Published:Updated:

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை
செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

சுபா

பிரீமியம் ஸ்டோரி

கோவை வரை விமானப் பயணம்; அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, பெருந்துறைக்கு காரில் செல்வது என முடிவாகியிருந்தது. கோவையில் நான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் டிராவல்ஸ் கார் வேண்டும் என்று கேட்டதும், அவர்கள் சிபாரிசு செய்தது கதிரவன்.

 காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து, நெற்றியில் திருநீறுடன் அவன் ரிசப்ஷனில் காத்திருந்தான். முப்பதுக்குள் வயது. நல்ல உயரம். தூய வெள்ளை நிறச் சீருடை. செருப்புகள்கூட வெள்ளை நிறம்.

வாசலில் சுத்தமாக, வெள்ளை நிற இன்னோவா காத்திருந்தது. இருக்கைகளுக்குக்கூட வெள்ளை நிற பூத்

துவாலைகள் பொன்னாடையாகப் போர்த்தப்பட்டிருந்தன.

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

உற்சாகமான புன்னகையுடன் கார் கதவைத் திறந்துவிட்டான். கண்ணாடியில் செண்பா டிராவல்ஸ் என்ற ஸ்டிக்கர் எழுத்துக்கள் மின்னின.

''வழில அன்னபூர்ணால டிஃபன் சாப்பிட்டுக்கலாம்'' என்றேன்.  

காரில் ஏ.சி-யின் குளுமையுடன் ஒரு சுகந்த வாசமும் கலந்திருந்தது. டேஷ்போர்டில் வைக்கப்பட்டிருந்த தியான லிங்கத்தின் புகைப்படத்துக்கு செம்பருத்திப் பூ ஒன்று அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.  

''பிசினஸா, சார்?''

''இல்ல, ஆடிட்டிங்...'' என்றேன்.

காரில் போகும்போது, ஓட்டுநருடன் இயல்பாகப் பேசிக்கொண்டே செல்வது என் பழக்கம்.

''உங்க டிராவல்ஸ்ல எவ்வளவு வண்டி ஓடுது..?''

''எட்டு இன்னோவா, நாலு டிஸையர், ஒரே ஒரு பழைய க்வாலிஸ்..!''

''முதலாளி பேரு..?''

என் பக்கம் அரைப் பார்வை பார்த்து, புன்னகையுடன், ''கதிரவன்...'' என்றான்.

''ஓ..! உன்னோட டிராவல்ஸா..? நீயே வண்டி எடுத்துட்டு வந்ததும், தப்புக் கணக்கு போட்டுட்டேன்..!''

''திருப்பூர் வழினா எப்பவுமே நான்தான் வண்டியை எடுப்பேன், சார்..!''

''ஏன்..?''

''அங்கதான் சார், என் செண்பா இருக்கா...'' என்றான்.

அன்னபூர்ணாவில் சாப்பிடும் வரை வேறெந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை. வெளியில் வந்ததும், எதிர்ச்சாரிக்கு ஓடினான். திரும்பி வந்து காரில் ஏறியபோது, கையில் புதிய ஒற்றை ரோஜா ஒன்று.

''செண்பாவுக்கா?''

''ஆமா, சார்...''

அங்கிருந்து புறப்பட்டு, கார் மாநில நெடுஞ்சாலையைப் பிடித்ததும், என் அடுத்த கேள்வியை வீசினேன்...

''செண்பா யாரு..? மனைவியா..?''

சிரித்தான். ''எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல சார்..!''

''அப்ப... காதலி?''

''ம்ஹூம்..!''

''குலதெய்வம் பேரு செண்பகதேவி?''

''செண்பா யாருன்னு சாருக்குத் தெரிஞ்சுக்கணும், இல்ல? செண்பாவை நான் மொதமொதல்ல சந்திச்சது எப்படின்னு உங்களுக்குச் சொல்றேன்..!'' என்றான்.

மூன்று வருடங்களுக்கு முன்...

கதிரவனின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தினம். அவனுக்குப் பிரியமான பெரியபாளையத்தம்மன் கோயில் பூசாரி, அவன் கொடுத்த கார் சாவியை அம்மனின் உருவத்துக்குக் கீழே வைத்து, பூக்களும் எலுமிச்சையும் சேர்த்து அவனிடம் கொடுத்தார்.

''சொந்த வண்டியா, கதிரு?''

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

''ஆமாங்கய்யா... எங்க டிராவல்ஸ்ல இந்த க்வாலிஸ் வண்டிய குடுத்துரப்போறாங்கனு தெரிஞ்சதும், மொதலாளிகிட்ட எனக்குன்னு கேட்டேன். வேலையை விட்டுப் போறேன்னு அவருக்கு வருத்தம்தான். ஆனா, வாழ்த்து சொல்லி, மார்க்கெட் ரேட்டைவிட கம்மி விலைக்குக் கொடுத்திட்டாரு...''

''நல்லா செலவு பண்ணியிருக்க போலருக்கு?'' என்றபடி, பூசாரி சொரசொரப்பான விபூதியை கைநிறைய அள்ளி, காரின் பானெட் மீது தூவினார்.

''இன்ஜின் நல்லாத்தான் இருக்கு. சஸ்பென்ஷன் மாத்தி, ஸ்டீயரிங் சர்வீஸ் பண்ணி, ஏ.சி. க்ளீன் பண்ணி, டொக்கு விழுந்த சீட்டுக்கெல்லாம் புது குஷன் போட்டு, டிங்கரிங், பெயின்டிங் பண்ணதும் வண்டி புதுசாயிருச்சு...'' என்றான் கதிரவன், காரை வாஞ்சையுடன் வருடியபடி.

எலுமிச்சைகளை டயர்களுக்குக் கீழே வைத்து, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, பானெட்டில் மாலை போட்டு, கார் தன் பயணத்துக்குத் தயாரானது.

இருக்கைகளுக்கு அணிவித்திருந்த அந்தத் தூய வெண்ணிற பூத்துவாலைகள், அன்று இரவுக்குள் ரத்தக்கறைகளால் அழுக்காகிவிடும் என்று கதிரவன் அப்போது நினைக்கவேயில்லை.

காரை அங்கிருந்து எடுத்ததும், செல்போன் ஒலித்தது.

மாணிக்கம்.

அவன் மீது பிரியம் கொண்ட சினிமா கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி. கோவையை ஒட்டி ஷூட்டிங் இருந்தால், அவன் வேலை பார்த்த டிராவல்ஸில் பல கார்களை வாடகைக்கு எடுப்பார். முக்கியமான நட்சத்திரங்களை அழைத்து வரும் பொறுப்பை, எப்போதுமே கதிரவனிடம்தான் ஒப்படைப்பார். உண்மையானவன், யோக்கியமானவன் என்று அவன் மீது அவருக்குப் பெருமதிப்பு!

''என்ன கதிர்... வண்டிக்குப் பூஜை போட்டாச்சா?''

''உங்க ஆசீர்வாதத்துல போட்டாச்சுண்ணே...''

''யூனிட் ஷிஃப்ட் ஆகுது. ஊட்டில பத்து நாள் ஷெட்யூல்..! ஏற்பாடு பண்ண இன்னிக்கு நைட்டு நான் புறப்படணும். வரியா?''

''எத்தனை மணிக்குண்ணே பிக்-அப் பண்ணணும்?''

''பத்தரைக்கு வந்துரு...''

டீசல் நிரப்பி, ஜே.கே. கடையில் பரோட்டா சாப்பிட்டு, ஒரு லெமன் சோடாவும் அருந்திவிட்டு, கதிரவன் புறப்பட்டான். மாணிக்கத்தின் கை, ராசியான கை. அவருடன் முதல் சவாரி போவதில் அவனுக்குப் பெருமகிழ்ச்சி!

ராம் நகரில், மாணிக்கம் அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்தியபோது, மெல்லிய தூறல்கள் விழ ஆரம்பித்தன. வானத்தில் பேரிடிகள் முழங்கி, மின்னல்கள் ஃப்ளாஷ் அடித்து, கோயமுத்தூரை போட்டோ எடுத்தன.

அவருடைய பெட்டிகளை வாங்கிப் பின்னால் அடுக்கியபடி, ''மொத சவாரி உங்களுக்கு ஓட்டறது எனக்கு சந்தோஷம்ணே...'' என்றான்.

''இந்தாடா, அட்வான்ஸா வெச்சுக்கோ...'' என்று அவருடைய பர்ஸ் திறந்து, ஆயிரத்து ஒரு ரூபாயை அவனிடம் கொடுத்தார். இரண்டு கைகளாலும் வாங்கி அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, டேஷ்போர்டில் வைத்தான். காரில் ஏறி அமர்ந்தான். வண்டி புறப்பட்டது.

''புதன்கிழமை விஜய் வராரு; இலியானா வருது. யாரும் காட்டாத ஊட்டியைக் காட்டணும், புதுசா லொகேஷன் பிடினு டைரக்டர் என் தலைல பொறுப்பைத் தள்ளிட்டாரு...''

அஜீத் பற்றி, விஜய் பற்றி, த்ரிஷா பற்றி, பாலா பற்றி, ஆர்யா பற்றி, இன்னும் எத்தனையோ பேர் பற்றி அவனிடம் நிறைய விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவன் மீது அவ்வளவு நம்பிக்கை.

கார் கோவையைவிட்டு வெளியில் வந்து, மாநில நெடுஞ்சாலையைத் தொட்டபோது, மழை சற்று வலுத்திருந்தது.

மாணிக்கம், பையைத் திறந்து, ஒரு பீர் கேனை எடுத்தார்.

''மொத சவாரியைக் கொண்டாடலாமா? இந்தா...''

''இல்லண்ணே...''

''டேய், இந்த மழைல எந்த போலீஸ்காரன்டா வண்டியை நிறுத்தி செக் பண்ணப் போறான்..?''

''வண்டி ஓட்டும்போது நான் குடிக்கறதில்லண்ணே... உங்களுக்குதான் தெரியுமே..!''

மாணிக்கம் கட்டை விரலால் கேனின் மேற்புறத்தை அழுத்தி, துளை ஏற்படுத்தி, பீரை வாய்க்குள் சரித்துக்கொண்டார்.

மாணிக்கம் முதல் பீரை முடித்தபோது, வானத்தின் வயிற்றைக் கிழித்ததுபோல், திடீரென்று மழை மேலும் வலுத்தது. காரின் பெருவிளக்குகளைப் போட்டும்கூட, இருபது அடி தொலைவுகூட புலப்படாதவண்ணம், பார்வையை மறைத்தது.

கதிரவன் வைப்பரை இயக்கினான். உழைத்தவன் நெற்றி வியர்வையை வழித்து எறிவதுபோல, வைப்பர்கள் இடைவிடாமல் விண்ட்ஷீல்டில் விழுந்த மழை நீரை வழித்து வழித்து எறிந்தன.

இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்த அந்தச் சாலையில், அந்த நேரத்தில் வாகனங்களே இல்லை. தகடு தகடாகப் பெய்த மழையில், காரின் முன்விளக்குகளின் வெளிச்சம் தோற்றுப்போனது. ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் காரை வளைத்துத் திருப்பியதும், கதிரவன் அதிர்ந்தான்.

பத்தடி தூரத்தில் ஒரு கார் குறுக்கில் நின்றிருந்தது. கடைசித் தருணத்தில் அதைக் கவனிக்காமல் விட்டிருந்தால், போய் மோதியே இருப்பான். சட்டென்று பிரேக்கை அழுத்தினான்.

உதிர்ந்த மண்ணும் சேறும் சேர்ந்து, மழையால் வழவழப்பாகியிருந்த தார்ச்சாலையில் க்வாலிஸ் கார் சற்று தூரம் வழுக்கிக்கொண்டு முன்னே சென்று நின்றது.  

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை

''அறிவு கெட்டவன்... வண்டியை எப்படி நிறுத்தியிருக்கான் பாருங்க..!''

கார் கண்ணாடியை சற்றே இறக்கி, பீர் கேனை வெளியில் தூக்கிப் போட்ட மாணிக்கம், ''சரியா பாருப்பா... ஆக்ஸிடென்ட் போல இருக்கு.!'' என்றார்.

திறந்த ஜன்னல் வழியே, நொடிகளுக்குள் காற்று, மழைநீரை உள்ளே கொண்டுவந்து இறைத்தது. கதிரவன் அப்போதுதான் கவனித்தான். முன்னால் நின்றிருந்த காரின் முன்ஜன்னல் திறக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு கை நீண்டு, பலவீனமாக ஆடியது. இவனுடைய காரின் முன்விளக்கு வெளிச்சத்தில், மழையை மீறி, அந்தக் கையில் ரத்தம் சொட்டியதைப் பார்க்க முடிந்தது.  

''அடிபட்டிருக்குண்ணே...'' என்று கதிரவன், மாணிக்கத்துக்காகக் காத்திருக்காமல் சட்டென்று இறங்கினான்.

ஊசி ஊசியாகக் கண்களில் குத்தும் மழையைக் கையால் மறித்துத் தடுத்தபடி, அந்த காரை நெருங்கினான். அந்த காருக்கு முன்னால் ஒரு லாரி, மரத்தில் மோதி குறுக்கில் திரும்பி நின்றிருந்தது. லாரி டிரைவர் வண்டியை அப்படியே விட்டுவிட்டுப் போயிருந்தார். டிரைவர் இல்லாமல் நின்ற லாரியை முன்னால் சென்ற கார், மழையின் அடர்த்தியில் கவனிக்காமல் மோதியிருந்தது.

அருகில் சென்றதும், விபரீதம் புரிந்தது. கார் மோதிய வேகத்தில், ஓட்டுநரின் நெஞ்சில் ஸ்டீயரிங் அழுத்தி, வாய் ஓரத்தில் ரத்தம் கசிந்திருந்தது. அவருடைய உயிரற்ற கண்கள் வெளியே வெறித்தன.

ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞனின் முகத்திலும் கழுத்திலும் கையிலும் ரத்தம். தொய்ந்து மூடுகின்ற இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்து, ''பின்னால... பின்னால...'' என்று ஏதோ முணுமுணுத்தான்.

கதிரவன் பதறினான். காரினுள் கைநீட்டி, உள்விளக்கைப் போட்டான். பின் இருக்கையைப் பார்த்ததும், அதிர்ந்தான்.

நன்றாக உடுத்திய ஓர் இளம்பெண்ணும், அவள் காலடியில் ஒரு சிறுமியும் நினைவின்றிக் கிடந்தனர். இருவரும் கார் மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு, முன் இருக்கைகளில் மோதியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் முகம் முன் இருக்கையின் முதுகில் பதிந்திருந்த கோணத்தில், அவளுடைய மூக்கு நசுங்கியிருந்தது. அதனால், சுவாசம் திணறிக்கொண்டிருந்தது. மூச்சுடன் சேர்ந்து சிவப்புக் குமிழ்கள் வெளியில் வருவதைப் பார்த்ததும், கதிரவனின் பதற்றம் அதிகரித்தது.

மாணிக்கம் கதிரவனின் தோளுக்கு மேல் எட்டிப்பார்த்தார்.

''டிரைவர் ஸ்பாட்லயே அவுட்ணே... க்ரேன் வெச்சு வண்டியைப் பின்னால இழுத்தாதான், அவரை வெளிய இழுக்கவே முடியும்...'' என்றபடி, மழையில் நனையாதவண்ணம் செல்போனை இயக்கினான்.

''ஆம்புலன்ஸுக்குச் சொல்லிடுவோம்ணே...''

''என்னடா பேசற? அவங்க எப்ப வந்து, எப்ப பிக்-அப் பண்ணிட்டுப் போறது? மூணு பேர் உசுருக்குப் போராடிட்டு இருக்காங்க..! நம்ம வண்டில தூக்கிப் போட்டுட்டு, ஆஸ்பத்திரிக்குப் போவோம்டா...'' என்றார், மாணிக்கம், சற்று கோபமாக.

கதிரவன் தன் காரைத் திரும்பிப் பார்த்தான்.

''அண்ணே, இன்னிக்குதான் மொத சவாரி எடுத்திருக்கேன். உங்களுக்கே தெரியும், இது எவ்ளோ நாள் கனவுன்னு..! வண்டில ரத்தக்கறை ஆயிடும். போற வழில யாராச்சும் உயிரை விட்டா, சங்கடமாயிரும்ணே... ஆம்புலன்ஸ கூப்ட்டுருவோம்ணே...'' என்று சொன்னவன், அதே கணத்தில் தன் வாக்கியத்தின் அபத்தத்தை உணர்ந்தான்.

தலையில் ஓங்கித் தட்டிக்கொண்டான். ''இல்லண்ணே... நீங்க சொல்றதுதான் சரி... ஒரு உயிர் பொழைச்சாலும், அது பெரிசுதாண்ணே..!''

மோதிய வேகத்தில், அந்தக் காரின் பின் கதவு வளைந்து நசுங்கியிருந்ததால், கைப்பிடியைப் பிடித்துத் திறக்க வரவில்லை. பெருமழை வேறு முகத்தில் மோதி, அவன் முயற்சியைக் கடினமாக்கியது.

கதிரவன் ஓடினான். தன் காரில் டயர் மாற்றுவதற்காக வைத்திருந்த ஜாக்கியை எடுத்து வந்தான். ஓங்கி அடித்தால், கண்ணாடி சிதறி, உள்ளே மயக்கமாகிக் கிடக்கும் குழந்தை மீதும், தாயின் மீதும் விழக்கூடும் என்பதால், ஜன்னல் கண்ணாடியை மெள்ள மெள்ளத் தட்டித் தட்டி உடைத்து, அந்தக் கம்பியை வைத்தே, கதவை நெம்பித் திறந்தான்.

பட்டுப் பாவாடையும், பட்டுச் சட்டையுமாகக் கீழே கிடந்த சிறுமியை முதலில் தூக்கினான். அதிக பட்சம், மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அதன் கழுத்தில் தங்கச் சங்கிலி வேறு. குழந்தை அதிர்ச்சியில் மயக்கமாகியிருந்ததே தவிர, அடி பலமாக இல்லை. தன் காரில், பின் இருக்கையில், முதலில் குழந்தையைப் படுக்க வைத்தான்.

மாணிக்கத்தின் உதவியுடன், அடிபட்டுக் கிடந்த பெண்ணை அசைத்து நகர்த்தினான். மயக்கம் தெளியாமல் அப்படியே சரிந்து, அவன் மார்பில் அவள் மல்லாந்தாள். மாணிக்கம் அவளுடைய கால்களைப் பற்றிக்கொண்டார். இருவருமாக கொட்டும் மழையில் மெள்ள க்வாலிஸ் காருக்கு அவளை இடம்பெயர்த்தனர்.

பார்த்துப் பார்த்து வாங்கிய வெள்ளை நிற பூத்துவாலைகள், அந்தப் பெண்ணின் முகத்திலிருந்து வழிந்த ரத்தத்தால் கறையாகத் துவங்கின.

அடுத்து, அந்த இளைஞனை வெளியே இழுத்தபோது, அவன் வலியில் அலறியதிலேயே, அவனுடைய நெஞ்செலும்புகள் உள்ளே முறிந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. க்வாலிஸின் பின்புறம் படுக்க வைத்தபோது, அவனும் மயக்கமாகி விட்டான்.

உதவி செய்ய, அந்தப் பாதையில் வேறு வாகனமே வரவில்லை.

''கார்ல ஏதாவது பர்ஸ், பேக், போன் கெடக்குதா பாரு..!'' என்றார் மாணிக்கம்.

இவ்வளவு நெருக்கடியிலும் அவரால் எப்படித் தெளிவாக யோசிக்க முடிகிறது..?

காருக்குள் குனிந்து, இருக்கைகளுக்கு இடையில் துழாவித் தேடியபோது, கண்ணாடி வளையல் துண்டங்களும், பிசுபிசுப்பான ரத்தமும் தட்டுப்பட்டதே தவிர, செல்போன் எதுவும் கிட்டவில்லை.

டிரைவரை அப்படியே அங்கு விட்டுச் செல்ல மனமில்லை. கையில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் வைத்து, ஸ்டீயரிங்கை வளைத்து உடைத்து, நகர்த்தி, டிரைவரையும் வெளியே இழுத்தார்கள்.

மரித்தவனையும் காயப்பட்டவர்களையும் சுமந்துகொண்டு, க்வாலிஸ் வந்த வழியிலேயே பயணம் செய்தது.

கதிரவனின் ரத்தம் தோய்ந்த கைபட்டதும், ஸ்டீயரிங் பிசுபிசுப்பானது. மாணிக்கம் கோவையில் இருந்த தன் நண்பர்களுக்கு போன் செய்து, மருத்துவமனைக்கும் போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார்.

அவசரமாக வண்டியை ஓட்டி, இன்னொரு விபத்தில் சிக்கிக்கொள்ள விரும்பாத கதிரவன், பத்திரமான உச்ச வேகத்தில் காரைச் செலுத்தினான். கார் முதல் மருத்துவமனையை அடைந்தபோது, இயற்கை இரக்கம் கொண்டது. மழையின் தீவிரம் குறைந்தது.

ஸ்ட்ரெச்சர்களுடன் செவிலிகளும் மருத்துவர்களும் காரை நோக்கி விரைந்தனர்.

ஒவ்வொருவராக வெளியே எடுக்கப்பட்டதும், காரின் உள்ளே சேறும் சகதியும் ரத்தமும் எங்கும் பரவிக் கிடந்தது.

இளைஞனைக் கிடத்திய இடத்தில், ஒரு பர்ஸும் சிதைந்து போன செல்போனும் கிடைத்தன. பர்ஸில் இருந்த லைசன்ஸ் பிரதி அவன் பெயரை 'சத்யன்’ என்று அறிவித்தது.

மருத்துவர்கள் டிரைவர் இறந்துபோனதை உறுதிசெய்தார்கள்.

''குழந்தைக்குப் பெரிசா காயமில்ல. அம்மாவோட தாடை எலும்பு உடைஞ்சிருக்கு. இவருக்குதான் காயம் அதிகம். நெஞ்செலும்பு முறிஞ்சு ஹார்ட்டைக் கிழிச்சிருக்கு. அஞ்சு நிமிஷம் லேட்டா வந்திருந்தாகூட, எங்க கைமீறிப் போயிருக்கும்'' என்று சத்யனைக் காட்டினார்கள்.

அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் எடுத்துச் செல்லப்பட...

மாணிக்கம் ஓரமாக ஒரு நாற்காலியில் போய் தளர்ந்து அமர்ந்தார். அருந்திய பீரும் எதிர்கொண்ட பரபரப்பும் அவரைக் களைப்பாக்கியிருந்தன.

கதிரவன், சத்யனின் பர்ஸை ஆராய்ந்து, வேறொரு முகவரி அட்டையை எடுத்தான். 'கிருஷ்ணராஜன்’ என்ற பெயரைப் படித்தான்.

அந்த ராத்திரியில் தகவல்கள் பறந்தன.  

காவல் துறையினருக்குக் கதிரவன் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தபோது, இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக கார் ஒன்று அந்த மருத்துவமனை வளாகத்தில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கி, உள்ளே ஓட்டமும் நடையுமாக வந்தார், கிருஷ்ணராஜன்.

சுமார் ஐம்பது வயது. நல்ல கறுத்த தேகம். தடித்த உதடுகள். அடர்த்தியான புருவங்கள். முகத்தில் பற்களும் விழிகளும் மட்டுமே வெண்மை. கண்களில் கருணை. விவரங்கள் விளக்கப்பட்டதும், அவனுடைய கைகளைப் பற்றி ஈரக்கண்களில் ஒற்றிக்கொண்டார்.

''ஒரே மக..! பேத்தி என் உயிருய்யா...'' என்று சொல்வதற்குள், அழுதுவிட்டார்.

கதிரவன் கண்களும் கலங்கிவிட்டன.

கத்தையாகப் பணம் எடுத்து அவனிடம் நீட்டினார். ''வந்துபோன செலவுக்கு வெச்சுக்கப்பா...''

அதைக் கையில் வாங்காமல், வேண்டாமென்று தலை அசைத்து, கதிரவன் கை எடுத்துக் கும்பிட்டான்.  

காவல் துறை அதிகாரி, சில கையெழுத்துக்கள் வாங்கிக்கொண்டு, அவனைப் போக அனுமதித்தார்.

தூங்கும் மாணிக்கத்தை எழுப்பித் தன் காருக்கு அழைத்துச் சென்றபோது, கிருஷ்ணராஜன் ஓடிவந்தார்.

''உன் நம்பரைக் கொடுத்துட்டுப் போ, கதிரவா...''

ரத்தக் கறை படிந்த அந்த வெள்ளை நிற பூத்துவாலைகளை அப்படியே சுருட்டி குப்பைத் தொட்டியில் எறிந்த போது, துக்கம் கதிரவன் நெஞ்சை அடைத்தது.

கதிரவன் கதையை இங்கே நிறுத்தியபோது, திருப்பூரில் குமரன் சிலையை நெருங்கிவிட்டோம்.

என் கேள்விகள் கூடியிருந்தன. செண்பா யார்..? பின் இருக்கையில் கிடந்த அந்தப் பெண்ணா..? ஒருவேளை, அவள் கணவனை இழந்த பின், நன்றியில் இவனை மணந்துகொண்டாளா..? அல்லது...

''கதையை சுவாரஸ்யமான கட்டத்துல நிறுத்திட்டியேப்பா..?'' என்றேன், தாங்காமல். அவன் தொடர்ந்தான்...

''ரெண்டே நாள்ல அவரே போன் பண்ணாரு. வீட்டுக்குக் கூப்பிட்டாரு. திருப்பூர்ல பெரிய மில், கோயமுத்தூர்ல ரெண்டு ஹோட்டல் அவருக்கு இருக்குனு அப்பதான் தெரிஞ்சுது. அவர் மக, மாப்பிள்ளை, பேத்தி, எல்லாரும் உயிர் பொழைச்சதுக்கு நான்தான் காரணம்னு ஆபீஸ்ல மீட்டிங் வெச்சு, மாலை போட்டு கௌரவம் பண்ணாரு. அவங்க பேங்க்ல பேசி, சொந்தமா ஒரு டிராவல்ஸ் ஆரம்பிக்க எனக்கு லோன் வாங்கிக் கொடுத்தாரு...''

இன்று அவர் கம்பெனியின் அத்தனைத் தேவைகளுக்கும் தன்னுடைய கம்பெனியில் இருந்துதான் கார்கள் போகின்றன என்றான்.

''இப்ப எங்க டிராவல்ஸ்ல ரயிலு, பிளேனு டிக்கெட்லாமும் புக் பண்றோம்.. அவர் வெளிநாட்டுக்குப் போறதா இருந்தாக்கூட, எங்க டிராவல்ஸ் மூலமாதான் டிக்கெட் வாங்கறாரு. எல்லாத்துக்கும் மூல காரணம், மாணிக்கம் அண்ணன்தான். அன்னிக்கு என் புத்தி தடுமாறினப்ப, பீர் அடிச்சிருந்தாலும், அவருதான் தெளிவா மண்டைல தட்டினாரு...'' என்றான், நன்றி தொனிக்க.

''ரோடுல அடிபட்டுக் கெடக்கறவங்க யாரையும் கவனிக்காம போகக்கூடாதுனு எங்க டிரைவருங்களுக்குச் சொல்லியிருக்கேன். ஏன்னா, அடிபட்டிருக்கிறவங்க எதிர்காலம் மட்டுமில்ல, காப்பாத்தறவங்க எதிர்காலமும் மாறலாம்...''

''செண்பா யாருன்னு சொல்லலியேப்பா?''

புன்னகைத்தான். ''பார்த்துட்டுப் போலாமா, சார்?''

''ம்... ம்...''

காரை பாரதி நகரின் அந்த வீதியில் நுழைத்து, தோட்டம் கொண்ட பெரிய பங்களாவின் முன் நிறுத்தினான். காரின் விநோதமான ஹார்ன் ஒலி கேட்டதும், வீட்டுக்குள் இருந்து அந்தச் சிறுமி ஓடி வந்தாள்.

அவன் மண்டியிட்டு அமர, தொம் என்று அவன் மீது மோதி, அப்படியே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவளை உயர்த்தி, கன்னங்களில் முத்தமிட்டான். அந்த ரோஜாவை அவளிடம் கொடுத்தான்.

ஏதோ பேசிவிட்டு, எழுந்தான். அந்தச் சிறுமி, காரில் இருந்த என்னை வில்லனைப் பார்ப்பதைப்போல் பார்த்தது. அவனுக்கு இன்னொரு முத்தம் கொடுத்துவிட்டு, மனசில்லாமல் வீட்டுக்குள் போனது.

கதிரவன் வந்து காரில் ஏறிக்கொண்டான்.

'இந்தக் குட்டிப் பொண்ணுதான் கார்ல அடிபட்டுக் கெடந்துச்சு! 'அங்கிள்... அங்கிள்...’ன்னு என் மேல உயிராயிடுச்சு... வாரம் ஒருவாட்டி திருப்பூருக்கு இதைப் பாக்க வந்திருவேன்.''

''இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. செண்பாங்கறது அந்தக் குழந்தை பேருதானே..?''

''சார், நீங்க ரொம்ப புத்திசாலி..!'' என்று காரைச் செலுத்திக்கொண்டே, கதிரவன் சிரித்தான்.

செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை
செண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு