Published:Updated:

“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

சந்திப்பு : வெய்யில், தமிழ்மகன், பாலு சத்யாபடங்கள் : ப.சரவணகுமார்

“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

சந்திப்பு : வெய்யில், தமிழ்மகன், பாலு சத்யாபடங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்
“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச்சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிகமிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு... ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து... சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல... இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம். தன் நினைவு அடுக்குகளிலிருந்து தேடித்தேடிக் கோத்து சொற்களாக்கி வெகு நிதானமாகப் பேசுகிறார் அசோகமித்திரன்.

``உடம்புக்கு முடியாமப்போனதுக்கப்புறம் ஞாபகங்கள் எல்லாம் குறைஞ்சுபோயிடுத்து. இருபது முப்பது வருஷ நினைவுகள் இப்போ என்னிட்டயே இல்லை. பல விஷயங்களை நினைவுபடுத்தவும் கஷ்டமா இருக்கு. இப்போ முதுகுத்தண்டும் பிரச்னை கொடுத்துட்டது. அப்பப்போ எந்திரிக்க முடியலை. உப்பு சத்து உடம்புல ரொம்ப குறைஞ்சுபோச்சு. எதுவுமே நினைவுல சரியா நிக்கறதில்லை.’’

“மறந்துபோனவற்றில் இருந்து எதையேனும் நினைவுபடுத்த முயல்கிறீர்களா?”

“இல்லை... ஸ்ட்ரெய்ன் பண்ண முடியலை. அப்படி முக்கியத்துவமான நினைவுகளும் என் கடந்த கால வாழ்க்கையில இல்லையே!”

``இரவில் கனவுகள் வருகின்றனவா?’’

``ஒன்பதரை மணிக்குப் படுத்துடுவேன். மாத்திரை சாப்பிடுறதுனால, தூக்கம் வந்திரும். ஆனா, காலை வரைக்கும் தூங்க முடியாது. ரெண்டரை மணிக்கு விழிப்பு வந்துடுறது. அதுக்கப்புறமான இடைப்பட்ட நேரத்தில கனவுகள் வருது. மனசுக்குக் கஷ்டம் தர்ற... அவதி தர்ற... கனவுகளாக வருது.”

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்


“எப்படியான கனவுகள்?”

“அந்தக் காட்சிகளை வெளக்கிச் சொல்ல முடியலை. ஆனா, அந்த மொத்தக் கனவையும் ஒரு உணர்வா சொல்லணும்னா, ரொம்பக்  கஷ்டப்படுத்துகிற கனவுகள். ‘திறந்திருக்கிற கதவைச் சாத்தணும்னு தோணும். ஆனா, எழுந்திருக்க முடியாது. அந்த மாதிரி கனவுகள் அதிகமா வரும்.

அந்த ஜோடிப் பறவைகளைப் பத்தி சொன்னேன்ல... நான் இந்த ரூம்ல ஃபேன் பயன்படுத்தறது இல்ல. எங்கே ஜன்னல் திறந்திருந்து, பறவைங்க உள்ளே வந்து ஃபேன்ல அடிபட்ருமோனு ஒரு பயம். இதெல்லாம் சேர்ந்து, மனசை சங்கடப்படுத்தும்படியான கனவுகள் நிறைய வருது.’’

``இதுவரை எழுதிய உங்களது படைப்புகள் குறித்து நிறைவாக உணர்கிறீர்களா?’’

``இல்லை. பலர் என் படைப்பை வாசிக்கறது சந்தோஷம்தான். ஆனா, அதுக்காக எதையோ பெருசா சாதிச்சிட்டதா நான் நினைக்கலை. அப்படி பெருசா ஒண்ணும் சொல்றதுக்கில்லை.’’

``உங்களுடைய எழுத்துகளை ‘அதிகம் அதிர்ந்து பேசாதவை’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லி இருக்கிறார்். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’

``வேண்டாமே... அதிர்வு எதுக்கு? யாருடைய எழுத்தும் இப்படித்தான் இருக்கணும்னு கிடையாதே. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்துக்கான  பொதுக்குணமா ஒன்றைக் குறிப்பிடுவாங்க. அது காலத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும். அதேசமயம், அதிகமா இல்லேன்னாலும் அதிர்ந்து பேசுற விஷயங்கள் என்னோட எழுத்திலயும் இருக்கத்தான் செய்யுது.’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

``உங்களுடைய புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’’

``நானே கதாநாயகனாகவா?” 

``ஆமாம். அல்லது ஒரு பாத்திரமாகவேணும்...’’


``என் வாழ்க்கை சார்ந்து, என் குடும்பம் சார்ந்து, நிறைய விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். என் சகோதர, சகோதரிகளோட வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் புனைவா எழுதி இருக்கேன். ஆனா, ஒரு கதையில இடம்பெறக்கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டா, போதும்னு நினைக்கிறேன்.’’

``உங்கள் கதைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். அதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?”

``எனக்குத் தெரியலை. அந்தந்த இடங்களில் உண்மையைச் சொல்றேன் (சிரிக்கிறார்). ஒரு பெரிய அரங்கம்; நிறையக் கூட்டம்... ஏராளமான கலைஞர்கள். அந்தக் கூட்டத்துக்கு இளையபாரதி இரண்டு புத்தக வெளியீடுனு சொல்லி என்னைக் கூப்பிட்டிருந்தார். ஆனா, உண்மையில அது வேறொரு கூட்டம். நிறையப் பேர் வந்திருந்தாங்க. புத்தக வெளியீட்டுக்கா இவ்வளவு கூட்டம்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். கலைஞர் வந்திருந்தார். கூட இருந்தவங்க எல்லாரும் எழுந்துபோய் கலைஞரோட கையைப் பிடிச்சு, வணக்கம் சொல்லி,  கால்ல விழுந்து  என்னென்னமோ  பண்ணினாங்க. எனக்கு அப்படிச் செய்ய முடியலை. அதெல்லாம்கூட எனக்குப் பிரச்னையா இல்ல. அந்த ஹால்ல ஏர்கண்டிஷன் ஓடுது. பக்கத்துலயே ஒரு ஃபேனும் ஓடுது. குளிர் நடுக்குது. தாங்க முடியலை. எனக்குப் பொன்னாடை போர்த்தினாங்க.  `அப்பாடா... சரியான நேரத்துல போர்த்தினீங்க. இந்த இடத்துல இந்தப் பொன்னாடை ரொம்பத் தேவையா இருக்கு’னு சொன்னேன். பல சமயங்களில் உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு.’’ 

“கவிதைகள் ஏன் உங்களுக்குப் பிடிப்பது இல்லை?’’

``அப்படியெல்லாம் இல்லை. நான் வாசிச்ச பல கவிதைகளில் அலட்சியமா எழுதப்பட்ட மாதிரியான ஒரு தொனி, தோற்றம் இருக்கு. எல்லாரையும் அப்படி எழுதுறாங்கன்னு சொல்லலை. சிலபேருக்கு சில விஷயங்கள் பிடிக்கும்; சிலபேருக்குப் பிடிக்காது. `உனக்கு ஏன் அது பிடிக்கலை?’னு கேட்கக் கூடாது இல்லையா? எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே  கவிதைகள் மேல ஈடுபாடு இல்லை.’’

``பாரதியை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்களே...?’’

``பாரதியோட சில வரிகள் எனக்குப் பிடிக்கும். நல்ல உழைப்பு, அசாத்தியமான சிந்தனை எல்லாம் அவர்கிட்ட இருந்தது. கண்ணம்மா பாடல்கள், கண்ணன் பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல்கள்ல ஒரு ஒழுங்கு இருந்தது. அதையெல்லாம் இப்போ இருக்கற கவிதைகள்ல எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தன் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். ஆரம்பத்துல அவரோட கவிதைகள்ல வர்ற ஐடியாக்களுக்காக, (அரசாங்கக் கட்டடத்தில் முதல் தூக்கம் போட்ட நாள்) போஷிச்சிருக்கேன். அப்புறம், `அன்று வேறு கிழமை’ நல்லா இருந்தது. அதுக்கு மேல எனக்கு அவர் கவிதைகள் மேல ஒண்ணும் தோணலை.”

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

``இசை கேட்பது உண்டா?’’

``ஒரு காலத்துல நானே பஜன் பாடல்கள் எல்லாம் பாடிட்டிருந்தேன். இப்போ விட்டுப்போயிடுத்து. இசையில நாட்டம் உண்டு. ஆனா, இசை கேட்பதற்கு அதுக்கான சூழலும் வசதியும் வேணுமே. கிராமபோன் வந்தப்போ, அது எங்ககிட்ட இருந்தது. சில ரெக்கார்ட்ஸும்கூட இருந்தது. இப்ப ரேடியோ வெச்சிருக்கேன். அதோ இருக்கு பாருங்க...” (மேசையில் இருக்கும் ஒரு சிறிய ரேடியோவைக் காட்டுகிறார்.)

``இப்போவும் கையால்தான் எழுதுகிறீர்களா?’’

``நான்கைந்து வருஷமா கம்ப்யூட்டர்ல எழுதறேன். யூனிகோட்ல எழுதறதுக்குச் சொல்லிக்குடுத்திருக்காங்க. கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனா, திருத்தவும் எடிட் பண்ணவும் இது ரொம்ப வசதியா இருக்கு.’’

``இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?’’

``பாசிபிளிட்டீஸ்! ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை யோசிப்பேன். குறிப்புகள் எழுதிவைக்கறதும் உண்டு. வாழ்க்கையில பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்னு நினைக்கிறேன். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு சுபாவங்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு சூழல்கள்... அதையெல்லாம் மாற்றிப் போட்டு இவருக்கு இந்த சூழ்நிலையில இப்படி நடந்தா என்னாகும்னு யோசிக்கறதுலதான் கதை உருவாகுது. பாசிபிளிட்டீஸ் இருக்கிறவரை கதைகள் இருக்கும். எழுதிக்கிட்டே இருக்கலாம்.’’

``சிறுகதை வடிவம் காலாவதி ஆகிவிட்டதா. இனி, புதிய வடிவத்துக்குத்தான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?’’

``இல்லை. ஏற்றுக்கொள்ள முடியாது. அதுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கும். ஆனா, ரொம்பப் பெரிய இடம் இருக்கும்னு சொல்ல முடியாது. முன்பு, சிறுகதைகளுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட்டன. பி.எஸ்.ராமையா, அவரோட `மணிக்கொடி’யில சிறுகதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு  இதழில் நான்கைந்து கதைகள் வரும். ஆனால், இப்போ ஆனந்த விகடன்லயே வாரம் ஒரு கதைதான் வெளியிடுறாங்க. அப்போ, வருஷத்துக்கு அதுல 52 கதைகளைத்தானே எழுத முடியும்? இலக்கியத்தின் எந்த வடிவத்தையும்... கவிதை வடிவத்தையும்கூட, காலாவதியாகி விட்டதுனு சொல்ல முடியாது.’’

``தமிழ்ச் சிறுகதை, நாவல் உலகில், அந்த வடிவங்களைக் கௌரவம் செய்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்``கு.ப.ரா-வைச் சொல்லலாம். ரொம்பக் குறைவாத்தான் எழுதினார். ஆனால்,  ரொம்ப மகத்தான சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கார். அப்புறம் புதுமைப்பித்தன். அவர் எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சுட்டுதான் நான் எழுதவே வந்தேன். அதை அவர்தான் எழுதினார்னும் அப்போ எனக்குத் தெரியாது. தலைப்பு நினைவில் இல்லை. சாமியாரான ஒருத்தன் அவன் ஏன் உண்மையில் சாமியாரா இல்லை என்பதை நுட்பமாகப் புலப்படுத்தும் கதை. அப்போ வந்த, `கலைமகள்’ல கு.ப.ரா.,

க.நா.சு., பிச்சமூர்த்தி எல்லாம் தொடர்ந்து எழுதினாங்க. கி.வா.ஜ அதன் ஆசிரியராக இருந்தார். புதுமைப்பித்தன் எழுதின `காஞ்சனை’ கதையை யார் யாரோ வெளியிட்டிருக்காங்க. ஆனா, `கலைமகள்’ வெளியிட்ட `காஞ்சனை’ அவ்வளவு சுத்தமா இருக்கும். அதுக்குக் காரணம், கி.வா.ஜகந்நாதன்தான்.’’

``கு.ப.ரா., புதுமைப்பித்தன் சொன்னீர்கள். அதற்குப் பிறகான காலகட்டத்தில், உங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக யாரைச் சொல்வீர்கள்?’’

``சா.கந்தசாமி ஒரு விசேஷமான எழுத்தாளர். அவர் எந்தப் பின்புலமும் இல்லாமல் இலக்கியத்துக்குள் வந்தவர். நானாவது கல்லூரிக்கெல்லாம் போயிருக்கேன். உலக இலக்கியத்துல பரிச்சயம் உண்டு. ஜி.நாகராஜன் மாதிரியான எழுத்தாள நண்பர்களும் எனக்கு உண்டு. ஆனா, சா.கந்தசாமிக்கு அப்படியெல்லாம் கிடையாது. சுயமாகவே எழுதினார். திறமையான வேற சிலரும் இருக்காங்க...’’ (மௌனமாகிறார்).

“இன்றைக்கு எழுதுகிறவர்களில்?’’

“இன்றைக்கு எல்லாருமே நல்லா எழுதுகிறாங்க. General Proficiency அதிகமாகிடுச்சி. எந்தப் பத்திரிகையையும் எடுத்துப் பாருங்க... ரொம்ப நல்லா எழுதுறாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்லகூட நிறைய நல்ல கதைகள் வெளியாகுது.  எல்லா கதைகளும் தீவிரமான புனைவுகளைப்போல  நம்மை வேற ஒரு உலகத்துக்கு, அனுபவத்துக்கு அழைச்சுட்டுப் போகிறதான்னு நீங்க கேட்கலாம். ஆனா, படிக்கிற அரை மணி நேரத்துக்கு நல்ல பொழுதுபோக்கா இருக்கிறதே. எனக்குப் பிடிச்சிருக்கு. இன்னிக்கு பத்திரிகைகள்ல வர்ற `ஃபேஸ்புக், ட்விட்டர்’ போன்ற பகுதிகள்கூட சென்சிபிளாவும் ரொம்ப புத்திசாலித்தனமாவும் இருக்கு.’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

``பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்?’’

``ஆர்.சூடாமணி... இப்போகூட அவங்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்தாங்க. ரொம்ப நல்ல குணம் அவங்களுக்கு.  குமுதினினு ஒரு எழுத்தாளர் இருந்தாங்க. அவங்களுக்குக் காது கேட்காது. அவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலயும் எழுதினாங்க. தாகூரின் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்காங்க. முன்பைவிட இப்போ நிறையபேர் எழுதறாங்க... சல்மா, தமயந்தியெல்லாம் நல்லா எழுதுறாங்க. விமர்சனமும் இருக்கு. ஆனா, இப்போ யாரையும் விமர்சிக்கிற மனநிலையில நான் இல்லை.”

“போரும் அமைதியும், கரமசோவ் பிரதர்ஸ் போன்ற அளவில் பெரிய அதே சமயம் க்ளாசிக் தன்மையுடைய தமிழ் நாவல்கள் பற்றி...?”

“மகா நாவல்கள்னு சிறப்பிக்கப்படுற எல்லா படைப்புகளையும் இப்போ மறுபரிசீலனை செய்யணும். அது அவசியம்னு  நினைக்கிறேன். என் வரையில் இந்த மகா நாவல்களோட சிகரம்னு கருதப்படுற ‘போரும் அமைதியும்’ எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த மகா நாவல்கள்லாம் அந்தக் காலகட்டத்தோட பிரசுரத் தேவையால உருவாக்கப் பட்டவையோனு சந்தேகப்படுறதுண்டு.  `போரும் அமைதியும்’ மூலநூல் ஆசிரியராலேயே பலமுறை திருத்தப்பட்டது. அது மட்டுமில்லாம உள்ளே ரெண்டு பின்னுரைகளை வேறு கொடுத்திருக்காங்க. எந்தப் படைப்பிலக்கியமும் என்னைப் பொறுத்தவரை முன்னுரை, பின்னுரை இல்லாம, அதன் அளவிலேயே அது சிறந்து விளங்கணும்னு சொல்வேன்.

தமிழிலும் மகா நாவல்கள் எழுதப்பட்டிருக்கு. சுந்தர ராமசாமியின், ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின், `பின் தொடரும் நிழலின் குரல்’, அவர் இப்போ எழுதிட்டு வர்ற மகாபாரதத் தொடர் நாவல்கள், பூமணியின் `அஞ்ஞாடி’ இதெல்லாம் என் நினைவுக்கு வருது. இன்னும் பல இருக்கலாம். புனைகதைங்கிறது மகிழ்ச்சிக்காகப் படிக்கப்படுறது. படிக்கிறதுக்கே அதிக உழைப்பு தேவைப்படுறபோது, எழுத்தாளனோட இலக்கு பற்றி சந்தேகம் வருது. ஜோ டி குரூஸின் ரெண்டு படைப்புகளும் (ஆழிசூழ் உலகு, கொற்கை) மகா நாவல்கள்தான். பல நாட்கள் உழைத்துத்தான் அதைப் படிக்க முடிஞ்சது. இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்தவைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன். இதையே எல்லாரும் ஏத்துக்கணும்னு நான் வற்புறுத்த மாட்டேன். வாசிப்புங்கிறது முழுச் சுதந்திரத்தோட நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்.”

“சிறுகதை, குறுநாவல், நாவல் இவற்றுக்கு உங்களது இலக்கணம் என்ன?”

 “கறாரா இதை வரையறுக்க முடியாது. இதில நமக்கு சமரசப் பார்வை தேவை. சிலர் தங்களோட ஒரு சிறுகதைக்கு பல ஆயிரம் சொற்களை எடுத்துக்கிறாங்க. சிலர் சில நூறு சொற்களை எடுத்துக்கிறாங்க. பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள்னு ஓரளவுக்கு மேல் விரிஞ்சிட்டுப் போகிற கதைகளை சிறுகதையிலிருந்து குறுநாவல், நாவல்னு பிரிக்கலாம்.

தமிழ் உரைநடையில படைப்பிலக்கியம் உருவானதே ரொம்பத் தாமதமாத்தானே.  முதல் தலைமுறைக் கதாசிரியர்களுக்கு அவங்களோட வாசகர்கள் யார்னே  தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. அவங்க எழுதின நூல்களை அவங்களோட வாரிசுகள் பள்ளிப் பாடப் புத்தகமா மாத்துறதை விரும்பினாங்க. கேட்க ஆச்சர்யமா இருக்கலாம். `பிரதாப முதலியார் சரித்திரம்’ ‘கமலாம்பாள் சரித்திரம்’ ரெண்டாவது மூணாவது பதிப்பிலேயே பாட நூல்களா திருத்தப்பட்டுருச்சு.”

“ஒரு படைப்பு அந்தப் படைப்பாளியின் உரிமையின்றித் திருத்தப்படலாமா?”


“இப்பல்லாம் பலர் இணையத்தில அவங்க நினைக்கிறதையெல்லாம்  எழுதிடுறாங்க. ‘எடிட்டிங்’கிற விஷயத்தை இந்தத் தலைமுறை கத்துக்கணும். ஒரு கதையில பத்திரிகையாசிரியர் செய்ற சிறுசிறு திருத்தங்களை நாம அனுமதிக்கணும். எழுத்தாளர்கள் தங்களோட எழுத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிற விஷயமா இதைப் பாக்கக் கூடாது.  எந்தப் படைப்பானாலும், அது ஒரு நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படுவது நல்லது. செய்தி, கருத்து, கிண்டல், கவிதை, படைப்பிலக்கியம்னு மிகச் சிறப்பா வெளியிடுறதுல புகழ் பெற்றது ‘நியூயார்க்கர்’ வாரப் பத்திரிகை. அந்தப் பத்திரிகையைத் தோற்றுவித்த ஹரால்ட்ராஸ் ஒருமுறை சொன்னார்... `யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.”

``இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’

```சாந்தோம் அவார்டு’னு ஒண்ணு கிடைச்சது. இதுல பணம், காசெல்லாம் ஒண்ணும் கிடையாது. என் படைப்புகளை மதிப்பீடு செஞ்சு ஒரு கேடயம் குடுத்தாங்க. அதை முக்கியமான அங்கீகாரமா நான் நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு  டைரக்டரா சுந்தர்ராஜன்னு ஒருத்தர் இருந்தார். அவர் ஜெனீவா போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறமா அந்த விருது வழங்கப்படுறதில்லை. நகுலன், சி.மணி,

க.நா.சு-வுக்கெல்லாம் இந்த விருது கொடுத்தாங்க. இதுல சுவாரஸ்யம் என்னன்னா, ஒரு திரைப்படத்துக்கும்கூட இந்த விருது கொடுத்தாங்க... ரஜினிகாந்த் நடிச்ச படம்... அதுலகூட ஒரு பாட்டு வருமே... `சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா...’னு(நினைவுபடுத்திக்கொள்கிறார்) ராஜா சின்ன ரோஜா... அந்தப் படத்துக்கும் பரிசு கொடுத்தாங்க (சிரிக்கிறார்).’’

``நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில், உங்களுக்குப் போட்டியாக யாரையாவது நினைத்தது உண்டா?’’

``போட்டினு யாரையும் நெனைச்சது  கிடையாது. நண்பர்கள் நிறைய கிடைச்சாங்க. வா.மு.சேதுராமன் அப்படிக் கிடைச்சவர்தான். அவரோட சகோதரர் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டிருந்தார். அவருக்கு என் படைப்புகள்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர்தான் ஆரம்பத்தில் என் புத்தகங்களை அச்சிடத் தேவையான உதவிகளைச் செய்தார். அவரோட உதவியால்தான் `வாழ்விலே ஒருமுறை’ நூல் வெளியாச்சு. அதுக்குக் கொஞ்சம் வரவேற்பு கிடைச்சது. புத்தகம் வித்துடுச்சு. அதைவெச்சு `இன்னும் சில நாட்கள்’ புத்தகம் வந்தது. அப்புறம், ஆங்கிலத்துல நிறைய வர ஆரம்பிச்சுது. ஆங்கிலத்துல எழுதும்போது, ரெமுனரேஷனும் ஜாஸ்தி. அப்போ நான் ஜெமினியில பார்த்த வேலையை விட்டிருந்த நேரம். கொஞ்சம் மனசு வேதனையோடதான் விட்டேன். அப்போ ஆங்கிலத்துல எழுதறது கொஞ்சம் கை கொடுத்தது.

எனக்கும் ஜி.நாகராஜனுக்குமான நட்புக்கு `நியூயார்க்கர்’ பத்திரிகையும் ஒரு காரணம். ஒரு சமயம், `நியூயார்க்கர்’ல எனக்கு ஒரு கதை வந்துட்டா போதும்’னார். `அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க்கர்ல உங்க கதை வரணும்கிறீங்க... நீங்க இடதுசாரியாச்சே!’ன்னேன். `இடதுசாரியா இருந்தா என்ன... பத்திரிகையை நல்லா நடத்துறாங்க’ன்னார். `நான் வருஷத்துக்கு ஒரு கதை அனுப்பறேன்’னு சொன்னேன். `நானும் அனுப்பறேன்’னு அவர் சொன்னார். இப்படி எங்க நட்பு வளர்ந்தது. அவர் எனக்காக, `கணையாழி’யில எல்லாம் எழுதியிருக்கார். இந்த மாதிரி நட்புதான் உண்டே தவிர, போட்டினு யாரையும் நினைச்சது இல்லே.’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

``நீங்கள் ஏன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில்  எழுதவில்லை?’’

``இல்லையே... ஆங்கிலத்துல நிறைய எழுதியிருக்கேனே.  இதுவரை பத்துப் புத்தகம் வந்திருக்கு. தொகுக்கப்படாம நூத்துக்கும் மேலான கட்டுரைங்க இருக்கு. எக்ஸ்பிரஸ்ல, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை `ரைட்டர்ஸ் நோட்’னு ஒண்ணு போடுவாங்க. அதுல நிறைய எழுதியிருக்கேன். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மேன், நேஷனல் ஹெரால்டு, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லினு நிறைய  எழுதியிருக்கேன்.”

“நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இஸங்கள் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்ளவில்லையே?”  

“இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்ச பிறகு, ஐரோப்பிய நாடுகள் சிதைஞ்சு போயிருந்துச்சு. கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்குற முயற்சியில சில இலக்கியக் கொள்கைகளை உருவாக்குனாங்க.  எனக்குத் தெரிஞ்சு அறுபது, எழுபதுகள்ல ‘ஆலன் ரோப் கிரியே’ங்கிற எழுத்தாளர் திரும்பத் திரும்ப உதாரணமாகச் சொல்லப்பட்டார். அவருடைய நாவல்களையெல்லாம் சினிமாவாக்கூட எடுத்தாங்க.

என்வரையில பின்நவீனத்துவ நூல்களைப் பத்தி முக்கியமான அறிமுகங்கள் இல்லை. நிறைய பாலியல் சலுகைகள் எடுத்துக்கிட்டு எழுதப்பட்ட படைப்புகள் பின்நவீனத்தோட சேர்க்கப்படுது. நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு கால வரிசைப்படி எடுத்துக்கிட்டா,  பல நவீனப் படைப்புகளைக் காட்டிலும் உயர்ந்த படைப்புகள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டிருக்கு. இதுக்கு மேல விரிவா ஆய்வாளர்கள்தான் பேசணும்.”

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்``சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் குறித்து...’’

``நான் குறை சொல்லப்போறதில்லை. வருஷாவருஷம் சாகித்ய அகாடமியில மொழிக்கு ஒரு ஆள்வீதம், 24 பேருக்கு விருது கொடுத்துடுறாங்க. ஆனா, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு இந்த எண்ணிக்கை போதாது. ஞானபீட விருது வடநாட்டுக்காரங்க கொடுக்கிறது. விருதுனு யோசிச்ச உடனே அவங்க கண்ணுக்கு அங்க உள்ள வயசான முகங்கள்தான் முதல்ல நினைவுக்கு வரும். அதையெல்லாம் தாண்டி எப்பவாவது தென்னிந்தியப் பக்கம் வர்றது உண்டு. அதனால, யாரையும் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. கிடைச்சா சரி, கிடைக்கலைன்னாலும் அதுக்காக வருத்தப்படக் கூடாது. நான் வருத்தப் பட்டதில்லை.

உரைநடைக்காரர்களுக்காவது  எப்படியோ அங்கீகாரம் கிடைச்சிடுது. இந்த கவிஞர்கள் பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அவங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கிறதில்லை. ஒருவகையில் விருதுகள் என்கிறதே லாட்டரி மாதிரிதான். லிஸ்ட்ல தகுதியான பத்துப் பேரு இருப்பாங்க. ஆனா, பத்துப் பேருக்கும் கொடுக்க முடியாதே. யாராவது சொல்லலாம், `நீ வாங்கிட்டே... அதனால குறை சொல்லாம இருக்கலாம்’னு. நான் அந்த விருதை வாங்காதப்பவும் குறை சொல்லலை. வந்தப்பவும் அதைப் பெருசா நினைக்கலை.’’

``ஒரு சமூகத்துக்குக் கற்பனை எவ்வளவு அவசியம்?’’

``எந்தச் சமூகத்துக்கும் ரொம்பவே அவசியம். கற்பனை இருந்தாதான், நாம எதைப் பத்தியும் திட்டமிட முடியும். சராசரி ஆட்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ மட்டுமில்ல... ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும்கூட  கற்பனை தேவைப்படுது. தண்ணீர்ப் பற்றாக்குறையில, வாரத்துக்கு ரெண்டு முறைதான் மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுது... அதை எப்படிச் சமாளிக்கலாம்னு ஓர் அதிகாரி யோசிச்சார்னா, அதைத் திட்டமிடுறதுக்குக் கற்பனை தேவை. கற்பனை என்பது ஏதோ கதை சொல்றவங்களுக்கு மட்டுமான சமாசாரம் கிடையாது.’’

“சமீபத்தில் தாங்கள் எழுதிய ‘ஆகாகான் மாளிகை’ நாடகம் காந்தியின் மீது ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்கிறதே?” 

“காந்தி மட்டுமில்லை, உலகத்துல எவ்வளவு பெரிய மனுஷங்களா இருந்தாலும், அவங்களோட வரலாற்றை, தத்துவத்தை , பங்களிப்பை மறுபரிசீலனை செய்யணும்னுதான் சொல்வேன். காந்தி, நேரு போன்றவங்களே சில தவறுகளைச் செஞ்சிருக்காங்க. ஒரு காலத்தில மகா மனிதர்களா தோற்றமளிச்சவங்களே, இன்னிக்குப் பல தவறுகள் செஞ்சவங்களா விமர்சிக்கப்படுறதைத்தான் நாம அன்றாடம் பாக்குறோமே!

பலகோடி மக்களோட நலனை தனது முதன்மையான அக்கறையாக நெனைச்ச காந்தி, அவரோட குடும்பத்துக்கிட்ட அந்த அக்கறையைக் காட்டலை. ஆகாகான் மாளிகையில நிமோனியா நோயில் படுத்திருக்கிறாங்க கஸ்தூரிபா. அப்போதான் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்துச்சு. அதை, கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கலாம்னு  தேவதாஸ் காந்தி ஏற்பாடு செய்றார். ஆனா, காந்தி மறுத்துடுறாரு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் விரும்பிய இங்கிலாந்துக் கல்வியை காந்தி தடுத்துடுறார். விளைவு, தந்தைக்கும் மகனுக்கும் கடைசி வரைக்கும் பகை. இதுல வினோதம் என்னன்னா, காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே வருஷத்துல ஹரிலாலும் இறந்துபோயிட்டார்.”

``எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?’’


``சில பேர் சொல்றாங்க, `இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க... இதெல்லாம்தான் சவாலா இருக்கு.’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்

``ஏதாவது சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறீர்களா?’’

``ஃபேஸ்புக் பார்க்கறதுண்டு. நான் இப்போ இருக்கறது ஒரு மகன் வீட்டில். இன்னொரு மகன், வேளச்சேரியில இருக்கார். மற்றொரு மகன் பாம்பேயில இருக்கார். உறவுக்காரங்களோட தகவல் பரிமாறிக்க, பிறந்த நாட்கள்ல வாழ்த்து சொல்ல ரொம்ப உதவியா இருக்கு.  ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்ல பெரிய ஈடுபாடு வரல.’’

``அன்றாடச் செய்திகளை அப்டேட் செய்துகொள்கிறீர்களா? தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?’’


``சாயங்காலத்தில டி.வி. செய்திகள தவறாமப் பார்த்திடுவேன். ரேடியோ செய்திகளை மிஸ் பண்ணிடாமக் கேட்பேன். பத்து நிமிஷத்தில அன்றைய நாளோட மொத்த நடப்புகளையும் சுருக்கிச் சொல்லிடுறாங்கல்ல. அப்புறம், கிரிக்கெட்டும் விரும்பிப் பார்க்கிறதுண்டு.”

``விவசாயம் நசிந்து மக்கள் சென்னைக்கு வந்து குவிகிறார்கள். நீங்கள் பார்த்த அந்த நாள் சென்னைக்கும் இப்போதைய சென்னைக்கும் வித்தியாசம் எப்படி இருக்கிறது?’’

``அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கு. இதைத் தவிர்க்க முடியாது. இந்த மாற்றத்தை மறுக்க முடியாது. நீங்க சொல்றீங்க, விவசாயம் இல்லாமப் போயிட்டுதுன்னு. விவசாயம்லாம் இருக்கு. அப்போ விவசாயம் செய்யறதுக்கு 100 பேர் தேவைன்னா, இன்னிக்கி நாலைஞ்சு பேரைவெச்சு செஞ்சுடலாம். விவசாய முறை மாறிடுச்சு.’’

``ஆனா, விவசாயிகளோட நிலை மாறவே இல்லையே. சமீபத்துலகூட பலர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே..?’’

``அது ரொம்ப ரொம்ப வருத்தப்படக்கூடிய விஷயம்தான். கொஞ்சமா சொந்தநிலம், சிலருக்கு அதுவும் கிடையாது. பாசனத்துக்கு தண்ணிப் பிரச்னை, வங்கிக் கடன்னு சமாளிக்கிறது கஷ்டம்தான். ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.’’

``உங்களை வாழ்க்கை முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும் கேள்வி ஏதேனும் இருக்கா?’’

``அப்படிப்பட்ட ஒரு பெரிய சிந்தனையாளன் இல்லப்பா நான். சில சூழ்நிலைகளை, சில நபர்களை மாத்திப்போட்டுக் கதை எழுதறதைத் தவிர, பெருசா ஒண்ணும் நான் சிந்திச்சிடலை. நம்ம வரைக்கும் நாம சரியா இருக்கணும். ஒவ்வொருத்தருக்குமே அவங்கவங்களுக்கான சமூகப் பொறுப்பு, தனிமனிதப் பொறுப்பு இருக்கு. பிறர் மனம் வருந்தற மாதிரி எதுவும் செஞ்சுடக் கூடாது... அது ஒண்ணுதான் எனக்குத் தோணிக்கிட்டே இருக்கிற விஷயம். எண்பத்தஞ்சு வயசுல என்ன பெரிய உறுத்தல் இருக்கப்போகுது எனக்கு?”

``படைப்பு அரசியல் என்று எதையாவது உங்கள் எழுத்தில் வைத்திருக்கிறீர்களா?’’

``அரசியலா? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தேவையும் இல்லைனு நினைக்கிறேன்.’’

``உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’’

``பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதினதை சிலபேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’’

``சமீபத்தில் என்ன சினிமா பார்த்தீர்கள்?’’

``சமீபத்தில் இல்லை. கடைசியாக நானும் என் மகனுமாக `ஜுராசிக் பார்க்’ பார்த்தோம். அப்போ சத்யம் தியேட்டர் வேற மாதிரி இருந்தது. இப்போ எல்லாம் மாறிப்போச்சு. எனக்கு இந்த `கபாலி’ படத்தை  முழுசா பார்த்துடணும்னு ஒரு ஆசை. அதுல ரஜினிகாந்த் கையில ஒரு புஸ்தகம் (My Father Balaiah) வெச்சிருப்பார். நான் அந்தப் புத்தகம் பத்தி எழுதியிருக்கேன். ரொம்ப நல்ல புத்தகம் அது.’’

“உண்மைதான்  பெரிய நகைச்சுவையா இருக்கு!” - அசோகமித்திரன்``முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’’

``நடக்க முடியலை. தூங்க முடியலை. தொடர்ந்து உட்கார முடியலை. இதுதானே முதுமை?’’

``முதுமைப் பருவத்துக்கு என்று ஏதாவது ஒரு சௌகரியம், அல்லது நல்ல விஷயம் இருக்கா?’’

``அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.’’

``கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’’

``எனக்கு சில சாமியார்களோட நல்ல பழக்கம் உண்டு. இந்த யோகம்... ஹடயோகம், ராஜயோகம்னு எதை எடுத்துக்கிட்டாலும், அதற்குண்டான கடவுளை நம்பிப் போகலாம் என்கிற நிலை இருக்கு. ஆனா, ரொம்ப தெய்விகமா, பக்தியா நான் செய்யறது கிடையாது. அதுக்கும்கூட கொஞ்சம் வசதி வேண்டியிருக்கு.’’

``அப்படி என்றால் உங்களுக்கு பக்தியில் ஈடுபாடு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா..?’’

``ஈடுபாடு இல்லைன்னாலும்... (யோசிக்கிறார்) சில மந்திரங்களுக்கு நம்ம மனதை நிதானப்படுத்தறதுக்கான சாத்தியம் இருக்கு. மந்திரங்கள் மேல எனக்கு ஈடுபாடு உண்டு. அது மனதை சாந்தப்படுத்துது.’’

``வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியத்துவமானது என்று நினைக்கிறீர்கள்?’’


``இப்போ என் தேவைகளை என் மகன்கள் கவனிச்சிக்குறாங்க. அப்போ, பணம் இல்லாததனால, என்னோட பெரிய பையனை 12-வதுக்கு அப்புறம் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் சேர்க்க முடிஞ்சுது. அதுக்குக்கூட அக்னிபுத்திரன்னு ஒரு கவிஞர்தான் உதவினார். பணம் முக்கியமானதுதான். வந்தா நல்லது, வரலைன்னா என்ன செய்ய முடியும்?’’

``உங்களை மிகவும் பாதித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் எதைச் சொல்ல விரும்புவீர்கள்?’’

``இரு நகரங்களின் கதை (Tale of two cities). நான் எட்டாவது படிக்கிறப்போ பள்ளியில் துணைப் பாட நூலாக இருந்துச்சு. அதுதான், வாசிக்கிற பழக்கத்தைத் தூண்டுச்சு.  என்னை எழுதவும் தூண்டுச்சு.’’

``புதுசா எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?’’

``எழுதணும்னு வர்றவங்க, சொல்ல நெனைக்கிறதை அழுத்தம் திருத்தமா தெளிவா எழுதணும். அதுதான் என்னுடைய ஆசை. மத்தபடி, அவங்கவங்களோட கற்பனை, ஆற்றல் அதுக்குள்ளல்லாம் நான் போக விரும்பலை. முடிஞ்ச வரைக்கும் நம்ம மொழிக்கு நாம மரியாதை செய்யணும்.”