Published:Updated:

தலபுராணம் - சிறுகதை

சுதேசமித்திரன் - ஓவியங்கள் மனோகர்

பிரீமியம் ஸ்டோரி

ரு வீட்டில், ஒரு தெருவில், ஒரு ஊரில், ஒரு நாட்டில் நடக்காத எதையும் நான் சொல்லிவிடப்போவதில்லை. நீங்களும் தேமே என்று கேட்டுக்கொண்டிருக்கப் போவதில்லை. திருநாளும் பெரு நாளுமாக இதயங்களை இம்சிக்கும் விதமாக எதையும் நான் செய்து விடலாகாது என்று ஜம்புலிப்புத்தூர் காமாட்சியம்மனை வேண்டிக் கொண்டு இந்த வேலையில் இறங்குகிறேன்.

தலபுராணம் - சிறுகதை

தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். ஆனால், பாவம் ரொம்ப காலம் குழந்தைகள் இல்லை. பேரரசன் அல்லவா, புத்திரகாமேட்டி யாகம் செய்தால் ஆச்சு! பொன் கலயமொன் றில் ஜீவத்திரவம் கிடைத்துவிடுகிறது. அதை அறுபதினாயிரம் பேருக்கும் அண்டாவில் கலக்கிக் கொடுக்காமல் நல்ல காலமாக மூன்று பேருக்கு மட்டும் கொடுத்து நலல வித்துக்களாக நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டான்.

ராஜாக்களுக்கு எல்லாமே சுலபம்தான். ஃபெர்ட்டிலிடி கிளினிக்குகள் ஏதும் இல்லாத காலத்திலேயே பொன் பொன்னாக இறைத்து, மகா முனிவர் களைக் குவித்து யாகங்களாகச் செய்து கொள்ள முடிகிறது. நம்ம கதை அப்படியா, சொல்லுங்கள்?

என் அப்பாவும் பிற்பாடு அண்ணன் ரமேஷ§ம்கூட இந்தப் பிரச்னையை எதிர்கொண்டவர்கள்தான். இத்தனைக்கும் இல்லறமெல்லாம் நல்லறமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதுவும் அப்பாவுக்கு பத்தொன்பது வயதிலேயே கல்யாணம். அதற்கப்புறம் பதினைந்து வருடங்கள் குழந்தை இல்லை. ஒரு மிஸ்கேரேஜ்கூட இல்லை. லேகியம், லோத்ரா ஆஸ்பத்திரி என்றெல்லாம் அலைந்து பார்த்தும் பலன் ஒன்றும் இல்லை.

ஆனால், திடீரென்று ஒர்க்-அவுட் ஆகி, ரமேஷ§ம் - இரண்டு வருடங்கள் கழித்து நானும் பிறந்துவிட்டோம். இந்த அற்புதங்கள் எப்படி நிகழ்ந்தன என்பது குறித்து ஆளாளுக்குக் கதை சொன்னார்கள். அதில் மிக மிக அழுத் தமானது என் அம்மா அடிக்கடி சொல்லிக் கேட்டதுதான்.

தலபுராணம் - சிறுகதை

அப்போது அப்பா காஞ்சிபுரத்தில் ரேஷனிங் ஆபீசராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். சமயம் கிடைக்கும்போதெல்லாம் சங்கரமடத்துக்குப் போவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் மஹாபெரியவாளின் பார்வை தன் மீது விழாதா என்று எத்தனையோ பேர் முண்டியடித்துக்கொண்டிருப்பார்கள். அவாள் பார்வை நம் கண்களைத் தீண்டிவிட்டால் உடம்பில் உள்ள அத்தனை வியாதியும் மாயமாக மறைந்துவிடும் என்பது ஐதீகம் அல்ல; அனுபவம். இதனால் அவர் திரும்புகிற பக்கமெல்லாம் ஒரு கூட்டமே நகர்ந்துகொண்டிருக்கும்.

ஆனால், திடீரென்று அவரது பார்வை அப்பாவின் மீது விழுந்தது. அப்பாவின் பெயரை உச்சரித்து, ''முன்னாலே வாங்கோ!'' என்று பெரியவாள் சொன்னது அவருக்கு உறைக்கவேயில்லை. ஏனென்றால், பெரிய வாளின் பார்வை பட்ட மாத்திரத்தில் உடம் பில் படீரென்று ஏதோவென்று வெடித்தது போல் உடம்பு ஒருமுறை உதறிற்று. மற்றவர்கள்தான் நெட்டித்தள்ளி முன்னால் அனுப்ப வேண்டியிருந்தது.

இதை அப்பா சொல்லும்போதெல்லாம் நாங்கள், ''பின்னாடி ஏதாவது பட்டாசு வெடிச்சிருக்கும்ப்பா!'' என்றுதான் சிரித்துக் கொண்டிருப்போம். ''நம்பினவங்களுக்குத்தான் தெய்வம். மத்தவங்களுக்கு அது வெறும் சிரிப்புதான், தம்பி!'' என்று புன்னகைப்பது அவரது வழக்கம்.

பெரியவாளுக்கு அருகே அப்பா போனதும், ''ஆத்துலேயும் வந்திருக்காளே..!'' என்கிறார் பெரியவாள். அம்மா பெண்கள் கூட்டத்தில் இருந்து நெளிந்துகொண்டு முன்னால் வந்து நிற்கிறது. பெரியவாள் தம்பதியை ஆசீர்வதிக்கிறார்... ''கண்ணன் பொறப்பன். ஒண்ணுக்கு ரெண்டா... ராம லக்ஷ்மணரா...''

அந்த ராமனும் லக்ஷ்மணனும்தான் நாங்களாம். ரொம்ப காலம் சிரிப்பாகத்தான் இருந்தது, ரமேஷ§ம் அதே பிரச்னையில் மாட்டும்வரை.

''இதெல்லாம் குரோமோசோம் விளையாட்டு, கணேஷ்! அதுவும் இந்தக் காலத்து ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துல வாய்க்குள்ள போறது எல்லாமே விஷம் தான். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்கூட படிச்சுப் படிச்சு சொல்லிட்டுதானே இருக்கார். யார் கேக்கறா? விவசாயத்துக்குப் பேர்போன இந்த தேசத்துல இப்ப குழந்தை குடிக்கற பால்ல அம்மாவே வெஷத்தைக் கலக்கற மாதிரி விவசாயியே காய்கறியில விஷத்தக் கலந்துதானே அனுப்பறான்! கத்தரிக்கா வளரும்போது பூச்சியக் கொல்ல மருந்தடிச்சது போய், இப்போ ரொம்ப நாள் பாதுகாக்கறேன்னு, பறிச்ச காயையே கெமிக்கல்ல நனைச்சுத்தானே அனுப்பறான்! ஆப்பிரிக்கால இருந்து ஆரஞ்சும், அமெரிக்கால இருந்து ஆப்பிளும் பறிச்சு அடுத்த நாள்தான் ஆன மாதிரிதானே பேக்கிங்ல வருதுங்க. இதையெல்லாம் வயித்துல ரொப்பினா கர்ப்பப்பை எப்டிடா ரொம்பும்?''

அப்பாவின் காலத்தில் இல்லாத மருத்துவ மாய்மாலங்கள் ரமேஷையும் அண்ணியையும் அலைக்கழிக்க ஆரம்பித்தன. ப்ளட் டெஸ்ட், செமன் டெஸ்ட், அல்ட்ரா சவுண்ட், ஐ.வி.எஃப்., ஐ.ஓ.யு., சரோகஸி... என்று நீண்டுகொண்டே போன கொடுமைகள் அடாப்ஷன் என்கிற பதத்தை எட்ட ஆரம்பித்துவிட்டபோது, அம்மா தன் வழக்கமான புலம்பலை ஆரம்பித்துவிட்டிருந்தாள்.

''கல்யாணம் ஆகி ரொம்ப நாள் எங்கேன்னே தெரியாமத்தான் இருந்தது. அப்புறம்தான் ஒருநாள் கூட்டிக்கிட்டுப் போனாரு. அந்த அம்மன் மொகத்தப் பாக்கணுமே... அழகுன்னா அப்படி ஒரு அழகு! எங்கேயோ காட்டுக்குள்ள நின்னுக்கிட்டிருக்கு. குலதெய்வம்னா சும்மா இல்லேடா, அதோட பாவம் பொல்லாது. போயி ஒரு பொங்கல் வெச்சுட்டு வந்துட்டா எல்லாக் குறையையும் அவ தீத்துட்டுப்போறா!''

எங்களுக்கு மட்டுமல்ல; அண்ணிக்கும்கூட இதில் பெரிய உடன்பாடு இல்லை. அண்ணியின் தகப்பனார் அசல் திராவிடக் கழகத்து ஆசாமி என்பதால், அவர்கள் வீட்டிலோ வெளியிலோ வழிபாடோ கிழிபாடோ ஒன்றும் கிடையாது.

தலபுராணம் - சிறுகதை

அதோடு, அம்மா சொன்னதுபோல அந்தக் கோயில் ஏதோ ஒரு கிராமத்துக்குக் கிழக்கே வெறும் பொட்டல் காட்டில் நிற்கிறது. தாத்தாவின் காலத்திலேயே அரசாங்க உத்தியோகம் தொற்றிக்கொண்ட வகையில் எப்போதோ வேர்களை விட்டு வந்துமாயிற்று. இன்னும் அந்தப் பக்கம் எங்களுக்கு சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு தொடர்பும் இல்லை. எல்லாம் அற்றுப்போய்விட்டது.

அதிலும், இப்போது அப்பாவும் அம்மாவும் கோயமுத்தூரிலும், ரமேஷ் சென்னையிலும், நான் பெங்களூரிலுமாக குடும்பம் சிதறிக்கிடக்கிறது. மகி சென்னையில் இருக்கிறாள். அவளுக்கும் எனக்கும் இரண்டு மாதத்தில் கல்யாணம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதன் பிறகு யார் யார் எங்கே என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்?

சென்னையில் இருக்கும் நண்பர்களைக் கல்யாணத் துக்கு அழைக்கவும், மகியோடு கொஞ்சம் குலாவவும் சென்னைக்கு வந்தபோது, மகியும் ரமேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். இப்போதே ஒரு குடும்பமாகிவிட்ட தைப்போல இந்தப் பெண்கள் எப்படித்தான் ஒட்டிக் கொள்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருந்தது.

கன்வெக்ஷனில் முழு சிக்கனை அவித்தது அண்ணி என்றால், அதை அழகாக கார்னிஷ் செய்து பால்கனியில் கொண்டுவந்து வைத்தது மகி. இதைவிட வேறு என்ன வேண்டும்? அந்த நேரத்தில் ரமேஷ் தன் சமீபத்திய ரஷ்யப் பயணத்தில் வாங்கி வந்திருந்த அப்சொல்யூட் வோட்காவின் மென்னியைப் பிடித்து திருகிக்கொண்டிருந்தான்.

நாங்கள் ஆரம்பித்ததும், கொஞ்சம் நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு அண்ணியும் மகியும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். குடித்துவிட்டு ஓட்டக் கூடாதாம். அதனால் மகியை நான் ட்ராப் செய்யக் கூடாதாம். எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்!

முதல் மூன்று ரவுண்டு வரைக்கும் ரமேஷ் தன் அலுவலகப் பிரச்னைகளைத்தான் வழக்கம்போல புலம்பிக்கொண்டிருந்தான். பதிலுக்கு நானும் என் அலுவலகப் பிரச்னைகளை பேசினால்தான் அவனுக்கு சந்தோஷமாக இருக்கும். இரண்டு பேருமே அரசாங்க வேலை வேண்டாம் என்று சாஃப்ட்வேரில் காலை நனைத்துவிட்டது குறித்து அப்பாவுக்கு ஆரம்பத்தில் இருந்த வருத்தம், பேங்க் பேலன்ஸ் மற்றும் வீடு, கார் என்று சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தபோது ஓரளவு தணிந்துவிட்டது. ஆனாலும், ''ஆப்ட வரைக்கும் சுருட்டிக்கங்கப்பா!'' என்று நக்கலடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இது நிலையானதில்லை என்கிற அவரது அபிப்பிராயம் மட்டும் மாறவே இல்லை. அதற்கென்ன செய்வது? பென்ஷன்தான் அவருக்கு எல்லாம். அது நிலையானது ஆயிற்றே!

ரமேஷ் கையில் கிளாஸை எடுத்துக்கொண்டு எழுந்தான். பால்கனியின் விளிம்பில் சூசைட் செய்துகொள்ள விரும்புபவன்போல சாவதானமாகச் சாய்ந்துகொண்டு பாதாளத்தில் தெரிகின்ற வடபழனி பஸ்டெப்போவைப் பார்த்துக்கொண்டிருந்தான். எனக்கு அவ்வளவு பக்கத்தில் போய் எட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றிக்கொண்டு விர்ட்டிகோ வந்துவிடும்.

''பாத்து ரமேஷ்...'' என்றேன்.

''பாத்துப் பாத்து சலிச்சுப்போச்சுடா'' என்றான். எதை என்று நானும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

மிச்சமிருந்த றெக்கையைப் பிய்த்துக்கொண்டிருப்பதில் நான் மும்முரமாக இருந்தபோது, ரமேஷ் திரும்பவும் பேசினான்...

''சிட்டில இன்னிக்கு பெஸ்ட் பிசினஸ் எது தெரியுமா? ஃபெர்ட்டிலிடி கிளினிக்!''

றெக்கையை வாயில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, ''எத்தனை லட்சம் உட்டே?'' என்று கேட்டேன்.

''காசு கிடக்குது! இந்த ஐ.வி.எஃப்-லாம் பெரிய அவமானம்டா...''

''இன் விர்ட்டோ ஃபெர்ட்டிலைஸேஷன்? கலிகாலம் குழந்தை பாக்கியத்துக்குக் கண்டுபிடிச்சிருக்கிற உபாயம்தானே ஐ.வி.எஃப்! தானா நடக்காதபோது லேப்ல வெச்சு ஒண்ணு சேத்து டெவலப் பண்ணி... ஈஸிட் நாட் எ கிஃப்ட்? உனக்கு ஒரு தடவை ஃபெயிலியர் ஆயிடுச்சுங்கறதுக்காக...''

நான் சொன்னதை அவன் கேட்டதாகவே தெரியவில்லை. ''அப்பாவுக்கும் லேட்... எனக்கும் இப்படி... ஹெரிடிட்டரிதானே..?'' என்றான் தொடர்ந்து.

''சேச்சே, அதெல்லாம் இருக்காது ரமேஷ்...'' என்றேன் அவசரமாக. அதற்குமேல் கேட்டால் பொய்கள்தான் சொல்ல வேண்டிவரும்.

''நோபடி இஸ் ட்ரஸ்ட்வொர்த்தி!'' என்று திடீரென்று தத்துவத்துக்குள் அவனாகவே தாவினான். ''நத்திங் இஸ் ரிலையபிள்!''

நேரடியாக அண்ணியின் கற்பு குறித்த ஏதோவொரு குற்றச்சாட்டு என் முன்னால் வந்து விழுவதாகவே முதலில் நினைத்தேன்.

''இந்த ஃபெர்ட்டிலிடி க்ளினிக்கெல்லாம் குழந்தை தயாரிக்கிற மெஷின் கணேஷ்...'' என்றான் திடீரென்று. ''நாம டிகாக்ஷனையும் பாலையும் குடுத்தா அவங்க கலந்து குடுப்பாங்க...''

ரொம்பவே நொந்துபோயிருக்கிறான் என்பது தெரிந்தது. வாயைக் கிளறாமல் பேசாமல் இருந்தேன்.

''பாலோ டிகாக்ஷனோ கெட்டுப் போயிருந்தா?''

''.................?''

''கெட்டுப்போன காபிதானே வரணும்? ஆனா, நல்ல காபி வரும்! அதான் மேஜிக்!''

கிளாஸை வாயில் கவிழ்த்துவிட்டு, திரும்பவும் வந்து நிரப்பிக்கொண்டான்.

''என் ஃப்ரெண்டுடா... ஒனக்குத் தெரியாது. இப்படித்தான் பெத்துக்கிட் டான். இன்னிக்கு டி.என்.ஏ டெஸ்ட்ல ஜீன்கோட் நெகட்டிவ்வா வந்திருக்கு.... ஃபிஃப்டி பர்சென்ட் பாசிட்டிவ், ஃபிஃப்டி பர்சென்ட் நெகட்டிவ்! அதாவது, அவன் வொய்ஃப் சைடு ஓக்கே..! இவன் சைட காணோம்! கேட்டா, ஃபிஃப்டி பர்சென்ட் வந்திருக்கில்லே... சந்தோஷப்படுங்கன்னு சொல்லியிருக்கானுங்க ராஸ்கல்ஸ்..! கோர்ட்டுக்குப் போயிருக்கான் இப்போ...''

''அடப்பாவிகளா..!''

''இப்ப நாமளும் ரெண்டாவது ஐ.வி.எஃப் வரைக்கும் வந்தாச்சு. எனக்கு ஒண்ணு தோணுது...'' என்று சற்று நிறுத்தினான். ''அவளுக்கும்கூட ஓக்கே தான்'' என்று சற்று தயங்கியவனாக  என் முகத்தை ஏறிட்டான்.

''உனக்கே தெரியும்... எனக்கு கவுன்ட் ரொம்ப லோ!'' என்று சற்று நிறுத்தினான். ''அதான் டொனேஷனுக்குப் போயிட லாமான்னு...''

அதற்கு உடனே பதில் சொல்லிவிட முடியாது என்பதை உணர்ந்து மௌன மாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.

''இருந்தாலும் வம்சம் முக்கியம் பாரு...'' என்று சற்று நிறுத்தினான். பிறகு மெல்லிய குரலில் அதைக் கேட்டான்... ''வில் யூ டொனேட் ஸ்பெர்ம்?''

''வாட்?!!'' இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்ன உளறுகிறன் இவன்!

''இல்ல... உனக்கும் மேரேஜ் ஃபிக்ஸ்  ஆயிடுச்சு... எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்தாப்போல இருக்கும்ல?''

ரமேஷின் முதல் கோரிக்கையை விட இரண்டாவது சந்தேகம் என்னை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டுபோயிற்று. வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டேன். வெளியே இருந்தால் அவனை மிக அசிங்க மாகப் புண்படுத்தியிருப்பேன். நல்ல காலம்!

பெங்களூர் வந்ததும் இந்த விஷயத்தை மறந்தே போயிருந்தேன். ஆனால், அடுத்தகட்டமாக இதை அப்பாவிடம் பேசியிருக்கிறான் என்பது தெரிந்தபோது என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பா இதை வெறும் செய்தியாகத் தான் தெரிவித்தார். அவர் கருத்து இன்னது என்பதைப் பற்றிய எந்தக் குறிப்பும் பேச்சில் இல்லை. 'அம்மாக்குத் தெரியுமா?’ என்ற கேள்விக்கு மட்டும், ''சொல்லல!'' என்று பதில் வந்தது. இதில் தப்பொன்றும் இல்லை என்றுதான் ரூம்மேட் ப்ரகாஷ்கூட சொன்னான்.

குழந்தைகள் எல்லாம் வளர்ந்துவிட்ட ஸ்திதியில் தீபாவளிக்காக ஒன்றுகூடுவது என்பது எப்போதோ நின்றுபோயிருந்தது. ஆனால், அம்மா இந்த வருட லீவில் குலதெய்வம் கோயிலுக்குப் போகலாம் என்று ஆரம்பித்தாள். அங்கே ரமேஷ§க்கு குழந்தை பிறந்துவிடும் என்பது அவளது நம்பிக்கை.

ரமேஷ§க்கு என் டொனேஷன் மீது நம்பிக்கை.

பொதுவாகவே தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான் என்று எந்தப் பண்டிகையையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கொண்டாடும் பழக்கம் இல்லாதவன் என்கிற வகையில் அந்த நாட்களை, காரை எடுத்துக்கொண்டு தொலைதூரப் பயணங்களுக்கு உபயோகித்துக்கொள்வது எனது வழக்கம். என்ன, இந்த முறை குடும்பத்தோடு... எப்படியும் லீவு இருக்கிறது, அதோடு தீபாவளி அன்று ஹைவேயில் காரை இறக்கிப்பாருங்கள். அரசகுமாரிகள் ஊரின் மத்தியில் இருக்கும் பொற்றாமரைக்குளத்தில் குளிக்கப்போகும்போது சாலையை எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை நீங்களும் உணரலாம். உங்கள் காருக்காகவே ஓர் அரசாங்கம் சாலை போட்டு வைத்திருப்பதைப்போல வீதியில் ஒரு வாகனத்தையும் பார்க்க முடியாது. எப்போதாவது ஒரு லாரி. எப்போதாவது சில டூ-வீலர்கள். என்னைப்போலவே இந்த டிராஃபிக் யுகத்தில், திருவிழாவைவிட சாலையில் வெறுமையைக் கொண்டாடுகிற யாரோ சிலரின் வாகனங்கள், அதையும் மீறினால் திருநாள், பெருநாள் என்றெல்லாம் பாராமல் மண்டையைப் போட்டு விட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள் விரையும் வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள், வெகு சில அரசுப் பேருந்துகள் தவிர, சாலை பெரும்பாலும் உங்களுடையதே!

அதுவும், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இணைப்புச் சாலைத் திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து டோல்கேட்கள் தவிர வேறு தொல்லைகள் இல்லாத அற்புதமான சாலைகளில் போக்குவரத்தும் இல்லையானால், அதைவிட வேறு என்ன கிடக்கிறது தீபாவளி விசேஷம்! உங்கள் நம்பிக்கையை நான் பிழையென்று சொல்லவில்லை. என் அனுபவத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்; அவ்வளவுதான்!

ரமேஷ§ம் அண்ணியும் நேராக சென்னையில் இருந்து நாங்கள் தேனியில் தங்கியிருந்த வெஸ்டர்ன் காட்ஸுக்கு வந்துவிட்டார்கள். அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர்தான். கோயில் முன்பு இருந்ததைவிட சற்று தள்ளிப் போய்விட்ட தாக உணர்வதாக அப்பா தெரிவித்தார். இது எப்படி இருக்கிறது! அத்தனை காலமாயிற்று வந்து...

ஜம்புலிப்புத்தூருக்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் உடைந்த தார்ச்சாலையில் போனதும், வலது பக்கம் முட்புதர்களுக்கு நடுவே மஞ்சள் நிறத்தில் சிறு சுதைக் கட்டடம் தென்பட்டது. காரை அங்கேயே நிறுத்திவிட்டு, கோயிலை நெருங்கிப் பார்த்தபோது, பூட்டுதான் தொங்கியது. எங்களுக்கு வழி சொன்ன ஜம்புலிப்புத்தூர் பெருமாள் கோயில் அர்ச்சகர் அதற்குள் சாவி யோடு சைக்கிளில் வந்து சேர்ந்தார்.

இந்தப் பொட்டலில்தான் எங்கள் மூதாதையர்கள் கூடியிருக்கிறார்கள். நாங்களோ இங்கே வந்ததே இல்லை. வருஷம் ஒருமுறை கோயிலுக்கு கூட்டமாக வந்து பொங்கல் வைத்துவிட்டுப் போவார்கள். மற்றபடி யாரும் வருவது இல்லை என்கிற குற்றச்சாட்டோடு கோயிலைத் திறந்து அதிகம் பூஜை காணாத அந்த அம்மன் விக்ரகத்தை தண்ணீரால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார் அவர்.

அம்மா சொன்னதுபோல் அம்மன் நல்ல அழகுதான். அதற்குமேல் எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை. மகியைக் கூட்டிவந்திருந்தால் சந்தோஷப்பட் டிருப்பாள். ஓவியர் சில்பியைக் காப்பி யடித்து வீட்டில் நிறையப் படங்கள் வரைந்து வைத்திருக்கிறாள். அவளிடம் சொல்லி இந்த அம்மனையும் வரைய வேண்டும். காப்பியடிக்கத்தான் தெரியுமா, சொந்தமாகவும் வரையவும் வருமா என்பது தெரிந்துவிடும்.

அப்பா ஒருவிதமான குற்ற உணர் வோடு இருப்பதாகத் தெரிந்தது. எந்நாளு மில்லாத ஒரு பவ்யம் அவரது முகத்தில் ஏறியிருந்தது. ஒரு உதவியாளனைப்போல ஓடியோடி அர்ச்சகருக்கு அதையும் இதையும் எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இத்தனை நாள் உன்னை கவனிக்காமல் இருந்துவிட்டேனே என்று அவரது மனம் பதைபதைக்கிறது அல்லது ஏதோவொரு பரவசத்தில் அவர் உறைந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தோன்றும்படியாக இருந்தன அவரது ஓட்ட மும் ஆட்டமும்.

வெளியெங்கும் காய்ந்துகிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி, மூன்று கற்களை அடுப்பாக்கி, அர்ச்சகர் வீட்டில் இருந்து கொண்டுவந்திருந்த பித்தளைப் பாத்திரத்தில் நீரேற்றி, அம்மாவும் அண்ணியும் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். அல்லது, அம்மா பொங்கல் வைப்பதை அண்ணி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தாகவும் அந்த நிகழ்வைச் சொல்ல லாம்.

ரமேஷ் அப்படிக் கேட்டதில் இருந்தே என் மனத்தில் அதுவரை இல்லாத ஒரு சங்கோஜம் அண்ணியின்பால் ஏற்பட்டிருந்ததனால், அவளோடு பேசுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தேன். அண்ணியிடம் எந்த மாற்றமும் இல்லை; அவள் இயல்பாகத்தான் இருந்தாள் என்பதால் அதுவரைக்கும் சந்தோஷம் என்று இருந்தது.

அப்பா அர்ச்சகரிடம் அந்தக் கோயிலின் வரலாறு குறித்த புத்தகம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். தலபுராணம் எழுதக்கூடிய அளவுக்கு அதுவொன் றும் பெரிய கோயில் அல்ல என்கிற யோசனைகூட அவருக்கு உதிக்காமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. போடிநாயக்கனூரிலோ கம்பத்திலோ அந்தக் கதை தெரிந்தவர்கள் இருக்க லாம் என்று சொல்லிக்கொண்டி ருந்தார் அர்ச்சகர்.

எத்தனை வயதானாலும் அம்மாவைப் பார்த்ததும் பிள்ளை, குழந்தையாகிவிடுவதாகச் சொல்லப் படுவதையே அவரது செய்கைகளில் காண முடிந்தது. அந்தக் கோயிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பித்தரத் தான் விரும்புவதாக அடுத்த அறிவிப்பை அதற்குள் அவர் வெளியிட்டிருந்தார்.

சுவரே எழுப்புபவன் இந்தத் தட்டை நிரப்பாமலா போய்விடுவான் என்ற புதிய உத்வேகம் உந்த, அர்ச்ச கர் கொண்டிருந்த உற்சாகம் வெளிப் படையாகவே தெரிந்தது. ஆண்டிப் பட்டியில் நாங்கள் வாங்கிவந்திருந்த மலர்கள், மாலைகள் எல்லாம் அம்மனை நிறைத்தன. அம்மா வாங்கி வந்திருந்த புதிய புடவையை அவள் அணிந்துகொண்டாள். பரதநாட்டியம் ஆடும் பெண்கள் வாடகைக்கு எடுக்கும் தரத்தில் கயிறு பிணைத்த ஒரு கல் அட்டியல் அவள் கழுத்தில் கிடந்தது. மற்றக் கோயில்களில் ஏற்படுவதுபோல தெய்வம் என்று அச்சமோ மலைப்போ ஏதும் இல்லாமல், சகஜமாகப் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நடக்கும் அலங்காரத்தை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல இருந்தது.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் அவள் தெய்வமாகத் தெரிந்திருக்க வேண்டும். 'ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்ட மெல்லாம் பூத்தாளை’ என்று அப்பா தனக்குத் தெரிந்த அந்தாதியைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

மிக மிக அமைதியான அந்த சூழலில் ரசாயனம் ஏதும் மிதந்து கொண்டிருக் கிறதா என்று ஆச்சர்யமாக சுற்று முற்றும் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். கடவுளைப் பற்றி எவ்விதமான முடிவுகளும் இல்லாத ஒருவன் என்கிற முறையில் பொதுவாகவே கோயில்களில் அந்நியமாக உணர்கிற மனம் இப்போது லேசாகி இருப்பதாக உணர்ந்தேனா, இல்லை கற்பனையா?

கடவுளைவிட முக்கியமானது கடவுள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை என்று அப்பா வரும்போதுகூட சொல்லிக் கொண்டு வந்தார். அது சரிதான் என்று இப்போது தோன்றிக்கொண்டிருந்தது. கடவுள் இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை இருக்கிறதே!

ஏதாவது வேண்டிக்கொள்ள வேண்டுமா? 'உன்னால் முடிந்தால் இந்த டொனேஷனில் இருந்து காப்பாற்று..!’ ஓ.கே?

கொஞ்சம்கூட புகை வாசம் வராமல் அந்தப் பொங்கல் அத்தனை ருசியாக இருந்தது. அம்மாவுக்கே அது ஆச்சர்யம்தான். சமைத்த கையே அந்த அளவுக்கு ருசியாக அதுவரை சாப்பிட்டது இல்லை என்று வியக்கிறது.

ரமேஷ் அந்தப் பொங்கலைக்கூட ரசித்துக்கொண்டிருப்பதாகத் தெரிய வில்லை. அங்கிருந்து கிளம்புமுன் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவன் என் னிடம் அதைத்தான் திரும்பவும் கேட்டான், ''அப்பா ஏத்துக்குவார். நீ மட்டும் ஓக்கே சொன்னா போதும்...''

''ஏன் ரமேஷ், ஒனக்கே பொறக்கும் பாரேன்..''

ரமேஷ் விரக்தியாக புன்னகைத்தான். ''இங்க என்னடா புத்திரகாமேஷ்டி யாகமா நடந்துது?''

என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது. பத்துப் பதினைந்து நாள் கழித்து ரமேஷிடம் இருந்து போன் வந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அவ்வளவு உற்சாகம். ''கணேஷா! நம்ம அம்மன் பரவாயில்ல போலிருக்கேடா... ஒனக்குத்தாண்டா மொதல்ல சொல்றேன்.''

முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பிரகாஷ்கூட வழக்கம்போல, ''டோனரை கீனரை மாத்திட்டானா உங்கண்ணன்?'' என்றுதான் கேட்டான்.

''போடா நாயே! உன் புத்தி எங்க போகும்?'' என்றேன் மிகுந்த ஆசு வாசத்தோடு. ஃபெர்ட்டிலிடி க்ளினிக்கோ, குலதெய்வமோ... கதவோ, கண்ணோ திறந்துவிட்டது. அதுதானே வேண்டும்!

''இப்ப என்னடா சொல்றே? காமாட்சியே வந்து பொறக்கப்போறா பாரு!'' என்றது அம்மா, போன் போட்டு.

அப்பாவிடம் இருந்து மட்டும் போன் இல்லை. ''அந்தக் கோயிலுக்குத்தான் ஏதோ செய்யணும்னு போயிருக்காரு. ஒரு வாரமாச்சு...'' என்றது அம்மா.

''விஷயம் தெரியுமா?''

''எங்கே? போனை எடுத்தாத்தானே!''

நான் அழைத்துப் பார்த்தபோதும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது. பொதுவாகவே போன் கையில் நிற்காது அவருக்கு. எங்காவது தொலைத்துவிட்டாரோ என்னமோ!

இரண்டு நாள் கழித்துத்தான் அப்பாவைப் பிடிக்க முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு தல புராணம் தயாரிக்கும் வேலையாக பெரியகுளம், தேனி, போடி நாயக்கனூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை என்று அலைந்து உண்மையிலேயே அந்தக் கோயிலின் கதையைக் கண்டுபிடித்துவிட்டதாக அவர் சொன்னார்.

தலபுராணம் - சிறுகதை

அதற்கு முன்னால், சென்னைத் தகவல் தெரியுமா என்று நான் கேட்டேன். கேட்டுவிட்டு, ''என்னது, என்னது..?!'' என்று அவரது குரல் தழுதழுத்தது. அடுத்த கணம் போன் அணைந்துவிட்டது. வழக்கம்போல கீழே போட்டிருப்பார் என்று உணர்ந் தேன். அதைத்தான் செய்திருந்தார்.

திரும்பவும் அழைத்தபோது, ''சில விஷயங்களையெல்லாம் நாம புரிஞ்சுக்க வேண்டியதில்லைடா தம்பி'' என்றார். ''பெரியவாள் பார்வை பட்ட மாத்திரத்தில் என் உடம்புக்குள்ள ஏதோ படீர்னு உதறிச்சே... அதை நம்பறியா இப்ப? அவர் பார்வை பட்ட உடம்புக்கு ஒரு பீபி ஒரு ஷ§கர் வந்துச்சா... கல்லு மாதிரி இல்லையா? அதே மாதிரிதான் இதுவும்... கண்ணை மூடிக்கிட்டு நம்பிக்கை வைக்கணும். அதுதான் மனுஷன் செய்யக்கூடியது!'' என்று பரவசத்தோடு மிகச் சுருக்கமாக அந்தக் கதையைச் சொன்னார்.

அந்தக் கதை இதுதான்.

'ராஜா காலத்திலோ, ராவுத்தர் காலத்திலோ ஒரு கூட்டுக் குடும்பத்தில் நிகழ்ந்த கதை இது. அகண்ட சொத்துக்கு வாரிசு இல்லை. எனவே, குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக கணவனின் அண்ணன் வாயிலாகக் குடும்பத்துக்கு வாரிசு பெற்றுத் தருகிறாள் காமாட்சி. அவர் கல்யாணம் ஆனவரா இல்லையா என்கிற செய்தியையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் குடும்ப ரகசியம் மகனுக்குத் தெரியும்போது, அவனது பழி தாளாமல், ஜம்புலிப்புத்தூரை அடைகிறாள். அப்போது அது தேவதாசிகளுக்குப் பெயர் போன இடம். அங்கே உள்ள கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில் அவர்களோடு இணைந்து கைங் கர்யங்களில் இறங்குகிறாள். அவள் வாழ்வில் மீண்டும் விதி குறுக்கிடுகிறது. அவளை மறக்க முடியாமல் தேடிக் கண்டுபிடித்து அவள் முன்னால் வந்து நிற்கிறார் அவளது கணவனின் அண்ணன். தன்னோடு மீண்டும் கூட விரும்பிய மைத்துனரை அவள் சபிக் கிறாள். ''குடும்ப நிர்பந்தத்தின் காரண மாகவே நான் என் மைத்துனரோடு கூடினேன். அது என் பத்தினித் தன்மையை பாதித்திருந்தால், இவர் மீண்டும் என்னோடு கூடட்டும். நான் இன்னும் பத்தினிதான் என்றால், இப்போதே என் உடல் எரிந்து சாம்ப லாகட்டும்...'' அடுத்த கணம் அவள் உடல் தீப்பற்றி எரிகிறது. உண்மையை உணர்ந்த அவளது மகன் பின்னாளில் எழுப்பிய சுதைக் கோயில்தான் இப்போது காண்பது.

இந்தக் கதை எனக்குள் பெரிய ஆச்சர்யம் ஒன்றையும் ஏற்படுத்த வில்லை. ஆனால், மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்திற்று. எரிந்தாள் என்றால், கற்பின் கனல்தான் பற்றி எரிந்ததோ... இல்லை, அவளாகவே தீ வைத்துக் கொண்டாளோ? இப்போது ஒரு பொட்டலில் நிற்கிறாள். அங்கே நிற்பது அவளோ இல்லையோ, அங்கே நிற்பது ஒரு நம்பிக்கை. அதை எப்படி இல்லை என்று சொல்லிவிட முடியும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு