Published:Updated:

அருவிக்குத் தெரியும் - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அருவிக்குத் தெரியும் - சிறுகதை
அருவிக்குத் தெரியும் - சிறுகதை

எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள் ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி
அருவிக்குத் தெரியும் - சிறுகதை

குற்றால அருவிக்குத் தனியாக ஒருபோதும் நான் குளிக்கப் போனதே கிடையாது. சீசன் துவங்கிவிட்டால் போதும், நண்பர்கள் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். வாடகைக்கு வேன் பேசி, சமையலுக்கு ஆள் ஏற்பாடுசெய்து, குறைந்தபட்சம் நாலு நாளாவது தங்கிக் குளிப்பதே வழக்கம். அதுவும் சீசன் உச்சத்தில் இருக்கிற நாட்களில் 10 நாட்கள் வரைகூட தங்கியிருப்போம்.

சாரலுடன் குற்றாலத்தில் அலைகிற அனுபவம் தனி சுகம். நாள் முழுவதும் லேசாக வெயில் எட்டிப் பார்ப்பதும் மறைவதுமாக இருக்கும். அருவியில் சூரிய வெளிச்சம் பட்டு எழும் வானவில்லைத் தொடுவதற்காக, குளித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் ஓடுவார்கள். அருவியின் மீது வானவில் விழுந்து கரையும் தருணம் ஒப்பற்ற அழகுடையது.

குளிப்பதற்காக ஏதேதோ ஊர்களில் இருந்து மக்கள் ஒன்றுகூடுகிறார்கள் என்பதே விசித்திரம்தானே? பொதுவாக ஒருவர் குளிப்பதை மற்றவர் காணுவதை விரும்பாத நிலையில், ஆயிரமாயிரம் பேர் வேடிக்கை பார்க்கும் கண்களை மறந்து அருவிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்பதைக் காணும்போது, குளியல் என்பது வெறும் நீராடல் இல்லை; அது ஒரு விநோத கொண்டாட்டம் என்றே தோன்றும்.

பொங்குமாங்கடலும், சாலையில் வழிந்தோடும் அருவித் தண்ணீரும், நனைந்த உடைகளும், ஈரம் சொட்டும் கேசத்துடன் தோளில் துவைத்த துணிகள் ஊசலாட, எதற்கு அந்தச் சிரிப்பு என அறியாத சிரிப்போடு பொலிவுறும் முகத்துடன் பெண்கள் நடந்துவரும் அழகும், எண்ணெய் பூசிய உடல்களுடன் ஆண்கள் பருத்த தொப்பை மினுங்கச் செல்வதும், இட்லிக் கடைகளில் இருந்து எழும் புகையும், மங்குஸ்தான் பழ வாசனையும், சீயக்காய் மற்றும் தைல எண்ணெய் வாடையும், காதுகளில் படும் மழைத்துளியின் கூச்சம் தாளாமல் தலையைச் சிலுப்பிக்கொள்ளும் பசுவும், வாழைப்பழத்தைப் பறித்துப் போய்த் தின்னும் குரங்குகளும், ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வரிசை வரிசையாக வரும் மனநல சிகிச்சை பெறும் நோயாளிகளும், சாரலுக்குச் சுக்குக் காபி குடிக்கும் குற்றாலநாத சுவாமியும், செண்பகக்குழல்வாய்மொழி அம்மையும் ஒன்றுசேர்ந்ததுதானே குற்றாலம்! (அம்மையின் பெயர்தான் எத்தனை அழகாக இருக்கிறது. அம்மையின் பிரதிரூபங்களாக எத்தனை செண்பாக்கள் குற்றாலத்தில்!)

நான் சொல்லப்போவதும் ஒரு செண்பாவைப் பற்றியதுதான். உண்மையில் அவள் பெயர் என்னவென்றுகூட எனக்குத் தெரியாது, நானாகத்தான் அவளுக்கு அந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டேன். பிடித்தமான ஒரு பெண்ணுக்குப் பெயர் வைப்பதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்பதை அவளுக்குப் பெயரிடும்போதுதான் உணர்ந்தேன்.

சின்னஞ்சிறு வயது முதல் மனசுக்குள் ஊறிக்கிடந்த குற்றாலநாதரின் துணைவி பெயரை அவளுக்குச் சூட்டியதும், அந்தப் பெயர் உருவம் பெற்றுவிட்டது. சில பெண்களுக்குத்தான் பொருத்தமான பெயர்கள் அமைகின்றன. சில பெயர்கள் குழந்தையில் அழகாக இருந்து, பெரியவர்கள் ஆனதும் வசீகரமிழந்துவிடுகின்றன. செண்பா அப்படியில்லை. அது எல்லா காலத்துக்குமான பெயர். அதைச் சூடிக்கொள்பவள் பெயருக்கு வெளிச்சம் தந்துவிடுகிறாள்.

அப்படியான ஓர் அழகிக்குத்தான் நான் செண்பா எனப் பெயர் சூட்டினேன். ஏழெட்டு வயதில் இருந்து குற்றாலம் வந்து போயிருந்தாலும், எனது இருபத்து நாலாவது வயதின் பயணம்தான் குற்றாலத்துக்கு எதற்காக வருகிறேன் என்பதை அர்த்தப்படுத்தியது. அந்த வயதில்தான் அவளைக் கண்டேன். அதுவும் ஒரு பின்னிரவில்.

பகலில் அருவியில் குளிப்பதற்கும் பின்னிரவில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இரவில் குளிப்பது முற்றிலும் வேறான அனுபவம். இரவில் கொட்டும் அருவித் தண்ணீரின் குளிர்ச்சியும் வேகமும் ஒருபோதும் பகலில் கிடைக்காது. இதற்காகவே பின்னிரவு இரண்டு மணிக்கு அருவிக்கு வந்துசேருவோம். பகலைப்போல அருவியில் குளிக்க இரவில் தள்ளுமுள்ளு இருப்பதும் இல்லை. ஆகவே, சுதந்திரமாகக் குளிக்க முடியும். பெண்கள் பகுதியில் ஒன்றிரண்டு பேரை தவிர, ஆள் நடமாட்டமே இருக்காது.

அன்றிரவும் அப்படிதான் இருந்தது. ஒளிரும் ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் அருவி பால்போலப் பொங்கி வழிந்தது. என்னோடு வந்திருந்த நடராஜன் துண்டு கட்டிக்கொள்ளாமல் ஜட்டியோடு அருவியை நோக்கிப் போனான். நான் துண்டு கட்டிக்கொண்டு அருவியை நெருங்கும்போது, அவன் வேண்டுமென்றே எனது துண்டை உருவி வீசினான். நானும் அருவியில் ஜட்டியுடனே நின்று குளித்தேன். அருவிக்குள் நுழைந்தவுடனே வயது கரைந்துபோய்விடுகிறது. சிரிப்பும் கேலியும் தன்னை மீறிப் பொங்கும் உற்சாகமும் சகலருக்கும் கூடிவிடுகிறது.

என் அருகில் நின்று குளித்தவர், தனது தொப்பையைத் தடவியபடியே தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பெண்கள் பக்கம் யார் குளிக்கிறார்கள் எனத் திரும்பிப் பார்த்தேன். யாரோ வயதான ஒரு பெண்மணி தரையில் உட்கார்ந்து, துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தார். அருவியின் வேகம் அதிகமாகி, ஓங்காரத்துடன் தண்ணீர் பாய்ந்து விழுந்துகொண்டிருந்தது.

அப்போது யாரோ முதுகைத் தொடுவது போன்ற உணர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன். பெண்கள் பகுதியில் இருந்து விலகி ஆண்கள் பகுதிக்குள் வந்து நின்று ஓர் இளம்பெண் குளித்துக்கொண்டிருந்தாள். அவளது கைதான் எனது முதுகில் பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை முழுமையாகக் காணமுடியாமல், அருவி வேகத்துடன் விழுந்துகொண்டிருந்தது. கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அவள் விரித்த கேசத்துடன் பாறையைப் பார்த்துத் திரும்பி நின்றவளாக தோளில் அருவி புரளுட்டும் என்று அனுமதித்திருந்தாள்.

அருவிக்குக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காதா என ஏங்கச் செய்த தோள்கள் அவை. எப்போது திரும்புவாள் எனக் காத்துக்கொண்டே இருந்தேன். அவள் உடலில் பட்ட தண்ணீர் என் மீது படுகிறது. என்னவொரு அற்புதம் இது!

வேண்டுமென்றே ஒரு கையில் தண்ணீரைப் பிடித்து அவளது முதுகில் ஊற்றினேன். அவள் கவனிக்கவில்லை. அருவியின் பிரமாண்டம் மறைந்துபோய், குளித்துக்கொண்டிருந்த அந்த இளம்பெண் பிரமாண்டமாக எனக்குத் தெரியத் தொடங்கினாள். அவளை எப்படித் திரும்பவைப்பது எனப் புரியாமல், நானும் பாறையைப் பார்த்தபடி அவளைப் போலவே திரும்பி நின்றுகொண்டேன்.

பாறையில் அடித்த சிற்பங்களில் நீர்வழிந்தோடியது. தவம் செய்யும் ரிஷியின் சிற்பம் என்னைக் கேலியோடு பார்ப்பது போலிருந்தது. நான் அவள் முகத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே, நகர்ந்து நகர்ந்து அருகில் போய் நின்றேன்.

அவள் அருவிக்குள்ளாகவே என்னைப் பார்த்திருக்கக் கூடும். நான் பார்க்கட்டுமே என்பதற்காகத் திரும்பி நின்றவளைப்போல, வேகம் இல்லாத அருவியின் பகுதிக்குப் போய் நின்றாள். அப்போதுதான் அவளைப் பார்த்தேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரதி சிற்பம் அப்படியே கை கால் முளைத்து எழுந்து வந்து நின்றுவிட்டதோ எனும்படியான உடற்கட்டு; திருத்தமான புருவங்கள்; மிளகாய்ப் பழம் போல உதடு; அடர்த்தியான கேசம்; காதில் மயில் கம்மல் போட்டிருந்தாள். எலுமிச்சை நிறப் பாவாடையும் பூப்போட்ட தாவணியும் ஈரத்தில் நனைந்து, உடம்போடு ஒட்டிப்போயிருந்தன. பரிகாசம் ததும்பும் கண்கள்.

நான் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டவளைப்போல அருவித் தண்ணீரை வாயில் நிரப்பி, சிறுமியைப்போல உற்சாகமாக ஊதினாள். அவள் உதட்டில் இருந்து தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வந்து என் மீது பட்டது.

அருவி இதுவரை தராத அற்புதத் தொடுதல் அது. நான் அவளைத் தின்றுவிடுவதைப்போல அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன்.  

அவள் கண்களால் 'என்ன?’ என்று கேட்டாள். எவ்வளவு துணிச்சல்!

'அழகாக இருக்கிறாய்’ என்று சைகையில் சொன்னேன்.

அவள் சிரித்தபடியே, 'நானா.. அருவியா?’ எனக் கையை உயரே தூக்கிக் காட்டினாள்.

'நீதான். உனக்குக் குளிரவில்லையா?’ என மீண்டும் சைகையில் கேட்டேன். அவள் காது மடலில் சொட்டும் தண்ணீரை என்னை நோக்கிச் சுண்டி விட்டபடியே சிரித்தாள்.

யார் இவள், மோகினியா? நள்ளிரவில் அருவியில் மோகினிகள் குளிப்பார்கள் என்று யாருமே எனக்குச் சொன்னதில்லையே?

நானும் அவளை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தண்ணீரைக் கையில் பிடித்து அவள் மீது அடித்தேன். அவள் தனது முந்தானையை அருவியில் காட்டி, அதை என் மீது வீசினாள். முந்தானை என்னைத் தொட்டுத் திரும்பிப் போனது. இவ்வளவு குளிர்ச்சியான அருவிக்குள் எனக்கு ஏன் வியர்க்கிறது? அருவி, ஆட்கள், பின்னிரவு எல்லாமும் மறந்துபோய், நானும் அவளும் மட்டுமாக இருப்பது போலானது.

'உன்னோடு யார் வந்திருக்கிறார்கள்?’ என்று சைகையில் கேட்டேன்.

'தனியாக வந்தேன்’ என்று அவளும் சைகையில் சொன்னாள்.

'பயமாக இல்லையா?’ எனக் கேட்டேன்.

'இல்லை’ என உதட்டைச் சுழித்தபடியே சைகை செய்தாள்.

'அருகில் வரவா?’ என அவளிடம் கேட்டேன். 'நான் போய்விடுவேன்’ என அவள் கைவிரலைக் காட்டினாள்.

என்ன நாடகம் இது? என் கட்டுப்பாடுகளை இழந்து, நான் அவள் பின்னால் இழுபட்டுக்கொண்டிருப்பது புரிந்தது.

நடராஜன் என்னைக் கவனிக்கிறானா எனப் பார்ப்பதற்காகத் திரும்பினேன். அவன் உற்சாகமாக 'நாணமோ... இன்னும் நாணுமோ’ என்ற சினிமா பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். வீட்டில் குளிப்பதைப்போல நினைத்துக்கொள்கிறான்போல! அப்போதுதான் எனக்குத் தன்னுணர்வு வந்தது. நான் ஜட்டியோடு குளித்துக்கொண்டிருக்கிறேன்.

அழகான பெண், அதுவும் பார்த்தவுடனே காதலிக்கத் தூண்டும் ஒரு பெண். அவள் முன்னால் நான் ஜட்டியோடு நின்றுகொண்டிருக்கிறேன். பேரழகி ஒருத்தி முன்னால் ஒருவன் இப்படியா நின்றுகொண்டிருப்பான்! என்ன கேவலம் இது? வெட்கத்துடன் ஓடி, பாறை ஒன்றில் கிடந்த எனது சிவப்புத் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தேன்.

அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். கள்ளச் சிரிப்புடன் என்னைப் பார்த்தாள். அவளை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது எனத் தெரியாமல் அருவிக்குள் தலையைப் புதைத்துக்கொண்டேன். மூச்சு முட்டும் அளவு அருவி என் மீது விழுந்தது. அருவியை விட்டு விலகி நின்று திரும்பிப் பார்த்தபோது, அவளைக் காணவில்லை.

எங்கே போயிருப்பாள் என இரும்புக் கம்பியின் மீது ஏறி நின்று பார்த்தேன். அவள் நின்றிருந்த அடையாளமே இல்லை. வேகமாக அருவியை விட்டு வெளியே வந்து, தலையைக்கூடத் துவட்டாமல் லுங்கியையும் சட்டையையும் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு, கோயிலை நோக்கி நடந்தேன். ஒரு நிமிஷத்துக்குள் எங்கே போய்விட்டாள்?

ஒருவேளை, நான் கனவு காண்கிறேனோ? வேகமாக கோயில் முன்னால் வந்து நின்றபோது, ஒரு பண்டாரம் தனது கொப்பரையைக் கழுவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் ஒரு அழகி வந்தாளா என எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் நின்றுகொண்டேயிருந்தேன்.

சே, எப்படி ஒரு நிமிஷத்துக்குள் மாயமாய் மறைந்து போனாள்? அவளைத் தேடி பேருந்து நிலையம் வரை நடந்துபோய் வந்தேன். திரும்பி வரும்போது செங்கோட்டை முக்கில் இருந்த டீக்கடையில் நடராஜன் டீ குடித்துக்கொண்டிருந்தான்.

''எங்கடா போய்த் தொலைஞ்சே... டீ சாப்பிடுறயா?'' எனக் கேட்டான்.

அவனிடம் அழகியைப் பற்றி சொல்ல வேண்டாம் என முடிவுசெய்துகொண்டபடியே, ''கடும்சாயா வேண்டும்'' என்றேன்.

அன்று அறைக்குப் போன பிறகு, என்னால் உறங்கவே முடியவில்லை. அந்தப் பெண் யாராக இருப்பாள்? மறுபடியும் அவளைப் பார்க்க முடியுமா? எங்காவது வருவாளா? எந்த லாட்ஜில் தங்கியிருப்பாள்? எதற்காக முதல் சந்திப்பிலேயே என்னோடு இப்படிச் செல்லம் கொஞ்சி விளையாடினாள்? யோசனை கிளைவிட்டுக்கொண்டே இருந்தது.

அருவிக்குத் தெரியும் - சிறுகதை

எழுந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, அவளைப் பற்றியே நினைத்ததில் மனது சந்தோஷமாகவும் ஏக்கமாகவும் இருந்தது. விடிகாலையில் சொல்லமுடியாத தவிப்புடன் படுக்கையில் விழுந்தேன்.

மறுநாள், ஐந்தருவிக்குக் குளிக்கப் போனபோது, அவளை என் கண்கள் தேடின. ஒருவேளை சிற்றருவியில் சிறுவர்களுடன் குளித்துக்கொண்டிருப்பாளோ என்றுகூடத் தேடிப்போய் பார்த்தேன். ம்ஹூம்... அவளைப் பார்க்கவே முடியவில்லை. கடைத் தெருவில், பூக்கடையில், பூச்செடி விற்கும் இடத்தில், தோட்டக்கலைப் பூங்காவில் என அவளைத் தேடிக்கொண்டே இருந்தேன். அவள் என்னதான் செய்கிறாள் என ஆத்திரமாக வந்தது.

மதியம் குளிப்பதற்கு அருவிக்குள் சென்றபோது, அருவி சலிப்பூட்டுவதாக இருந்தது. யாரோ என்னை இடிக்க, திரும்பியபோது தரையில் வழிந்தோடும் அருவியில் மஞ்சள் நிறப் பூ ஒன்று மிதந்துபோவது கண்ணில் பட்டது. குனிந்து எடுப்பதற்குள், பூ நழுவிப்போய்விட்டது. இரண்டு நிமிஷத்தில் வெளியே வந்து நின்று, குளிக்க வருபவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவளைப் பற்றியே ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று ஆத்திரமாகக்கூட வந்தது.

எங்களுக்குச் சமைப்பதற்காக வந்திருந்த மாஸ்டர், தனது வேலைகள் முடிந்த மதிய நேரத்தில் குளிக்கக் கிளம்புவார். அப்படிக் கிளம்பும்போது என்னிடம், ''தோசை மாவு அரைக்கக் கொடுத்திருக்கேன். வாங்கிட்டு வந்துருங்க'' என்று சொன்னார்.

அறையில், நண்பர்கள் குடித்துவிட்டு நன்றாகச் சாப்பிட்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள். வெறுமையை எப்படிக் கழிப்பது என்று புரியாமல், மாவு வாங்குவதற்காக தளவாய் லாட்ஜை ஒட்டிய சந்துக்குள் நடந்து போனேன்.

அரைத்த மாவை தூக்குவாளியில் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது, மாடியில் இருந்து யாரோ ஆரஞ்சுப் பழத் தோலை உரித்துப்போட்டது என் மீது வந்து விழுந்தது. ஆத்திரத்துடன் திரும்பியபோது, களுக் எனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. அது அவளேதான்!

ஜன்னல் வழியாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். ''மேலே வரவா?'' எனக் கேட்டேன். 'அய்யய்யோ... போச்சு!’ என்று சைகை செய்தபடியே, ''அந்தப் பக்கம் வாங்க'' என்றாள். சிறு சந்துபோல ஒடுங்கியிருந்த இடத்தை நோக்கி நடந்து போனேன்.

அவள் லாட்ஜின் மாடிச் சுவரில் சாய்ந்து நின்றபடியே, என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் அவளைப் பார்த்துச் சிரித்தபடியே, ''இங்கதான் இருக்கியா?'' எனக் கேட்டேன்.

பதில் சொல்லாமல், காதோரம் சுருண்ட கூந்தலைச் சுருட்டியபடியே, ''ஏன் கண்ணு சிவந்துபோயிருக்கு?'' எனக் கேட்டாள்.

''உன்னாலே ராத்திரி பூரா தூங்கவே இல்லை'' என்றேன்.

அதற்கும் சிரித்தாள். பிறகு, ''என்னைத் தேடினீங்களா?'' எனக் கேட்டாள்.

''ஆமா, மோகினி மாதிரி மறைஞ்சு போயிட்டே!'' என்றேன்.

''நான் பக்கத்துல, துணி மாத்துற இடத்துலதான் நின்னுட்டு இருந்தேன். நீங்க வேகவேகமா என்னைத் தேடிப் போறதைப் பார்த்துச் சிரிப்பா வந்துச்சு. அதான் வெளியே வரல'' என்றபடி, மறுபடி சிரித்தாள்.

அவள் சிரிக்கச் சிரிக்க, எனக்கு உடல் சிலிர்த்துக்கொண்டு வந்தது. அப்படியே அவளைத் தாவிப் பிடித்துக் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

''வேணும்னுதானே செய்தே?'' எனக் கேட்டேன்.

''ஆமா'' எனத் தலையாட்டினாள்.

''நீ எந்த ஊரு? உன் பேரு என்ன?'' என்று கேட்டேன். அவள், ''சொல்ல மாட்டேன்'' என்றாள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சட்டென வெயில் மூடி, சாரல் வலுத்துப் பெய்யத் தொடங்கியது.

  அவள் சிரித்தபடியே, ''இன்னைக்கும் குளிக்க வருவீங்களா?'' எனக் கேட்டாள்.

''கட்டாயம் வருவேன். நீ வருவியா?'' எனக் கேட்டேன்.

''எங்கப்பா தூங்கிட்டா வருவேன்'' என்றாள்.

''இப்போ அப்பா இல்லையா?'' எனக் கேட்டேன்.

''ரூம்ல யாருமே இல்லை. எல்லோரும் பழையக் குற்றாலம் போயிருக்காங்க'' என்றாள்.

''நான் வரட்டுமா?'' எனக் கேட்டேன். ''ஆசையைப் பாரு'' என்றபடியே, ''இருங்க'' என, அவள் மறைந்துபோனாள்.

தோசை மாவை கையில் வைத்தபடியே, மாடியைப் பார்த்து நின்றுகொண்டிருந்தேன். அவளைக் காணவே இல்லை.

எதற்காக என்னை அலைக்கழிக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. பேசாமல் மாடி ஏறிப்போய் அவள் அறைக் கதவைத் தட்டுவோமா எனக்கூட தோன்றியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு, ஒரு சிறுமி வெளியே எட்டிப்பார்த்து, ''அக்கா இந்த முறுக்கைக் கொடுங்கச் சொன்னாங்க, பிடிங்க!'' என்று தூக்கிப் போட்டாள். ஒரு முறுக்குக்காகவா இவ்வளவு நேரம் என்னைக் காக்க வைத்தாள்? என்ன பெண் இவள்!

''உங்க அக்கா எங்கே?'' என்று கேட்டேன். ''அவங்க தூங்கிட்டாங்க'' என்று சொல்லிச் சிரித்தபடியே, அந்தச் சிறுமி ஓடி மறைந்தாள்.

சொல்லிக் கொடுத்துச் சொல்லவைக்கிறாள். இந்தச் சிறுமி யாராக இருப்பாள்? அவளிடம் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள்? சாரலுடன் வெயில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி விளையாடுவதைப்போல, அவள் என்னோடு விளையாடுகிறாள். திரும்ப வருவாளா? இல்லை, நான் அறைக்குப் போய்விடலாமா எனத் தெரியாமல் நின்றுகொண்டே இருந்தேன்.

எப்படியோ, அவள் தங்கியிருக்கிற அறை தெரிந்துவிட்டது. இங்கே வந்து நின்றால், அவளை எப்படியும் பார்த்துவிடலாம். அவள் அப்பா இன்றைக்கு நன்றாக உறங்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். இரவு எப்போது வரும் எனக் காத்துக்கொண்டே இருந்தேன். சாயங்காலமாக நண்பர்கள் சீட்டு விளையாட ஆரம்பித்தார்கள். வேண்டுமென்றே 200 ரூபாய்க்கும் மேலாகத் தோற்றேன். ''என்னடா மாப்ளே ஆச்சு, இப்படி ஆடுறே?'' என்று கேட்டான் நடராஜன். நான் பதில் சொல்லவில்லை.

இரவு பார்டர் கடையில் போய் பரோட்டா சாப்பிட நண்பர்கள் கிளம்பியபோது, 'நான் வரவில்லை’ என்று அறையிலேயே இருந்தேன். இன்று இரவு அவள் கட்டாயம் வருவாள் என்று தோணிக்கொண்டே இருந்தது. நடராஜன் தனக்கு அலுப்பாக இருக்கிறது என்று குளிக்க வரவில்லை என்றான். ஆனால், ஷேக் வருவதாகச் சொன்னான்.

ஷேக்கை அழைத்துக்கொண்டு போவதில் ஒரு பிரச்னை... அவன் அருவிக்குள் போய் நின்றதுமே கெட்ட வார்த்தைகளாகக் கத்தத் தொடங்கிவிடுவான். ஒருமுறை இதற்காக போலீஸாரிடம் அடிகூட வாங்கினான். 'ஏன்டா இப்படிச் செய்கிறாய்?’ எனக் கேட்டால், 'அருவியில் போய் நின்றால், மனசிலே கிடக்கிற கெட்ட வார்த்தைங்க எல்லாம் அருவியா பொங்கிட்டு வருதுடா! நான் என்ன செய்யறது?’ என்பான்.

அன்றைக்குத் தனியாகப் போய்க் குளிப்பதற்காக ஷேக்கிடம், ''பழைய குற்றாலம் வரை நடந்து போகப் போகிறேன்'' என்றேன். அவன், ''ரொம்ப தூரம் இல்லே..?'' என்று ஆதங்கப்பட்டான். ''ஆமாம். வர்றதுக்கு விடிஞ்சு போயிரும்'' என அவனைக் கழற்றிவிட்டு, அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அன்று பின்னரவிலும் நல்ல கூட்டம். அருவிக்குப் போகாமல் ஓரமாக நின்றுகொண்டே இருந்தேன். அவளைக் காணவில்லை. ஒருவேளை, தாமதமாக வரக்கூடும். அவள் வரும் வரை அருவியைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என முடிவு செய்துகொண்டேன்.

திடீரென அவளது சிரிப்பொலிபோலக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வேறு யாரோ ஒரு பெண், ஓர் இளைஞனின் கையைப் பிடித்துக்கொண்டு, கேலி செய்தபடியே நடந்துபோனாள். காதலுற்ற பெண்களின் சிரிப்பு எல்லாம் ஒன்றுபோலத்தானிருக்குமோ? அந்த ஜோடிகளின் அந்நியோன்யத்தைப் பார்த்தபடியே இருந்தேன்.

அவள் வரவேயில்லை. மூன்று மணிக்கு அருவியில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே குளித்துக்கொண்டிருந்தார்கள். ஆத்திரம் தீர நான் தனி ஆளாக அருவியில் நின்று குளித்துக்கொண்டிருந்தேன்.

தொலைவில் அவள் வந்துகொண்டிருந்தாள். அவளது நடையில் இருந்த வேகம், என்னைத் தேடிக்கொண்டுதான் வருகிறாள் என்பது போலிருந்தது. நான் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டவளைப்போல வேகமாக அருவிக்குள் வந்தாள்.

இப்போது அருவியில் நான், அவள், இன்னும் மூன்று பேர்... அவ்வளவே! நனைந்தபடியே அருகில் வந்தவளாக, ''நீங்க போயிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்'' என்றாள். அவளை அப்படியே அணைத்து முத்தமிட வேண்டும்போல இருந்தது. அவள் கைவிரல்களைத் தொட்டேன். மெள்ள விலக்கிவிட்டபடியே தண்ணீரால் என்னை அடித்தாள்.

''ஒருவேளை நீ வராமல் போயிருந்தே, காலையில் உன் ரூமுக்கே வந்திருப்பேன்'' என்றேன்.

''அது ஒண்ணும் என் ரூம் இல்லே. நீங்க போய்க் கதவைத் தட்டினா பிரச்னை ஆகிரும்!'' என்றாள்.

''அப்போ உன் ரூம் எங்கே இருக்கு?'' எனக் கேட்டேன்.

''சொல்ல மாட்டேன்'' என்றபடியே அவள் கேசத்தைப் பிரித்து அருவியில்  தலையைக் காட்டினாள். அப்படியே அவளை இழுத்து அணைத்துக்கொள்ள முடியாதா என ஆதங்கத்துடன் அவளை உரசியபடியே, ''உன் பேரை மட்டுமாவது சொல்லக் கூடாதா?'' எனக் கேட்டேன்.

''தெரியாதவங்ககிட்ட எல்லாம் பேர் சொல்லக் கூடாது'' எனக் குழந்தையைப் போலச் சொன்னாள்.

எங்கள் இருவரின் பேச்சை அருவி கேட்டுக்கொண்டிருந்தது போல வேகம் மட்டுப்பட்டது.

''உங்கப்பா தூங்குறதுக்காகக் காத்துட்டு இருந்தியா?'' எனக் கேட்டேன்.

''நான் எங்கப்பாகூட வரலையே... பிறகு எதுக்குக் காத்துட்டு இருக்கணும்?''  என்றாள்.

''ஏன் இப்படிப் பொய் பொய்யா சொல்றே?'' என அவளை விளையாட்டாக அடிக்க முயன்றேன். அவள் விலகி நின்று தண்ணீரை என் பக்கம் தள்ளிவிட்டாள். இந்த ஊடல் நாடகம் எனக்கு உலகையே மறக்கச் செய்தது. நானும் அவளும் அருவியில் குளித்துக்கொண்டே இருந்தோம்.

யார் முதலில் அருவியை விட்டு வெளியேறிப் போவது என்பதில் போட்டியானது. நான்தான் தோற்றுப்போனேன். அவளிடம் தோற்பது சந்தோஷமாகவே இருந்தது. இருவரும் ஒன்றாக நடந்து கோயில் அருகே வந்தபோது, ''உன் பேரு எனக்குத் தெரியும்'' என்றேன்.

திகைப்புடன் ''எப்படி?'' எனக் கேட்டாள்.

''உன் பேரு செண்பகக்குழல்வாய்மொழி. அம்மையோட பேரு!'' எனக் கோயிலைக் காட்டினேன்.

''அந்தப் பேரு உங்களுக்குப் பிடிக்குமா?'' எனக் கேட்டாள்.

''ஆமாம்'' என்றேன்.

''அப்போ அதையே வெச்சிக்கிறேன்'' என்றாள்.

கோயிலைக் கடந்து மேடேறும்போது சொன்னாள்... ''உங்களுக்கு ரொம்ப தைரியம்!''

''ஏன் சொல்றே?'' எனக் கேட்டேன்.

''நான் யாருன்னே தெரியாது. ஆனா, என் கையைப் பிடிச்சுக்கிட்டு கூட நடந்து வர்றீங்க.''

''இந்தத் தைரியம் அருவி குடுத்தது. நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்னுதானே அருவி சொல்லுது'' என்றேன்.

''நாம அங்கே போயி உட்காருவோமா?'' எனக் கேட்டாள். அது மூடிக்கிடந்த தபால் ஆபீஸ். இருவரும் அதன் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோம். அவள் என் கைகளை இறுக்கப் பிடித்தபடியே, ''எனக்கு அழணும்போல இருக்கு'' என்றாள்.

''ஏன் அப்படிச் சொல்றே?'' என்று கேட்டேன்.

''அப்படித்தான். அழுதாதான் நிம்மதியா இருக்கும்'' எனக் கையை முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள்.

அவள் தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினேன். சாந்தமாகியவள், ஏதோ யோசனைக்குப் பிறகு கேட்டாள்... ''திரும்பப் போய் குளிப்பமா?''

என்ன பெண் இவள் என்று புரியாமல், ''உனக்குக் காய்ச்சல் வரும்!'' என்றேன்.

''வந்தா வரட்டும். வாங்க, விடியறதுக்குள்ளே இன்னும் ஒரு தடவை குளிப்போம்'' என என் கையை இழுத்துக்கொண்டு, அருவியை நோக்கி நடந்தாள்.

இப்போது அருவியில் இருபது பேருக்கும் மேல் குளித்துக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. கல்யாணமாகிய புதுமணப் பெண் தனது கணவருடன் அருவிக்கு வந்தால் எப்படியிருப்பாளோ, அப்படி இருந்தது அவளது நடை. அருவியில் நனைந்தபடியே சந்தோஷத்தில், 'கண்ணன் வருவான்... கதை சொல்லுவான்’ என மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப் பாடலை அதன் முன்பு எத்தனையோ தரம் கேட்டிருக்கிறேன். ஆனால், அவள் பாடும்போது மிகுந்த சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

பித்துப் பிடித்தவளைப்போல அவள் அருவியிடம் பேசுவதும், என்னை அடிப்பதும், தண்ணீரில் தள்ளுவதுமாக இருந்தாள். யார் இந்தப் பெண், இவளோடு எப்படி ஒரு நாளில் இத்தனை நெருக்கம் ஆனேன் என அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களை ஒன்றுசேர்த்து இந்த அருவி விளையாடுகிறது என்றுகூடத் தோன்றியது.

விடிகாலையின் மென்வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் செங்கோட்டை சாலை வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து போகும்போது அவள் தயங்கி தயங்கிச் சொன்னாள்... ''நாங்க இன்னைக்கு ஊருக்குப் போனாலும் போயிருவோம்.''

''எந்த ஊருக்கு?'' எனக் கேட்டேன்.

''அதெல்லாம் வேணாம். இந்த ஒருநாள் போதும். நான் இப்படி எல்லாம் இருந்ததே இல்லை'' என்றாள்.

அப்படியே ஓங்கி அவளை அறையவேண்டும்போல இருந்தது. ''நீ சொல்லாட்டி, நானே கண்டுபிடிச்சி வந்துருவேன்'' என்றேன்.

''அப்போ நான் உங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவேன்'' என்றாள்.

''பிறகு எதுக்கு என்னை உரசிக்கிட்டு நிக்குறே... போறவன்னா போ!'' என்றேன்.

''கோவம் வருதா... நான் என்னப்பா செய்யட்டும்? என்னாலே இவ்வளவுதான் முடியும்!'' என்றாள்.

''பொய் சொல்றே! முதல்ல நீ எந்த ஊருன்னு சொல்லு'' என்றேன்.

''சரிப்பா... நான் ஊருக்குப் போகலை. நாளைக்கு நாம திரும்பச் சந்திக்கலாம். அப்போ சொல்றேன், போதுமா?'' என்றாள்.

''பிறகு எதுக்கு ஊருக்குப் போறேன்னு சொன்னே?'' எனக் கேட்டேன்.

''என்னமோ அப்போ தோணிச்சு. இப்போ போக வேணாம்னு தோணுது'' என என் விரலைப் பிடித்துக்கொண்டாள்.

''அப்போ என்கூட என் ரூமுக்கு வா'' என்றேன்.

''நான் வர மாட்டேன்பா. நாளைக்கு நாங்க அச்சன்கோவில் போறம். வர்றதுக்கு ஈவினிங் ஆயிடும்'' என்றாள்.

''நாங்கன்னா யாரு?'' எனக் கேட்டேன்.

''நாங்கன்னா... நாங்கதான். போயிட்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன்'' என்றாள்.

''நாம ரெண்டு பேரும் நாளைக்கு கட்டாயம் மீட் பண்ணணும். சித்ரசபைக்கு வர்றயா?''

''அது எல்லாம் கோயில். அங்கே வர மாட்டேன்'' எனத் தலையாட்டினாள்.

''அப்போ எங்கேதான் வருவே?'' எனக் கேட்டேன்.

''உன் கனவுல வந்து சொல்றேன். நீ போயித் தூங்கு'' எனச் செல்லமாக அடித்தாள்.

''நீ சொல்லாட்டி, இப்பவே உன்கூட வந்துருவேன். யார் என்ன செய்வாங்கன்னு பார்க்கலாம்'' என்றேன்.

''இந்தாதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. நான் உள்ளே போயிருவேன், பாத்துக்கோ!'' என்றாள்.

''போ, போனா பயமா?'' எனக் கேட்டேன்.

''அப்படியா, பாப்பமா?'' என அவள் விடுவிடுவென போலீஸ் ஸ்டேஷன் உள்ளே போனாள். சில நிமிஷங்களுக்குப் பிறகு, வெளியேறினாள். கூடவே ஒரு கான்ஸ்டபிளும் அவளுக்குத் துணையாக நடந்து போக ஆரம்பித்தார்.

அவள் என்னைக் கவனிக்காதவள் போலப் போய்க்கொண்டே இருந்தாள். என்னால் அவளை புரிந்துகொள்ளவே முடியவில்லை. கண்ணில் இருந்து மறையும் வரை அவளைப் பார்த்தபடியே இருந்தேன்.

அறைக்குத் திரும்பியபோது, சமையற்காரர் வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தார். சந்தோஷமும் ஏக்கமும் இயலாமையுமாக தூண் பக்கத்தில் சுருண்டு படுத்துக்கொண்டேன். நான் எழுந்தபோது, மதியமாகி வெயிலேறி இருந்தது. நடராஜன் மட்டுமே அறையில் இருந்தான். மற்றவர்கள் தேனருவிக்குப் போயிருந்தார்கள்.

''காலைல சாப்பிட எழுப்பினேன். எந்திரிக்கவே இல்லை. விடியுற வரைக்கும் குளிச்சியா?'' எனக் கேட்டான்.

தலையாட்டியபடி தூணில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

''ஆறு மணிக்குத் தென்காசிக்குப் போய்ப் படம் பார்த்துட்டு, அப்படியே ஊருக்குப் போகலாம்னு ஷேக் சொன்னான். அதுக்குள்ளே ஒரு குளியல் போட்டுட்டு வந்துருவமா'' என நடராஜன் கேட்டான்.

ஊருக்குக் கிளம்புகிறோமா? இரவு அவள் சந்திப்பதாகச் சொன்னாளே..! இன்னும் ஒரு நாள் இருந்துவிட்டுப் போகலாமே எனத் திட்டமிட்டபடியே, ''எனக்கு செங்கோட்டைகிட்ட ஒரு ஆளைப் பாக்கணும். நான் நாளைக்கு வர்றேன். நீங்க கிளம்புங்க'' என்றேன்.

''அதுக்கு என்னடா... எல்லோரும் நாளைக்கே போகலாம்'' என்றான் நடராஜன்.

நான் சிகரெட் வாங்கிவருவதாகச் சொல்லி, அவள் தங்கியிருந்த லாட்ஜ் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். பழைய காலத்து லாட்ஜ் அது. மாடிப்படியில் ஏறி நடந்தபோது, அவள் இருந்த அறை திறந்து கிடந்தது. உள்ளே வயதானவர் ஒருவர் பலாப்பழம் ஒன்றை உரித்துக்கொண்டிருந்தார். நான் யாரையோ தேடுவதுபோலக் கடைசி வரை போய்விட்டுக் கீழே இறங்கி வந்தேன். அவளைக் காணவில்லை.

அன்றிரவு அவள் வரக்கூடும் என்பதற்காக அருவியின் முன்பாக நீண்ட நேரம் காத்திருந்தேன். அவள் வரவேயில்லை. அவள் போய்விட்டாள். என்னிடம் திரும்ப வருவதாகப் பொய் சொல்லியிருக்கிறாள். அவளை இனிமேல் திரும்பப் பார்க்க முடியாது. இதே இடத்தில்தான் அவளுடன் நேற்றிரவு நடந்து சென்றேன். இதே இடத்தில் அவள் கைகள் என்னோடு இருந்தன. அவள் ஏன் என்னுடன் இத்தனை அன்பாகப் பழகினாள்? எதற்காகப் பிரிந்து போனாள்?

நினைக்க நினைக்க மனது வலிக்க ஆரம்பித்தது. விடியும் வரை அவள் வரவேயில்லை. அதிகாலையில் டூரிஸ்ட் பஸ்களில் வந்து இறங்கிய ஆட்கள், வேகவேகமாக அருவியில் குளிக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவளுடன் பழகிய ஒவ்வொரு நிமிஷமும் திரும்பத் திரும்ப நினைவில் வந்தபடியே இருந்தது. அருவி ஏன் இப்படி ஒரு மாய விளையாட்டை என்னோடு நடத்தியது? அருவியின் இத்தனை பெரிய இரைச்சலின் பின்னே உள்ள மௌனம், இதுபோன்ற விளையாட்டின் வலிதானா?

நான் ஆடைகளைக் களைந்து இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு, அருவியில் போய் நின்றேன். அருவியின் இரைச்சல் ஹோவெனக் கேட்டது. தலையில் தண்ணீர் விழுந்தபோதும் உடல் நனையாதது போலவே இருந்தது. என்னை மீறி வரும் துக்கத்தால் நான் அழ ஆரம்பித்தேன். என் கண்ணீரை மறைத்தபடியே வழிந்து ஓடிக்கொண்டிருந்தது அருவி. நிமிர்ந்து அருவியை ஏறிட்டுப் பார்த்தேன். அது ஒரு பெரும் சிரிப்பைப்போல எனக்குத் தோன்றியது.

ஈரத்தலையுடன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவளுடன் உட்கார்ந்திருந்த தபால் அலுவலகப் படிகளில் இப்போது வெயில் அடித்துக்கொண்டிருந்தது. அதை பார்க்கக் கூடாது என்பதுபோலத் தலைகவிழ்ந்தபடியே கடந்துபோனேன். அதன் பிறகு அவளை நான் மறுபடி பார்க்கவே இல்லை.

இத்தனை வருஷங்களாக ஒவ்வொரு முறை குற்றாலம் வரும்போதும் மனது அவளைத் தேடவே செய்கிறது, ஆனால், அவள் திரும்ப வரவே இல்லை. அரூபமாக இருந்து உருவமான செண்பகக்குழல்வாய் அம்மை மீண்டும் அரூபமாகிப் போய்விட்டாள்தானோ? என்ன உறவு இது? காற்றில் உதிர்ந்த பூ ஒன்று கையில் வந்து விழுந்தது போன்ற அதிசயம்தானா?

என் கைகளைப் பிடித்தபடியே அவள் ஒன்றாகக் குளித்ததும் சிரித்ததும் அழுததும் இந்த உலகில் என்னையும் அவளையும் தவிர அந்த அருவிக்கு மட்டும்தான் தெரியும். இன்று அருவியில் குளிக்கும்போதும் கண்ணில் தானாக நீர் வழியத்தான் செய்கிறது. உலகையே சந்தோஷப்படுத்தும் அருவி என்னை மட்டும் துக்கப்படுத்துகிறது. இழந்த என் காதலின் துயரத்துக்கு அருவிதான் என்ன செய்யும், சொல்லுங்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு