Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

வான்கா: சூரியக் குழந்தை

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

பின்-இம்ப்ரஷனிஸக் கலை இயக்கத்தின் மகத்தான படைப்புச் சக்தி, வின்சென்ட் வான்கா. புறக்கணிக்கப்பட்ட மேதை என்பதற்கான உருவகமாகக் கலை உலகில் நிலைத்துக்கொண்டிருப்பவர். 37-வது வயதில் (1853-1890) மன அழுத்தத்தாலும் உளைச்சலாலும் விரக்தியாலும் நம்பிக்கையின்மையாலும் தன் வாழ்க்கையைத் துண்டித்துக்கொண்டவர். வாழ்நாளில் அவருடைய ஒரே ஓர் ஓவியம் மட்டுமே விற்பனையானது. அதுவும் கருணையால் நிகழ்ந்த ஒரு சம்பவம். வான்கா, பாரிஸில் ஒரு கலைக்கூடத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்தபோது, அங்கே ஓவியங்கள் வாங்கவந்த ஒரு கோடீஸ்வரரிடம், தான் வரைந்தவை என்று வான்கா சிலவற்றைக் காட்ட, அவரும் அதிலொன்றை வாங்கிக்கொண்டார். மற்றபடி, அவருடைய வாழ்நாளில் அவருடைய ஓவியங்கள் அறியப்படாத பொக்கிஷங்களாகவே இருந்துவந்தன. இன்று அவருடைய ஓவியங்கள், நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பலப் பல கோடிகளுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இன்று பொருள்ரீதியாகவும் மிகவும் பெறுமதியானவையாக உலக அளவில் அவை அங்கீகாரம் பெற்றுள்ளன.

1853, மார்ச் 30-ல் ஹாலந்து நாட்டில் ஒரு சிற்றூரில் கிறிஸ்துவப் போதகர் குடும்பத்தில் பிறந்தவர். 1870-களில் ஓவியக்கூடப் பணியாளர், போதகர், பள்ளி ஆசிரியர் என பல பணிகளில், எந்த ஒன்றிலும் நீடித்து நிலைக்க முடியாத மனோபாவத்தோடு,  தவித்துக்கொண்டிருந்தார். இந்தக் காலகட்டங்களில் ஓவிய நாட்டமும் பயிற்சியும் அவரிடம் தொடர்ந்துகொண்டிருந்தது. 1880-ல் ஒரு கோடை காலத்தில் ஓவியராகச் செயல்படுவது என்ற தீர்மானத்தை அடைந்தார். ஓவியத்தைத் தொழிலாக ஏற்றுக்கொண்டு அவர் மேற்கொண்ட பயணம் பத்து ஆண்டுகளில் முடிவடைந்தது. அதற்குள்ளாக, 2000-த்துக்கும் மேற்பட்ட ஓவியங்களையும் கோட்டுச் சித்திரங்களையும் மிகுந்த உத்வேகத்துடனும் மனக் கிளர்ச்சியுடனும் கலைமேதைமையுடனும் படைத்துள்ளார். அவருடைய மன உலகமும் அவருடைய படைப்புகளும் ஒன்றோடு ஒன்று நெருங்கி உறவாடியவை. சிறுவயது முதலே அவ்வப்போது ஏற்படும் வலிப்பு நோயால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். எந்தச் சமயத்திலும் நோய்த் தாக்குதல் நிகழக்கூடும் என்ற அச்சம் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. வாழ்நாளெல்லாம் அவருடைய மன உலகம் வெவ்வேறுபட்ட உணர்ச்சிப் பிரவாகங்களில் அலைக்கழிந்தது. மகிழ்ச்சி,  துயரம், நம்பிக்கை, விரக்தி, அமைதி, ஆர்ப்பரிப்பு, குதூகலம், கொந்தளிப்பு என உணர்ச்சிகளின் பின்னங்களில் உயிர்கொண்டிருந்த மன உலகம் அவருடையது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவருடைய மன உலகின் உயிர்த்துடிப்பான வெளிப்பாடுகள்தாம் அவருடைய படைப்புகள். அவருடைய உணர்ச்சிகளுக்கு வண்ணங்கள் உயிர் தந்தன. வண்ணங்கள் உணர்ச்சிக் களன்களாக அவருடைய ஓவியங்களில் பரிமளித்தன. அவருடைய வாழ்க்கையே அவருடைய ஓவியங்களாகவும், அவருடைய ஓவியங்களே அவருடைய வாழ்க்கையாகவும் ஒத்திசைந்து இருந்தன. அவருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் அவருள் சுடர்கொண்டிருந்த படைப்புச் சக்தியே தீர்மானித்தது. சகோதரர் தியோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் வான்கா தெரிவித்திருக்கும் செய்தி இது: “என்னுடைய வாழ்க்கை மற்றும் ஓவியம் என்ற இரண்டையும் பொறுத்தவரை, கடவுள் இல்லாமலேயேகூட என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆனால், ஒரு நோயாளியான என்னால், என்னை விட மகத்தானதாகவும் என் வாழ்வாகவும் இருக்கும் படைப்புச் சக்தி இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.”

அவருடைய கலைரீதியான வாழ்வியக்கத்தின் மைய ஆதாரமாகக் கடைசி வரை துணையிருந்தவர் அவருடைய சகோதரர் தியோ. 1872-லிருந்து இவர்களுக்கிடையே இடையறாது நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்கள் ஓர் அற்புத உறவின் அடையாளங்களாக இருக்கின்றன. காலம், கலை, வாழ்க்கை பற்றிய வான்காவின் எழுத்துச் சித்திரங்களாகவும் இந்தக் கடிதங்கள் அமைந்திருக்கின்றன. வான்காவின் கலை வாழ்க்கைக்குப் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் உற்ற துணையாக இருந்த தியோ,  வான்காவின் மரணத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக நோய்வாய்ப்பட்டு இறந்துபோனது, இந்த உறவின் உச்ச நிகழ்வு.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்வான்காவுக்கும் வண்ணங்களுக்குமான உறவு மிகவும் பிரத்யேகமானது; உணர்வுமயமானது. வண்ணங்களை உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே பயன்படுத்தினார். முரண்பட்ட வண்ணத் தீட்டல்கள் மூலம் உணர்வுகளின் முரண்களை வசப்படுத்தினார். வண்ணங்களைத் தனித்துவ உணர்வுகளும் குணாம்சங்களும் கொண்டவையாகக் கருதிய அவர், ஆற்றல்மிக்க வெளியீட்டுக்கு அவற்றை உட்படுத்துவதில் மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டார். “என் கண் முன்னால் இருக்கும் ஒன்றை, அப்படியே மறுஉருவாக்கம் செய்ய முயல்வதற்குப் பதிலாக, அதில் என்னை மிகத் தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் வண்ணத்தை என் மனதின் இசைமைக்கேற்ப, எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிப் பயன்படுத்துகிறேன்” என்று வான்கா குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஓர் ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு வண்ணம் பற்றிக் குறிப்பிடும்போது “அது யதார்த்தத்தில் இருப்பதல்ல; மாறாக, குதூகலமான ஒரு மன உணர்வினை அது குறிக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.

வான்காவின் படைப்புச் சக்தியானது, கடைசி இரண்டு ஆண்டுகளில் அதன் உச்சத்தில் இயங்கியது. 1888-ல் பாரிஸை விட்டு நீங்கி, பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள ஆர்ல் என்ற ஊருக்குச் சென்று ஒரு வாடகை வீட்டில் தன் இருப்பையும் ஸ்டூடியோவையும் அமைத்துக்கொண்டார். இங்கிருந்த காலகட்டத்தில் வயல்கள், சூரியகாந்திப் பூக்கள், பழத்தோட்டங்கள். ஊசி இலை மரங்கள், உள்ளூர் மக்களின் உருவச் சித்திரங்கள் என அதி தீவிரமாக ஓவியங்களும் சித்திரங்களும் படைத்தார். மஞ்சள் வண்ணத்தின்மீது அதீத ஈர்ப்பு உண்டானது. அதைத் தெற்கின் பிரதான வண்ணமாக உணர்ந்தார். தன் வீட்டுக்கும் மஞ்சள் வண்ணம் பூசினார். அதை ‘மஞ்சள் வீடு’ என்ற ஓவியமாகவும் உருவாக்கியிருக்கிறார். “மஞ்சள் வண்ணம்தான் என்ன ஓர் அழகு!” என்று வியந்திருக்கிறார்.

இம்ப்ரஷனிஸவாதிகளுக்கு மஞ்சள் வண்ணம் சூரிய ஒளியின் ஓர் அம்சமாக மட்டுமே இருந்தது. ஆனால் வான்காவுக்கோ அது இயற்கை கொண்டிருக்கும் வாழ்வாதார சக்தியின் ஒரு குறியீடாக இருந்தது. சூரியகாந்திப் பூக்கள் பற்றிய அவருடைய பல ஓவியங்கள் இந்த உணர்வின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. சூரியனைப் போலவே, சூரியகாந்திப் பூவும் அவருடைய ஓவியப் பரப்பில் ஒரு முக்கிய அம்சமாகியது. அதன் அருமையான மஞ்சள் நிறமும் அலாதியான வடிவமைப்பும் அவர் படைப்புலகை ஆகர்சித்திருந்தன. “ஒரு வகையில் அது என்னுடைய பிரத்யேகமான சூரியகாந்தி” என தியோவுக்கு எழுதிய கடிதத்தில் வான்கா குறிப்பிட்டிருக்கிறார். சூரியகாந்தியின் வடிவமைப்பில் இயல்பாக அமைந்திருக்கும் சுழல் தன்மையின் அதிர்வுகள், ஒரு வெளியீட்டு நுட்பமாக வான்காவின் இக்காலகட்டத்திய ஓவியங்களில் சுழன்றுகொண்டிருப்பதை நாம் காணலாம்.

‘வான்காவின் முழுமையான, மிகக் கச்சிதமான கலை வெளிப்பாடு’ என சூரியகாந்தி வரிசை ஓவியங்களை பால்காகின் கருதினார். ‘சூரியகாந்தி ஓவியங்களில் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக் குமான ஒரு தெளிந்த உறவை வாழும் ஒரு கணத்தில் வான்கா மிக அற்புதமாக வசப்படுத்தியிருக்கிறார்’ என எழுத்தாளர் டி.எச்.லாரன்ஸ் ‘ஒழுக்கவியலும் நாவலும்’ என்ற கட்டுரையில் சிலாகிக்கிறார்.

இம்ப்ரஷனிஸவாதிகளைப் போல காட்சிகளின் தோற்றங்களின் மீது சூரியஒளி நிகழ்த்தும் ஜாலங்களில் வான்கா அக்கறை கொண்டிருக்கவில்லை. மாறாக, அவருடைய ஈர்ப்பு எல்லாம் சூரியனிடமே இருந்தது. ஒரு குறியீடாக, அவருடைய தனிப்பட்ட குறியீடாக சூரியன் ஒளிர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் அவர் உருவாக்கிய இருநூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளில் மஞ்சள் வண்ணமும் அதன் சாயைகளும் அழுத்தமாக வெளிப்பட்டன. சூரியன் பிரதானமான பங்கு வகித்தது. சூரியன் இல்லையெனில் அதற்கு இணையான சூரியகாந்திப் பூக்கள் அல்லது இரவு வானில் ஒளிரும் நட்சத்திரங்கள், அல்லது மஞ்சள் பிரகாசமாகச் சுடரும் கூட்டு விளக்குகள் இடம் பெற்றன.

முரண்பட்ட வண்ணங்களிலான சுழல்கள், அகன்ற தீட்டல்கள் என இக்கால கட்டத்திய ஓவியங்கள் அமைந்தன. சமயங்களில் தூரிகைத் தீட்டல்களைத் தவிர்த்து, டியூப்களிலிருந்து வண்ணங்களை நேரடியாக கேன்வாஸில் பயன்படுத்தி வண்ணங்களின் அதிர்வுகளை அகப்படுத்தியிருக்கிறார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

‘ஆர்ல்’ வாசத்தின்போது, ஓவியர்கள் ஒரு குழுமமாக ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்த கனவு வான்காவிடம் முகிழ்த்தது. இதனை அடுத்து தன் மஞ்சள் வீட்டின் ஸ்டூடியோவை தன்னுடன் பகிர்ந்துகொள்ள வரும்படி பால் காகினைத் தொடர்ந்து வேண்டினார். வான்காவின் அழைப்பை ஏற்றும் மறுத்தும்கொண்டிருந்த காகின், ஒரு வழியாக அக்டோபர் 1888-ல் ‘மஞ்சள் வீடு’ வந்து சேர்ந்தார். அவரை வரவேற்கும் வகையில் தன் வீட்டை அலங்கரிக்க விரும்பிய வான்கா, அவரின் வருகையைக் கொண்டாடும் விதத்தில் படைத்தவையே சூரியகாந்தி ஓவியங்கள்.

இருவரும் இணைந்து ‘தெற்கின் ஸ்டூடியோ’ என்று வான்கா கருதிய அவருடைய ஸ்டூடியோவைப் பகிர்ந்துகொண்டனர். பால் காகினுடைய தட்டையான தூரிகை வேலைப்பாடுகளை வான்கா தன் ஓவியங்களில் பரிசோதிக்கத் தொடங்கினார். கற்பனையின் ஆற்றல் மீது காகின் கொண்டிருந்த நம்பிக்கையும் வான்காவைப் பெரிதும் ஈர்த்தது. எனினும் இவ்விரு ஆளுமைகளுக்கு இடையே சிடுக்குகளும் சச்சரவுகளும் உருவாகியபடியே இருந்தன. அந்த ஆண்டின் இறுதியில் அவர்களுக்குள் நடந்த ஒரு சண்டையை அடுத்து, வான்காவுடன் எட்டு வாரங்கள் பகிர்ந்துகொண்ட ஸ்டூடியோவை விட்டு பால் காகின் வெளியேறினார். இந்தச் சம்பவத்தினால் மனமுடைந்த வான்கா, மனநலம் குன்றி, தன்னுடைய இடது காதை அறுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்த நாட்களில் தூக்கமின்மையாலும் மாயக் காட்சிகளின் தாக்கத்தாலும் அவதிப்பட்டார். இதனை அடுத்து புனித ரெமி நகரில் உள்ள புனித பால் மனநலக் காப்பகத்தில் நோயாளியாகச் சேர்ந்தார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்அங்கு அவர் வரைந்த சுய உருவச்சித்திரம் கலைக்கும் அவருக்குமான நெருக்கமான உறவுக்கு சாட்சியாக இருக்கிறது. மனம் சமநிலைக்கு மீண்டுகொண்டிருந்தபோது அவர் தீட்டிய ‘காதுக் கட்டுடன் சுய உருவச்சித்திரம்’ என்ற ஓவியம் தீவிரமான படைப்புச் சக்தியுடன் நம்மை ஊடுருவுகிறது. வாழ்வும் கலையும் ஒன்றான வான்கா, தன் மன உணர்வுகளின் சகல பின்னங்களையும் தன் படைப்புகளில் ஆழ்ந்து உறையச் செய்வது மட்டுமல்லாமல் படைப்பாக்கத்தின் வழியாகத் தன்னை மீட்டுக்கொள்ளவும்  முடிவதை இந்த ஓவியம் உணர்த்துகிறது. அவரை ஆக்கிரமித்த மனச் சிடுக்குகளிலிருந்து  ஓவியத்தின் வழியாக தன்னை மீட்டுக்கொள்ளவும் முடிவதை இந்த ஓவியம் உணர்த்துகிறது. அவரை ஆக்கிரமித்திருந்த மன அவதிகளிலிருந்து இந்த ஓவியத்தின் வழியாக அவர் வெளியேறியிருக்கிறார். அவர் அணிந்திருக்கும் கோட்டின் அடர்த்தியான பச்சை நிறமானது, பின்புலத்தில் ஒளிரும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணச் சிவப்புகளோடு முரண் கொண்டிருக்கிறது. சிவப்பு வண்ணங்களின் திறனும், மென்மயிர்த் தொப்பியின் மயிர்த் தீட்டல்களும், ஊடுருவும் அவருடைய கண்களும், மேல் நோக்கிச் செல்லும் புகைச் சுருள்களின் இதமும் வான்காவின் படைப்புத் திறனின், மன உணர்வுகளின் அதிநுட்பங்களைக் கொண்டிருக்கின்றன.

புனித பால் மனநலக் காப்பகத்தில் தன் அறையில் இருந்தபடி, அதன் ஜன்னல் வழிக் காணும் காட்சிகளை, அவருடைய மன உணர்வுகளின் அழுத்தங்களோடு வான்கா ஓவியங்களாக்கினார். அவருடைய மரணத்துக்கு ஓராண்டுக்கு முன்பு அவர் தீட்டிய பிரசித்திபெற்ற ஓவியம் ‘நட்சத்திரங்கள் நிறைந்த இரவு’. அக்கால கட்டத்தில் அவருடைய படைப்புகள், ஜுர வேகத்துடன் வெளிப்பட்ட உணர்ச்சித் தகிப்பில் உருக்கொண்டவையாக அமைந்திருக்கின்றன. இந்த ஓவியத்தைப் படைத்த தருணத்தில், தியோவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது அவருடைய அன்றைய மனநிலையை நமக்கு உணர்த்துகிறது: “ஓர் ஓவியனுடைய வாழ்க்கையில் மரணம் என்பது அப்படியொன்றும் பெரிய விஷயம் இல்லை... நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் கனவில் லயிக்கிறேன். ஒரு நாட்டின் வரைபடத்தில் ஊர்களையும் நகரங்களையும் குறிக்கும் கரும்புள்ளிகளைப் போல அவை அவ்வளவு எளிமையாக இருக்கின்றன. வானில் தெரியும் ஒளிரும் புள்ளிகள், பிரான்ஸ் நகர வரைபடத்தில் இருக்கும் கரும்புள்ளிகளைப் போல, நாம் எளிதாக அணுகுவதற்கு உரியதாக இருக்காதா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒரு நகரத்துக்குச் செல்ல ரயில் ஏறுவதைப் போல, ஒரு நட்சத்திரத்தை அடைய மரணத்தை எடுத்துக்கொள்கிறோம்.”

படைப்புப் பொருளும் படைப்பு மனமும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கூடி முயங்கியதில் விகாசம் பெற்றிருக்கும் ஓர் ஓவியம், ‘நட்சத்திரங்கள் நிறைந்த இரவு’. அவர் வாழ்நாளில் மிகுந்த துயரும் தனிமையும் சூழ்ந்திருந்த மோசமான காலகட்டத்தில் உருவான படைப்பு. பிடிபடாப் புதிரின் ரகசியம் உள்ளுறைந்து இருக்கும் ஓவியம். மனநலக் காப்பகத்தில் சேர்வதற்கு முன்னும் பின்னும் தனிமையின் கடுமையான தாக்கம் அவரைப் பீடித்திருந்தது. ஓவியம் முழுவதும் ஊடுருவிப் பரவியிருக்கும் அடர்த்தியான கருநீல வண்ணம் அன்றைய அவருடைய மனநிலையின் வெளிப்பாடு. உக்கிரமான, அழுத்தமான தூரிகைத் தீட்டல்களோடுகூடிய இந்த வண்ணம் மன அழுத்தத்தின் பிரதிபலிப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இது, இயற்கையோடு மனம் கொண்ட உறவில் இம்ப்ரஷனிஸவாதிகள் உருவாக்கும் படைப்புகளுக்கு முற்றிலும் மாறான வெளிப்பாடு கொண்டது. இந்த ஓவியத்தின் வெளிப்பாட்டு முறைதான், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பெரிய கலை இயக்கமாக உருவான எக்ஸ்பிரஷனிஸம் என்ற ஓவிய பாணிக்கு இட்டுச் சென்றது. அது மட்டுமல்ல, வான்காவின் படைப்பின் திசையையும் மாற்றியமைத்த ஓவியம் இது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்

இந்த ஓவியத்தில் வானம் அதன் யதார்த்தத் தோற்றத்தில் இல்லை. பிரபஞ்சத்தின் அகண்ட வெளியில் இரவு வானமானது, சுழல் வடிவிலான மேகங்கள், ஒளிரும் பெரிய நட்சத்திரங்கள், பிரகாசமான வளர்பிறைச் சந்திரன் எனச் சுருள் சுருளான சுழல் தன்மையிலான தூரிகைத் தீட்டல்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது. அதன் கீழ் பூமியில் ஒரு சிற்றூரின் குடியிருப்புகளும் தேவாலயமும் காணப்படுகின்றன. முன்புலத்தில் நெருப்பு வடிவிலான ஊசி இலை மரம் ஓங்கி உயர்ந்து வானளாவி நிற்கிறது. அதன் இருள் தோற்றமானது, வண்ணங்களில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட கோலம் கொண்டிருக்கிறது.

மனச்சோர்வின் உச்சத்திலிருந்த வான்காவின் மனம் அந்த ஊசி இலை மரத்தோடு தன்னை அடையாளம் கண்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இந்த ஓவியம் நேரடிப் பார்வையிலிருந்து உருவானது அல்ல. மனநலக் காப்பகத்தின் ஜன்னல் வழியாக அவர் கண்ட இரவு வானக் காட்சிகளின் நினைவுகள், ஜன்னல்  வழி அவர் பார்த்திராத, ஆனால் அவர் அறிந்திருந்த ஒரு சிற்றூரின் கற்பனையான சேர்மானம், உணர்ச்சிகளின் உக்கிரம் என எல்லாம் ஒன்று திரண்டு உருவாகியிருக்கும் அலாதியான ஓவியம். படைப்புக்கும் படைப்பாளிக்குமான உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பு.

1890 மே மாதம் புனித ரெமி நகரிலிருந்து வெளியேறி, பாரிஸுக்கு அருகிலுள்ள ஓவெர் – சூர் – வாஸ் நகரில் இருந்த மனநல மருத்துவர் காஷேயிடம் போய்ச் சேர்ந்தார். ஓவிய ஈடுபாட்டுடன் பிஸ்ஸாரோ, பால் செசான் போன்ற ஓவியர்களின் நண்பராகவும் இருந்த அந்த மருத்துவர், வரையவும், கலை பற்றி உரையாடவும் வான்காவை உற்சாகப்படுத்தினார். வரைகலைப் பொருட்களையும் அவருக்கு அளித்தார். அங்கு வான்கா படைப்பாக்கங்களில் ஈடுபட்டபோதிலும் ஜூலை மாதம் மீண்டும் கடுமையான மன அழுத்தத்துக்கும் உளைச்சலுக்கும் ஆளானார். “எவ்வித நம்பிக்கைக்கும் இடமளிக்காத வகையில் நிலைமை இருண்டிருக்கிறது. மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை” என்று இந்தச் சமயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்1890-ம் ஆண்டு ஜூலை 27 அன்று கடைசியாக அவர் வரைந்த கோதுமை வயலுக்குச் சற்று அருகில் தன்னுடைய மார்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அதன் பிறகு மருத்துவமனையில் 2 நாட்கள் உயிருக்குப் போராடிய அவர், ஜூலை 29-ல் காலமானார்.

அவர் கடைசியாக வரைந்தது, ‘காகங்கள் சூழ்ந்த கோதுமை வயல்’ என்ற ஓவியம். மகத்தான படைப்பு. இதுதான் வான்காவின் கடைசி ஓவியம் என்பது நிரூபிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், மிக எளிதாக நம்பக்கூடியதாக இருக்கிறது. இக்காலகட்டத்தில் அவரை முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்த, இருண்ட, நம்பிக்கையற்ற, துயரார்ந்த, தனிமையின் வெக்கையில் வாடிய மனநிலையின் உக்கிரமான வெளிப்பாடாக இந்த ஓவியம் இருந்து
கொண்டிருக்கிறது. பதற்றமும் கலவரமும் மேவிப் படர்ந்திருக்கிறது. தூரிகைத் தீட்டல்களின் வழி கசிந்துருகும் மெல்லிய வேதனைக் குரல்களைக்  கேட்க முடிகிறது.

இந்த ஓவியம் பற்றிக் குறிப்பாக அவர் தியோவுக்கு எதுவும் எழுதியிருக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த கோதுமை வயல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்: “கொந்தளிப்பான வானத்தின் கீழ் பரந்து விரிந்திருக்கும் கோதுமை வயல்களின் மூலம், என்னுடைய ஆழ்ந்த துயரத்தையும் அதிதீவிரத் தனிமையையும் நான் மிகத் தீர்க்கமாக வெளிப்படுத்துகிறேன்.”

இனி, அவருடைய மகத்துவப் படைப்பான, ‘காகங்கள் சூழ்ந்த கோதுமை வயல்’ ஓவியம் பற்றிக் கொஞ்சம் அவதானிக்கலாம்.

பேராற்றலும் சக்தியும் வாய்ந்த இந்த ஓவியம் வண்ணங்களாலும் படிமங்களாலும் உக்கிரமான தூரிகைத் தீட்டல்களாலும் வான்கா, கேன்வாஸில் எழுதிய தீர்க்கமான தற்கொலைக் குறிப்பு.

கருநீல வானம், மஞ்சள் கோதுமை வயல், மூன்று பாதைகள், வயலுக்கு மேலாகக் கலவரத்துடன் பறக்கும் காகங்கள் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஓவியம் இது. இதன் குறியீட்டு நுட்பங்களைப் பார்க்கலாம்.

பாதைகள்: முன்புலத்தின் இரு முனைகளிலிருந்தும் இரண்டு பாதைகள் விரிந்திருக்கின்றன. மையத்தில் தொடுவானை நோக்கி வளைந்து செல்கிறது மூன்றாவது பாதை. இடது மற்றும் வலது முனைகளிலிருந்து வெளிப்பட்டிருக்கும் முன்புலப் பாதைகள் எங்கிருந்தும் தொடங்கவில்லை, எங்கேயும் முடியவில்லை. தன் வாழ்வியக்கத்தின் திசைகள் குறித்த வான்காவின் குழப்பத்தை அவை குறிப்பதாக சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். அவருடைய வாழ்க்கை அல்லாடித் திரிந்ததை அவை உணர்த்துவதாக இருக்கலாம். ஆனால் மூன்றாவது மையப் பாதை குறியீட்டுத்தன்மை கொண்டிருப்பது நிச்சயம். தொடுவானை நோக்கி வளைந்து செல்லும் இந்த மூன்றாவது மையப்பாதை சட்டென முடிந்துவிடுகிறது. பாதை தொடராமல் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தன் பயணத்தின் பாதையை முடித்துக்கொள்ள விழைந்த அவருடைய முடிவை உணர்த்துகிறது.

வானம்: ஓவிய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே கொந்தளிக்கும் வானம் என்பது வான்காவை எப்போதும் ஈர்த்திருக்கும் ஒன்று. பொதுவாகவே, இயற்கையின் ஆற்றல்கள்மீது வான்கா தனிக் கவனம்கொண்டிருந்தார். அவற்றை வாழ்வியக்கத்துக்கான ஊக்கச் சக்திகளாகப் பார்த்தார். ஆனால் மீளாத் துயரிலும் தீராத் தனிமையிலும் தகித்துக்கொண்டிருந்த கடைசி நாட்களில் இயற்கை அவருக்கு வேறு முகம் காட்டியது. ஓவியத்தில் கவிந்திருக்கும் அடர்த்தியான கருநீல வானின் கொந்தளிப்பில் அவருடைய அன்றைய மன இருள் வெளிப்பாடு கொண்டிருக்கிறது.

காகங்கள்: இந்த ஓவியத்தில் பேராற்றலுடன் வெளிப்பட்டிருக்கும் படிமம், காகங்கள். அவை ஏதோ ஒன்றினால் கலவரமடைந்து பறந்துகொண்டிருக்கின்றன. அவை முன்னோக்கி, அதாவது வரைந்து கொண்டிருக்கும் ஓவியரை நோக்கி வருகின்றனவா அல்லது பின்னோக்கிப் பறந்து ஓவியரை விட்டு விலகிச் செல்கின்றனவா என்பது ஒருபோதும் தீர்க்கமுடியாத மாயப் புதிராக இருந்துகொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தை எண்ணற்ற முறை நுட்பமாகப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். சில நாட்களுக்குப் பின், அந்த இடத்தின் முன் வான்கா துப்பாக்கியால் தன் மார்பில் சுட்டுக்கொண்டபோது, வெடிச்சத்தத்தில் பரிதவித்துப்போன அந்தக் காகங்கள், கலவரக் குரல்களுடன் முன்னும் பின்னுமாகப் பறந்துகொண்டிருப்பதாகக் கூட சமயங்களில் தோன்றியிருக்கிறது.

எது எப்படியென்றாலும் படிமங்கள், அடர்த்தியான வண்ணங்கள், உள்ளுறை நுட்பங்கள், பேராற்றல் கொண்ட அழுத்தமான தூரிகைத் தீட்டல்கள் என அதிர்வூட்டும் இசைமையில் உருக்கொண்டிருக்கும் படைப்பு இது. ஒரு மகத்துவமிக்க படைப்பாளியின் மகத்தான ஓவியம்.

அவர் வாழ்ந்த காலம் அவரைப் புறக்கணித்தது. அவரின் கலை மேதைமையை அறியாதிருந்தது. உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன், உள்ளார்ந்த தகிப்பில் சுடரும் ஒரு சூரியக் குழந்தையென, ஒரு மகத்தான கலை வாழ்க்கையை அவர் வாழ்ந்திருந்தார். அன்று அறியப்படாதிருந்த அந்தச் சூரியக் குழந்தை, இன்று கலை உலகின் சூரியனாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

(ஓவியச் சிறுவன் கௌதமுக்கு)

பாதை நீளும் ...