Published:Updated:

முயல் தோப்பு - சிறுகதை

பாஸ்கர்சக்தி, ஓவியங்கள் ஓவியர்

பிரீமியம் ஸ்டோரி

1960

 அய்யலுவின் உயரம் ஆறடிக்கு மேல் இருக்கும். தோதகத்தி மரம் மாதிரி ஒரு மினுமினுப்பான கறுத்த மேனி; பாதி நரைத்த தலை; நாலு முழ வேட்டியும் லங்கோடும் அணிந்திருப்பார். லங்கோடு பற்றி, இன்றைக்கு ஜட்டி தெரிய பேன்ட் அணியும் நாகரிக இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. லங்கோடு என்பது ஒரு கௌரவமான பாதுகாப்பான உள்ளாடை. தோளில் ஒரு துண்டு, கையில் துரட்டி அல்லது வேல்கம்பு இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் தோப்பில் வேலை செய்யும்போது அழுக்காயிப் போயிரும் என்று வேட்டியையும் அவிழ்த்து வைத்துவிட்டு வெறும் லங்கோடுடன் அவர் வேல்கம்பின் உதவிகொண்டு வேலிக்கு முள் அடைத்துக்கொண்டிருக்கையில், தூக்குச்சட்டியுடன் ஆடு மேய்த்தபடி கடந்து செல்லும் பெண்கள் நாணக் கிளர்ச்சியடைந்து, ''அய்யய்ய! என்னா இது, கரிமுனி மாதிரி நிக்கிறே?'' என்று சொல்லியபடி கடக்க முயன்றால், ''பழனிக்குப் போயிருக்கியா? அங்க முருகனும் இப்பிடித்தானே நிக்கிறான்? கையில என்னைய மாதிரி வேல் வைச்சுக்கிட்டு?'' என்று பெருமிதமாகப் பதில் சொல்வார்.

அப்பாவி, கடும் உழைப்பாளி. அவருக்குப் பூர்விக சொத்தாகக் கிடைத்தது இந்த மலையடிவாரத் தோப்பு மட்டும்தான். கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் எல்லாம் கருத்தாக ஊரடியில் இருந்த மோட்டார் தோட்டங்களையும், கண்மாய்க்கரைப் பாசனத்தின் முதல் மடையில் இருந்த வயலையும் பிரித்துக்கொண்டு அப்பிராணி அய்யலுக்கு இந்தத் தோப்பைக் கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். பஞ்சாயத்துப் பேசி பாகம் பிரித்த பிறகு, அய்யலுவின் மச்சினன் பாண்டி ஊருக்கு வந்தான். சாந்தாம்பாறை ஏலக்காய் எஸ்டேட்டில் கங்காணி அவன். தன்னைத் தவிர யாருக்கும் விவரம் பத்தாது என்பது அவனது திடமான நம்பிக்கை. அதிலும், அய்யலுவைப் பார்க்கும்போதே கண்ணைச் சுருக்கி அலட்சியமாகத்தான் பார்ப்பான். அப்படிப் பார்க்கும்போது அனிச்சையாக அவனது கை மற்றொரு கையில் இருக்கும் மோதிரத்தையோ, வாட்சையோ சுழற்றுவது வாடிக்கை.

முயல் தோப்பு - சிறுகதை

அன்று ஊருக்கு வந்த தம்பியிடம் அய்யலுவின் மனைவி, 'உடம்பொறந்தாங்க’ தனது புருசனின் தலையில் மொளகாய் அரைத்துவிட்டதைச் சொல்லிப் புலம்ப, அவன் தன் பங்குக்கு அய்யலுவை வறுத்தெடுத்தான்.

''நெல்லு, பருத்தி, சோளம், கரும்பு எல்லாம் அவங்கெ நொட்டுவாங்கெ... நீங்க வருசம் பூரா மாங்காயையும், புளியையும் கொண்டாந்து என் அக்காவுக்கு குடுப்பிங்களாக்கும்? என் அக்காக்காரி என்ன வருசம் பூரா மாசமா இருக்கப் போறாளா, அதையே திங்கிறதுக்கு? ஏன் மாமா இப்படிப் பொச கெட்டுப்போய்த் திரியிறீங்க?''

வயசில் சின்னவனான மச்சினன், வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து காலாட்டியபடியே இளக்காரமாக இப்படிச் சொன்னபோதும், அய்யலுவுக்குக் கோபம் வரவில்லை. அவனை நிதானமாகப் பார்த்தார்.

''அந்த ஒரு தோப்பு போதும் மாப்ளே எனக்கு. என் பொழைப்பு அங்கனயே கழிஞ்சு, அங்கனயே முடிஞ்சாலும் கவலையில்லை. அதில இருக்க முக்காவாசி மரம் நா வைச்சது. மோட்டார்ல இருந்து தினம் தினம் ரெண்டு பர்லாங் குடம் குடமா தண்ணி சொமந்து ஒவ்வொரு மரத்தையும் நான் வளத்தேன், தெரியுமா உனக்கு?''

''உங்க அண்ணன் தம்பிககிட்ட ஏமாந்து போனதுக்கு இப்படிச் சப்பைக்கட்டு கட்டறீங்களாக்கும்?''

''இந்த பாரு பாண்டி, எஸ்டேட் கங்காணி வேலை பாக்கிறோம்ங்கிற பகுமானத்தில நீ பேசுற! உனக்கு நான் ஆளு கிடையாது. நாங்க அண்ணன் தம்பிக பிரச்னையில்லாம பாகத்தைப் பிரிச்சுக்கிட்டோம். நடுவில வந்து நாரதர் வேலை பாக்கிற சோலியெல்லாம் வேணாம். ஏலக்காய் ஏதும் கொண்டாந்தியா?''

பாண்டி கடுப்புடன், ''ஏலக்காய் என்ன ஒங்களுக்கு அம்புட்டு ஈஸியாப் போச்சா? கிலோ என்னா வெலை தெரியுமா? எடுத்த காயெல்லாம் ஸ்டோர்ல இருக்கு. சாம்பிராணி போட்டு காவலுக்கு ஆள் நிக்குது. ஒரு காய் கொண்டுவர முடியாது.''

''கொண்டாந்திருந்தீன்னா உங்கக்காகிட்ட சொல்லி பாயசம் வைக்கச் சொல்லலாம்னு பாத்தேன். எஸ்டேட் கங்காணின்னு சொல்றே! ஒரு நா ஒரு பொழுது கைப்பிடி ஏலக்காய் கொண்டுவந்திருக்கியா நீயி? ஆனா, மோதிரத்தை திருகிக்கிட்டே பேச்சு மட்டும் பேசுறே!''

பாண்டிக்கு முகம் சிவந்தது. ''அது என்னா உங்க பீத்தைத் தோப்புல வெளையிற மாங்காய், புளியங்காய் மாதிரியா? பவுனு மாமோவ், பவுனு! அரேபியாவுக்கு எக்ஸ்போடு ஆகுது. ராவுத்தமாருங்க ஏலக்காயை வாங்கிட்டுதான் நம்மளுக்கு பெட்ரோல் தர்றாங்க, தெரியுமா? சரி சரி, எதுக்கு இப்ப அந்தப் பேச்சு? நான் வந்த சோலியைச் சொல்லிர்றேன். கிழக்க இருக்க மோட்டார் தோட்டத்தில உங்களுக்கு பாதிப் பங்கு வாங்கித் தரணும்ணு அக்கா சொல்லுது. என் அய்டியாவும் அதுதான். இந்தத் தோப்புல வர்ற மாங்காய், புளியங்காயை மட்டும் வச்சு என்னா பண்ணுவீங்க? வாங்க என்கூட, உங்க சின்ன அண்ணன் கிட்ட பேசுவோம். இந்தத் தோப்பில பாதியை அவருக்குக் குடுத்துட்டு தோட்டத்தில பாதியைக் கேப்போம்.''  

''யாரு... உன் அக்கா சொன்னாளாக்கும்? அதெல்லாம் பாகம் பிரிச்சு முடிச்சாச்சு. நீ வெட்டி வேலை பாக்காம கிளம்பு. என் தோப்பில ஒரு மரத்தைக்கூட நான் விட்டுத்தர மாட்டேன். எனக்கு தோப்புதான் வேணும்.''

''மோட்டார் தோட்டத்தில ஆறு குழி வேணாமா உங்களுக்கு?''

''வேணாம் பாண்டி. எனக்கு என் தோப்பு ஒண்ணு போதும்.''

பாண்டி கடுப்பாகிப் போய், அக்காவிடம் 'உன் புருசன் ஒரு கேனப்பய’ என்று கத்திவிட்டு, ''நாளைப் பின்ன எம்புருசனுக்குப் பொழைக்கத் தெரியல, எனக்கொரு வழி சொல்லுன்னு பொலம்பிக்கிட்டு வந்து நிக்கிற சோலியெல்லாம் ஆகாதுக்கா. இப்பவே சொல்லிட்டேன்'' என்று சொல்ல, கோபமான அய்யலு, ''ஏய்! நீயொரு ஆளுன்னு ஒரு காலத்திலயும் உன்கிட்ட வந்து நிக்க மாட்டோம்டா! போய் சோலியைப் பாரு!'' என்று சத்தம் போட, ''இதுக்கு மேல நான் பேச மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு பாண்டி, எஸ்டேட்டுக்குக் கிளம்பிவிட்டான். பொண்டாட்டிகாரி மூலையில் உக்காந்து மூக்கைச் சிந்துவதைக் கண்டுகொள்ளாமல் அய்யலு, தொரட்டியும் வேல் கம்புமாகக் கிளம்பிவிட்டார்.

அய்யலுவுக்கு அந்தத் தோப்பு அம்மாவின் மடி மாதிரி. அதற்குள் நுழைந்து விட்டால் போதும், மனசுக்குள் ஒரு பூரிப்பு வந்துவிடும். கிட்டத்தட்ட இருபது குழி அளவுக்குப் பரந்து விரிந்த தோப்பு. மாவும் பலாவும் புளியும் தேக்கும் தவிர, வேப்பங்குட்டிகளை நிறைய இடங்களில் வைத்திருந்தார். அவர் மரம் வைத்து வளர்க்கும் அம்சத்தை ஊரில் எல்லோரும் மூக்கில் விரல் வைத்து மெச்சுவார்கள். மரம் நடுவதற்கென்று பஞ்சாங்கம் பார்த்து, மேல் நோக்கு நாளாகத் தேர்ந்தெடுப்பார். முன்கூட்டியே குழிகளை வெட்டி ஆறப் போட்டு, எரு சாம்பல் எல்லாம் இட்டுத் தயார் நிலையில் வைத்திருப்பார். வெயில் காலம் முடிந்து ஆடி மாத வாக்கில் காற்றும் சாரலும் துவங்கும். அந்தச் சமயத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தால், அழகாக வேர்பிடித்து வளரத் துவங்கும். அதன் பின் மழைக்காலம். தண்ணி ஊற்றும் கவலையில்லை. கோடையின்போதுதான் கொஞ்சம் சிரமம். மோட்டார் தோட்டங்களில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து, சலிக்காமல் தினமும் ஊற்றுவார். அடிமரத்தைச் சுற்றிலும் வைக்கோலையும் இலைகளையும் போட்டு, ஊற்றிய நீரின் ஈரப்பதம் மண்ணில் குறையாமல் பார்த்துக்கொள்வார். இப்படி ஒவ்வொரு மரத்தையும் பிள்ளை வளர்ப்பதைப்போல் பார்த்துப் பார்த்து வளர்த்து, அந்த தோப்புதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டிருந்தது அவருக்கு. நல்லது பொல்லாததுக்கு வெளியூருக்குப் போனால்கூட, ராத்திரி தங்க மனசு வராது. விடியக்காலம் வெளிச்சம் வருவதற்கு முன் தோப்புக்குப் போயாகணும். அந்த மரங்களில் இருக்கிற குருவி, காக்காய், மைனா, கிளி ஆகிய பறவைகளும், பூச்சிகளும் போடும் சத்தத்தைக் கேட்டாகணும். வேலியைச் சுத்திக் காலாற நடந்து வரணும். அப்பத்தான் மனசுல ஒரு சந்தோசம் வரும் அவருக்கு.

தோப்பை ஒட்டி பிரமாண்டமான கரடு ஒன்று இருந்தது. முட்செடிகளும் புதர்களுமாய் பெருமரங்கள் அதிகமின்றி, ஆனால் பச்சை போர்த்திய கரடு. ஏகப்பட்ட நரிகளும் முயல்களும் பாம்புகளும் வளைய வரும் இடமாக அது இருந்தது. அய்யலு அடிக்கடி பெரிய பாம்புகளைத் தோப்பில் பார்ப்பார். அடிக்க முயலமாட்டார். ''அதுபாட்டுக்குப் போயிரும் கழுதை, அது இல்லாத எடத்திலயா நாம இருக்கோம்?'' என்று சிரித்தபடி சொல்வார். பாம்புகள் தவிர, அங்கு அதிகம் புழங்குவது முயல்கள். அய்யலு மரங்களினூடாக கம்பு, சோளம், மொச்சை, எள்ளு போன்றவற்றை மானாவாரியாக விதைத்துவிடுவார். எனவே, எப்போதும் தோப்புக்குள் பசுமை பூத்திருக்கும். அதனால் முயல்கள் கரட்டில் இருந்து இறங்கி தோப்புக்குள் வந்து சுற்றித் திரியும்.

முயல் தோப்பு - சிறுகதை

அய்யலு முயல்கள் பிடிக்கக் கண்ணிகள் செய்வதில் வல்லவர். மாட்டின் வால் முடியைக் கற்றையாகத் திரித்து, அதனைக் கொண்டு சுருக்குகள் செய்வார். தோப்பைச் சுற்றிலும் நெருக்கமாக வேலி அடைத்துவிட்டு, வேண்டுமென்றே சில இடங்களில் முள் மரங்களின் கொப்புகளை உடைத்து, பொடவு மாதிரியான பாதைகளை உருவாக்குவார். அவற்றின் வழியே முயல்கள் தோப்புகளுக்குள் வந்துபோவதை உறுதி செய்த பிறகு, இவர் தயார்பண்ணும் கண்ணிகளை அந்தப் பாதையில் சாயங்கால நேரத்தில் தொங்கவிட்டு விடுவார். தூக்குக் கயிறுகளைப்போல அவை அந்தப் பாதையில் தொங்கும். ''நம்ம தோப்புதானே! உள்ள போய் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்'' என்று யதார்த்தமாக இரவுகளில் வரும் முயல்கள் கண்ணிகளில் சுலபமாக மாட்டிக்கொள்ளும். ஆரம்பத்தில் சும்மா வைச்சுப் பாக்கலாமே என்று சாதாரணமாகத்தான் கண்ணி வைத்தார் அய்யலு. ஆனால், தினப்படி முயல்கள் மாட்ட ஆரம்பித்தன. அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து தோப்புக்குப் போய்விடுவார். எட்டு மணி வரைக்கும் வேலை செய்துவிட்டு, கையில் ஒன்றிரண்டு முயல்களுடன் திரும்பும் அய்யலுவை எல்லோரும் வியப்பாகப் பார்ப்பார்கள். பெண்கள் கேலி செய்வார்கள்.

''என்னா மாமா பெத்து தூக்கிட்டு வார மாதிரி நெதமும் மொசக்குட்டியோட வார?''

''ஆமா, மொசப் புடிக்கிற நாயி மூஞ்சியைப் பாத்தா தெரியாதான்னு இனி எவளாச்சும் மாமனை கேலி பண்ண முடியுமா?''

''சரி, இந்த மொசலை எனக்குத் தாரியா?''

''அதெப்பிடி? வீட்டுல எம்பொண்டாட்டி மசால் அரைச்சு ரெடியா இருப்பா இன்னைக்கு இதான கொழம்புக்கு?''

''காசு செலவில்லாம கவுச்சியா நெதமும் திங்கிறே? யோகக்காரன் மாமா நீயி. சரி, இன்னைக்கு வேணாம். நாளைக்கு எனக்கு ஒரு மொசல் கொண்டாறியா?''

''ரொம்ப ஆசையா இருந்தா, இன்னைக்கே என் வீட்டில வந்து தின்னு!''

''அதுக்கில்ல, மொச ரத்தத்தைத் தேய்ச்சா முடி நல்லா கருகருன்னு நீளமா வளருமாம்ல? அதுக்குதான். எனக்கு அப்பப்ப மொசல் கொண்டாந்து குடுக்கிறியா?''

''அதுக்கென்னா? குடுத்துருவோம்''

அய்யலுவிடம் நிறையப் பெண்கள் முயல் கொண்டு வரும்படி கேட்க ஆரம்பித்தார்கள். பல பேரின் வீட்டில் அவ்வப்போது முயல் கறி குழம்பில் கொதிக்க, அந்த வீட்டுப் பெண்கள் முயல் ரத்தத்தைத் தலைக்குத் தேய்த்து, பாஞ்சாலி மாதிரி அள்ளி முடிந்துகொண்டார்கள்.

அய்யலு இதுபோல் தரும் முயல்களுக்குக் காசெல்லாம் வாங்குவதில்லை. இருந்தாலும், சில பேர் கொஞ்சம் காசு கொடுத்தார்கள். தட்டமுடியாமல் வாங்கிக் கொண்டார். அதுவரை அய்யலு தோப்பு என்று இருந்த பெயர் மாறி அந்தத் தோப்புக்கு முயல் தோப்பு என்று பெயர் வந்துவிட்டது. சுற்று வட்டாரமெல்லாம் முயல் தோப்பு என்றே அடையாளம் சொன்னார்கள். ''முயல் தோப்புல மாம்பழமும் புளியம்பழமும் தரும் வருமானத்தைவிட, அய்யலுப் பய முயல் வித்து சம்பாரிக்கிற காசு ஜாஸ்தியா இருக்கும் போலயே!'' என்று ஊர்ப் பெரிசுகள் நக்கலாகப் பேசிச் சிரித்தார்கள்.

இப்படியான கேலி கிண்டல் எல்லாம் அய்யலு காதிலேயே விழாது. அவர் நேரங்காலம் பார்க்காமல் தோப்பே கதியென்று கிடந்து, சிறுகச் சிறுகக் காசு சேர்த்து, ஒரு தோட்டம் ஒத்திக்கு வாங்கினார். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. ஆண் வாரிசு வேண்டுமென்று குலசாமி கோயிலுக்கு நேர்ந்துகொண்டார். ரெண்டு மாசத்திலேயே அவர் சம்சாரம் கர்ப்பமானாள். இது நிச்சயம் ஆம்பளைப் புள்ளைதான் என்று நம்பிக்கையில் அவர் இருக்கையில்தான், அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அன்று கண்ணி வைக்கையில், மாட்டு வால் ரோமம் சிக்காமல், வேலியில் கட்டப் பயன்படுத்தும் மெல்லிய இரும்புக் கம்பிகளைக் கொண்டு, சில கண்ணிகளைத் தயார் செய்து, வழக்கம்போல் பொழுது சாய வேலிப் பொடவுகளில் மாட்டி வைத்துவிட்டு வந்தவர், மறுநாள் காலையில் போய்ப் பார்த்தார். ஒரு முயல் முன்னங்கால்களைக் கண்ணியில் விட்டு மாட்டிக்கொண்டு, குழந்தை போல் விழித்துக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்துச் சிரித்துவிட்டு மற்றொரு பொடவைப் போய்ப் பார்த்தவருக்கு மனசு சுருக்கென்றது.

இவர் மெல்லிய இரும்புக் கம்பியால் செய்து தொங்கவிட்ட கண்ணியில் அது தலையை விட்டிருக்கவேண்டும். சுருக்கு இறுகி, கழுத்துக்குள் கம்பி ஆழமாகப் பதிந்து, ரத்தம் வழிந்து அந்த முயல் செத்துப் போயிருந்தது. இதுவரை அய்யலுவின் கண்ணியில் மாட்டிய முயல்கள் உயிரோடுதான் மாட்டி இருக்கின்றன. முதன்முதலாக செத்துப் போன முயலைப் பார்த்ததும், அய்யலுவுக்கு உள்ளுக்குள் லேசாகப் பதறியது. மண்டியிட்டு வேலியினருகில் அமர்ந்தார். முயல் தப்பிப் போக நினைத்து, வெகுவாகப் போராடியிருக்க வேண்டும். கீழே தரையைக் கீறி ஒரே ரத்தமும் புழுதியுமாக இருந்தது. அய்யலு மெதுவாகக் கண்ணியை அகற்றி, அந்த முயலை எடுத்தார். அவர் உடல் லேசாக நடுங்கியது. அந்த முயலின் வயிறு சற்றே பெரிதாக இருக்க, நடுக்கம் மாறாமல் அய்யலு அதன் வயிற்றைத் தடவினார். உள்ளே இருக்கும் உயிரை அவரால் உணர முடிந்தது.

அந்த முயல் கர்ப்பமாக இருக்கிறது. அய்யலுவுக்கு தேகமெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்க, கண்களில் அவரையும் அறியாமல் நீர் பெருகியது. 'எப்பேர்ப்பட்ட கொலை பாதகத்தைப் பண்ணிட்டேன் நானு?’என்று தலையில் கைவைத்து உட்கார்ந்தார். பிள்ளைத்தாய்ச்சியாக இருக்கும் மனைவியின் ஞாபகம் வந்தது. ''வாயில்லா ஜீவனை வகுத்துல குட்டியோட இருக்கும்போது கொலையாக் கொன்னுட்டேனே? இந்தப் பாவம் என் பொண்டு புள்ளையைத் தண்டிச்சிராதா? ஆண்டவனே, முருகா... இப்படி ஆய்ப்போச்சே!'' என்று வாய்விட்டுப் புலம்பினார். வெகு நேரம் அந்த முயலின் அருகே அமர்ந்திருந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, மண்வெட்டியை எடுத்தார். தோப்பின் ஈசான்ய மூலையில் ஒரு குழியை வெட்டினார். அதில் அந்த முயலைப் புதைத்தார். புதைத்த இடத்தில் ஒரு சிறிய மேட்டை உருவாக்கினார். ஒரு கல்லை நட்டார். வேலியோரம் வளர்ந்திருந்த காட்டுப்பூக்களைப் பறித்து வந்து அதன் மீது தூவி, மனமுருகி வணங்கினார்.

''தெரியாம நான் பண்ண இந்தக் கொடுமையை மன்னிச்சிரு. சாகும்போது நீ வயித்துல குட்டியோட துடிச்ச பாவம் என் குடும்பத்தை பாதிச்சிரக் கூடாது, பொறக்கப் போற எம் புள்ளைக்கி உம்பேரை வைக்கிறேன்.''

வணங்கிவிட்டுச் சென்று, வேலிகளில் தான் மாட்டியிருந்த எல்லாக் கண்ணிகளையும் அகற்றி தூர எறிந்தார். ''இனிமேல் இந்தத் தோப்பில் முயலுக அதுபாட்டுக்கு வந்து மேயட்டும்; விளையாடட்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வீடு நோக்கி சஞ்சலத்துடன் நடந்தார். இவர் வெறுங்கையுடன் வந்ததை  மனைவி ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

''என்ன... கையில மொசல் ஒண்ணையும் காணம்?''

''இனிமே மொசல் புடிக்கிறதா இல்ல''

''ஏன்? திடீர்னு என்னா வந்துச்சு?''

அய்யலு பதில் எதுவும் சொல்லாமல், சூல் கொண்ட மனைவியின் வயிற்றைப் பார்த்தார். அருகே போய்த் தொட்டுப் பார்த்தார்.

''அடச்சீ ! கிறுக்கு மனுசா! என்னாவாம் இன்னைக்கி?''

அய்யலு கலங்கிய குரலில் நடந்ததைச் சொல்ல, மனைவி பீதியுடன் அவரது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

அவர் ஆறுதலாக, ''கவலைப்படாத! நான் அந்த சீவன்கிட்ட மனசார வேண்டியிருக்கேன். நீயும் நாளைக்கித் தோப்புக்கு வந்து கும்புட்டுக்க!''

அடுத்த நாள், புருசனும் பொண்டாட்டியும் தோப்புக்கு வந்து முயலைப் புதைத்த இடத்தில், பூ வைத்துக் கும்பிட்டார்கள்; வேண்டிக்கொண்டார்கள்; ''புள்ளை நல்லபடியா பொறந்தா உம் பேர்தான் அவனுக்கு'' என்று கம்மிய குரலில் மறுபடியும் சொன்னார் அய்யலு.

இரண்டு மாதங்கள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம்.

முயல் தோப்பு - சிறுகதை

2007

''அருமையான இடம். பக்கத்துல பத்து கிலோமீட்டர்ல இன்ஜினீயரிங் காலேஜும், நர்ஸிங் காலேஜும் வந்தாச்சு! ஸோ... ப்ளாட் போட்டு வித்தா, ஈஸியா ஸோல்ட் அவுட் ஆயிரும். இதான் லே அவுட். நம்ம இன்ஜினீயர் நாகராஜ்தான் போட்டிருக்காப்ல!''

''எவ்வளவு ஏரியா?''

''பத்து பத்தேகால் ஏக்கர் இருக்கும்.''

''பார்ட்டி யாரு?''

''அஸ்வின்னு சென்னையில ஸாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றாப்ல. சென்னையில சொந்தமா வீடு வாங்கப் போறாப்லயாம். அதனால இந்த இடத்தைத் தட்டி விடற யோசனையில இருக்காரு.''

''முடிச்சிரலாம். ஐஸ்வர்யா நகர்னு பேர் வைச்சிரலாமா?''

''சார். அந்த ஊர்ல அந்த இடம் முயல் தோப்பு, முயல் தோப்புன்னு ஜனங்க மத்தியில ஃபேமஸா இருக்கு. அதனால முயல் தோப்பு காலனின்னே பேரு வைச்சுக்கலாம்.''  

''ம்... முயல் தோப்பு! இந்தப் பேர்கூட கேட்ச்சியாத்தான் இருக்கு. சரி, டாக்குமென்ட் எல்லாம் சரியா இருக்கான்னு வில்லங்கம் பாத்தாச்சா?''

''பாத்தாச்சு சார்! இந்தா, படிச்சுப் பாருங்க.''

''ம்... அஸ்வின் சன் ஆஃப் முயல்ராஜா! என்னய்யாது... முயல்ராஜான்னு பேர் இருக்கு? இப்படில்லாம்கூட பேரு வைப்பாங்களா?''

''ஆமா சார், அஸ்வினோட அப்பா பேரு முயல்ராஜா. தாத்தா பேரு அய்யலு. அது என்னமோ, இப்படி ஒரு பேர் வைச்சிருக்காப்ல!''

''முயல் தோப்பு, முயல்ராஜான்னு காமெடியான குடும்பமா இருக்கும் போலிருக்கே. சரி, யார் யார் வாரிசு? எல்லார்கிட்டயும் சைன் வாங்கிரணும். பிரச்னை வந்துரக் கூடாது.''

''சார், அய்யலு இறந்துட்டாரு. அவரு மகன் முயல்ராஜா பேர்லதான் தோப்பு இருக்கு. அவரு பராலிடிக் ஸ்ட்ரோக்ல கிடக்காரு. அஸ்வின்தான் பார்ட்டி. அப்பாகிட்ட நான் சைன் வாங்கித் தர்றேன், ஏற்பாடு பண்ணுங்க; வித்தே ஆகணும்னு அவசரப்படறாப்ல!''

''ஓகே! பிரச்னை இல்லைன்னா சரிதான். ரெஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.''

அடுத்த ஒரு மாதத்தில், ''முயல்தோப்பு காலனி. நியாயமான விலையில் வீட்டு மனைகள் கிடைக்கும். முந்துங்கள்'' என்று தேனி மாவட்ட பேப்பர்களில் விளம்பரம் வந்தது.

சென்னையில், அஸ்வின் டபுள் பெட்ரூம் அபார்ட்மென்ட் தேடி அலைய ஆரம்பித்தான். அஸ்வினின் மனைவி குழந்தைக்கு R for Rabbit   என்று பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு