Published:Updated:

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

ஓவியங்கள் : ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

ரலாறு பெயர்களால் ஆனது இல்லை. ஆனால் பெயர்களின்றி வரலாறு இல்லை. சில பெயர்களைப் பற்றி வரலாற்றில் குறிப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், அவை வரலாற்றின் பெயர்களாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்புகளற்ற பெயர்களின் பின்னால் இருக்கும் வரலாற்றுக்கு எப்போதும் ஈர்ப்புசக்தி அதிகம்.

அப்படி ஒரு பெயர்தான் ‘மாயக்காள்’. இந்தப் பெயரைப் பற்றி எழுதப்பட்ட வரலாற்றில் இருக்கும் குறிப்புகள் சில வரிகள்தாம். ஆனால் எழுதவேண்டிய பக்கங்கள் எண்ணற்றன. 

தமிழகத்தில் போலீஸ் தாக்குதலுக்குப் பலியான முதல் பெண் மாயக்காள். குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் பெருங்காமநல்லூர் கள்ளர்களைப் பதிவுசெய்யச் சென்ற போலீஸ் படை, பதிய மறுத்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர் மாயக்காள்.

இந்த நிகழ்வு தொடர்பாக அரசு அறிக்கைகளும் விவாதக் குறிப்புகளும் பத்திரிகைச் செய்திகளும் நீதிமன்றத் தீர்ப்புகளுமாகப் பலநூறு பக்க ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக இங்கு விவாதிப்பது இயலாத காரியம். ஆனால், அந்த ஆவணங்களில் அங்குமிங்குமாகச் சிற்சில வரிகளில்தான் மாயக்காளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து இணைக்கிறபோது கிடைக்கும் வரலாற்றுச் சித்திரத்தை வரைவதே இந்தக் கட்டுரை.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவுபெற சரியாக 10 நாட்களே மீதம் இருந்த நிலையில், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி அன்று நள்ளிரவு மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் இருந்து சென்னை மாகாண கவர்னருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது. தந்தியில் இருந்த வாசகம், ‘குற்றப்பரம்பரை சட்டப்படி பதிய மறுத்த 70 நபர்கள் திருமங்கலம் தாலுகாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உடனடியாக நிவாரணம் வேண்டுகிறேன்’.

தந்தியை அனுப்பியவர் பெருங்காமநல்லூரைச் சேர்ந்த முத்துமாயத்தேவர். கவர்னருக்குத் தந்தியை அனுப்பும் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருந்தவர், பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப்.

தந்தியைக் கண்ட கவர்னர் அலுவலகம் உடனடியாக விழித்துக்கொண்டு தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியது. கவர்னருக்குத் தந்தி சென்றுசேர்ந்த அதே நள்ளிரவில் மதுரை மாவட்ட கலெக்டருக்கும் முத்துமாயத்தேவர் தந்தி அனுப்பியுள்ளார். கவர்னரின் பார்வைக்குச் செய்தி எட்ட, அவர் உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். உள்துறைச் செயலாளரோ காவல்துறை ஐ.ஜி-யிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் விளக்கம் கேட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

மதுரை மாவட்ட கலெக்டர் ஹெச்.டி. ரெய்லி, ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்துறைச் செயலாளருக்கு பதில் அனுப்பினார். அதில் ‘திருமங்கலம் தாலுகா, பெருங்காமநல்லூரில் கடந்த மூன்றாம் தேதியன்று குற்றப்பரம்பரையினர் பதிவு தொடர்பாகப் பெரும் கலவரம். மாஜிஸ்திரேட்டின் உத்தரவின்பேரில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 11 பேர் பலி, 8 பேர் காயமடைந்துள்ளனர்.’

‘இச்சம்பவம் குறித்த முதல் தகவல் 3-4-1992-ம் தேதி இரவு 1.15 மணியளவில் முத்துமாயத்தேவர் என்பவரின் தந்தி மூலம் கிடைத்தது. அதுபற்றி உடனடியாக மாவட்ட சூப்பிரின்டெண்டென்ட் அலுவலகத்தில் கேட்டபோது அங்கும் தகவல் இல்லை. பின்னர் கள்ளர் பதிவு தொடர்பான ஸ்பெஷல் மாஜிஸ்திரேட்டுக்குத் தந்தி அனுப்பினேன், ‘ஆம்’ என்று அவரிடமிருந்து பதில் வந்தது’ என்று நடந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவாகக் கூறி, இறுதியாக ‘இப்பகுதிக்கு ரிசர்வ் போலீஸ் படை அனுப்பப்பட்டது குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பப்படவில்லை’ என்ற விதிமீறலையும் நிர்வாகத் தவறுகளையும் பதிவு செய்கிறார்.

இந்த அறிக்கையின்பேரில் உள்துறைச் செயலாளர் தென்மண்டல ஐ.ஜி-யிடம்,  ‘மாவட்ட கலெக்டருக்குத் தெரியாமல் ஆயுதம் தாங்கிய ரிசர்வ் போலீஸ் அனுப்பப்பட்டது’ குறித்து விளக்கம் அளிக்கக் கேட்டுள்ளார். 

காவல் துறை வழக்கம்போலத் தன் துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் வேலைக்கு முதலிடம் கொடுத்து பதில்அறிக்கை அனுப்பியது. ‘இதுபோன்ற பணிகளுக்கு ரிசர்வ் போலீஸ் அனுப்பப்படுவது வழக்கமான ஒன்று என்பதால், மாவட்ட கலெக்டருக்குத் தகவல் தரப்படவில்லை. இது குறித்து மாவட்ட எஸ்.பி., கலெக்டரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்துவிட்டார்.எனவே மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவையில்லை’ என்று கீழ் அதிகாரிகளின் விதிமீறல்களைக் காப்பாற்றி அறிக்கை வழங்குகிறார்.

மேலும், போலீஸை மக்கள் கற்களால் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதையும் அதில், போலீஸ் சதுரமாக நின்று தனித்தனியாக 89 ரவுண்டுகள் சுட்டதையும் பதிவுசெய்கிறார். இறந்தவர்கள் போக 63 பேரைக் கைது செய்துள்ளதையும் தெரிவிக்கிறார் தென்மண்டல ஐ.ஜி.

இவ்வாறாக, இந்தத் தந்தியின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையும் வாக்குமூலங்களும் பெறப்பட்டன. ஒருவேளை முத்துமாயத்தேவர் கவர்னருக்குத் தந்தி அனுப்பாமல் இருந்திருந்தால், ஒரு சப்-மாஜிஸ்ரேட்டின் அதிகாரப் பரப்பின் கீழ் இந்த மொத்த விஷயமும் முடிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த நிலையில் அடுத்த நான்காம் நாள், அதாவது ஜாலியன் வாலாபாக் படுகொலையின் முதல் ஆண்டை நாடு முழுவதும் நினைவுகூர்ந்ததற்கு மறுநாள், ஏப்ரல் 14 -ம் தேதி ‘தி ஹிந்து’ நாளிதழில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியானது.

காவல்துறையின் கருத்துப்படி ஜார்ஜ் ஜோசப்பின் முழுமையான முயற்சியின் வெளிப்பாடே அந்தக் கட்டுரை. நிராயுதபாணியான கூட்டத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து ஒரு பொதுவிசாரணை தேவை என்று வலியுறுத்தி அந்தக் கட்டுரை எழுதப்பட்டது. 

போலீஸை மக்கள் கற்களால் தாக்கினார்கள் என்பதை அந்தக் கட்டுரை உறுதியாக மறுக்கிறது. கிராமத்தார் கூடியிருந்த வயல் கிட்டத்தட்ட 150 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய நிலத்தில் ஒரு செங்கல்லோ, வேறு கல்லோ இல்லை. வெறும் களிமண்தான் இருந்தது. எனவே, போலீஸின் மீது கற்கள் வீசப்படவில்லை என்று நேரில் பார்த்த ஆதாரத்துடன் வாதிடும் அந்தக் கட்டுரையில்தான் முதன்முதலாக மாயக்காளைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றது.

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்“கிராமத்தை நோக்கி மக்கள் ஓடத் தொடங்கியபோது, போலீஸ் அவர்களைத் துரத்தியது. ஏற்கெனவே குண்டடிபட்டிருந்த மாயக்காள் என்ற பெண்ணைப் பிடித்து அவள் உயிர் போகும் வரை துப்பாக்கி
முனையால் திரும்பத் திரும்ப குத்திக் கொன்றுள்ளனர்’. இந்தக் கட்டுரை வெளிவந்த பின்தான் நிராயுதபாணியான மக்களின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதும், பலர் இறந்துள்ளனர் என்பதும், மாயக்காள் என்ற பெண் துப்பாக்கி முனையால் குத்திக் கொல்லப்பட்டதும் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. அதன்பின் மாநில நிர்வாகம் இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்டத்தொடங்கியது.

குறிப்பாக, மாயக்காள் என்ற பெண் துப்பாக்கிமுனையால் குத்திக்கொல்லப்பட்டது சம்பந்தமாக கீழ்மட்ட அதிகாரிகளிடம் அரசு உடனடியாக விளக்கம் கேட்டது. ஏப்ரல் 18-ம் தேதி உசிலம்பட்டி சப்-மாஜிஸ்திரேட், மதுரை கலெக்டருக்கும் மதுரை கலெக்டர், உள்துறை செயலாளருக்கும் பதில் அனுப்பினார்கள். அதில்  ‘ஏப்ரல் 3-ம் தேதி பெருங்காமநல்லூர் கலவரத்தில் மாயக்காளுக்கு குண்டடிபட்டது. 6-ம் தேதி இறந்துபோகும் வரை இந்தச் செய்தி தெரியவில்லை. 7-ம் தேதி பிரேதப் பரிசோதனை நடந்தது. ஒரு குண்டுக்காயம். வேறு காயம் இல்லை. துப்பாக்கி முனையால் குத்தப்படவில்லை.’

கீழ்மட்ட அதிகாரிகளிடம் இந்தப் பதிலைப் பெற்ற பின் விவாதத்தின் போக்குகள் முற்றிலும் வேறு திசைக்குச் செல்லத் தொடங்கின. அதாவது, அரசின் மீது களங்கம் விளைவிக்கும் இந்தச் செய்தி வெளிவரக் காரணமான ஜார்ஜ் ஜோசப்பின் மீது ஏன் வழக்கு தொடுக்கக் கூடாது? இச்செய்தியை வெளியிட்ட ஹிந்து நாளிதழின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இந்த இரண்டு கேள்விகளை மையப்படுத்தியே உள்துறைச் செயலாளர், காவல்துறை ஐ.ஜி, கவர்னரின் தனி உதவியாளர் என அரசின் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து வாரக்கணக்கில் விவாதித்துக் கொண்டிருந்ததை ஆவணங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

இறுதியாக 15-5-1920-ம் தேதி இந்திய அரசின் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கீழ்க்காணும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ‘உண்மையில் கள்ளர்களின் பிரச்னைக்குக் காரணம் அவர்களின் பின்னால் இருக்கும் ஜார்ஜ் ஜோசப்தான். ஆனால், அவரின் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்களைத் திரட்ட வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படை.

இரண்டாவதாக ஹிந்துவின் மீதான நடவடிக்கை குறித்து, இத்தனை நாட்கள் ஆகிவிட்டதால் விளம்பர வாரியத்தின் மூலம் ஒரு மறுப்பு தரலாம், ஆனால் அது சம்பந்தமாக கவுன்சிலில் தனியாகப் பேச வேண்டும்.’
இவை தவிர, இந்த மூன்று மாத காலத்தில் நடந்த விவாதங்களின் அடிப்படையில் வேறுசில முடிவுகளுக்கும் அரசாங்கம் போயுள்ளதை அறிய முடிகிறது. அதாவது, மாவட்ட கலெக்டருக்குத் தெரிவிக்காமல் ரிசர்வ் போலீஸ் படையைக்கொண்டு சென்றது, சம்மன் அனுப்பாமலேயே அவர்கள் பதிவுசெய்துகொள்ள வர மறுத்துவிட்டனர் எனக் கூறி துப்பாக்கிச்சூடு நடத்தியது உள்ளிட்ட நிர்வாக அத்துமீறல்களைப் பற்றி தொடக்கக் கட்டத்தில் வெளிப்படையாகப் பேசிய பலரும் ஏப்ரல் 14-ம் தேதி ஹிந்துவில் கட்டுரை வெளியான பின், அவை குறித்துப் பேசவில்லை.

அதிகாரிகளின் உரையாடல் தலைகீழாக மாறியதை ஆவணங்களில் காணமுடிகிறது. ‘நெல்லூர் கலவர வழக்கின்போது, கலவரங்களை ஒடுக்கும் முயற்சியில் அரசு கீழ்மட்ட அதிகாரிகளை ஆதரிக்க வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கும் அதுபோன்ற நிலைதான். எனவே ‘கீழ்மட்ட அதிகாரிகளை ஆதரிப்பதே சரி’ என்ற முடிவுக்கு வந்து அனைத்து வகையான விதிமீறல்களையும் மூடி மறைக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்னொரு முக்கியமான முடிவுக்கும் போனார்கள். இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டி, சன்மானம் வழங்குவது என்று முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு தலைமையகம் ஒப்புதல் கொடுத்த அதே நேரத்தில் இந்தப் பிரச்னை சம்பந்தமான குற்ற வழக்கு 63 பேர் மீது நடந்துகொண்டிருப்பதால், அதன் தீர்ப்பு வந்ததும் இந்தச் சன்மானத்தை வழங்கலாம் என்றும், அந்த வழக்கைத் தாமதமின்றி விரைவாக முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டின்போது கைதுசெய்யப்பட்ட 63 பேருக்குமான வழக்கை, வழக்கறிஞர்கள் பி.டி.ராஜன், வீ.மாணிக்கம் பிள்ளை, துரைராஜ், எஸ்.சுப்பிரமணிய முதலியார் ஆகிய நால்வர் மூலம் ஒருங்கிணைத்து நடத்தினார் ஜார்ஜ் ஜோசப். அவர்கள் முன்வைத்த வாதங்களின் எழுத்துப்பூர்வ ஆவணங்களைக் காண முடியவில்லை. ஆனால், வழக்கின் தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட விஷயத்திலிருந்து சிலவற்றை நம்மால் அறிய முடிகிறது.

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

1920 டிசம்பர் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் 17-ம் பகுதியில் ‘சம்பவம் நடந்துகொண்டிருந்தபொழுது மூன்று அல்லது நான்கு பெண்கள் கஞ்சியும் தண்ணியும் விநியோகித்தவர்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள் விலகிப் போயிருக்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறது.

அப்படியென்றால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்தவர்களுக்கு மூன்று அல்லது நான்கு பெண்கள் கஞ்சியும் தண்ணீரும் துணிந்து வழங்கியிருக்கிறார்கள். போலீஸின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நடந்த முதலுதவியாக இது அமைந்திருக்கும். அது கண்டு போலீஸ் படை ஆத்திரம் கொண்டிருக்கும். அதனால், அந்தப் பெண்களின் மீது வெறுப்பையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும். அதனால்தான் துப்பாக்கிக்குண்டு கையிலோ காலிலோ பட்ட நிலையில் போலீஸிடம் பிடிபட்ட மாயக்காள் மீண்டும் மீண்டும் துப்பாக்கிமுனையால் தாக்கப்பட்டிருக்கிறார்.

மாயக்காள் தவிர வேறு சில பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகி, அதேநேரத்தில் போலீஸின் கைகளுக்கு சிக்காமல் தப்பிச் சென்றதற்கான வாய்ப்புகளும் இருந்திருக்கும்.

தீர்ப்பின் 23-வது பத்தியில்  ‘எந்த ஒரு நபரும் துப்பாக்கி முனையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கு ஆதரவாக எந்த ஓர் ஆவணச்சான்றும் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவரான 19-வது நபர் மூலிசின்னத்தேவன் என்ற ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டுச்சொல்லி, அவர்  ‘பயனெட்’டால் தாக்கப் பட்டவர் என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். எந்தவொரு சான்றும் யாதொரு ‘பயனெட்’ காயத்தையும் சுட்டிக்காட்ட வில்லை’ என்று கூறி துப்பாக்கியால் குத்தப்பட்ட நிகழ்வை மறுக்கிறார் நீதிபதி.

துப்பாக்கியால் குத்தப் பட்டதற்கான எந்த ஆவணத்தை பாதிக்கப்பட்டவர்களால் சமர்ப்பித்திருக்க முடியும்? துப்பாக்கியால் குத்துப்பட்ட மூலிசின்னத்தேவர் என்பவரை கடைசி வரை நீதிமன்றத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள்  இரண்டில் பெயர் குறிப்பிடப்படாத ஆணின் பிரேதப் பரிசோதனை அறிக்கை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்தவர்களை அடையாளம்காட்டவோ, உடலைப் பெற்றுக்கொள்ளவோகூட வர முடியாத அளவுக்கு மக்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில் துப்பாக்கியால் இரண்டு நபர்கள் குத்தப்பட்டது சம்பந்தமான உண்மைகள் மூடிமறைக்கப்பட்டதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஏப்ரல் 3-ம் தேதி பெருங்காமநல்லூரில் திரண்ட கூட்டம் கல் வீசித் தாக்கியது என்பதற்கான ஆதாரம், போலீஸ் சார்ஜென்ட்டின் வலது மார்பில் கல் விழுந்ததாக அவர் சொன்ன சாட்சியம்தான். அதுவும் மருத்துவக் குறிப்போ, அறிக்கையோ அல்ல. அந்த அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காகவும் அரசு ஊழியரைக் கடமை ஆற்றவிடாமல் தடுத்ததற்காகவும் 32 பேருக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார் நீதிபதி.

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து, ‘வீரத்தோடு செயல்பட்டு, கலவரத்தை அடக்கிய காரணத்துக்காக ஆயுதப்படை சார்ஜென்ட்டுக்கு பரிசுத்தொகையாக 100 ரூபாயும், அதில் ஈடுபட்ட மற்ற போலீஸாருக்கு பரிசுத்தொகையாக ஒருமாத சம்பளமுமாக மொத்தம் ரூபாய் 668 வழங்கப்பட்டது.’

அத்துமீறல் ஒன்று நடத்தப்பட்டு அதன் பின் விசாரணை என்ற பெயரில் அந்த அத்துமீறலில் ஈடுபட்ட அனைவரும் முறையாக எப்படிக் காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் அரசு தண்டனை வழங்கும் வழிமுறைகள் எப்படி அமையும் என்பதற்குமான சரியான உதாரணமாக இந்தப் பிரச்னை தொடர்பான அரசாணைகளும் கடிதப் போக்குவரத்துகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

ரிசர்வ் போலீஸ் படையை அழைத்துச்செல்ல, முறைப்படி தகவல் தரவேண்டிய மாவட்ட கலெக்டருக்குத் தகவல் தராமல் அழைத்துச் சென்றதும், ரிசர்வ் போலீஸ் படைக்கு எஸ்.பி அல்லது அதற்கு இணையான அதிகாரிதான் தலைமையேற்க வேண்டும் என்பது மீறப்பட்டு, ஒரு சார்ஜென்ட் தலைமை ஏற்றுச் சென்றதும், சம்மன் வழங்குவது உள்ளிட்ட எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் கைதுசெய்ய முற்பட்டதும்,

கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்

நிராயுத
பாணிகளான மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும், குண்டடிபட்ட பெண்ணை துப்பாக்கிமுனையால் சாகும் வரை குத்திக் கொன்றதுமான கொடுமைகள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டன. இதன் இன்னொரு பகுதியாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சன்மானத் தொகையுடன், வழக்கை மிகச் சிறப்பாக நடத்தி, விதிமீறல்களை மறைத்து, மக்களுக்கு தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் வழக்கறிஞர்களுக்கான சிறப்புத் தொகை ரூபாய் 300 வழங்க எடுக்கப்பட்ட முடிவுகளோடும், பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட அரசுக் கோப்புகள் முடிவு பெறுகின்றன.

ஆனால், வரலாறோ கோப்புகளோடு முடிவுபெறுவது இல்லை. அங்கிருந்துதான் வெளிவரத் தொடங்குகிறது. இரண்டு வரிகொண்ட ஒரு தந்தியும் 2,000 வார்த்தைகள்கொண்ட ஒரு   கட்டுரையும்தாம் இந்தக் கொடுமையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. வெளிவந்த பின்பும் இந்தக் கொடுமையை எதிர்த்து அரசியல் அரங்கிலும் பொது அரங்கிலும் யாரும் அறிக்கைவிடவோ பேசவோ அன்று தயாராக இல்லை. இதுதான் அன்றைய யதார்த்த நிலை. இந்த நிலையில் அந்தத் தந்தியும் கட்டுரையும் இல்லையென்றால், இவை எவையும் பொதுவெளியின் கவனத்துக்கு வராமலே புதைக்கப் பட்டிருக்கும்.

அனுப்பப்பட்ட தந்திக்கும் எழுதப்பட்ட கட்டுரைக்கும் பின்னால் இருக்கும் ஒற்றை மனிதன் ஜார்ஜ்  ஜோசப்.   குற்றப்பழங்குடியினர் சட்டம் என்ற கொடுஞ்சட்டத்துக்கு எதிராகத் தீரத்துடன் போராடிய மாமனிதன். அந்த மனிதனை சோசப்பு என்றும் ரோசாப்பூ என்றுமே இப்பகுதி மக்கள் அன்போடு அழைத்தனர்.  

இந்தப் பிரச்னைக்குப் பின்னால் இருப்பவர் ஜார்ஜ் ஜோசப் என்றும் கலவரம் நடப்பதற்கு சிலநாட்களுக்கு முன்னர் பெருங்காமநல்லூருக்கு ஜார்ஜ் ஜோசப் போனதுதான் அங்கு பிரச்னை உருவாகக் காரணம் என்றும் போலீஸ் நீதிமன்றத்திலும் ஆவணங்களிலும் திரும்பத் திரும்பப் பதிவுசெய்கிறது.

கொடுமையான சட்டத்துக்கு எதிராகத் தீரத்துடன் போராடிய ஒரு மனிதனின் துணிவையே இந்தக் குறிப்புகள் நினைவுகூர்கின்றன, அதனால்தான் 89 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தபொழுது துணிந்து சென்று அடிபட்டவர்களுக்குக் கஞ்சியும் தண்ணீரும் வழங்கிய மாயக்காளின் வரலாற்றுக்கு அவரால் நியாயம் செய்ய முடிந்தது.

தியாகிகளின் நினைவாக ரோசாப்பூ மாலை வைப்பது இன்று சடங்காக நடந்துகொண்டிருக்கும் ஒன்று. ஆனால் மாயக்காளின் நினைவின் காலடியில் ஒரு ரோசாப்பூ வைப்பது சடங்கு அல்ல... சரித்திரம்.