Published:Updated:

திரை - சிறுகதை

திரை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திரை - சிறுகதை

ஜா.தீபா, ஓவியங்கள்: ஸ்யாம்

திரை - சிறுகதை

ஜா.தீபா, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
திரை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
திரை - சிறுகதை

சுபலன் அமைதியாக அமர்ந்திருந்தார். சிக்கலான முடிவுகள் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் அன்று, அவரது மனம் கொதிப்பில் இருந்தது. தூரமாகத் தெரிந்த மலைச்சிகரங்களை இலக்கு இன்றி பார்த்துக்கொண்டே இருந்தார். குரு நாட்டில் இருந்து காந்தார தேசத்துக்கு, இதுவரை திருமணத்துக்கான அழைப்புகள் மட்டுமே வந்திருக்கின்றன; முதன்முறையாக திருமணச் சம்பந்தம் தொடர்பாக தூது வந்திருக்கிறது. `இது சரிப்படாது. இல்லை... ஏன் சரிப்படாது?

குரு வம்சத்தின் பட்டத்து மகிஷியாகும் யோகம் காந்தாரிக்கு இருக்கக்கூடும். ஆனால்...' நினைக்கும்போதே அவர் அடிவயிற்றை என்னவோ செய்தது. அப்போதுதான் அந்த அலறலும் கேட்டிருக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவர், ஓலம் வந்த திசையை நோக்கி ஓடினார். அது காந்தாரியின் பழத்தோட்டம் இருக்கும் திசை.

திரை - சிறுகதை

காந்தாரிக்கு, நாள் முழுவதையும் பழத்தோட்டத்தில் கழித்தாலும் அலுக்காது. அங்கு எதைப் பார்ப்பாள், எதனுடன் பேசுவாள் என்பது எல்லாம் அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம். தோட்டத்தின் நடுவே அபூர்வமாகப் பூக்கும் பூக்கள் ஒவ்வொன்றின் மணமும் காந்தாரியின் மேல் வீசும். அந்த அளவுக்கு அவள் பூக்களோடும் நெருக்கம்.

சுபலன், தோட்டத்தை நெருங்கும்போதே காந்தாரிக்குத்தான் ஆபத்து என்பது தெரிந்துவிட்டது. அப்படியே நின்றார். காந்தாரியின் தோழிகள், அலறலை இன்னும் நிறுத்தவில்லை.

“காந்தாரி மயங்கி சரிந்துவிட்டாள்.விளையாடிக்கொண்டுதான் இருந்தோம்...” என்றாள் ஒரு பெண் அரைகுறை வார்த்தைகளில்.

“அப்படி என்ன விளையாட்டு?'' என்றார் சுபலன்.

“கண்ணாமூச்சி.”

அதற்குள் `காந்தாரி விழித்துவிட்டாள்' என்ற செய்தி கிடைத்தது.

காந்தாரிக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை; படபடப்புடன் காணப்பட்டாள்.

தந்தையைப் பார்த்ததும் மரியாதைக்காக எழுந்தாள்.

`இனி இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுக்கள் வேண்டாம்' என்று ஏதோ சொல்ல முனைந்தவர், குதிரையின் மூச்சிரைப்பைப்போல் பெருமூச்சை உதிர்த்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்துபோனார்.

காந்தாரி, அண்ணன் சகுனியைத் தேடினாள்.

அடுத்த நிமிடம் புயல் வீசப்போகும் அறிகுறிக்கு முந்தைய அமைதி, தோட்டத்தில் எழுந்தது. காந்தாரி புரிந்துகொண்டாள். சகுனி அண்ணன் வந்துவிட்டான். தோழியர்கள், ஆடை சரசரப்புகூட எழாமல் அங்கு இருந்து நகர்ந்தனர்.

அவனின் வருகையும் இருப்பும், எப்போதுமே மற்றவர்களுக்கு மனப்பதற்றத்தை உண்டு பண்ணுவதை காந்தாரி கவனித்திருக்கிறாள். ஆனால், தன்னுடைய மனம் மட்டும் பதற்றத்தில் இருந்து விடுபடுவதை அவள் உணர்ந்தாள். `எதனால் இப்படி?' எனப் பலமுறை யோசித்திருக்கிறாள். சகுனியிடம்கூட இதைப் பற்றி அவள் பேசியது இல்லை. முற்றுப்பெறாத ஒரு ரகசியம்போல் அவளுக்குள்ளேயே அந்தக் கேள்வி தங்கியிருக்கிறது.

திரை - சிறுகதை

காந்தாரி, சகுனியை ஏறிட்டாள்.

“அண்ணா...” என்றாள் அடியாழக் குரலில்.

சகுனி ஒன்றும் பேசவில்லை. கண்ணாமூச்சி ஆட்டத்தின்போது அவள் கண்களைக் கட்டியிருந்த துணியை தனது ஒற்றை விரலால் எடுத்தான்.

“நெருப்பு வேண்டும்” என்றான்.

நெருப்பு வந்தது. அந்தத் துணியைத் தீயிட்டான்.

“காந்தாரி... நமக்கு பயம் ஏற்படுத்தும் செயல்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் அல்லது அழித்தொழிக்க வேண்டும்... புரிந்ததா?”

காந்தாரிக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

காந்தாரத்தில் குளிர்கால இரவுகள் சிக்கலானவை. ஆட்டின் கம்பளியை உடலில் இறுகக் கட்டிக்கொண்டாலும் மலைச்சிகரத்தின் மேல் மோதிவரும் காற்றுக்கு ஊடுருவும் தன்மை அதிகம். காந்தாரிக்கு இன்று குளிர் உறைக்கவில்லை. அடர்வெயிலும் நடுங்கும் குளிரும் காந்தார தேசத்தின் சொத்துக்கள். அவற்றை நிரந்தரமாகக் கைவிட்டுப்போகும் காலம் வந்துவிட்டது. குரு நாட்டிலும் இதேபோன்ற சீதோஷ்ண நிலைதான் இருக்கும் என்கிறார்கள்.

இங்கு இருந்து குரு நாட்டைப் பார்க்க முடியுமா என்று, நின்ற இடத்தில் இருந்து கால்களை உயர்த்திப் பார்த்தாள். காலை வெளிச்சத்தில் மலை மறைத்திருப்பது தெரியும். இப்போது கடும் இருளைத் தவிர ஒன்றும் தெரியவில்லை. இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் அடைத்துக்கொண்டு வந்தன. தூக்கம் வருகிறதோ என, கண்களை மூடினாள். கண்களுக்குள் மேலும் கருமை இறுகியது. அந்தக் கருமையை அவளால் தாங்க முடியவில்லை. மீண்டும் நெஞ்சுக்குள் படபடப்பு ஏறிக்கொண்டது.

திருமணம் முடிவானதில் இருந்து குரு நாட்டுத் தூதுவர்கள் அடிக்கடி வந்து போகிறார்கள். காந்தார தேசத்தின் ஏக இளவரசியின் திருமண ஏற்பாடுகள் மந்தகதியிலேயே நடந்துகொண்டிருந்தன. சுபலனால்கூட முழுமனதோடு வைபவக் காரியங்களில் ஈடுபட முடியவில்லை. காந்தாரியின் திருமணம் குறித்து சகுனியிடம் பேசி, அவனுடைய சம்மதமும் வாங்கியாயிற்று.

சகுனி, எப்போதும் எதிர்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவன். பாதகங்களை அவனால் முறியடிக்க முடியும். அவனுக்கு வேண்டியது எல்லாம் சாதகங்கள் மட்டுமே. காந்தாரியைச் சமாதானம் செய்ய அவனால் மட்டுமே முடியும். இந்நேரம் காந்தாரியிடம் அவன் சொல்லியிருப்பான்.

காந்தாரியிடம் சொல்லவேண்டியதைப் பற்றி சிந்திப்பதற்கு, சகுனி அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

`‘காந்தாரி... இன்னும் சில நாட்களில் எங்களைவிட்டு நீ அந்நிய தேசத்துக்குச் செல்லப்போகிறாய். அங்கே உனக்குப் பல இடையூறுகள் வரலாம்... நிச்சயம் வரும். அங்கு நீ மட்டும் இளவரசி அல்ல, குந்தி போஜனின் மகளும் இருக்கிறாள். பாண்டுவின் மனைவி என்பதால், அவளுக்கும் அங்கு அதிக உரிமைகள் இருக்கும்.”

“அது இயல்புதானே அண்ணா!”

“ஆமாம். ஆனால், உன்னை அங்கு இரண்டாம்பட்சமாகப் பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் இல்லை. உனக்கு கணவனாக வரப்போகும் திருதராஷ்டிரன், மாபெரும் வீரன்; மனவலிமைகொண்டவன்.”

காந்தாரி நாணத்தில் லேசாகச் சிரித்தாள்.

“காந்தாரி, வீரம் என்பதை என்னவென்று நினைக்கிறாய்?”

காந்தாரிக்கு, இந்தக் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல நேரம் எடுத்தது.

“மனோதிடம்தான் அண்ணா உண்மையான வீரம். அப்படி எனில், நான் பார்த்ததிலேயே சிறந்த வீரன் நீதான்.”

“சரியாகச் சொன்னாய். மனோதிடம் இருப்பவனே வீரன். போர்க்களத்தில் நின்று எதிரிகளைச் சூறையாட முரடர்களால்கூட முடியும். ஆனால், வீரனால்தான் தலைமை ஏற்க முடியும். புரிகிறதா?”

காந்தாரி புரிவதாகத் தலையசைத்தாள்.

“குரு வம்சத்தின் தற்போதைய பட்டத்து இளவரசனான பாண்டு, என்றுமே வீரன் அல்ல; அதே நேரம் முரடனும் அல்ல. திருதராஷ்டிரன் போர்க்களத்துக்குச் சென்றது இல்லை. ஆனால், அவனால் ஒரு ராஜ்ஜியத்தை நிர்வகிக்க முடியும். அதற்கு மனோதிடம்தானே வேண்டும்... கண்கள் தேவை இல்லையே!”

காந்தாரி, சகுனி பேசியதை ஒரு நொடிக்குள் கிரகித்துக்கொண்டாள்.

“அண்ணா, அவர்...”

“ஆம். மனோதிடம் உள்ளவர்களுக்கு கண்கள் என்பது வெற்று அலங்காரம்தான்.”

“ஐயோ!”

திடுக்கிட்டு எழுந்தாள் காந்தாரி. நேரம் விடியத் தொடங்கியிருந்தது. திருதராஷ்டிரனின் உஷ்ண சுவாசம், காற்றில் கலந்திருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். திருமணமான நாளில் இருந்து தான் ஆழத் தூங்குவதாக பலமுறை சொல்லியிருக்கிறார். அதே திருமண நாளில் இருந்துதான் தன் தூக்கத்துக்கு சலனம் ஏற்பட்டது என்பதை காந்தாரி அவரிடம் சொல்லவில்லை.

கண்களைச் சுற்றிக்கட்டிய துணியைத் தொட்டுப் பார்த்தாள். இன்று என்ன நிறத்தில் ஆன துணியைக் கட்டியிருப்பார்கள்? உடுத்தும் உடைக்கு ஏற்ற வண்ணத்தில் துணியைக் கட்ட கட்டளையிட்டிருந்தாள். எந்த வண்ணத்தில் உடை அணிந்திருக்கிறாள் என்பதை, பணிப்பெண் சொல்லியிருந்தாள். `கரும்பச்சையா...இளஞ்சிவப்பா..? அது நேற்றைக்கு முன்தினம் அல்லவா? அப்போது நேற்றைய பொழுதில் என்ன உடையாக இருக்கும்? எதுவோ சொன்னாளே!' - காந்தாரிக்கு நெஞ்சுப் படபடப்பு அதிகமானது.
 
மூச்சு, காற்று வேண்டி அலைந்தது. மனதையே கண்களாகப் பாவித்துக்கொள்வேன் எனப் பெருமையுடன் இருக்கும்போது, இப்படி ஒரு மறதி ஏற்பட்டதை காந்தாரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. யாரைக் கேட்பது? இந்த அகாலவேளையில் யாரையாவது அழைக்கலாம்​தான். அழைத்து, `கண்களில் என்ன நிறத்தில் துணி கட்டியிருக்கிறாய்?’ எனக் கேட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? அஸ்தினாபுரத்தின் பட்டமகிஷியின் கேள்வியில்கூட, உயர் தகுதி இருக்க வேண்டும் என்றுதானே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மனம் ஒவ்வொரு நிறமாகச் சொல்லிப்பார்த்தது. சுவாசம் அதிர்ந்துகொண்டேபோனது. கையை மெதுவாக தலையின் பின்பக்கமாகக் கொண்டுசென்றாள். இந்தத் துணியை முதன்​முதலாகக் கட்டும்போது சகுனி உடன் இருந்தான்.

‘`இதை தியாகமாக நினைக்கிறாயா காந்தாரி?” என்றான் சகுனி.

“இல்லை அண்ணா. இது ஒரு வைராக்கியம். சிறுவயதில் இருந்தே இருட்டைப் பார்த்து அச்சப்படுபவளாக இருந்திருக்கிறேன். `எது நமது பலவீனமோ, அதற்குத்தான் சோதனை வரும்' என்று நீதானே சொல்வாய். நான் அதை எதிர்கொள்ளப்போகிறேன். என்னுடைய இந்தச் செயலை குரு வம்சமோ, காந்தாரமோ எதிர்பார்த்திருக்காது. உயிருடன் இருக்கும்போதே என்னை நான் பொசுக்கிக்கொண்டே இருப்பேன். என்னைப் பார்க்கும்போது எல்லாம் மண்ணாசைக்காகவும் கௌரவத்துக்காகவும் எதையும் செய்யத் துணியும் கோழைகளுக்கு உறுத்த வேண்டும்.”

சகுனி மனதுக்குள் வருத்தமாகச் சிரித்திருக்கக்​கூடும். ஏனெனில், அவர் எதிர்காலத்தைக் கணிக்கக்கூடியவர்.

அந்த நாள் முதல் இன்று வரை அந்தகாரத்தோடு வாழப் பழகியாயிற்று. காந்தாரியின் செயலினால் பெருமையின் அளவு எல்லை இல்லாமல்போனது திருதராஷ்டிரனுக்கு. பிறவியில் இருந்தே கண்பார்வையற்ற அவர், கேட்பதற்கு அநேகக் கேள்விகளை வைத்திருந்தார்.

‘`உங்கள் நாட்டின் நிறம் என்ன?'' என்றார் ஒருமுறை.

இப்படியான ஒரு கேள்வியை காந்தாரி எதிர்பார்த்திருக்கவில்லை.

மனக்கண் முன்னால் காந்தாரத்தைக் கொண்டுவந்தாள்.

`‘பழுப்பு நிறம்’' என்றாள்

`‘அஸ்தினாபுரத்தின் நிறம் என்னவென்று தெரியுமா?’'

“நான் பார்த்தது இல்லை. ஆனால், பச்சையாக இருக்க வேண்டும்.”

“எப்படிச் சொல்கிறாய்?”

“காற்றின் மணத்தை வைத்து.”

“நானும் காற்றோடுதான் அதிகம் பழகுகிறேன் காந்தாரி. அது சுவாரஸ்யமானது அல்லவா! ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்தே, அவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது ஒரு வித்தை. அதற்கு நான் என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன்.”

காந்தாரி அதற்கு பதில் சொல்லவில்லை.

திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். `கண்கள் அற்ற உலகத்தில் வாழ்வது, எவ்வளவு கொடுமையானது. அதே நேரம் அது வசீகரமானது' என்றும் சொன்னார்.

`‘வசீகரமா... எதற்காக ஒவ்வொரு நாளும் விதவிதமான சமாதானங்களைச் சொல்கிறாய் திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் மறைக்கப்படாமல்போயிருந்தால், உங்கள் அனைவராலும் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டிருக்கும். உங்கள் கைகளின் வழியே எனது கண்கள் கட்டப்படுவதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? உன்னுடைய சமாதானங்கள் உன்னையே திருப்திப்படுத்துவது இல்லை என்பதாலேயே, ஒவ்வொரு நாளும் அவை வளர்ந்துகொண்டே போகின்றன. ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், பேசக்கூடிய நாக்குகள்தான் விதவிதமாக முளைத்திருக்கின்றன” என காந்தாரி உதட்டு அசைவால் திருதராஷ்​டிரனிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.

திரை - சிறுகதை

அவர் கேள்வியில் ஒருமுறைகூட, `நீ ஏன் உன் பார்வையை மறைத்துக்கொள்கிறாய்?' என்ற கேள்வி எழுந்ததே இல்லை.

அதற்கான பதிலை, அவர் மற்றவர்களிடம் இருந்து பெற்றிருக்கக்கூடும்.

கண்களைக் கட்டிக்கொண்டு மணவறைக்கு வந்ததும் மண்டபமே ஸ்தம்பித்தது. தியாகம் என்றார்கள், பத்தினி என்றும் சொன்னார்கள்.ஆனால், யாருக்கும் இது பாடம் உணர்த்தும் செயலாகத் தெரியவில்லை இன்று வரை.

இன்று ஏனோ அவளுக்கு `கண்களைத் திறந்தே ஆகவேண்டும்' எனத் தோன்றியது. எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டேபோனது. இறுதியில் முடிவாயிற்று.

காந்தாரி, கண்களின் கட்டுகளை அவிழ்க்கத் தொடங்கினாள். இதனால் எந்தக் குற்ற உணர்ச்சியும் அடையாமல் இருந்தது அவளுக்கே சற்று ஆச்சர்யமாக இருந்தது.

கட்டுகள் தளர்ந்தன.

துணியைக் கையில் எடுத்தாள். அருகில் நின்ற பணிப்பெண், வழக்கம்போல் அந்தத் துணியைக் கையில் ஏந்தத் தயாரானாள்.

மறுநொடி அறைக்குள் ஒரு நெடி சூழ்ந்தது.

காந்தாரி வீசி எறிந்த துணி சரியாக ஒரு தீப்பந்தத்தின் மீது விழுந்து கருகிக்​கொண்டிருந்தது.

சட்டென காந்தாரி சொன்னாள், “பற்றி எரியும் துணி வெள்ளை நிறம்.”

காந்தாரியின் துல்லிய அவதானிப்புக்கு முன் எரியும் துணியை அணைக்கும் முயற்சிகூட இல்லாமல் பணிப்பெண்கள் திகைத்து நின்றனர்.

காந்தாரியின் மூடிய இமைகள் முதலில் திறந்துகொள்ள மறுத்தன.

இமைகளைப் பிரிக்க மிகவும் சிரமம் ஏற்பட்டது.

இமைகள் மெதுமெதுவாகத் திறந்து​கொண்டன.

அதே இருட்டு... கண்களைக் கசக்கினாள். மேலும் அந்தகாரம். கசக்கிக்கொண்டே இருந்தாள்.

அவளது வெள்ளை விழிப்படலம் மட்டும் கருவிழி இல்லாமல் சோழியைப்​போல உருண்டு​கொண்டிருந்ததை, பணிப்​பெண்கள் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர்!