Published:Updated:

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா
பிரீமியம் ஸ்டோரி
News
“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

சந்திப்பு : வெய்யில், பவா செல்லதுரை, கே.வி.ஷைலஜா எழுத்தாக்கத்தில் உதவி : உத்திரகுமாரன்படங்கள் : ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

டந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, பால் சக்காரியாவின் பெயரைத் தாங்கி வராத தினசரிகள் கேரளாவில் இல்லை எனச் சொல்லப்படுகிறது. இலக்கியம் மட்டுமல்லாது, கேரளச் சமூகத்தின் ஒவ்வோர் அசைவின் மீதும் தொடர்ந்து எதிர்வினை செய்பவர். 200 சிறுகதைகளுக்கும் அதிகமாக எழுதியிருக்கிறார். இவருடைய ஏராளமான கதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஒரு விடுதியில், முற்பகல் வேளையில் சந்தித்தோம். ‘தேன்’ கதையைப் பற்றிப் பேசத்தொடங்கியதும், உற்சாகமாகிவிட்டார். ஒவ்வொரு கேள்விக்கும் மெல்லிய புன்னகை, சரளமான மலையாளத்துக்கு இடையே அவ்வப்போது எளிமையான ஆங்கிலம் என அவர் உரையாடியதிலிருந்து...

“சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்தீர்கள்; வாசகர்களைச் சந்தித்து உரையாடிய அனுபவம் எப்படி இருந்தது?”

“மிகச் சிறப்பாக இருந்தது. நான் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருவது இது முதன்முறை அல்ல. பலமுறை வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதைப் பார்க்கிறேன். இவ்வளவு பேர் புத்தகக் காட்சிக்கு வருவது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான குறியீடு. பெருமளவிலான மக்களை அங்கு பார்த்தது, உண்மையிலேயே  எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வருகிறவர்கள் எதை வாங்குகிறார்கள், என்ன வாசிக்கிறார்கள் என்பதல்ல, ஏதோ ஒன்றை வாசிக்கிறார்கள் என்பதே நல்ல அறிகுறிதான். மேலும், பெரும்பாலானோர் குடும்பத்துடன் வருகிறார்கள். அது பெரிய ஈடுபாடு. கேரளத்தில் உள்ள நூலகங்களுக்கு அரசே முறையாகப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கிறது அல்லது நிதி அளிக்கிறது.  நூலகங்களில் அனைத்துவிதமான புத்தகங்களும் கிடைக்க வழிசெய்கிறது. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு இல்லையெனத் தோன்றுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வாசிக்கத் தயாராக இருக்கும் ஒரு சமூகத்தில், நூலகங்களுக்கு புத்தகம் வழங்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அதை  இந்த அரசு அவசியமாகவும் உடனடியாகவும் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது.”

“ஒரு கவிதையிலிருந்து தொடங்கலாம். உங்களுக்கு மிகவும் பிடித்த, ஒரு கவிதையைப் பற்றி  சொல்லுங்களேன்?”

“எனக்குப் பிடித்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. ஒரு கவிதையைச் சொல்லச் சொன்னால், நான் எதைச் செல்வது? அதை எப்படி நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்பதில் தயக்கமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர், வைலோப்பள்ளி ஸ்ரீதர மேனோன். அவரின் ‘சர்ப்பக்காவு’ என்ற கவிதை எனக்குப் பிடித்தமானது. மலையாளத்தின் மிகச் சிறந்த அழகிய கவிதைகளில் ஒன்று. வைலோப்பள்ளி, கிளாசிக்கலுக்கும் நவீனத்துக்கும் இடைப்பட்ட கவிஞர். அதாவது, இரண்டும் சந்திக்குமிடத்தில் நிலைகொள்ளும் கவிஞர் எனச் சொல்லலாம். ஆனாலும், அவர் முற்போக்குக் கவிஞராக இருந்தார். எந்த ஒருவகையிலும் அடிப்படைவாதியாக இருந்தது இல்லை. அவர் கம்யூனிஸ்ட்டாக இருந்தார் என்று சொல்ல இயலாவிட்டாலும் இடதுசாரியாக இருந்தார். எளியவர்களுக்காக குரல் கொடுத்தார். எளியவர்களின் பக்கம் நின்றார்.’’

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அந்த கவிதையின் வரிகள் நினைவிருக்கிறதா?”

‘‘இல்லை. ஆனால், மிகச் சிறந்த காவிய அழகியலுடன் ஒரு சமூகச் செய்தியையும் பதிவுசெய்கிற கவிதை அது. ‘முந்தைய காலத்தில், பூர்வீக மக்களின் வாழ்விடத்துக்கு சற்று தூரத்தில் பாம்புகள் வசிக்கும் ஒரு காடு இருக்கும். அங்கே பாம்புப் புற்றுகள் இருக்கும். ஒரு நாகதேவதை சிலைகூட இருக்கும். அங்கே, பாம்புகளுக்கு மக்கள்  பால் வார்ப்பார்கள். சமூக வளர்ச்சிக்கான தேவையின் பேரில், அந்தக் காடு ஒருநாள் அகற்றப்படும்.  அங்கே புதிய கட்டடங்கள் முளைத்து எழும். சமூக வளர்ச்சியில் அது இயல்பாக நேருவதுதான். என்றாலும், அந்தக் காட்டை அகற்றுவது என்பது பாரம்பர்யத்துக்கு எதிரான ஒரு தாக்குதலைத் தொடுப்பது அல்லவா? அவ்வாறு காடு அகற்றப்படும்போது பாம்புகள் பெருங்கூட்டமாக அங்கிருந்து வெளியேறும். ‘நெளிந்து வெளியேறுபவை பாம்புகள் மட்டுமல்ல’ என்பதாக, அந்த நீண்ட கவிதை முடியும். அந்தக் கவிதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. கேரளச் சமூகத்தில் அப்போது மிகவும் கொண்டாடப்பட்டக் கவிதை அது.”

“உங்களது கவித்துவமான மொழிநடையை தமிழில் பலரும் விரும்புகிறார்கள். அதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?”

“எனது மொழிநடை கவிதைத் தன்மையுடன் இருப்பதாக நான் கருதவில்லை. கவிதைக் கூறுகளை அது கொண்டிருக்கலாம். நான் எப்போதும் நம்புவது, உரைநடைக்கு உரைநடையின் மொழியும், கவிதைக்கு கவிதைக்கே உரிய மொழிநடையும்தான் வேண்டும். என் கதை, கவிதை போன்ற அழகியலுடன் இருப்பதாக யாராவது கூறினால், நான் அதை எதிர்ப்பேன். அவ்வாறு இருக்குமெனில், நான் கவிதை எழுதிவிடலாமே? ஏன் கதை எழுத வேண்டும்? ஒரு சிறுகதையை எழுதும்போது அதனுள்ளே ‘லிரிக்கல்’ என்று சொல்லப்படும் அம்சத்தின் தேவை இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, இரவையோ, சூரிய உதயத்தையோ வர்ணிக்க வேண்டுமெனில், நமக்கு லிரிக்கை பிரயோகிக்கத் தெரித்திருக்க வேண்டும். லிரிக்ஸிஸத்தை உரைநடையில் பயன்படுத்தலாம். ஆனால், அது கவிதையாக மாறிவிடக் கூடாது. என்னை நீங்கள் மிகவும் அழுத்திக் கேட்கும்பட்சத்தில், எனது கதைக்கான மொழிநடை பொயட்டிக் ஆக இருக்கக்கூட சம்மதிப்பேன். ஆனால், ரொமான்டிக் ஆக இருப்பதை ஏற்கவே மாட்டேன்.”

“ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பீர்கள்?”

“உண்மையில் கவிதையின் மிகச் சிறந்த குணம், அதன் தாளம். அது தன்னகத்தே ஒரு பொருளைக்கொண்டிருக்க வேண்டும். அது அழகுணர்ச்சியுடன் வெளிப்பட  வேண்டும். அதேசமயம், எளிமையுடனும் இருக்க வேண்டும். அலங்காரச் சொற்களை வலிந்து திணித்ததாக இருக்கக்கூடாது.மலையாளத்தில், கவிதைகளில் சமஸ்கிருதச் சொற்களை வலிந்து திணிக்கின்ற ஒரு போக்கு உண்டு. இந்தச் சிக்கல் தமிழிலும் இருக்கிறதா என எனக்குத் தெரியாது. நாங்கள் அதை பைங்கிளி எனக் கூறுவோம்.” (சிரிக்கிறார்)

“எல்லா எழுத்தாளருக்கும் அவரவர் தாய்மொழியின் மீதான பற்றும் பெருமையும் இருப்பது உண்டு. நீங்கள் மலையாள மொழிக்கென ஏதாவது சிறப்பம்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?”

“அப்படியான சிறப்பம்சங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அனைத்து மொழிகளுக்கும் அதற்கேயுரிய தனித்த குணங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அது சிறப்பானவையா என்று எப்படிச் சொல்வது? அதேசமயம், மலையாளத்துக்கு வரலாற்று ரீதியான ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது. ஹிஸ்டாரிக்கல் லக்! சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களின்போதும், பிறகும் பல்வேறு பிரிவினூடாக மலைக்கு அப்புறம் இருப்பது மலையாளமானது. மூலம் தமிழ்தான். தமிழ்ச் சங்ககாலப் படைப்புகள்தான் உண்மையான மலையாளம். பின்னர், சமஸ்கிருதம் கலந்து மணிப்பிரவாளமாகி, இறுதியில் மலையாளமாக உருவானது. அனேகமாக கன்னடமும் அவ்வாறு உருவானதுதான். இந்த மூன்று மொழிகளும் ஒரே தாய்க்குப் பிறந்தவை.

வரலாற்றுரீதியாக பிராமணர்களின் வருகையால், மலையாளத்தில் சமஸ்கிருதம் பெரிதும் கலந்தது. அதனால்,  மலையாளத்துக்குக் கூடுதல் வார்த்தைகள் கிடைத்தன. நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். அது மலையாளத்தை மேலும் செழுமையாக்கியதோடு, பயன்பாட்டுக்கு எளிதாகவும் இருந்தது.”

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“தமிழில் அதற்கு எதிராக பெரிய இயக்கமே உருவானது...”

“ஆமாம். தமிழில் சமஸ்கிருதக் கலப்புக்கு எதிராக நீங்கள் இயங்கியதன் பலனாக, தமிழ் மூலத்திலிருந்தே புதிய சொற்களைத் தேடிக்கொண்டீர்கள். அது சிறப்பான ஒரு விஷயம்.

மலையாளத்தில் சமஸ்கிருதச் சொற்கள் வந்து மொழியில் ஒரு செறிவை உண்டாக்கின. மூவாயிரம் ஆண்டுகளாக கிரேக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள், ரோமானியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களுடன் வணிகத் தொடர்புகள் இருந்ததால், ஏராளமான வார்த்தைகள் கிடைத்தன. அதை வேறொரு அடுக்காக மலையாளம் உட்கொண்டது. அது மிகப் பெரிய கொடுப்பினைதான். ‘ஹிஸ்டாரிக்கல் லக்’ என நான் கூறியது அதைத்தான். அது யாரும் உருவாக்கியது அல்ல. It Happened, We received it.

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

அவ்வளவுதான்.”

“ஆங்கிலம்...”

“ஆங்கிலேயர் வருகைக்குப் பின் மலையாளத்தில் ஆங்கிலமும் கலந்தது. மலையாளம் மேலும் செழுமையானது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் மலையாளிகளில் ஒரு பிரிவினர் ஆங்கிலம் படித்தனர். விக்டோரியன் காலகட்டத்தில் தோமஸ் ஹார்டி, சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்களின் பெருநாவல்கள் வாசிக்கப்பட்டன. அது மலையாள இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்தியது. அதையெல்லாம்விட முக்கியமானது, இடதுசாரிச் சிந்தனைகளின் செல்வாக்கு. 1920-காலக்கட்டத்தில், ரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் மொழிபெயர்ப்பின் வழியாக மலையாளத்தை வந்தடைந்தன. மலையாளம் மேலும் வலிமையானது. நவீன மலையாள இலக்கியத்தின் அடித்தளம் இவ்வகை மொழிபெயர்ப்புகள்தான். இந்திய மொழிகள் பலவற்றுக்கும் அப்படித்தான்.”

“திராவிட இலக்கியம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிறீர்களா? திராவிடத் தேசியம் என்ற கருத்துரு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“திராவிட இலக்கியம் என்ற ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. காரணம், மொழியியலைப் பற்றி படித்தவர்கள் மட்டுமே திராவிடத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே திராவிடத் தேசியம் நிலை கொண்டிருக்கிறது. தமிழகம்தான் திராவிட மக்களின் தாய்நாடு. அங்கிருந்து சிறிதளவு கன்னடத்துக்கோ, கேரளத்துக்கோ சென்றிருக்கிறதே தவிர, அது ஒரு தரப்பாக அங்கெல்லாம் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் மொழியளவில் தனித்தே இயங்குகின்றன. திராவிடம் என்கிற அடையாளத்தோடு அல்லது உணர்வோடு இயங்குவதாகத் தெரியவில்லை. திராவிடச் சிந்தனை, திராவிட அடையாளம், திராவிட ஆளுமைகள் எல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கின்றனர். கேரளத்தில் தலித் ஐடியாலஜிக்கு இருக்கும் இடம்கூட திராவிடத்துக்கு இல்லை.”

“திராவிட இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்கிறபோது, இந்திய இலக்கியம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படியொரு முகம்...”

“அமெரிக்காவிலிருந்து வெளியாகின்றவை அமெரிக்க இலக்கியம் என்று ஒரு வசதிக்காகச் சொல்லமுடிவதுபோல, இந்திய துணைக்கண்டத்தில் இருந்து வெளியாகின்ற இலக்கியத்தை நாம் இந்திய இலக்கியம் என்று அழைத்துக்கொள்ளலாம். (சிரிக்கிறார்) சாகித்ய அகாடெமியின் முதன்மைப் பட்டியலில் 24 வகையான மொழி இலக்கியங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. துணைப்பட்டியலில் மேலும் 35 இருக்கின்றன. அப்படியானால், 59 மொழிவகை இலக்கியங்கள். They are alive and active. so, each one is an each litreature. இதனுள்ளே ஆங்கிலமும் அடங்கிவிடுகிறது. ஒரு வசதிக்காக நமது ஆங்கில இலக்கியத்தை அமெரிக்காவில் உள்ளவர்களோ, இங்கிலாந்தில் உள்ளவர்களோ, இந்திய ஆங்கில இலக்கியம் என்று அழைக்கிறார்கள். ஒரு வகைப்படுத்தலுக்காக வேண்டுமாயின் இண்டியன் லிட்டரேச்சர் என்ற குடைக்குள், இந்த அனைத்து மொழி இலக்கியங்களையும் கொண்டுவரலாம். ஆனால், தனித்த குணாம்சத்தோடு இந்திய இலக்கியம் என்ற ஒன்று இல்லை.”

“இன்றைய நவீன சமூகத்தில் ஒரு கதை சொல்லிக்கு என்ன தேவை இருக்கிறது? அவர் எவ்வாறு முக்கியமானவராக இருக்கிறார்?”

‘‘கதைசொல்லிகள் அவசியமானவர்கள். காரணம், கதை மக்களை வசீகரிக்கும் ஒரு வடிவம். கதைகள் ஆதிகாலம்தொட்டே கேட்கப்பட்டு வருகின்றன. அதனால், கதை கேட்பதற்கான விருப்பம் மனிதனின் மரபணுவிலேயே அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாவனைதான். கற்பனை வளரும்போது மூளையும் வளர்கிறது. அதனுடன் நாமும் வளர்கிறோம்; கதை சொல்பவரும் வளர்கிறார்; கதை கேட்பவரும் வளர்கிறார். கதைகள் ஒரு சமூகத்துக்கு மிகவும் முக்கியம்.

இணையத்தின் வாயிலாக கணிப்பொறியில், ஐ-பேடில், மொபைலில் எனக் காகிதத்திலிருந்து இடமாற்றம் அடைந்திருப்பினும் தொடர்ந்து கதைகள் இருந்துகொண்டிருக்கின்றன. எப்போதும் கதைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். கதைகளின் வழியாகத்தான் கதாபாத்திரங்கள் உருவாகின்றன. அவர்கள்தான் வாழ்வின் பல்வேறு தருணங்களில் நமது மனசாட்சியாக, வழிகாட்டியாக நம்மோடு தொடர்கிறார்கள்.  நாம் கதைகளின் வழியாகவே தெய்வங்களை அறிந்திருக்கிறோம். ராமாயணத்திலும் மகாபாரத்திலும் உள்ள தெய்வங்களுக்கு, கதைசொல்லிகள் உருவாக்கிக் கொடுத்த பிம்பங்கள்தான் நிலைகொண்டிருக்கின்றன.  காரணம், Storytellers created Rama and Krishna. that is amazing thing! நம்முடைய தெய்வங்களெல்லாம் கதைகளிலிருந்து வந்தவர்கள்தான். இது வேறு எந்த மதங்களிலும் நிகழவில்லை. புத்தர், நம்மோடு வாழ்ந்த மனிதர்; இயேசு, ஒருவேளை வாழ்ந்திருக்கக்கூடியவர். முகமது, பூமியில் வாழ்ந்த ஒரு மனிதர். மற்றவர்களெல்லாம் கதைகளிலிருந்து வந்தவர்கள்தான். இந்து மதம் மட்டுமே இதைச் சாதித்திருக்கிறது. கதைகள், கடவுளை உருவாக்கியிருக்கின்றன. கதைகள், கடவுளை வடிவமைத்திருக்கின்றன. கதைகள், கடவுளுக்கு கடவுள் தன்மையை வழங்கியிருக்கின்றன. கதைகள், கடவுளுக்கு தத்துவத்தை வழங்கியிருக்கின்றன. பகவத்கீதை, மிகப் பழமையான தத்துவ நூல்.  ஆனால், அதுகூட கற்பனைக் கதாபாத்திரமான கிருஷ்ணன் வழங்கியதுதான். Storytelling is fundamental in civilization!” 

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“நீங்கள் பிறப்பால் சிரியன் கிறிஸ்துவர். ஆனால், உங்கள் மொத்தப் படைப்புகளின் வழியாகவும் கிறிஸ்துவத்தின் மீதான விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வரு்கிறீர்கள். அதேசமயம், உங்கள் படைப்பிற்குள் ஒரு பாரம்பர்யக் கிறிஸ்துவன், ஆழ்ந்து செல்கிறான். அவன் தன் அடிப்படைவாதத்தை, தனது கடவுளை நீங்கள் கிண்டல் செய்வதாக உணர்வது இல்லையே..?”

“நான் கிறிஸ்துவன் அல்ல. கிறிஸ்துவ எதிர்ப்பாளனும் அல்ல. ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தேன்.  பதினாறு, பதினேழு வயது வரை கிறிஸ்துவனாக இருந்தேன். ஒரு சுதந்திரம் கிடைக்கும் வரை, நான் என் குடும்பத்தைவிட்டு விலகிப் படிக்கச் செல்வது வரை கிறிஸ்துவனாக இருந்தேன் எனச் சொல்லலாம். அதன் பிறகு, சுதந்திரமாக வாசிக்கத் துவங்கினேன். ஒருவன் சுதந்திரமாக வாசிக்கத் தொடங்கி, கிறிஸ்துவத்தின் வரலாற்றைக் கண்டடைந்த பின்னர் அவன் கிறிஸ்துவன் அல்ல. (சிரிக்கிறார்) ஒருவன் மனிதநேயம் என்றால் என்ன என்பதை உணர்ந்த  பின்னர், அந்த மனிதநேயத்தைத்தான் இயேசு என அழைக்கிறான்.

இயேசு அசாதாரணமானவர்; அவர் ஒரு கிளர்ச்சியாளர்; சிந்தனையாளர்; உண்மையான கம்யூனிஸ்ட். பழைய ஏற்பாட்டில் கடவுள் வன்முறைமிக்கவராக, பலிகுணம்கொண்டவராக இருந்தார். ஒருவகையில் அவர்தான் பிசாசு. ஒரு துளி வெறுப்பால் யாரையும் கொன்றுவிடக்கூடிய பிசாசு. அந்தச் சமயத்தில்தான் இயேசு, வருகிறார். ‘பலி உணர்வல்ல, உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தைக் காட்டு. அதுவே தெய்வம்’ என்கிறார். கழுதையின் மேலேறி ஜெருசலேமின் ‘கிராண்ட் டெம்பிள்’ சென்று வணிகர்களை அடித்து விரட்டுகிறார். ‘இது எனது தெய்வம் வசிக்கும் இடம். இங்கே வியாபாரம் செய்யக்கூடாது’ என வெகுண்டெழுகிறார். That field is faith! அது நிகழ்ந்து இரு தினங்களுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டார். 

கிறிஸ்துவத்தினுள் அவர் மட்டுமே மனித முகம். என்னைப் பொறுத்தவரை இயேசுவை கடவுளாக அல்லாமல் மனிதனாக வாசித்து அறிந்துகொள்கிறவர்கள், ‘கிறிஸ்துவ’த்திலிருந்து சுதந்திரமடைந்து விடுகிறார்கள். அதுதான் விஷயம். நாம் ஒரு மனிதனாக இயேசுவைக் கண்டால், அவர் எவ்வளவு உயர்ந்த மனிதராக இருந்தார் என்பதை அறிவோம். God is a useless thing!

என்னுடைய கதைகளில் அடிப்படைவாதக் கிறிஸ்துவத்தைக் கேலி செய்கிறேன்தான். அதேசமயம், எனது கட்டுரைகளில் நான் அதைச் செய்வது இல்லை. தர்க்கபூர்வமாக வாதங்களை, சமூகப் பிரச்னைகள் சார்ந்து முன்வைக்கிறேன். புனைவில், ‘யார்க்கறியாம்’,  ‘கண்ணாடி காண்போளும்’ போன்ற கதைகளில் இயேசுவை சாதாரண மனிதனாகத்தான் படைத்துள்ளேன். இயேசுவை, இப்போது ஷேவ் செய்ய வேண்டுமா, வேண்டாமா எனத் தயங்குபவராகப் புனைந்திருப்பேன்.   அவ்வாறு ஓர் எளிய இளைஞனாகத்தான் நான் இயேசுவைப் பார்த்தேன். முப்பது முப்பத்தோரு வயதில் பேசத் தொடங்கி, முப்பத்து மூன்று வயதில் கொல்லப்பட்ட இளைஞன். தட்ஸ் ஆல்!”

“உலகம் முழுக்க அதிகமாக அச்சடிக்கப்பட்ட புத்தகமாகப் பைபிளைக் கருத முடியும். அதிலுள்ள கதைகளை ஒரு கதைசொல்லியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஜான்ஸன், டேவிட் அண்டு கோலியாத், ஆதம் ஏவாள் என ராமாயணம், மகாபாரதம் போல பல்வேறு கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பியது பைபிள். இயேசு ஒரு சிறந்த கதை ொல்லி. அவர் எதைச் சொல்ல நினைத்தாலும் கதைகளின் வாயிலாகவே சொன்னார். அவர் உடனுக்குடன் கதைகளை உருவாக்குபவராக இருந்தார்.  ‘கெட்டகுமாரன்’ அவர் படைத்த மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று. எளிய மக்களுக்கு அவர் அனைத்தையும் கதைகளாலும் உவமைகளாலும் விளக்கினார். இரண்டாவதாக அவர், தான் சொல்ல நினைத்தவற்றை இயற்கையிலிருந்தும் தான் நேரில் கண்டவற்றிலிருந்துமே எடுத்தாண்டார். அவர் ஓர் அற்புதமான பேச்சாளராகவும், அற்புதமான கவிஞராகவும், அற்புதமான கதை சொல்லியாகவும் இருந்தார். பைபிள், சுவாரஸ்யமான கதைகளால் நிறைந்தது. கதைசொல்லியான எனக்கு அது விருப்பமானது.”

“பைபிள் கதைகள் மட்டுமின்றி, ராமாயணம், மகாபாரதம் போன்றவையும் மறுஆக்கம் செய்யப்படுகின்றன. தமிழில் ஜெயமோகன் மகாபாரத்தை மறுஆக்கம் செய்து எழுதிவருகிறார். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மறுஆக்கம் செய்வது ஒருவகையில் இந்துத்துவத்துக்கு ஆதரவான மனநிலையாகக் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த உங்களது பார்வை?”


“மறு ஆக்கங்களால் சிக்கல் ஒன்றும் இல்லை. ஆனால், அது படைப்பூக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். உங்கள் அறிவால், நீங்கள் புதிய நோக்கில் கண்டடைந்ததை அதில் வெளிப்படுத்த வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டுமாயின் எதற்கு புதிதாக எழுத வேண்டும்? ஜெயமோகன் என்ன செய்திருக்கிறாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயமோகன் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் முற்போக்குப் பார்வை இன்றியோ, விமர்சனப் பார்வையற்றோ, தொழுதல் மனப்பாங்குடன் ஒரு படைப்பை மறுஆக்கம் செய்கிறார் என்றால், அந்தப் படைப்பு எதற்கு?

எந்த புராதன புத்தகத்தையும் மறு ஆக்கத்துக்கு என்று நாம் தொடுவதாக இருந்தால், விமர்சனப் பார்வையுடன்தான் தொட வேண்டும்; அது குரான், பைபிள், மகாபாரதம் எதுவாக இருப்பினும். பின், நமது இரண்டாயிரம் ஆண்டு அறிவுச்சேகரம்தான் எதற்கு? தொழிற்புரட்சி, அறிவியல் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி  ஆகியவற்றால் மக்கள் அதிகமும் தெரிந்துகொண்டவர்களாக மாறிவிட்டனர். நாம் வரலாற்றின் மிக முக்கியமான, தீவிரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைப் படைப்பில் உபயோகிக்க வேண்டும். அல்லாமல் எதை மறுஆக்கம் செய்தும், வாசித்தும் பயன் இல்லை.”

“கடந்த 25, 30 ஆண்டுகாலமாக மலையாளத்தில் வரும் தினசரிகளில் உங்கள் பெயர் ஏதேனும் ஒரு வகையில் இடம்பெற்று விடுகிற வண்ணம் தொடர்ந்து சமூகத்துடன் உரையாடி வருகிறீர்கள். அனைத்துப் பிரச்னைகளின்போதும் பொறுப்போடு கருத்து வெளியிடும் படைப்பாளியாக இருந்து வருகிறீர்கள். சமூகப் பங்கேற்பில் படைப்பாளி ஈடுபட்டால், அவனது கலைத்தன்மை குறையும் என நினைக்கிறீர்களா?”

“நிச்சயமாகக் குறையாது என்றே நம்புகிறேன். சமூகத்தின் அடித்தட்டு மக்களுடனும் அவர்களது பிரச்னைகளுடனும்  உரையாடும்போதுதான் எழுத்தாளன் மேன்மையடைகிறான். அவனுடைய  படைப்பு மேலும் உயரங்களை அடைகிறது. நான் ஒரு தங்கக் கோபுரத்திலிருந்துகொண்டு எழுதினால், எனக்கு சமூகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் சமூகத்தில் மக்களுடன் தொடர்பு கொள்பவனாக இருந்தால்தான், எனது படைப்பு செழுமையுறும். அதன் உள்ளடக்கம் செழுமையுறும்.  நான் அதில் தெளிவாக இருக்கிறேன். என் எழுத்தில் ஒரு மதத்தைப் பற்றியோ, தெய்வத்தைப் பற்றியோ ஒரு வழிபாட்டைப் பற்றியோ, சொல்ல வேண்டுமெனில், சமகாலச் சமூகத்துடன் நான் கலந்திருந்தால்தான் அது முடியும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது, பயணம், பத்தி எழுதுதல் ஆகியவையே சமூக ஊடாட்டம் என்பது. ஆனால், நமது நேரம் அதனால் குறைகிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எனது சமூகப் பங்கேற்பால் சுமார் எட்டு ஆண்டுகளை இழந்திருக்கலாம். ஆனால், இப்போது இரண்டையும் கையாளுவதற்கான திறனைப் பெற்றிருக்கிறேன். எழுத்தாளன் சமூகத்துடன் ஊடாடுபவனாக இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எழுதுவதற்கான திறன் உள்ளதால்தானே நாம் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்கிறோம். இல்லையெனில் யாராவது நம்மைக் கண்டுகொள்வார்களா? எது சரி, எது தவறு என நாம் கூற வேண்டும். அதைத் தற்போது அரசியல்வாதிகள் மட்டுமே செய்கின்றனர். எழுத்தாளனால்தான் உண்மையைக் கூற முடியும். அரசியல்வாதிகள் எப்போதும் பொய் சொல்பவர்கள்.”

“பெரும்பாலான நேரத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி–யை எதிர்த்தே நீங்கள் குரல்கொடுத்து வந்திருக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் இடதுசாரி ஆதரவாளர் இல்லை. ஏனெனில், இடதுசாரிகளின் பல தவறுகளை எதிர்த்தும் குரல் கொடுத்துள்ளீர்கள். கேரள மக்கள் உங்களை எத்தகைய அரசியல் சார்பு கொண்டவராகப் பார்க்கிறார்கள்?”

‘‘அதை எவ்வாறு சொல்வது எனத் தெரியவில்லை. ஆனால், மக்கள் என்னை நன்கு அறிந்தவர்கள். என்னை ஒரு சுயாதீனமான, சுதந்திரமான நிலைப்பாடு எடுப்பவன் என்று நினைக்கின்றனர். எனக்கு எந்தவொரு கட்சியுடனோ, அமைப்புடனோ, மந்திரியுடனோ, செய்தி நிறுவனங்களுடனோ, தொலைக் காட்சியுடனோ, மத, சாதிய நிறுவனங்களுடனோ தொடர்பு இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். என் நிலைப்பாடு சுதந்திரமானது என மதிக்கின்றனர். நான் கூறுவது முட்டாள்தனமாக இருந்தாலும் எனது சுய அபிப்பிராயத்தையே கூறுவதாகவே நினைக்கின்றனர்.’’

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“தமிழ்நாட்டில் தமிழின் முக்கிய எழுத்தாளர் எவரையும் பெரும்பாலும் எந்த அரசியல்வாதிக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர், அவர்களுக்குத் தேவை இல்லை. கேரளாவில் நிலைமை குறித்துச் சொல்ல முடியுமா?”

‘‘இடதுசாரி அரசுத் தரப்பில், இரு அணியினருமே எழுத்தாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைக்கின்றனர். இருவருமே அங்கீகரிக்கின்றனர். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லையெனினும் கேரளத்தில் உண்டு. பல விஷயங்களில் எழுத்தாளர்களது அபிப்பிராயங்களைக் கேட்கின்றனர்.

அதேசமயம், எல்.டி.எஃப்-ஐ (இடதுசாரிக் கட்சியில் ஒரு பிரிவு) பொறுத்தவரை ஒரு சில சிக்கல்கள் உண்டு. என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இடதுசாரி. ஆனால், எனது இடதுசாரிச் சார்பு எல்.டி.எஃப்-க்குப் போதுமானது அல்ல. இடதுசார்பு என்பதையும் மீறி கட்சி சொல்வதைக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

எல்.டி.எஃப்-க்கு இலக்கிய, பண்பாட்டுப் பார்வை என ஒன்று உண்டு. யூ.டி.எஃப்– என்பது தமிழகத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க. போன்றதுதான். ‘சரி, எழுத்தாளர்களும் இருந்துவிட்டுப் போகட்டும்!’ என நினைக்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு பார்வை இல்லை. எல்.டி.எஃப், தங்கள் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கும் எழுத்தாளர்களையே தூக்கிப்பிடிப்பார்கள். ஆனாலும், மற்றவர்களை நிராகரிப்பது இல்லை. அவர்களது நிகழ்வுகளுக்கு அனைத்து எழுத்தாளர்களையும் அழைப்பார்கள்.

இப்போது ஓர் அமைச்சர் இருக்கிறார். கலாசாரத் துறை அமைச்சர். அவர் ஒரு நல்ல கம்யூனிஸ்ட். ஊழல்கறை படியாதவர், திறமையானவர். ஆனால், கலாசாரம், இலக்கியம் பற்றியும் ஒன்றுமே அறியாதவர். அவர் ஒரு சிறந்த நிர்வாகி.  அவர், அவரது மற்ற துறைகளைப் போலவே இதையும் நிர்வகிக்கிறார். இடது முன்னணி,  கலாசாரச் செயல்பாடுகளின் மூலமாக, பாடல்கள், நாடகங்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். முன்பு கலை, இலக்கியம் ஆகியவற்றை கம்யூனிஸ்ட் கட்சி மையமாக வைத்திருந்தது. ஆனால், அதை தற்போது செகண்டரியாக வைத்துள்ளது.”

“பீஃப் சாப்பிடுவது, ஜல்லிக்கட்டுத் தடை என தொடர்ந்து கலாசாரத் தாக்குதல்கள் ஒரு பக்கம், ஒரு மாநிலத்தின் கலாசாரத்தைப் பிற மாநிலங்கள் கேலியும் கிண்டலுமாகப் பார்ப்பது போன்றவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?”

‘‘That is Dangerous things! மிகவும் ஆபத்தான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். காரணம், இங்கே ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அது உச்ச நீதிமன்றம் இடவேண்டிய ஆணை அல்ல. மத்திய அரசு இடவேண்டிய ஆணை அல்ல. மாட்டுக்கறி உண்ண வேண்டுமெனில், அதை உண்ணும் மக்கள், அவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் பழங்குடியினர் ஆனாலும் அவர்களே தீர்மானிக்க வேண்டியது. அதில் மத்திய அரசோ, மத அமைப்புகளோ தலையிட வேண்டியது இல்லை. ஆனால், பப்ளிக் நியூசென்ஸ் ஏற்படும் விஷயங்களில், உதாரணமாக, சுற்றுச்சூழல் மாசு போன்ற விஷயங்களில் அரசுத் தலையீடு இருக்கலாம். ஆனால், பண்பாட்டு விஷயங்களில் மத்திய அரசு தலையிடுவது பாசிசம்.’’ 

“நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கும் தீர்ப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?”

‘‘நீதிமன்றங்கள்தான் நம்முடைய இறுதிப் புகலிடம். மாஜிஸ்திரேட் நீதிமன்றமானாலும், உச்ச நீதிமன்றமானாலும் அதுதான் final resort. காரணம், அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதேசமயம், நீதிபதிகள் அனைவரும் அவர்களது நீதிச் சிறப்பாலும் அனுபவத்தாலும், சிறப்புத் தகுதியாலும்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அதில் மதம், ஜாதி, அரசியல் என நிறையவே உள்ளன. நான், எல்லோரும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஆனால், இதுவெல்லாம் நடக்கிறது.   

நீதிமன்றங்கள் இன்று அரசியல் தலையீடுகளில் தனது நம்பிக்கையை இழந்திருக்கின்றன. அத்தகையதொரு ஆபத்தான நிலை உருவாகிக் கொண்டுவருகிறது. அந்த நிலை பி.ஜே.பி அரசில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பி.ஜே.பி-க்கு ஒரு பிரச்னையாக இருப்பது நீதித்துறைதான். அதனால், நீதித்துறையைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர். அதில் வெற்றி பெறுவார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், முயற்சிக்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. அது நடக்கக்கூடாது.

“தற்போது காந்தியை இடதுசாரிகள் தொடங்கி, சங்பரிவார் வரை முன்னிறுத்துகின்றனர். தங்களுக்குள் பல்வேறு வகையில் முரண்டுகின்ற அனைத்துத் தரப்புகளுக்கும் காந்தி ஏன் தேவைப்படுகிறார்? தற்போது காந்தியின் தேவை நமது சமூகத்தில் என்னவாக இருக்கிறது?”


“நாம் முன்பு இயேசுவைப் பற்றிப் பேசினோமல்லவா? அவரைப் போன்றவர்தான் காந்தியும். காந்தி தன்னளவில் போராடி மகாத்மா ஆனவர். நீங்கள் இயேசுவை இமிட்டேட் செய்ய முடியாது. புத்தரை இமிட்டேட் செய்ய முடியாது. அதுபோலவே காந்தியையும் நாம் இமிட்டேட் செய்ய முடியாது. ஒரு சாதாரண மனிதனால் புத்தர் செய்ததையோ, காந்தி செய்ததையோ எளிதில் செய்துவிட முடியாது.

காந்தி என்ற பேருருவை, அடையாளத்தை, நன்மதிப்பை,  பிம்பத்தை பங்கிடவே எல்லா அரசியல்வாதிகளும் முயற்சிக்கின்றனர். நாங்கள் காந்தி போன்று ஆடை அணிபவர்கள். நாங்கள் காந்தியைப் போன்றவர்கள். நாங்கள் காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் என்று பொய் கூறி நாடகமாடுகின்றனர். காரணம், மக்கள் காந்தியை மதிக்கின்றனர். காந்திக்குள் ஒரு சனாதன இந்து இருந்தாலும் அவர் உண்மையானவராக இருந்தார். உண்மையிலிருந்து ஒருபோதும் அவர் விலகிச் சென்றது இல்லை. ஆனால், உண்மை என்பதின் பொருளைக்கூட அறியாதவர்கள் காந்தி பிம்பத்தைக் களவாட முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் காரர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள். ஆனால், தற்போது வெட்கமின்றி காந்திதான் தங்கள் ஐகான் என்று கூறுகின்றனர். காந்திய மதிப்பீடுகளை அவர்கள் பின்பற்றுவது இல்லை; அவர்களுக்கு அது தேவையும் இல்லை. ஆனால், காந்தியின் ‘கரிஷ்மா’ அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவரை வைத்து மக்களை ஏமாற்றுவது எளிதாக இருக்கிறது. அதனால், காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஒன்றுபோல இந்த விஷயத்தில் காந்தியைக் களவாட முயற்சிக்கின்றனர்.’’

“தமிழில் சுதந்திரத்துக்குப் பின்பு உருவான முக்கியப் போக்குகளாக தலித்தியம், பெண்ணியம், போஸ்ட் மார்டனிஸம் போன்றவற்றைச் சொல்லலாம். இவை மலையாளத்தில் எவ்விதம் பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன?”

‘‘பெண்ணியம் மிகத் தீவிரமாக இயங்கிய ஒரு காலகட்டம் இருந்தது. மாதவிக்குட்டியை ஃபெமினிஸ்ட் என்று விமர்சகர்கள் சொன்னார்கள். ஆனால், மாதவிக்குட்டி, ‘நான் ஒரு ஃபெமினிஸ்ட் அல்ல, ஒன்லி ரைட்டர்’ என்றுதான் கூறினார். சாரா ஜோஸப்பை பெண்ணியத்துக்காக நிலைகொண்ட எழுத்தாளர் என்று சொல்லலாம். ஆனால், இதெல்லாம் ஒரு படிநிலைகள் என்று எனக்குத் தோன்றுகிறது.

அனிதா தம்பியை பெண்ணியக் கவிஞர் என்று சொல்வதைவிட, ஒரு சிறந்த கவிஞர் என்று சொல்வதுதான் சரி. கமலாதாஸும் அவ்வாறுதான். எனது பார்வையில் தமிழ்நாட்டைவிடவும் கேரளம், ஆணாதிக்கம் நிறைந்த இடம். It is fudel male power. கேரளப் பெண்கள் இதை அங்கீகரிக்கின்றனர்; அதற்கு

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

அடிபணிகின்றனர். ஆனாலும், சிறிதளவு முன்னேற்றமாவது ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், இதைப்பற்றிய விவாதங்கள்தான்.

கேரளத்தில் முன்பிருந்தே இடதுசாரிகள் செல்வாக்குடன் இருப்பதால், தலித் முன்னேற்றம் ஓரளவு நடைபெற்றிருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் ஓரளவுக்குப் பங்கு பெற்று இருக்கின்றனர். கல்வி கிடைத்தவர்களெல்லாம் மேலேறி வந்தனர். ஆனாலும், தலித்களிடம் இருந்து மேல்சாதியினருக்கு ஒரு விலகல் இருக்கிறது. ஒரு தலித்  ‘நெருக்கடி’ கேரளத்தில் இல்லை.

நெருக்கடிமிக்கவர்கள், கேரளாவைப் பொறுத்தவரை பழங்குடிகள்தான். அவர்களைத் தலித் என்று கூறவியலாது. பழங்குடியினரும் கடலோர மக்களும்தான் மிகவும் சிரமப்படுகின்றனர். பணமின்றி, கல்வியின்றி, வசதி வாய்ப்புகள் இன்றி மலை வாழ்மக்களும் மீனவர்களும்தான் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்காக ஒரு பெரிய நடவடிக்கை நடைபெறவில்லை. இலக்கியத்தில் இது பிரதிபலித்திருக்கிறது. ஆனால், தேவையான அளவுக்கு இல்லை.’’

“கேரளப்பெண்கள், ஆணாதிக்கத்தை ஏற்பதாக, அங்கீகரிப்பதாகச் சொல்கிறீர்களே?”


‘‘அதைத்தான் நான் முக்கியப் பேசுபொருளாக்கினேன். இவ்வளவு கல்வி பெற்றிருந்தும் கேரளப் பெண்கள் அநீதியை எதிர்க்கும் மனநிலையைப் பெறவில்லை. பல்கலைக்கழக மாணவிகளுக்குக்கூட அந்த தைரியம் இல்லை. ஆணாதிக்கத்துக்கும், கல்விக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அது மதம்சார்ந்த பண்பாட்டின் ஒரு பகுதி. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே குடும்பத்திலேயே அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே வளர்க்கப்படுகின்றனர். ஆணாதிக்கம், சமத்துவமின்மையை எல்லாம் இந்த மூன்று மதத்தினரும் ஒன்றுபோல ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அதனால், பெண்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.

பெண், வேலைக்குச் செல்பவளாக, சம்பாதிப்பவளாக இருந்தாலும். ஆணாதிக்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்பது சுலபம் அல்ல. அவள் வெளியேற்றப்பட்டால் எங்கு செல்வாள்? தான் பிறந்த குடும்பத்துக்குச் சென்றால், அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. அவள் தனியாக வாழத் தீர்மானித்தால் பல சந்தேகங்களை, பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது; அவள் காவல்துறையில் இருந்தாலும்கூட நிலை இதுதான். That the man is the supreme then the women! என்பது குடும்ப மதிப்பீட்டிலிருந்து உருவானது. இதை சிறு வயதிலேயே மாற்றியமைத்தால்தான் உண்டு. நர்சரி லெவலில் இருந்தே துவங்க வேண்டும். அவ்வாறுதான் அமெரிக்காவில், ஐரோப்பாவில் நிகழ்ந்தன. சிறு வயதிலிருந்தே,  ‘ஆணும் பெண்ணும் சமமானவர்கள், உடலியல் சார்ந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறார்கள், அதைத் தாண்டி, எந்தச் சிறப்பும் யாருக்கும் கிடையாது’ என்பதைச் சொல்லி வளர்க்கிறார்கள். நாம் அதைச் செய்வது இல்லை.”

“உங்களின் கதைகளின் வரும் பெண்களில் அடித்தட்டுப் பெண்களே இல்லை. பண்ணைக் கூலிகள், கூலித் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் என யாரும் இல்லை, நடுத்தர வர்க்க, உயர் நடுத்தர வர்க்கப் பெண்களே வருகின்றனர். அதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா?”

‘‘நான் கேரளாவை விட்டு 1960-களிலேயே வெளியேறிவிட்டேன். பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரே கேரளத்துக்கு வருகிறேன். இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் வாழ்ந்திருப்பேன்.அவ்வளவுதான். சென்னை, பெங்களூரு, கோவை பின்னர், டெல்லியில் 22 ஆண்டுகள். என் வாழ்க்கையில் என்னுடன் தொடர்புள்ள, நான் அறிந்த ஒரே வர்க்கம் மிடில் கிளாஸ்தான். சிறு வயதில், பதினாறு, பதினேழு வயதிலிருந்து அத்தகைய மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பிற வர்க்கத்தினரிடமிருந்து நான் முழுவதும் விடுபட்டவன். நான் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்தவன் அல்ல. அதனால், மிடில் கிளாஸ் பற்றிதான் எனக்குத் தெரியும். அவர்களின் சைக்காலஜி தெரியும். மற்றவர்களை நான் நேரில் பார்க்கவில்லை; உணரவில்லை. மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் பெண்களின் வாழ்க்கையைத்தான் நான் டெல்லியிலும் கேரளத்திலும் பார்த்திருக்கிறேன். அதனால், இயல்பாகவே அவர்கள் என் படைப்பிலும் இடம்பெற்று விடுகின்றனர்.’’

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“நீங்கள் நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள், குறுநாவல்கள்கூட எழுதியிருக்கிறீர்கள். பெரு நாவல்கள் எழுதுவதில் விருப்பம் இல்லையா?’’

“எழுதுவதற்கு நேரம் இல்லை. பயணம் எனது பலவீனம். அதில், அதிக நேரத்தைச் செலவிடுகிறேன். நாவலை எழுதுவதற்கு ஒருவித தினசரி ஒழுக்கம், கட்டுப்பாடு தேவையாக இருக்கிறது. அந்த அடிப்படை ஒழுங்கை வைத்துக்கொண்டு ஓர் ஆங்கில நாவல் எழுதியுள்ளேன். அதற்கு ஏழெட்டு  ஆண்டுகள் செலவிட்டேன். என்னுடைய அபிப்பிராயத்தில் அது பெரிய வேலை. ஆனால், முக்கியமான வேலையா எனத் தெரியாது. என்னுடைய முதல் நாவல் இது. ஆங்கிலத்தில் எழுதி தற்போதுதான் முடித்துள்ளேன். இன்னும் பிரசுரிக்கப் படவில்லை. மலையாளத்தில் ஒரு நாவலைத் எழுதத் தொடங்கியுள்ளேன். புனைவு எழுத்தாளனைப் பொறுத்தவரை நாவல் மிகவும் முக்கியம். நாவலின் கேன்வாஸ் மிகப் பெரிது. Novel is the Testing point of a      Writer. It is a challenge!”

“மலையாள, தமிழ் இலக்கியப் போக்குகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


‘‘தமிழில் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் முக்கியமான இலக்கியப் படைப்புகள், மலையாளத்தைவிடவும் மேம்பட்டவை. குறிப்பாக, தமிழில் கவிதைகள் வெகு முன்னிலை வகிக்கின்றன. அசோகமித்திரன், வைக்கம் முகமது பஷீரைவிடவும் மிகவும் முக்கியமானவர். அசோகமித்திரனை நான் கண்டடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ‘தண்ணீர்’ நாவலை நான் ஆங்கிலத்தில் வாசித்து நீண்ட வருடங்களுக்குப் பின்தான் சீனுவாசனால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலோ, மலையாளத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லையெனில், எனக்கு அசோகமித்திரனைத் தெரியாது. பெரும்பாலான மலையாளிகளுக்குத் தமிழில் என்ன நடக்கின்றன எனத் தெரியாது. அவர்களால் உணர்ந்துகொள்ளவும் அங்கீகரிக்கவும் இயலாது.

கன்னடத்திலும் மேலான படைப்புகள் வெளிவருகின்றன. மலையாளிகள் இதையெல்லாம் உணராமல் தங்களுக்குள் ஒரு சிறு வட்டத்திலேயே புழங்குகின்றனர். இருப்பினும், மலையாளத்திலும் நல்ல படைப்புகள் வந்திருக்கின்றன. உன்னி. ஆர், ரஃபீக் அஹமது, அனிதா தம்பி போன்றோர் தொடர்ந்து இயங்குகின்றனர். ஆனாலும், பிறமொழி எழுத்தாளர்களுடன் பெரும்பாலான மலையாள எழுத்தாளர்கள் தொடர்புகொண்டிருக்கவில்லை. நான் தொடர்பில் இருக்கிறேன். தமிழிலும் கன்னடத்திலும் என்ன நடக்கிறது என எனக்குத் தெரியும்.” (சிரிக்கிறார்)

“இங்கு நீங்கள், பஷீர், எம்.டி.வி போன்றோர் தமிழில் வெகு பரிச்சயமான எழுத்தாளர்கள். இதுபோல, மலையாளத்தில் அதிகமும் வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர்கள் யார், யார்?”


‘‘மெளனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன் ஆகியோருக்கு மலையாளத்தில் பாப்புலர் ரீடர்ஷிப் இல்லை. They are not well known! சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’ மொழிபெயர்க்கப்பட்டு மாத்ருபூமியில் தொடராக வந்ததால், அவருக்கு ஓரளவு வாசகர்கள் உள்ளனர். இப்போதும் இந்த இரண்டு புத்தகங்களும் மலையாளத்தில் கிடைக்கின்றன. அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ அங்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. எனது நினைவில் சுந்தர ராமசாமிதான் முதலில் மலையாளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர். அசோகமித்திரன் தேவையான அளவுக்கு கவனம் பெறவில்லை. ஜெயமோகன் மலையாளத்திலேயே எழுதியவை வாசிக்கப்படுகின்றன. ஆனால், ‘நூறு சிம்மாசனங்கள்’ போன்ற அவராலேயே மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சிலவற்றைத் தவிர, ஜெயமோகனின் தமிழ்ப்படைப்புகள் இன்னும் மலையாளத்துக்கு வரவில்லை. தமிழின் இருப்பு மலையாளத்தில் இன்னும் தேவையான அளவு உணரப்படவே இல்லை. மலையாளத்திலிருந்து தமிழுக்கு எடுத்துவரப் பட்டிருக்கும் அளவுக்கு, தமிழ்ப்படைப்புகள் மலையாளத்துக்குக் கொண்டுவரப் படவில்லை.’’

“உங்கள் அபிப்பிராயத்தில் மலையாளத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நீங்கள் கருதும் தமிழ்ப் படைப்புகள் எவை?”

‘‘நான் முன்னரே குறிப்பிட்டதுபோல புதுமைப்பித்தனின் படைப்புகள், மௌனி, அசோகமித்ரன், ஜானகிராமன் போன்றவர்கள். அவர்களின் ஒருசில படைப்புகள் மலையாளத்துக்கு வந்திருக்கலாம். ஆனால், அவையெல்லாம் என்.பி.டி., சாகித்ய அகாடமி மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வந்தவை. அது சந்தைக்கு வருவது இல்லை. அவர்களது அலுவலகத்தில் மட்டுமே இருக்கும்.

கமர்ஷியல் பதிப்பகங்கள் மூலமாக வந்தால்தான் அது வாசகர்களைச் சென்றடையும். கே.வி.ஷைலஜா,

கே.வி.ஜெயஸ்ரீ போன்றவர்கள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு முக்கியமான பல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களே பதிப்பாளராகவும் இருந்ததால், தமிழில் இது நிகழ்ந்திருக்கிறது. மலையாளத்தில் அப்படியான சுயவிருப்பத்துடன் வேலை செய்பவர்கள் இல்லை.’’

 “மலையாளத்திலிருந்து தமிழுக்கு இதுவரை வராத, வரவேண்டிய படைப்புகள், படைப்பாளிகளைக் குறிப்பிட முடியுமா?”

‘‘அப்படி நான் சொல்லி அறிந்துகொள்ளும் நிலையில் தமிழ் வாசகர்கள் இல்லை. முகுந்தன், குஞ்சப்துல்லா, சேது, ஆனந்த், கல்பற்றா நாராயணன், சந்தோஷ் எச்சிக்கானம், சந்தோஷ்குமார், உன்னி.ஆர்., மனோஜ் குரூர், அசோகன் சருவில் என அனைவரின் படைப்புகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சிறப்பான விஷயம்.

கவிதையில் கோபிகிருஷ்ணன் மிகச் சிறந்த கவிஞர். ஆனால், மலையாள மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்குத் தமிழில் வாசகர்கள் மிகவும் குறைவு என்று நினைக்கிறேன். எனினும், அன்வர் அலி, அனிதா தம்பி போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்க்கலாம்.  என் வாசிப்பின்படி மலையாளத்தைவிடவும் தமிழ்க் கவிதைகள் சிறந்த தரத்திலும் நவீனத்துடனும் இருக்கின்றன.’’

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா


 “எம்.டி.வாசுதேவன் நாயர் படைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

``எம்.டி.வி, எங்களுக்கெல்லாம் ஒரு தந்தையைப் போன்றவர். மிகவும் சீனியர். புனைவு எழுத்தில் அவர்தான் எங்கள் தலைமுறை எழுத்தாளர்களை உயர்த்திக் கொண்டு வந்தார். விஜயன், மாதவிக்குட்டி, குஞ்சப்துல்லா, சேது, முகுந்தன், ஆனந்த், நான் என பலரும் எம்.டி.வி,

என்.வி.கிருஷ்ணவாரியர் இருவராலும் கண்டுபிடிக்கப்பட்டவர்கள். அவருக்கு நாங்கள் அனைவருமே ஒரு தேர்ந்த போட்டியாளர்களாக இருந்தோம். ஆனால், அவர் அவ்வாறு எங்களைக் கருதவில்லை. அவர் எங்களையெல்லாம் தூக்கிப் பிடித்தார். அதுதான் அவரது மேன்மை. எம்.டி.வி-க்கு மார்டனிட்டி பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் அவர் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் எழுதினார். அவ்வாறு எழுதுவதை அவர் தெரிந்துதான் செய்தார். இப்போதும் அவர் ஒரு புத்தகம் எழுதினால், கேரளாவில் உடனே விற்றுத்தீர்ந்துவிடும்.’’

“மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள். ஜெயகாந்தன் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தான் படிப்பதை நிறுத்திவிட்டார்; உடனே எழுதுவதையும் நிறுத்திவிட்டார். ஆனால் சுந்தர ராமசாமி, இறுதி வரை எழுதியும் படித்துக்கொண்டுமிருந்தார். சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள், வயது ஒரு பிரச்னை இல்லை எனும் அளவுக்கு எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருக்கின்றார்கள். நவீன இலக்கியத்தில் இவ்வளவு காலமும் அவர்கள் தொடர்வதற்கு எது முக்கியக் காரணமென நினைக்கிறீர்கள்?”

‘‘அது அவரவர்களின் சுயதேர்வு. எழுத்தாளன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் தன்னை எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறான் என்பதும் தொடர்கிறான் என்பதும் மிக முக்கியமானது. காரணம், நாம் காலண்டரைப் பார்த்து நமது வாழ்வை அளக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், நாம் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். நாம் தந்தையாவோம்; தாத்தாவாவோம். அப்படியே காலம் போய்க்கொண்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எங்கு இருக்கிறேன் என்பது முக்கியம். எனது துறை இலக்கியம். நான் அதிலேயே தொடர வேண்டுமெனில், நான் தொடர்ந்து என்னைப் புதுப்பித்துக் கொண்டும் தரப்படுத்திக்கொண்டும் இருக்க வேண்டும். அதற்கு, வாசிப்பு மிக முக்கியம். மலையாளத்தில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் என்ன நடக்கின்றன என தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் தொடர்ந்து நீடிக்க முடியும்.

இரண்டாவதாக, புதிய அறிவுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் கிடைப்பது நம்மை மாற்றுகின்றன. உலகம் வளர்கிறது. நாம் மாற்றமடைகிறோம்; நாம் கிழவனாகவில்லை. அதில் ஒரு காரியமும் இல்லை. ஆனால், மாறிக்கொண்டு இருக்கிறோம். முன்னர், நான் என்ன உருவாக்கினேன் என்பதற்கு ஒரு மதிப்பும் இல்லை. இப்போது நம்மிடம் என்ன இருக்கிறது, எதை உருவாக்குகிறோம் என்பதில்தான் நமது மதிப்பு நிலைகொள்கிறது. நம்மிடம் எதுவும் இல்லையெனில், ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். நீங்கள் காலத்திலிருந்து  துண்டிக்கப்படுவீர்கள்.’’

“மலையாளத்தில் புனைவு, கவிதை, நாடகம், திரைப்படம் போன்ற துறையில் செயல்படுகின்ற கலைஞர்களுக்கு இடையே என்ன மாதிரியான தொடர்பும் உறவும் உள்ளது?”


‘‘நல்ல உறவு உள்ளது. அவர்கள் தேவையான அளவு இணைந்து செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன். ஒரு பிரச்னை என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். தற்போது இயக்குநர் கமல், பா.ஜ.க-வினரால் தாக்கப்பட்டபோது, அனைவரும் கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அனைத்து கலைஞர்களும் சேர்ந்து திருவனந்தபுரத்தில் கமலுக்கும், எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டம் செய்தோம். அதை சி.பி.எம் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் ஏற்பாடு செய்திருக்கிறது. இருந்தாலும் அனைவரும் கலந்துகொள்கின்றனர். பி.ஜே.பி-காரர்கள், இயக்குநர் கமலை, ‘பாகிஸ்தானுக்குச் செல்’ என்கின்றனர். எம்.டி.வி பணமதிப்பிழப்பை விமர்சித்தார். நாங்கள் அவர்கள் இருவருக்கும் ஆதரவாக குரல் கொடுத்தோம்.  ஒரு பிரச்னை எனில் அனைவரும் ஒன்று கூடுகிறோம். ஆனால், சிலருடன் – மதச்சார்பு சக்திகளுடன் குறிப்பாக சங்பரிவாருடன் தங்களை இணைத்துக்கொண்டவர்களுடன் – என்னால் எந்த மேடையிலும் பங்கேற்க இயலாது. அத்தகையவர்கள் இருக்கும் மேடையில் நான் பங்கேற்க விரும்புவது இல்லை. அந்தவகையில், இலக்கியம் எங்களைப் பிரிக்கவில்லை; ஆனால், அரசியல் பிரிக்கிறது. அவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருக்கலாம்; ஆனால், அவர்கள் சங்பரிவாரத்துடன் இருக்கின்றனர். அக்கித்தம், சுகுதகுமாரி போன்றவர்கள் சங்பரிவாருடன் இணைந்து செயல்படுகின்றனர். அதனால், அத்தகையவர்களுடன் நான் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டேன். நான் அதை விரும்பவில்லை. ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் அதைப் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், பெரும்பாலும் அனைத்துப் படைப்பாளி களிடமும் பரஸ்பர ஒத்துழைப்பு உண்டு. அனைவரும் பொது விஷயங்களில் குரல் கொடுக்கின்றனர்.’’

  “மலையாளிகள், தமிழர்களைத் தாழ்வாகவே மதிப்பிடுவதாக ஒரு பேச்சு உண்டு. அது உண்மைதானா?”

‘‘இது ஒரு மேல்ஜாதி மனோபாவம். ஃபியூடலிசம். அவர்கள் தங்களை உயர்வானவர்களாக எப்படியோ நம்புகின்றனர். அதற்குக் காரணம் தமிழகத்தைவிடவும் வெகு முன்னரே அவர்கள் கல்வியில் முன்னேறிவிட்டனர். தமிழகத்திலிருந்து கூலிவேலைக்கு வரும் தமிழர்களையே மலையாளிகள் அதிகமும் கண்டுள்ளனர். அவர்களை ‘பாண்டி’ என்றே அழைக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், பாண்டி என்பது  பாண்டியன் கிங்டம் என்பதை அவர்கள் அறிவது இல்லை. அங்கு முதலில் கூலிவேலைக்கு வந்த அடித்தட்டு மக்களைப் பார்த்து, அவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதே சமயம், மலையாளிகள் எல்லாம் மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் வேலை செய்தே சம்பாதித்துச் செல்கின்றனர். அதை மறந்துவிடுகின்றனர். சென்னை போன்ற ஒரு மாநகரம் கேரளத்தில் இல்லை. தற்போதுதான் கொச்சி வளர்ந்து வருகிறது. தமிழகத்திலிருந்து இரண்டாயிரம் பேர் கொச்சி வந்துள்ளனர் எனில், இரண்டு லட்சம் மலையாளிகள் சென்னையில் உள்ளனர். இது ஒருவகை நகைமுரண்.’’

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா

“குடி கலாச்சாரம், தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பரவியிருக்கிறது. ஆனால், கேரளாவில் கொண்டாட்ட மனநிலையுடன் பக்குவமாகவும் குடியை அணுகுவதாக இங்கு எண்ணப்படுகிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

‘‘கேரளத்தில், கள் என்பது கலாசாரத்தின் ஒரு பகுதி. நல்ல கள் முன்பிலிருந்தே கிடைத்துக்கொண்டிருந்தது. பெரும்பாலானோர் குடிப்பார்கள். சிலர் குடிப்பதில்லை. பீஃப்பும் அவ்வாறுதான். கள்ளை அரசு விநியோகிக்க ஆரம்பித்த பின்னர், அரசியல்வாதிகளின் கைகளுக்குச் சென்று ஊழல் நிகழ்ந்தது. கலப்படம் நிகழ்ந்தது. உணவு என்பதிலிருந்து அது போதையாக மாறியது. போதை தலைக்கேறியவுடன் அவன் மற்றவர்களுக்கு உபத்திரமானவனாக மாறினான்.

எனக்குத் தோன்றுவது இப்போது கேரளத்தின் ஜனத்தொகையில் பத்து, பதினைந்து சதவிகிதத்தினரே குடிக்கின்றனர். என்னிடம் புள்ளி விவரமெல்லாம் இல்லை. ஆனால், நான் அவ்வாறே கணிக்கிறேன். ஆனால், தமிழகத்தைப் போலவே, கேரளாவிலும் அரசின் கணிசமான அளவு வருமானம் குடியிலிருந்து வருவதுதான்.குடிப்பதற்கான தனிமனிதனின் சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது. அதை அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால், குடிப்பவன் பிறருக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது. மோசமான குடிகாரர்கள் குடும்பத்தை அழித்துவிடுகிறார்கள். அதுதான் பொதுவான பெரும் பிரச்னையாக இருக்கிறது. மதுவிலக்கு இந்தச் சிக்கலைத் தீர்க்குமென நினைக்கின்றனர். ஆனால், அது தீர்வாகாது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என எல்லா மதங்களும் குடிக்கு எதிரான நிலையை தீவிரமாக எடுக்கவில்லை. உதாரணமாக, கிறிஸ்துவர்கள் குடிக்கின்றனரெனில், அவரது மதம் அதில் தலையிட வேண்டும். அரசுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறதா என்ன? குடிகாரனுக்கு ‘மாமுதீஸா’ செய்ய முடியாது; திருமணம் நடத்தித்தர முடியாது என்று சர்ச் முடிவெடுத்தால், குடியைப் பெருமளவு தடுக்கலாம். அதைச் சொல்லக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை.’’

“இலக்கியத்துக்கும் கேரள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் எத்தகையது? தமிழகத்தில் இலக்கிய ஆளுமைகளுக்கும் திரை ஆளுமைகளுக்கும் ஒத்துப்போவதே இல்லை.  கேரளத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து திரை ஆளுமைகள் இயங்குகின்றனரா? அத்தகைய படங்கள் வெற்றி பெறுகின்றனவா?”

‘‘1950-1970 காலகட்டங்களில் மலையாளத்தில் இலக்கியவாதிகளும் இயக்குநர்களும் இணைந்து வேலை செய்தனர். பஷீர், தகழி, எம்.டி.வி, சுரேந்திரன் போன்றவர்கள்தான் திரைப்படத்துக்கு கதைகளை வழங்கினர். திரைக்கதையிலும் பெரும் பங்களிப்பைச் செய்தனர். ஆனால், அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. ஒரு சிறு குழுவினர் கதை விவாதத்தில் பங்கேற்று, கதைகளையும் காட்சிகளையும் உருவாக்குகின்றனர். எனது  ‘பிரைஸ் ஆஃப் தி லார்ட்’ சினிமாவாக உருவாகியிருக்கிறது. அதில் மம்முட்டி நடித்தார்; அது வணிகரீதியாக வெற்றிபெற்ற படம். மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த சில இளம் இயக்குநர்களுக்குப் போதுமான வாசிப்பு இருக்கிறது. அவர்கள் கிளாசிக்குகளை வாசித்திருப்பார்களா என்று தெரியாது.  எனினும் வாசிக்கிறார்கள். ஓரளவு இசை பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். இயக்குநர்கள் மட்டுமல்ல நடிகர், நடிகையர்களும் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ரீமா கல்லிங்கல் போன்றவர்கள் எல்லாம் அப் டு டேட். அரசியல் நிலைப்பாடுகளிலும்கூட தெளிவாக இருக்கின்றனர். ஆனால், மூத்த தலைமுறை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் அப்படி அல்ல. அவர்களிடம் இந்தியப் பிரதமர் யாரென்று கேட்டால்கூடத் தெரியுமா எனத் தெரியவில்லை.’’

“மம்முட்டிகூடவா?” 


‘‘மம்முட்டிக்கு இந்தியப் பிரதமர் யாரென்று தெரியும். அவ்வளவுதான்.’’ (சிரிக்கிறார்)

“அவர் நிறைய இலக்கியப் பரிச்சயம் கொண்டவராகத் அறியப்படுகிறாரே?”


‘‘அப்படியா? (சிரிக்கிறார்) அவர்களுக்கு அதற்கான நேரம் இல்லை.  ஸ்கிரிப்ட்டைக்கூட பார்ப்பதோடு சரி, அதை வாசிப்பதற்குக்கூட நேரம் இருப்பது இல்லை. கதையைச் சொல்லும்படிக் கேட்பார். அவ்வளவுதான். அவர்களது கடின உழைப்பை மதிக்கிறேன். அவர்களுக்கு வாசிப்பதற்கான நேரமோ, ஓய்வோ கிடைப்பது இல்லை. காலையில் நான்கு மணிக்கும் மூன்று மணிக்கும் எழுந்திருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கையை, லக்ஸுரியான வாழ்க்கை  என்று சொல்கின்றனர். ஆனால், அவர்களது வாழ்க்கை மிகவும் பரபரப்பானது, நெருக்கடியானது, சலிப்புமிக்கது. நம்முடைய நாள்களைப் போன்றது அல்ல அவர்களுடையவை.’’

“நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களுக்குத் திருப்தி தந்த படைப்பு எது? உங்கள் படைப்பில் நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்களா?”

‘‘எனக்கு எதிலும் திருப்தி இல்லை. ஒரு சில படைப்புகளில் வடிவமும் உள்ளடக்கமும் சிறப்பாக வந்திருப்பதாக நினைத்திருக்கிறேன். ஆனால், அதை இப்போது மீண்டும் எடுத்து வாசித்தால் திருத்தத் தேவை இல்லை எனத் தோன்ற வேண்டும். அப்படியானவை ஒரு சில மட்டுமே உள்ளன. ‘விகடன் தடம்’ இதழில் வெளியான ‘தேன்’ போன்ற கதைகளை எழுதுகிறபோது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். என் அனைத்துப் படைப்புகளில் இருந்தும் விலகி, ஒரு புதிய வடிவத்தை அதில் உருவாக்க முடிந்தது. பழையவற்றிலிருந்து விலகி, புதிதாக  ஒன்றைப் படைக்கும்போதுதான் திருப்தி கிடைக்கும்.’’

“படைப்பாளிகளில் பலருக்கும் எழுதுவதற்கான மனநிலையில் ஏற்படும் ‘பிளாக்’ (block) உங்களுக்கு நேர்வது உண்டா? ”

‘‘இல்லை. துவக்கத்தில் இருந்தது, இப்போது இல்லை. எழுதினால்தான் எழுத்தாளனாகத் தொடர முடியும் என்று எனக்குத் தெரியும். நான் அதிலிருந்து தப்பிக்க முடியாது. என் படைப்பை நான்தானே படைக்க முடியும்? மற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாதே. ஒரு மணி நேரம் கடந்தும் ஒன்றும் எழுத இயலவில்லை என்றாலும் நான் காகிதத்தின் முன் காத்திருக்கத்தான் வேண்டும்.’’

“உங்கள் மீதான சுயவிமர்சனம்?”

‘‘எழுதுவதில் சக்காரியா ஒரு சோம்பேறி.’’

“யாருமில்லாத ஒரு தனித்தீவுக்கு உங்களை அனுப்பிவைத்து, அங்கே ஒரே ஒரு புத்தகத்தை  மட்டும் எடுத்துச் செல்ல அனுமதித்தால், எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வீர்கள்?”

“இந்திய இலக்கியம் என்று ஒன்று இல்லை!” - பால் சக்காரியா


‘‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்.’’

“கால இயந்திரத்தில் பயணிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால், எந்தக் காலத்துக்குச் செல்வீர்கள்?”

‘‘அரிஸ்டாட்டில், பிளாட்டோ காலகட்டத்தைய கிரேக்கத்துக்குச் செல்வேன். ஏனெனில், நாலாயிரம் வருடங்களுக்கு முன்பே நவீனமானவர்கள் அவர்கள். அவர்கள் எவ்வாறு சிந்தித்தார்களோ, அப்படித்தான் நவீன சமூகத்தில் இன்றும் சிந்திக்கப்படுகிறது. குறிப்பாக, தத்துவத் துறையில். அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.’’

“புதியவர்களுக்குச் சில வார்த்தைகள்?”

‘‘புதிய எழுத்தாளர்கள் என்று இல்லை; அனைத்து எழுத்தாளர்களும் அவரவர் சமூகத்துக்குப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். சோஷியல் கமிட்மென்ட் உள்ளவராக இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பில்லாதவன் எழுத்தாளனாக மாட்டான். மலையாளிகள் வாசிக்கவில்லை எனில், நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பொருளும் இல்லை. மலையாளிகளுக்கு எது நல்லது என்று நான் சிந்தித்துச் சொல்ல வேண்டும். நாம் அறிந்ததை சமூகத்துக்குச் சொல்லத் தவறும்பட்சத்தில் மோசமான அரசியல்வாதிகள் அதைச் சொல்வார்கள்!

ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல்பூர்வமான பார்வை ஆகியவை அடிப்படையில் மிகவும் முக்கியமானவை. வரலாற்றின் மீது அவசியம் கவனம்கொள்ள வேண்டும். நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? பாலின பாகுபாடற்ற தன்மையை அனைத்து வகையிலும் பேண வெண்டும். ஓர் ஆண் எழுதத் துவங்கினால், அவன் தலையில் முன்னரே ஏற்றப்பட்ட ஆணாதிக்க மனோபாவம் இருக்கிறது. அதிலிருந்து அவன் விடுபட வேண்டும். படைப்பில் பாலினப்பாகுபாடு தலைகாட்டக் கூடாது. அதுபோலவே, மதம் பற்றிய விஷயங்களை படைப்பில் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அதை விமர்சனக் கண்ணோட்டத்துடன்தான் அணுக வேண்டும். எந்தப் புனித நூல்களையும் ஆராதனை மனோபாவத்துடன் அணுகக்கூடாது. அப்படி ஆராதித்தால், எழுத்தாளன் முடிந்துவிடுவான். ஒரு நேர்மையான அரசியல் பார்வையுடன் அதை அணுக வேண்டும். அதற்கு, அவன் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவனாக இருக்கத் தேவையில்லை. ஆனால், எழுத்தாளன், அரசியல் விமர்சகனாகவும் இருக்க வேண்டும்.’’