Published:Updated:

அடுத்து என்ன? - அழகிய பெரியவன்

அடுத்து என்ன? - அழகிய பெரியவன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அழகிய பெரியவன்

வீடற்றவர்களின் குரல்படங்கள் : எம்.விஜயகுமார்

அடுத்து என்ன? - அழகிய பெரியவன்

வீடற்றவர்களின் குரல்படங்கள் : எம்.விஜயகுமார்

Published:Updated:
அடுத்து என்ன? - அழகிய பெரியவன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அழகிய பெரியவன்
அடுத்து என்ன? - அழகிய பெரியவன்

தொடர்ந்து எழுதுவதில் சுணக்கம் காட்டுகிறவன் நான். எதையும் திட்டமிட்டு எழுதிப் பழகியது இல்லை. `எழுத வேண்டும்’ என்ற மனநிபந்தனை மட்டும் தேவைப்படும்.பின்னர் எழுதத் தொடங்கிவிட்டால், அதன் வழியில் தொடரும்.

சில நேரங்களில் பத்திரிகைகள் கேட்பது கருதி எழுதுவதும் உண்டு. அரைத்து வைத்திருக்கும் மாவில் தேவைக்கு ஏற்றாற்போல சுட்டுத் தர இன்னும் நான் பழகிக்கொள்ளவில்லை. எதையாவது ஒன்றை மட்டும் பிடிவாதமாகத் தேர்ந்து கொண்டு, சாவதானமாகப் புல்லை மென்றபடி செக்கு இழுக்கலாம்தான். நமக்கு அந்த மனநிலை இன்னும் சித்திக்கவில்லை.

புறச்சூழல் உலுக்குகிறது. சாதி ஆணவக்கொலைகள், பண மதிப்பு நீக்கம், பயிர் கருகி சாகின்ற விவசாயி, பசியாலும் நோயாலும் அழிகிற சனம், அதிகாரத்தின் குரூர நாடகம், மாநிலத்தைக் காப்பாற்றச் சொல்லி கதறும்படிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட  கூக்குரல்கள்... இவற்றுக்கு எல்லாம் தொந்தரவு அடையாமல் எழுதும் மனநிலை வாய்க்கப்பெறுவது அரும்பேறுதான். ஆனால், அது வாழ்வதுபோல் பிழைத்திருக்கும் செத்த மனம்.

எழுதுவது, தற்செயலானது அன்று. நெஞ்சின் சுவையரும்புகள் அதைத் தேர்ந்துகொள்கின்றன. நமது அக்கறையும் விஷயப் புரிதலும் அளிக்கும் முன்னுரிமையும் இந்தத் தேர்வுக்கு அடிப்படையாகிறது.

ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கான அகத் தூண்டல்கள் தருகிற விஷயங்கள் பல உண்டு. அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பரபரப்பான வாழ்வியக்கத்தில் பிடித்து இழுத்து, நிறுத்தி கவனிக்கச் சொல்லும் தருணங்கள், சிலிர்ப்பு, களிப்பு, வலி, கோபம்... இவைதான் உடனடியாக நம்மை எழுதுவதற்கோ, வாசிப்பதற்கோ தூண்டுகிறவை. நம்மை தனிமையின் ஆழ்நிலைக்குள் இழுத்துச்செல்பவை. மன அடுக்குகளில் உறக்கம்கொண்டிருக்கும் பொறிகளைக் கண்விழிக்கச் செய்பவை.

ஒரு படைப்பை எழுதுகிறபோதும், எழுதி முடிக்கும்போதும் படைப்பாளியின் மனம் பல வகையான உணர்வுநிலைகளுக்குச் சென்று மீளும். வெகுசில தருணங்களில், மனம் மிகுந்த உற்சாகம்கொள்வதை உணர முடியும். படைப்பின் அனைத்து வடிவங்களுக்கும் இந்த உணர்வு பொருந்தும் என்றாலும், நாவல் எழுதுகிறபோது அதிகக் களிப்பை என்னால் உணர முடிந்தது. அப்படியான ஒரு தருணத்துக்கு இப்போது மீண்டும் என் மனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறுகதை ஒன்றை யோசிக்கிறபோது அது விரிவாக உருவம் கொள்கிறது எனில், அதை நாம் நாவலாக எழுதிவிடலாம் என்பது என் கணிப்பு.அடுத்தடுத்து எழுதுவதற்கு என சில நாவல் கருக்களை என் மனம் வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - அழகிய பெரியவன்

என் முதல் சிறுகதைத் தொகுப்பான `தீட்டு’, வசந்தகுமார் அண்ணாச்சியின் பேருதவியால், தமிழினி பதிப்பக வெளியீடாக 2000-ல் வெளியானது. அதற்குப் பிறகு இலக்கியக் கூட்டங்களுக்கும்,

சமூக அரசியல் கூட்டங்களுக்கும் அதிக அளவில் போகத் தொடங்கினேன்.

2001-ம் ஆண்டு, அக்டோபரில் செங்கல்பட்டில் நடந்த `பஞ்சமி நில மீட்புப் போராளிகள் நினைவஞ்சலி’ கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். நிலமற்ற தலித் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என முதுபெரும் தமிழகத் தலித் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வெள்ளை அரசாங்கம் 1892-ம் ஆண்டு தொடங்கி 1933-ம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வழங்கியது. அப்படி வழங்கப்பட்ட  பஞ்சமி நிலங்களின் அளவு 12 லட்சம் ஏக்கர். காலப்போக்கில் பல்வேறு தரப்பினரால் இந்த நிலங்கள் தலித் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டன. இன்று அரசுக் கணக்கீட்டின்படி 17,000 ஏக்கர் நிலங்களே அந்த மக்களிடம் இருக்கின்றன.

பஞ்சமி நிலங்களை மீட்க, தலித் மக்கள் எடுத்த போராட்டங்களில் முக்கியமானது ‘காரணை’ போராட்டம். மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள காரணையில் பறிபோயிருந்த சுமார் 650 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க 10.10.1994-ல் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என, குடும்பம் குடும்பமாக தலித் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க, காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரு இளைஞர்கள் போராட்டக் களத்திலேயே  பலியாயினர்.இவர்களுக்காக நடத்தப்பட்டதே அந்த நினைவஞ்சலிக் கூட்டம்.

இந்தப் போராட்ட வரலாறு பல நாட்களுக்கு என்னை அலைக்கழித்தது. குடிமக்கள், நிலம் வேண்டும் என்று கோரினால், அரசு அதைக் கரிசனையோடுதானே அணுக வேண்டும்? ஏன் கொல்ல வேண்டும்? தொடர்ந்த தேடலில் எல்லா தலித் மக்களிடமும் பறிகொடுத்த ஒரு கதை இருந்தது. என் தாத்தாவே அப்படி நிலத்தைப் பறிகொடுத்து வேற்றூருக்குக் குடிபெயர்ந்தவர்தான் என்பதை அறிந்தேன். என் தாத்தாவின் கதையே என் முதல் நாவலான `தகப்பன் கொடி’ யாக (2002) ஆனது.

இரண்டாவது நாவல் ‘வல்லிசை’ (2016).  14 ஆண்டுகள் இடைவெளி. இந்த நாவலும்கூட மூதாதையர்களின் வாழ்வை நோக்கியே என்னை இழுத்துச் சென்றது. எங்கள் ஊரில் ‘கலை இரவு’ ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுக்கொண்டிருந்த போது வயது முதிர்ந்தவர்கள் சிலர், அங்கு `பறை அடிக்கக் கூடாது’ என்றனர். எனக்கு இது வியப்பைத் தந்தது.

‘பறை’ எனும் இசைக்கருவி தலித் மக்களின் அடையாளக் கருவியாகவே இன்று ஆக்கப்பட்டுவிட்டது. திரைப்படக் காட்சிகளில், பாடல்களில், நூல்களின் அட்டைகளில், அரசியல் பரப்புரை மேடைகளில், இலக்கிய விழாக்களில் பறை, தலித் மக்களின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், 1942-ம் ஆண்டு தொடங்கி 1980-ம் ஆண்டு வரை பறையை அடிக்கக் கூடாது என தலித் மக்கள் தமது சுயமரியாதையைக் காத்துக்கொள்ள போராடியிருக்கிறார்கள் என்பது பலரால் அறியப்படாத, மறைக்கப்பட்ட ஒரு வரலாறு... வியப்பானதும்கூட! இந்தப் போராட்டத்துக்காக தமது வாழ்வையும் உயிரையும் இழந்தவர்கூட உண்டு. காலம் பலவகையான வரலாற்று அடுக்குகளைக் கொண்டது... மண்படுகைகளைப்போல. அதை அகழும்போதே நம்மால் இதை அறிய முடிகிறது. இந்த வரலாற்றை அறிய முற்பட்டே `வல்லிசை’ நாவலை எழுதினேன்.

இப்போது எழுத எண்ணியிருக்கும் மூன்றாவது நாவல் சிறுபொறியாக மனதில் வந்து விழுந்து, என்னை இப்போது எரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் ஒருநாள் படுக்கையைவிட்டு எழுந்தபோது என் மனைவி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். தலையணை, கண்ணீரால் நனைந்திருந்தது. அதிகாலையின் கண்ணீர் குத்தீட்டியைப்  போன்றது. அது நெஞ்சை ஆழமாக அறுத்துவிடும். பதறிப்போன நான் அவளின்  தோளில் கைவைத்து உலுக்கினேன்.

“எங்க வீட்டுல இப்ப யாருமில்லை. தாத்தா, பாட்டி, அப்பா… ஒவ்வொருத்தரா தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாங்க. ஆளுக்கு ஒரு திசையா பிள்ளைங்க பிரிஞ்சிட்டோம். அம்மாவும் வீடும் மட்டும் அனாதையா.  எங்க வீட்டுல இப்ப யாருமில்ல…”

தயங்கித் தயங்கி மெதுவாகச் சொட்டும் திராவகச் சொற்கள். என் மனது எரியத் தொடங்கியது. நாடற்றவரின் குரலை, ஏதிலியின் துயரத்தை அந்தச் சொற்களில் கேட்டேன். பாரி மகளிரின் சொற்களாகவும், ஈழ மக்களின் சொற்களாகவும் அவை வடிவம்கொண்டன. வலியில் உளைந்திடும் அந்தச் சொற்கள் என்னிடம் வேறு வேறு இழப்புகளைக் கொண்டுவந்து சேர்த்தபடியே இருந்தன.

நாடு இழப்பும் வீடு இழப்பும் இந்த உலகில் ஆதரவற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே நிகழ்வதாக உள்ளன.

இந்தக் கொடுமை செவ்விந்தியர்கள், அபாரிஜின்கள், பாலஸ்தீனியர்கள், திபெத்தியர்கள், ஈழ மக்கள் என உலக அளவில் தொடங்கி இந்திய தலித்களிடமும், பழங்குடிகளிடமும் வந்து நிற்கிறது.

நான் இதை என் மூதாதையர்களின் வாழ்வோடு பொருத்திக்கொள்ள முனைந்தேன். என் தாத்தாவுடன் பிறந்த அண்ணன், தம்பிகள் யாருமே தமது சொந்த ஊர்களில் இருக்கவில்லை. 90-களின் தொடக்கத்தில் தொடங்கிய அவர்களின் குடிப்பெயர்வு பத்து இருபது ஆண்டுகளுக்குள் திசைக்கு ஒரு குடும்பமாக அவர்களைச் சிதறடிக்கவைத்திருக்கிறது. இன்று அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள், அவர்தம் தொழில், அவர்தம் வாழ்க்கை  என ஒரு விரிந்த பரப்பில் அந்தச் சிதறடிக்கப்பட்டப் பயணத்தை வரைய முடிந்தால், அது பெரும் சித்திரமாக மாறிவிடும். அன்றாடம்  சோற்றுக்காகவும் வேலைக்காகவும், தங்கும் இடத்துக்காகவும்  நிலத்துக்காகவும் இந்தியாவில் தலித் மக்களைப்போல் சிதறடிக்கப்பட்டவர்கள் யாரேனும் உண்டா? இப்போது என் மனதில் அடிக்கடி வந்து போகும் வினா இதுதான். தோல் பதனிடும் தொழில், பண்ணை வேலை, செங்கற்சூளை என்று பல்வேறு வேலைகளுக்கு குடும்பத்துடன் வந்து, பின்னர் துரத்தியடிக்கப்பட்ட மக்களைப் பற்றிய கதைகளும் இப்போது என்னை வந்தடைந்தபடி இருக்கின்றன.

இந்த வினாவே இதை ஒரு நாவலாக எழுதிட இப்போது தூண்டுகிறது. இத்தருணத்தில் எழும் வினாக்களுக்கு சரியான விடைகளை நான் தேடிவிடுவேன் என்றால், இது திருப்தி தரும் நாவலாக உருவெடுத்துவிடும் என்று நம்புகிறேன். மேலும், என் முந்தைய இரு நாவல்களுடன் சேர்ந்து முக்கோண நாவல் வரிசையாக இதைக் கருதுவதற்கும் வாய்ப்பு இருக்கலாம்.

இந்தக் கதைப் பரப்பிலிருக்கும் மற்றொரு அடுக்கு, இந்த நாவலுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுப்பதாகவும் அமையலாம். சூழல் சீர்கேடு நிறைந்த எங்கள் மாவட்டத்தின் பல்வேறு நிலப்பரப்பின் கதைகளை நான் ஒன்று சேர்க்கும்போது இந்த நாவல் சூழலியலைப் பேசிடும் பிரதியாகவும் மாறும். அப்போது வீடற்றவர்களின் குரல், புவிவீட்டை இழந்து நிற்கும் மாந்தர்களின் குரலாக உருமாற்றம் கொள்ளும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism