Published:Updated:

அடுத்து என்ன? - யூமா வாசுகி

அடுத்து என்ன? - யூமா வாசுகி
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்து என்ன? - யூமா வாசுகி

என் பழைய குறிப்பேடு உயிர்த்தெழுகிறதுபடங்கள் : ஆ.முத்துக்குமார்

அடுத்து என்ன? - யூமா வாசுகி

லையாள எழுத்தாளர், அமரர் சி.வி.ஸ்ரீராமன் அவர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்க்க ஆரம்பித்தது ஏறத்தாழ 12 வருடங்களுக்கு முன்னால். 600 பக்கங்களில் மொத்தம் 75 கதைகள் அடங்கிய, சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். நான் வேலையைத் தொடங்கியபோது எழுத்தாளர் உயிருடன் இருந்தார். இரண்டு மூன்று முறை, தள்ளாமை தொனிக்கும் குரலில் மிக நிதானமாக, மொழிபெயர்ப்புப் பணி பற்றி விசாரித்து அறிந்தார். தமிழில், தான் வாசிக்கப்படவேண்டும் எனும் அவரது தீவிர ஆர்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர் பேச்சும் கதைகளும் அவருடனான மிகு இணக்கத்தை வளர்த்து விட்டிருந்தன. வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாக அந்தக் கதைகளுக்கு தமிழ்ப் பிரவேசம் கொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள், கவிஞர் சுகுமாரன் அவர்களிடமிருந்து எழுத்தாளரின் மரணச் செய்தி வந்தது. தகவலுக்குப் பிறகான மௌனமடர்ந்த நொடிகளில் சுகுமாரன், “அழாதீர்கள், நாமென்ன செய்ய முடியும்?” என்று எனைத் தேற்ற முயன்றார். அந்த ஸ்தம்பிதத்துக்குப் பிறகு முயற்சி முடங்கியது. இப்போது மீண்டும் அந்தக் கதைகளில் திளைத்து அவற்றின் ஆன்மாவைத் தமிழில் வடிக்கப் பிரயத்தனம்கொள்கிறேன்.

 தவிரவும், இறுதிச் செப்பனிடலுக்காக என்னை ஏவிக்கொண்டிருக்கும் 15 மொழிபெயர்ப்பு நூல்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்தாக வேண்டிய சூழல் இது. ஆயினும், காணாததைக் கண்டவன்போலத்தான் இலக்கியத்தின் வீதிகளில் வியந்து வியந்து அலைகிறேன். ஒன்றைக் கண்டடைந்து நெஞ்சிலேற்றிக் கொஞ்சிக்கொண்டிருக்கும்போது, மற்றொன்று வந்து தூக்கிக்கொள்ளச்சொல்லி கைவிரிக்கிறது. அதைச் சீராட்டிக் கொண்டிருக்கும்போது, மற்றொன்று என் உடை பற்றி இழுத்து மலரச் சிரிக்கிறது. அடுத்து வரும் இன்னொன்றின் ஜாலத்தில் மற்றவை மறதிக்குள் வாழப்போகின்றன. மோதும் தற்செயல்களில் போக்கு குலைகிறது. ஒரு வேட்டை விலங்கென வேடனொருவன் என்னைப் பின்தொடர்வான் எனில், சிக்கலும் சிதறல்களுமாகத் தள்ளாடிக் குழம்பிக்கிடக்கும் என் காலடிகள் பார்த்து வினோதமுறுவான் என்று நினைக்கிறேன். ஒவ்வாதது ஆயினும் பலவீனம் ஆயினும் இந்த வரையற்ற வழிகளே என் இயல்புக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

 பச்சிளம் கன்றை நக்கிக்கொடுக்கும் பசுவின் வாஞ்சையாக, சிறார் நாவலுக்கான சாராம்சம் ஒன்றை மனதில் தோய்த்துத் தோய்த்து இனித்துக்கொள்கிறேன். அதற்கான பிள்ளைமைக் கவிச் சுரப்பின் விகாசம் கூட, அதற்குரிய பாடுகளின் வலியில் யாசிக்கிறேன். இடர் என்னவெனில், முனைப்பின் விழிகள் மனமுவந்து அரியவற்றைக் காட்டித் தந்தாலும்கூட இன்னதென்று அறிந்து சட்டென்று அணைத்துக்கொள்ளத் தெரியாத பேதையாகவே பல நேரங்களில் இருக்கிறேன். நழுவிச் சென்றவை பிறகு நாடி வருவதும் நிராகரித்துப்போவதும் நடப்பதுதான்.

அடுத்து என்ன? - யூமா வாசுகி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழைய குறிப்பேட்டில் என்றோ எழுதிவைத்த நாவல் ஒன்றை இப்போதுதான் படித்துப் பார்த்தேன். அது ஓர் அபத்தச் சேகரம். முற்றிலும் எதிர்பாராத சம்பவக் கண்ணிகள் மூலம், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற செயல்களின் மூலம் அது பேரபத்தங்களின் ரத்தக் கட்டிகளை எடுத்து வைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு மரத்தின் சகல இலைகளும் கொடூரம் கொண்டிருப்பது போன்று வன்மத்தின் வெம்மையில் தகித்துக்கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை இதில் நான் பார்க்கிறேன். பற்றிக்கொண்டு போவதற்காக சிறுகச்சிறுக செதுக்கி உருவாக்கிய அர்த்தங்களை அது ஏன் இவ்வளவு அனாயாசமாக முறித்துப்போட்டு முடமாக்குகிறது? தன்னை வருத்திக்கொண்டும்கூட, சிதைவுகளில் அது ஏன் இவ்வளவு  நிறைவுகொள்கிறது? இந்தக் கனலின் பூதாகரப் பீறிடலுக்கான அடிப்படைப் புழுக்கம் என்ன? ஏமாற்றத்தையும் நிராதரவையும் பீதியையும் மட்டுமே கொண்டாடிக் கொடுக்கும் அதன் அகக் கூறுகள் என்ன? அந்தப் பாத்திரம் சுட்டுவதன்படி இவ்வளவு அற்பமாகவும் எள்ளலுக்கு உரியதாகவும்தான் வாழ்க்கை இருக்கிறதா? இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்தப் பாத்திரம் என் முன்னால் வந்து எதிர் இருக்கையில் அமர்கிறது. அதற்கென்றே தகவமைந்த ஏளனப் புன்னைகையுடன் என்னை உற்றுப் பார்க்கிறது: “என்னை எதிர்கொள்ளத் தயங்கித்தானே இவ்வளவு காலம் விலகியிருந்தாய். உன் வார்த்தைகளுக்குள் அடைபடுவேன் என்று நினைக்கிறாயா? என் நிறங்களைத் தீண்ட முடியுமா உன்னால்? இதில் பார்க்கிறேன், உன் படைப்பு தர்மத்தை!”

அடுத்து என்ன? - யூமா வாசுகி


 நான் குன்றி அமர்கிறேன். எதிரில் இருப்பதோ வலிமை வாய்ந்த ஆகிருதி. என்னிடமிருப்பதோ ஆகிவந்த சில சொற்கள். மனம் சோர்ந்தேன் என்றாலும் பணிவாகச் சொன்னேன்:

 “உன்னைச் சித்திரிக்கச் சித்தமாகிறேன்…”

 விடைபெறவும் இல்லாமல் அது புறப்பட்டுச் செல்கிறது. நான் வாயிலுக்கு வந்து பார்க்கிறேன். அதன் ஒரு குதிகால் தடம், ஒருவனின் மார்புச் சட்டையில், கொல்லும் துரோகமென ஓங்கிப் பதிகிறது. ஆவேசமாகக் காறித் துப்பிய மிகுவெறுப்பின் எச்சில், ஒரு கன்னத்தில் நிலைத்திருக்கிறது. அதன் உடையசைவில் மூண்ட தீ, கலைஞனின் நுண்ணோவியங்களைக் கருக்குகிறது. தன்னியல்பில் அசையும் விரல்களில் மன்றாடும் குரல்கள் நெரிபடுகின்றன. காலத்தின் மீது கால்கள் பதித்து அது நடந்து செல்கிறது.

  இப்போது நாவலில் ஒருவன் தன் முறையீட்டைத் தொடங்குகிறான்:

 “நிறைய தடவ தனிமையில மனம் வாடியிருக்கேன். ரொம்ப ரொம்ப மனம் நொந்து அழுதிருக்கேன். இந்த ஒரு காரியத்தால, ஒரே ஒரு செயலால எவ்வளவு கொடுமைகள அனுபவிக்க வேண்டியிருக்கு… தாங்கிக்கவே முடியலயேனு மனசுக்கு ரொம்பக் கஷ்டம். நமக்கு வெற்றி கிடைக்கல. பொருளாதார நிலையும் சரியில்ல… இப்ப சூழ்நில ரொம்பக் கடுமையா இருக்கு. எதுத்து நிக்க முடியாதே…”