Published:Updated:

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

Published:Updated:
காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்
காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

ன்று உலகத்திலுள்ள வளிமண்டல விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் வீரபத்ரன் இராமநாதன், மதுரையைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் முனைவர் பட்டத்தை முடித்த பின்னர் வளிமண்டல ஆய்வுகளில் ஈடுபட்டு பல விருதுகளைத் தன் ஆராய்ச்சிக்காகப் பெற்றவர். அமெரிக்காவின் National Academy of Sciences-ல் இவர் அங்கத்தவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய அதிஉயர் கௌரவம். ‘சூழ்நிலை சீர்கேட்டால் புவி வெப்பமடைவதும், காலநிலை மாற்றமும்தான் சமீப காலங்களில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எதிர்கொள்ளும் ஆகப்பெரிய அச்சுறுத்தல்’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடு நாடாகப் பறந்துகொண்டிருப்பவரை தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொண்டேன்.

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்“உங்கள் சிறுவயது ஞாபகங்கள் பற்றி கூறுங்கள்...”

“என் சிறுவயதில் திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில்தான் படித்தேன். என்னுடைய மூதாதையர் வாழ்ந்த கும்பகோணத்தில் விடுமுறைகளைக் கழித்தேன். கோடைகாலத்தில் மறக்கமுடியாத நினைவு, என்னுடைய தாத்தாவோடு மாட்டு வண்டியில் அவருடைய விவசாய நிலங்களைப் பார்வையிடப் போனதுதான். 11 வயதில் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்காக என்னை பெங்களூருக்கு அனுப்பினார்கள். அதுவரையில் தமிழில்தான் படித்துவந்தேன். பெங்களூரிலோ எல்லாமே ஆங்கிலம்தான். ஆசிரியர்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. படிப்பில் முதல் நிலையில் இருந்த நான், கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னுடைய சொந்தப் பயிற்சியில் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலப் பாடத்தைக்கூட நானாகவே விளங்கிப் படித்தேன். இதனால் ஒருவிதத்தில் எனக்கு நன்மையே கிடைத்தது. பிற்காலத்தில் ஆராய்ச்சிகள் செய்தபோது சொந்தமாகச் சிந்திக்கும் திறன் எனக்குக் கைகொடுத்தது.”

“வளிமண்டல விஞ்ஞானியாகும் எண்ணம் எப்படித் தோன்றியது?”

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தை 1965-ல் நிறைவுசெய்தேன். பொறியியலாளர் வேலை எனக்குப் பொருத்தமில்லை என்று பட்டது. நான் ஒன்றிலும் திறமை இல்லாதவன் என்ற எண்ணமும் தோன்றியது. ஒரு வெறுப்பில் விஞ்ஞானம் படித்து அதில் முதுகலைப் பட்டம் பெற்றேன். இங்கேதான் ஒளியியல் சார்ந்த கருவி ஒன்றை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. துல்லியமாக வெப்ப நிலையை அளக்கக்கூடிய இந்தக் கருவி என் சொந்தச் சிந்தனையில் உருவானது. இது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. ஆராய்ச்சிதான் என்னுடைய எதிர்காலம் என்று தீர்மானித்தேன். அமெரிக்காவுக்கு முனைவர் படிப்புக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக என்னுடைய பேராசிரியர், வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் வளிமண்டல ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்தினார். அதுவே தொடர்ந்தது. ஒரு விபத்துபோல என் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.”

“உங்கள் 31வது வயதில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்தீர்கள். அதை நீங்கள் வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? உங்கள் கண்டுபிடிப்பை உலகம் உடனேயே ஏற்றுக்கொண்டதா?”

“1975-ம் வருடம். நான் (குளோரோ ஃபுளோரோ கார்பன்) CFC ஆராய்ச்சியில் மூழ்கினேன். பகல் முழுக்க வேலைசெய்துவிட்டு வீடு வந்ததும் இரவிரவாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். பெறுபேறுகளை அலசியபோது என்னால் நம்பமுடியவில்லை. ஆறு தடவை கணக்கீடுகளைச் சரிபார்த்தேன். ஒரே விடைதான் வந்தது. நூறு வருடங்களாக விஞ்ஞானிகள் நம்பிவந்த ஒன்றை என் ஆராய்ச்சி தகர்த்தது. பூமி வெப்பமடைவதற்குக் காரணம் பசுமைக்கூட வாயுக்கள், முக்கியமாக கரியமிலவாயு என்றே நம்பப்பட்டது. எனக்குக் கிடைத்த விடை அதிர்ச்சி தந்தது. ஒரு டன் CFC, 10,000 டன் கரியமிலவாயுவிலும் பார்க்ககூடிய தீமையை விளைவித்தது. ஆராய்ச்சி முடிவை கட்டுரையாக மதிப்புமிக்க ‘சயன்ஸ்’ பத்திரிகையில் எழுதினேன். நியூயார்க்் டைம்ஸ் அந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே வெளியிட்டது. சி.பி.எஸ் தொலைக்காட்சியினர் என்னை நேர்கண்டனர். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் பேட்டி கண்டபோது, அவர்கள் என் ஆராய்ச்சியை நிராகரித்தனர். நான் கொடுத்த பேட்டி, தொலைக்காட்சியில் வெளிவரவே இல்லை. முதன்முதலாக ஸ்வீடன் நாடு 1978-ல் என் கண்டுபிடிப்பை ஏற்று, CFC- ஐத் தடைசெய்தது. தொடர்ந்து மற்ற நாடுகளும் தடை செய்தன. நான் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்த சாதாரண மாணவன்தானே என்று விஞ்ஞான சமூகம் என்னை உதாசீனம் செய்திருக்கலாம். என் அறிக்கையை உடனேயே ஏற்றிருந்தால், வீணாக மூன்று வருட காலதாமதம் ஆகியிருக்காது.”

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்

“இப்போதைய பூமியின் வளிமண்டலத்தின் நிலை?”

“முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலம், கரியமிலவாயு உட்பட பசுமைக்கூட வாயுக்களால் மாசுபட்டுக்கிடக்கிறது. 15 வருடங்களில் மாசுக்கட்டுப்பாட்டைக் கொண்டுவராவிட்டால், புவி அதி வெப்பமடைவதுடன் காற்றிலும் நச்சுத்தன்மை கூடிவிடும்.”

“200 வருடங்களுக்கு முன்னர் பூமிப்பந்தின் வளிமண்டலம் உயிர் வாழ்வதற்கு உகந்ததாக இருந்தது. தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர், வளிமண்டலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காரணம் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டுக்கு வந்ததுதான். 200 வருடங்களுக்கு முன்னர் வளிமண்டலத்தில் 0.028 சதவிகிதம் கரியமிலவாயு இருந்தது. பூமி சூடாவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இப்பொழுது கரியமிலவாயு 0.038 ஆகக் கூடிவிட்டது. இதைப் பழைய நிலைக்கு 0.028 சதவீதமாகக் குறைக்க முடியுமா? குறைத்தால், பூமி உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக ஆகிவிடும் அல்லவா?”


“அவ்வளவு சுலபம் இல்லை. வளி சமநிலை குலைந்தால், அதைச் சரிசெய்வது கடினம். திரும்பவும் கரியமிலவாயு வீதத்தை 0.028 ஆகக் குறைப்பதற்கு, 10,000 வருடங்கள்கூட ஆகலாம். பூமி அவ்வளவு மோசமாகிவிட்டது. இப்போது 0.038 வீதம் அல்ல; அது ஏற்கெனவே எல்லை கடந்து 0.04 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு நாள் தாமதிப்பதுகூட ஆபத்தானதுதான். விஞ்ஞானிகளின் தற்போதைய இலக்கு கரியமிலவாயு வீதத்தைக் குறைப்பது அல்ல; கூடாமல் பார்த்துக்கொள்வதுதான். புவி மேலும் மாசுபடுவது அபாயகரமானது. பூமியின் வெப்ப நிலை உயர் விளிம்பில் நிற்கிறது. வடதுருவப் பனி உருக ஆரம்பித்துவிட்டது. ஒரே வழி, சூரிய சக்திக்கும் காற்றலை சக்திக்கும் மாறுவதுதான். இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே நம்மிடம் உள்ளது. உலக நாடுகள் நினைத்தால், இது ஒரு பிரச்னையே அல்ல.”

“கள ஆய்வு ஒன்றை விஞ்ஞானக் குழுவுடன் இந்தியாவில் மேற்கொண்டிருந்தீர்களே. அது பற்றிச் சொல்லுங்கள்?”

“1995 – 1999 வருடங்களில் முதன்முறையாக இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மாசுக்கேடுகள் பற்றி ஆய்வுசெய்ய மிகப்பெரிய விஞ்ஞானக் குழு ஒன்றை உருவாக்கினோம். இதில் இந்திய, ரஷ்ய, ஐரோப்பிய விஞ்ஞானிகள் 200 பேர் பங்காற்றினர். ஆறு விமானங்களும் இரண்டு  கப்பல்களும் ஒரு செயற்கைக்கோளும் பயன்படுத்தப்பட்டன. தெற்காசியப் பரப்பின் மேலே பிரமாண்டமான பழுப்புநிற மாசுக்காற்று மண்டலம், வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக்கடல் வரைக்கும் பரந்து மிதந்தது. இந்த மாசு மண்டலத்தை விமானத்தில் பறந்து அவதானித்து முதலில் பதிவுசெய்தது எங்கள் குழுதான். கடைசிப் பறத்தலின்போது வங்காள விரிகுடாவில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதையும், கும்பகோணம் உட்பட, அவதானித்தேன். மாசுக்காற்று மண்டலம் தீவிரமாக இருந்தது. என்னுடைய பாட்டியின் கிராமம் கீழே இருந்தது. அப்போதுதான் என் சிந்தனையில் மாசடைந்த காற்றுப் பிரச்னைக்கு என்னால் ஆனது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலாக உதித்தது. என்னுடைய பாட்டி வரட்டி அல்லது விறகில் சமைத்துவிட்டு தொடர்ந்து இருமுவது நினைவுக்கு வந்தது. இந்த நச்சுப்புகை இந்தியாவில் வருடத்துக்கு 15 லட்சம் மக்களைக் கொல்கிறது. அத்துடன் பல லட்சம் டன் பயிர்களையும் அழிக்கிறது. உலகத்தில் மூன்று பில்லியன் மக்கள் விறகு அடுப்பில் சமைக்கிறார்கள். இதில் கால்வாசி மக்கள் இந்தியாவில் உள்ளனர். மாசுக்கேடு மட்டுப்படுத்தப்பட்ட சமையல் அடுப்புகளை வழங்கும் சூர்யா திட்டம் தொடங்கப்பட்டது இப்படித்தான்.”

“சூர்யா திட்டம் வழங்கும் சமையல் அடுப்புகள் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்?”


“இந்தியாவில் உருவாகிய இந்த (www.projectsurya.org) சூர்யா திட்டத்தின் கீழ் செயல்திறன்கொண்ட சமையல் அடுப்புகள் வழங்கப்படுகின்றன. பாதி அளவு விறகில் சமையலை முடிக்கலாம். புகை அதிகம் வெளியே வராது. சமைப்பவருக்குப் புகையினால் ஏற்படும் ஆரோக்கியக் கேடு குறைவு. சமையல் அடுப்பின் விலை ஏறக்குறைய 70 டொலர் (ரூ. 5,000). இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், அடுப்பில் ஓர் உணரி (sensor) பொருத்தப்பட்டிருக்கும். இந்த உணரி, சமைக்கும்போது எவ்வளவு சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படுகிறது என்ற தகவலைச் சேகரித்து பயனாளருக்கு செல்பேசி மூலம் அனுப்பும். பயனாளர் அதைக் காசாக மாற்றிக்கொள்ளலாம். ஒரு வருடத்தில் 60 டொலர் வரை பயனாளர் திரும்பப் பெற முடியும். இதுவரை சூர்யா திட்டம் 5,000 சமையல் அடுப்புகளை வழங்கியிருக்கிறது.”

காலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம் “காலநிலை அகதிகள் என்று கூறுகிறார்களே, அப்படியென்றால் என்ன?”

 “போர் காரணமாக சிலர் குடிபெயர்ந்து இன்னொரு நாட்டுக்குச் செல்கிறார்கள். அரசியல் காரணமாகவும், வறுமை காரணமாகவும் சிலர் குடிபெயர்கிறார்கள். எதிர்காலத்தில் பூமி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து சில நாடுகள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. சில நாடுகளுக்குள் கடல் நீர் புகுந்துவிடும். அப்போது மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல நேரிடும். கடல் மட்டம் உயர்வதால், மாலத்தீவு நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று செய்திகளில் படித்திருப்பீர்களே...”

“நீங்கள் போப்பாண்டவரைச் சந்தித்ததாகப் படித்தேன். எப்படி அது சாத்தியமானது? அவர் மூலம் ஏதாவது செய்ய முடிந்ததா?”

போப்பாண்டவர் 2-வது ஜான் போல், என்னை வாடிகன் ஆளுமையில் உள்ள விஞ்ஞானிகள் அகாதெமியில் அங்கத்தவராக அழைத்தார். நானும் ஏற்றுக்கொண்டேன். 80 விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் கல்விக் குழுவில் 25 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள். போப்பாண்டவர் பெனடிக்ட் என்னை கவுன்சில் அங்கத்தினராக உயர்த்தினார். போப்பாண்டவர் பிரான்சிஸ் காலத்தில் நான் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்தேன். அதன் ஆதாரப்பொருள் மனித வாழ்வுக்குத் தீங்கிழைக்கும் காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண்பதுதான். விஞ்ஞானிகளின் மதிப்பீட்டு அறிக்கையையும், பரிந்துரையையும் போப்பாண்டவர் மூலமாக உலகத்துக்கு அறிவிப்பதுதான் எங்கள் நோக்கம்.

நான் அதுவரைக்கும் போப்பாண்டவரைச் சந்தித்தது கிடையாது. அதற்குத் திட்டமிட்டு முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். தேதி பெறுவதும் சுலபமானது இல்லை. கூட்டம் முடிந்து புறப்பட்டபோது திடீரென்று செய்தி வந்தது. நான் அப்போது கார் தரிப்பு தளத்தில் நின்றேன். ‘அங்கேயே நில்லுங்கள். போப்பாண்டவர் உங்களைக் காண வருகிறார்.’ எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘இரண்டே நிமிடங்கள்தான். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுங்கள். அது உலகத்துக்குச் செய்தியாகப் போகும்’ என்றார் உதவியாளர். நான் போப்பாண்டவருக்கு ஸ்பானிஷ் மொழியில் வணக்கம் சொல்ல என்னைத் தயாரித்திருந்தேன். அவர் அருகே வந்ததும் ஸ்பானிஷ் மறந்துவிட்டது. தமிழ்கூட நினைவில் இல்லை. ஒருவாறு தயாராகி நான் சொன்னது இதுதான்: ‘காலநிலை மாற்றம் இன்று பூமி எதிர்கொள்ளும் மிக அபாயகரமான பிரச்னை. இதற்குக் காரணமான மாசுபட்ட சூழலை உருவாக்கியது உலகத்தின் வசதியான சமூகத்தைச் சேர்ந்த ஒரு பில்லியன் மக்கள். ஆனால், அதனால் உண்டாகும் சூழல் கேட்டினால் அதிகம் பாதிக்கப்படுவது பூமியின் மூன்று பில்லியன் வறிய மக்கள்தான்’ நான் சொன்னதைக் கூர்மையாகக் கேட்டுவிட்டு போப்பாண்டவர் ‘இதற்கு என்ன செய்யலாம்?’ என்று வினவினார்.  ‘மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் பூமியின் கண்களாக மாற வேண்டும். மேலும் கேடு ஏற்படாமல் அவர்களால் தடுக்க முடியும்’ என்றேன்.’’

“போப்பாண்டவர் தவிர வேறு மதத்தலைவர்களும் பரப்புரை செய்கிறார்களா?”

“திபேத்திய ஆன்மிக குரு தலாய் லாமாவைச் சந்தித்திருக்கிறேன். அவர் 20 வருடங்களாக சுற்றுச்சூழலைப் பேணுவது பற்றிப் பேசிவருகிறார். மாதா அமிர்தானந்தமயி தேவியும் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.”

“உங்களுடைய அப்பா குட் இயர் டயர் விற்பனையாளர். அவர் காவிய விற்பனைப் புத்தகத்தில் பலவித அழகான கார்கள் அச்சிடப்பட்டிருக்கும். உங்கள் சிறுவயதில் இம்பாலா கார் படம் உங்களை மிகவும் ஈர்த்தது. நீங்கள் அமெரிக்கா வந்தது படிப்பதற்கு அல்ல, இம்பாலா கார் வாங்குவதற்கு என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறீர்கள். கடைசியில் இம்பாலா கார் வாங்கினீர்களா?”

“இம்பாலா கார் வாங்கும் அளவுக்கு என் சம்பளம் வளரவில்லை. ஆனால், சுற்றுச்சூழல் அறிவு வளர்ந்துவிட்டது. நான் இன்று வைத்திருப்பது மின்சாரத்தில் ஓடும் கார். எங்கள் வீட்டுக் கூரையில் சூரிய ஓடுகள் பொருத்தியிருக்கிறேன்.”

“உங்கள் ஐ.நா உரைக்குப் பின்னர் ஓர் ஆப்பிரிக்கச் சிறுமி எழுந்து நின்று ஒரு கேள்வி கேட்டார். ‘உங்கள் பேச்சு உருக்கமாக இருந்தது. பூமிப் பந்தைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் என்ன செய்கிறீகள்?’ இதையே சிறிது மாற்றிக் கேட்கிறேன். பூமியில் மாசுக்கட்டுப்பாடு வெற்றியடைய 15 வருட காலக்கெடு கொடுத்திருக்கிறீர்கள்... இந்தப் பேட்டியை வாசிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அவசரச் செய்தி ஒன்று இருந்தால் அது என்ன?”


 “ஒன்றுசேருங்கள். உங்கள் அரசியல் வாதிகளை நெருக்குங்கள். பூமியின் எதிர்காலம் என்றுமே தீராத சூரிய சக்தியும், காற்று சக்தியும்தாம். அதற்கான தொழில்நுட்பம் ஏற்கெனவே வந்துவிட்டது. மாற்றத்துக்காகப் புரட்சி செய்யுங்கள்.”

புவி எதிர்நோக்கும் காலநிலைச் சீரழிவைத் தீவிரமாக ஆய்ந்துவரும் இந்த விஞ்ஞானி விதித்த காலக்கெடு 15 வருடங்கள்தாம். அதற்கு முன்னர் உலகம் தக்க மாசுக்கட்டுப்பாடு மூலம் சூழல் சமனை உண்டாக்க வேண்டும். தவறினால் பூமியின் வெப்பநிலை மேலும் உயர்ந்து, மனித உயிர் வாழ்தலை இடருற்றதாக்கிவிடும்.

எத்தனையோ கிரகங்கள் இருக்கலாம். உயிர்கள் வாழ்வதற்கு இருப்பது ஒரேயொரு பூமி மட்டும்தான். இதைக் காப்பதற்கு வேறு கிரகத்தில் இருந்து யாரும் வரப்போவது இல்லை. நம் கிரகம். நாம்தான் காப்பாற்ற வேண்டும்.