Published:Updated:

நான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை
நான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை

பிரபஞ்சன் - ஓவியங்கள் அனந்த பத்மநாபன்

பிரீமியம் ஸ்டோரி
நான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை

மூர்த்தியின் பார்வையில் அவள் தட்டுப் பட்டாள்.

அந்தியூருக்குப் போக எனத் தன் மகனுடன் ரயிலடியில், ரயில் வருகைக்காக அவன் நின்றிருந்தான். அவன் பார்வை அந்த பிரமாண்ட அரச மரத்தில் லயித்திருந்தது. அதன் கைகள் வானத்துக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தன. கிளையில் ஒற்றை மயில் உட்கார்ந்து எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்த ஊரில் மயில்கள் அதிகம்தான். மயில்களுக்கு விஷம் வைத்துக் கொல்பவர்களும் அதிகமாகிக்கொண்டிருந்தார்கள். மயிலைப் பார்த் துக்கொண்டிருந்த அவன் பார்வை தாழும்போதுதான், அவள் அவன் கண்களில் பட்டாள். பக்கவாட்டில் அரை முகம் மாத்திரம் தெரிய, ரயில் வரும் திசையைப் பார்த்தபடியிருந்தாள். அவள் பக்கத்தில் ஓர் இளம் பெண். அவள்தானா அது? அவள் தன் பக்கம் திரும்புவாள் என்று எதிர்பார்த்து அவன் காத்திருந்தான். அவள் திரும்பி னாள். இவன் முகத்தில் நிலைத்தது அவள் பார்வை. புருவம் சுருங்கியது. அவள் முகம் தெளிந்தது. லேசாகப் புன்னகைத்தாள் சுமதி.

மூர்த்தியை ஓர் அதிர்வலை ஊடுருவியது. சுமதி இப்போது அவளைப் போலிருந்த அந்த இளம்பெண்ணுடன் அவனை நோக்கி வந்தாள். அவன் அருகில் வந்து நின்று, ''நல்லா இருக்கீங்களா?'' என்றாள். இருப்பதாகத் தலை அசைத்தான் அவன்.

''இவ என் பொண்ணு. அந்தியூர் காலேஜ்ல சேரப் போறா. கம்ப்யூட்டர் சயின்ஸ்...''

''ஓ..! இது என் பையன். இவனும் அதே காலேஜ்ல சேரப் போறான். இவனும் அதே கோர்ஸ்தான்..!''

''அப்படியா, குட்!'' என்றாள் சுமதி. தன் மகளிடம், ''உனக்குச் சொல்லி இருக்கேன்ல, நான் அந்தியூர்ல கொஞ்ச காலம் வேலை பார்த்தேன்னு. அப்போ இவர் பழக்கம். இவரோட நெருங்கின நண்பர் கோபி என் ஆபீஸில் வேலை பார்த்தார். கோபியைப் பார்க்க இவர் என் ஆபீஸுக்கு வருவார். அப்போ அறிமுகம்...''

சாமர்த்தியமான, பாதுகாப்பான பொய். சுமதியின் அலுவலகத்தில் மூர்த்தி பணியாற்றியதில்லை. அவள் அலுவலகத்தில் அவனுக்கு நண்பனும் இல்லை. இப்போது மூர்த்தியின் முறை.

''தம்பி, என் ஆபீஸ்ல ரீட்டான்னு ஒருத்தங்க வொர்க் பண்ணாங்க. அவங்களைப் பார்க்க இவங்க வருவாங்க. அப்போ பழக்கம்!''

பெண்ணும் பையனும் தலையசைத்துக் கொண்டார் கள். 'ஹலோ’ சொல்லிக்கொண் டார்கள்.

வண்டி புறப்படும்போது, நேர் எதிரில் அமர்ந்திருந்த சுமதி, ஜன்னல் வழியாகக் குனிந்து அந்த மரத்தைப் பார்த்தாள். பிறகு, சில நிமிஷங்கள் அமைதியாக இருந்தாள். பின்பு, மூர்த்தியிடம் சொன்னாள்... ''ரீட்டா அடிக்கடி சொல்வா, இந்த அரச மரம் பேய்த்தனமா வளர்ந்துடுச்சுன்னு. முன்னே சோப்புப் பெட்டி மாதிரி கச்சிதமா இருந்தது. இப்போ, பெரிய சூட்கேஸ் மாதிரி ஆகிடுச்சி. ரீட்டாவும் கோபியும் இங்கேதான் முதல்ல சந்திச்சதா சொல்வாள். இந்த மரத்தடியில்தான்...''

மூர்த்தி, சுமதியை முதன்முதலாக இங்குதான் சந்தித்தான். இளம் நீல வண்ணச் சேலை. இடைதாண்டியும் பரவிய கூந்தல் நனைத்த முதுகுடன், அலுங்காமல் எழுதிய சித்திரம் போல அவள், கையில் பையுடன் ரயிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள். வண்டி வந்து நின்றவுடன், இடித்துப் பிடித்து ஏறாமல், கடைசியாக, நிதானமாக ஏறி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்த கம்பீரம் அவனுக்குப் பிடித்திருந்தது.

அன்றும் அவள் நீலத்தில்தான் இருந்தாள். ஆனால், இது வேறு நீலம். வாரத்தில் மூன்று நாட்கள் புடவையும், மூன்று நாட்கள் சுடிதாரும். ஆனால், எல்லாம் ஏதோ ஒரு வகையில் நீலமாக இருந்தன. ஒரு கணக்கு அவனுக்குப் பிடிபட்டது; ஒரே புடவையை மறுதரம் கடந்த இருபது நாட்களில் கட்டவில்லை என்பது.

''உங்கள் நண்பர் கோபி எப்படி இருக்கிறார்? அலுவலகம் மாறுதல் வந்த பிறகு, அவரை நான் சந்திக்கவில்லை. அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எப்படி இந்த விதம் இருக்க முடிகிறது மனிதர்களால்?''

கோபி என்று தன்னைத்தான் அவள் சொல்கிறாள் என்பதை மூர்த்தி அறிவான்தான். அவன் மௌனமுடன் ஜன்னல் வழி வெளியே பார்த்தான். எங்கு நோக்கினும் பூமி வறண்டு இருந்தது. பசும்புல் அரிதாகிக்கொண்டிருந்த வாழ்க்கை. அவன் சொன்னான்...

''அவன் எத்தனையோ சங்கடத்தில் இருந்திருக்கலாம். சில பேர் மனித உருவில் பிறந்தாலும் கால் பந்தாகவே வாழ நேர்கிறது. யார் யார் காலிலோ உதைபட்டு, உருண்டு புரண்டு வாழும் வாழ்க்கை. கோபியும் அப்படி இருந்திருக்கலாம். ரீட்டா எப்படி இருக்காங்க?''

சுமதி தன் பெண்ணைப் பார்த்தாள். அவள் ஏதோ தடிமனான புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். பையன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

''இருக்கா. சந்தோஷமா இருக்காளா, துக்கமா இருக்காளானு அவளுக்கே தெரியலை. வேலை, வீட்டு வேலை, சமையல், குழந்தை, பஸ் பயணம்... உட்கார்ந்து யோசிக்க நேரம் இல்லையாம்.''

தன்னைப் பற்றிச் சொல்லி முடித்த சுமதி கேட்டாள்... ''கோபிக்கு எத்தனைக் குழந்தைகளாம்?''

''ஒன்று. இவன் போல!''

பையன் திரும்பி இவர்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் வேடிக்கையில் ஆழ்ந்தான்.

''ரீட்டாவுக்கு?''

''ஒன்று. இவளைப் போல!''

மூர்த்தி ஒருநாள் மாலை சுமதியைப் பின்தொடர்ந்து, அவள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான்.

நிறைய தெருக்களைக் கடந்து அவள் சென்றாள். ஏதோ ஒரு கடையில் பால் பாக்கெட் வாங்கி பையில் வைத்துக்கொண்டு, வெளிப்பட்டு நடந்தாள். வரிசையாக எருமைகள் கட்டி இருந்த தெருவைக் கடந்தாள். பாதித் தெருவை எருமைகள் நிறைத்திருந்தன. சில நின்றும் சில படுத்தும் கிடந்தன. எருமைகள் இவனையோ அவளையோ பார்க்கவில்லை. குடிசைப் பகுதியில் நின்று, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அகலமான வாயிலுக்குள் புகுந்து மறைந்துபோனாள். தரைப் பகுதியுடன் மூன்று மாடிகளைக்கொண்டது அந்தக் குடியிருப்பு. வண்ணம் அடித்துப் பல்லாண்டுகள் ஆகிப் பழசாகிப்போன வீடுகள். பெரும்பாலான வீடுகளின் கம்பி அழிக்குப் பின்னால் துணிகள் காய்ந்தன.

தவறாமல், டீக்கடையும் எதிரில் இருந்தது. டீக்குச் சொல்லிவிட்டு, ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு, எதிர் குடியிருப்புகளையே கவனித்துக்கொண்டு இருந்தான். அவள் தலை தட்டுப்பட்டுவிடும் என்று நம்பினான். டீ குடித்து, மீண்டுமொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, அதுவும் முடிந்தும் அவள் தலை தட்டுப்படவில்லை.

மறுநாள், அதே டீக்கடைக்குச் சரியாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான். இதற்காகக் காலை ஐந்து மணிக்கு எழுந்தான். இரவு பத்துக்கும் காலை ஐந்துக்கும் இடையே நான்கு தடவை திடுக்கிட்டு எழுந்து மணியைப் பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துக்கொண்டான். ஏழு மணிக்கு டீக்கடையில் வந்து அமர்ந்தான். ரயில் நேரம் எட்டுப் பத்தாக இருந்ததால், எப்படியும் ஏழு முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவள் புறப்படக் கூடும். அவன் இரண்டு டீக்களும் நாலு சிகரெட்டும் முடித்த பிறகு, அவள் வெளிப்பட்டாள்.

அன்றும் ஒரு நீல ஆடையில்தான் இருந்தாள். ஆறரை மணியைக் காட்டும் கடிகார முட்கள் போல நேராக, தடுமாற்றம் பதற்றம் எதுவும் இன்றி அவள் நடந்தாள். ரயிலுக்குப் போதுமான நேரம் இருந்தது என்பது அவள் நடையில் தெரிந்தது. இட, வலது பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்தலோ, குனிந்து தரையைப் பார்த்தலோ இன்றி, தோளில் மாட்டிய பையோடு அவள் நடந்தாள். இடையில் ஓரிடத்தில் நின்று, சிவப்பு பெயின்ட் அடித்த  தபால் பெட்டியில் கடிதம் போட்டாள். மீண்டும் அதே ஆறரை முட்கள் மாதிரி...

சுமதி கேட்டாள்... ''கோபிக்கு என்னவோ உடம்புக்குப் பெரிசா பிரச்னை வந்ததாமே? அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள். என்ன அது?''

''பாரிச வாயு என்பார்களே, அது. பாதி உடம்பு செயலற்றுப் போயிற்று. படுக்கையிலே இரண்டு வருஷங்கள் இருந்தான். எழுந்து நடமாடும்போது, இடது கை விளங்காமல் போயிற்று. ஆனால், பிழைத்தது அதிசயம் என்றார்கள் டாக்டர்கள். தாய், தந்தை அறியாத அனாதை இல்லத்தில் வளர்ந்தவன்தானே அவன்? ஆனால் மனிதர்கள், முக அறியாத மனிதர்கள் யார் யாரோ வந்து அவன் தலையணைக்குக் கீழே பணம் வைத்துப்போனதும், அவன் விரைவில் குணமாக வேண்டும் என்று நினைத்ததும்தான் அவன் பிழைத்து மனிதனாக வாழ்வதற்கான காரணம். பலமுறை தட்டுத் தடுமாறி அந்த மருத்துவமனையின் ஏழாவது மாடி உச்சிக்கு அவன் போனானாம்...''

நான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை

''எதற்கு?''

''தற்கொலை செய்துகொள்ளத்தான். ஆனால், முடியாமல் திரும்பி இருக்கிறான்.''

மூர்த்தியின் கண்கள் கலங்கி இருந்தன. அவள் கண்களும்.

''ரீட்டாவுக்கு இது தெரியாது.''

''தெரிந்தாலும் என்ன செய்ய முடியும்? அவரவர் சிலுவையை அவரவர்தான் சுமக்க வேண்டும். ஒரு கை - இடது கை செயலற்றதுதான் மிச்சம்.''

அவன் தொடர்ந்தான்... ''மனிதர்கள் இருக்கிறார்கள். அதே கம்பெனி அவனை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டது.''

சுமதி சொன்னாள்... ''எல்லோர்க்கும் ஒரு சிலுவை இருக்கிறது சுமக்க!''

ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவன் அந்த டீக்கடைக்கு வந்தான். அந்தத் தெரு நாய்கள் அவனுடன் பழகிவிட்டிருந்தன. தொடக்க காலத்தில் அவனைக் கண்டு குரைக்கத்தான் செய்தன. பேட்டை விட்டுப் பேட்டை வந்து என்னடா காதல் என்பதாக அவை நினைத்தன. நாளடைவில் அவனை மன்னித்துவிட்டன. அதிசயம் போல அவன் டீக்கடைக்கு வந்த சிறிது நேரத்தில் சுமதி வெளிப்பட்டு, தெருவில் இறங்கி நடந்தாள். அவசரம் அவசரமாகச் சில்லறையைக்கூட வாங்காமல் அவனும் தொடர்ந்தான். ரயிலடியை ஒட்டிய காபி ஷாப் வரை போய் நின்றவள், திரும்பி இவனைப் பார்த்தாள். தலையசைத்து காபி ஷாப்பில் நுழைந்தாள். விதிர்விதித்துப் போனான் மூர்த்தி. குப்பென்று வியர்த்தது. தப்பிக்க முடியாமல் அவளைத் தொடர்ந்து சென்று, அவள் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

''நிறைய டீ சாப்பிடாதீங்க, சார்! உடம்புக்கு அது நல்லதில்லை''

என்ன பாவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் விழித்தான் அவன்.

''என்னோடு சினேகமாக விரும்பறீங்களா?''

''ஆமாம்.''

காபி சொன்னாள்.

''சினேகமாக இருக்கலாமே! அது தப்பில்லை...''

அவன் மேசை மேல் வரைந்திருந்த பூச்செடியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவளும் அதைப் பார்த்தாள்.

''எனக்கு நண்பர்கள் பிடிக்கும். சினேகம் பிடிக்கும். ஆனால், சினேகத்தை வேறொன்றின் முன் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது எனக்குப் பிடிக்காது. எல்லாமே இயல்பாக இருக்க வேண்டும்.''

''சரி!''

''இன்னும் இயல்பு நிலைக்கு நீங்கள் திரும்பவில்லை. பரவாயில்லை. டீக்

கடைக்காரர் முதல் ஆட்டோக்காரர்கள் வரை, எங்கள் குடியிருப்பில் உள்ள சில பேர்களுக்குக்கூட நீங்கள் எதற்காக எங்கள் தெருவுக்கு வருகிறீர்கள் என்று தெரியும். என்னையும் அவர்களுக்குத் தெரியும். இது உங்களுக்குக் கௌரவம் இல்லை, சார். உங்கள் பேர் என்ன?''

''மூர்த்தி.''

''பாருங்கள் மிஸ்டர் மூர்த்தி, உங்க பேர்கூட இப்போதான் தெரியுது. அப்புறம் எப்படி உங்கள் பக்கம் என் கவனம் திரும்பும். ஏன் திரும்பணும்?''

லேசான அவமானத்துடன் மூர்த்தி திரும்பினான். மறுநாள் சுமதியே அதைத் துடைத்தாள். ''ஹலோ'' என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். எதிர் எதிரே அமர்ந்து அவர்கள் பயணம் செய்தார்கள்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, மூர்த்தி இறங்கிச் சென்று அந்த ஸ்டேஷனில் பிரபலமான முறுக்கும் குடிநீரும் வாங்கி வந்தான். பையனும் பெண்ணும் இறங்கி நடைபாதையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

''இந்த முறுக்கு ரொம்ப நல்லா இருக்கும். சாப்பிடு சுமதி!''

''தெரியுமா?''

''இதை ரெண்டாம் முறையாகச் சாப்பிடறேன். நீதான் வாங்கிக் கொடுத்தே. தேவகிரிக்குப் போனோமே, மறந்துட்டியா? இந்த ஸ்டேஷனைக் கடந்துதான் போனோம்.''

''ஆமாமாம். ஸாரி, நான் மறந்துட்டேன்'' என்ற சுமதி, ''கை பயன்படவில்லையா?'' என்றாள் கவலையுடன்.

''பயன்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஏன் நீலம் இப்போ இல்லை?''

அவள் ஆடையைத் தடவிக்கொண்டு சொன்னாள்... ''எல்லா நிறமும் வெளுத் துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது!''

இருவருக்கிடையிலும் பெரும் மௌனம், பெரும் சப்தத்துடன் பேசிக்கொண்டிருந்தது.

ஏதோ ஒரு பதவிக்கான தேர்வுக்கு அவள் தேவகிரிக்குப் போக வேண்டியிருந்தது.

''நவம்பர் குளிரில் வேதகிரிக்கா? ஊட்டியை விடவும் அதிகம் குளிருமே..?''

''பகலில் சேர்ந்து, இரவுக்கு முன்னால் புறப்பட்டுவிடணும். லாட்ஜ் சரிப்படாது. காலையில் குளிக்க ஏற்பாடு பண்ணணும். எனக்கு அங்கே யாரையும் தெரியாது.''

மூர்த்தி பணியாற்றும் நிறுவனத்துக்கு அங்கே ஒரு தங்கும் விடுதி இருந்தது. அங்கே தங்கினார்கள்.

தயக்கத்துடன்தான் அவன் கேட்டான்...  ''நான் துணைக்கு வரலாமா?''

அவள் சில கணங்களுக்குப் பிறகு சொன்னாள்... ''உன்னைத் துணை கொண்டுதானே என் பயணம் நடக்க வேண்டும்?''

உரிய மரியாதையோடு அந்தச் சொற்களை அவன் ஏற்றுக்கொண்டான்.

உடம்பின் எலும்புக்குள் ஊடுருவியது குளிர். விடுதிக்கு வந்து சேர்ந்ததும், எங்கோ சென்று அவளுக்குக் காபி வாங்கி வந்தான். குளித்துத் தேர்வுக்குத் தயார் ஆகச் சொன்னான். தேர்வு அரங்குக்கு உடன் சென்று வெளியே காத்திருந்தான். தேர்வு முடிந்ததும் அவளோடு சென்று உணவருந்தினான். ஓய்வு எடுத்து, அவள் நான்கு மணிக்கு எழுந்தபோது, டீயோடு அவள் முன் நின்றான். இருவரும் விடுதி மேனேஜர் கொடுத்த கூடுதல் கம்பளிப் போர்வையுடன் காலாற நடந்தார்கள். ஏழு மணிக்கு இரவு உணவை முடித்துப் புறப்பட்டார்கள். காலை மலர்ந்தபோது, ஊர் வந்து சேர்ந்தார்கள். ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த காபி ஹோட்டலுக்குச் சென்றார்கள்.

''இந்த அதிகாலைப் பொழுதில், ஓட்டலில் நாம் இருவர் மட்டுமே அமர்ந்து, முதல் கப் காபியை அருந்துகிறோம்!'' என்றாள் சுமதி.

'ஆம்’ என்பதாகத் தலை அசைத்தான் மூர்த்தி.

அவள் சொன்னாள்... ''இடமும் நிழலும் மட்டும் ஒன்றை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானது இல்லை, மூர்த்தி. காலம் முழுக்க மனசில், எப்போது நினைத்தாலும் இனிப்பைப் படரவிடுகிற மாதிரி, முதல் சந்திப்பு இருக்கவேண்டும். எனக்காகத் தோன்ற வேண்டும். எதுவும், தனிமைச் சூழல் காரணமாக நாம் நம்மைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.''

''புரிகிறது சுமதி! நாம் பலவீனர்கள் இல்லை என்பதை நாம் புரிந்துகொண் டோம். இது ஒரு நல்ல வாய்ப்பு.''

''குட்'' என்றாள் சுமதி.

மிக நீளமாக இருந்தது வரிசை. பையன், பெண் இருவரும் வரிசையில் நின்றுகொண்டார்கள். முதல்வர் அறைக்குப் போகும்போது, இவர்கள் இணைந்துகொண்டால் போதும்.

''அப்புறம் வாழ்க்கை எப்படிப் போகிறது, சுமதி?''

அவள் புன்னகைத்தாள். ''நீ சொல். உன் மனைவி வேலைக்குப் போகிறாளா? என்ன செய்கிறாள்?''

''வேலைக்குப் போகவில்லை. வீட்டில் இருக்கிறாள். என்னைப்போல மடத்தில் வளர்ந்தவள். ஒரு கை விளங்காதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? நதி நீர் மாதிரி, வாழ்க்கை பல இடங்களில் முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் போகிறது. ஆனால், போகிறது. வேலை இருக்கிறது. அதனால் பிச்சை எடுக்கவேண்டி இராது'' என்றவன், ''சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருக்கிறது. கேட் வரைக்கும் போகலாம், வரியா?'' என்றான்.

சுமதி, வரிசையில் நிற்கும் பெண்ணிடம் சொல்லிவிட்டு, அவனுடன் கல்லூரிக்கு வெளியே இருந்த ஒரு மரத்தடிக்கு வந்தாள்.

''இது அப்போ நாம் நின்ற அந்த மரத்தடி மாதிரி இல்லை?''

அவள் சிரித்தாள். ''அது வேற மரம்!''

''என்றால் என்ன? மரம். அந்த மனநிலை. அடிக்கடி அந்தக் காலத்தை நான் புதுப்பித்துக்கொள்கிறேன். அது எனக்கு வாழ்ந்ததன் நிலையை மீட்டுத் தருகிறது. எனக்குப் பழகியவர்களை மறக்க முடிவதில்லை. எதையும். உன்னைப் பகைவனாகப் பார்த்த எங்கள் தெரு நாய்களையும்தான். நீ எப்போதாவது அதையெல்லாம் நினைவுக்குள் கூட்டிக்கொண்டு வருவாயா?''

''சமயங்களில். ஆனால், அது வலி தரும் அனுபவம். மனத்தில் இருந்து அழிக்கவே விரும்புகிறேன்.''

''இரண்டாம் முறையும் தவறு செய்கிறாய். மனசை அழிப்பது பாவம். கொலைபாதகம்!''

'ஆம்’ என்று தலை அசைத்தான். ''உன் குடும்பம் பற்றிச் சொல்லலையே, சுமதி?''

''விரும்பி வந்தார் ஒருவர். நிறைய அழுத்தங்கள் தந்தார்கள் இரு வீட்டிலும். நானும் சரியென்று சம்மதித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். மூன்று மாசம்கூட திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கௌரவமாகப் பேசி, விலகிக்கொண்டோம். சந்தேகப்பட்டுவிட்டார்.''

அவன் அமைதியாக இருந்தான்.

''எங்கள் திருமண வாழ்க்கை முடிஞ்சதுக்கு நீயும் ஒரு முக்கியக் காரணம்.''

''ஐயையோ... என்ன சுமதி சொல்றே?''

''ஒருமுறை எனக்கு ஒரு புத்தகம்... அதாம்பா செக்ஸ் புத்தகம்; படம் போட்ட இங்கிலீஷ் புத்தகம். அதுல, 'என் உயிரான சுமதிக்கு’ன்னு எழுதி வேற கொடுத்திருக்கே. அதை என் கணவர் பார்த்து, நிறைய கற்பனை செஞ்சுக்கிட்டார். ஆனா, ரொம்ப அழகான கையெழுத்துல எழுதி இருக்கேப்பா. அதை நீ கொடுத்த நேரமும், மனசுக்குள்ள மழை அடிச்ச இருட்டும், முனிசிபல் சிமென்ட் பெஞ்ச்சும் இன்னும் எனக்கு நினைவு இருக்கு, மூர்த்தி. அந்த நேரத்து வாசனையும் எனக்குள்ள இருக்கு.''

சுமதி திடீரென்று உடைந்து அழுதாள். கைக்குட்டையை வைத்து, சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

அவன் பதற்றத்துடன் நின்றான். ''ஸாரி சுமதி!''

''நாட் அட் ஆல்! நாம் வாழ்ந்தபோது நேர்மையாக வாழ்ந்தோம். அதுக்காக மகிழ்ச்சியடையணும். ஸாரி எல்லாம் வேண்டாம்!''

ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான் மூர்த்தி. பின்பு, ''தனியாகத்தான் இருக்கியாம்மா?''

''தனியா இருக்கமுடியுமா, யாராலும்? நானும் நானும் இருக்கோம். நாங்க இரண்டு பேர். இரண்டே பேர் மட்டுமே ஒரு கூரைக்குக் கீழே இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. இவளை, அதோ அந்த வரிசையில நிக்கிறாளே, அவளைத் தொட்டில் குழந்தையா பார்த்து வாங்கிட்டு வந்தேன். அவ, பெற்றவங்க வேண்டாம்னு விட்ட குழந்தை. எனக்கு இவளைத் தவிர, வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்க வெச்ச குழந்தை. நான் நிறைவா இருக்கேன். எனக்கு எந்தத் தேவையும்  இல்லை.''

அவன் மீண்டும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டான். ''சந்தோஷமா இருக்கியா சுமதி, உண்மையா?''

''நான் பொய்யே பேசறது இல்லை, மூர்த்தி. உனக்குத் தெரியாதா? நான் சந்தோஷமாவே இருக்கேன். என் மகள், அலுவலக நண்பர்கள் சந்துரு, மகாலட்சுமி, இன்னும் நாலு பேர் எல்லோரோடும் சினேகமா இருக்கேன். மாலைக் காலங்கள் இவர்கள் வருகையால், என் வீட்டு வரவேற்பறை நிறைஞ்சு போயிடும். மனசுக்குள்ள வெற்றிடமே எனக்கு இல்லை. சினேகத்தால அதை அடைச்சுக்கிறேன்...''

பையனும் பெண்ணும் அவர்களைக் கை அசைத்து அழைத்தார்கள். மூர்த்தி சொன்னான்...

''நான் இங்கே பையனைப் பார்க்க வரும்போதெல்லாம் உன் பெண்ணையும் பார்க்கிறேன்.''

''அது சரி, மூர்த்தி! உன் பையனும் என் பெண்ணும் காதலிச்சா நீ என்ன பண்ணுவே?''

''அவர்கள் சந்தோஷத்துக்கு என் உயிரையும் கொடுப்பேன்!''

சுமதி சொன்னாள்... ''இந்த டயலாக்கை இரண்டாம் முறை கேட்கிறேன். உயிரைக் கொடுக்காதே! இரண்டு உயிர்களையும் சேர்த்து வை!''

அவர்கள் கல்லூரிக்குள் பிரவேசித்தார்கள்.

''உன் பையன் பேர் என்ன மூர்த்தி?''

''அபிலாஷ். என் மனைவிக்குப் பிடிச்ச பேர். உன் பெண் பேர் என்ன?''

''மூர்த்தீஸ்வரி'' என்றாள் சுமதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு