Published:Updated:

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

வீயெஸ்வி, ஓவியங்கள்: வேதா

பிரீமியம் ஸ்டோரி

டந்த ஆறு மாதங்களாக உடல் உபாதைகள் எதுவும் இன்றி நான் பூரண ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறேன். இதில் எனக்கு பெருமை. நிம்மதி. கூடவே வருத்தம் ஒன்றும் உண்டு. நீண்ட நாட்களாக எங்கள் குடும்ப டாக்டர் பைரவனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. டாக்டர் பைரவனும் உள்ளுக்குள் வருத்தப்பட்டுகொண்டுதான் இருப்பார். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை என்ற கணக்கில் மூன்று தடவை நான் சென்றிருந்தாலும், அவருக்கு ரூ 500 ஜ் 3 = ரூ.1500 வரவுக் கிட்டியிருக்கும் பாவம், பட்ஜெட்டில் டவல் விழுந்திருக்கும்!

இப்போது நான்கு நாட்களாக எனக்கு விட்டு விட்டுத் தலைவலி; விடாமல் வயிற்று வலி. நாட்டு வைத்தியம், கை வைத்தியம், கால் வைத்தியம் என்று காசு செலவில்லாமல் சொஸ்தப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்தேன். வலி விட்டபாடில்லை. இலவச இணைப்பு மாதிரியாக இடுப்பு, கை, கால், மூட்டு வலிகளும் வலியவந்து இணைந்துகொண்டன. டாக்டர் பைரவனிடம் சென்றுவிடத் தீர்மானித்தேன்.

என்னுடைய நோய் நொடிகளை டாக்டரிடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக டாக்டரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது தலையாய கடமை!

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

'டாக்டர் பைரவன், எம்.பி.பி.எஸ்., எஃப்.ஆர்.சி.எஸ். (லண்டன்)’ - அவர் வீட்டு வாசலில் தொங்க விடப்பட்டி ருக்கும் போர்டு இப்படி அறிவிக்கும்.

'கன்சல்டேஷன் வித்-அவுட் அப்பாயின்ட்மென்ட்’ என்ற வாசகமும் அந்த போர்டில் எழுதப்பட்டிருக்கும். அதாவது, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அவர் க்ளினிக் கதவைத் தட்டலாம். இத்தனைக்கும் 'யாராவது தட்டினால் போதும்’ என்று ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் ரகம் அல்ல நம் டாக்டர். க்ளினிக்கில் எப்போது சோக முகங்களுடன் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக டாக்டர் பைரவன்தான் எங்கள் வீட்டுக்கு வைதீஸ்வரர். ஜுரத்தில் ஆரம்பித்து எத்தனை சிக்கலான வியாதியுடன் அவரிடம் போனாலும், குணப்படுத்திவிடக் கூடிய கைராசிக்காரர். கடைசிக் காலத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாக என்னுடைய அப்பா அவருடைய பராமரிப்பில்தான் இருந்து வந்தார். திடீரென்று ஒருநாள் அப்பா மூச்சற்றுப் போனபோது ஓர் விடியற்காலை நேரத்தில் பைரவன்தான் வீட்டுக்கு வந்தார். அப்பாவின் கைப்பிடித்து பல்ஸ் பார்த்துவிட்டு 'எவ்ரிதிங் இஸ் ஓவர்’ என்று கை விரித்துவிட்டு, எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஃபீஸ் எதுவும் வாங்கிக்கொள்ளாமல் கிளம்பிப் போனார். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மற்ற பல டாக்டர்கள் செய்வது மாதிரி டாக்டர் பைரவன் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொள்ளவில்லை. காரணம், இன்னமும் கண்ணாடி அணியத் தொடங்கவில்லை இந்த ஐம்பது ப்ளஸ் வயதுக்காரர். அதேபோல, மணிமணியானக் கையெழுத்தில்தான் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுவார் இவர். தெளிவான கையெழுத்து என்பதாலேயே இவர் நிஜ டாக்டர் இல்லை என்று கருதி நிறைய மருந்து கடைகளில் என்னை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

வேறு சில வகையிலும் வித்தியாசமானவர் டாக்டர் பைரவன். தங்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கு எந்த பேஷன்ட் அழைத்தாலும் தவறாமல் சென்றுவிடுவார். பணம், பொருள் என்று எதையும் 'மொய்’ ஆக எழுத மாட்டார். மாற்றாக, உடல் நலனுக்கு வலுவூட்டக் கூடிய வைட்டமின் மாத்திரைகள் அல்லது காப்ஸ்யூல்களை அழகாக கிஃப்ட் ராப் செய்து, தனது விசிட்டிங் கார்டையும் அதில் இணைத்துத் திருமணப் பரிசாகக் கொடுப்பார். தனக்கு சாம்பிளாகத் தரப்படும் மாத்திரைகளைத்தான் இப்படி தானமாகக் கொடுக்கிறார் என்று பலரும் அவர் காதுபடவே சொல்வார்கள். டாக்டருக்கும் இரண்டு காதுகள் உண்டுதானே? ஒன்று வழியாக வாங்கி, இன்னொன்று வழியாக வெளியேற்றிவிடுவார்!

டாக்டரின் இந்தப் பழக்கம் அறிந்த பேஷன்ட்களில் ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது, ''டாக்டர்... கட்டாயம் நீங்க கல்யாணத்துக்கு வரணும்... அப்போ வைட்டமின் பி12 இன்ஜெக்ஷன் ஒரு மாசத்துக்கு வரும்படி பிரசன்ட் பண்ணிடுங்க... என்னாலே இப்பவெல்லாம் மாத்திரைகளை விழுங்க முடியறதில்லை டாக்டர்...'' என்று விண்ணப்பம் வைக்க, பைரவனும் அப்படியே செய்தார்.

டாக்டர் பைரவனுக்குப் படிக்கும் பழக்கம் நிரம்ப உண்டு. அதாவது, நியூஸ் பேப்பர்கள் மற்றும் பத்திரிகைகள். வீட்டில் இருந்து க்ளினிக் வரும்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் மாதிரி கை நிறைய பேப்பர்களும் புத்தகங்களுமாகத்தான் வருவார். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், கடைசி பேஷன்ட் வந்து சென்ற பிறகு எடுத்த வந்த பேப்பர், புத்தகங்களைப் படித்துவிட்டுதான் வீட்டுக்குக் கிளம்புவார். முக்கியமாக, தினசரிகளில் ஆபிச்சுவரி பக்கத்தைத் தவறாமல் பார்ப்பார். தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய பேஷன்ட் யாராவது இயற்கை எய்திவிட்டாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவருக்கு ஆர்வம் அதிகம். புது பேஷன்ட் தேடிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல காரணம். மண்டையைப் போட்டுவிட்டவரின் ஃபைலை கிழித்துப் போட வேண்டும். அவருக்கு. குப்பை சேர்க்கப் பிடிக்காது.

டாக்டருக்கு கடவுள் பக்தி அதிகம். தினமும் க்ளினிக்கில் தனது அறைக்குள் நுழைந்ததும் காலணியை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, சுவாமிப் படங்களுக்கு முதல் நாள் அணிவித்த பூக்களை எடுத்துவிட்டு, புது பூக்கள் சூட்டுவார். அரை டஜன் ஊதுபத்தி ஏற்றிவைத்து கமகமக்க செய்வார். இரண்டு நிமிடம் கண்மூடி தியானம் செய்வார். சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்கரிப்பார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். டாக்டருக்கு தொப்பை கிடையாது என்பது கூடுதல் தகவல்.

''இன்னிக்கு நிறைய பேர் நோய் நொடியுடன் என்கிட்டே வரணும்’னு ஆண்டவன் கிட்ட வேண்டிப்பீங்களா டாக்டர்?'' என்று அவரிடம் கேட்கத் தோன்றும். இங்கிதம் கருதி, நாக்கு நுனி வரை வந்துவிடும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கிவிடுவேன்.

சின்ன வயதில் இருந்தே கர்நாடக இசையில் ஆர்வம் வளர்த்துக்கொண்டவர் டாக்டர் பைரவன். அரியக்குடி, செம்மங்குடி, ஜி.என்.பி., என்று அந்த நாள் வித்வான்களில் இருந்து, சஞ்சய், டி.எம்.கிருஷ்ணா, சுதா ரகுநாதன் என்று இன்றைய பாட்டுப் புலிகள் பலரின் ஒலிப்பேழைகள் இவரிடம் ஏராளம் உண்டு. டாக்டரே கூட ஓரளவுக்குப் பாடக் கூடியவர்தான். கேள்வி ஞானம். ஒருமுறை என்னுடைய மார்பில் ஸ்டெதஸ்கோப் அழுத்தியபடியே டாக்டர் பைரவன் ஹம் செய்த பைரவி கேட்டு அசந்துபோனேன் நான்.

''டாக்டர்... இத்தனை ஜோரா பாடறீங்களே... நீங்க ஏன் மேடை ஏறி கச்சேரி செய்யக் கூடாது?'' என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.

''கரெக்ட்... ராகங்களுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டுன்னு சொல்வாங்களே... டாக்டர் பிராக்டீஸை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, பாட்டு பிராக்டீஸ் செய்து, பாடகனாகி என் பேஷன்ட்களை கச்சேரிக்கு வரவழைத்த குணப்படுத்தலாமானு நான் யோசித்தது உண்டு...''

''செய்துவிட வேண்டியதுதானே டாக்டர்?''

''தேங்காய் மூடிகளை வெச்சுட்டு வீட்ல அடுப்பு எரியவிட முடியாதே...'' என்று அந்த சப்ஜெக்ட்டுக்கு மங்களம் பாடினார் டாக்டர்.

ஃபீஸ் வாங்குவதில் கறார் காட்டாதவர் டாக்டர் பைரவன். ஒரு சிட்டிங் என்றால் அதிகபட்சம் ஐநூறு ரூபாய் என்று அப்பர் லிமிட் வைத்துக்கொண்டாலும், தன்னிடம் வரும் ஒவ்வொருவரிடமும் அந்த அளவுக்கு வசூலிக்க மாட்டார். நோயாளியின் முகம் பார்த்து எப்படி தகுதியை நிர்ணயம் செய்வாரோ தெரியாது. 400, 300, 200, 100 என்று பலவிதங்களில் ஃபீஸ் வாங்குவார். வந்திருப்பவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவராக டாக்டருக்குத் தெரிந்தால், அவரிடம் பணம் எதுவும் வாங்க மாட்டார். ஒரு சில கேஸ்களில், பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து, மருந்து மாத்திரை வாங்க தன் பர்ஸில் இருந்து பணம் எடுத்துத் தந்திருக்கிறார். 'மவராசா... நீங்க நல்லா இருக்கோணும்’ என்ற பலரின் வாழ்த்தும் இவரின் சேமிப்பில் நிரம்ப உண்டு.

இந்த அறிமுகத்துடன் டாக்டரின் க்ளினிக் இருக்கும் இடம் செல்வோம்...

ஆறே மாதங்களுக்குள் இத்தனை மாற்றமா? இடம் மாறி வந்துவிட்டோமோ என்று நினைக்கும் அளவு உருமாறிப் போயிருந்தது டாக்டர் பைரவனின் க்ளினிக். நடுவில் சிவப்பு விளக்குடன் வாசலில் தொங்கிக்கொண்டிருந்த போர்டு மட்டுமே மாறாமல் இருந்தது. அதே ஓட்டை. அதே அழுக்கு.

செருப்பைக் கழற்றி வெளியே பாதுகாப்பான இடம் தேடி வைத்தேன். நுழைந்தவுடன் கண்ணில் பட்ட நோயாளிகளின் காத்திருப்பு அறையின் தரையில் புது மார்பிள் பளபளத்தது. சுவரில் ஜான்சன்பேபி க்யூட்டாக சிரித்துக்கொண்டிருந்தது. எனக்கு முன்பாகவே வந்துவிட்டிருந்த பதினேழு பேர் தங்கள் 'டர்ன்’ வரக் காத்திருந்தார்கள். நான் பதினெட்டாவது. ஒரு பேஷன்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்துக்கொண்டாலும் எப்படியும் ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.

டாக்டர் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வந்துவிட்டார். அறைக் கதவு முழுவதுமாக மூடப்படவில்லை. அறை வாசலில் நாய் ஒன்று உட்கார்ந்திருந்தது. புஸுபுஸுவென்று இருந்தது. பளீர் வெள்ளை. தினமும் மூன்று வேளை குளிப்பாட்டிவிடுவார்களோ? வளர்ப்பு நாய் என்பது அதன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.

க்ளினிக்கில் இந்த நாய் புதுசு. இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. பைரவன் எப்போது கால்நடை மருத்துவர் ஆனார்? நான் வழக்கமாகப் பார்க்கும் அட்டெண்டர் அங்கு காணவில்லை. அவர் உட்காரும் நீல நிற ஸ்டூலும் மிஸ்ஸிங்.

அதுவரை சோதிக்கப்பட்ட நோயாளி வீக்காக நடந்து வெளியே வந்தார். கன்னத்தில் நான்கு நாள் தாடி. கையில் பிரிஸ்கிரிப்ஷன்.

''கிருஷ்ணமூர்த்தி... நெக்ஸ்ட்...''

அறைக்குள் இருந்து டாக்டரின் குரல். ஆனால், யாரும் எழுந்து செல்வதாகத் தெரியவில்லை. அறைவாசலில் உட்கார்ந்திருந்த வெள்ளை புஸுபுஸு எழுந்து ஓட்டமும் நடையுமாக சென்று வாலை ஆட்டியபடியே அடுத்த பேஷன்ட்டின் காலை நக்கியது. அவர் எழுந்து டாக்டரின் அறைக்குள் போகும் வரை அதுவும் கூடவே வந்தது. பின்னர் தன் இடத்தில் சாதுவாக உட்கார்ந்தது.

'கிருஷ்ணமூர்த்தி’ என்று டாக்டர் அழைத்தது நோயாளியின் பெயராக இருக்க முடியாது. காரணம், உள்ளே சென்றது ஒரு பெண்மணி! அப்படியே இருந்தாலும் 'மிஸஸ் கிருஷ்ணமூர்த்தி என்றுதானே அழைத்திருக்க வேண்டும்!

எனில், அந்த நாயின் பெயர் கிருஷ்ணமூர்த்தியா? எனக்குத் தலைச்சுற்றியது.

'கிருஷ்’, 'மூர்த்’ என்று டாக்டர் ஏன் செல்லப் பெயர் எதுவும் வைக்கவில்லை?

காத்திருக்கும் நேரத்தில் க்ளினிக்கை நோட்டம் விட்டேன். 'டாய்லெட்’ என்று எழுதப்பட்டிருந்த கதவு கண்ணில் பட்டது. இதுவும் புதுசு. முன்பு பார்த்தது இல்லை. நோயாளிகளின் வசதிக்காக டாக்டர் செய்திருக்கும் ஏற்பாடு என்று நினைத்து எழுந்து அருகில் போனேன். அறைக் கதவில் ஆண், பெண் உருவம் எதுவும் இல்லை. பதிலாக, நாயின் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது. உற்றுப் பார்த்தேன். அதே வெள்ளை புஸு புஸுவின் கலர் போட்டோ! அட, நம்ம கிருஷ்ணமூர்த்தி!

சந்தேகத்துடன் டாய்லெட் கதவைத் திறந்து பார்த்தேன். உள்ளே, பிளாட்ஃபாரம் மாதிரி கட்டப்பட்டு இருந்தது. நடுவில் ஒரு விளக்குக் கம்பம். எனக்குப் புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. டாக்டரின் அறை வாசலில் உட்கார்ந்திருக்கும் நாய்க்கு உச்சா வந்தால் எழுந்து டாய்லெட்டுக்குள் சென்று விளக்குக் கம்பத்தின் அருகில் ஒரு காலைத் தூக்கியபடியே நிற்குமா? கதவை மூடிவிட்டு என் இருப்பிடத்தில் அமர்ந்தேன். எனக்கு தலைச்சுற்றல் நின்றபாடில்லை.

டாக்டரின் அறைக்குள் இருந்து பெண்மணி வெளியே வந்தார்.

''கிருஷ்ணமூர்த்தி... கம் இன்...'' என்று குரல் கொடுத்தார் பைரவன்.

கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருடைய நோயாளி அடுத்து உள்ளே செல்வாரோ என்று எதிர்பார்த்தேன். இல்லை. அந்த நாய்தான் உள்ளே தாவி ஓடியது.

நான் எழுந்து சென்று கதவு இடுக்கு வழியே பார்த்தேன். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு பிஸ்கட் கொடுத்தார் டாக்டர். வேறொரு பாட்டில் திறந்து தானும் ஒரு பிஸ்கட் வாயில் போட்டுக்கொண்டார். தண்ணீர் கொடுத்தார். தானும் குடித்தார்.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

அடுத்தக் கட்டளைக்காகக் கிருஷ்ணமூர்த்தி காத்திருக்க, டாக்டர், 'பிரிஸ்கிரிப்ஷன் பேட் எடு’ என்றார்.

அருகில் இருந்த பெஞ்ச் மீது தாவி ஏறியது வெள்ளை புஸு புஸு. கூண்டில் இருந்து அட்டையை எடுக்கும் கிளி மாதிரியாக, ஷெல்ஃபில் இருந்து புத்தம் புது பிரிஸ்கிரிப்ஷன் பேடை கவ்வி எடுத்து, இறங்கி வந்து டாக்டரிடம் கொடுத்தது.

''கிருஷ்ணமூர்த்தி... போய் அடுத்த பேஷன்ட்டை அனுப்பு...'' என்றார் டாக்டர் பைரவன்.

என் இருப்பிடத்தில் அமர்ந்தேன். வியப்பாக இருந்தது. போலீஸ் மாதிரியாக தன்னுடைய செல்ல நாயை ட்ரெயின் செய்திருக்கிறார் டாக்டர். ஒரு பேஷன்ட் அறைக்குள் இருந்து வந்ததும் அடுத்தவரை கிருஷ்ணமூர்த்தி உள்ளே அனுப்பிவைக்கும் நேர்த்தி ஒன்றே போதும், அதன் பெருமையை எடுத்துக்காட்ட! தவிர, நோயாளிகள் ஸ்டூலில் கசக்கிப்போட்ட நியூஸ் பேப்பர்களை ஒழுங்காக அடுக்கிவைத்தது. டாக்டர் படு பிஸியாக இருக்கும் நேரத்தில் 'சேல்ஸ் ரெப்’கள் நுழைந்தால், கோபமாக குரைத்தது. அவர்கள் கொடுக்கும் லஞ்சத்தை - பிஸ்கெட்டை என்று வாசிக்கவும் - வாங்கிக்கொள்ள மறுத்தது. நடுவில் ஒரு முறை, பேஷன்ட்டை டாக்டர் சோதித்துக்கொண்டிருந்த நேரத்தில் சமர்த்தாக டாய்லெட்டுக்குள் சென்று வந்தது. உள்ளே போன வேலை முடிந்து, ஃப்ளஷ் செய்துவிடும் சத்தம் கூட கேட்டது!

''கிருஷ்ணமூர்த்தி... நெக்ஸ்ட்...''

அது எனக்கான அழைப்பு. கி.மூர்த்தி என் காலை நக்கியபோது குறுகுறுத்தது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. எழுந்து உள்ளே போனேன்.

நீண்ட நாள் நண்பனை சந்திக்கும் உற்சாகத்துடன், ''வாங்க வெங்கட்ராமன்...'' என்று என்னை வரவேற்றார் டாக்டர்.

''உட்காருங்க...''

...ந்தேன்.

''கை குடுங்க டாக்டர்...'' என்றேன்.

''ஹலோ... இங்க நீங்க டாக்டரா இல்லை நானா...?'' என்று விட்டு சிரித்தார் பைரவன்.

''அதுக்கு இல்லை டாக்டர்... உங்க நாயை சூப்பரா ட்ரெயின் பண்ணி வெச்சிருக்கீங்களே, எப்படி டாக்டர்...?''

வெட்கப்பட்டு சிரித்தார் அவர்.

''அதுவா? உங்களை மாதிரியே எனக்கு ஒரு பேஷன்ட்... போலீஸ் நாய்களுக்குப் பயிற்சிக் கொடுக்கறவர்... அவர்தான் கிருஷ்ணமூர்த்தியை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சார்... பத்து நாள் என் கூடவே இருந்து எனக்கு தோதா இருக்கற மாதிரி அவனைப் பழக்கினார்... அந்த டாய்லெட்டுக்கு வடிவமைச்சுக் கொடுத்ததுகூட அவர்தான்... யூ நோ சம்திங்..?

''என்ன டாக்டர்.?''

''கிருஷ்ணமூர்த்தி இன்செக்ஷன் கூட போடுவான்! நான்தான் இன்னும் மூணு மாசம் போகட்டும்னு விட்டுவெச்சுருக்கேன்..''

''அந்த நாய்க்கு - ஸாரி, கிருஷ்ணமூர்த்திக்கு - சம்பளம் உண்டா டாக்டர்?''

''உண்டு... பிடித்தம் எல்லாம் போக மீதியை எனக்கு அவனை அறிமுகம் செய்துவெச்ச பேஷன்ட்கிட்டே கொடுத்துடுவேன்...'' என்ற டாக்டர், என்னைப் படுக்கவைத்து பரிசோதித்தார். கிருஷ்ணமூர்த்தியை அழைத்து தெர்மாமீட்டர் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அது கால் இடுக்கில் வைத்து தெர்மாமீட்டரை உதறி பைரவனிடம் கொடுத்தது.

''ஓகே... உட்காருங்க...''

சட்டை பட்டன்களை போட்டவாறே ஸ்டூலில் உட்கார்ந்தேன்.

''பெரிசா பிராப்ளம் எதுவும் இல்லே...'' என்றார் டாக்டர்.

''ஆனா, இடுப்பு வலி சிவியரா இருக்கு டாக்டர்... குனிய முடியலே... நிமிர முடியலே... உட்கார முடியலே... எழுந்திருக்க முடியலே...''

''ஒரு எக்ஸ்ரே எடுத்துக்க முடியுமா?''

''எங்கே டாக்டர்?''

''இடுப்புலதான்...''

''நோ... நோ... எந்த லேப்லன்னு கேட்டேன்...''

''இந்த தெரு முனைல ஒரு லேப் இருக்கு... என்னுடைய பேஷன்ட்களையெல்லாம் அங்கதான் அனுப்புவேன்...''

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

''கமிஷன் ஒழுங்கா வந்துடறதா டாக்டர்?'' என்று நான் கேட்க நினைத்த கேள்வி, என் தொண்டைக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருந்தது.

டாக்டர் பைரவன் சீட்டு எழுதிக் கொடுத்தார்.

''கிருஷ்ணமூர்த்தியைக் கூட அனுப்பறேன்... ஹி வில் டேக் யூ தேர்...''

''எதுக்கு டாக்டர்? எனக்கு வழி தெரியுமே...''

''அதுக்கு இல்லே... கிருஷ்ணமூர்த்தி அழைச்சுட்டு வர பேஷன்ட்டுக்கு அங்கே பத்து பர்சென்ட் டிஸ்கவுன்ட் உண்டு...'' என்றவர், கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.

பின்பக்கம் மேஜை மீது இருந்த பெல்ட் எடுத்து ஒரு முனையை எனது வலது மணிக்கட்டில் கட்டினார். இன்னொரு முனையை கிருஷ்ணமூர்த்தி கவ்விக்கொண்டது.

''டேக் ஹிம் டு ஜனதா எக்ஸ்ரே லேப்...'' என்று கட்டளைப் பிறப்பித்தார்.

புறப்படத் தயார் நிலையில் கிருஷ்ணமூர்த்தி.

''டாக்டர்... எனக்கு ஒரு டவுட்டு...''

''கேளுங்க...''

''முன்னாடி நீங்க ஒரு அசிஸ்டென்ட் வெச்சிருந்தீங்களே... அவரை எங்கே காணோம் டாக்டர்?''

''ஓ! அந்த கிருஷ்ணமூர்த்தியைக் கேட்கறீங்களா? பத்து வருஷத்துக்கு மேலா என்கூட இருந்தான்... திடீர்னு ஒரு நாள் பக்கத்துத் தெருவுல ஒரு க்ளினிக் போட்டு பிராக்டீஸை ஆரம்பிச்சுட்டான்... அவன் ஒரு போலி டாக்டர்னு தெரிஞ்சு போலீஸ் அரெஸ்ட் பண்றதுக்குள்ளே, பக்கத்து ஊர்ல ரெண்டு வீடு கட்டிட்டான்... இந்த கிருஷ்ணமூர்த்தி அதுமாதிரி என் தொழிலுக்குப் போட்டியா வர மாட்டானே!''

தெருவில் எல்லோரும் வேடிக்கைப் பார்க்க, கிருஷ்ணமூர்த்தி முன்னால் செல்ல, அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஈடு கொடுத்தபடியே நான் ஜனதா எக்ஸ்ரே லேப் நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றுகொண்டிருக்கிறேன், கையில் டாக்டர் பைரைவன் கொடுத்த சீட்டுடன்!

'விதி முன்னே செல்ல, ராமன் பின் சென்றான்...’

- கம்ப ராமாயண வரி என் நினைவுக்கு வந்தது!

கரும்பலகை செய்தித்தாள்

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு! - சிறுகதை

நாட்டில் நடக்கும் செய்திகளைத் தெரிந்துகொள்ள பெரும்பாலோர் செய்தித்தாள் வாசிப்பார்கள்; வேறு சிலர் தொலைக்காட்சியில் செய்தி அறிக்கை கேட்பார்கள்; இன்னும் சிலர் இன்டர்நெட்டில் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். சுவர் செய்தித்தாள் என்றுகூட உண்டு. செய்தித்தாளை ஒரு போஸ்டர் போல் அடித்து, முக்கிய இடங்களில் ஒட்டிவிடுவார்கள். ஆனால், லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் வசிப்பவர்கள் பிளாக்போர்டு நியூஸ் பேப்பரைப் படிக்க ஆர்வத்தோடு செல்கிறார்கள். நாளிதழ்களைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வசதி இல்லாதவர்களுக்கும் செய்திகளைத் தெரியப்படுத்தவேண்டும் என்று நோக்கத்தோடு, ஆல்ஃப்ரெட் ஜெ.சர்லீஃப் (Alfred J.Sirleaf) என்பவர் கி.பி.2000ல் இந்த பிளாக்போர்டு நியூஸ் பேப்பரைத் தொடங்கிவைத்தார். ஒரு கரும்பலகையில் தினமும் சாக்பீஸால் செய்திகளை எழுதிவைக்கிறார். உள்ளூர் செய்திகளிலிருந்து உலகச் செய்திகள் வரை அனைத்தும் இடம்பெறும் இந்த பிளாக்போர்டு நியூஸ் பேப்பருக்கு இன்னமும் மவுசு குறையாமல் இருப்பது விசேஷம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு