பிரீமியம் ஸ்டோரி
பின் தொடர்பவை - கவிதை

தவைச் சாத்திக்கொண்டு

வெளியே வந்து

நீண்ட வராந்தாவில் நடந்து

வளைந்து வளைந்து இறங்கும்

மாடிப்படிகளில் இறங்கி

வாசல் தொட்டுத்

தெருமுனை திரும்பும்வரை

ஒரு நம்பிக்கை இருந்தது

'போகாதே, வா, மன்னித்துவிடு’ என்று

உன் குரல்

பின் தொடர்பவை - கவிதைமுதுகில் ஒலிக்கும் என...

சிறு சிறு பனித்துளிகள் போல்

தோற்றமளிக்கும்

இந்த வெப்பத் துளிகள்

குதிரையின் கடிவாளத்தைப் போல

இறுக்கிப் பிடிக்கும் கண்களைப்

பொருட்படுத்தாமல் சரசரவென்று

இறங்கி உதிர்கின்றன

தாடை விளிம்பில் மட்டும் சற்றே தயங்கி...

அவரை விதைகளை அடையாளமாகத்

தவற விட்டுக்கொண்டே போன

தேவதைக் கதை போல்,

பின்தொடரும் எவரேனும்

இதைப் பிடித்துக்கொண்டே

வந்துவிடலாம் வீடுவரை...

பேருந்தையும் தானியையும் மறுத்து

நடக்கும் கால்களுக்கு

மூளை செய்தி அனுப்பிக் கொண்டேயிருக்கிறது

'மெதுவாக நட’ என...

ஒருவேளை நீ பின்தொடர்ந்து வந்தால்

நாற்சந்தியில் எந்தப் பக்கம்

திரும்பினேன் என்று

திகைக்கக் கூடுமே என்ற

நப்பாசைக்கு வயது நான்கு நிமிடம்...

'வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்’

என்று எதற்காக அறிவிக்கிறது

தெருமுனைத் தேநீர்க்கடை

அசரீரி போல?

'திரும்பிப் பார்க்கக் கூடாது’ என்கிற

வைராக்கியத்தைச் சம்மட்டி கொண்டு

அடிக்கிறது தடதடக்கும் இதயம்...

அழைப்பு அல்லது குறுஞ்செய்தி

வந்தே ஆக வேண்டும் என்ற பேராவலில்

செல்பேசியை இறுக்கிப் பிடிக்கும்

கைகளின் வியர்வைக்கும்

தெரிந்தே இருக்கிறது

இது ஏற்கெனவே நழுவிவிட்டதென்று...

'முடிந்து விட்டது’ என்னும் நிதர்சனத்தை

ஏற்க விரும்பாத மனசு

சாலை கடக்கும்போது பேருந்துபட்டுச்

சாகக் கூடும் என்பதையும் மறுதலிக்கிறது...

கூந்தல் கற்றைகள் பிரிந்து

காற்றில் பறக்க

கால் செருப்பு அறுந்து கைவிட

தனிமைச் சந்திப்புக்கென

பார்த்துப் பார்த்துக் கட்டிய

நூல்சேலை துவண்டு வதங்க

உதடு துடிக்க உலகம் துறந்து

செல்பவளின் கைகளில்

சிலம்பு மட்டும்தான் இல்லை!

முதல் சந்திப்பில் பற்றிய தீயிற்கும்

முடிந்த சந்திப்பில் பற்றிய தீயிற்கும்

இடையே கருகிப் பொசுங்குகின்றன

'கை விட மாட்டேன்’ என்ற

கணக்கில்லா சத்தியங்களும்

காப்பாற்றி அடைகாத்த கற்புகளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு