Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சொல்வனம்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

குச்சிப்பை ரகசியங்கள்

வ்வொரு முறையும்
அம்மாச்சி வீட்டுக்குச் செல்லும்போது
பின்னால் ரெண்டு அடி வால் முளைக்கிறது
எனக்கு அல்ல... அம்மாவுக்கு.
கிளம்பும்போது எங்கிருந்தோ
குச்சிப்பையை எடுத்துவருகிறாள் அம்மாச்சி.
கோலநோட்டு இட்லிப்பொடி
காபித்தூள் முறுக்குமாவு
ரேஷனில் வாங்கிய சர்க்கரை
மட்டையோடு தேங்காய்
ஹமாம் சோப்பு (பெருசு)
தெருமுனையில் வீட்டுக்காரனுக்குத்
தெரியாமல் பறித்த முருங்கைக்கீரை
மருதாணி டிடெர்ஜென்ட் பவுடர்
பாரம் அதிகமாகும்
அத்தை மாமாக்களின் கொஞ்சூண்டு பொறாமையால்.
இப்போது அக்கா
வீட்டுக்கு வரும்போதெல்லாம்
அம்மா தன் உலகத்தை
குச்சிப்பையில்
மடக்கி அழுத்தித் தருகிறாள்
‘கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டுப் போடி...’ எனக்
கிளறிக்கொண்டே கிண்டலடிப்பேன்.
அக்கா இப்போதெல்லாம் திட்டுவதில்லை
மகன்களின் ஸ்கேனிங் பார்வைக்கு
புரியவே புரியாது
குச்சிப்பையின் ரகசியம்.
வெறும் பொருள் மட்டும் அல்ல
அதில் இருப்பது
அம்மா குச்சிப்பையில் அம்மாச்சியும்
அக்கா குச்சிப்பையில் அம்மாவும்!

-ரா.தினேஷ் வர்மா

பன்னாட்டு முனையம் T4

மேற்கூரை உடைந்து விழாத
மீனம்பாக்கத்தின் அதிகாலையில்
நீருக்குள் வைத்த காகிதமென மேலெழும்புகிறது
எங்கள் இருவருக்குமான பரிதி.
நாளை வேறு வேறு வானம்
வேறு வேறு விடியல்.
நிமிடங்கள் கரைய
கையசைத்து விடைபெறுகிறான்
கட்டட வேலைக்காகக் கடல் தாண்டும் கணவன்.
கரையில் தலை வைத்துக் கிடக்கும்
திமிங்கிலத்தின் திறந்த வாய்போல இருக்கிறது பன்னாட்டு முனையம் T4.
திரும்பிப் பார்த்தபடியே
அதன் தொண்டைக்குள் விழுந்து மறைந்துபோகின்றான் என் மணாளன்
காலம் எங்கள் பிரிவைச் சுவைக்கிறது.
வழியனுப்பிவிட்டுத் தனியாக
ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
திறந்த சிங்க வாய்க்குள்ளிருந்து தண்ணீரும்
என் கண்களிலிருந்து நீரும் வழியெங்கிலும் வழிந்துகொண்டிருந்தது.

- நிலாகண்ணன்.

நீயும் நானும் சமைத்த தருணம்!

எதிர்முனையின் `ஹலோ’வுக்குக் காத்திராமல்
`என்ன பண்றே?’ என்ற உனது கேள்வியில்
தொடங்குகிறது நமது சமையல்.
`லவ் பண்றதை வீட்ல சொல்லிட்டியா?’ என எண்ணெய் ஊற்றுகிறாய்.
`இங்கே பிரஷர் தாங்க முடியலை’
வெங்காயம் அரிவதாகக் கண்ணீர் வடிக்கிறாய்.
`கொஞ்சம் பொறுத்துக்க ரம்யா’ என்று
நான் கெஞ்சுகையில் உன் முகம்
அடுத்த சேர்க்கைபோலச் சிவக்கிறது.
`இன்னும் எவ்வளவு நாள்
மேக்ஸிமம் ஒரு மாசம்...
இல்லைன்னா வீட்ல யாரைச் சொல்றாங்களோ... எனக்குத் தெரியலை
செத்தாலும் செத்துடுவேன்’ என
உப்பு புளியோடு உறைப்பையும் சேர்க்கிறாய்
நான் வெந்துபோய் மௌனம் சாதிக்கும்போது
மூக்கை உறிஞ்சி `அப்புறம்?’ என்கிறாய்.
முடிந்த சமையலை அசைபோடும் தருணத்தில்
`சாப்பிட்டியா?’ எனக் கேட்கிறாய்
நான் என்ன சொல்வது?

- அஜித்