Published:Updated:

ஜூ.வி நூலகம் - மகளிர் தினம் உண்மை வரலாறு

ஜூ.வி நூலகம் - மகளிர் தினம் உண்மை வரலாறு
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூ.வி நூலகம் - மகளிர் தினம் உண்மை வரலாறு

ஜூ.வி நூலகம் - மகளிர் தினம் உண்மை வரலாறு

ரலாற்றைத் தொகுத்தல் அல்ல ஆய்வாளனின் வேலை. வரலாற்றைக் கண்டடைவதுதான் ஆய்வாளனின் கடமை. பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியும் போராளியுமான இரா.ஜவஹர், இந்தப் புத்தகத்தில் செய்திருப்பது வரலாற்றைக் கண்டடைவது. மகளிர் தினம் என்பது புரட்சியுடன், சோஷலிசத்துடன், போராட்டத்துடன் தொடர்புடையது. எனவே, ‘மகளிர் தினம் என்பது அனைவருக்குமானது’ என்ற எண்ணத்தை விதைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முதல் வெற்றி.

மார்ச் 8 மகளிர் தினம். எல்லோருக்கும் தெரியும். எதற்காக அந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். நவீன மனிதனின் அசைக்க முடியாத ஆதாரம் என்று நம்பப்படும் இணையத்தில் மார்ச் 8-க்கு நூறுவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் எது சரி என்று தெரியாததால்தான், அதைக் கொண்டாட அருகதை இல்லாதவர்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள். ‘‘பெண்களுக்கு சமையல் போட்டியும், கோலப்போட்டியும் நடத்துவதற்கான நாள் அல்ல இது. நகையும் சேலையும் மற்ற பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை என்று கூவிக்கூவி விற்கும் வணிகத்துக்கான நாள் அல்ல” என்ற கோபத்தில் மகளிர் தினத்தின் உண்மை வரலாற்றை ஜவஹர் தேட ஆரம்பிக்கிறார்.

ஜூ.வி நூலகம் - மகளிர் தினம் உண்மை வரலாறு

ரஷ்யாவில் பெட்ரோகிராட் நகரப் பெண் தொழிலாளர்கள், ஜார் மன்னனுக்கு எதிரான புரட்சியைத் தொடங்கிய நாள், 1917-ம் ஆண்டு மார்ச் 8. இந்த நாளை மகளிர் தினத்துக்கான நிரந்தரத் தேதியாக, 1921-ம் ஆண்டில் நடந்த உலகக் கம்யூனிஸ்ட் பெண்கள் மாநாடு அறிவித்தது. அதில் இருந்து மகளிர் தினம் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் 1908 மே 3-ம் நாளை மகளிர் தினமாக, சிகாகோவில் சோஷலிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவு கடைப்பிடித்தது என்றும், இதுவே முதல்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மகளிர் தினம் என்றும் ஜவஹர் சொல்கிறார்.

சோவியத்தில் புரட்சி நடந்து அமைந்த சோ‌ஷலிச அரசில் பெண்களுக்கான பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது லெனின், ‘‘பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நொறுக்கித் தள்ளிவிட்டோம். கட்டடம் கட்டுவதற்காக மனையைச் சுத்தப்படுத்தி இருக்கிறோமே தவிர, இன்னும் கட்டடத்தைக் கட்டிவிடவில்லை” என்றார். சட்டங்கள், நிறுவனங்கள் இங்கு நொறுக்கப்படவில்லை. மனையும் சுத்தப்படுத்தப்படவில்லை. எது களம் என்பதே நிர்ணயிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அத்தகைய களத்தை உருவாக்குவதற்காக தோழர் ஜவஹரால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

‘எந்தப் பாதையில்’, ‘கம்யூனிசம்: நேற்று, இன்று, நாளை’ ஆகிய செறிவான படைப்புகளைத் தந்த ஜவஹர், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் எதிர்காலம் குறித்தும் தமிழக தொழிற்சங்க இயக்கம் குறித்தும் விரிவான வரலாற்றைக் கண்டடைந்து எழுதவேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டுவதாக இருக்கிறது, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’.

- புத்தகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz