Published:Updated:

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

Published:Updated:
சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி
சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை என்பது உலகின் குட்டி ‘மாதிரி பூமி’. அதனால்தான், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் இயல்பான உள்ளத்திலும், இடம்பெயர்ந்தேனும் தமது வாழ்வைச் செம்மையாக்கிக்கொள்ள விரும்பும் அனைத்து மக்களிடமும், சென்னை நகரம் குறித்தான ஒரு கனவை உருவாக்கி அதை நோக்கி நகரவும், அதைக் கண்டடையவும் தூண்டுகிறது. வந்து வாழ்ந்து பழகிய பின், ஒருவிதமான சலிப்பையும் முகச்சுழிப்பையும் உண்டாக்குகிறது. அதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

கிராமத்தின் அமைதியை, இயற்கைச் சூழலை சென்னை நகரச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குபவர்களும் உண்டு. ஆனால், வாழ்வோ, பிழைப்போ பல வாய்ப்புகளை அள்ளித்தரும் சென்னை நகரம் பல உள்ளங்களுக்குப் புத்துணர்ச்சியையும், புது இலக்கையும், புது வாழ்க்கைக்கான வழியையும் காட்டுகிறது. அதேசமயம், சென்னையின் உண்மையான முகம், சமூகத்தின் மிக ஆழத்திலிருந்து மேல் மட்டம் வரையிலும் இன்று மிகவும் மாறிவிட்டது. அதன் பழைமையான, இயல்பான பொலிவு இன்றைய  ‘வளர்ச்சிபெற்ற’ நகரின் அடியில் சிக்கித் திணறுகிறது.

கடற்கரை நாகரிகம், நதிக்கரை நாகரிகம் என இரண்டு வகையான நாகரிகங்களை சென்னையில் உணர முடியும். இந்த இரண்டு வகை நாகரிகங்களில் இருந்தும் விலகி வேறு ஒரு வளர்ச்சியுற்ற பலநிலைத் தோற்றமுள்ள நாகரிகத்தையும் சென்னையில் காண முடியும். இந்த இடைவெளிகளோடும்  முரண்களோடும்தான் இந்த நகரம் மின்னி மிளிர்கிறது. சென்னையின் நிஜத் தோற்றத்தை அதன் இயல்பை இலக்கியமாக்குவது மிகவும் கடினமான ஒன்று. அந்த முயற்சி, மிக நீண்டகாலமாக நடந்தபடியேதான் இருக்கிறது. 

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

பலர் முயன்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். தன்னுடைய படைப்புகளை வெளியிட, தானே இதழ் நடத்தியவர். `அனாதைப் பெண்’ என்கிற அவரது படைப்பு ஜூபிடர் பிக்சர்ஸால் திரைப்படமான வரலாறும் உண்டு. ஆனால், சென்னையின் அச்சு அசலான தோற்றம் ஓர் இலக்கியப் பின்புலத்தில் இதுவரை சொல்லப்பட்டுள்ளதா என்றால், மிகக் குறைவுதான். பரந்து விரிந்தபடியிருக்கும் இந்த நகரில் இரண்டு நதிகள், மூன்று கழிமுகத் துவாரங்கள், வடக்கும், தெற்குமாக நகரைக் கடக்கும் ஒரு நீண்ட கால்வாய், பெயர் சொல்லும் அளவிலான இரண்டு மலைகள், குன்றுகள், ஒரு காலத்தில் நரிகள் செழித்திருந்த பெருங்காடு... அதில் சிறுத்தைகள் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உண்டு.  உலகளவில் கவனம் கொள்ளத்தக்க பெரிய சதுப்பு நிலத்துடன் பறவைகளுக்கான இயற்கை சரணாலயம், சிறு தீவுகளென விரிந்துள்ள நகரை வேலி கட்டிக் காப்பதுபோல் வங்காளவிரிகுடா. அதன் நீண்ட அழகிய கடற்கரை என பன்முகச் சிறப்புள்ள நகரம். இதை, `உலகின் குட்டி மாதிரி’ எனச் சொல்லலாம்தானே!

இவற்றையெல்லாம் முறையாக நேர்மையாகக் காட்சிப்படுத்தும் இலக்கியம் இதுவரையிலும்

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

எழுதப்படவில்லை என்றாலும், தமிழ்மகனின் `வெட்டுப்புலி’ சென்னைப் புறநகரின் வடக்குப் பகுதியை ஓரளவு விரித்துக்காட்டி உள்ளது. புழல் ஏரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், அவர்களின் வாழ்வு, நீர்த் தேக்கக் கட்டுமானம், அதில் பிழைப்பு நடத்திய குத்தகைக்காரர்கள், கூலியாட்கள்,  கிராமப்பண்பில் இருந்து நகர்மயத்துக்கு உள்ளான பகுதிகளின் வாழ்வு... என மாற்றம் நிகழ்ந்த காலத்தைப் பேசுகிறது.

சென்னைப் பட்டணம் குறித்த இலக்கியங்கள் கடந்த காலங்களில், பெரும்பாலும் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர சமூக வாழ்வின் பதிவுகளாகவே இருந்து வந்திருக்கின்றன. அவையும் சென்னை இலக்கியங்களே. ஆனால், அவை நகர வாழ்வைப் படம்பிடிக்கின்றனவே தவிர, சென்னை என்கிற பெரும் பட்டணத்தின் வியர்த்து வடியும் நசநசப்பிலிருந்து எழும் மாயப் புன்னகையை, அசல் முகத்தைக் காட்டுகிறதா என்பது சந்தேகமே.

 ஜெயகாந்தனின் படைப்புகள் சென்னை இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த பணியைச் செய்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் உளவியல் வழியாக சமூகநிலையைப் பிரதிபலிக்கச் சொன்னவர் ஜெயகாந்தன். கவர்ச்சி அரசியலுக்கு பலியான விளிம்புநிலை மக்களின் கதைகளை, பாத்திரங்களை முன்னிறுத்தி அவர்கள் வழியாக அரசியலைப் பகடி செய்தார். `சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவலில் எம்.ஜி.ஆர் படம் போட்ட பனியனோடு படுக்க வந்தால், ஆசையோடு உறவுக்கு இணங்கும் மனைவியின் கதாபாத்திரத்தை எளிய மனிதர்களின் கதைகளில் திணித்த ஜெயகாந்தனின்  ‘துணிவு’, அதற்கு மேல் நகரவில்லை என்ற விமர்சனத்தையும் சேர்த்தே அவருடைய படைப்புகளை நாம் அணுக வேண்டி இருக்கிறது.  அவருடைய படைப்புகளில் சென்னையின் நிலவியல் சார்ந்த வாழ்வியலைக் காண முடிகிறது என்றாலும், அன்றைய அரசியல் காலச் சூழலைச் சார்ந்து எழுகிற பண்பாட்டுப் புரிதல், அதன் சிக்கலான சீரழிவு எனச் சில பகுதிகளை மட்டுமே அவரால் பேச முடிந்தது. ஆயினும், சென்னை இலக்கியத்தில் அவருடைய பதிவுகள் குறிப்பிடத் தகுந்தவையே.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

தற்போது எழுத வந்துள்ள இளம் படைப்பாளிகளில், விநாயக முருகனின் நாவல்களில் சென்னையின் உண்மை முகங்களைக் காட்டும் முயற்சி தெளிவாகத் தெரிகிறது. `ராஜீவ்காந்தி சாலை’, `சென்னைக்கு மிக அருகில்’, `வலம்’, `நீர்’ என, சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள ஊர்கள், விரியும் நகரின் சச்சரவு, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவது போன்ற முக்கிய விஷயங்களைத் தன் புதினங்களில் பேசுகிறார். குறிப்பாக, `வலம்’ நாவலில் வெள்ளையர் காலச் சென்னையை, வரலாற்று அடிப்படையில், நரியைக் குறியீடாகக்கொண்டு அவர் பேசும் நகர விரிவாக்கத்துக்குத் தரைமட்டமாக்கப்பட்ட மேட்டு நிலம், அழிக்கப்பட்ட நரிகள், புளியந்தோப்புப் பகுதி வாழ்க்கை... என அன்றைய நாளின் விளிம்புநிலை உழைக்கும் மக்களின் வாழ்வு, அந்த மக்களின் கல்வித் தேடல், அன்றைய கல்வியாளர்கள், அறிவு-அறியாமை என அன்றைய சூழலைக் காட்சிப்படுத்தி 20-ம் நூற்றாண்டின் தொடக்ககாலச் சென்னையின் வாழ்வைப் பேச முயன்றிருக்கிறார். காலகாலமாக அந்த நிலத்தில் வாழ்ந்து வரும் நரியை வெறியோடு வேட்டையாடும் வெள்ளையன் என்கிற குறியீட்டுக் கதை சொல்லலை,  இன்றைய சூழலிலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. 

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

பாக்கியம் சங்கரின் ‘நான் வட சென்னைக்காரன்’ தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் கவனத்துக்கு உரியவை. சுடுகாடு, அதை சுற்றியிருக்கும் வாழ்க்கை, கூடைச் சோறு, காதல் சாகசம், கானா என அப்பட்டமான வாழ்க்கையைத் தன் சொந்த அனுபவத்தின் புகைந்தெழும் மனதிலிருந்து அதைச் வடித்திருக்கிறார். முழு நகரத்திலும் வட சென்னையைப் புறக்கணிக்கும் வலியைப் பகடியுடன் சொல்லிச் செல்லும் நோக்கம், வட சென்னையின் பல விஷயங்களை நாம் முகச்சுழிப்புடன் கடந்துசெல்வதை எள்ளலுடன் சொல்ல முயன்றிருக்கிறார். வட சென்னையின் பொதுக் கழிப்பறை என்பது, இந்த நகரத்தின் குறியீடுபோல. அதைச் சொல்வதற்கு என்றே தனிப் புத்தகம் தேவை. கைவிடப்பட்ட மனிதர்களான வட சென்னைக்காரனின் வியர்வையில்தான் இந்தப் பரந்துபட்ட சென்னை நகரம் நாறி, நசநசக்காமல் மேலும் விரிவடைந்துகொண்டே போகிறது என்பதை வலியுறுத்த முயலும் ஓர் இலக்கிய முயற்சி அந்தத் தொகுப்பு.

சென்னையின் முக்கியமான குதூகலங்களில் ஒன்று கானாப் பாடல்கள்.  சாவு வீட்டின் சூழலையே மாற்றி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான ஒரு தத்துவ விசாரணையை, இசையால் மாயப் பொழுதாக்கும் ஆற்றல்கொண்டது கானா. துக்கம் மறந்து, வேறோர் உலகுக்குப் பயணமாகி சச்சரவின்றி முடியும் கானா அரிது.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

முக்கியமான பாடகன் வர, தாளம் போட, கை தட்ட, `ஓ’ போட, ஒத்து ஊத, எடுப்பு துடுப்பென ஒரு பட்டாளமே வரும். திட, திரவ போதையூட்டிகள் சகலமும் பொழுது சாய்ந்த வேளையில் தொடங்கி விடிய விடிய-கல்லூரி மாணவர்கள், அதில் சட்டம் பயில்வோர், மருத்துவம், பொறியியல், சத்துணவுக்காக மட்டுமே ஒண்டிய கடந்த கால மாணவன் எனப் பலரகம்- பிணமிருக்கும் துக்கம் மறந்து, கானாவில் லயித்து, செத்தவரின் வரலாற்றைத் தோண்டித் துருவி மாலையாகக் கோத்து, புதுப்புது வார்த்தைகளைச் சரம்சரமாகத் தொங்கவிட்டு, கிண்டலும் கேலியும் உதிரிப் பூவாகக் கொட்டும். கிண்டல்களின் ஊடே தத்துவங்கள் வந்து கொட்டும். வார்த்தைகளுக்கு ஏற்ப விசில்கள் பறக்கும்; தெறிக்கும். செத்தவரின் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, பொடி வார்த்தைகள் வந்துவிழும். அது எல்லோருக்கும் புரியாது. `வா... மாமே... வா மாமே’ என்று குரல் எழும் திசையில் அது தொடர்புள்ள வார்த்தை சில வேளை புரியும். கண் சிமிட்டல், உடல்மொழியெனத் தீவிரமான மயக்கமூட்டும் கானாவால்  அந்த இடம் குதூகலமாக இருக்கும். ஒருவன் விட்ட இடத்திலிருந்து இன்னொருவன் தொடங்குவான். மேளம் தினுசுதினுசாக முழங்கி ஊக்கமூட்டும். ஒருவன் பாம்பாக மாறி நெளிவான். அவனது பிளவுபடாத நாக்கு, பலவிதமான சேட்டைகளைச் செய்யும். இப்படியான சென்னைக்கே உரிய கலைவடிவக் கூறுகளில் ஒன்றான கானா, சினிமா மேடை கண்ட பிறகு, அதன் தொனி மாறிவிட்டது. அந்தப் பழைய ராகமும், தெனாவட்டும்கூட இப்போது தீட்டப்பட்ட வடிவத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. சாவுக்கு கானா பாட வந்து செத்துப்போனவனின் கதைகளும் உண்டு. அவையெல்லாம் முற்றும் முழுதாக இலக்கியமாகாமல் புதைந்துகிடக்கின்றன.

 அந்த நாட்களில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்குச் சென்றவர்கள், அரசு வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுபவர்கள் சிலரிடையே கானா குறித்த முகச்சுழிப்பு இருந்தது. ஆனால், இப்போது சினிமா வெளிச்சத்தால் அது சென்னையின் அடையாளம் போலாகிவிட்டது மிக முக்கியமான விஷயம். விலகி ஒட்டி நெளியும் நகரின் உளவியல் சிக்கல்களை எழுத இன்று காலம் துளிர்த்திருக்கிறது; அது கிளைபரப்பும். அதே நேரம் 1980-களின் தொடக்கம் வரையிலும்கூட சென்னை நகரம் என்பது தெற்கே சைதாப்பேட்டை, மேற்கே அயன்புரம், வடக்கே வியாசர்பாடி, கிழக்கே கடல் இதை மையமாகக்கொண்டு, செவ்வகம் வரைந்தால், அதனுள் அமைந்த பிரதான நகரமாக இருந்தது. அதைத் தாண்டி மாநகரப் பேருந்துகள் கிடையாது. அண்ணா நகர் வரை நேரத்துக்குப் போகும் ஓரிரு பேருந்துகள் விதிவிலக்கு. மேற்சொன்ன மூன்று எல்லைகளில் இருந்தும் `டிரக்’ என்று அழைக்கப்பட்ட டயர் பொருத்திய மாட்டு வண்டிகள், ஆளிழுக்கும் கட்டை வண்டிகள் என நகரின் குறுக்கும் நெடுக்குமாகச் சுமைகளை இழுத்துச் சென்ற அந்த நாட்கள், குச்சி ஐஸ் வண்டிக்காரர்களும், மூங்கில் மர உச்சியில் கூத்தாடும் பொம்மைக்காரர்களும், `ஜவ்வு மிட்டாய், குஜிலி’ என்று கூவியபடி தெருவில் கடந்து போகிறவர்களும், வாசனைத் திரவிய வியாபாரிகளும்  இப்போது தேவையற்றவர்களாகி விட்டார்கள். கமர்கட்டு விற்கும் கிழவர்களும் கிழவிகளும் எங்குதான் போனார்களோ? இந்த நகரத்தைத் தம் உழைப்பால் முன் நகர்த்திய அந்த முதுகெலும்புகள் இப்போது கிழடாகியிருக்கும். அது புதைந்த இடத்தில் ஒருவேளை புல் முளைத்திருக்கும். அதனால் என்ன, அவற்றை மீட்டுருவாக்கம் செய்து புது வரலாற்றை முன்வைக்கும் இலக்கியங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

சென்னை என்பது 375 ஆண்டுகால நகரம். அப்படியானால் அதற்கு முன்னர் அது என்ன முழுமையான காடாகவா இருந்தது? இல்லவே இல்லை. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயன்புரம், வியாசர்பாடி, வில்லிவாக்கம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி இங்கு கால் பதிக்கும் முன்னரே 12-ம், 13-ம் நூற்றாண்டுகளிலேயே பெயர் பெற்ற கிராமங்களாக இருந்திருக்கின்றன. சான்றுகள் ஏராளம். அந்த நாளிலே திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், பாடி ஆகியவை முக்கியத்துவம் பெற்ற நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாக இருந்திருக்கின்றன. பட்டினத்தார் தம் இறுதி நாட்களைத்  திருவொற்றியூரில்தான் கழித்தார்.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி


‘பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’


எனப் பாடிய வள்ளலாரும்

`மதம் பேதம் ஓதி மதிகெட்டவர்க்கு
எட்டாத வான் கருணை வெள்ளம்’


எனப் பாடிய குணங்குடி மஸ்தானும் வளர்ந்த பட்டணம் இது.

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் தோமையப்பர். பரங்கிமலையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்ட அவரது கல்லறை, சென்னை மெரினாவுக்கு அருகில் உள்ள சாந்தோம் சர்ச்சில் உள்ளது. இவை எல்லாம் சென்னையின் பழைமையையும் வரலாற்று  முக்கியத்துவத்தையும் உணர்த்து கின்ற அடையாளங்கள்.

சென்னைப் பட்டணம், வெள்ளையன் உண்டாக்கிய நகரம் என்பது உண்மையே. ஆனால், வரலாற்றுக் கால ஊர்கள் பல இன்றும் அதே பெயர்களுடன்தாம் இருக்கின்றன. விஜயநகர மன்னன் சதாசிவத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக 11-ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கிராமமாக வியாசர்பாடி இருந்திருக்கிறது. அதன் அருகில் `நெல்வயல் சாலை’, `ஏரிக்கரை’ போன்ற பகுதிகள் இப்போதும் அப்படியே அதே பெயருடன் இருக்கின்றன.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் , மதராஸை ஒட்டி ஒரு காசுக்கு 100 குழி அல்லது 20 காசுக்கு ஒரு வேலி நிலம் வாங்க முடிந்திருக்கிறது. அந்தத் திருவல்லிக்கேணி தான் வெள்ளையரின் உச்சரிப்பில் `ட்ரிப்ளிகேன்’ என்றாகி உழைக்கும் மக்களின் வார்த்தைகளில் திருவக்கண்ணியாக புழக்கத்தில் இருந்தது. இதையெல்லாம் பதிவுசெய்ய இலக்கியம்தான் சிறந்த வழி. 2011-ல் வெளிவந்த ‘கறுப்பர் நகரம்’ நாவலில் சித்ரா டாக்கீஸ் எதிரில் (இப்போது அந்தத் திரையரங்கு இல்லை) கூவம் நதிக்கரையோரம் இருந்த குடிசைப் பகுதியில் இருந்து வடக்காக பேசின்பிரிட்ஜ் வரையிலான நிலவியல் சார்ந்த வாழ்வியல் ஓரளவேனும் பதியப்பட்டுள்ளது. ரிப்பன் கட்டடம், மூர் மார்க்கெட் இவற்றின் பின்புறம் இருந்து சால்ட் கோட்ரஸ் வரை 1970-களின் சிதையாத சென்னையின் தோற்றம், நிஜமாக வாழ்ந்த கதாபாத்திரங்களின் ஊடே காட்சிகளாகப் பதியப்பட்டுள்ளது. அந்தப் புதினத்தில் வரும் குடிசைப் பகுதிகள் இப்போது இல்லவே இல்லை. சில பகுதிகள் பூங்காக்களாக மாறிவிட்டன; சில குப்பை சேகரிக்கும் இடங்களாக மாறியுள்ளன. இன்றைய இளம் தலைமுறையினருக்கு அது தெரியவே வாய்ப்பு இல்லை.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

மிகச் சமீபத்தில் வெளிவந்த `ஒற்றைப்பல்’ புதினமும் பெரம்பூரிலிருந்து பாரிமுனை வரையிலான கதாபாத்திரங்கள் வழியே நிலவமைப்பு மக்களின் வாழ்வியல் போக்குகளைப் பதிவுசெய்ய முயன்றுள்ளது. இந்தப் புதினத்தில் வரும் ரோட்டோரக் குடிசைகள், இது எழுதப்படும் காலத்தில்கூட இருந்தன. அவையும் மிகச் சமீபத்தில் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால், அங்கும் ஒரு வாழ்க்கை இருந்ததைப் பதிவுசெய்வதற்கான ஒரு வாய்ப்புதான் இலக்கியம். சென்னையின் மொழி குறித்து பகடியாகப் பேசப்படும் பல தருணங்களில், பலவிதமான கேள்விகள் எழும். தமிழகத்தில் பல பாகங்களில் பேசப்படும் மொழிகளை `வட்டார வழக்கு’ எனத் தூக்கிப் பிடிக்கும் மக்கள், சென்னை மொழியின் மீது நடத்தும் தாக்குதல் மிகப் பரிதாபகரமானது. சென்னையின் மொழியில் உருது, தெலுங்கு, ஆங்கிலம் எனத் தமிழில் ஊடாடி தமிழை நீட்டியும் குறுக்கியும் பேசப்பட்ட அந்தக் கொச்சை மொழியில் அரசியல், சமூக, வரலாற்றுக் காரணங்களின் சுவடுகள் ஏராளம். அதை உணராமல், ஒரு மொழியை இழிவாகப் பார்ப்பதுதான் பண்பான செயலா?

நில உடமையாளர்கள் உழைப்பாளர்களிடம் பேசிய அன்றைய லட்சியப் பேச்சையே பேசிப் பழகியவன், பிழைப்புக்காக சென்னைக்கு வந்து அந்தப் பேச்சையே வெள்ளையனிடம் பேச, அவன் தனக்கு வராத `ழ், ர், ன், ட்’ இவற்றை நீக்கி அவன் வசதிக்குப் பேச, வெள்ளையன் பேசுகிற தமிழே சரியான தமிழ் என ஆகி, உழைப்பாளிகளின் மொழியாக மாறியது. போலச் செய்தல் பண்பின் விளைவுடன், நமக்கு ‘வெள்ளையா இருக்கிறவன் செய்வதெல்லாம் சரிதானே’. நாம் விதைத்தது மட்டுமல்ல; நாம் விதைக்காததும் சில வேளைகளில் முளைக்கும். ஆனால், அது முளைத்ததற்கான சூழலை நாம் புறந்தள்ள முடியாது. இ்ப்போதும் ஆங்கிலோ இந்தியர்கள் தமிழ் பேசும்போது சுத்தமான சென்னை மொழியைக் கேட்க முடியும். ‘அறுபடும் விலங்கு’, `கறுப்பு விதைகள்’ நாவல்கள்கூட சென்னை மொழியில் பேசும் பாத்திரங்களால்தாம் புனையப்பட்டுள்ளன. சென்னை குறித்த இலக்கியம் வளர்ந்தபடியேதான் இருக்கிறது. ஓர் இலக்கியப் போக்கின் வளர்ச்சி, யாரிடம் பேனா உள்ளது என்பதைப் பொறுத்துதானே தீர்மானிக்கப்படுகிறது. பொருளைப் பார்த்து கதை எழுதுவதற்கும், பொருளே தன் கதையைச் சொல்வதற்குமான வாய்ப்புகள் பெருகியதில் இடைவெளிகள் இப்போது நம்பிக்கையோடு நிரப்பப்படுகின்றன.

சென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி

பொன்னகரத்தில் புதுமைப்பித்தன் விளக்கும் சென்னை குறித்தான சித்திரம் இன்றைக்கும்கூட பெரிதாக மாறிவிடவில்லை. ரயில் ரோட்டு ஓரங்களில் இன்னமும் ரயிலில் பயணிப்போர்க்கு டாட்டா காட்டி சிரிக்கும் குடிசைப் பகுதி சிறார்களைப் பார்க்க முடிகிறதுதானே?  இன்னமும் பொதுக் கழிப்பிட வெளியாகத்தான் ரயில் ரோட்டோரங்கள் இருக்கின்றன. ‘ஒற்றைப் பல்’ நாவல் அந்தத் துயரத்தைப் பேசுகிறது.

சென்னையைப் பலவிதமாக எழுதிப் பார்த்தவர்கள், உழைக்கும் எளிய மக்களை தங்கள் கதாபாத்திரங்களாக்கி விதவிதமான சமூகச் சீரழிவுகளைக் கேட்பாரற்ற அவர்களின்  மேல் திணித்துவிட்டார்களே என்கிற எண்ணம் இன்று எழுகிறது. புதுமைப்பித்தனின் பொன்னகரத்தில் வரும் ஜட்கா வண்டிக்காரனின் மனைவி, தன் கணவனின் உயிரைக் காக்க தன்னுடைய உடலை விற்று மருத்துவத்துக்குப் பணம் ஈட்டுகிறாள். ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளில்’ வரும் பெண் பாத்திரத்தை விடவும் புதுமைப்பித்தனின் ஜட்காகாரரின் மனைவி பாத்திரம் மேலானது. புதுமைப்பித்தன், சமூகத்தின் கற்பு நிலை குறித்துப் பகடி செய்கிறார். அந்தப் பகடிக்கு விளிம்பு நிலை மக்களின் வறுமைமிக்க கதாபாத்திரங்கள்தாம் பொருத்தமானவை எனக் கருதியிருக்கிறார்.

சென்னை குறித்தான பெரும்பாலான இலக்கியங்களில் அங்கு வாழும் பூர்வகுடிகளைப் பற்றிய பதிவுகளை அவ்வளவு நுட்பமாக யாரும் பதியவில்லை என்பதே வருத்தத்துக்கு உரிய உண்மை. அங்கு வாழும் உழைக்கும் மக்களையே மூன்று வகைகளுக்கு மேலாகப் பிரிக்கலாம். அந்த அளவு பொருளாதார வேறுபாடுகள். வெள்ளையர் காலத்தில் பதவி, வியாபாரம் எனச் செழித்து கலப்பு மணங்களால் அடையாளமிழந்துபோன குடும்பங்கள், கிறித்துவ மதத்துக்குப் போய் கல்வியில் மேம்பாடடைந்து வாழ்க்கை வசதிகளால் அடையாளம் துறந்தவர்கள், இன்றைய அரசுப் பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள், சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் எனப் பல வேறுபாடுகளைக் கொண்ட இந்த மக்களின் இலக்கியம் பதியப்படவே இல்லை.

இன்று தமிழ் இலக்கிய உலகுக்குள் நுழைந்திருக்கும் புதிய பேனா முனைகள் அதைச் சாத்தியப்படுத்தும் என்று நாம் நம்பலாம்.