திக்கொள்ள கஷ்டப்படவேண்டியதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, ‘சந்ரு, இந்த இடத்துல ஒரு கோட்டைப் போட்ருக்காரு... இங்க கொஞ்சம் மஞ்சளைத் தடவி இருக்காரு. அப்புறம், கீழே ஒரு பொம்மையைப் போட்டுருக்கிறாரு. இந்த இடத்துல இந்த சிவப்பு வண்ணம் ரொம்ப நல்லா இருக்கு’ என்கிற அளவு புரிந்துகொண்டாலே போதும். அதுக்கு மேலே அவரும் குழம்பி, நானும் குழம்பி ஓவியமே குழம்பிவிடும்(சிரிப்பு). ஓவியங்களைக் குழந்தைகளைப்போலப் பாருங்கள்.”

“பெரும்பாலான நேர்காணல்களில், எழுத்தில், பேச்சில் அதிகமாகக் குழந்தைமை பற்றிக் குறிப்பிடுகிறீர்களே?”

“கிறிஸ்துவே சொல்கிறார், ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். பரலோக ராஜ்ஜியம் குழந்தைகளின் இதயத்துக்கு ஒப்பானது’ என்று. நான் முன்னரே குறிப்பிட்டேன் அல்லவா? குழந்தைகளைப் பொறுத்தவரை, மண்ணில் வீடு கட்டுவதும் கலைதான். அதை அழிப்பதும் கலைதான். வெறும் மண்ணும்கூட கலைதான். அதனாலேயே, கலை பற்றிய எந்த உரையாடலிலும் குழந்தைகள் வந்துவிடுகிறார்கள்.”

“ஒரு குழந்தைமை மிகுந்த கலைஞன் எந்தத் தருணத்தில் குழந்தைமையைத் தொடர முடியாமல் போகிறது?”

“ஒரு குழந்தை கல்லை எடுத்துவைத்து விளையாடுகிறது. ‘விளையாடியது போதும். வீட்டுக்கு வா’ என்றால், கல்லையும் உள்ளே எடுத்துக்கொண்டு வருகிறது. ‘கல்லை வெளியே போட்டுவிட்டு வா’ என்றால், ‘முடியாது. இது என் பிள்ளை’ என்று சொல்லும். ‘யார் கல்லைப் போட்டுவிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நிறைய மிட்டாய்’ என்றால், அது உடனே கல்லைப் போட்டுவிட்டு உள்ளே ஓடிவரும். ஆனால், நான் அப்படி எதன் பொருட்டும் எனது கேன்வாஸைக் கீழே போட்டுவிட முடியாது. அங்கு என் தேர்வு முக்கியமாகிறது. எனக்கு ஒரு கலைஞனுக்கான சமூகப் பொறுப்பு இருக்கிறது. யாரிடம் நான் மிட்டாய் வாங்க வேண்டும், யாருக்கு எதன்பொருட்டு என் ஓவியமும் நானும் துணைபோக வேண்டும் என்கிற தேர்வு அவசியமாகிறது.
 
மேலும், என் ஓவியத்தை நான் நினைக்கும் நேரத்தில்தான் வரைவேன். விளையாட்டு போலத்தான். அந்தக் கணம் எனக்கானது. என்னை யாரும் வரைந்து தரக் கட்டாயப்படுத்த முடியாது. நான் எனது ஓவியங்களை விற்கிறேன்தான். ஆனால், ஓவியம் எனக்குத் தொழில் மட்டுமே அல்ல!’’

“ஒரு கலைஞனின் சமூகப் பொறுப்பு என்று எதைச் சொல்வீர்கள்?” 

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு


“உன் பெற்றோரைக் கனம் பண்ணுவாயாக; உன் சகோதரர்களை நேசிப்பாயாக.”    
   
“நீங்கள் கணிப்பொறியில் வரைகிறீர்களா? அது பற்றிய உங்கள் அபிப்ராயம்?”

“ஆமாம். ஆரம்பத்தில் கணிப்பொறி வந்தபோது, அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பலர் என்னிடம் வந்து சொன்னார்கள். ‘அது உலகு தழுவிய ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி. அதை நம்மால் தடுக்க முடியாது. அது ஒரு கருவிதான். பிரஷ்ஷைப்போல கணிப்பொறி மௌஸும் ஒரு கருவி அவ்வளவுதான். அதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை என்றால், இழப்பு நமக்குத்தான்’ என்று சொன்னேன். ‘என்ன இருந்தாலும் கையால் பிரஷ் பிடிச்சு வரைகிற மாதிரி வருமா?’ என்றார்கள். ‘இப்ப டூவீலர்லதானே வந்தீங்க? காலால் பூமியை மிதிச்சு நடக்கிற மாதிரி வருமானு ஏன் நினைக்கலை?’ என்று கேட்டு அனுப்பினேன். பயன்படுத்தும் பொருள் சார்ந்து கலையில் ஒரு தன்மை வெளிப்படுவது உண்மைதான். ஆனால், நாம் காலத்தில் தேங்கிவிடக் கூடாது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு

“உங்களது சிந்தனைகளை, கற்பனைகளை வெளிப்படுத்துவதற்கு உங்கள் கையில்தான் ஓவியம் இருக்கிறதே. அதையும் தாண்டி கவிதை, சிறுகதை போன்ற வடிவங்கள் ஏன் தேவைப்படுகின்றன?”

‘‘நண்பர்கள்தான் காரணம். சில தருணங்களில் நான் எனது சில அக அனுபவங்களை வார்த்தைகளாகச் சொல்வது உண்டு:

‘நான் நடந்துசென்றுகொண்டிருந்தேன். ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள். அதைக் குட்டை என்றும் குளம் என்றும் கடல் என்றும் ஆறு என்றும் சொன்னார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. அங்கே கிடந்த ஒரு கல்லில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. நான் அதை வாசிக்க முயன்றேன். புரியவில்லை. ஆனால், அது எனக்குப் பரிச்சயமான மொழிதான். சரி அதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன். பாதையில் நின்ற செடியில் ஊசியைவிட ஒரு சின்னப் பூச்சி ஒரு இலையைத் தின்றுகொண்டிருந்தது.  செடிக்குப் பின்னே நீண்ட காடு இருந்தது. நான் கல்லை மீண்டும் வாசிக்க முயன்றேன். முடியவில்லை. இப்போது எதிரில் இருந்த காடு அழுதது. அந்தப் பூச்சி, செடி முழுதையும் தின்று முடித்திருந்தது. அந்தப் பூச்சிக்கு அவ்வளவு வல்லமையா, பசியா, என்று நினைத்துக்கொண்டேன். கல்லில் இருந்த எழுத்துக்கள் உருகி ஒரு கூழாங்கல்லாக ஆகிவிட்டது. நான் அதை எடுத்து எனக்குள் போட்டுக்கொண்டேன். பாதை எல்லாம் கூழாங்கல்.  சேர்த்துச் சேர்த்து இப்போது என் தொடை எல்லாம் நிறைந்து போய்விட்டது. நடக்க முடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. இந்தக் கூழாங்கற்களுக்கான அர்த்தத்தை யாரிடமாவது கேட்டுவிடலாம் என்றுதான் அவற்றைச் சுமந்துவந்தேன். ஆனால், எங்கேயோ வழி தவறிவிட்டேன். நடக்க முடியாமல் வீழந்துவிட்டேன். இப்போது என்னை யாரும் தூக்க வேண்டாம். ஒரு குழந்தையைப்போல பாவித்தால் போதும். ‘இதை நீ யாரிடம் சொல்கிறாய்?’
 
‘யாரிடமும் இல்லை. அந்தப் பூச்சியைப் போல நான் என்னைத் தின்றுகொண்டே போகிறேன்.’     
        
இப்படிச் சொல்லிக்கொண்டே போக, ‘ஆகா, நன்றாக இருக்கிறதே. இதை எழுதுங்களேன்’ என்று சொல்வார்கள். ‘அப்பிடியா சொல்றீங்க... சரி, அதையும் செய்துபார்த்துவிடுவோமே’ என்று எழுதியவைதான் அந்த வடிவங்கள்.”    

“உங்கள் கவிதைகள் சிதறலான மன உணர்வுகளாகவே இருக்கின்றனவே?”


“ஆமாம். அந்த வாழ்கணத்தை, தற்செயலான தீவிர மனத்தோன்றல்களைக் காட்சிவகை செய்யும் போக்கில் உள்விசாரணை செய்கிறேன்; எழுதுகிறேன்.”

“நீங்கள் இரண்டு வடிவங்களிலும் இயங்குகிறீர்கள். உங்களது சிந்தனைகள் முதன்மையாக எந்த வடிவத்துக்கு tune ஆகின்றன?”

“உருவங்களாகத்தான். உருவங்களை விவரிக்க முற்படும்போதுதான் சொற்கள் வருகின்றன.”

“மேற்குலகில் அரசியல் சார்ந்த ஓவியங்கள் ஏராளமாக உள்ளன. தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிற ஓவியங்கள் பற்றி...”


“(பலமாகச் சிரிக்கிறார்) என் தலையிலேயே கையை வைக்கிறீங்களே... கண்டுபிடித்துச் சொல்லுங்கள். இருந்தால், எல்லோரும் சேர்ந்து சந்தோஷப்படலாம்.”

“தமிழில் தலித்தியப் போக்கின் நிலை என்னவாக இருக்கிறது?”

“நான் பலமுறை எதிர்கொண்ட கேள்விதான் இது. அந்த கோஷம் நீர்த்துப் போய்விட்டது என்று சொல்வார்கள். நீர்த்துப்போய்விட்டதா அல்லது அந்தப் போக்கு அதன் தேவையை அடைந்துவிட்டதா அல்லது புது வடிவம் கொண்டிருக்கிறதா?  எந்த முறையில், எதைக்கொண்டு அதை அளவிடுவது? யார் ஆய்வு செய்தார்கள்? யார் முடிவு சொல்வது? என்னைப் பொறுத்தவரை, தலித்தியக் கலைப்போக்கு என்பது சம உரிமைக்கான அரசியல் குரல். சாதியின் பெயரால் சகலத்திலும் ஒடுக்கப்படும் ஒருவன், சம உரிமைக்கான தனது அரசியல் நடவடிக்கையாகக் கலையைக் கையில் எடுக்கிறான்.  தன்னைத் தனிமைப்படுத்தும் பொதுப்போக்கில் இருந்து விலகி, அதன் மீதான விமர்சனக் குரலுடன் தன்னைத்தானே அங்கீகரித்துக்கொண்டு கலை உருவாக்கத்தில் ஈடுபடுகிறான். தலித் படைப்பை யாரும் அங்கீரிக்கவேண்டியது இல்லை. எங்களை நாங்களே அங்கீகரித்துக்கொள்கிறோம். எங்கள் கலைகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை யாருக்கும் தர முடியாது.

எல்லோரும் தலித்தியப் படைப்பின் மீது முன்வைக்கும் விமர்சனம் ஒன்று உண்டு. ‘இவர்கள் பொதுத்தளத்தோடு இயங்க மறுக்கிறார்கள்’ என்கிறார்கள். வாழ்க்கையிலேயே பொதுவாக வாழ முடியவில்லையே. எங்கிருந்து பொதுவாக எழுதுவது? என் கலைகள் உலகப் பொதுவானவை. ஆனால், நான் உங்களால் தலித் என்று அடையாளப்படுத்தப்படுகிறேன். ஆனால், என் சாதியைச் சொல்வதற்கு ஒருபோதும் நான் வெட்கப்பட மாட்டேன். என்னுடைய கலை, தலித் கலை அல்ல. ஆனால், என்னை தலித் என்று அடையாளப்படுத்துவதால், என்னோடு சேர்ந்து அதுவும் தலித் கலையாக அடையாளப்படுத்தப்படுகிறது.”

“ஓவிய வெளியில் பெண்களின் பங்களிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?”

“ஆணாகட்டும் பெண்ணாகட்டும், இன்று சமூகத்தின் மீது தனது ஓவியத்தால் விமர்சனத்தை வைக்கிறவர்களாக யார் இருக்கிறார்கள்? அப்படிப் பெண்கள் யாராவது இயங்கினால் சந்தோஷம்தான். பெண் படைப்பாளிகள் குறித்து இங்கு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். பெண்களில் பொருட்படுத்தத்தகுந்த ஓவியர்களாக கிருஷ்ணப்ரியா, அனிதா, ரோஹிணிமணி ஆகியோரைச் சொல்ல விரும்புகிறேன்.” 

“தமிழில் ஓவிய விமர்சகர்கள் குறித்து...”

கலைஞன், மக்களுடன் உரையாட வேண்டும் - சந்ரு


“என்னைப் பொதுவெளியில் வேறு ஓர் ஊடகத்தின் வழியாக (எழுத்து) அறிமுகப்படுத்துகிறவராக விமர்சகர் இருக்கிறார். ஆனால், விமர்சகர்களுக்கும் படைப்பாளிக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. என்னைக் கண்டால், அவர் விலகிச் செல்கிறார். அவரைக் கண்டால், நான் விலகிச் செல்கிறேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், என் மாணவப் பருவத்திலேயே, என்னைப் பற்றி நானே எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு நானே நம்பிக்கையான விமர்சகன்.”

“தமிழ் ஓவியவெளிக்கு முக்கியமான பங்காற்றியவராக யாரையேனும் குறிப்பிட விரும்புகிறீர்களா?”

“ராய் சௌத்ரியைச் சொல்லலாம். அவர், ஓவியத்தில் அடிப்படைப் பயிற்சி மிக முக்கியம் என வலியுறுத்தினார். பார்க்கும் உருவத்தை அப்படியே வரையும் அந்த அடிப்படைப் பயிற்சி ஓர் ஓவியனுக்குப் பெரிய பலம் என்று நம்பினார். ஆனால், மேற்கத்திய ஓவிய உலகின் இஸங்களின் பாதிப்புகள் இங்கு வந்து சேர, ஓவியம் வரைய வேண்டும் என்ற ஒரு Effort இருந்தால்போதும்; பயிற்சி அவ்வளவு முக்கியம் இல்லை என்று பரப்பினார்கள்.  இந்த நிலை வந்ததும் ஓவியத்தில் பாசாங்குகள் அதிகமாகிவிட்டன. கோழி முட்டையைக்கூட வரைய முடியாதவர்கள் எல்லாம் மாடர்ன் ஆர்ட் எனும் பெயரில் இங்கு போலிகளை உருவாக்கத் தொடங்கி விட்டார்கள்.”

“இது, தமிழில் மட்டும் நடந்த விஷயம் என்று நினைக்கிறீர்களா?”


“இல்லை. உலகம் முழுக்க இது உண்டு. ஈஃபிள் டவரை விற்றவனும் இருக்கிறான். தாஜ்மஹாலை விற்றவனும் இருக்கிறான் (சிரிக்கிறார்).”

“இளையராஜாவின் இசையைப் பற்றி உங்கள் தலைமையில் ஓவியர்கள் பலர் கூடி வரைந்தார்களே... இசை ஓவியமாகும் விதம் பற்றிச் சொல்ல முடியுமா?”


“உணர்வுரீதியாக உலகில் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கின்றன. ஒரு கூவல், குயிலின் உருவத்தை உங்களுக்குள் தருகிறது. ஒரு வாடை, ஆட்டுக்கிடையை நினைவூட்டுகிறது. பாலின் அடர்த்தியான சுவை, எருமையின் பால் இது என உணர்த்துகிறது அல்லவா? அதுபோலத்தான். ஓர் இசைக் கலைஞன், தான் உணர்ந்த பனியை, சில்லென்ற காற்றை, ஒரு மலைக் காட்சியை, தனது உக்கிரமான கோபத்தை இசையாகப் பிரதிபலிக்கிறான். தான் உணர்ந்ததை மற்றொருவருடன் பகிர, ஓர் இசைக் கருவியில் அதை வாசிக்கிறான். அதைக் கேட்கும்போது நாம் அந்தப் பனியை, காற்றை, காட்சியைக் காண்கிறோம் அல்லது இசையாகவே உணர்கிறோம். இசை தரும் உணர்வை, அது விரிக்க விரும்பும் காட்சியை ஓவியன் தனது வண்ணங்களால் நிகழ்த்த முயல்கிறான். இசையை வண்ணத்திலும் வண்ணத்தை இசையிலும் உணரும் ஒரு தருணம்தான் அது.”

“ஓவியத்தின் தனிச்சிறப்பு?”

“‘பூ’ என்று நீங்கள் எழுதிவிட்டு, அதைக் கவிதை என்று சொன்னால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? ஆனால், ஒரு பூவின் இதழை மட்டும் வரைந்தால்கூட அது ஓவியம்தான்(சிரிக்கிறார்).” 

“ஓவியத் துறையில் இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம்?”

“நீங்கள் ஓவியம் என்று எதை எல்லாம் நம்புகிறீர்களோ, அவை அனைத்தையும் மறுபரிசீலனை செய்யுங்கள்.”

  “புதிதாக ஓவியத் துறைக்கு வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?”


“உன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனி.”