அண்மையில் வெளிவர இருக்கும் என் புத்தகத்தின் இறுதி வடிவில் வேலை செய்துகொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் நேரம். வழக்கமாக வரும் நண்பர், தமிழர், வந்து அமர்ந்து, ‘‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்?” என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் புத்தகம் பற்றிச் சொன்னேன். சற்று நேரம் யோசித்துவிட்டு, அவர் கேட்டார். ‘‘சோறு தின்னாமல் பட்டினி கிடந்து செத்துப்போனவர்கள் உண்டு. தண்ணி குடிக்காமல் செத்துப்போனவன் உண்டு. புத்தகம் படிக்காமல் செத்துப் போனவன் எவனையாவது கேள்விப்பட்டிருக்கீங்களா சார்!”

உண்மைதான்!.

ஒரு புத்தகத்தையும் தொட்டுக்கூடப் பார்க்காமல் எண்பது, தொண்னூறு வயது வாழ்ந்து செத்துப்போனவர்களும் உண்டு. அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று அல்ல புத்தகம். சோறும் கூரையும் அவசியம். புத்தகம் ஆடம்பரம் அல்லது அனாவசியம் என்கிற மனோபாவம் தமிழர்களிடம் பதிந்த ஒன்றுதான். அந்த மாதிரி மனிதர்களுக்கு அருகிலேயே, பட்டினி கிடந்து புத்தகம் வாங்குகிற வாசகர்களும் இருக்கவே செய்கிறார்கள். புத்தகம் வாங்குவதும் வாசிப்பதும் வாழ்வதற்கான நியாயமாகவே நினைப்பவர்கள் இருப்பதனாலேயே புத்தக விழாக்கள் ஆண்டுதோறும் வளர்கின்றன.

1980-க்குப் பிறகு, சென்னைக்கு நிரந்தரமாக வந்த பிறகே எனக்குப் புத்தகக் காட்சி அறிமுகம் ஆயிற்று. முதல் பார்வையில் ஒரு பெரிய திகைப்பே எனக்கு ஏற்பட்டது. இத்தனை புத்தகங்களா என்கிற அதிர்ச்சியுடன் கூடிய வியப்பு இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்திருக்கிறது. ஆண்டுகள் வளர வளர, சுமார் 700-க்கும் மேலான அரங்குகளில் இன்று குவித்துவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், என் எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரிக்கவே செய்கின்றன.

முதன்முதலாக, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்ட காட்சியை என் ஊரில்(புதுச்சேரி)தான் பார்த்தேன். ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, இப்போது ‘ரொமேன் ரோலந்து நூலகம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்போதைய அரசு நூலகத்துக்கு அப்பா அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். மிக உயர்ந்த மேல்தளம்கொண்ட அந்தக் கட்டடத்தின் உச்சி வரைக்கும், இரண்டு ஆள் உயர மர அலமாரிகளில் ஒழுங்காக, பழுப்பு நிற அட்டை போட்ட புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மேல்தளத்தில் ஊரும் பல்லி, தவறித் தரையில் விழுந்தால் உடல் சிதறிச் செத்துத்தான் போகும். அந்த வயதில் அத்தனைப் புத்தகங்களையும் ஒருசேரப் பார்த்தபோது எனக்கு வருத்தமும், இவற்றில் எத்தனையை நம்மால் படிக்க முடியும் என்ற ஆயாசமும் ஏற்பட்டது. தமிழ்நாடு, ஆங்கிலேயர் தொடர்பு கொண்டதுபோல நாங்கள், ஃபிரெஞ்ச் தொடர்பு கொண்டவர்கள். எனக்குப் ஃபிரெஞ்ச் மொழியிலிருந்து தமிழக்கு வந்த நூல்களே முதல் இலக்கியப் பரிச்சயம். பால்சாக், மாப்பசான், ஜோலா, ஸ்டெந்தால், யூகோ என்று பலரும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் உரையாடலில் கலந்துகொண்டேன்.

புத்தகக் காட்சி, புத்தகச் சந்தையாக விரிவடைந்தது, ஆண்டுதோறும். நான் தொடர்ந்து வாசிப்பவன். முக்கியமான புத்தகங்களை அவ்வப்பொழுதே வாங்கிவிடுபவன். அதனால், காட்சியில் நான் புதிய புத்தகங்களை வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. என்றாலும், சுற்றிப் புத்தகங்கள் சூழ, நடுக்கடலில் ஒற்றைக் கட்டுமரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒற்றை மீனவன்போல, நான் இருக்க வேண்டும் என்றெண்ணியே புத்தகத் திடலுக்கு வருகிறேன். அது படைப்பாளிகளுக்கு நான் செய்யும் மரியாதை.

புத்தகப் பக்கங்களில் கறுப்பு எழுத்துகள் என் பார்வைக்கு வருவது இல்லை. மாறாக, அங்கு ஒரு மேதை உறைகிறான். எந்த அங்கீகாரமும் பெற்றிராத ஒரு படைப்புக் கலைஞன், நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறான். தஸ்தயெவ்ஸ்கியை, நோயுடனும், கடனுடனும் அவன், பட்ட அவமானங்களுடன்தான் அதைப் படிக்க முடிகிறது. மனிதன் பூச்சியாக மாறும் கொடுமையைக் கண்டு அவஸ்தைப்பட்ட எழுத்தாளனின் கண்ணீரில் புத்தகப் பக்கம் நனைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. அப்படி உணர்பவரே வாசகர். மேன்மைமிகு எழுத்தாளர் களோடு கைகுலுக்கும் தகுதி அத்தன்மையரான வாசகருக்கே உண்டு.

இப்போதெல்லாம் குவிந்திருக்கும் புத்தகங்களைக் கண்டு நான் மலைப்பது இல்லை. காரணம், அந்தக் குவியல்களில் புத்தகம் என்று சொல்லத்தக்கவை வெகுசிலவே. ஒரு தேர்ந்த வாசகர் குப்பைகளில் இருந்து தரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். இது எல்லோர்க்கும் சாத்தியம் இல்லை. தொடர்ந்த இலக்கிய வாசிப்பும் பத்திரிகைக் கவனிப்பும்கொண்ட வாசகருக்கே இது சாத்தியப்படும். இந்த ஆண்டு வெளித் தள்ளப்பட்டிருக்கும் ஆயிரம் புத்தகங்களில் ஐம்பது புத்தகங்கள் தேர்வதுகூட சிரமம்தான். இது எப்போதும் இப்படித்தான். நேற்றும் இன்றும் நாளையும்.

இப்போதெல்லாம் சமையல் ராணிகள் பலர் புறப்பட்டு, ஆபீஸுக்குப் போகும் பெண்களுக்கான சமையல் குறிப்புகள், மதிய, மாலை, இரவு சமையல் குறிப்புகள் எல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். மனைவியை மகிழ்விக்க முப்பது வழிகள் முதல் முன்னூறு வழிகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றனவாம். ‘உங்கள் குளியல் அறையை வரவேற்பு அறைக்குப் பக்கத்தில் வைத்தால் செல்வம் கொழிக்கும்’ என்றுகூட ஒரு புத்தகம் சொல்லலாம். நாலு வாரங்களுக்குள் கோடீஸ்வரனாகும் வழியைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம்கூட நமக்காகக் காத்திருக்கலாம். இதுவும் தேவைதான். ஆனால், தரமாக, உண்மையாக, அக்கறையோடு எழுதப்பட்டதாக இருந்தால்!

உலகின் அனைத்துத் துறைகள் பற்றியும், வானத்தின் கீழே உள்ள, வாழ்வின் அனைத்து விஷயங்கள் குறித்தும் புத்தகங்கள் வேண்டும். ஆனால், அந்தந்தத் துறைகளின் உயர் ஆராய்ச்சியாளர்கள் எழுதிய ஆதாரபூர்வமானதும், உண்மையானதுமான புத்தகங்களாக அவை இருக்க வேண்டும். இந்தத் தேவையைப் புத்தகத் திருவிழா நிறைவேற்றும் என்றால், ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
அரைகுறை ஆராய்ச்சிகள், தகுதி இல்லாதவர்கள் எழுதும் துறைசார் எழுத்துகள், வெகுஜனக் கலாசாரத்துக்குத் தீனி போடும் ஆழமற்ற கதைகள், கவிதைகள், நாவல்கள் குவிவதை நான் எப்படித் தடுக்க முடியும்? ஒரு வாசகன் மேல் நட்டத்தைச் சாட்டக் கூடாது என்பது என் வேண்டுகோள்.

படைப்பாளர்களின் பணி மகத்தானது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஒரு தேசத்தின், ஒரு காலகட்டத்தின் கலாசாரத்தைக் கட்டியமைக்கும் பணி படைப்பாளருடையது. மானுட குலத்தின் மனசாட்சியாக இருப்பவர்கள் படைப்பாளர்கள்தாம். அந்தப் படைப்பாளர்களின் மேன்மைக்குச் சற்றும் குறைந்தது இல்லை, பதிப்பாளர் பணி. ஒரு புத்தகத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறோம்? ஏன் பதிப்பிக்கிறோம்? அப்படிப் பதிப்பித்தால், அந்த மொழிக்குரிய மக்கள் மற்றும் கலாசாரம் அடையப்போகும் நன்மை என்ன? முன்னேற்றம் என்ன என்பது குறித்த புரிதல் பதிப்பாளர்களுக்கு இருக்கும் என்றே நான் நம்ப ஆசைப்படுகிறேன்.

தடாலடியாக வந்து, புகழ் வெளிச்சம் பெற்ற எழுத்தாளர்கள், தனக்குத் தானே தம் முகத்துக்கு டார்ச் வெளிச்சம் அடித்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அக்கப்போர் கருத்துகள் சொல்லி தம்மைத் திரும்பிப் பார்க்கவைக்கும் எழுத்தாளர்கள், தெருவில் தேநீர் அருந்தப்போகும்போதும் கைதட்டிக்கொண்டே நடக்கும் விளம்பர விபரீதர்கள், இவர்கள் எல்லாம் இன்று எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிவதைப் பதிப்பாளர்கள் உணர்ந்து ஒதுக்க வேண்டும். விற்பனை ஆகிறது என்று சொல்லிப் பிரசுரிப்பது நல்ல தொழில் ஆகாது என்பதைப் பதிப்பாளர்கள் அறிவார்கள், என்று நான் நம்ப ஆசைப்படுகிறேன்.

புத்தகங்களைப் பார்க்க, வாங்க, பேச, நண்பர்களுடன் உரையாட, ஒரு வகைக் கலாசாரச்சூழல் நிலவுவதால், புத்தகக் காட்சியை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். அதேசமயம், பணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துவிடக் கூடாது.

நூலக ஆணைக்கு, விருதுகளுக்கு பதிப்பாளர்கள் அனுப்பும் புத்தகங்களை யார் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள் என்கிற பட்டியலை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பதிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது சரிதான். புத்தகங்களை நேரடியாகப் பதிப்பாளர்களிடமே அரசு வாங்க வேண்டும். இதில் இடைத்தரகர்களுக்கு இடம் இல்லை. பதிப்பாளர்களுக்கும் நூலகத் துறைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். நூலகத் துறை சார்பாகச் சில பினாமிகள் செயல்படுவதாகச் சொல்லப்படுவது பொய்யாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

நல்ல புத்தகங்களே சமுதாயத்தை உயர்த்தும். மனிதர்களை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கே உண்டு. அதில் கள்ளத்தனம் நுழைந்துவிடக் கூடாது. பொறுப்பற்ற முறையில் புத்தகம் வெளியிடுவது பெருங்குற்றம்.

வாருங்கள், நண்பர்களே! எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் இணைந்து ஒரு புது யுகத்தை உருவாக்குவோம்!