Published:Updated:

பொருத்தம் - சிறுகதை

ஆனந்த் ராகவ், ஓவியம் தமிழ்

பிரீமியம் ஸ்டோரி

ந்தப் பளபளக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் ஆரவாரமான கான்ஃபரன்ஸ் அறை மேற்கத்திய சங்கீதத்தாலும், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள், சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட்கள், எம்.பி.ஏ-க்கள் என மூளையின் இண்டு இடுக்கெல்லாம் பணம் பண்ணும் வேட்கை ஒளிந்திருக்கும் இருநூற்றுச் சொச்சம் நபர்களாலும் நிரம்பியிருந்தது. மேடை மேல் சூட்டும் கோட்டுமாய் உட்கார்ந்திருந்த கனவான்கள் பேசத் தயாராய் இருந்தார்கள்.

பொருத்தம் - சிறுகதை

குட்டைப் பாவாடையும் புன்னகையுமாய் பழரசம் விநியோகித்துக்கொண்டிருந்த கவர்ச்சியான பெண்களால் அவ்வப்போது விழித்துக்கொண்டாலும், என் கண்களில் நியூஜெர்ஸியில் இருந்து வந்திறங்கிய நேற்றைய பயணத்தின் களைப்பு மிச்சம் இருந்தது. வாய்ப்புகள் குவிந்துகிடக்கிற இந்தியாவுக்குத் திரும்ப வந்து தொழில் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிற நான், இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஏதாவது யுக்தி பொறிதட்டுகிறதா என்று பார்க்க வந்திருந்தேன்.

விவாதம் தொடங்கி, சூடுபிடித்தது. மேடைக் கனவான்கள் ஆன்லைன் போர்ட்டல் என்னும் இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தொழில்களின் வெற்றிக் கதைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலாகித்த ஒரு நிறுவனம் குறைவான முதலீட்டைப் போட்டு மெள்ள மெள்ள வளர்ந்து, அன்றைய தேதியில் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் விருத்தியாகி, நிறுவனத்தின் மதிப்பீடு பல கோடிகளை எட்டியிருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.

''அது என்ன நிறுவனம் தெரியுமா?'' - மேடைக் கனவான் பீடிகையோடு கூட்டத்தைப் பார்த்தார். திரையில் அந்த நிறுவனத்தின் பெயர் பளிச்சிட, நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணவாழ்க்கை டாட் காம். ஆன்லைன் மேட்ரிமோனியல் என்று ஜோடிப் பொருத்தம் பார்த்து அறிமுகமில்லா ஒரு வாலிபனையும் யுவதியையும் கல்யாணம் என்ற புள்ளியில் இணைக்கும் தளம். விளையாட்டுப்போல ஆரம்பித்து விளம்பரங்கள் கோடிகோடியாய் வந்து குவிகிற தளம். ஓர் அமெரிக்க நிறுவனம் கோடி கோடியாய்க் கொட்டிக்கொடுத்து விலைக்கு வாங்கத் தயாராக இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. இந்தியா முழுக்க லட்சக்கணக்கில் உறுப்பினர்கள்.

பொருத்தம் - சிறுகதை

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரையில் வருகிறார். வழுக்கைத் தலை, வெகுளிச் சிரிப்பு, வேட்டி சட்டை, விசால நெற்றி நிறைய பட்டை பட்டையாகத் திருநீறும், நடுவாந்தர குங்குமப் பொட்டுமாக, கமல்ஹாசன் படங்களின் வில்லன் போல பக்தி சொட்டும் முகம். திருச்செங்கோட்டுக்குப் பக்கத்தில் கோழித் தீவன வியாபாரம் செய்துகொண்டிருந்த சாதாரணர். நகரத்தின் பண வியாபாரிகளை எல்லாம் எழுந்து நின்று கைத்தட்ட வைத்திருக்கிறார்.

அவரின் நிறுவனத் தளத்தில் புகுந்து பார்த்தால் புலப்படுகிறது அதன் வீச்சு. மொழிவாரியாய், மதம் வாரியாய், ஜாதி வாரியாய் லட்சக்கணக்கில் உறுப்பினர்கள். கல்யாண ஆசை நிரம்பியிருக்கும் அசட்டுக் களை கண்களோடு பெண்களும் ஆண்களும். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து. போட்டோஷாப்பில் திருத்திய போட்டோ இணைத்து, விருப்பு வெறுப்புகளைச் சொல்லி, வீடியோவில் படம் பிடித்துப் பதித்து, தன் மனத்துக்குப் பிடித்த துணை எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு, இந்தியா முழுக்க விரவிக்கிடக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் தன் வாழ்க்கைத் துணையைத் தேடியெடுக்கும், வைக்கோல்போரில் குண்டூசி தேடும் ஆயாசமான வேலையை எளிதாக்கித் தரும் இணையதளம். மாதாந்தர, வருடாந்திர உறுப்பினர் கட்டணம் என்று கோடிக்கணக்கில் முன்பணம் கட்டிவிட்டு, இளைஞர்களை இணையத்தில் இல்வாழ்க்கையை தேடவைக்கிற நிறுவனம்.

கமல் வில்லரின் வட்டார வழக்குத் தமிழ்ப் பேச்சு நின்ற இடத்தில் இருந்து ஸ்டைலான ஆங்கிலத்தில் தொடங்குகிறார் பேச்சாளர். ''இணையம் எல்லா நல்ல உத்திகளையும் வெற்றிபெறக்கூடிய ஒரு வியாபாரமாக்குகிறது.''

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில் இயல்பாக, எளிதாக, உத்தரவாதமாக எந்தத் தகுதியும் இல்லாமல் எல்லோருக்கும் நடந்துகொண்டிருந்த ஒரே சங்கதி கல்யாணம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே... அதற்கா இந்தப் பிரம்மப் பிரயத்தனம்? ஒரு பிரத்யேகப் போர்ட்டல்? இவர்களுக்கு அப்பா அம்மா, மாமா, அத்தை என்று உறவினர்கள் யாருமே கிடையாதா?  ஹைதராபாத்தோ, மங்களூரோ, போபாலோ... சைபர் உலகத்தின் ஏதோ ஒரு முடுக்கில் உட்கார்ந்து எவனோ ஒரு விடலைப் பயல் எழுதிய நிரல்தான் இவர்கள் வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரப்போகிறதா?

இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னால், கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கத்தான் ரொம்பக் கஷ்டப்படவேண்டும். பெற்றோர் தாமதித்தாலும் உற்றார் உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று ஒரு கோஷ்டியே துரத்தி ஒரு துணையைப் பார்த்து நம் தலையில் கட்டிவிட்டுத்தானே மறுவேலை பார்ப்பார்கள்? அந்தப் பாரம்பரியத்தில் வந்த நமக்கா போர்ட்டலும் வீடியோ கான்ஃபரன்ஸிங்கும் போட்டோ பொருத்தமும்?

என் கவனம் முற்றிலுமாய்ச் சிதைந்துபோனது. திரையில் தெரியும் சிவபக்தர் மார்ஃப் ஆகி கேசம் வளர்ந்து, நிறம் கூடி, பொட்டின் அளவு பெரிதாகி, கண்கள் பெரிதாகி, நாசி கூராகி ஒரு பெண்மணியாய் திரையில் என் கண்களுக்கு மட்டும் தெரிந்தாள் கல்யாணி அத்தை.

இந்த ஆளின் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு என்றால், என் கல்யாணி அத்தை பத்து பில்லியன் பெருமானம் உள்ளவளாயிற்றே!

அந்த விடுதியின் மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் மறைந்து, மெல்லியதாய் 'நிதி சால சுகமா’ கேட்கிறது. மயில் கழுத்துப் பட்டுப்புடவையில் ஜரி வேலை தலைப்பை தோளோடு போர்த்திக்கொண்டு வெட்கத்துடன் சிரித்தவாறு, அந்த அமெரிக்கன் தரும் சால்வையை வாங்கியபடி அத்தை மேடை ஏறுகிறாள். காசு மாலை, இரட்டை வடம் சங்கிலி, தொங்கட்டான் எல்லாம் மயில் கழுத்து கலர் பின்னணியில் ஜொலிக்கிறது. கூட்டம் எழுந்து கைத்தட்டுகிறது.

திருமணம் என்கிற தாம்பத்யம் தழைத்து வாழ பிரம்மா தேர்ந்தெடுத்து அனுப்பிய தேவதை மாதிரி, ஆயுசு முழுக்கக் கல்யாணத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவள் அத்தை. புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் உட்கார்ந்துகொண்டு வாஷிங்டன் வரை கல்யாணம் செய்துவைத்தவள். இந்தக் காலத்து இன்டர்நெட், இ-மெயில், ஃபேஸ்புக், 3ஜி செல்போன் எல்லாம் இல்லாமலேயே பொன்னேரியில் இருக்கும் ஒரு பெண்ணை பென்சில்வேனியா பையனோடு அநாயாசமாய் இணைத்தவள். இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் கல்யாணத்தில்கூட, உங்களுக்கே தெரியாமல் கல்யாணி அத்தையின் பங்களிப்பு இருந்திருக்கலாம்.

ஒரு நபர் பிறப்பதற்கு முன்னரே அவரின் கல்யாணம் நிச்சயமாகும் அதிசயத்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? என் அத்தை விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. மற்றவர்கள் கல்யாணங்களை நடத்த அவதாரம் எடுத்த அவளின் கல்யாணம் நடக்க எந்தத் தடங்கலுமே இருக்கக் கூடாது என்று கடவுளே செய்த அரேஞ்ச்மென்ட் அது.

கல்யாணி அத்தையின் அம்மா விசால£ட்சி, கருவை வயிற்றில் சுமந்தபோதே, அதற்காக பிரத்யேக டெஸ்ட் எல்லாம் செய்து கணிக்கமுடிகிற வசதியில்லாத அந்த நாட்களிலேயே, விசாலாட்சி மாமி பெறப்போவது பெண்ணாயிருந்தால் அவளது அண்ணன் மகனாகிய, அப்போது ஆறு வயதே நிரம்பியிருந்த கிருஷ்ணனுக்குக் கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று, அந்த காலத்தில் இருந்த வழக்கப்படி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

ஆஸ்பத்திரியில் இருந்த குழந்தையை ஆறு வயதுக் கிருஷ்ணனுக்கு வீட்டுப் பெரியவர்கள் அறிமுகப்படுத்தியதே ''உனக்கு பொண்டாட்டி பொறந்திருக்கா பாருடா'' என்ற  தினுசில்தானாம். கிருஷ்ணன் மாமாவும் 'பொண்டாட்டி’ என்பது தனக்கென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக பொம்மை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு, பிற்காலத்தில் அவர் படப்போகிற அவஸ்தைகளுக்கெல்லாம் ஊற்றுக்கண் அது என்கிற விவரம் இல்லாமல், உற்சாகமாய் கைத்தட்டிச் சிரித்தாராம்.

அவர்கள் வாழ்க்கையில் முதல் இருபது வருடங்கள் அடங்கிய முதல் படலத்தில், கல்யாணி அத்தையும் கிருஷ்ணன் மாமாவும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்; ஒரே பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள்; ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள்; ஒன்றாய் விளையாடினார்கள்; சண்டை போட்டார்கள்; சமாதானம் செய்துகொண்டார்கள். கிருஷ்ணன் மாமா சாது. சண்டையில் அடி வாங்குவது அநேகமாய் அவராய்த்தான் இருக்கும். என்றைக்காவது திருப்பி அடித்தால் அவரைத் தடுத்து, ''அவளை அடிக்கக்கூடாது கண்ணா... அவளைத்தான் நீ கல்யாணம் செஞ்சுக்கப் போறே'' என்று சொல்லி, 'பொண்டாட்டி அடித்தால் அதை மௌனமாய் வாங்கிக்கொள்வதுதான் புருஷ லட்சணம்’ என்ற உண்மையை நைச்சியமாய் உணர்த்தி, சின்ன வயதில் இருந்தே கிருஷ்ணன் மாமாவை ஒரு நல்ல கணவனாகத் தயார் செய்து வளர்த்தார்கள் வீட்டுப் பெரியவர்கள்.

அத்தை வயசுக்கு வந்ததும், அதற்குத்தான் காத்திருந்த மாதிரி படிப்பையெல்லாம் நிறுத்திவிட்டுக் கல்யாணம் செய்துவைத்தார்கள். அடுத்த இருபது வருடங்கள் கொண்ட இரண்டாவது படலத்தில் இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு, நான்கு பெண்களையும் மூன்று பையன்களையும் பெற்றார்கள்.

தன் நாற்பதாவது வயதில், தன் முதல் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவைக்கும் கடமை வந்து சேர்ந்தது அத்தைக்கு. அதில் ஆரம்பித்து தன் அறுபத்து ஐந்தாவது வயது வரைக்கும் விசாரிப்பது, ஜாதகம் சேகரிப்பது, பொருத்தம் பார்ப்பது, கல்யாணம் செய்விப்பது என அத்தையின் மூன்றாவது முக்கியப் படலம் தொடர்ந்தது. டிமாண்டும் சப்ளையும் பெரும்பாலும் தன் வீட்டில் இருந்தே உற்பத்தியானதால் அத்தையின் பொருத்தம் பார்க்கும் பணிக்கு அஸ்திவாரம் பலமாய் போடப்பட்டது. வீட்டுக் கல்யாணங்களை வெற்றிகரமாய் நடத்தி ஓய்ந்தவுடன், ஏழெட்டு கல்யாணங்களை வெற்றிகரமாய் நடத்தியவர் என்ற புகழ் சேர்ந்தது. ரொம்ப ராசியான கை என்று அக்கம்பக்கமெல்லாம் பேச்சு அடிபட ஆரம்பித்து. அவர் இருந்த தெரு, ஊர், நகரம் என்று 'கொலை வெறி’யாய் பேச்சு பரவி, அத்தையைத் துரத்த ஆரம்பித்தார்கள். பின்பு மெள்ள அத்தைக்கு அதுவே முழுநேர வேலையாகிவிட்டது.

அத்தை இலகுவாக எல்லோருக்கும் திருமணம் செய்துவைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்தக் காலத்தில் பெண்களுக்கும் பையன்களுக்கும் கல்யாணம் செய்துகொள்ள அத்தியாவசியமானது என்று அத்தை நினைத்தது இரண்டே தகுதிகள்தான். பெண்கள் லட்சணமாக இருக்கவேண்டும். சமையல் கற்றுக்கொள்வது, வீட்டை நிர்வாகம் செய்வது, மாமியார், நாத்தனார் போன்ற வீட்டின் உபத்திரவமான உருப்படிகளைச் சமாளிப்பது போன்ற இதர தகுதிகள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்ட கொஞ்ச மாதங்களில் பெண்களுக்குத் தானாக வந்துவிடும், அல்லது இவர்கள் அவற்றுக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள் என்பது அவள் முதல் நம்பிக்கை.

பையன்களுக்குத் தேவையான தகுதி என்று ஒன்றே ஒன்றுதான். ஏதாவது ஒரு வேலையில் இருக்கவேண்டும். அவ்வளவே!

இதற்கு மேல், இன்னும் இரண்டு தியரிகளை வைத்திருந்தாள் அத்தை. முதலாவது, சரியான வயதில் பெண்களுக்குக் கல்யாணம் செய்துவைத்துவிட வேண்டும். சரியான வயது என்பது, பத்தொன்பதில் இருந்து அதைத் தாண்டிய ஆறு மாதங்களுக்குள் என்று பொருள். பிற்காலத்தில் கேவலமாய் உருமாறும் வாய்ப்பு உள்ளவர்கள்கூட இந்தப் பருவத்தில் அழகாய்த் தெரிவார்கள் என்பது கல்யாணி அத்தையின் முதல் தியரி.

  பத்தொன்பது வயதில் இருந்தாலும், பார்க்க வெகு சுமாரான பெண்களுக்கு எப்படி வரன் குதிரும்? அத்தை அதற்கு இன்னொரு தியரி பதிலாய் வைத்திருந்தாள். ''கல்யாணம் பண்ணிக்கணும்னு பையன்களுக்கு வேளை (மூடு) வந்துட்டா, குரங்கு மாதிரி இருக்கிற பொண்ணுகூட கிளியாட்டம்  கண்ணுக்குத் தெரிவா'' என்பதாகப்பட்டதே அந்த இரண்டாவது தியரி. முதல் தியரியில் சிக்காவிட்டால், இரண்டாவதில் அனேகரும் அகப்பட்டாக வேண்டும். இப்படியாக நாளரு ஜானவாசமும் பொழுதொரு நலங்குமாய் கல்யாணி அத்தை கல்யாண அத்தையானாள்.

ஒண்டியாக அத்தை இதைச் செய்திருக்க முடியாதுதான். இப்போதைய இன்டர்நெட்டுக்கு விக்கிபீடியாவும், கூகுளும் இருப்பதுபோல அவளுக்கும் துரைசாமி, சீனிவாசன் என்று இரண்டு சர்ச் என்ஜின்கள் இருந்தார்கள்.

துரைசாமி மாமா, கங்காதீஸ்வரர் கோயிலில் குருக்கள். அந்தப் பிரதேசத்து வீடுகளில் நடக்கிற அன்னப்பிராசனம், பூணூல் கல்யாணம் என அத்தனை மங்கள காரியங்களிலும் போய் செய்துவைப்பவர். அந்தப் பிரதேசத்தின் எல்லார் வீட்டு சென்சஸும், அதுவும் கல்யாண வயதில் யார் யார் எந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதும் அவருக்கு அத்துப்படி. மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் என்று கிளாஸ் எடுப்பவர். துரைசாமி மாமாவுக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்காது அங்கே.

சீனிவாசன் ரிடையர்மென்டின் விளிம்பில் இருந்தார். மாநில மின்சார வாரியத்தில் அவருடைய தகப்பனார் இறப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வேகன்ஸியில் நாற்பது சொச்சம் வருஷங்களாக இருந்துகொண்டு, தன்னுடைய சொந்த அலுவல்களை அலுவலக நேரத்தில் பார்த்துக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர். அலுவலகத்தில் வேலை பார்ப்பதாய்ச் சொல்லும் இதர அலுவலர்களை அறிந்திராதவர். நாராயணன் தெருவில் ஒரு டைப்ரைட்டிங் ஷார்ட்ஹாண்ட் இன்ஸ்டிடியூட் வைத்திருந்தார். தினமும் காலை 9 மணிக்குத் தன் ஹெர்குலிஸ் சைக்கிளில் வியர்க்க விறுவிறுக்க நாலு கிலோ மீட்டர் மிதித்துக்கொண்டு போய், ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போடவேண்டிய இம்சையான ஆபீஸ் வேலையைச் செய்துவிட்ட களைப்பு தீர, சாமாவின் காபி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுவிட்டு, மறுபடி சைக்கிள் மிதித்துக்கொண்டு போய் வீட்டிலோ, இன்ஸ்டிடியூட்டிலோ, கல்யாணி அத்தை விட்டிலோ கழிப்பவர். சீனிவாசன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் பெரிய ஆள்.

கிருஷ்ணன் மாமா நல்ல பாடகர் என்பதால், வீட்டின் மேல் மாடியிலேயே கூரை வேய்ந்து பாட்டு கிளாஸ் நடத்துவார். பையன்களும் பெண்களுமாய் காலையிலும் மாலையிலும் அபஸ்வரமாய் கோஷ்டி கானம் கேட்கும்.

அந்தக் காலத்து அப்பாவி இளைஞர் கூட்டம் காலேஜ், கோயில், விஷ்ணு சஹஸ்ரநாமம், பாட்டு கிளாஸ், டைப்ரைட்டிங் ஷார்ட்ஹாண்ட் என்ற வட்டத்திலே மட்டுமே உழன்றன என்பதாலும், அதில் பாதி கல்யாணி அத்தையின் சகாக்கள் கையில் இருந்தபடியாலும் அந்த வட்டாரத்து இளைஞர் இளைஞிகளின் பரிபூர்ண தகவல் களஞ்சியம் அவர்களிடம் இருந்தது.

கல்யாணி அத்தையின் களம் கல்யாண மண்டபங்கள். பெரும்பாலான கல்யாணங்களை அத்தை பொருத்தம் பார்த்து நடத்திவைப்பதால், முக்கிய அழைப்பாளி அவள்தான். நம் கல்யாணங்கள் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் பந்தத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல; இன்னும் நூறு கல்யாணங்கள் நிகழ வாய்ப்பு விரிக்கும் ஒரு பெரிய சமுத்திரம். பட்டுப் பாவாடையும் தாவணியுமாய் ஏராளப் பெண்கள் மீன்களாய் துள்ளிக் குதித்தபடி திரிய, கல்யாணி அத்தை அங்கே தனது பெரிய வலையோடு காத்திருப்பாள். அங்கே இங்கே பளிச் பளிச்சென்று மின்னும் பெண்களையெல்லாம் கண்களால் ஸ்கேன் செய்து, தன் மெமரி டிரைவில் பதித்துக்கொள்வாள். சொல்லப்போனால், கல்யாணி அத்தையிடம் அறிமுகப்படுத்தவே பலர் தங்கள் குடும்பத்துப் பெண்களை அழைத்து வருவார்கள். ''இவ என் வீட்டுக்காரரோட சிஸ்டர் பொண்ணு, கல்கத்தால இருக்கா...'' என்று கூட்டிவந்து அறிமுகப்படுத்தினாலே, வரன் தேடுகிறார்கள் என்று அர்த்தம். ''அப்பிடியா...''  என்று அத்தை ஏறெடுத்துப் பார்த்து விசாரித்தால், அவள் மூளையில் பொதிந்திருக்கும் யாரோ ஒரு பையனின் ஜாதகத்துக்கு மானசீகமாய் பொருத்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள் என்று அர்த்தம். உட்கார வைத்து நாலு கேள்வி கேட்டாலே பாதி கல்யாணம் தாண்டிவிட்டதாய் அர்த்தம்.

இந்த நாலு பேரும் 'ஃபோர் மஸ்கீட்டர்ஸ்’ போல ஒன்றாய் வேலைசெய்வதைப் பார்ப்பதே ஒரு பரவசமான காட்சி! கூடத்து ஊஞ்சலில் அமர்ந்து அத்தை மெள்ள ஊஞ்சலை ஆட்டியபடி சன்னமாய் பாடிக்கொண்டே இருப்பாள். இடது பக்கமும் வலது பக்கமும் வாய்ப்பாட்டு வித்வானுக்கு இரு பக்கமும் உட்கார்ந்திருக்கிற மிருதங்க வித்வானும் வயலின் வித்வானும் போல துரைசாமி ஐயரும் சீனிவாசனும் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட அந்த ஒற்றை சோபாவில் ஒரு நாள்கூட இடம் மாறாமல் உட்கார்ந்துகொண்டு கச்சேரியை ஆரம்பிப்பார்கள். சற்று பின்னாலே, தம்புராவில் சுருதி கூட்டுகிற மாதிரி ஈசி சேரில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு, தலைமாட்டில் இருக்கிற ரேடியோவில் மிதக்கிற தோடியையோ ரீதி கௌளையையோ தொடையில் தாளம் போட்டு ரசித்துக்கொண்டு இருப்பார் கிருஷ்ணன் மாமா.

துரைசாமி ஒவ்வொரு வரனாய் விவரிக்க, சீனிவாசன் சம்பந்தப்பட்ட ஜாதகத்தை எடுத்து அலசி சிலாகித்துக்கொண்டு வர, கிருஷ்ணன் மாமா சின்னச் சின்னதாய் கமென்ட்கள் தர, கல்யாணி அத்தை கண்ணை மூடி கேட்டுக்கொண்டே, தன் ஞாபகத்தில் இருந்து அந்த ஜாதகத்தின் தேஜஸ், குடும்ப விவரம், அவர்களின் சீர் சம்பத்து என்ன என்பதையெல்லாம் கணக்குப் போட்டு, அலசி ஆராய்ந்து, இன்னாருக்கு இன்னார் என்று அப்போதைக்கு அப்போதே தீர்மானம் செய்து அறிவித்துவிடுகிற வேகம் கூகுளையும் தோற்கடிக்கும்.

அத்தையின் கல்யாண புரோகிராம் புரசைவாக்கம் நிரம்பி, மதராஸின் எல்லை தாண்டிப் பயணித்து, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில்கூட ஸ்தாபனம் ஆனது. கொஞ்சநாளில் அயலூர்க்காரர்கள், ''கல்யாணி மாமி வீட்டுக்குப் பக்கத்துல ஒரு கோயில் இருக்காமே... அதானா இது?'' என்று கேட்கிறபடிக்கு கங்காதீஸ்வரர் கோயிலுக்கே ரெஃபரன்ஸ் ஆகிப்போனாள் அத்தை.

திருமணம் செய்துகொண்டு பல்லாண்டு காலங்கள் சந்தோஷமாய் வாழ்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை... அவர்களின் இன்பகரமான இல்லறத்துக்குப் பின்னே இருந்தது, ஸ்கூல் படிப்புகூட முடிக்காத ஒரு பெண்மணியின் நல்லெண்ணமும் ஆசியும்தான் என்பதும், அவர்களின் மணவாழ்க்கை சொர்க்கத்தில் அல்ல, புரசைவாக்கத்தின் காரை பெயர்ந்த ஒரு பழைய வீட்டின் கூடத்தில்தான் நிச்சயிக்கப்பட்டது என்பதும்.

செய்ததற்கெல்லாம் காசு வாங்கினதில்லை அத்தை. பதிலுக்கு ஏதும் எதிர்பார்த்ததும் இல்லை. பிரதியுபகாரம் பார்க்காமல் இரவு பகலாக ஏன் அப்படி அத்தை இயங்கினாள் என்று எங்களுக்குப் புரிந்ததில்லை. தான் அடைந்ததுபோல லக்ஷ்மிகரமான வாழ்க்கை தன்னைச் சுற்றிவரும் இதரப் பெண்களுக்கும் வாய்க்கட்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். சந்தோஷமாய்க் குடும்பம் நடத்துகிறவர்கள் அவ்வப்போது வந்து விசாரிப்பதும், குழந்தை பிறப்புக்கும் பூணூல் கல்யாணத்துக்கும் இன்ன பிற மங்களகரமான நிகழ்ச்சிக்கும் அழைப்பதும், குழந்தைகளைக் கூட்டி வந்து நமஸ்கரிப்பதும் போன்ற சின்னச் சின்ன கௌரவங்களும் சந்தோஷங்களுமே அவளை இயங்க வைத்திருக்க வேண்டும். 

எனக்குத் தெரிந்து ஒவ்வொரு ஊரிலும் ஒரு கல்யாணி அத்தை இருந்திருக்கிறார். கண்ணில் படும் யுவதிகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு, நாலு பேரிடம் விசாரித்து, தகவல் தந்து, சிபாரிசு செய்து, அதை ஒரு கடமையாகவே செய்துவந்த இன்னும் சில கல்யாணி அத்தைகளையும் நான் அறிவேன். சிநேகமும் அக்கறையும் பரோபகாரமும் கலந்த தன்மை தொடர் சங்கிலிபோல் சமூகத்துள் பரவியிருந்த நெருக்கமான உணர்வு எனக்கு பரிச்சயமானதுதான். ஏன் என்று தெரியாமல் எல்லோரையும் அந்த உணர்வு இயங்க வைத்தது. கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கானவர்களைக்கூட நெருக்கமான வட்டத்துக்குள் கொண்டுவந்தது.

சில வாரங்கள் கழித்து, நியூ ஜெர்ஸிக்கு திரும்பப் போகும் முன், அத்தையைப் பார்த்துவிட்டு வரப்போயிருந்தேன்; கையில் ஒரு ஜாதகத்தோடு, அமெரிக்காவில் இருக்கிற ஒரு பையனுக்குப் பெண் தேடி! அத்தை அதைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. எடுத்து என்னிடமே கொடுத்துவிட்டாள்.

''இல்லடா சங்கர், நான் இப்ப பொருத்தம் எல்லாம் பார்க்கறதில்லை. முன்ன நின்னு எந்தக் கல்யாணத்தையும் நடத்தறதில்லை. சிபாரிசும் பண்றதில்லை. எல்லாத்தையும் விட்டுட்டேன்'' என்றாள் குரல் தழுதழுக்க... சுருக்கம் விழுந்த முகமும், ஆயாசம் நிரம்பிய கண்களுமாய் அறுபதுகளின் இறுதியில் தளர்வாகியிருந்த அத்தை.

''மாறிப் போச்சுடா... பணம்தான் குறி எல்லாருக்கும். பரஸ்பரம் நம்பிக்கை இல்லை. எல்லாம் புத்திசாலியாயிட்டா. கட் அண்ட் ரைட்டா பேசறா. அப்பா அம்மா கூட இருக்கக் கூடாது, அண்ணா தங்கையோட பொறந்திருக்கக்கூடாது, தான் சம்பாதிக்கற பணம் தனக்குத்தான்னு வியாபாரம் தொடங்க வர்றாப்போல கூடை கூடையா கண்டிஷன் போட்டு எடுத்துண்டு வரா... எங்க வாழ்க்கையை நாங்க பாத்துக்கறம், தள்ளி நில்லுடி கிழவிங்கறாப்பல. முணுக்குன்னா கோச்சுண்டு விலகிப்போயிடறா. விட்டுக்கொடுக்கற எண்ணம் போயே போச்சு. எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்கறாங்க. ஒண்ணா வாழ்ந்து பாக்கறமே, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறமேங்கறாங்க. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் விவாகரத்து பண்ணிட்டு இன்னொருத்தரோட இருந்தா என்ன தப்புங்கறாங்க. கல்யாணத்தைத் தாண்டி சிநேகம் வச்சுக்கறாங்க. புரியலைடா... என்னை மாதிரி அசமஞ்சங்களுக்கு இந்த வேகம் புரிபடலைடா. இந்தத் தலைமுறைக்குப் பெரியவங்க தேவையில்லை. பெரியவங்களோட அனுபவம் தேவையில்லை. எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கறோம், அனுபவிச்சுக்கறோம், பட்டுத் தெரிஞ்சுக்கறோம், அதுதான் உண்மையான வாழ்க்கைங்கறாங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை. நல்ல எண்ணத்தோட நாம ஏதாவது செய்யப் போய் தப்பாப் போச்சுன்னா பழி நம்முடையதில்லையா? அதான், கஷ்டமாயிருக்கு. பண்ண வரைக்கும் போதும்னு விலகிட்டேன்.'' 

அத்தையுடனான அந்த இரவின் நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அன்பும் அக்கறையுமாய் நமக்குள்ளேயே பரவியிருந்த ஓர் அமைப்பு, அதன் அன்னியோன்னியம் விட்டுப்போய், நம்மிடம் இருந்து விடுபட்டு, வியாபார நோக்கத்தாலும் விளம்பரப் பணத்தாலும் உந்தப்படும் சைபர் உலகுக்கு இடம் பெயர்ந்தது எதனால் என்று எனக்குப் புரிந்துபோனது. கல்யாணிகளின் கரிசனத்துக்கு இடம் இல்லாமல் காசின் சுழற்சிக்குள் கட்டப்பட்ட வியாபாரமாய், வெறும் புள்ளி விவரங்களாய் உலகம் பூரா வியாபித்திருப்பது எதனால் என்ற விடை தெரிந்துபோனது.

நான் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு முடிவெடுத்தேன். ஒரு போர்ட்டல் ஆரம்பித்திருக்கிறேன். இணைந்து வாழ முடியாத ஜோடிகளுக்கு என் இணைய தளம் விரைவில் விவாகரத்து வாங்கித் தரும்; நல்ல வழக்கறிஞர்களை அவர்களுடன் இணைக்கும்; அவர்தம் பிள்ளைகளை யார் பொறுப்பில் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கும்; விவாகரத்துக்குப் பிறகான உங்கள் வாழ்க்கையை இன்பகரமாக வாழ யோசனைகள் சொல்லும்; மனச்சுமை அதிகமானவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லும்; தற்கொலை எண்ணங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும்; கல்யாணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ விரும்பும் ஜோடிகளுக்குப் பல பரிந்துரைகள் செய்யும்; மொத்தத்தில், இணக்கம் இல்லாதவர்கள் இணையும் ஒரு தளமாய் அது இருக்கும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் என் இணையதள வியாபாரத்துக்கு ஆதரவு பலப் பல மடங்கு கூடி, பல கோடிகளில் வியாபாரம் பெருகி, பல பில்லியன் டாலர்கள் கொடுத்து வெளிநாட்டு நிறுவனம் விலைபேசத் தயாராய் இருக்கும். என் போர்ட்டலின் வெற்றி குறித்துப் பேச, இதே ஐந்து நட்சத்திர விடுதியில், நகரத்தின் பெரும்புள்ளிகள் கூடி வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பார்கள். அழைப்பு அனுப்புகிறேன். கட்டாயம் வாருங்கள்.

கட்டடத்துக்குள் ஹைவே

பொருத்தம் - சிறுகதை

ட்டடங்கள், வாகனங்கள் பெருகிக்கொண்டிருக்கும் நகரங்களில் சாலைகளை அமைக்கவும், பாலங்கள் கட்டவும் தடையாக இருக்கும் கட்டடங்களை இடித்துவிடுகிறார்கள். ஆனால், ஜப்பானின் ஒசாகாவில் உள்ள ஃபுகிஷிமா என்ற இடத்தில் இருக்கும் ஹைவே நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. 'த கேட் டவர் பில்டிங்' என்ற பெயர்கொண்ட இந்தக் கட்டடத்தில் 5, 6, 7 மாடிகளின் வழியாகவே எக்ஸ்பிரஸ் ஹைவே சாலையை அமைத்திருக்கிறார்கள். 16 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்துக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் பாலத்தை அமைத்துச் சாலையைப் போட்டிருக்கிறார்கள். எலிவேட்டர், படிகள் எல்லாமே இருக்கும். ஆனால், நான்காவது மாடியில் இருந்து நேராக எட்டாவது மாடிக்குச் செல்வார்கள். பூர்வீகச் சொத்து என்பதால் இந்த இடத்தை ஹைவே டிபார்ட்மென்ட்டிடம் கொடுக்க இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் சம்மதிக்காததால், அவரிடம் சமரசம் பேசி இப்படி ஒரு டெக்னிக்கைக் கையாண்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுள்ளது ஜப்பான் அரசாங்கம்.

தொகுப்பு: மல்லிக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு