Published:Updated:

அங்கதச்சுவையை கொண்டாடிய ஒரே பெண் எழுத்தாளர் கிருத்திகா! - கதை சொல்லிகளின் கதை 28

அங்கதச்சுவையை கொண்டாடிய ஒரே பெண் எழுத்தாளர் கிருத்திகா! - கதை சொல்லிகளின் கதை 28
News
அங்கதச்சுவையை கொண்டாடிய ஒரே பெண் எழுத்தாளர் கிருத்திகா! - கதை சொல்லிகளின் கதை 28

``கிருத்திகா, தமிழின் பெண் எழுத்தாளர்களில் மிக அபூர்வமான தனித்தன்மைகொண்டவர். வழக்கமாக பெண்கள் எழுதும் கருப்பொருள்கள், பெண்ணுரிமை அல்லது பெண்ணின் வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்தவையாகவே இருக்கும். இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் அவர்.

துரம் என்ற இயற்பெயர் கொண்ட கிருத்திகா, காலம் சென்ற ஐ.சி.எஸ் அதிகாரி பூதலிங்கத்தின் இணையர். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இணையர் மீனா சுவாமிநாதனின் தாயாரான கிருத்திகா, 1915-ம் ஆண்டு பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி இவரது சொந்த ஊர். திருப்பதிசாரத்தைச் சேர்ந்த பூதலிங்கம்பிள்ளையை மணம்புரிந்துகொண்டார். பூதலிங்கம்பிள்ளை ஐ.சி.எஸ் படித்து பிரிட்டிஷ் அரசில் வேலைபார்த்தார். பிறகு நேருவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். இந்திய உருக்குத் தொழிலை பொதுத்துறை சார்ந்து உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் பூதலிங்கம்பிள்ளை.

டெல்லியின் அதிகார உள்வட்டத்தில் இருந்த கிருத்திகா, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத ஆரம்பித்தவர்; பாரதி மீது அதீத மோகம்கொண்டவர். அவரது முதல் நாவல் `புகை நடுவில்’. `புகை நடுவில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே’ என்ற பாரதி வரியிலிருந்து இந்தத் தலைப்பு எடுக்கப்பட்டது. பம்பாயில் படித்து வட மாநிலங்களிலேயே அதிகம் வசித்தவர். தமிழில் இவர் எழுதியவை, `புகை நடுவில்', `வாஸவேச்வரம்', `சத்தியமேவ', `புதிய கோணங்கி' மற்றும் `நேற்றிருந்தோம்'  போன்ற புதினங்களும், `மனதிலே ஒரு மறு', `மா ஜானகி' போன்ற நாடகங்களும்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1940-50களில் எழுதிக்கொண்டிருந்த பிற பெண் படைப்பாளிகளைப்போலவே, கிருத்திகாவும் நாவல்களில் கவனம் செலுத்தியதுபோல சிறுகதைகளில் கவனம் செலுத்தவில்லை. அவருடைய ஒட்டுமொத்த எழுத்துகளுமே பெரிதாகக் கவனிக்கப்படவுமில்லை... கொண்டாடப்படவுமில்லை.

``கிருத்திகா, தமிழின் பெண் எழுத்தாளர்களில் மிக அபூர்வமான தனித்தன்மைகொண்டவர். வழக்கமாக பெண்கள் எழுதும் கருப்பொருள்கள், பெண்ணுரிமை அல்லது பெண்ணின் வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்தவையாகவே இருக்கும். இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் அவர். அந்த வகையில் குர் அதுல் ஐன் ஹைதர்-ருடன் ஒப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் குறியீட்டுத்தன்மையுடன்  சமகால உயர்மட்ட அதிகார அரசியலை விவாதிப்பவை. அங்கதச்சுவைகொண்டவை. அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப் பெண் எழுத்தாளர் இவரே.

கிருத்திகாவின் பெரும்பாலான நாவல்களை தமிழ் உலகம் சரிவர உள்வாங்கிக்கொள்ளாமல் இருக்கிறது. அதற்கு அவற்றின் கூறுமுறை முக்கியமான ஒரு காரணம். சம்பிரதாயமான கதை பெரும்பாலும் எந்த நாவலிலும் கிடையாது. கரு புதுமையானதாக இருந்தாலும் நடை பழைமையானதாக இருக்கிறது. மகாபாரதத்தையும் டெல்லி அரசியலையும் பிணைத்து எழுதப்பட்ட அவரது அரசியல் அங்கத நாவல்களை விமர்சகர்கள் விவாதிக்கும்போதுதான் எளிய வாசகர்கள் உள்ளே நுழைய முடியும். அது நிகழவில்லை. இப்போது அவரது பல நாவல்கள் கிடைப்பதேயில்லை.

கிருத்திகாவின் முக்கியமான நாவல் `வாஸவேச்வரம்'. இது அவரது புகுந்த வீடான திருப்பதிசாரத்தைக் களமாக்கியது. இந்தியா விழித்தெழும் காலகட்டத்தில் பண்பாட்டுத் தேக்கத்தில் ஊறிச் செயலற்றுக்கிடக்கும் ஒரு கிராமத்தைச் சித்திரிக்கிறது `வாஸவேச்வரம்'. பொதுவாக இத்தகைய கிராமியச் சித்திரிப்பு நாவல்களில் உள்ள கடந்தகால ஏக்கம், இழந்ததைப் போற்றுதல் இதில் இல்லை. கிராமத்தின் சில்லறைத்தனங்களும் கண்மூடித்தனங்களும் எள்ளலுக்கு ஆளாகின்றன. அத்துடன் கடுமையான ஆசாரங்களுக்கு அடியில் பாலியல் மீறல் இயல்பாக நடந்தபடியே இருப்பதையும் `வாஸவேச்வரம்' காட்டுகிறது.

கிருத்திகாவின் எழுத்துகளில் மொழித்தீவிரமில்லை. அங்கதத்தைத் தாண்டிய ஆழமான அரசியல் தரிசனமுமில்லை. இலக்கிய நுட்பங்கள் எனப் பொதுவாக அன்று அறியப்பட்ட பல விஷயங்கள் இல்லை. ஆகவே, கா.நா.சு  தலைமுறையும் சுந்தர ராமசாமி தலைமுறையும் அவரைப் பொருட்படுத்தவில்லை. பெண்ணியம் உருவாகி வந்த பிறகு கிருத்திகா மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும். `அவரது அங்கதம் உண்மையில் ஆண்-மைய அரசியலை நோக்கிய பெண்ணின் சிரிப்பு' என்று கிருத்திகா குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய அஞ்சலிக்குறிப்பில் கூறுகிறார். 

`போகமும் யோகமும்' என்ற அவரது சிறுகதைத் தொகுப்பிலுள்ள `தீராத பிரச்னை', இதற்கு ஒரு சான்றாகவே திகழ்வதைப் பார்க்கலாம்.
தீராத பிரச்னை

`ஒண்டுக்குடித்தன வீடு. அவள் பின்புறச் சுவரை வெறிச்சோடிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். உள்ளத்திலோ இருள். இனம்புரியாத ஓர் ஏக்கம் நெஞ்சைப் பற்றிக்கொண்டிருந்தது. வேதனைப் பெருமூச்சுகள் விட்டு விட்டுக் கிளம்பின. கூச்சல், அடி, உதை நினைவுக்கு வந்தன. எதற்காக அவள் இத்தனை குழப்பங்களுக்கு இடம் உண்டாக்கினாள்?

`ஆசைக் கடலிலகப்பட்டருளற்ற
வந்தகன் கைப்பாசத்தில்….'

அவள் அடிக்கடி பாடும் அந்தாதி அடிகளில் இதுவும் ஒன்று. உள்ளத்திலே அந்த அடி ஒலித்து மறைந்தது. மறுபடியும் பெருமூச்சு ஒன்று அவளுடைய அடிவயிற்றிலிருந்து புறப்பட்டு வெளி வந்தது. ஆமாம். எதற்காக அவள் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்தாள்? சிறு வயதிலிருந்தே ஏதோ ஒன்றைத் தேடி அவள் உள்மனம் ஏங்குகிறது. ஆனால், அது என்னவென்று புரியாமலே வாழ்நாள் முழுவதும் அதைத்

தேடித் தேடி அலுத்து... மனம் சோர்ந்து...
`நின்று மிருந்துங்கிடந்து நடந்து...'

முதல் முதல் அவன் கையைப் பிடித்தவுடன் எச்சுமிக்கு உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரையில் ஒரு மின்சார அதிர்ச்சி உண்டாயிற்று. இதென்ன? உதிரம் கொதிக்க, இதயம் படபடக்க, முகம் சிவக்க, உள்ளத்தில் ஊடுருவிப் பாயும் இந்த உணர்ச்சி என்னவாக இருக்கக்கூடும்? இதுதான் அதுவோ? ஓகோ! அவள் தேடும் அந்த ஆத்மார்த்த அனுபவம்தான் இதுவோ! என்ன முட்டாள்தனம்... தன்னைப்போல் உடலுணர்ச்சியால் தத்தளிக்கும் மற்றொரு ஜீவன், ஆத்மாவுக்குத் தேவையான ரசஞானத்தை ஊட்ட முடியுமா? முடியாது என்று இப்போது கண்டுகொண்ட இந்த உண்மை, அப்போது எச்சுமிக்கு எப்படி எட்டக்கூடும்? சின்னஞ்சிறு பெண், விருப்பங்கள் வெறிகொண்டு பொங்கும் பருவம்… எச்சுமி மேலும் ஓர் உஷ்ணப்பெருமூச்சு விட்டாள்…

(முதலிரவுக்குப் பிறகு…)

...அந்த அன்பின் அரவணைப்பில் அவள் நுகர்ந்த ஒரு கணகணப்பு… அடைகாப்பது போன்ற ஓர் அரவணைப்பு. இதுதானா அவள் ஆராய்ச்சியின் எல்லை? அழிவில்லாத நிறைவைத் தேடும் வழி இத்தனை சுலபமானதா?'

இப்படித் தொடங்குகிறது கதை. எச்சுமி என்கிற நுட்பமான பெண்ணுக்கும் சிவநாதன் என்கிற வக்கீலுக்கும் திருமணம் நடக்கிறது. அழிவில்லாத மனநிறைவைத் தேடும் பெண்ணாக அவள்.

யோசித்துப் பார்க்கும்போது அவன் ஒரு சாதாரண மனிதன், அதிலும் பக்குவமடையாதவன் என்று புரிந்தது. சிவநாதனுக்குச் சிற்றின்பத்தில் நாட்டமிருந்ததேயொழிய, பெண்களைப் பேணவேண்டிய நயமான நளினமில்லை. அவர்களுக்குக் களிப்பும் உற்சாகமும் தரக்கூடியவற்றைக் கொடுக்கவும் சக்தியில்லை. இந்தக் குறைகளை மறைக்க அவன் கிளர்ச்சிகள் செய்தும் கூப்பாடுகள் போட்டும் அவளையும் பிள்ளைகளையும் அடித்தும் சமாளிக்கப் பார்த்தான்.

கனவில் கண்டவற்றையும் நாவல்களில் படித்தவற்றையும் தன் கணவனிடமிருந்து அவள் எதிர்பார்த்தாள். அவன் காட்டிய பகட்டு அன்பு அவளை வசீகரித்தது. தன் அந்தரங்கத்தின் ரசிகத்தன்மையை சிவநாதன் அறிந்துவிட்டதாக வீண் பிரமைகொண்டாள். ``ஐயோ என்ன அசட்டுத்தனம்! கானல்நீரைக் கண்டு தாகம் தணியும் என எண்ணியதுபோல் ஆயிற்று.'' உண்மை என்னவென்றால், அவள் தேடியது அவனிடமல்ல.

இந்தக் கதையின் மையமான பிரச்னையாக இந்த ஆண் புரியாமை இருக்கிறது. உரத்த குரலில் பெண்ணியம் பேசவில்லை. ஆனால், அதுதான் மையமாக நிற்கிறது. எச்சுமி மீது அவன் அதிகாரம் செலுத்துகிறான். ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. நான்கு பிரசவங்களும் தாய் வீட்டில்தான். தாயும் சோர்ந்துபோகிறாள். குறை கூறுகிறாள். எச்சுமியும் எதிர்த்துக் கூப்பாடு போடுகிறவளாக குணமாற்றம் அடைகிறாள். ஆனால், கதையின் இன்னொரு பக்கமாக சங்கீதம் அவளை நிறைப்பதாகக் காட்டுகிறது. அந்தப் பகுதிகள் கதையின் மிக அழகான நுட்பமான பகுதிகள். தங்கை பட்டுவும் அவளும் சேர்ந்து பாடும் இடம் அபூர்வமான பகுதி.

``அந்திப்பொழுதில் விளக்கேற்றியவுடன் இரு பெண்களும் அந்தாதி பாட, பர்வதத்தம்மாள் மனமுருகக் கேட்டுக்கொண்டிருப்பாள். தேவியின் துதி மிருதுவான தென்றலில் மிதந்து கோயில் பிராகாரத்தை எட்டி, அங்கே தீபாராதனைக்காகக் காத்திருக்கும் தகப்பனார் காதிலும் ஒலிக்கும். எச்சுமியின் நெஞ்சில் அமுங்கிக்கிடக்கும் படைப்புத்திறன் யாவும் அந்தச் சங்கீதத்தின் ஊடே வெளிவந்ததோ! ஏனென்றால், அப்படிப் பாடும்போதெல்லாம் ஏதோ சங்கேதமான ஒரு பரிசு அவளை வந்து அடைந்து அவள் வாழ்வைப் பூரணமாக்கிவிட்டதாக ஒரு பிரமை அவளுக்கு உண்டாயிற்று. பாடும்போது அவள் பயன்பெற்று வாழ்வதாக நிறைவுகொண்டாள். ஆனால், மறுகணம், சங்கீதம் ஓய்ந்ததும், வாழ்வின் உண்மையான நிலை. கணவனின் மூர்க்கம்... அப்பாவின் சுடுசொற்கள்... அம்மாவின் மௌன பாவங்கள் என காட்சிகள் ஒவ்வொன்றாகக் கண் முன் தோன்றி மறையும்.”

கதையின் இன்னோர் இடத்திலும் எச்சுமி பாடுவதும் அவள் தன்னைக் கரைந்துபோகச் செய்வதும் பற்றி வருகிறது.

``உள்கூர்ந்த அனுபவத்துடன் வந்த அந்த இசைப்பாக்கள் அம்மாவின் இதயத்தைத் தொட்டுவிட்டன. அவள் கண்கள் நிறைந்தன. எச்சுமி தன் உள்ளத்தில் ஏதோ ஒன்று பரிபூரணமாக ஒளிரத் துடிதுடிப்பதை ஒரு கணப்பொழுதுக்கு மங்கலாக உணர்ந்தாள். ஆனால், தெளிவாகப் புரிந்துகொள்ள அவளால் எப்படி இயலும்? பாடப்பாட அவள் அகத்தின் வேரில் குளிர்நீர் பாய்ந்தது. பேயாக உழலும் மனதில் ஒரு சிறு துளி இன்பம் சொட்டி, அதைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்தது. உள்ளுணர்வு என்ற ஒளிமாடத்தில் அன்பு சுரந்தது. அன்று இரண்டு மணி நேரம் பாடிய பிறகு, எச்சுமியின் இதயம் அன்பால் நிரம்பிவிட்டது. முகத்தில் சாந்தம் நிலவியது.”

யாரையெல்லாம் வெறுத்துப் பேசினாளோ அவர்கள் மீதெல்லாம் அதன் பிறகு வாஞ்சையைப் பொழிகிறாள் என, கதை போகிறது. பிள்ளைபெறும் இயந்திரமாக அவளை மாற்றிவிட்டு, எங்கோ தப்பி ஓடிவிட்ட சிவநாதனின் தரப்பு நியாயங்களைப் பற்றிக்கூட யோசிக்கிறாள். கணவன் ஓடிப்போன பிறகு தன் மீது கருணை பொழியும் மணியனுக்குத் தன்னையே கொடுத்து நன்றி பாராட்டுகிறாள். அதன் காரணமாக, பிறந்த வீடும் அவளை வெறுக்கிறது. பிள்ளைகள் பாட்டியுடன் ஒட்டிக்கொள்ள இவள் தனியாளாகிறாள்.

கதையின் முடிவில் அவளுடைய மகன், `தான் பம்பாயில் சௌகரியமாக வாழ்வதாகவும் வந்து தன்னோடு இரு' என்றும் கடிதம் எழுதியதால் அங்கே போகிறாள். அங்கே அவளுடைய கணவன் சிவநாதனைப்போலவே மகனும் தன் மனைவியைக் கொடுமைசெய்வதைக் காண்கிறாள். அங்கு இருக்கப் பிடிக்காமல், மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பித் தன் தனிமைக் குடிலுக்கு வந்து அங்கேயே சாகிறாள். `தீராத பிரச்னை' என்று தலைப்பு வைத்ததன் மூலம் காலம் காலமாகத் தீராத பிரச்னை என உணர்த்தி, பெண் வாழ்வின் மீது சமூகத்தின் அக்கறையை ஈர்க்கிறார்.

``கிருத்திகாவின் முதன்மை ஆர்வமாக உளவியல் பகுப்பாய்வு இருந்ததை அவரது படைப்புகளை ஒட்டுமொத்தமாகக் காணும்போது அறிய முடிகிறது. ஆனால், இந்தப் பகுப்பாய்வு சமூகம் விரிந்த பாலினப் பாகுபாட்டைக் கேள்வி கேட்காததாகவே அமைந்திருக்கிறது. இந்தியத் தேசியம் என்பதில்  தனிப்பட்ட முறையில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், கிருத்திகாவின் இந்தியத் தேசியம் இந்துமதத் தத்துவங்களை ஆதாரமாகக்கொண்டது என்பதை அவரது படைப்புகளின் மூலம் உணர முடிகிறது. ஒருவேளை அவரது குடும்ப மரபின் தாக்கமாகக்கூட இது இருக்கலாம். பௌத்தம் தவிர, இதர மதங்கள் மற்றும் சாதிகுறித்த கருத்தாடல்களும்கூடப் பெரிதாக அவரது படைப்புகளில் இடம்பெறவில்லை. எழுத்தை மன அவசங்களின் வெளிப்பாட்டுக்கான ஊன்றுகோலாக கிருத்திகா கருதுவதை அவரது படைப்பின் மூலம் உணர முடிகிறது” என்பது கிருத்திகாவைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆய்வாளரும் நாடகவியலாளருமான அ.மங்கையின் கருத்து..

``தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவப் பாதையில் அழுத்தமாக தன் தடங்களைப் பதித்திருப்பவர் கிருத்திகா. அவர் பிறந்து நூற்றாண்டாகியும் இன்னமும்கூட தமிழிலக்கிய விமர்சனச் சூழலில், அதிகம் கவனிக்கப்படாத தடங்கள் அவை. இங்கே விமர்சனச் சூழல் என்று நான் குறிப்பிடுவது பேராசிரியர்கள் வீ. அரசு, அ.ராமசாமி போன்ற வெகுசில விதிவிலக்குப் பேராசிரியர்களைத் தாண்டி, பொதுவாக தமிழின் நவீன இலக்கியம் குறித்த ஆழமான பார்வையோ அக்கறையோ இல்லாத தமிழ்க் கல்விப் புலத்தை அல்ல. தமிழ் இலக்கிய சிறு பத்திரிகைச் சூழலில்கூட கிருத்திகாவுக்குப் போதுமான அளவு வாசகக் கவனம், விமர்சன கவனம் இதுவரை கிட்டவில்லை. ஆண் எழுத்தாளர்கள் பிதாமகர்களாக இயங்கி வழிநடத்தும் தமிழ் இலக்கியச் சொல்லாடல்களின் ஆண்மைத்தன்மையும் இதற்கோர் அடிப்படையான காரணம்” என்று கவிஞர் பெருந்தேவி குறிப்பிடுகிறார்.

அப்படியே பேசியிருந்தாலும்கூட, அவரது `வாஸவேச்வரம்' நாவல் பேசப்பட்ட அளவுக்குக்கூட அவரது சிறுகதைகள் பேசப்படவில்லை. ஆங்கிலத்தில் எழுதும்போது `மதுரம் பூதலிங்கம்' என்ற தம் இயற்பெயரில் எழுதினார். குழந்தைகளுக்கான ராமாயணம், மகாபாரதம், பாகவதம் என இவரது ஆங்கில நூல்கள் பல. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை, பாரதி வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். நாடகங்கள் எழுதியுள்ளார்.

`மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஆண்டு பிறந்தது, விடுதலைப் போராட்டத்தின் சந்திப்பு முனையாகத் திகழ்ந்த பம்பாயில் வளர்ந்தது ஆகியவை, எனது வாழ்வு, எழுத்து ஆகியவற்றின் மீது தாக்கம் செலுத்தியிருக்கலாம்' என்று `நான் எப்படி எழுத வந்தேன்' என்கிற வெளியிடப்படாத ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதாக அ.மங்கை குறிப்பிடுகிறார். மேலும், `முப்பது வயதை எட்டியதும், எனது வெளிப்பாட்டு ஊடகம் எழுத்து, அதுவும் தமிழ் மொழி எழுத்து என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆனால், நான் சொல்லவருவது சிக்கலானது. அதற்குத் தேவையான திறன் எனக்கு உண்டா என்கிற தயக்கம் இருந்தது. எனக்கு ஓவியம், பாட்டு, பியானோ இசை ஆகியவற்றைத் தெரியும். பாரதியின் மாயாஜாலப் பாடல்களைப் பாடி மெய்ம்மறந்து மகிழ்ந்தேன். நான் முழுமையாகத் தயாராக இருந்தேன். படைப்புப் பணியில் இறங்க ஆயத்தமாகிவிட்டேன். நான் இன்னும் தயங்கினால், எனது படைப்புச்சக்தி பயனற்ற வேலைகளில் கழியும்' என்று தொடர்கிறார்.

இப்படித் தன்னுணர்வுடன் படைப்பில் இறங்கிய கலைஞர்கள் மிக அபூர்வம். அவருடைய படைப்புகள் எல்லாமே ஆண்-பெண் உறவும் புரிதலின் போதாமையும் அவற்றுக்கான சமூகச் சூழலும் பற்றியுமே பேசுபவை.

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் குறைந்த எண்ணிக்கையில் கதைகள் எழுதினாலும் மறுக்க முடியாத சிறுகதையாளர்களாகத் திகழும் வரிசையில் கிருத்திகாவும் என்றென்றும் இருப்பார்.

பெங்களூரில் 93 வயது வரை வாழ்ந்த இவர்,  13-2-2009 அன்று காலமானார்.