Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

வாழ்க்கை,
பெவிலியனுக்கே அனுப்பிவைக்கிறது 
ஆட்டத்தின் எல்லா உத்திகளும்
முறியடிக்கப்பட்டுவிட்டப் பிறகு
கைகளில் வலிந்து திணிக்கப்பட்ட மட்டையுடன்
மலங்க மலங்க விழிக்கும்
கடைசி வரிசை ஆட்டக்காரன்போல
எச்சில் விழுங்க நிற்கிறேன்.
மூச்சிரைக்க மூர்க்கமாக ஓடிவரும்
ஓர் அதிவேகப் பந்துவீச்சாளன்போல வீசும்
வாழ்வின் கரங்களிலிருந்து விடுபட்டு
முகத்துக்குச் செங்குத்தாய்
விருட்டெனப் பறந்துசெல்கிறது
தொட்டுவிடக்கூட முடியாத
கடைசிக்கும் கடைசியான வாய்ப்பு.
எல்லாமும் கைமீறிப்போன பிறகு
ஒன்றுமே செய்ய முடியாத மைதானத்தில்
ஒன்றுமே செய்ய முடியாத ஓர் ஆட்டக்காரன்
என்னதான் செய்துவிட முடியும்
துயரத்துடன்
பெருந்துயரத்துடன்
முகத்தைத் தொங்கப்போட்டு
பெவிலியன் நோக்கித் திரும்புவதைவிட.

- தர்மராஜ் பெரியசாமி


தேனிலவுக்கு `விஜி' என்று பெயர்
நீண்ட பயணமொன்றில் நீளும் குளிரில்
தழுவும் மேகங்களைக்கொண்ட ஒரு மலையுச்சியில்
உருகும் ஒருத்தியின் கண்களில் சுடரும் காதல்
ஒரு பறவைபோல ஆகாயத்தைச் சுற்றும்போது
எதிர்ப்படும் மரணப் பள்ளத்தாக்கின் வாசலில்
அதன் கண்கள் நிலைகுத்தி நிற்கையில்
சேர முடியாமல் சேர்ந்து இறந்துபோன
ஆன்மாக்களின் அழுகை விசும்பலை
அந்தப் பள்ளத்தாக்கின் மூலைமுடுக்கெங்கும்
ஓங்கி ஒலிக்கவிட்ட காலத்தின்
இரக்கமற்ற கண்களோடு
ரத்தக்கறை படிந்து துருவேறிக்கிடக்கும் கைகளோடு
சிதைந்துகிடக்கும் முகங்களோடு
யாராவது  இருக்கக்கூடுமென்று  சந்தேகிக்கையில்         
தூண்டிலில் சிக்கிய மீனொன்று
கரைக்கு வந்ததும் துள்ளுமே ஒரு துள்ளல்
அப்படித் துள்ள ஆரம்பிக்கும் மனசை     
அன்பின் சொரூபமாய்
`அசோகா' என்று கூப்பிட்டு அணைத்துக்கொண்ட அந்தத் தேனிலவுக்கு `விஜி' என்று பெயர்.

- அசோக் பழனியப்பன்

ற்றுக்கோடு
மிதிவண்டியில் என்னை அமரவைத்து மிதிக்கிறான் மகன்.
எட்டி முன்னால் பார்த்துக்கொண்டே
`மெள்ள வீசு’ என்று
எதிர்காற்றுடன் பேச்சுவார்த்தை
நடத்துகிறேன்.
காற்றோ இதற்காகத்தான் காத்திருந்தேன் என
தாயாகி அவன் கேசம் கோதுகிறது
குழந்தையாய் அவன் தோள்  பற்றுகிறேன்
சிரித்தபடி விரைகிறான் அவன் தந்தையாக.

- அகராதி

யதைக் கழற்றுதல்
ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை அழைத்தேன்
அம்மையீர்...
ஓர் இருபது ஆண்டுகளுக்குப்
பின்னால் வர முடியுமா?
இருபது ஆண்டுகளுக்கு
முந்தைய முகம்
இங்கேதான் இருக்கிறது
வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
என் காதல் பற்றியா கேட்கிறீர்கள்?
அது கிடக்கிறது கழுதை
`ஒரு முப்பது ஆண்டுகள்
முன்னால் வா’ என்று
நீங்கள் அழைத்தால்
நுரைதள்ள ஓடிவந்து
உங்களை உரசிக்கொண்டு நிற்கும்.
`வயது என்பது உடைபோல’ என்று
நீங்கள்தானே சொன்னீர்கள்
சொல்லுங்கள் அம்மணி
இருபது உடைகளைக் கழற்ற
உங்களுக்கு இவ்வளவு நேரமா?

- கார்த்திக் திலகன்