Published:Updated:

தேர்பலி - சிறுகதை

தேர்பலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தேர்பலி - சிறுகதை

என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்

தேர்பலி - சிறுகதை

என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
தேர்பலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தேர்பலி - சிறுகதை

முதல் சாமம் கடந்த அகாலம். இருட்டு கட்டிய வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. கல்தீப விளக்குகள் அணைந்துபோயிருந்தன. பின்வீதியில் எங்கோ குருட்டு ஆந்தைகள் சத்தமாகக் குடுகின. நெட்டையாண்டி, எட்டுவைத்து நடந்தான்.

தேர்பலி - சிறுகதை

வீட்டின் வெளி மதில் கதவு திறந்தே கிடந்தது. விளக்குமாடத்து அகல் ஒளி, கீழ்திசைக் காற்றுக்கு நடுங்கியவண்ணம் இருந்தது. கல்நிலவு வாசற்படியில் தலை வைத்துப் படுத்திருந்த கனகா, காலடி அரவம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள். நெட்டையாண்டிக்கு முன்னே ஓடி, சமையல்கட்டுக்குள் கோரைப் பாயை விரித்துப் போட்டாள். பித்தளைச் சொம்பு நீரை நீட்டினாள். கை அலம்பிவிட்டு வந்த நெட்டையாண்டி, பாயில் சம்மணமிட்டு அமர்ந்தான். அகல் சுடரின் அசைவுக்கு ஏற்ப நிழல்கள் சுவரில் விஸ்வரூபமாக அசைந்தன. கனகா, தலைவாழை இலையில் நீர் தெளித்து, பச்சரிசி சாதத்தைப் பரிமாறி, தொட்டுக்க சுரைக்கூட்டு வைத்தாள். நெட்டையாண்டி, மௌனமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சற்றுநேரம் கழித்து எதிரில் அமர்ந்திருந்த கனகா கேட்டாள், “விடியிறதுக்குள்ள தேர் நகர்றதுக்குப் பரிகாரம் கண்டுபிடிச்சுட்டாரா உங்க மாயவித்தைக்காரர்?’’

“ம்.’’

“எப்படி?’’

“அதுக்கு கர்ப்பவதியைப் பலிகொடுக்கணுமாம்.’’

“கர்ப்பவதிக்கு எங்க போவீங்க?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்பலி - சிறுகதை

நெட்டையாண்டி பதில் பேசாமல் சாப்பிட்டு முடித்து, கை அலம்பினான். முந்தானையை நீட்டிய கனகாவின் மேடிட்டிருந்த அடிவயிற்றை ஒரு கணம் வெறித்துப் பார்த்தான். கனகா சிரித்தாள். நெட்டையாண்டியின் முகம் இறுகிற்று. திடீரென மேல்துண்டை எடுத்து கனகாவின் வாயைக் கட்டினான். தூக்கித் தோளில் கிடத்தி நடந்தான். கால்களையும் கைகளையும் உதறித் திமிறிய கனகாவால் எதுவும் செய்ய முடியவில்லை. கல்நிலவு சட்டம், நெட்டையாண்டி நெற்றிப்பொட்டில் மோதியது. உச்சந்தலை அதிர்ந்து வலித்தது. தடுமாற்றத்தை வெளிக்காட்டாமல் வாசற்படி இறங்கி நடந்தான்.

நெட்டையாண்டிக்கு சிறு நடுக்கம் உடம்பை ஊடுருவிச் சென்றது. அந்த நடுநிசி கொடுந்துயர் தருணம் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்து, மனதை இம்சைப்படுத்தியது. குறுகிய தார்சாலை, போக்குவரத்து இல்லாமல் நீண்டது. இருபுறமும் நெல்வயல்கள் நடவு இன்றி கிடந்தன. தளர்வாக நடந்துகொண்டிருந்த நெட்டையாண்டி, புறச்சூழலை மறந்து மீண்டும் கடந்தகால நினைவில் மூழ்கினார்.

நெட்டையாண்டிக்கு பதினெட்டு வயது. ஆறு அடி உயரம். திக்குசான ஆள். மீசை கொஞ்சம் தடிக்க, அதை முறுக்கிவிட்டுக்கொண்டு முரட்டுத்தனமாக ஊருக்குள் திரிந்தான். ஆனால், தோற்றத்துக்கு நேரெதிரான பயந்த சுபாவம். விளக்குவைத்த பிறகு வீட்டைவிட்டு வீதியில் இறங்காத பயந்தாங்கொள்ளி. எப்போதும் பசி அடங்காத வயிறு. தின்பதற்காக ஊரில் யார் கூப்பிட்டாலும் போய் எடுபிடி வேலைகள் செய்தான். சிறு குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் மிரட்டி பிடுங்கித் தின்றான். ஊருக்குள் எந்த மதிப்பும் இல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நெட்டையாண்டிக்கு, ஊரே மதிக்கும் ஒரு காரியத்தைச் செய்யும் சந்தர்ப்பம் வாய்த்தது.

அப்போது ஹேவிளம்பி வருடம் முடிவுறும் தறுவாயில் இருந்தது. பருவமழை பொய்த்துப்போனதால் எங்கும் வறட்சி. தோட்டவெளிகள் தரிசாகிக் கிடந்தன. சேந்துகிணறுகளின் தரையில் சம்புக்கோரைகள் முளைத்துப் பூப்பூத்துவிட்டன. ஆலாம்பாளையத்துச் சனங்களுக்கு, குடிக்க தண்ணீர் இல்லை. நெட்டையாண்டி, ஊருக்குத் தெற்கே உப்பாற்றில் ஊற்று தோண்டினான். ஒரே நடையில் மூன்று குடங்கள். சும்மாட்டுத் தலையில் ஒன்று. இடது கக்கத்தில் ஒன்று. வலது கையில் தொங்கவிட்டு ஒன்று என ஊர் பெண்களுக்காகத் தண்ணீர் சுமந்தான். அதனாலேயே எல்லா வீட்டுத் திண்ணைகளிலும் உரிமையோடு உட்கார்ந்து, நெல் அரிசிச்சோறு சாப்பிட்டான்.

பங்குனி பிறந்தது. உப்பாற்று ஊற்றுக்குழியில் நீர் வற்றிப்போனது. ஊர் கூடியது. முனியப்புச்சிக்குப் பச்சைத் தடுக்கு வேய்ந்து சாட்டு அறிவித்தனர். நெட்டையாண்டியின் அய்யாதான் பெரிய பூசாரி. முனி விரட்டும் இரவு. பலி கிடாயின் குடல் மாலை போட்ட பெரிய பூசாரிக்கு, அருள் வந்தது.

“ஊருக்கு மழையைக் கொண்டுவராம நான் போக மாட்டேன். என் வெறி, ஆவேசம் அதிகமாகியிருக்கு. ரத்தம் குடிக்க என் பல் எல்லாம் துடிக்குது. ஊருக்குள்ள ஒரு சனம் இருக்கக் கூடாது.”

ஊர் கவுண்டரும் முனி விரட்டும் இளைஞர்கள் சிலரும் பூசாரியோடு இருந்துகொண்டனர். மற்றவர்கள் எல்லோரும் ஊரைவிட்டு தெற்கே புறப்பட்டனர். நெட்டையாண்டியும் போனான். உப்பாற்றின் அக்கரைக்குப் போய் ஊரைப் பார்த்து உட்கார்ந்துகொண்டனர். எங்கும் நிசப்தம்கூடிய இருள். நெட்டையாண்டிக்கும் சேக்காலிகளுக்கும் நேரம் போக மறுத்தது.

தேர்பலி - சிறுகதை

சேக்காலிகளில் ஒருவன் கேட்டான், “ரெண்டாம் ஆட்டம் படத்துக்குப் போவமா?’’

நெட்டையாண்டி அது வரை படம் பார்த்தது இல்லை. நான்கு சேக்காலிகளோடு தரிசு வயல்களைக் கடந்து நடந்தான். தாராபுரத்தின் கிழக்கு ஓரம் கொளுஞ்சிவாடியில் வசந்தா டென்ட் கொட்டகை இருந்தது. சுற்றிலும் பனைமட்டைப் படல். சேக்காலிகளே டிக்கெட் எடுத்தனர். உள்ளே மணல் தரையில் உட்கார்ந்தனர். வெள்ளைத் திரையில் `நாடோடி மன்னன்’. படைவீரர்கள் குதிரையில் விரைந்து வந்தனர். திடீரென நெட்டையாண்டி எழுந்தான். அதற்குள் திரையில் குதிரைகள் நெருங்கியிருந்தன. நெட்டையாண்டி திரும்பி, மணல் தரையில் அமர்ந்திருக்கும் ஆட்களை மிதித்தபடி ஓட ஆரம்பித்தான். யாருக்கும் எதுவும் புரியவில்லை. சேக்காலிகள் பின்னே எழுந்து ஓடிவந்தார்கள். நெட்டையாண்டி, நுழைவுவாயிலைக் கடந்து பனைமட்டைப் படலை எகிறித் தாண்டினான். குதிரைகள் பின்னே துரத்துவதுபோலவே இருந்தது. கால்களின் குளம்பொலி கிட்டத்தில் வந்துகொண்டே இருந்தது. நெட்டையாண்டி, தரிசு வயல்களின் வரப்புகளைத் தாண்டித் தாண்டி ஓடியபடியே இருந்தான். இருந்திருந்தாற்போல் பொட்டுப்பொட்டென மழைத்துளிகள் இறங்கின. கருத்த முகில்கள் திரண்டு வானம் கொள்ளாமல் தேங்கி நின்றன. மின்னல் படர்ந்து இடி இடித்தது; மழை கனத்தது. குதிரைகள் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருந்தன. நெட்டையாண்டி, ஓடிக்கொண்டே இருந்தான்.

உப்பாற்றுக் கரை வந்ததும் வாய் முனகியது, “குதுர தொரத்துது... குதுர தொரத்துது...”

நெட்டையாண்டியின் அம்மாக்காரி அழ ஆரம்பித்தாள்.

“எம் புள்ளைய முனியப்புச்சி புடுச்சுக்கிச்சு.”

ஊர் சனங்கள் பயந்துபோனார்கள். முதல் கோழி கூப்பிட, மழை ஓய்ந்தது. நெட்டையாண்டி சுயநினைவு இழந்தான். உப்பாற்றில் வெள்ளம் வடியவே இல்லை. முனி விரட்டிய பிறகு  ஊர் கவுண்டர் பரிசல் போட்டு ஊர் சனங்களை ஊருக்குக் கூட்டிவந்தார். அந்த வாரத்திலேயே ஊர் சேந்துகிணறுகள் மேல் ஜலம் பொத்து நிரம்பியது. அய்யாவால் நெட்டையாண்டியைக் குணப்படுத்த முடியவில்லை. பச்சிலைகளும் சூரணங்களுமாகச் செய்த சிகிச்சைகள் வீணாகின.

அன்று உச்சிவெயில் கொளுத்தும் பிற்பகல். நெட்டையாண்டியைப் பார்க்கவந்த ஊர் கவுண்டர் அய்யாவைத் தனியே கூட்டிப்போய் பேசினார்.

“முனியப்புச்சிக் குதுரயைத்தான் அப்படிச் சொல்றான். அவனை இங்க வெச்சிருந்தா பிழைக்கவைக்க முடியாது. வேற இடம் மாத்திப்பாரு.”

சாயங்காலத்தில் ஊர் கவுண்டரே சவ்வாரி வண்டியும் பூட்டிக்கொடுத்தார்.நெட்டையாண்டியைத் தூக்கி வண்டியில் ஏற்றிக் கிடத்தினர். ஈர மண்பாதையில் வடக்கு நோக்கிப் போனது வண்டியின் பயணம். நெடுநாட்களுக்குப் பிறகு தானியக் கதிர்களைச் சூறையாடும் வானாஞ்சிட்டுகள் கிறீச்சிட்டவாறு படை படையாகப் பறந்து வந்தன. வடக்குச் சீமை பண்டாரத்தோடு ஓடிப்போன அத்தைக்காரியின் உறவு முறிந்து, இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அய்யா வெட்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத்தான், அந்த வீட்டின் வெளி மதில் கதவின் முன் வண்டியில் இருந்து இறங்கினார். ஆனால், அத்தைக்காரியும் மாமாவும் பழைய பகையை மறந்து, நெட்டையாண்டியை வீட்டுக்குள் தூக்கிப்போனார்கள். சிலுவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் வைத்தியம் பார்த்தார்கள். குணமானதும் கனகாவைக் கட்டியும் வைத்தார்கள்.

அடுத்த கார்காலம் வந்தது. மாமாவும் அத்தைக்காரியும் காசியாத்திரை கிளம்பிப் போய்விட்டனர். காமாட்சி அம்மன் கோயில் முறைமை பூஜையை, நெட்டையாண்டியே கவனித்து வந்தான். அந்த வருடத்தில் ஆடி பதினெட்டுக்குப் பின்னிட்ட தினத்தில் இருந்தே பிடித்த பருவமழை ஓயவே இல்லை. தினமும் சாயங்காலம் மழை வந்துகொண்டே இருந்தது. ஆவணி, புரட்டாசி கடந்தும் இதே நிலைதான். மானாவாரி நிலங்களில் நீர் ஓரம்பு எடுத்துவிட்டது. விதைத்து முளைத்திருந்த மானாவாரிப் பயிர்கள் எல்லாம் இற்று மிதந்தன. மேகாட்டுக் குடியானவர்களுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நெல்நாற்று விட்டு நட்டனர். நல்ல மகசூல். தைப்பூசத்துக்கு முன்பே அறுவடை முடிந்து, நெல் மூட்டைகளைத் திண்ணையில் கொண்டுவந்து அடுக்கினர். குடியானவர் வளவே குதூகலித்துக் கிடந்தது.  நாட்டாமைக்காரர் காமாட்சி அம்மன் சாட்டை அறிவித்தார்.

அதேவேளை பட்டு நெசவாளர் வளவின் நிலை வேறாக இருந்தது. எங்கும் பட்டுப்பூச்சி செடிகள் இற்றுப்போய்விட்டதால், பட்டுக் கூடுகளின் வரத்தே இல்லை. பட்டுப்புழுக்கள் உருமாற்றம்கொள்ளும் முன் சுடுநீரில் போட்டு நூல் பிரிக்கும் கொப்பரைகள் கவிழ்த்து வைக்கப்பட்டன. பட்டுத்தறிகள் நெசவு இல்லாமல் போயின. தார்பட்டு நூற்கும் பெண்களின் ராட்டைகள் அட்டாழியில் கிடத்தப்பட்டன. நெசவாள இளந்தாரிகள் நாள் எல்லாம் ஊர் மடத்திண்ணையில் உட்கார்ந்து தாயமும் பாஞ்சாங்கரமும் விளையாடி பொழுதைக் கழித்தனர்.

அன்று நாட்டாமைக்காரரின் சாட்டு வரி வசூலிப்பவர்கள், நெசவாளர் வளவுக்குள் வந்து திடுமுட்டி தட்டினர். நெசவாள இளந்தாரிகள் கொதித்துப்போயினர். நெசவாள முன்னோடும்பிள்ளை தலைமையில் நாட்டாமைக்காரரைப் பார்க்கச் சென்றனர். கோயிலடியில் தேர் மராமத்துச் செய்யும் ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்டாமைக்காரர், வெகு நேரத்துக்குப் பிறகே இவர்கள் பக்கம் வந்தார்.

“சேடனுக எல்லாம் சேர்ந்து வந்திருக்கீங்க. என்ன சோலி?”

“நாங்க நெசவு இல்லாம முழிப் பிதுங்கிக் கிடக்கிறோம். நீங்க அம்மன் சாட்ட அறிவிக்கலாமா?”

“எங்க மானாவாரி பூமியில நெல்லு விளையவெச்சிருக்கா அம்மன். நாங்க எதுக்கு சாட்ட நிறுத்தணும்?”

“நாங்களும் சாட்ட நிறுத்தச் சொல்லல. எங்க நிலைமை சீராகிறவரைக்கும் தள்ளிவையுங்கனுதான் கேட்கிறோம்.”

“அறிவிச்ச சாட்ட நிறுத்தினா, அம்மன் கோபத்துக்கு ஊர் ஆளாக வேண்டிவரும். உங்களால முடியலைன்னா வரி குடுக்க வேண்டாம்.”

நெசவாள முன்னோடும்பிள்ளைக்குக் கோபம் வந்தது.

“நாங்க ஒண்ணும் அந்த அளவுக்குத் தரம்கெட்டுப் போகலை. எங்களுக்கும் மானம், ரோஷம் இருக்கு.”

தேர்பலி - சிறுகதை

தேர்த் திருவிழா களைகட்டியது. முதல் நாள் தேர் புறப்பாடு. ஐந்துவடத் தேர், குடியானவர் வளவு வீதிகளில் மேளவாத்தியத்துடன் வலம்வந்தது. தேர் முகப்பில் உட்கார்ந்திருந்த நெட்டையாண்டி, ஆரத்தியைக் காட்டி குங்குமம் வழங்கினான். குடியானவர்களின் முகங்கள் எங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். தேர் நெசவாளர் வளவுக்குள் நுழைந்தது. ஆட்கள் யாருமே தேர் வடம்பிடிக்க முன்வரவில்லை. ஒரு நாற்சந்தியில் முதல் நாள் தேர் நிலைகொண்டது. ஊர் ஓசை அடங்கிவிட்டது.
 
எங்கு இருந்தோ இரவாடிவித்தைக்காரர்கள் ஊருக்குள் வந்தனர். கொம்புகள் ஊதப்பட்டன. தப்பட்டைகளும் முரசுகளும் கொட்டி முழங்கின. முகத்தில் அரிதாரச் சாயம் பூசிய இரவாடிவித்தைக்கார ஆண்களும் பெண்களும், வாளும் வேலும் ஈட்டியும் ஏந்தியபடி அணிவகுத்து வந்தனர். பிச்சைப்பாத்திரம் வைத்திருந்த சிறுவர்கள், சிங்கம், புலி, குரங்கு, கருடன், பூதம் என விதவிதமான கொடிகளை ஆட்டியபடி வந்தனர். தேர் முன்பாக வந்ததும் எல்லோரும் குழுமி வட்டமிட்டனர். கை கால் சலங்கை குலுங்க இசைக்கு ஏற்ப நடனமாடினர். ஊர் சனங்கள் கூடியதும், கருத்த குள்ளமான தலைமை இரவாடிவித்தைக்காரர் திடீரென சத்தமிட்டார். தப்பட்டையும் முரசும் கொம்பும் ஓசை அடங்கின. நடனமாடிய இரவாடிவித்தைக்காரர்கள் ஒதுங்கி நின்றனர்.

தலைமை இரவாடிவித்தைக்காரர் கூட்டத்தைப் பார்த்துப் பேசினார், “அய்யாமார்களே... ஆத்தாமார்களே... நாங்க காட்டுற வித்தைக்கு எதிர்வித்தை காட்டினாலும் சரி. இல்ல... பொய்னு நிரூபிச்சாலும் சரி. நாங்க தோத்தவங்களாவோம். அப்படி யாரும் செய்யலைன்னா, நீங்க எங்களுக்குக் கப்ப வரி கட்டணும்.”

கூட்டம், அமைதியாகப் பார்த்தது. தலைமை இரவாடிவித்தைக்காரர், சுருக்குப்பையில் இருந்து கோழிமுட்டை ஒன்றை வெளியே எடுத்துக் காட்டினார். வயிறு பெருத்த இளம் இரவாடிவித்தைக்காரன் ஒருவன் அந்தக் கோழிமுட்டையை வெடுக்கெனப் பிடுங்கி மேலே வீசினான். கோழிமுட்டை கீழே விழும்போது திடீரென சேவலாக மாறி இறக்கையடித்துப் பறந்தது. நடனமாடிய இரவாடிவித்தைக்காரர்கள் அந்தச் சேவலை துரத்திப் பிடித்தனர். உடனே தலைமை இரவாடிவித்தைக்காரர், அந்தச் சேவலை வாங்கி கொண்டையை நீவினார். அந்தச் சேவல் முட்டையிட்டது.

கூட்டம் ஆச்சர்யத்தோடும் மிரட்சியோடும் பார்த்தது. கொஞ்ச நேரம் அங்கு அலாதியான அமைதி. இளம் இரவாடிவித்தைக்காரன் நாட்டமைக்காரரின் கையைப் பிடித்து, தலைமை இரவாடிவித்தைக்காரரின் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினான்.

“அய்யாமாரே... உங்க ஊர் எங்ககிட்ட தோத்துப்போச்சு. இப்ப கப்ப வரி கட்டுங்க.”

நாட்டாமைக்காரர், வேட்டித் தலைப்பில் முடிந்திருந்த காசுகளை எடுத்து நீட்டினார்.

தலைமை இரவாடிவித்தைக்காரர் வாங்க மறுத்தார்.

“ அய்யாமாரே... இதெல்லாம் கட்டுப்படியாகாது. முடுஞ்சு வெச்சிருக்கிற நோட்டுக்களை எடுத்துப் போடுங்க. இல்லைன்னா இந்தத் தேரையே நகர்த்தவிடாம செஞ்சுட்டுப் போயிடுவேன்.”

நாட்டாமைக்காரர், வெடுக்கெனக் கையை உதறி நகர்ந்தார்.

``கட்டுவித்தக்கார நாயிக... என்னையே மிரடுறீங்களாடா? போட்ட காசைப் பொறுக்கிக் கிட்டு ஊரைவிட்டு ஓடுங்க. இல்லைன்னா உதைச்சுத் துரத்திருவேன்.’’

நாட்டாமைக்காரர், கூட்டத்தை விலக்கி நடந்தார். உடனே நெசவாளமுன்னோடும் பிள்ளை அங்கு வந்து ஒரு ரூபாய் தாளை எடுத்துப் போட்டார்.

தப்பட்டையும் முரசும் அதிர்ந்து முழங்கின. கொம்புகள் உச்சஸ்தாயிக்கு ஊதப்பட்டன. நடனமாடும் இரவாடிவித்தைக்காரர்கள் நெசவாள முன்னோடும்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு நடனம் ஆடினர்.

ன்று இரவு இரண்டாம் சாமம் கடந்த வேளை. தேருக்குக் காவல் இருந்த நெட்டையாண்டி, இருண்ட ஆகாயத்தையும் கண் சிமிட்டும் விண்மீன்களையும் பார்த்தபடியே நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான். அப்போது காலடிச் சத்தம் கேட்டது. பார்வையைக் கூர்மையாக்கினான். நெசவாள முன்னோடும்பிள்ளை, நெசவாள இளந்தாரிகளை அழைத்துக்கொண்டு தேரைக் கடந்து கிழக்கு நோக்கிப் போனார். நெட்டையாண்டிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சிறு இடைவெளிவிட்டு இருளில் அவர்களைப் பின்தொடர்ந்தான். அவர்கள் ஊருக்குக் கிழக்கே ஆலந்தோப்புக்குள் நுழைந்தனர். பாரம் சுமக்கும் கோவேறுக் கழுதைகள் மிரண்டு எழுந்தன. இரவாடி வித்தைக்காரப் பெண்கள் கல் அடுப்பில் மண்பாண்டங்கள் வைத்துச் சமைத்துக் கொண்டிருந்தனர். துணிக்கூடாரத்துக்குள் இருந்து தலைமை இரவாடிவித்தைக்காரர் வெளியே வந்து கும்பிட்டார்.

“நிஜமாலுமே உன்னால தேரை நகர்த்தாம செய்ய முடியுமா?”

“என்ன அய்யாமாரே... இப்படிக் கேட்கிறீங்க?”

“செய்ய முடியுமா... முடியாதா?”

“முடியும். ஆனா, தெய்வ காரியமாச்சே.”

நெசவாள முன்னோடும்பிள்ளை, கக்கத்தில் இடுக்கியிருந்த பட்டுச்சேலைகளை எடுத்து உதறி விரித்தார். சமையல் செய்யும் இரவாடி வித்தைக்காரப் பெண்கள் எல்லோரும் எழுந்து வந்து சூழ்ந்து பார்த்தனர். இளம் இரவாடிவித்தைக்காரன் சட்டெனப் பட்டுச்சேலைகளை வாங்கிக்கொண்டான்.

“நாளைக்கு தேர் நகராது அய்யாமாரே. அப்படி நகரணும்னா நாங்க வரணும்.”

“நீங்க வரக் கூடாது. விடியும்போது ஊரைவிட்டு வெகுதூரமா போயிரணும்.”

நெட்டையாண்டி, பெரும் குழப்பத்துக்கு ஆளானான். நேராகக் கிளம்பி நாட்டாமைக்காரர் வீட்டுக்குச் சென்றான். தூக்கச்சடவுடன் நடைக்கு வெளியே வந்த நாட்டாமைக்காரரிடம் நடந்ததைச் சொன்னான்.

“ஏண்டா ஏதாச்சும் கனவுகீது கண்டீயா என்ன? எங்களுக்குள்ள கொசலம் சொல்ற வேலையை வெச்சுக்காத!”

நெட்டையாண்டி, மேற்கொண்டு நிற்காமல் தேர் நிலைக்கே வந்துவிட்டான். அதற்குள் தேர் அருகில் தலைமை இரவாடிவித்தைக்காரரும் இளம் இரவாடிவித்தைக்காரனும் நின்று, கட்டுவித்தை மந்திரத்தைக் கடுமையாக ஓதிக்கொண்டிருந்தனர்.

``ஓம்... ஆம்... ஊம்... றீம்... றீம்...

காஉங்கி ஹ்றீம் றீம் வசிய...

மோகினி வா... வா...’’

பின்னர் தலைமை இரவாடிவித்தைக்காரர் தெற்குத் திசை பார்த்து நின்று சத்தமிட்டார்.

``குறளைப் பேய்களே... மறுபடியும் நான் வர்ற வரைக்கும் தேர்ச் சக்கரத்தை விட்டுறாதீங்க.’’

ஒருவர் பின் ஒருவராக கிழக்குத் திசை பார்த்துக் கிளம்பினர். நெட்டையாண்டி, தேரை நெருங்கினான். தேர்ச் சக்கரங்களைச் சுற்றிலும் கோழி ரத்தம்போல ஏதோ ஒன்று சிந்தியிருந்தது. நெட்டையாண்டிக்கு, பயம் எழுந்தது.

மறுநாள் இரவும் தேர் நகரவில்லை. வடம் பிடிப்பவர்கள் அதிகமாகி இழுத்துப் பார்த்தனர். சிறு அசைவில்லை. நெட்டையாண்டி, `இரவாடி வித்தைக்காரர்கள் வேலையைக் காட்டிவிட்டனர்' எனப் புரிந்துகொண்டான். ஆனால், நாட்டாமைக்காரர் புரிந்துகொள்ளவில்லை. பக்கத்து ஊர்களில் இருந்து ஆட்களைத் திரட்டிவந்து தொடர்ந்து தேரை இழுக்க முயன்று கொண்டே இருந்தார். தேர் அப்படியே ஆணி அடித்தாற்போல் நின்றது. விடியற்காலை வந்தபோது ஊர் மக்கள் முகத்தில் பீதி படரக் கலைந்துபோயினர். பகலில் நெசவாள முன்னோடும்பிள்ளை, காவல் நிலையம் சென்று நாட்டாமைக்காரர் தேரில் பில்லி, சூனியம் வைத்துவிட்டு ஊரை மிரட்டுவதாகப் புகார் கொடுத்தார். அதற்கு அடுத்த நாளும் தேர் நகரவில்லை. பகலில் ஜீப் ஒன்று தேர் நின்ற இடத்துக்கு வந்தது. கோவை ஜில்லா கலெக்டர், போலீஸோடு இறங்கி வந்தார். தலைப் பாகையுடன் கருத்த தாடி வளர்த்திருந்த சிங் கலெக்டர், தேரைச் சுற்றிப்பார்த்துவிட்டு போலீஸ்காரர்களுக்கு ஏதோ உத்தரவிட்டார். போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏறிக் கிளம்பிப் போயினர். அன்று சாயங்காலம் யானைகள் கொண்டு வரப்பட்டன. தேர் வடத்தை யானைகளின் காலில் கட்டி இழுக்கவைத்தனர். ஐந்து வடங்களும் முறுக்கி அறுந்துபோயின. தேரில் சலனம் இல்லை. ஊர் சனங்கள் மேலும் திகில் அடைந்தனர். சிங் கலெக்டர், நாட்டாமைக்காரரைக் கூப்பிட்டார். நாட்டாமைக்காரர் ஓடிவந்து, சிங் கலெக்டர் முன்பு பவ்யமாகக் கும்பிட்டு நின்றார்.

“இன்னும் ரெண்டு நாள் டைம் தர்றேன். அதுக்குள்ள தேரை நகர்த்திடணும். இல்லைன்னா தீ வெச்சுக் கொளுத்தச் சொல்வேன்.”

மேற்கு வானில் செந்நிறம் மறைந்து இருள் சூழ்ந்தது. ஊரில் இருந்து திசைக்கு ஒரு குதிரை வண்டி கிளம்பியது. சாட்டை நுனியால் அடிவாங்கிய குதிரைகள் வேகமெடுத்தன. விடியும் தருவாயில் வடக்கே சென்ற குதிரை வண்டி ஆட்கள் இரவாடிவித்தைக்காரர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். நெட்டையாண்டியும் நாட்டாமைக்காரரும் அங்கு போனார்கள். ஒரத்துப்பாளையம் பக்கம் நொய்யல் ஆற்றங்கரைப் பனைத்தோப்புக்குள் இரவாடி வித்தைக்காரர்கள் பதுங்கியிருந்தனர்.

தலைமை இரவாடிவித்தைக்காரர் நடுக்கத்துடன் பேசினார், “அய்யாமாரே... எங்க குறளிவித்தையால கட்டுவிக்கத்தான் முடியும். கட்டை அகற்ற முடியாது. வேணும்னா எங்களுக்குக் குருவகுலை குடுத்த சாமி இருக்கார். அவர்கிட்ட கூட்டிட்டுப் போறேன். எங்களுக்கு இப்படி எல்லாம் அபகீர்த்தி நேரும்னு தெரியாது. எங்கள மன்னிச்சு அருளணும்.”

தலைமை இரவாடிவித்தைக்காரர் நெடுஞ்சாண் கிடையாக நாட்டாமைக்காரரின் காலில் விழுந்து பாதத்தைப் பற்றிக்கொண்டார்.

சென்னிமலை மேற்குக் கனவாய்க்குச் சென்று குதிரை வண்டி நின்றது. சதுனிவௌவால்கள் பறந்து வட்டமிட்டன. திரவக் கள்ளிகளும் மாவிலிங்க மரங்களும் முற்றி நின்ற வனத்துக்குள் தலைமை இரவாடிவித்தைக்காரர் மேலே கூட்டிப்போனார். வெப்பாலை மரத்து நிழலின் கீழ் நரி உறங்கும் குகை முன்பு, மயில்தோகை மீது கோவணச்சாமியார் ஒருவர் நிச்சலனமாக உட்கார்ந்திருந்தார். தலைமை இரவாடிவித்தைக்காரர் கிட்டத்தில் போய், நடந்த விஷயத்தை அவர் காதோரம் சொன்னார். கோவணச்சாமியார் இலைகளைப் பறித்து பாறையில் தேர், ஒரு பெண், வீச்சரிவாள் என வரைந்து காட்டினார். தலைமை இரவாடி வித்தைக்காரர் பரவசத்துடன் சாமியார் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்தார்.
 
“சாமி உத்தரவு குடுத்திருச்சு. வாங்க போலாம்.”

தேர்பலி - சிறுகதை

நெட்டையாண்டிக்கும் நாட்டாமைக்காரருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. குதிரை வண்டியில் ஊர் திரும்பும்போது தலைமை இரவாடிவித்தைக்காரர் கேட்டார், “அய்யாமாரே... சாமி என்ன சொல்லுச்சுனு புரிஞ்சுதா?”

நெட்டையாண்டியும் நாட்டாமைக் காரரும் மௌனமாகப் பார்த்தனர்.

“பல நூறு வருஷங்களுக்கு முன்னால இதே மாதிரி தேர் நகராமல் போனப்போ, எங்க ஆதி குரு செஞ்ச பரிகாரம்தான் சாமி வரைஞ்ச அந்தப் படம். அப்ப ஆதி குரு குடகுராசாவிடம் முதல் மந்திரியா இருந்தார். பல்லவ தேசத்துல இருந்து வந்து கூப்புடுறாங்க. தேர்கிட்ட போய் பார்த்தா குறளைப் பேய்கள் சக்கரத்தைக் கெட்டியாகப் பிடிச்சுருக்கு. தன்னோட எல்லா சக்திகளையும் திரட்டிப் பார்த்தார். ஏவல்ல கட்டுண்ட தேர் நகரலை. அன்னைக்கு ராத்திரி நடையைச் சாத்திக்கிட்டு அம்மனை வேண்டினார். அம்மன் அசரீரியா ஆகாய வாக்கு சொல்லுச்சு... `தலைச்சாம் புள்ளயைக் கருவுற்றிருக்கும் கர்ப்பவதியைப் பலியிடு’னு. அந்த அர்த்த ராத்திரியில் கர்ப்பவதிக்கு எங்க போவார்? அதுவும் தலைச்சாம்புள்ளயைக் கருவுற்றிருக்கிற கர்ப்பவதிக்கு. அப்பத்தான் அவருக்கு தம் பொஞ்சாதி கர்ப்பவதிங்கிற ஞாபகம் வந்துச்சு. உடனே கூட்டிவந்து தேர் பலி குடுத்து தேரை நகர்த்தினாராம். அதுபோலதான் இன்னிக்கு நாங்க செய்றது லேசுபட்ட காரியம் அல்ல.’’

லைமை இரவாடிவித்தைக்காரர் தேர் முன்பு அமர்ந்து படையலிட்டு, ஏவல் கட்டுகளை விரட்ட பூஜையைத் தொடங்கினார். ஊரே நிசப்தமாகக் கிடக்க மந்திர உச்சாடனங்களின் சத்தம் பயமுறுத்தும்படி இருந்தது. நெடுநேரம் கழித்து தலைமை இரவாடிவித்தைக்காரர் அச்சம் கலந்த குரலில் நாட்டாமைக்காரரைக் கூப்பிட்டார்.

“வேற வழி இல்லை. குறளைப்பேய்கள் பலமா சக்கரத்தைக் கவ்வியிருக்கு. கர்ப்பவதியைப் பலி கொடுத்தாத்தான் அடக்க முடியும்.”

“அப்ப, கலெக்டர் சொன்ன மாதிரி தேரைக் கொளுத்திருவோம்.”

“தேரைக் கொளுத்தினா... குறளைகள் ஊரைக் கொளுத்திரும்.”

நாட்டாமைக்காரர் பயந்து நடுங்கினார். நெட்டையாண்டி ஒரு கணம் யோசித்தான். தைரியமாக வீட்டுக்குப் போய் கனகாவைத் தூக்கிவந்தான். தலைமை இரவாடிவித்தைக்காரர் கலசநீரை அள்ளி கனகா மீது வீசினார். வீச்சரிவாளை ஓங்கிப் பிடித்து நின்றார். உதடுகளில் இருந்து வெளிப்பட்ட ஆக்ரோஷமான மந்திரம், மௌனம் பூண்ட ஊர்வெளியை மீண்டும் கிழித்துக்கொண்டு பரவியது.

அந்த நேரம் நாற்சந்திக்கு குதிரை ஒன்று வாயில் நுரைதள்ள வந்து நின்றது. கோவணச்சாமியார் தீப்பந்தத்துடன் குதிரையில் இருந்து குதித்து இறங்கினார். தலைமை இரவாடிவித்தைக்காரர் ஓங்கியிருந்த வீச்சரிவாளைப் பிடுங்கி தூர வீசினார். ஏதோ சாடை காட்டினார்.

தலைமை இரவாடிவித்தைக்காரர் நெட்டையாண்டியிடம் சொன்னார், “சாமியே... தேரை நகர்த்துறேன்னு சொல்லிருச்சு. நீ உம் பொஞ்சாதியைத் தூக்கிட்டு வீட்டுக்கு ஓடிடு.”

ஒருபோதும் இல்லாமல் அப்போது ஊரைச் சுற்றிலும் குள்ளநரிகள் ஊளையிட்டன. மயங்கிக் கிடந்த கனகாவை திண்ணையில் கிடத்திய நெட்டையாண்டிக்குப் பயம் எடுத்தது. வெளி மதில் கதவைச் சாத்திவிட்டு வீதியில் இறங்கி நடந்தான்.

தேர்பலி - சிறுகதை

நீண்ட நெடுங்கால தேசாந்திரப் பயணம் முடிந்து ஊர் திரும்பிய நெட்டையாண்டி, நேராக காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். யாரோ வயதான சந்நியாசி என நினைத்து, எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இளம் பூசாரி ஒருவன் முள்பாதக் குறடின் மேல் நின்று சாமியாடிக்கொண்டிருந்தான். கணக்குகள் சொல்லி, காணிக்கை பெற்றான். நடுச்சாமத்துக்குப் பின் சாமியாட்டம் ஓய்ந்தது. குறிகேட்க வந்தவர்கள், வாகனங்களில் ஏறி கலைந்தனர். திடீரென எங்கும் அச்சுறுத்தும் தனிமை. நாலுகால் மண்டப மூலஸ்தானத்தைப் பூட்டிவிட்டு வந்த இளம் பூசாரி, உருவாரக் குதிரை ஓரமாக உட்கார்ந்திருந்த நெட்டையாண்டியைக் கண்டதும் அருகில் வந்தான்.

“இது சத்தியவாக்கான சாமி. இங்க ராத்தங்கக் கூடாது.”

“தங்கினா சாமி என்ன பண்ணும்?’’

“சாமி ஒண்ணும் பண்ணாது. ஆனா, எங்க தாத்தாவோட சித்த சக்தி உங்களை உசுரோடு விடாது.”

“நான் அதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.”

“யோவ் பெருசு! கொஞ்ச நேரத்துக்கு முன்னால என் சாமியாட்டத்தைப் பார்த்தல. அது எப்படினு நினைக்கிற? எல்லாம் அவரோட அருள்.”

நெட்டையாண்டி சத்தமாகச் சிரித்தார்.

“அவர் சாதாரண சித்தர் அல்ல. ஊருக்காக நிறைமாதப் பொண்டாட்டியவே தேர் பலி கொடுக்க நினைச்ச மகான்.”

நெட்டையாண்டி, மீண்டும் சத்தமாகச் சிரித்தார்.

“நீங்க இன்னும் நம்பலையில. வீட்டுக்கு வாங்க எங்க பாட்டியவே சொல்லச் சொல்றேன்.”

நெட்டையாண்டி பதில் கூறாமல் இருளில் இறங்கி நடந்தார். ஊரை எல்லாம் தாண்டி நடந்த பின்னால், கோவணச்சாமியார் தேரை நகர்த்தினாரா... இல்லையாங்கிற சந்தேகம் அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அவருக்குள் எழுந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism