
ஓவியம் : கார்த்திகேயன் மேடி

கண்களைப் பின்னின்று
இழுத்துச் சாத்துகிறது காற்று
அது நினைக்கிறது
இலைகளே விளக்கு
இலைகளே வேல்
இலைகளில் தளிர் பெண்களின் இதழ்
ஓரிலையை மூன்றாவது கண்ணாய்
எச்சில் தொட்டு ஒட்டுகிறது
காற்றின் நாவு

காட்டுப்பூக்களின் மகரந்த மொட்டுகளால் நிறைந்திருக்கிறது
சதைகளின் மேல் இடும் முத்தங்கள்
அதற்குப் பயணம்
உயிரைத் தொடும் கணம்
உதடு புதைத்து அழுகிறது
காற்று காற்றை மடியில் கிடத்திக்கொண்டு
புரட்டப்பட்ட தாமரை இலையாய்
முக்காலத்துக் கருவறையில் இருந்ததைப்
புலம்பல் மொழியில்
அதன் நரம்புகள் புடைக்க
ஒப்பாரி வைக்கிறது
உடல் கூட்டைப் பற்றி ஒழுங்குசெய்கையில்
உயிர் பதைக்க
எனது வீடு எனது வீடு என்று
தனது மார்பிலடித்து ஒலி எழுப்புகிறது
அதன் அதிர்வு உள்ளே
அறுபத்தி நான்கு திசைகளில் எதிரொலிக்கிறது
இன்னுயிர் உடலின் சுவர்கள்
மாமலைகளின் ஏழாவது அடுக்கு
த தகத் தக த தகத் தக த
இங்கே
நீர்வீழ்ச்சிகள் சில
முடிச்சுகளுடனும் பாய்கின்றன
ஆம் என மோதும் காமச்சோலை உள்ளே
கருவறை தீக்கடல்
அதனிரு கைகளிலும்
தகிக்கும் வெறுமை படைக்கும் ஆயுதங்கள்
ஆல விழுதென அசைகின்றன
இதயம் கூழாங்கல்
அதனுள் பாயும் நீர்
மகாமகத்திற்கு முந்தைய காலத்தில்
விளைந்த செம்மருது மரத்தின் சாறு
ஈரக் குச்சிகொண்டு
ஈரலுக்குள் மீண்டும்
வலம் வருகிறது காற்று
தன் தன் தன்
காற்றின் பாத ஒலி
தன்னென்றிருக்கிறது
நடுநெற்றி மிதித்து நடக்கிறது
தன்
தன்
தன்
உம்மென்றபடி புன்னகைக்கும் கண்.