Published:Updated:

ஜெயகாந்தன் - தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன்! கதை சொல்லிகளின் கதை

ஜெயகாந்தன் - தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன்! கதை சொல்லிகளின் கதை
News
ஜெயகாந்தன் - தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன்! கதை சொல்லிகளின் கதை

ஜெயகாந்தன் - தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன்! கதை சொல்லிகளின் கதை

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25- பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்-26- ஆ.மாதவன்    

``நீ சுத்தமாயிட்டே. ஆமா, தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெரட்டவா செய்றா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும். உனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத்துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா. ஆனா, அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனால்தான் ராமரோட பாதத்துளி அவ மேலே பட்டுது. கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை. எதுக்குச் சொல்றேன்னா, வீணா உன் மனசும் கெட்டுப்போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை.”

ஜெயகாந்தன் என்றதும் எப்போதும் என் மனதில் மேலெழும்பி வரும் வரிகள் இவைதான். 1966-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய `அக்கினிப்பிரவேசம்’ கதையில் வரும் வரிகள் இவை. கல்லூரி முடிந்து வீடு திரும்ப, பேருந்துக்காகக் காத்திருக்கும் அப்பாவியான மாணவி ஒருத்திக்குக் காரில் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் செல்கிறான் பணக்கார மனிதன் ஒருவன். அவ்வளவு பெரிய காரையும் அவனையும் பார்த்து கண்கள் விரிய அதிசயமாகப் பார்க்கிறாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ஒட்டு உயரமாய் அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளி உமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத்தரித்த கிராப்புச் சிகையும், காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும்கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, `அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போதே பயத்தை ஏற்படுத்துகிறது. அவன் உட்கார்ந்திருக்கும் சீட்டின் மேல் நீண்டுகிடக்கும் அவனது இடது கரத்தில், கனத்த தங்கச்சங்கிலியில் பிணைக்கப்பட்ட கடிகாரத்தில் 7 மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசுமொசுவென அடர்ந்திருக்கும் இளமயிர் குளிர்க்காற்றில் சிலிர்த்தெழுகிறது.”

அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: ``இந்த கார் இரண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் உன் பின்னாடியே அலைஞ்சுண்டிருக்கு - டு யூ நோ தட்?'' என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய்ம்மறந்துபோகிறாள்.

 ``ரொம்ப நல்லா இருக்குல்லே?''- இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.

``நல்லா இருக்கு... ஆனா பயமா இருக்கே!''

``பயமா, எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?'' - அவளைத் தேற்றும் தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பிலிருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்ததுபோன்று அவள் நிலைகுலைந்துபோகிறாள். ``எனக்குப் பயமா இருக்கு. எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...''

இப்படி லேசான கிறக்கத்தில் இருந்த அவளுக்கு சாக்லேட் கொடுத்து, சூயிங்கம் கொடுத்து காரிலேயே உறவுகொள்கிறான். அதன் பிறகு வீடு வந்து அம்மாவின் தோளில் சாய்ந்து அழுகிற அவளை அடித்துவிட்டு பிறகு அம்மா அவளைக் குளிப்பாட்டி தலையில் நீரைக் கொட்டிப் பிறகு சொல்லும் வார்த்தைகள்தாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட வரிகள்.

1966-ம் ஆண்டில் இந்தக் கதை வந்தபோது தமிழ்ச் சமூகத்தை ஓர் உலுக்கு உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒரு கதையோடு கதை முடிந்துவிடவில்லை. இந்தக் கதையின் நீட்சியாக `சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற புகழ்பெற்ற நாவலையும் அந்த நாவலின் தொடர்ச்சியாக `கங்கை எங்கே போகிறாள்?' என்ற நாவலையும் படைத்தார். ஆகவே `அக்கினிப்பிரவேசம்’ கதை அவருடைய படைப்பு வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம்.

ஜெயகாந்தன் கடலூரில், 1934-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி வேளாண் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே அவருக்கு பள்ளிப்படிப்பில் நாட்டமில்லை. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். இதன் காரணமாக, அவருக்கும் அவரது தந்தைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவர் தன் தாயார் மற்றும் தாத்தாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். வீட்டில் அவருக்கும் அவரது தந்தைக்கும் சுமுகமான உறவு இல்லாமல், இருவரும் எதிரும்புதிருமாக இருந்தனர். அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்ற ஒரே காரணத்தால், அவரது தந்தை அவருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கினார். சிறுவனாக இருந்து இதை சற்றும் தாங்கிக்கொள்ள இயலாததால், அவர் தனது 12-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி விழுப்புரத்தில் உள்ள அவரது மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவரின் மாமா அவருக்கு கம்யூனிசக் கொள்கைகளையும் பாரதியின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.

சிறிது காலம் கழித்து, சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான உறவினர் புருஷோத்தமன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் ஜெயகாந்தனின் தாயார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது பிள்ளைப்பருவத்தைக் கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்குப் பரிச்சயமானார். அந்தக் கட்சி அலுவலகத்தைத் தனது வீடாகவும், அந்தக் கட்சி உறுப்பினர்களைத் தன் குடும்ப அங்கத்தினர்களாகவும் கருதிய அவர், அவர்களின் கலந்துரையாடல்களைக் கேட்கக் கேட்க, இலக்கியம் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. அமரர் ஜீவானந்தம், ஜெயகாந்தனுக்குக் கல்வி கற்றுத் தர தமிழாசிரியர் ஒருவரை பணியில் அமர்த்தினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைபார்த்தார். 

இதுபற்றி அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவது ``நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப்பட்டியல் போட்டால்... மளிகைக்கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரலில் `வேலைக்காரி' சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிகைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் இன்ஜினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபேக்டரியில் இங்க் ஃபேக்டரியில் கைவண்டி இழுத்தது, புரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்... எனப் பட்டியல் நீளும். அந்தக் காலங்களில்தான் எளிய தொழிலாளர்களின் சிறிய குடியிருப்புகளிலும் ஏழை விவசாயிகளின் எளிய குடிசைகளிலும் தங்கி, அவர்களது உபச்சாரத்தை, அவர்கள் தரும் உணவை, அவர்கள் வாழ்ம் பண்பை நான் அதிகம் அனுபவித்தேன். அந்த அனுபவங்கள் இந்த வாழ்க்கையைப் பற்றிய புதிய ஞானத்தை எனக்குத் தந்தன. வாழ்க்கையின் உயிர்ப்பு எங்கெல்லாம் மிக ஆரோக்கியமாகத் தளும்பி நிற்கிறது என்பதை என்னால் தரிசிக்க முடிந்தது. வாழ்வைப் பற்றிய புதிய நம்பிக்கையும் தைரியமும் எனக்குப் பிறந்தது” என்று நினைவுகூரினார் ஜேகே.

1949-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதால், அவர் தஞ்சாவூரில் உள்ள காலணிகள் விற்கும் ஒரு கடையில் தற்காலிகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். பிறகு, காமராஜரின் கொள்கைகள் மீது அவருக்குப் பற்று ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, அவர் இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். `நவசக்தி' இதழிலும் பணியாற்றினார்.

1950-ம் ஆண்டில் அவரது எழுத்து வாழ்க்கை தொடங்கியது. `சௌபாக்கியம்’ என்கிற இதழில் அவரது முதல் சிறுகதை வெளியானது. சுமார் 200 சிறுகதைகளும் 50 நாவல்களும் 20-க்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகளும் கவிதைகள், முன்னுரைகள், நேர்காணல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என எழுதிக் குவித்தவர் ஜே.கே. முழுமையான ஓர் எழுத்தாளர் என்றும் சுயசிந்தனையாளர் என்றும் அவரைச் சொல்ல வேண்டும். இவ்வளவு எழுதிய இன்னொரு தமிழ் எழுத்தாளர் அவர் காலத்தில் இல்லை.

அவருடைய சிறுகதை வரலாற்றை எழுதுபவர்கள், அவரது சிறுகதைப் பயணத்தை சில கட்டங்களாகப் பிரிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எழுதியவை எல்லாம் எளிய அடித்தட்டுவர்க்க மனிதர்களைப் பற்றிய கதைகள். அடுத்த கட்டமாக `சரஸ்வதி' இதழில் எழுதத் தொடங்கிய காலத்தில் பாலியல் பிரச்னைகளைத் தொட்டுக் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய கதைகள். ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய பிறகு பரந்த வாசகர்களை நோக்கி உரத்த குரலில் பேசிய கதைகள் எனப் பல பரிமாணங்களில் அவரது சிறுகதைகள் பயணிக்கின்றன. இன்னொரு முக்கிய வகைமை பிராமணக் குடும்பங்களில் நிலைகொண்டு பேசிய கதைகள். திராவிட இயக்கத்தார் கண்மூடித்தனமாக பிராமண எதிர்ப்பைப் பேசியதால் அதற்கு எதிரான மனநிலையில் ஜேகே பிராமணக் கதைகளை எழுதியதாகவும் கருதுவோர் உண்டு.

அவர் இலக்கியப் படைப்புகளைப் படைத்ததோடு நில்லாமல், அந்தப் படைப்புகளை முன்வைத்துத் தன் பரந்துபட்ட வாசகர்களோடு இடையுறாத உரையாடல்களை நிகழ்த்தி வந்தார். தன்னுடைய நூல்களின் முன்னுரைகளை அத்தகைய விவாதங்களுக்கான தளமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதுபோதாதென்று தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் இலக்கியக் கூட்டங்களில் விரிவாக உரையாற்றினார்.

அவருடைய உரைகளில் மனதைப் பறிகொடுத்த எண்ணற்ற இளைஞர்களில் நானும் ஒருவன். நான் சார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பல நிகழ்வுகளில் அவரை அழைத்துப் பேச வைத்திருக்கிறோம். கம்பீரமான தோற்றப்பொலிவுடன் சந்தேகத்துக்கிடமற்ற குரலிலும் தொனியிலும் அவர் பேசுவார். அப்போது அவர் சொல்வது அத்தனையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றும்.

அவருடைய `அக்கினிப்பிரவேசம்' கதை, பல முனைகளிலிருந்தும் தாக்கப்பட்டபோது நிதானமாகவும் பொறுமையாகவும் நின்று அவற்றை எதிர்கொண்டார்.

``இன்னும் ஒரு சாரார் கேட்கிறார்கள்: `இதன் மூலம் என்ன சொல்கிறீர்கள்? கெட்டுப்போய்விட்டு வந்த பெண்ணின் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றிவிட்டால், கறை போய்விடும் என்கிறீர்களா?' என்று.

நான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். அவள் கெட்டுப்போனவள் அல்ல. அவளுக்கு வாழ்க்கை உண்டு. அவள் மனதில் களங்கம் இல்லை. மனம் என்பது முதிர்ந்தது. எது சரி, எது தவறு என்று இதுபோன்ற காரியங்களில் தீர்மானிக்க முடியாத பேதை அவள். இதற்காக இந்த மூடச்சமூகம் அவளுக்கு வாழ்க்கையை மறுத்து அவளைக் காலில் போட்டுத் துவைத்துவிடும். எனவே, அதை ஒரு கெட்டகனவாகவே எண்ணி அவளே மறந்துவிட வேண்டும். இதிலிருந்து பெற்ற படிப்பினையோடு தனது வாழ்க்கையில் இனி அவள் எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும்.

ஒரு வேசியை ஊர் கூடிக் கல்லெறியும்போது `எவன் பாவம் செய்யாதவனோ அவனே இவள் மீது கல்லெறியட்டும்’ என்று கூறிய அந்தக் கடவுள் தூதன் ஒழுக்கக் கேட்டையா பிரசாரம் செய்தான்?அவன் பேச்சால் தமது பண்பாடே கெட்டுப்போகும் என்று அவனை சிலுவையில் அறைந்த மூடத்தனம் நம்மைவிட்டு அகலவில்லையா என்ன?” என்று ஆணித்தரமாக நெற்றியிலடித்தார் ஜேகே.
இதற்கப்பாலும் `அக்கினிப்பிரவேசம்' கதையில் இன்னும் விவாதிக்க இடம் இருக்கிறது. தலைக்குத் தண்ணீர் ஊற்றிப் பாவத்தைக் கழுவிய அந்தத் தாய் சொன்ன வரிகளை மீண்டும் வாசிக்கையில்  ``….கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை. எதுக்குச் சொல்றேன்னா - வீணா உன் மனசும் கெட்டுப்போயிடக் கூடாது பாரு. கெட்டகனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை.”

`வீணா உன் மனசும் கெட்டுப்போயிடக் கூடாது பாரு…' என்கிற வார்த்தைகளை, அந்தத் தாய் ஏன் சொல்கிறாள்? உடம்பு கெட்டதுபோல மனசும் கெட்டுடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவளுக்கு ஏன் வந்தது? கதைக்குள்ளே அவள் விரும்பியும் பயந்தும்தான் அவனுடன் உறவுகொள்வதாக வருகிறது. அது வன்புணர்வுதான். ஆனால், அவளுக்கு அறியாமையின் பாற்பட்ட ஓர் ஈர்ப்பும் இருந்தது. அவளை தலைக்குக் குளிப்பாட்டி அவ்வளவு வசனமும் பேசுகிற வரைக்கும்கூட அவன் தந்த சூயிங்கம் அவள் வாயில்தான் இருக்கிறது.

கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக்கொள்ளச் சொன்னாள் அம்மா.

``அதென்ன வாயிலே சவக் சவக்குனு மெல்லறே?''

``சூயிங்கம்.''

``கருமத்தைத் துப்பு... சீ!... துப்பு. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா'' என்று கூறிவிட்டு, பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.

அந்தச் சூயிங்கம்தான் `சில நேரங்களில் சில மனிதர்களாக’வும் அப்புறம் `கங்கை எங்கே போகிறாள்?’ என்ற இரு நாவல்களாகவும் இழுத்து நீண்டு வெளியில் வந்தது. இப்படியாக இருக்கிறார்கள் மனிதர்கள். ``கண்டதைத்தானே சொல்கிறேன்'' என்கிறார் ஜெயகாந்தன். அதை ஒரு பாடலாக அவரே எழுதி பீம்சிங் இயக்கிய `சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தில் வைத்துள்ளார்.
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
 
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
 
நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
 
இதற்கெனைக் கொல்வதும் 
கொன்று கோயிலில் வைப்பதும் 
கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
 
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?
 
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களைக் கும்பிட்டுச் சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ?
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ?

`சரஸ்வதி' இதழில் அவர் எழுதிய `தாம்பத்தியம்', `திரஸ்காரம்', `பௌருஷம்', `பால்பேதம்' ஆகிய நான்கு கதைகள் அந்தச் சமயத்தில் கடுமையான எதிர்ப்புக்கு இலக்காகின. பாலியல்ரீதியாக சிற்றின்பத்தைத் தூண்டும்வண்னம் அவரது எழுத்துகள் இருப்பதாக விமர்சனம் எழுந்தது.

`தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சித்ததுக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்குப் புடவை, இரண்டணாவுக்கு வளையல். ஆக, ஐந்து ரூபாய் செலவில் ரிக்‌ஷாக்கார-கூலிக்கார ஏழைக்கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சித்ததை மருதமுத்து கண்ணாலம் கட்டிக்கொண்டான்' என்று தொடங்கும் `தாம்பத்தியம்’ சிறுகதை, கண்ணாலம் கட்டிக்கொண்ட அந்த ஏழை உழைப்பாளி மக்கள் `ஒதுங்குவதற்கு’ ஓர் இடம் இன்றி பார்க் பெஞ்சுக்கு அருகில் செடிகளின் மறைவில் தங்கள் முதல் இரவைக் கழிக்க முற்படுவார்கள். ``சீச்சீ... இந்த பார்க் ரொம்ப நாஸ்டியாப்போச்சு!'' என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரர் தம் அருகில் வந்தவரிடம் சொல்லிக்கொண்டே நடந்தார். மருதமுத்துவின் உடல் நாணிக்கூசியது. ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.

அன்று இரவு முழுவதும் இருட்டும் தனிமையும் கிடைக்காமல் போராடும் அந்தத் தம்பதியை விடிகிற நேரத்தில் போலீஸ்காரன் வந்து விபச்சார வழக்கில் இழுத்துக்கொண்டு போகிறான் என்று கதை முடியும்.

`பால்பேதம்' கதையில் குழந்தைக்கு ஒரு தாய் பால் ஊட்டும் காட்சியையும், மாடு கன்றுக்குப் பால் ஊட்டும் காட்சியையும் விரிவாக எழுதியிருப்பார். ``பால் நரம்புகள் புடைத்துப் பருத்த முலைக்காம்புகளில் வெண் முத்துப்போல் ஈரம் கசிந்திருந்தது. உணர்விழந்த உணர்ச்சிப் பரபரப்போடு குழந்தையின் முகத்தை மார்பில் வைத்து அழுத்தினாள் வேலம்மாள். நெஞ்சில் புகுவதுபோல மார்பிலே முட்டி முட்டி முலை சுவைத்தது சிசு.” 

`இதுபோன்ற ஆபாச வார்த்தைகளை ஆசிரியர் களைந்தெறிய வேண்டும்' என ஒரு வாசகர் 1957 செப்டம்பர் `சரஸ்வதி' இதழில் கடிதம் எழுதியிருந்தார். 

அதற்கு ஜேகே பதிலளித்து எழுதினார்: `…திவ்யப்பிரபந்தம் படித்திருக்கிறீர்களா? 
`வயிறசைந்தாய், வன முலைகள் சோர்ந்து 
பாயத் திருவுடையவாய்மடுத்துத் 
திளைத்துதைத்துப் பருகிடாயோ… 
முத்தனைய முறுவல் செய்து 
மூக்குறிஞ்சி முலை உணாயே… 
ஒரு முலையை வாய் மடுத்து 
ஒரு முலையை நெருடிக்கொண்டு 
இரு முலையும் முறை முறையாய் 
ஏங்கியேங்கி இருந்துணாயே…'
என்று வருகிறது.

முலை என்ற வார்த்தையைப் படித்ததுமே நாம் கதை படிக்கிறோம் என்பதையே மறந்து சம்பந்தமில்லாத உணர்ச்சிக் கிறக்கத்துக்கு படிப்பவர் ஏன் ஆளாக வேண்டும்? ஆபாசம் வார்த்தையிலா இருக்கிறது? அப்படியானால் 
`வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா 
உண்ண உண்ணத் தெவிட்டாதே 
அம்மை உயிரெனும் முலையினில் உணர்வென்னும் பால்'
என்ற பாரதியின் கவிதையில் உள்ள முலை என்ற பதத்துக்கு முகம் சுளிக்கவேண்டுமோ?” என்று ஆதாரங்களை அடுக்குகிறார்.

இப்படியாக ஆழமான பல விவாதங்களுக்கு வாசகர்களை ஈர்த்த படைப்பாளி, தமிழில் அவரையன்றி வேறு யாருமல்ல. இதுபற்றி மேலும் ஜெயகாந்தன் கூறுவது, ``நான் ஆரம்பகாலத்தில் எழுதியவையெல்லாம் ஆபாசமென்று என்னை ஏசியவர் பலர். மனிதனுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதே பாலுணர்ச்சிதான். ஆகவே, அதற்கும் நான் மதிப்பளிக்க விரும்பினேன். ஒரேயடியாக அதைப் பற்றி மட்டுமே எழுதுவதோ அல்லது அறவே ஒதுக்குவதோ சரியல்ல என்று எண்ணுபவன் நான்.”
இத்தகைய விவாதங்கள் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி தன்னுடைய `தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில் ஜெயகாந்தன் பற்றி எழுதும்போது `வாழ்வுக் கண்ணோட்டம்கொண்டு பாலுணர்ச்சியைப் பார்த்தல் வேண்டும். பாலுணர்ச்சிக் கண்ணோட்டம்கொண்டு வாழ்க்கையைப் பார்த்தலாகாது' என்று குறிப்பிட்டுவிட்டு ஜேகே-வின் ஆரம்பகாலக் கதைகளில் அத்தகைய தெளிவு இல்லையோ என்கிற ஐயத்தைப் பதிவுசெய்துவிட்டு `பிற்காலத்துக் கதைகளில் பாலுணர்ச்சி மிகச் செம்மையாகக் கையாளப்படுவதை `உன்னைப்போல் ஒருவன்', `பிரளயம்', `வாய்ச்சொற்கள்', `இருளைத்தேடி' ஆகிய கதைகளில் காண்கிறோம்' என்று முடிக்கிறார்.

ஜேகே-வின் சிறுகதைகளைப் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது கவனத்துக்குரியது. `…அவை இரு வேறு காலப் பகுதிகளுக்குரிவையாக அமைவதைக் காணலாம். முதலாவது, ஆனந்த விகடனுக்கு எழுதுவதற்கு முந்திய காலம். அடுத்து ஆனந்த விகடனிலும் அத்தகைய பிற பத்திரிகைகளிலும் எழுதும் காலம். முதலாவது காலப்பிரிவில், தத்துவ நோக்குப் பீறிட்டு நிற்கும் கதைகளும் பரிசோதனை முயற்சிகளாக அமைந்த கதைகளுமே வெளிவந்தன. இந்தக் கதைகள் தரமானவையாக அமைந்தனவெனினும், வாசகரஞ்சகமாக அமையவில்லை. இரண்டாவது காலப்பிரிவினையைச் சேர்ந்தவை வாசகரஞ்சகமாக அமைவதுடன் கருத்தையும் வலியுறுத்துவனவாய் அமைகின்றன.

அவருடைய அநேக கதைகள் இணையத்தில் எளிதாக வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே, இங்கு அதிகம் கதைகள் பற்றி விவரிக்கவில்லை.
ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கிய அவர், பிறகு காங்கிரஸ்காரராகவும் அதற்குப் பிறகு காஞ்சிப்பெரியவரை வைத்து `ஜய ஜய சங்கர' என்று நாவல் எழுதப்போனதையும் அவருடைய வீழ்ச்சி என விமர்சிப்போர் உண்டு. இந்துதர்மம் என அவர் பேசியது மற்றவர்கள் பேசியதைபோல அல்ல.

``நமது இந்துதர்மத்தின் பேராலேயே இந்தத் தேசத்தை சோஷலிசப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்று நான் மார்தட்டிச் சொல்கிறேன். இந்துதர்மத்தை உண்மையாக நம்புகிறவர்களுக்கு உகந்த சமூக அமைப்பு சோஷலிச சமூக அமைப்புத்தான். ஓர் இந்தியன் என்பவன் தனிமனிதன் அல்லன். சமூக மனிதனே அவன். ருஷ்யாவில் ஏற்பட்டு நிலவுகிற ஒரு புதிய சமூக அமைப்பை ஓர் இந்து தன்னியல்பாகவே ஆதர்சமாய்க் காண்பது அவசியக் கடமையாகிறது” என்றெல்லாம் அவருடைய `ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' நூலில் எழுதுகிறார். ஆனாலும் அவர்மீதான விமர்சனம் தொடர்கிறது.

`ரிஷிமூலம்' நாவலுக்கான முன்னுரையில் `நான் சமுதாயத்தை உயர்த்துவதற்கான இலக்கியம் படைக்கிறேன். சோஷலிசமே எனது லட்சியம். புரட்சி ஓங்குக! தொழிலாளிவர்க்கம் ஜிந்தாபாத்! நான் எழுதும் ஒவ்வோர் எழுத்தும் மக்களுக்காகவே என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடை போட்டு வருவது என்னைப் பொறுத்தவரை ஒரு கோமாளித்தனம்' என்று குறிப்பிடுகிறார். அதே முன்னுரையில் `பிராய்டிசத்தை அடிப்படையாகக்கொண்டு கதை எழுதுவது வெட்கப்படவேண்டிய காரியமல்ல' என்றும் குறிப்பிடுகிறார்.
இவற்றையும் அவரது சில நாவல்கள், கதைகள் பல தார மணத்தை ஆதரிப்பதையும் கடுமையாக விமர்சிக்கும் மார்க்சியரான அருணன் ``…மக்களுக்காக எழுதக் கூடாது என்று முடிவெடுத்தவுடன் அவருக்கு எஞ்சியிருந்தது பாலுறவுச் சிக்கல்களே. அந்தப் பாலுறவுப் பிரச்னையிலும் அவரது வக்கிரப்பார்வை அவரைப் படுபிற்போக்குத்தனமான, பெண்ணடிமைத்தனமான, சனாதனப் படுகுழியில் தள்ளிவிட்டது” என்று விமர்சிக்கிறார்.

இன்னொரு மார்க்சிய விமர்சகரான எஸ்.தோத்தாரி அவருடைய நாவல்களில் மண்டிக்கிடக்கும் பிராய்டிசம், ஆன்மிக வாதம், மாயாவாதம், நீஷேயிசம் போன்றவற்றுக்கு மாறாக அவருடைய சிறுகதைகளில் மனிதநேயம் சிதையாமல் இருப்பதாகக் கூறுகிறார். இந்த இருண்மை நிலைக்குக் காரணம் அவர் ``தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் நடைபெறும் யதார்த்தமான சமூக இயக்கங்களையும் அவற்றில் இயங்குகின்ற மனிதர்களின் சமூக உறவுகளையும் காணத்தவறியதே ஆகும்” என்று கணிக்கிறார்.

ஆனால், சமகால நிகழ்வுகளைக் கவனிக்காதவரல்ல ஜேகே. `சக்கரம் நிற்பதில்லை’ என்றொரு நெடுங்கதையில் 1974-ம் ஆண்டில் நடந்த ரயில்வே ஸ்டிரைக் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால், அந்த வேலைநிறுத்தம் தோற்கட்டும் என ஒரு கதாபாத்திரம் சபிக்கிறது. சக்கரத்தை ஓடவிடுபவன்தான் தொழிலாளி, நிறுத்துபவன் தொழிலாளி அல்ல என்றெல்லாம் கதையில் நீண்ட சம்பாஷணைகள் இருக்கும். சுவரில் வரைந்த அரிவாள் சுத்தியல் மீது சாணி அப்பும் காட்சியைக் கிண்டலாக விவரிப்பார்.

மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளான இந்தக் கதையை அவர் 1974-ம் ஆண்டில் தினமணி கதிரில் எழுதினார்.

ஜெயகாந்தனை தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் இன்றும் உண்டு. கடுமையாக விமர்சிப்பவர்களும் கணிசமாக உண்டு.

ஜெயகாந்தன் படைப்புகள் மீதான பொதுவான விமர்சனம் ஒன்றுண்டு. அது, `கதைகளில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் மீதும் இவரே ஏறி அமர்ந்துகொண்டு சொற்பொழிவாற்றுகிறார். கதாபாத்திரங்களை சுதந்திரமாக வாழவிட மாட்டார்' என்பது ஒன்று. கதைக்குள் தேவைக்கு அதிகமான சத்தம் இருக்கும் என்பது இன்னொன்று. அப்புறம் அவர் தமிழில் எழுதும் யாருடைய எழுத்தையுமே வாசித்ததில்லை. அதுபற்றி அவரே கூறுவது... ``நானோ எப்போதுமே பிற எழுத்தாளர்களைப் பற்றி ஏதும் சொன்னதில்லை. மூத்த எழுத்தாளர்களைப் பற்றி கருத்துகள் சொல்லும் வழக்கம் இல்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில்கூட அதிகமாக ஏதும் சொன்னதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையில்லை.

விமர்சனத்தால் இலக்கியவாதிக்கு என்ன பயன்? பிறரை மனதில்கொண்டு நல்ல எழுத்தாளன் எழுதுவதில்லை. பிறர் சொல்வதை அவன் பொருட்படுத்துவதுமில்லை. என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை நான் கவனிப்பதே இல்லை. விமர்சனங்களால் வாசகர்களுக்கு வாசகச்சூழலுக்கு ஒருவேளை ஏதேனும் பிரயோசனம் இருக்கலாம்.”

அவர் இறப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் `இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்...

``இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார், என்ன காரணம்?''

``இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி. நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன் என்றால், அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.''

ஜெயகாந்தன் தன்னை அறிந்தவராகவே இருந்திருக்கிறார். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன் ஜெயகாந்தன் மட்டுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. 

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வார்த்தைகளோடு நிறைவுசெய்வோம்,
``இலக்கியத் தரமான சிறுகதைகள், ஜனரஞ்சகமாக அமைய மாட்டாது என்ற கருத்து தவறானது என்பதை சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.”