Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

பால்காகின்: தொன்ம மதிப்புகளின் குறியீடு

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

பின் இம்ப்ரஷனிஸ இயக்கத்தின் மற்றுமொரு மகத்தான படைப்பு சக்தி, பால் காகின் (1848-1903). வான்காவைப் போன்றே அகவுலக வெளிப்பாடுகளில் கவனம் செலுத்தியவர். ஒளி சார்ந்த  கருத்துகளில் இம்ப்ரஷனிஸவாதிகள் கொண்டிருந்த அதீதமான ஈர்ப்புக்கு மாறாக, வண்ணங்களின் பிரத்யேகக் குணாம்சங்களிலும் வண்ணத்தை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்துவதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் காகின். வண்ணங்கள் தீர்க்கமான வெளிப்பாட்டு சக்தியாக, ஓவியத்தில் அமைய வேண்டும் எனக் கருதியவர். வண்ணங்கள் குறித்த தீட்சண்யமான அணுகுமுறையே படைப்பின் ஆற்றலைக் கட்டமைக்கிறது என்ற கருத்தாக்கத்தை வலுவாகக் கொண்டிருந்தார். எனினும், வான்காவின் அடர்த்தியான, தடிமனான தூரிகைத் திட்டங்களுக்கு மாறாக, காகினின் வண்ணப் பகுதிகள் தட்டையாகவும், தொனி வேறுபாடுகள் அற்றவையாகவும், அரூப வடிவங்களை நோக்கி நகரக்கூடியவை யாகவும் அமைந்தன.
தொடக்கத்தில், இம்ப்ரஷனிஸ பாணியில் நிலக்காட்சிகளை ஒரு தருணத்தின் பதிவு என்பதாக ஒளியின் நுட்பமான ஜாலங்களோடு இவர் உருவாக்கினார். ஆனால், ஓவியத்தை முழு நேரத் தொழிலாகப் பின்னர் ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய நாற்பதுகளில் புதிய கலை வெளிப்பாடுகளைக் கண்டடைய வேட்கை கொண்டார். இந்தச் சமயத்தில் இம்ப்ரஷனிஸம் என்பது பொக்கானது, அர்த்தமற்றது என்று அவர் கருதினார். அதற்கு எதிரான கருத்தாக்கங்களில், அணுகுமுறைகளில், கலைச் செயல்பாடுகளில் அவருடைய கவனம் குவிந்தது. இந்தத் தேடல்தான், இறுதியில், ஆற்றல்மிக்க, வீர்யமான காட்சி மொழியைக் கண்டடைய உதவியது. குறியீடுகளும் தொன்மங்களின் பெருமதிகளும் இவருடைய ஓவியங்களின் பிரதான அம்சங்களாகின.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz1886-ல், தன்னுடைய 38-வது வயதில், தன் தொழிலைக் கைவிட்டு, பாரீஸிலிருந்து வெளியேறி, பிரான்ஸின் ஒரு மாகாணமான பிரிட்டானியில் உள்ள ‘போன் - அவென்’ என்ற இடத்துக்குச் சென்றதில் இருந்து இவருடைய முழுநேர ஓவிய இயக்கம் தொடங்கியது. அங்கு அவர் வரைந்த, ‘சமயப் பேருரைக்குப் பின்னான பார்வை அல்லது ஒரு தேவதையுடன் ஜேக்கப்பின் மல்யுத்தம்’ என்ற ஓவியம் அதுவரை அவர் மேற்கொண்டிருந்த யதார்த்த மற்றும் இம்ப்ரஷனிஸ பாணி ஓவியங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டிருந்தது. பிரிட்டானியின் பரிசுத்தமான பண்பாட்டுச் செழுமையும், அதன் தொன்மையான நாட்டுப்புற வாழ்வியலும், இன்னமும் அந்த மக்களிடம் காணப்பட்ட இடைக்காலத்திய கத்தோலிக்க இறைப்பற்றும் அவரை வெகுவாக ஆகர்சித்திருக்கின்றன. அங்கு வசிக்கும் மக்கள், வெகு இயல்பாகவும் சகஜமாகவும் அவர்களுடைய மாசற்ற சூழலில் வாழ்வதாக எண்ணினார்.

இந்த ஓவியத்தில் பிரிட்டானியப் பெண்கள், கஞ்சியிடப்பட்ட மொடமொடப்பான அவர்களுடைய ஞாயிற்றுக் கிழமையின் வெள்ளைத் தொப்பிகளோடும் கறுப்பு ஆடைகளோடும் இருக்கின்றனர். அவர்கள் அப்போதுதான் தேவாலயப் பிரசங்கத்தில் கேட்டிருந்த, புனித ஆவியுடன் ஜேக்கப் நடத்தும் சண்டையைத் தங்களுடைய மனக் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இறைப்பற்றோடு பரிசுத்த ஆவியை வணங்கி நிற்கின்றனர்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

பார்வைப்புலனுக்கு உட்பட்ட யதார்த்தத்தில் இருந்து விலகி, பார்வையாளர்கள் படைப்புப் பொருளை ஆழ்ந்து கிரகிக்கும் வகையில் ஓவியக் கூறுகளை காகின் கட்டமைத்திருக்கிறார். இந்த ஓவியத்தின் படிமங்கள், ஓர் இம்ப்ரஷனிஸவாதியின் கண் பார்வைக்கு வெளிப்படுபவையாக இல்லாமல், நினைவுகளின் தடத்திலிருந்தும் கற்பனையின் ஊடுபாவிலிருந்தும் உருவாகியிருக்கின்றன. இதன் மூலம் காகின், பார்வைவெளியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி, எவ்விதக் கேள்விகளும் அற்று சரணாகதித் தன்மையுடன் இருக்கும் வெகுளியான அந்தப் பெண்களுக்குப் படைப்பு வெளியில் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதற்கேற்ப, ஜேக்கப்புக்கும் தேவதைக்கும் இடையேயான சண்டை ஒரு சேவல் சண்டை அளவுக்குக் குறுக்கப்பட்டிருக்கிறது.

காகின், இந்த ஓவியத்தைத் தொடுவானப் பார்வையிலிருந்து ஒருங்கிணைப்பதாகவோ, ஒளியும் நிழலும் ஊடாடியதாகவோ, அல்லது வண்ணத்தின் இயல்பான பயன்பாட்டிலோ உருவாக்கவில்லை. மாறாக, ஒரு கட்டமைப்புக்குள் காட்சியை அரூபமாக்கியிருக்கிறார். தீர்மானமான கோடுகளால் ஆன நிலப்பகுதிகளையும் வடிவங்களையும், தூய, எவ்விதத் தொனிக் கலப்புமற்ற வண்ணத்தால் நிரப்பியிருக்கிறார். வெள்ளைத் தொப்பிகளும், கறுப்பு ஆடைகளும், சண்டை நடக்குமிடத்தின் சிவப்பும் என்றான வண்ணத் தொகுப்பினைக் கொண்டிருக்கிறது ஓவியம். தொப்பிகளும், கூர்மையான விரல்களும், முகத் தோற்றங்களும், முரட்டுவாகும் குடியானவர்களின் வாழ்வியலை உணர்த்துகின்றன. மரபான மற்றும் இம்ப்ரஷனிஸ ஓவிய பாணிகளிலிருந்து முற்றிலுமாக விலகி, கோடு, வடிவம், தூய வண்ணம் சார்ந்து அக வெளிப்பாடு அரூபம்கொள்ளும் வகையில் பரீட்சார்த்தமான கலைச் செயல்பாட்டை மேற்கொண்டிருக்கிறார். அவருடைய புதிய கலைஎழுச்சிமிக்க அணுகுமுறையின் முதல் தீர்க்கமான வெளிப்பாடுதான், ‘சமயப் பேருரைக்குப் பின்னான பார்வை’ என்ற இந்த ஓவியம்.

இந்தக் காலகட்டத்தில் ஓவியத்தில் குறியீட்டுத்தன்மைகளும் அரூபக் குணாம்சங்களும் உள்ளுறைய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுப்பெற்றிருந்தது. இம்ப்ரஷனிஸவாதிகள் இயற்கைக் காட்சிகளை வரைவதில் காட்டும் அதீத முனைப்பையும் அவர் அர்த்தமற்றதாகக் கருதினார். யதார்த்த மற்றும் இயற்கைப்பாங்கான ஓவிய பாணிகளைப் புறக்கணித்த காகின், வண்ணமிடுதலும் கற்பனையும் செய்நேர்த்தியும் ஒத்திசைய வேண்டுமென பிரயாசைப்பட்டார். படைப்பில் குறியீட்டுத் தன்மையே பிரதானம் என்ற கருத்தியலைக் கொண்டிருந்தார். வண்ணங்களை, எவ்விதச் சாயைகளுமின்றித் தட்டையாகக் குறியீட்டுத் தளத்திலேயே பயன்படுத்தினார்.

1888-ல் அவர் வான்காவோடு ‘ஆர்ல்’ பகுதியில் வான்காவின் மஞ்சள் வீட்டில் எட்டு வாரங்கள் தங்கியிருந்தபோது காகின் வரைந்த ஓவியங்களில் ஒன்று ‘ஆர்லினியர்கள்’. இந்தப் படைப்பில் உள்ள கூறுகள் ஆர்ல் வாழ்க்கையில் அவர் மனம் கிரகித்தவற்றின் பிரதிபலிப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், அவருடைய கற்பனை ஆற்றலும் இதில் கலந்துறவாடி இருக்கிறது. இரண்டும் ஓர் ஒத்திசைவில் லயப்பட்டிருப்பதுதான் விசேஷம். வண்ணத் தீட்டல்களையும், கட்டமைப்பையும், வரைமுறைகளையும் இதில் மிகவும் எளிமைப்படுத்தியிருக்கிறார். படைப்பு, குறியீட்டுத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதே அவருடைய தீர்க்கமான கலை நம்பிக்கை. அதற்கேற்ப தெளிவான வரையறைக் கோடுகள், வடிவவியல் சார்ந்த அமைப்புகள், ஒரே தொனியிலான வண்ணப் பகுதிகள் என்ற கலை அணுகுமுறையை அவர் கைக்கொண்டிருந்தார். காகினின் தட்டையான தூரிகைத் திட்டங்களும், கற்பனையின் ஆற்றல்மீது காகின் கொண்டிருந்த நம்பிக்கையும் வான்காவைப் பெரிதும் வசீகரித்தன. வான்கா, தன் ஓவியங்களில் அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கினார்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

1891-ல், ஐரோப்பிய நகர நாகரிகத்தில் இருந்து விடுபட்டு வாழும் வேட்கையோடு,  ‘தகிதி’ தீவுக்குத் தன் இருப்பை மாற்றிக்கொண்டார். தொன்மங்களின் பெறுமதிகள்மீது அவர் எப்போதுமே அலாதியான ஈடுபாடும் நம்பிக்கையும் நேசமும் கொண்டிருந்தார். அங்கிருந்த பழங்குடி மக்கள் வாழ்வோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். தென் பசிபிக்கின் வசீகரத்தையும் மீறி, காகினுடைய வாழ்க்கை கடும் அவதிக்கு உள்ளானது. ஆரோக்கியம் குலைந்தது. அவருடைய படைப்புகளுக்கும் உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 1897-ல் மனம் நொந்துபோயிருந்த காகினைத் தற்கொலை எண்ணம் ஆக்கிரமித்தது. அதே சமயம், வாழ்வு மற்றும் கலை குறித்த அவருடைய தரிசனத்தை மகத்தானதொரு படைப்பாக உருவாக்கும் வேட்கை மேலிட்டது. அப்படியான ஒரு ஜுர வேகத்தில் அவர் படைத்த மாபெரும் ஓவியம்தான், ‘நாம் எங்கிருந்து வருகிறோம்? நாம் யார்? நாம் எங்கே போகிறோம்? அவருடைய கலை வெளிப்பாட்டு முறைகளும், வாழ்க்கை பற்றிய தரிசனங்களும் ஓர் இசைமையில் உயிர்கொண்டிருக்கும் படைப்பு அது. அவருடைய கடைசி ஆசையின் கலை ஆவணம்.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்இது, அவருடைய படைப்பு சக்தி, தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்ட படைப்பு. பெறுமதியில் மட்டும் அல்ல, அளவிலும் மிகப் பெரிய ஓவியம். 4.50 மீட்டர் அகலமும் 1.70 மீட்டர் உயரமும் கொண்டது. அவருடைய கனவின் வடிவம். தன்னுடைய படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று அவர் இந்த ஓவியத்தைக் கருதினார். நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காகின் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்: “இந்த கேன்வாஸ் என்னுடைய முந்தைய எல்லாவற்றையும் கடந்து நிற்கக்கூடியது. இதைவிட மிகச் சிறந்த ஒன்றை அல்லது இதுபோன்ற ஒன்றை இனி என்னால் ஒருபோதும் படைத்துவிட முடியாது.”

இந்த ஓவியக் காட்சியில் தகிதித் தீவின் பெண்களும் குழந்தைகளும் வீட்டு விலங்குகளும் நிறைந்திருக்கிறார்கள். ஓவியத்தின் மேல்பகுதியில் இடது மற்றும் வலது முனைகளில் ஒளிரும் மஞ்சள் சிட்டுகள் காணப்படுகின்றன. இடப் பக்க முனையில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. வலப்பக்க முனையில் காகினுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது. இவை இரண்டுமே காலத்தால் சிதைந்துபோன சுவர்ச் சித்திரத் தன்மையோடு அமைந்திருக்கின்றன. இந்த ஓவியத்தின் படிமங்களை வலமிருந்து இடமாக வாசித்துச் செல்ல வேண்டுமென காகின் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, வலது முனையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையிலிருந்து, இடது முனையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்மணி வரையாக இது வாசிக்கப்பட வேண்டும். அத்தகைய வாசிப்புக்கான ஓவியப் பிரதி இது.

ஓவியத் தலைப்பு மூன்று தத்துவார்த்தக் கேள்விகளைக்கொண்டிருக்கிறது. அதற்கான பதில்கள் ஓவியத்தில் மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதற்கான படிமம். மத்தியில் பழம் பறித்தபடி நின்றிருக்கும் உருவம், நாம் யார் என்பதற்கான படிமம். இறுதியில் இருக்கும் வயதான பெண்மணி,   நாம் எங்கு போகிறோம் என்பதற்கான படிமம். நம் இருப்பின் அர்த்தம் குறித்த மிக முக்கியமான கேள்விகளுக்கு ஓவியம் பதில் தர முற்பட்டிருக்கிறது. படைப்பின் நோக்கம் அல்லது செய்தி, படிமங்களின் வழி உள்ளுறைந்திருக்கிறது. அவர், தன் நண்பருக்கு இந்த ஓவியம் பற்றித் தெரிவித்திருக்கும் குறிப்பு, அவருடைய தத்துவார்த்த முடிவுகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது: “நாம் எங்கே போகிறோம்? ஒரு மூதாட்டியின் மரணத்தின் அருகில்... நாம் யார்? அன்றாட இருப்பு... நாம் எங்கிருந்து வருகிறோம்? ஆதாரம், குழந்தை. வாழ்க்கை தொடங்குகிறது... ஒரு மரத்துக்குப் பின்னால் இரண்டு உருவங்கள் இருளார்ந்த வண்ணத்தில் இருக்கின்றன. அறிவெனும் மரத்தினருகில் இருக்கும் இவர்கள், அந்த அறிவின் காரணமாகவே கடும் துயர் தாங்கியிருக்கிறார்கள். இதற்கு மாறாக, மனித இனத்தால் சொர்க்கம் என அறியப்பட்ட இயற்கைக் கன்னியிடம் சில எளிய ஜீவன்கள் வாழ்தலின் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள்.”

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்

இந்த ஓவியத்தில் அமைந்திருக்கும் கூறுகள் பற்றி காகின் விவரித்திருக்கும் ஒரு குறிப்பு, இந்த ஓவியத்தை அணுக நமக்குப் பெரிதும் உதவும்; “ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வலது முனையில் ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. அதன் அருகில் மூன்று பெண்கள் பாந்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஆடை அணிந்திருக்கும் இரு பெண்கள், தங்களுடைய எண்ணங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்கிறார்கள். அளவு மீறியிருக்கும் ஒரு பெண், உடலை வளைத்தும் குறுக்கியும் அமர்ந்தபடி தன் கைகளை உயர்த்தி, முகம் திருப்பி, அந்த இருவரையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மத்தியில் ஓர் உருவம் மரத்திலிருந்து பழத்தைப் பறித்துக்கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு சிறுமி. அவளருகில் இரண்டு பூனைகள். ஒரு வெள்ளாடு. ஒரு சிலை. அதன் கரங்கள் ஒரு புதிர்த்தன்மையோடு ஓர் இசைமையில் உயர்ந்திருக்கின்றன. அப்பால் உள்ள ஓர் உலகைச் சுட்டிக் காட்டுவது போலிருக்கிறது. கடைசியாக, மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணி, எல்லாவற்றையும் எவ்வித யோசனையும் இன்றி ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையில் காணப்படுகிறாள். அந்தப் பெண்மணி இந்தக் கதையை முடித்துவைக்கிறாள். அவளுடைய காலடியில் ஒரு வினோதமான வெள்ளைப் பறவை. அது, வார்த்தைகள் பயனற்றவை என்பதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆக, நான் ஒரு தத்துவார்த்தப் படைப்பை முடித்துவிட்டேன்.”

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 5 - சி.மோகன்இந்தப் படைப்பு தற்கொலை மனோபாவத்திலிருந்து அவரை மீட்டெடுத்தது. அவருடைய கலை அணுகுமுறைகளுக்கான உச்சபட்ச உதாரணம், இந்த ஓவியம். வண்ணங்களை வெவ்வேறு சாயைகளின்றித் தூயதாகப் பயன்படுத்தித் தட்டையான வடிவங்களைக் கட்டமைக்கும் காகினின் தீர்க்கமான வெளிப்பாடுகளில் விகாசம் பெற்றிருக்கிறது. வாழ்க்கைச் சுழற்சியின் தவிர்க்க முடியாத தன்மையைக் குறியீடுகளாகக் கொண்டு இயங்கும் அற்புதப் படைப்பு இது.

1903-ல் முற்றிலுமாக மனம் தளர்ந்த நிலையில் வறுமையில் உழன்று, 54-வது வயதில் மரணமடைந்தார் காகின்.

சாமெர்செட் மாம் எழுதிய ‘த மூன் அண்டு த சிக்ஸ் பென்ஸ்’ என்ற நாவல், பால் காகினின் வாழ்வைத் தழுவிய ஒரு புனைவு. நாலு காசுக்காக வாழும் லெளகீகத்தைப் புறக்கணித்து, கலை வாழ்வின் மூலம் ஒரு கலைஞன் நிலவை அடைகிறான் என்பதை இந்த நாவலின் தலைப்பு உணர்த்துகிறது. கலைவாழ்வின் மூலம் நிலவைக் கைப்பற்றிய கலைஞன் காகின்.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகோன்னதமான படைப்பு சக்திகளாக இயங்கிய பால் செசான், வின்சென்ட் வான்கா, பால் காகின் ஆகியோரின் புதிய கலை தரிசனங்களிலிருந்து எழுச்சி பெற்றவைதாம், 20-ம் நூற்றாண்டின் நவீன செவ்வியல் கலை இயக்கங்கள்.

(பாதை நீளும்...)