Published:Updated:

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

Published:Updated:
வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்
வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

திகாலம் தொட்டு தமிழின் இலக்கிய வரலாற்றுச் சங்கிலியைக் கொஞ்சம் ஆராய்ந்தோமானால், அது கடந்துவந்த மொழிப்பாதையை அறிந்துகொள்ளலாம். சமஸ்கிருதச் சொற்கள் கலந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகாலத் தமிழும், அந்த மொழியில் இயங்கிய எழுத்தாளர்களும், அவர்கள் கொண்ட லட்சியவாதம், விடுதலை, அறம், நீதி, நேர்மை ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தி படைப்பாக்கினார்கள். அந்த அளவில் ஒரு படைப்பை உருவாக்க அத்தகைய மொழி போதுமானதாக இருந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, பி.ஆர்.ராஜமய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, பெரும்பாலும் கவிஞராகவே அறியப்பட்ட பாரதியாரின் உரைநடைகள் போன்றவற்றில் அந்த மொழி சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் உருவான ‘குடியாட்சி’ போன்ற பத்திரிகைகளில் திரு.வி.கல்யாணசுந்தரனார், மறைமலையடிகள், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாவாணர் போன்றவர்கள் இலக்கணச் சுத்தத்துடன்கூடிய எழுத்துநடையைக் கையாண்டார்கள். அந்த மொழியை, செந்தமிழ் மொழி, தனித்தமிழ் மொழி என்று அவர்கள் அழைத்தார்கள். அந்த மொழியானது சற்றுக் கடினமானதும் இயல்பான பேச்சுக்கு உகந்ததாக இல்லாத மொழியாகவும் இருந்தது. பெரும்பாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதற்கே அது பயன்பட்டது.

அதற்கு அடுத்தபடியாகத் தமிழ்மொழியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால், திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றி, பேசியும் எழுதியும் வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, அன்பழகன், மதியழகன், கா.காளிமுத்து, சத்தியவாணிமுத்து போன்றோரைச் சொல்லலாம். இவர்கள் எழுதிய எழுத்துகளும், பேச்சுகளும் ‘அடுக்குமொழி’ என்றும், ‘அலங்கார மொழி’ என்றும் அழைக்கப்பட்டன. பெரும்பாலான இளைஞர்களால் பின்பற்றப்பட்ட இந்த மொழிநடையில் எழுதப்பட்ட பல்வேறு ஆக்கங்கள், சமூகம் சார்ந்த பிரச்னைகளை முன்னிலைப்படுத்தின. பெண் விடுதலை, வரதட்சணை, தீண்டாமை, அந்நிய மொழி எதிர்ப்பு, நாத்திகவாதம் முதலியவற்றை மையப்படுத்தின.

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்சுதந்திரத்தையும் விடுதலையையும் மையப்படுத்திய படைப்பாக்கங்கள், சுதந்திரத்துக்குப் பின்னர், எப்படி முக்கியத்துவம் அற்று, வெற்று ஆவணங்களாக மட்டுமே மாறிப்போனதோ அதேபோல, திராவிடக் கட்சிப் பிரமுகர்களின் சமூகப் பிரச்னைகள் பற்றிய ஆக்கங்களான பெண் விடுதலை, வரதட்சணை, தீண்டாமை, கலப்பு மணம், விதவை மறுமணம், மொழிக் கொள்கை போன்றவை, சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து பெற்ற பின்னர், முக்கியத்துவமற்று பின்னர் நீர்த்து காணாமலேயே போய்விட்டன. திராவிடக் கொள்கை சார்ந்த தலைவர்களும் தாங்கள் பேசுவதையும், எழுதுவதையும் முற்றாக மாற்றிக்கொண்டனர். கால ஓட்டமும், ஊடகங்களின் தாக்கமும், உலக மயமாக்கலால் ஏற்பட்ட பொதுத்தன்மை, நவீனத்துவம், விஞ்ஞான வளர்ச்சி, தொடர்பியல் வேகம் இவற்றால் முற்றிலும் புதிது புதிதாகத் தோன்றும் கலாசாரங்கள், மேற்கத்திய வாழ்வியல், உணவு, உடைகள் போன்றவற்றாலும் இதுவரை நாம் பயன்படுத்தி வந்த மொழிப்பண்புகள், அடையாளங்கள் முற்றாக மாறிவிட்ட நிலையில்தான் புதுமைப்பித்தனால் புதுவடிவ மொழி தோற்றுவிக்கப்படுகிறது.

புதுமைப்பித்தனால் அவருடைய படைப்புகளில் பயன்படுத்தப்பட்ட அந்த மொழியை நம்முடைய வசதிக்காகப் ‘பத்திரிகை மொழி’ என்று வைத்துக்கொள்ளலாம். ‘மணிக்கொடி’ காலம் தொட்டு இன்று வரை தமிழ் மொழியில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பயன்படுத்தும் மொழியாக இதுவே விளங்குகிறது. மௌனியும், லா.ச.ராவும் இம்மியளவு வேறுபடலாம். சமூகத்தின் அத்தனை பிரச்னைகளும், வரலாற்றுப் புதினங்கள் உட்பட எழுதப்பட்டது இந்தப் ‘பத்திரிகை மொழி’யில்தான்.

ஆனால், வட்டாரம் சார்ந்த, தனித்த கலாசார அடையாளங்களுடன் வாழும் இனக்குழுக்கள், பழங்குடியினர், தலித்துகள், கடல்சார்வாழ் பரதவர்கள், நாடோடிகள், திருநங்கைகள் போன்றோரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட இலக்கியப் படைப்பாக்கங்களுக்கு பத்திரிகை மொழிநடை பயன்படவில்லை அல்லது போதவில்லை. ஆகவே, மேலே சொன்னவர்களின் தனித்த வாழ்க்கை அடையாளங்களைப் பதிவுசெய்ய, வேறு ஒரு மொழிநடையைக் கண்டடைய வேண்டிய கட்டாயத்தில் வட்டார மொழியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

வீன தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார எழுத்து என்றும், வட்டார இலக்கியம் என்றும் அடையாளம் காணப்பட்ட ஏராளமான இலக்கியப் பிரதிகளும் எழுத்தாளர்களும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா? அவர்களின் இலக்கிய ஆக்கங்கள் புதியவர்களால் பின்பற்றக்கூடிய இலக்கிய ஆக்கங்கள்தானா? அப்படி என்றால், அவர்களைத் தொடர்ந்து உருவான வட்டார இலக்கியங்கள் எவையெவை? முழுக்க முழுக்க வட்டார எழுத்தால் எழுதப்படும் இலக்கியங்களின் இன்றைய நிலை என்ன? வட்டார எழுத்தை தங்களது அடிநாதமாகக் கொண்ட தலித் இலக்கியங்கள், காத்திரமான இலக்கியப் படைப்புகளாக, காலத்தை எதிர்த்துப் பேசப்படும் இலக்கியங்களாக இருக்கின்றனவா, இல்லையென்றால் கால வெள்ளத்தில் காணாமல் போய்விட்டனவா என்று சற்றே சிந்தித்தோமானால், தற்கால நவீன தமிழ் இலக்கியங்களில் வட்டார இலக்கியப் போக்குகளை கீழ்க்கண்டவாறு அவதானிக்கலாம்.

முதலில் வட்டார இலக்கியத்துக்கான வரையறைகள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடும். கொங்கு வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ள சொற்கள், கரிசல் வட்டாரத்தில் வேறுபடும். தஞ்சை வட்டாரச் சொற்கள் நாஞ்சில் நாட்டு வட்டாரச் சொற்களின் அர்த்தத்தில் வேறுபடும். ‘மல்லாட்டை’ என்று சுட்டப்படும், வேர்க்கடலை பற்றிய சொல், கடலை மிட்டாய்க்குப் பெயர்பெற்ற கரிசல் வட்டாரத்தில் புரியாது. நிலக்கடலை என்றோ வேர்க்கடலை என்றோ சொன்னால்தான் புரியும். மொழியைப் போலவே ஒவ்வொரு வட்டாரத்திலும் தொழில்களும் வேறுபடும். அது  மொழியிலும் படிந்து செயல்படும். கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய நாஞ்சில் வட்டாரத்தில் முக்கியத் தொழில்கள் தும்பு, முந்திரி, ரப்பர் என்றால், கரிசல் வட்டாரத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு போன்றவை முக்கிய தொழில்கள். இவ்வாறு மாவட்டம் தோறும் மாறுபடும் தொழில்களைப்போலவே அந்தந்தப் பிரதேச மக்கள் பேசும் மொழியும், நடையும், உச்சரிப்பும், அர்த்தங்களும் மாறுபடுவதிலும், அவற்றை உள்ளடக்கிய இலக்கியங்களும், உரைநடைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுவதும் இயல்பானதே. முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பி வாழும் கரிசல் பிரதேசத்தின் மானாவாரி சாகுபடிமுறை மக்களின் வாழ்வும், ஆற்றுப் பாசன விவசாயத்தை பிரதானமாகக்கொண்ட தஞ்சைவாழ் மக்களின் வாழ்வும், பேச்சும், கலாசாரங்களும் நிச்சயம் வேறுபாடு கொண்டவைதாம்.

ஆக, அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் எழுத்துகள்,  ‘வட்டார எழுத்து’ அல்லது ‘வட்டார இலக்கியம்’ என்று சுட்டப்படுகின்றது. இதுபோன்ற வட்டார எழுத்துகளில் பாத்திரங்கள் பேசுகின்ற மொழி, குறிப்பிட்ட வட்டார மொழியாக இருக்கும். வாசகன் இந்த எழுத்து, இந்த வட்டார மக்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு என்பதை உணர்ந்துகொள்வான். பொதுவான இலக்கிய நடையிலிருந்து வட்டார இலக்கியம் வேறுபடுவதே பாத்திரங்களின் பேச்சு மொழி உரையாடல்களிலும், அதன் தொழில் சார்ந்த இயங்கு தளத்திலும்தான். தோல் தொழிற்சாலை பற்றிய எழுத்து என்றால், உடனே திண்டுக்கல் வட்டாரம் சார்ந்த படைப்பு அது என்று நாம்  அவதானித்துக்கொள்ள இயலும்.

இவ்வாறு தனித்த அடையாளங்களுடன் காத்திரமான படைப்புகளாக இயங்கிய எழுத்துகளுக்கு முன்னோடி எழுத்தாளராக, கொங்கு நாட்டின் வட்டாரப் பேச்சுகளையும், பாத்திரங்களையும், துல்லியமாகச் சித்தரித்துக் காட்டிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரத்தை ‘வட்டார எழுத்தின் முதன்மைப் பிதாமகன்’ என்று குறிப்பிடலாம். அவருக்குப் பின்னர், அவரைப்போலவே அந்தந்தப் பிரதேச மக்களை முதன்மைப்படுத்தி எழுதிய எழுத்தாளர்களை, முதல் தலைமுறை வட்டார எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம்.

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்

ஆர்.சண்முகசுந்தரம், கி.ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி, சூரங்குடி அ.முத்தானந்தம், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அஸ்வகோஷ்,
சோலை.சுந்தரபெருமாள், சி.எம்.முத்து, டி.செல்வராஜ் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவர்களுடைய எழுத்தில் அந்தந்த வட்டாரப் பேச்சுமொழியே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பாத்திரங்களின் உரையாடல்கள் மிகுதியாக இருக்கும். சில இடங்களில் வட்டார மொழியைப் பேசுவதற்காகவே பாத்திரங்கள் உருவாக்கப்பட்டனவோ என்று ஐயப்படுகிற அளவுக்கு உரையாடல்கள் இடம்பெறும். பிரதேச முக்கியஸ்தங்கள் கவனப்படுத்தப்படும். தன் கூற்றை எழுதும்போதுகூட வட்டார மொழியைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. அதேசமயம் இவர்களின் பெரும்பாலான ஆக்கங்கள் விலாவாரியாகப் புறத்தை வர்ணித்துவிட்டு, ஒற்றைத்தளத்தில் இயங்கி பன்முக அர்த்தத்தை உருவாக்காமல், மறுவாசிப்பிற்கு இடமின்றி, செய்திகளாகவும், ஆவணங்களாகவும் நின்றுவிடுகின்றனவோ என்கிற சந்தேகத்தை முன்வைக்க விரும்புகிறேன். இன்று, இந்த நோக்கில் இவர்களின் படைப்புகள் மறுவாசிப்பும் மறுபரிசீலனையும் செய்யப்பட வேண்டும். மற்றொருபுறம், இடதுசாரியச் சிந்தனைகளை எழுதுகிறேன் பார் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய எழுத்துகளில் புனைவுகளோ, அகச்சிந்தனைகளோ, அழகியலோ, தத்துவார்த்த உளவியல் சிந்தனைகளோ இல்லாததால், வாசகன் இலக்கிய வாசிப்பை உணர்வதற்குப் பதில், செய்திப் பத்திரிகையின் வாசிப்பு அனுபவத்தையே உணர்ந்ததால், மறுவாசிப்புக்கான தேடலை அவனுக்கு அந்தப் படைப்புகள் தரவில்லை.

வட்டார எழுத்தின் இரண்டாம் தலைமுறையாகவும், வட்டார மொழியினைப் பிரதானமாகக்கொண்ட ‘தலித்’ இலக்கியங்களாகவும் எழுதப்பட்ட இலக்கியங்கள், தமிழ் இலக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்று துணிந்து சொல்லலாம். இந்த வகை எழுத்தாளர்களின் எழுத்துகள், ‘தலித்’ மக்களின் பிரச்னைகளை பிரதானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அந்தந்த வட்டார மொழியைத் தூக்கிப் பிடித்தன. மக்களின் பேச்சுமொழியை இம்மிகூடப் பிசகாமல் பதிவுசெய்தன. பாத்திரங்களின் உரையாடல்கள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டு, வட்டார மொழியை வாசகர்களிடம் கொண்டுசென்றன. இவர்களில் சிவகாமி, பாமா, இமையம், சோ.தர்மன், அழகிய பெரியவன், விழி.பா.இதயவேந்தன், அபிமானி, தேன்மொழி, குணசேகரன், திடவை.பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன், வேல.ராமமூர்த்தி ஆகியவர்களை முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களுடைய எழுத்துகளில் வட்டாரமொழி பிரதானப்படுத்தப் பட்டதுடன் அந்தந்த வட்டார மக்களின் (அ) தலித்துகளின் வாழ்க்கை முறைகளும் படைப்புகளாக வெளிப்பட்டன. இந்தக் கவனப்படுத்துதல்கள், படைப்புகள் காலத்தேவையின்படி முக்கியமானவையே எனும்போதும், வட்டார மொழியைப் பிரதானமாகக்கொண்ட ‘தலித்’ இலக்கியத்தில் புனைவு மொழியோ, படைப்பு மொழியோ இன்னும் காத்திரமாகப் பயன்படுத்தப்படவில்லை என்றே சொல்வேன். சில முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. நானும் பல கதைகளில் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.  தொடர்ந்து இந்தச் சவாலை புதியவர்களும் சிரத்தையோடு எதிர்கொள்ள வேண்டும்.

பழங்குடிகளின் வாழ்வியலையும், தனித்த கலாசார அடையாளங்களையும் பிரதானப்படுத்தும் நாவல்களும், கடல்சார் மக்களான பரதவ மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசார அடையாளங்களைப் பிரதானப்படுத்தும் படைப்புகளும், மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளதை இங்கு நாம் நினைவுகூர வேண்டும். அதனால்தான் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’, ஜோ டி குரூஸின் ‘ஆழி சூல் உலகு’, தோப்பில் முகமது மீரானின் ஆக்கங்கள், வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ போன்றவை முக்கியமாகின்றன. மலைவாழ் மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ குறிப்பிடப்பட வேண்டிய ஒரு படைப்பு.

வட்டார இலக்கியத்தில், யதார்த்தபாணியில் வட்டார மொழியைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் ஏராளம். அவர்களில் வட்டார மொழியை, படைப்பு மொழியாக மாற்றி, நுண்மொழியாகவும் தகவமைத்து, தங்களது ஆக்கங்களைப் படைப்பாக நிமிரச் செய்தவர்கள் என்றால், என் வாசிப்பனுபவத்தில் சா.கந்தசாமி, பெருமாள் முருகன், வண்ணநிலவன், மா.அரங்கநாதன், பாவண்ணன், நாஞ்சில்நாடன் போன்றோரைக் குறிப்பிடுவேன்.

ரந்த வாசிப்பனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, வாழ்வனுபவங்கள் எதுவுமின்றி அயல்மொழி இலக்கிய அடையாளங்களை, தமிழ்க் கலாசார அடையாளங்களைப்போலத் திரித்து, தத்துவார்த்த சாயம் பூசி, மேஜிக் செய்யும் எழுத்தாளர்கள் மத்தியில் வண்டி வண்டியாக வாழ்வனுபவங்களையும் கலாசார அடையாளங்களையும் வைத்துக்கொண்டு, புனைவெழுத்து மொழியைக் கண்டடையாமல், தட்டையான மொழியில் எழுதியதால், தலித் இலக்கியங்களும், வட்டார இலக்கியங்களும் காட்சி ஊடக, அச்சு ஊடகச் செய்திகளைப்போல்தான் வாசகனைச் சென்றடைந்தன. இவர்களின்  எழுத்துகளைவிடவும், வலிமையான, காத்திரமானப் பதிவுகளை ஊடகங்கள் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன என்பதை எழுத்தாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

ஓர் உன்னதப் படைப்பின் தாத்பரியமே, எந்தக் காலத்திலும் அழியாத, காலத்திற்கேற்ற அர்த்தச்செறிவு தரக்கூடிய, வாசக மனதில் பல உள்ளலைகளை எழுப்புகின்ற, பல்தள இயக்கங்களைத் தொடர்ந்து  உருவாக்குவதுதான். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்று மௌனியால் எறியப்பட்ட இந்தச் சிறுவாக்கியம் கவிதையா? உரைநடையா? கவிதையுமல்ல, உரைநடையுமல்ல. கவிதையும்தான், உரைநடையும்தான்.

வட்டார எழுத்துகள் ஒரு மீன்வாசிப்பு - சோ.தர்மன்


‘கொலுசணிந்த தன் பிஞ்சுப் பாதங்களை குழந்தை தண்ணீருக்குள் வைத்துக்கொண்டது. அப்புறமென்ன, ஆனானப்பட்ட சூரிய பகவான் அந்தப் பிஞ்சுப் பாதங்களைத் தரிசிக்கக் காத்திருந்தார்’, என்ற புதுமைப்பித்தனின் வரிகளின் வழியே, ‘சிறு கை அளாவிய கூழ்’ என்ற வள்ளுவனின் ‘குழந்தை வீசிய உணவு’ நம் முகத்தில் தெறித்து மணக்கிறதல்லவா?

ஒவ்வொரு முறை நான் கோயிலுக்குள் நுழையும்போதும் மௌனியால் எழுதப்பட்ட, ‘புருவம் நெரித்து இருகால்கள் தூக்கி, கண்சிமிட்டிக் கூத்தாடும் யாளியை’ நான் உணர்கிறேன். அந்த யாளிதான் மௌனி எனக்களித்த சாமியும், கர்ப்பக் கிரகமும்.

‘புலி வேட்டைக்காக நூறு முறை வனத்துக்குள் போயிருக்கலாம். ஒரு முறைகூட நீ புலியைப் பார்க்காமல் திரும்பியிருக்கலாம். ஆனால், நூறு முறையும் புலி உன்னைப் பார்த்திருக்கும், உன் மேனியின் வாசனையை உணர்ந்திருக்கும்.’ என்ற வரிகளைவிட வனத்தை ஒரு வாசகனுக்கு உணர்த்த முடியுமா? வனத்தைப் பற்றியும் அதன் ரகசியங்கள் பற்றியும் யதார்த்த எழுத்தில் பத்துப் பக்கம் எழுதினாலும் இந்த வரிகள் உருவாக்கும் அனுபவம் நமக்குக் கிடைக்குமா?

வெறுமனே புறத்தை மட்டும் அச்சு அசலாகப் பதிவுசெய்யும் எழுத்துக்கு, இலக்கிய அந்தஸ்தை எதிர்பார்க்கும் நியாயம் கிடையாது என்பதே என் தரப்பு. ஏனெனில், அது மாதிரியான யதார்த்தபாணி எழுத்துகள், ஒரு முழுமையான படைப்பாக உருமாற்றம் கொள்ளாமல், பல்வேறு அர்த்தத் தளத்தில் இயங்காமல், ஒற்றை வாசிப்புத் தளத்தோடு வாசகனை ஒட்டாமலும், சலனப்படுத்தாமலும் நின்று விடுகின்றன. அப்படியானால், வட்டார மொழியைப் புனைவு மொழியாக மாற்ற முடியாதா? நிச்சயம் முடியும். தலித் மக்களின் அவலங்களை மட்டுமே பதிவு செய்யும் தலித் எழுத்தாளர்கள், தலித் மக்களின் அழகியலை, கலாசாரங்களை, பகடிகளை, குறிப்பாகப் பாலியல் சார்ந்த பகடிகளை, ஆக்ரோஷக் கோபங்களை, அதை வெளிப்படுத்த முடியாத அக்னித் தருணங்களை, அதை உருமாற்றி எப்படி அவன் வெளிப்படுத்துகிறான் என்கிற நுண்ணியச் செயல்பாட்டினை பதிவுசெய்ய முயல வேண்டும். இவற்றைப் பதிவுசெய்ய எத்தனிக்கும் ஒரு படைப்பாளி, வட்டார எழுத்தின், யதார்த்த எழுத்தின் ‘மொழிப் போதாமையை’ உணர்வான். அடுத்த நிமிடமே படைப்பு மொழி, புனைவு மொழி, நுண்மொழி, அகமொழி, சரட்டு மொழி போன்ற ஏதாவது ஒரு மொழியைக் கண்டடைய முற்படுவான். இந்த நுண்மொழியால் மட்டுமே படைப்பை உருவாக்க முடியும். அப்போதுதான் எழுத்துக்கும் படைப்புக்கும், எழுத்தாளனுக்கும் படைப்பாளிக்கும், உற்பத்திக்கும் உருவாக்கத்துக்குமான வேறுபாட்டைக் காண முடியும்.

தலித்துகளின் வாழ்க்கையையும், அவர்களின் தனித்த வாழ்வியல் கூறுகளையும் பிரதானமாகக்கொண்ட படைப்புகள் இன்று ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.  தலித் எழுத்தாளர்களும் தேங்கிவிடாமல், புதிய மொழியைக் கண்டடைய வேண்டும். அவ்வாறு கண்டடையும் மொழியானது, புனைவுகள், தொன்மங்கள், அழகியல், கலாசாரம், பகடி, பாலியல் சொல்லாடல்கள், தனித்த அடையாளங்கள் இவையனைத்தையும் பிரதானப்படுத்தும் ‘மாய மொழியாக’ இருக்க வேண்டும். அந்த ‘மாய மொழி’ எப்படி இருக்க வேண்டும்? தேவதச்சன், ஆசை, வெய்யில், தமிழச்சி தங்கப்பாண்டியன், சின்னச்சாமி, சமயவேல் போன்றோர் பயன்படுத்தும் கவிதை மொழி, ஒரே நேரத்தில் உரைநடை போன்றும் கவிதை போன்றும் புனைவு போன்றும் இயங்குகிறவிதத்தைப் பார்க்கலாம். என்னுடைய வாசிப்பு அனுமானத்தில் இவர்களின் மொழியை அந்த மாயமொழிக்கான உதாரணமாகச் சொல்வேன். என்னுடைய புனைவெழுத்து முயற்சிக்கு, மேலே குறிப்பிட்டுள்ள கவிஞர்களின் எழுத்துகளே முன்னுதாரணம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

முடிவாக, வட்டார மொழி எழுத்தாளர்களும் தலித் எழுத்தாளர்களும் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒன்று மொழிபெயர்ப்பு ஆக்கம். வட்டாரப் படைப்புகளை வேறுமொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது, தமிழ்ச் சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடைப்பது இல்லை. ‘கண்மாய்’ என்ற வார்த்தைக்கு ஆங்கில வார்த்தை கிடைக்காமல், வெள்ளைக்காரன் காலம் தொட்டு கண்மாய்களைப் பராமரித்து வரும் ‘பொதுப்பணித்துறை’யினரிடமே கேட்டதில் கிடைத்தது KANMAY என்ற சொல்! இதுபோல சொற்கள் சார்ந்த ஏராளமான அனுபவங்கள் எனக்கு  உண்டு. ஆக, மொழிபெயர்ப்பையும் கவனத்தில்கொண்டே வட்டார மொழி எழுத்தாளர்களும், தலித் படைப்பாளிகளும் தங்களின் படைப்புகளில் ‘மாய மொழியை’ப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், இன்று சிகரம்போலத் தெரியும் தலித் ஆக்கங்கள் காலவெள்ளத்தில் காணாமல் போய்விடக்கூடும். மொழியில் கவனம் கொள்வோம்!