Published:Updated:

சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை
சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

ராஜேஷ்குமார் - ஓவியங்கள் ஜெயராஜ்

பிரீமியம் ஸ்டோரி
சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

நியூயார்க் நகரம் அந்த சாயந்தர வேளையின் சாம்பல் நிற இருட்டைத் தின்றுவிட்டு நியான் விளக்கொளியின் வெளிச்ச உபயத்தால் ஒரு செயற்கைப் பகலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது.

இருபத்து மூன்று மாடிகளோடு, ஒரு கண்ணாடி செவ்வகப் பெட்டி போல் நின்றிருந்த 'ஹோட்டல் ஹெவன் டச்’ இன்டர்நேஷனல் ஹோட்டலின் ரூஃப் கார்டன் ரெஸ்டாரென்டில் நானும் கயலும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து காரட், வெள்ளரி ஸ்டஃப் செய்யப்பட்டிருந்த ப்ரெட் சீஸ் ரோலை செல்லமாய் முன்பற்களில் கடித்து, அதை கடைவாய்க்கு அனுப்பி நிதானமாய் அரைத்து ஃப்ரஷ் ஜூஸ் உதவியால் விழுங்கிக்கொண்டிருந்தோம்.

சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது சரிதான். கயல் என் காதலி.

நான்?

வரத். அப்பா எனக்கு வைத்த முழுப் பெயர் வெங்கடரமணா சுந்தர வரதராஜன். யார் என்னை 'வரத்’ என்று கூப்பிட்டாலும் கிடைக்காத போதை, கயல் கூப்பிட்டபோது எனக்குக் கிடைத்தது.

நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்து போன நிமிஷத்தோடு 4,320 மணி நேரம் முடிந்துவிட்டது. ஒரே ஐ.டி. கம்பெனியில் எதிர் எதிரே உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, எங்களுக்குத் தெரியாமல் கிடைத்த இடைவெளியில் பச்சைப் பசேல் என்று காதல் செடி துளிர்ந்துவிட்டது. நான் அடித்த மொக்கை ஜோக்குகளுக்குக்கூட கயல் விழுந்து விழுந்து சிரித்ததால், அந்தக் காதல் செடி இப்போது செழிப்பாய் ஒரு மரம் போல் வளர்ந்துவிட்டது.

ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த 'ஹெவன் டச்’ ஹோட்டலுக்கு வந்து சிக்கன் பர்கரையும் சீஸ் ரோலையும் வயிற்றுக்குக் காட்டாவிட்டால், அமெரிக்கா எங்களுக்கு இருண்ட கண்டமாய் தெரியும்.

இன்றைக்கும் இந்த ஹோட்டலில் அந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தோம். நான் ப்ரட் சீஸ் ரோலை 70 சதவிகிதம் தின்று முடித்திருந்தபோது, என் செல்போன் எஸ்.எம்.எஸ். டோனை வெளியிட்டது.

'எஸ்.எம்.எஸ். கொடுத்தது யார்?’ செல்போனில் டிஸ்ப்ளேயை எடுத்துப் பார்த்தேன்.

என்னுடைய டீம் கொலீக் சந்தீப். மெசேஜைப் படித்து 'உச்’ கொட்டிவிட்டு, மீதி 30 சதவிகித சீஸ் ரோலை கையில் எடுத்தேன்.

கயல் தன் பெரிய கண்களால் 'என்ன மெசேஜ்?’ என்று கேட்டாள். நான் எரிச்சலாய் சொன்னேன்... ''சந்தீப்! அவனுக்குப் பொழுது போகலைன்னா இப்படித்தான் ஏடாகூடமாய் ஏதாவது மெசேஜ் தருவான். அதுவும் சாதாரண மெசேஜாய் இருக்காது.''

''பின்னே?''

''நம்ம புத்திசாலித்தனத்தை சோதிச்சுப் பார்க்கிற மாதிரி ஒரு கேள்வியும் கேட்டிருப்பான். அந்தக் கேள்விக்கு நாம பதில் சொல்லாத பட்சத்தில் 'என்ன, தெரியலையா... தெரியலையா?’னு கேட்டு டார்ச்சர் பண்ணிடுவான்.''

''இப்ப என்ன கேள்வி கேட்டிருக்கான் அந்த சந்தீப்?''

''வேண்டாம் அதை விடு! நீ மொதல்ல சீஸ் ரோலை முடி. அடுத்த அயிட்டத்துக்கு ஆர்டர் கொடுக்கணும்.''

''நோ வரத்..! அது என்ன மெசேஜ்னு எனக்குத் தெரியணும்...''

''நீ விடமாட்டியே..?'' - சொன்ன நான், செல்போனை எடுத்து மெசேஜ் ஆப்ஷனுக்குப் போய் சந்தீப் அனுப்பி இருந்த அந்த மெசேஜைப் படித்துக் காட்டினேன்.

''கல்யாணத்துல பொண்ணுக்கு ஏன் அவ்ளோ மேக்கப் பண்றாங்க..? யோசிச்சு பதில் சொல்லு!''

கயல் புன்முறுவல் பூத்தாள். ''இது ஒரு கேள்வியா? கல்யாணப் பொண்ணு பளிச்னு இருக்க வேண்டாமா? அதுக்குத்தான் மேக்கப் போடறாங்க...''

''இது உன்னோட பதில். என்னுடைய பதில் வேற மாதிரி இருக்கும்.''

''வேற மாதிரின்னா..?''

''சொல்லட்டுமா?''

''ம்...''

''நான் பதில் சொன்ன பின்னாடி, நீ உன்னோட நெற்றிக் கண்ணைத் திறந்து எரிக்காத குறையாய் என்னைப் பார்க்கக் கூடாது.''

''இல்ல! உன்னோட பதிலைச் சொல்லு...''

நான் நமுட்டுச் சிரிப்போடு சொன்னேன்... ''கிஃப்ட் எப்படி இருந்தாலும், பேக்கிங் நல்லா இருக்கணும் இல்லையா... அதுக்குத்தான்!''

கயல் என்னை முறைத்தாள். தனக்கு முன்னால் இருந்த ஒரு சிறிய சாஸ் சாஷே பாக்கெட்டை எடுத்து, எதிர்பாராத விநாடியில் என் மீது வீசினாள். நான் சட்டென்று விலகிக்கொள்ள, அந்த சாஷே பாக்கெட் எதிர் மேஜையில் போய் விழுந்தது.

அந்த மேஜையில் உட்கார்ந்து க்ரில் சிக்கனை ருசி பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண்ணும் இளைஞனும் ஒரு கோபப் பார்வையோடு திரும்பிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு முகங்கள்.

''ஸாரி! ஏதோ விளையாட்டாய்...'' - நான் மன்னிப்புக் கேட்க, அவர்கள் புன்சிரிப்போடு ''நோ ப்ராப்ளம்'' என்று சொல்லிவிட்டு, க்ரில் சிக்கனை முள் கரண்டியால் குத்தினார்கள்.

நான் அந்தப் பெண்ணையே இமைக்காமல் பார்த்தேன். என் இதயம் ஒரு முயல் குட்டியாய் மாறித் துள்ளியது.

இவள்... இவள்..?

''அவளைப் பார்த்தது போதும் வரத்... நான் ஒருத்தி உனக்கு முன்னாடி 55 கிலோ எடையோடு உட்கார்ந்துட்டிருக்கேன்!''

நான் கயலிடம் திரும்பினேன். குரலை வெகுவாய்த் தாழ்த்தினேன். ''கயல்! அந்தப் பொண்ணு யார் தெரியுமா?''

''யார்?''

''ஸ்வப்னா!''

''உனக்குத் தெரிஞ்சவளா?''

''ஆமா...''

''எப்படி?''

''என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் பூபதின்னு பேரு... சென்னையில் இருக்கான்.''

''ஆமா... சொல்லியிருக்கீங்க...?''

''அவனோட ஒய்ஃப்தான் இந்த ஸ்வப்னா!''

கயலின் முகம் மாறியது. ''வேற ஒருத்தனோடு இடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காளே... நல்லா பாரு வரத்... அவ ஜாடையில வேற எவளாவது ஒருத்தி இருந்திடப் போறா...''

''சந்தேகமே வேண்டாம்; அந்த ஸ்வப்னாதான் இவள். வேணும்னா போட்டோவைப் பாரு!'' - சொன்ன நான், என் செல்போனின் போட்டோ ஆப்ஷனுக்குப் போய் ஸ்க்ரால் செய்து, பூபதியும் ஸ்வப்னாவும் மாலையும் கழுத்துமாக இருந்த திருமண போட்டோவைக் காட்டினேன். போட்டோவைப் பார்த்ததும், கயலின் பென்சில் கோடு புருவங்கள் இரண்டு மில்லி மீட்டர் உயர்ந்தன.

''வரத்! நோ டவுட். இவ ஸ்வப்னாவேதான்!''

''ரெண்டு வாரத்துக்கு முந்தி நான் பூபதிகிட்ட செல்போன்ல பேசும்போதுகூட மேரேஜ் லைஃப் எப்படி இருக்குனு கேட்டேன். வெரிவெல் கோயிங்னு சொன்னான். அப்பா ஆயிட்டியான்னு கேட்டேன். 'இன்னும் இல்ல... ஸ்வப்னாவை அடிக்கடி அவ வேலை பார்க்கிற கம்பெனி டெபுடேஷனுக்காக வாரம் பத்து நாள்னு ஃபாரினுக்கு அனுப்பிடறாங்க. வேண்டாம்னு சொல்ல முடியலை. வேலையை விடவும் மனசில்லை. நல்ல சம்பளமாச்சே’ன்னு சொன்னான்!''

''இப்படி இவ இன்னொருத்தனோடு இழையறது உன் ஃப்ரெண்டுக்குத் தெரியாது போலிருக்கு. ஸ்வப்னோட இடுப்புல அவனோட கை எந்த இடத்துல இருக்குன்னு பாருங்க. பை த பை... எனக்கொரு சந்தேகம்!''

''என்ன..?''

''ஸ்வப்னாவுக்குக் கூடப் பொறந்தவங்க யாராவது இருக்காங்களா?''

''தெரியலையே?''

''ஒண்ணு செய் வரத்...''

''என்ன?''

''உன் ஃப்ரெண்டுக்கு போன் பண்ணி ஸ்வப்னா இப்போ எங்கே இருக்கானு கேளு!''

''சரி! நீ சாப்பிட்டுட்டு இரு. நான் வெளியே போய், பூபதிக்கு போன் பண்ணி பேசிட்டு வர்றேன். நீ அந்த ரெண்டு பேரையும் வாட்ச் பண்ணு. முடிஞ்சா என்ன பேசறாங்கன்னு அப்ஸர்வ் பண்ணு!''

கயல் தலையாட்ட... நான் ரெஸ்டாரென்ட்டுக்கு வெளியே வந்து என் செல்போனை உசுப்பினேன். பதினைந்தே விநாடிகளில் சென்னையில் இருக்கும் பூபதி லைனில் கிடைத்தான். குரல் கொடுத்தேன், செயற்கையான உற்சாகத்தோடு.

''பூபதி! நான் வரதராஜ்..!''

''டேய் வரத்... நீயா? எங்கிருந்து பேசறே. யு.எஸ்-ஸா... இந்தியாவா?''

''யு.எஸ்-தான்...''

''சென்னை வந்துட்டியோன்னு நினைச்சேன்!''

''சென்னைக்கு அடுத்த வாரம்தான் வர்றேன்.''

''சரி... என்ன திடீர்னு போன்? ரெண்டு வாரத்துக்கு முந்திதானே பேசினே..!''

''ஒண்ணுமில்ல... ஒரு சின்ன சந்தேகம்?''

''என்ன?''

''போன தடவை உன்கூட போன்ல பேசும்போது, உன் வொய்ஃப் ஸ்வப்னா ஏதோ ஒரு ஃபாரின் கன்ட்ரிக்கு டெபுடேஷனுக்காக போயிருக்கிறதா சொன்னேல்ல..?''

''ஆமா...''

''இப்ப அவங்க எந்த கன்ட்ரியில் இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?''

''யு.எஸ்-லதான்...''

''எந்த சிட்டி?''

''அவளோட டெபுடேஷன் லிஸ்ட்டில் நாலைஞ்சு சிட்டி இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி நியூஜெர்ஸியில் இருந்து பேசினா. இன்னிக்கு எங்கே இருக்கானு தெரியலை. ரெண்டு நாளா என்னோட செல்போன் கொஞ்சம் பிரச்னையாய் இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சர்வீஸுக்குக் கொடுத்த போனை வாங்கிட்டு வந்தேன். முதல் போன் உன்னோடதுதான். ஏன், என்ன விஷயம்..? எதுக்காக ஸ்வப்னா பத்திக் கேட்கிறே?''

''ஒண்ணுமில்லை.. உன் வொய்ஃப் ஸ்வப்னா நியூயார்க் வந்தா, மீட் பண்ணி பேசலாமேன்னுதான்!''

மறுமுனையில் பூபதி சிரித்தான்.

''எங்க கல்யாணம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலாயிருச்சு. ஸ்வப்னாவை நீ அன்னிக்குத்தான் பார்த்தே. அவளும் அன்னிக்குத்தான் உன்னை முதல் தடவையா பார்த்தா. மறுபடியும் ஸ்வப்னா உன்னைப் பார்க்கும்போது நிச்சயம் அவளுக்கு உன்னை அடையாளம் தெரியாது.''

''இட்ஸ் ஓகே..! இன்னொரு சந்தேகம்...''

''என்ன..?''

''ஸ்வப்னாவுக்குக் கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் யாராவது இருக்காங்களா?''

''இல்லை... அவ மட்டும்தான்'' என்று சொன்ன பூபதி, செல்போனில் மெள்ளச் சிரித்தான். ''என்னடா! ஏதோ போலீஸ் ஆபீஸர் மாதிரி ஸ்வப்னாவைப் பத்தி என்கொயரி பண்ணிட்டிருக்கே?''

''தப்பா நினைச்சுக்காதே பூபதி... என்னோட ஆபீஸ் கொலீக் ஒருத்தனுக்கு வீட்ல மும்முரமாய் பெண் தேடிட்டு இருக்காங்க. என்னோட செல்போனில் இருந்த உன் கல்யாண ரிசப்ஷன் போட்டோவைப் பார்த்துட்டு, ஸ்வப்னாவுக்கு சிஸ்டர்ஸ் யாராவது இருக்காங்களான்னு கேட்டான். நான் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்.''

''ஓ! விஷயம் இதுதானா? சரி... நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே? இந்த வருஷமாவது அந்த வைபவம் உண்டா?''

''உண்டு உண்டு... அடுத்த வாரம் நான் சென்னை வரும்போது சொல்றேன்!'' - நான் செயற்கைச் சிரிப்போடும் கனமான மனசோடும் செல்போனை அணைத்தேன்.

என் முதுகில் கயலின் குரல் கேட்டது.

''என்ன வரத்... உன் ஃப்ரெண்ட் பூபதிகிட்டே பேசிட்டியா?''

''ம்... பேசிட்டேன்.''

''என்ன சொன்னார்?''

பூபதி என்னிடம் செல்போனில் சொன்னதை நான் கயலிடம் சொல்ல... அவள் கண்களில் கனம் தெரிந்தது. 'டெபுடேஷன் என்கிற பேர்ல காதல் டெமோ நடத்திக்கிட்டு இருக்கா உன் ஃப்ரெண்டோட வொய்ஃப். இது எப்பேர்ப்பட்ட துரோகம்.''

''கயல்! நீ ஒண்ணு பண்ணு...''

''என்ன?''

''இன்னும் ரெண்டு பேரும் உள்ளே சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்காங்க?''

''ஆமா...''

''நீ போய் கேஷ§வலா 'ஹாய்’ சொல்லி பேச்சுக் கொடேன்.''

''கொடுத்து..?''

''பேசிப் பாரேன்...''

''பேசிப் பார்த்தா..?''

''அவங்களுக்குள்ளே என்ன மாதிரியான உறவு இருக்கும்னு தெரிஞ்சுடும்.''

''என்ன பேசறே பரத்? நாமதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி கண்கூடாய்ப் பார்த்தோமே..? அவனோட இடது கை ஸ்வப்னாவோட இடுப்பை விட்டு ஒரு விநாடிகூட விலகலையே..? நீ வெளியே வந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா?''

''என்ன நடந்தது?''

''ஸ்வப்னாவோட உதட்டு ஓரம் கொஞ்சூண்டு ஐஸ்க்ரீம் ஒட்டியிருந்தது அதை அவன் அப்படியே தன் உதட்டால்...''

''இதோ பார் கயல்! கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். எனக்காகப் போய் பேசிப் பாரேன்.''

சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை

''எனக்கும் பழமொழி தெரியும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?''

''ப்ளீஸ் கயல்... எனக்காக! ரெண்டு இந்தியப் பெண்கள் ஒருத்தர்க்கொருத்தர் அறிமுகம் இல்லாமே போனாலும், வெளிநாட்டில் பார்க்கும்போது 'ஹாய்’ சொல்லி பரஸ்பரம் பேசிக்கிறது சகஜம். நீ போய்ப் பேசு. நான் அப்படி மறைவாய் நின்னு, ஸ்வப்னா என்ன சொல்றாள்னு கேக்கறேன்!''

''சரி! நான் உள்ளே போறேன்... நீ ஒரு நிமிஷம் கழிச்சு உள்ளே வா...''

சரியாய் ஒரு நிமிஷம் கழித்து நான் ரெஸ்டாரென்ட்டுக்குள் நுழைந்தபோது, கயல் வெகு இயல்பாய் ஸ்வப்னாவுக்கு முன் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் அவர்களின் பார்வையில் படாதபடி வாஷ்பேஸின் பக்கம் ஒதுங்கி நின்றுகொண்டேன். கயல் பேசுவது தெளிவாகக் காதில் விழுந்தது.

''நான் விளையாட்டாய் எறிஞ்ச சாஸ் சாஷே பாக்கெட் உங்க மேல பட்டதுக்காக மறுபடியும் ஸாரி!''

ஸ்வப்னா சிரித்தாள். ''அது ஒரு சின்ன விஷயம். விடுங்க, நான் அதை அப்பவே மறந்துட்டேன்.''

''தேங்க்ஸ்! உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா?''

''ஸ்வப்னா!''

''நான் கயல்!''

''விச் பார்ட் ஆஃப் தமிழ்நாடு?''

''கோயமுத்தூர்க்குப் பக்கத்துல பேரூர். நீங்க..?''

''நான் சென்னைதான். முகப்பேர். ஒரு ஐ.டி. கம்பெனில வொர்க் பண்றேன்.''

''எந்த கம்பெனி?''

''ஸாரி... நாங்க இங்கே ஒரு முக்கியமான ப்ராஜக்ட் விஷயமா வந்திருக்கோம். கம்பெனி பேரை வெளியே சொல்லக் கூடாது.''

''இட்ஸ் ஓகே..!''

''நீங்களும் ஐ.டி-யா?''

''ஆமா! இங்கே இருக்கிற 'தி மெஜிஷியன் டச்’ என்கிற ஒரு கம்பெனியில் ப்ரோகிராமராய் இருக்கேன்.''

''வெரி நைஸ் டூ மீட் யூ...''

கயல் எதிர்பாராத ஒரு விநாடியில் அந்தக் கேள்வியைக் கேட்டாள்... ''உங்களுக்குக் கல்யாணம்..?''

ஸ்வப்னா ஒரு மைக்ரோ செகண்ட் முகம் மாறி, பிறகு இயல்புக்கு வந்தாள்.

''இனிமேல்தான்! மே பி இன் அக்டோபர்!''

''அட்வான்ஸ் கங்கிராட்ஸ்!''

''நீங்க மேரீடா?''

''நோ நோ... வீ ஆர் இன் த ஸேம் போட். என்னோட கல்யாணமும் அநேகமா அக்டோபரில் நடக்கலாம்..!''

''ஓ! வெரி நைஸ்... ஆல் த பெஸ்ட்!'' - லிப்ஸ்டிக் பூசிய உதடுகளில் புன்னகையைக் காட்டிய ஸ்வப்னா, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞனிடம் திரும்பினாள்.

''ஷெல் வீ கோ?''

இருவரும் எழுந்து கயலுக்கு 'குட் நைட்’ சொல்லிவிட்டு, ஒருவித அவசர நடையோடு நகர்ந்துபோனார்கள். நான் இரண்டு நிமிஷம் கழித்து கயலை நெருங்க, அவள் கண் சிமிட்டினாள்... ''பார்த்தியா பரத், நான் போய்ப் பேச ஆரம்பிச்சதுமே காதல் ஜோடி எழுந்து ஓடறதை! சென்னையில் புருஷன் இருக்கான். இவ அக்டோபரில் கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். பாவம், உன்னோட ஃப்ரெண்ட்...''

''கயல், இப்ப என்ன பண்ணலாம்? ஸ்வப்னாவோட துரோகத்தை பூபதிகிட்ட சொல்றதா வேண்டாமா?''

''என்ன கேள்வி இது... கண்டிப்பாய் சொல்லியே ஆகணும்!''

''போன் பண்ணிடவா?''

''போன்ல வேண்டாம். நீதான் அடுத்த வாரம் சென்னை போறியே... நேர்ல பார்த்து நிதானமாய் விஷயத்தை எடுத்துச் சொல்லு...''

''எப்படிப் பேச்சை ஆரம்பிக்கிறது..?''

''நீ சென்னை கிளம்ப இன்னும் ஒரு வாரம் இருக்கு. யோசனை பண்ணு.'' - கயல் சொல்ல, அந்த நிமிஷத்தில் இருந்தே என்னுடைய இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது.

ஒரு வாரம் அவஸ்தையாய் தேய்ந்து, 27 மணி நேர விமானப் பயணம் கலக்கத்தில் கரைந்து காணாமல் போயிருக்க... ஒரு மத்தியான வேளையில் சென்னையைத் தொட்டேன்.

வீட்டுக்குப் போய் என் அம்மா அப்பாவிடம், வரவழைத்துக்கொண்ட உற்சாகத்தோடு சிரித்துப் பேசிவிட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் பூபதி வீட்டுக்கு பைக்கில் கிளம்பினேன். என்னுடைய இதயம் சிவமணியின் ட்ரம்மாய் மாறியிருந்தது.

'பூபதியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது?’

'வீட்டில் வைத்து இந்தப் பேச்சை ஆரம்பிக்கக் கூடாது. பூபதியை ஒரு தனிமையான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும்!’

சென்னையின் மத்தியான வெயிலில் இருபது நிமிஷ பைக் பயணம். பூபதியின் வீடு வந்தது. பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன்.

கதவு லேசாய்த் திறந்திருக்க... டி.வி-யின் விளம்பரச் சத்தம். ஒரு நடிகர் ஏதோ ஒரு நகைக் கடையின் தங்கம்தான் உசத்தியானது, சுத்தமானது, நம்பகமானது என்று பொய் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் அழைப்பு மணிக்கு வேலை கொடுத்தேன். உள்ளே டி.வி. மௌனமாயிற்று. அடுத்த பத்தாவது நொடி கதவு திறந்தது.

பூபதியை எதிர்பார்த்த எனக்குச் சற்றே ஏமாற்றம். அவனுடைய அம்மா நின்றிருந்தாள். என்னைப் பார்த்ததும் பெரிதாய் மலர்ந்தாள். ''அடே... வரது! வா வா... யு.எஸ்-ஸில் இருந்து எப்போ வந்தே?'' என்றாள் ஆச்சர்யமாய்.

''இன்னிக்குத்தான் வந்தேன் ஆன்ட்டி...''

''மொதல்ல உள்ளே வா...''

போனேன். ''பூபதி இல்லையா ஆன்ட்டி?''

''அவனும் அவனோட அப்பாவும் ஒரு லோன் விஷயமா பேங்க் வரைக்கும் போயிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. வேகாத வெயில்ல வந்திருக்கியே... குடிக்க கொஞ்சம் மோர் கொண்டுவரட்டுமா?''

''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஆன்ட்டி. கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க!''

டம்ளரில் தண்ணீர் வந்தது. வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு, மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன்.

''பூபதி எப்படி இருக்கான் ஆன்ட்டி?''

''முதல்ல ஒரு ஆறு மாசம் வரைக்கும் டல்லாய் இருந்தான். அதுக்கப்புறம் நார்மலுக்கு வந்துட்டான்.''

நான் குழப்பத்தோடு நிமிர்ந்தேன். ''ஆறு மாசம் டல்லா இருந்தானா... ஏன் ஆன்ட்டி?''

''என்ன வரது..? ஒண்ணுமே தெரியாதது மாதிரி கேட்கிறே..? கல்யாணமாகி ஒரு நாள்கூட வாழ்க்கை நடத்தாதவன் பின்னே சந்தோஷமாவா இருப்பான்?''

என் கையில் இருந்த தண்ணீர் டம்ளர் நடுங்கியது. ''ஆன்ட்டி! நீங்க என்ன சொல்றீங்க?''

பூபதியின் அம்மா வறட்சியாய்ப் புன்னகைத்தாள். ''ஓ! மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்டே விஷயத்தை மறைச்ச மாதிரி உன்கிட்டேயும் மறைச்சுட்டான் போலிருக்கு!''

நான் பதற்றமானேன். ''ப்ளீஸ்... என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ஆன்ட்டி?''

''சொல்றதுக்கு என்னப்பா இருக்கு..? நிச்சயதார்த்தம் நடந்தப்பவும் சரி, கல்யாணம் நடந்தப்பவும் சரி, வாயைத் திறக்காம ஊமைக் கோட்டான் மாதிரி இருந்த அந்தப் பொண்ணு ஸ்வப்னா, சாந்தி முகூர்த்தம் நடக்கவிருந்த ராத்திரி அன்னிக்கு நம்ம பூபதியோட கால்களைப் பிடிச்சுக்கிட்டு, 'எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை. நான் யு.எஸ்-ஸில் இருக்கிற ஒரு பையனை உயிருக்குயிராய் காதலிக்கிறேன். அவன் இல்லாம நான் உயிர் வாழ முடியாது’னு கதறி அழுதிருக்கா. பூபதி அந்த நிமிஷமே ரூமை விட்டு வெளியே வந்து ஸ்வப்னாவோட அப்பாகிட்டே பேசி, பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டான்.''

''மை காட்! இது எவ்வளவு பெரிய சீரியஸான விஷயம். இதை ஏன் என்கிட்டே மறைச்சான்?''

''தனக்கும் அந்தப் பொண்ணுக்கும் டைவர்ஸ் கிடைக்கிற வரைக்கும் விஷயம் வெளியே யார்க்கும் தெரியக் கூடாதுன்னு பூபதி எங்ககிட்டே கண்டிப்பாய் சொல்லிட்டான். ரொம்ப நெருங்கினவங்களுக்கு மட்டும்தான் இந்த ஸ்வப்னா விவகாரம் தெரியும். பூபதி ஃப்ரெண்ட்ஸ்கிட்டே பேசும்போது, ஸ்வப்னா தன்னோட ஐ.டி. வேலை சம்பந்தமாய் ஃபாரீன் போயிருக்கிறதா சொல்லிச் சமாளிப்பான். உன்கிட்டேயும் அதே பொய்யைத்தான் சொல்லியிருக்கான்னு இப்பத்தான் எனக்கே தெரியுது. உன்கிட்டயாவது உண்மையைச் சொல்லியிருப்பான்னு நினைச்சேன்.''

''பூபதியோட வாழ்க்கைல இப்படியொரு அதிர்ச்சி ஒளிஞ்சுட்டு இருக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை ஆன்ட்டி!''

''அந்தப் பொண்ணு ஸ்வப்னாவோட பேர் கெட்டுடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துலதான் பூபதி விஷயத்தைச் சொல்லலை. நீ இதைத் தப்பா எடுத்துக்காதே வரத்! அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவான். நீ அவனுக்காக அனுதாபப்படற மாதிரியோ வருத்தப்படற மாதிரியோ பேசிடாதே! அவன் இப்போ பழசையெல்லாம் மறந்து நார்மலாயிட்டான். செப்டம்பர் மாசத்துக்குள்ளே ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் கிடைச்சுடும். அவனுக்கு வேற ஒரு பொண்ணைப் பார்த்துப் பேசி முடிச்சிருக்கோம். அக்டோபர்ல கல்யாணம். நீ அவசியம் வரணும்.''

பூபதியின் அம்மா பேசப் பேச... என் மனத்துக்குள் வரையப்பட்டிருந்த சிவப்பு வட்டத்தில் இருந்து ஸ்வப்னா வெளியேறிக்கொண்டிருந்தாள்.

குழப்பங்கள் அகன்ற ஒரு தெளிந்த, நிறைவான மனநிலையோடு நான் யதார்த்தமாகக் கேட்டேன்... ''யாரும்மா பொண்ணு... சென்னையைச் சேர்ந்தவளா?''

பூபதியின் அம்மா சொன்னாள்... ''இல்லேப்பா! கோயமுத்தூர்க்குப் பக்கத்துல பேரூர். பேரு கயல்விழி!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு