Published:Updated:

`ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!’ - கதை சொல்லிகளின் கதை

`ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!’ - கதை சொல்லிகளின் கதை
News
`ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!’ - கதை சொல்லிகளின் கதை

`ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!’ - கதை சொல்லிகளின் கதை

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா

`மோகமுள்', `அம்மா வந்தாள்', `மரப்பசு', `உயிர்த்தேன்', `நளபாகம்' போன்ற நாவல்கள் மூலம் உலகப்புகழ் பெற்றவர் தி.ஜானகிராமன். ஒரு நாவலாசிரியராகவே அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவரது `சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

நாவல்கள் அவருக்கு அளித்த புகழின் வெளிச்சம் அதிகம் என்பதால், அவருடைய சிறுகதைகள்மீது கவனம் குறைவாக விழுந்திருக்கலாம். பாலியல் மீறல்கள் அவரது நாவல்களின் மைய இழையாக இருந்ததாலும் ஒரு வெகுசன ஈர்ப்பு அவர் நாவல்களின் மீது விழுந்திருக்கலாம். ஆனால், அவரது சிறுகதைகள் மிக நுட்பமான மனித உணர்வுகளைப் பேசுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921-ம் ஆண்டில் பிறந்தார். ஆரம்பகாலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய அருமையான பல தகவல்கள் விரவிக்கிடப்பதைக் காண, சங்கீதத்தில் இவருக்கு இருந்த ஞானமும் அறிவும் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இலக்கியத்தில் எம்.ஏ படித்திருக்கும் இவர், ஆரம்பத்தில் சிலகாலம் பள்ளி ஆசிரியராக வேலைபார்த்து, பிறகு சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலைபார்த்தார். பிறகு, புதுடெல்லி வானொலி நிலையத்திலும் பணியாற்றி சிறந்த சேவை புரிந்து 1978-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றார்.

ஆரம்ப காலங்களில் `கலைமகள்’ பத்திரிகையில் எழுதி,  நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். `மணிக்கொடி’ இதழிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு `கொட்டு மேளம்’ 1954-ம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது. இரண்டாவது சிறுகதைத் தொகுதி `சிவப்புரிக்க்ஷா’. 1956-ல் வெளிவந்த இந்தச் சிறுகதைத் தொகுப்பும் ஜானகிராமனுக்கு மிகுந்த புகழைக் கொடுத்தது. கு.ப.ராஜகோபாலனுக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். கு.ப.ரா-வின் இறுதி நாளில் அவருக்குத் துணையாக இருந்தவர்.

``இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர். அதேசமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும்கூட. இலக்கியத் தரமும் பிரபல்யமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இவரைப் போன்ற எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள், மிக நுண்ணிய ரசனைகொண்ட விமர்சகனையும் வியக்கவைக்கும்; வெகுசாதாரண வாசகனையும் கவர்ந்துகொள்ளும்.

அவருடைய சம்பிரதாயக் கட்டுப்பாடுகளை மீறும் கதைகளில் காணும் அழகு, கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உருவாக்கப்படும் தீவிரம் எல்லாம் ஒரு விமர்சகனை வியக்கவைக்கும். அதேசமயம் அவரது சொக்கவைக்கும் நடையழகும், வெகுசுலபமாக எந்தவிதமான சிரமமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்களானாலும் அலுக்காமல் படிக்கவைக்கும் எளிய சின்ன சின்ன சம்பாஷணைகளால் ஆன கதை சொல்லும் நேர்த்தியெல்லாம் எப்படிப்பட்ட சாதாரண வாசகனையும் மனம் கவரும். சாதாரணமாக நம்மில் பெரும்பாலோருக்கு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் எந்தச் சிக்கலான சம்பவமுமோ அல்லது சிந்தனையுமோ வெகு எளிதாக அன்றாடம் நாம் புழங்கும் வார்த்தைகளில் ஜானகிராமனால் சொல்லிவிட முடிகிறது. 

தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாத சாதாரண கதை படிக்கும் வாசகன், இத்தகைய எழுத்தின் ஆழத்தை உணர்த்துகொள்ளாமல் படித்துச் செல்லக்கூடும்தான். ஆனால், ஜானகிராமன் எழுத்து தரும் சுகானுபவத்தில் அவன் தீவிர ஜானகிராமன் ரசிகனாகிவிடுகிறான். இதெல்லாம் போக, ஜானகிராமனின் எழுத்தில் காணும் பரிகாசமும் கேலியும் யாரையும் துன்புறுத்தாத மென்மை குணம்கொண்டது. இது எந்த ரக வாசகனையும் கவர்ந்து ரசிக்கவைக்கும்.

ஜானகிராமனின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே அவர் பிறந்த தஞ்சை ஜில்லாவின் மத்திய தர பிராமணர்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பவை; அந்த வாழ்க்கைகொண்ட மதிப்புகளின் உச்சங்களையும் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் ஆவணம். ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது. அவர்கள்தாம் தமக்கு விதித்துக்கொண்டுள்ள லட்சியங்களைக் காக்க எப்போதும் வாழ்க்கையின் வதைக்கும் யதார்த்தங்களையும் சூழ்நிலையையும் போராடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது” என்பது அவரைப் பற்றி, வெங்கட் சாமிநாதன் அவர்களின் சித்திரிப்பு.

`தஞ்சை விவசாயக் கூலிகள் சாட்டையடியும் சாணிப்பாலும் தின்றுகொண்டிருந்த காலத்தில், மணிக்கொடி எழுத்தாளர்கள் அதைப்பற்றி எதுவுமே எழுதாமல் மேல்தட்டு வர்க்கத்து வாழ்க்கையையே வியந்து வியந்து எழுதிக்கொண்டிருந்தார்கள்' என்ற விமர்சனம், தி.ஜானகிராமன் மீதும் உண்டு. என்றாலும் எளியவர்கள் மீது பரிவும் சாய்மானமும்கொண்டவராக அவரது சிறுகதைகள் அவரை அடையாளப்படுத்துகின்றன. அதற்கு நல்ல உதாரணம் `சிலிர்ப்பு’ கதை. அவர் எப்படி எழுதுகிறார் என்பதற்கான உதாரணமாக அந்தக் கதை பற்றி அவரே பேசுகிறார்:

``எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் `நெக்லேஸை'யோ, `இரு நண்பர்களை'யோ, செக்காவ் `டார்லிங்'கையோ, `கோரஸ் பாடகி'யையோ, கு.ப.ரா. `நூருன்னிஸா'வையோ, பிச்சமூர்த்தி `பதினெட்டாம் பெருக்கை'யோ, தாகூர் `ஊர் திரும்புதலை'யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அனுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்வேன். 

ஒருநாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும் கறுப்புமாக நாய் பிடுங்கினாற்போன்ற பத்து வயதுப் பெண் குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் ``இது படித்து என்ன பண்ணப்போகிறது? நான்கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டுவிடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். 

என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச் சொன்ன தோரணையும் உள்மனதில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப் பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்று கேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சிவசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும் பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் எனத் தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு விளையாடிப் பிதற்றவேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும் கவலைகளையும் தாங்கிக்கொண்டிருப்பதுபோல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அதுவே பிறகு `சிலிர்ப்பு' கதையாயிற்று.

`சிலிர்ப்பு' கதையின் சுருக்கம் இது.

திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். 10:30 மணிக்குத் தொடங்கி 3 மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும்.

நான், கடைசிப் பெட்டிக்கு முன் பெட்டியில் தனியாக உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் என் பையன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். தலைமாட்டில் கையிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்தது. அதைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது எனக்கு. பையனை பெங்களூரிலிருந்து அழைத்துவருகிறேன். மாமா சம்சாரம் ஊருக்கு வந்திருந்தபோது அவனை அழைத்துப் போயிருந்தாள். நான் காரியமாக பெங்களூர் போனவன் அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். பெங்களூர் சிட்டி ஸ்டேஷனில் மாமா ரெயிலேற்றிவிட வந்திருந்தான். 

ரெயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்போது ஆரஞ்சுப் பழக்காரனைப் பார்த்து, ``ஆரஞ்சுப்பா... ஆரஞ்சுப்பா” என்று பையன் முனகினான். மாமா, காதில் விழாததுபோல அந்தண்டை முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டான். பையனைச் சுடுகிறாப்போல ஒரு பார்வை பார்த்தேன். அவன் வாய் மூடிக்கொண்டான். ஆனால், வண்டி புறப்பட்டதுதான் தாமதம், ஆரம்பித்துவிட்டான். ஆறு வயசுக் குழந்தை; எவ்வளவு நேரம்தான் அடக்கிக்கொண்டிருப்பான்.

``யப்பா... யப்பா..!”

``ஏண்டா கண்ணு!”

``யப்பா... ஆரஞ்சுப்பா.”

``நீ தூங்கு. திருச்சிராப்பள்ளி வந்தவுடனே வாங்கித் தந்துடுறேன்.”

``போப்பா!”

``இப்ப எங்கடா வாங்கிறது, ரெயில் போயிண்டிருக்கிறபோது?”

``அப்பன்னா ஒரு கதை சொல்லு.”

``அப்படிக் கேளு. நல்ல கதையாச் சொல்றேன். ஒரே ஒரு ஊரிலே…” பாதிக் கதையில் பையன் தூங்கிவிட்டான்.

திருச்சி வந்ததும் ஆரஞ்சு வாங்கினேன். ``யப்பா, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா. அம்மா உரிச்சுக் கொடுப்பா... கையிலே வாங்கித் திங்கிறேம்பா” என்று கெஞ்சினான்.

``ஆல் ரைட், அப்படியே செய்.”

வண்டி புறப்பட இன்னும் அரை மணி இருந்தது. தாகம் வறட்டிற்று. இறங்கிப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு வந்தேன்.

திரும்பி வரும்போது யாரோ ஓர் அம்மாள் என் பெட்டியில் ஏறிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு பெண். எதிர்ப் பலகையிலேயே உட்கார்ந்துகொண்டார்கள்.

அம்மாளுக்கு 40 வயது இருக்கும். இரட்டை நாடி. ருமானி மாம்பழம் மாதிரி பளபளவென்று இருந்தாள். காதில் பழைய கட்டிங்கில் ஒரு பெரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் வைர பேசரி. கழுத்து நிறைய ஏழெட்டு வடம் சங்கிலி. கையிலும் அப்படியே. மாம்பழ நிறப் பட்டுப்புடவை. நெற்றியில் பளீரென ஒரு மஞ்சள் குங்கும வட்டம். பார்க்க பார்க்க கண்ணுக்கு நிறைவான தோற்றம். பக்கத்தில் ஒரு தோல் பெட்டி. ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.

அந்தப் பெண்ணுக்கு 8 வயது இருக்கும். மாநிறம்; ஒட்டி உலர்ந்த தேகம்; குச்சிக் குச்சியாகக் கையும் காலும். கண்களை வெளிச்சம் போட்டுப் பார்க்கவேண்டியிருந்தது. எண்ணெய் வழிகிற முகம். தூங்குவதுபோல ஒரு பார்வை. கையில் ஒரு கறுப்பு ரப்பர் வளை. புதிதாக மொடமொடவென ஒரு சீட்டிப் பாவாடை. சிவப்புப் பூப்போட்ட வாயில் சட்டை. அதுவும் புதிதுதான். கழுத்தில் பட்டையடித்த கறுப்புக் கண்ணாடி மணிமாலை. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாடை, கொசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்தது. அதிலேயே ஒரு சட்டையும் திணித்திருந்தது.

அந்த அம்மாளுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்... எப்படிக் கேட்பது?

அந்தக் குழந்தை குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிக்கப்போகாமல் ஒரு ஜட்ஜ் வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறாள். ஏழு வயதிலிருந்து இந்த வேலைக்கு அவள் போய்க்கொண்டிருக்கிறாள். கல்கத்தாவுக்கு அந்தக் குழந்தையை நாளை அனுப்புகிறார்கள். அங்கே ஒரு வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள...

... எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. கண் காணாத தேசத்துக்கு ஒரு தாய் அந்தக் குழந்தையை அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாடையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டது.

பையன் ஆரஞ்சை மறுபடியும் கையில் எடுத்து வைத்துக்கொண்டான்.

``ஏண்டா குழந்தை, உரிச்சுத் தரட்டுமாடா?” என்றாள் அம்மாள்.

``வாண்டாம். ஊரிலே போய் அம்மாவை உரிச்சுக் குடுக்கச் சொல்லப்போறேன்.”

``நானும் அம்மாதான்டா.”

பையன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று. ``உனக்கென்ன வயசு?” என்று திடீரென்று பையன் குஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி போட்டான்.

``பத்து.”

``பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!” என்று விரலை எண்ணிக்கொண்டே கேட்டான்.

``இல்லை.”

``ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?”

``ஆமாம்பா. எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிறேன். ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. அவ அஞ்சாவது.”

``அவ படிக்கலைடா.”

``நீ படிக்கலை?”

``வீட்லயே வாசிக்கிறியா?”

``ம்ஹ்ம்.”

``அவ கல்கத்தாவுக்குப் போறாடா. அதான் படிக்கலை.”

அங்க எதுக்குப் போறாளாம்?”

``வேலைபார்க்க?”

``போப்பா… ஏண்டி, நீ வேலைபார்க்கப் போறியா?”

``ஆமாம்.”

பையன் அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் கேட்டான்...

``உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?”

அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தது. முதன்முதலில் அது சிரித்ததே அப்போதுதான்.

``எனக்கு எப்படி சைக்கிள் விடத் தெரியும்? தெரியாது.”

```அப்படீன்னா எப்படி வேலைக்குப் போவியாம்?”

``நடந்து போவேன்.”

மறுபடியும் அவளைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தான் பையன். அவன் அப்பா சைக்கிளில் வேலைக்குப் போகும்போது அவள் மட்டும் எப்படி நடந்து போக முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு குழந்தைகளும் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டு வண்டியின் வேகத்தை ரசித்துக்கொண்டிருந்தன.

குழந்தையைப் பார்த்து எல்லோர் நெஞ்சமும் இளகிற்று. பக்கத்தில் தஞ்சாவூர், ஐயம்பேட்டை என நடுவில் ஏறி உட்கார்ந்துகொண்டவர்களுக்கு அரைகுறையாகக் கேட்டாலும் நெஞ்சு இளகிற்று. அம்மாள் உட்கார்ந்திருந்த பலகையின் கோடியில் உட்கார்ந்திருந்தவர் - ராவ்ஜி மாதிரி இருந்தது. உதட்டைக் கடித்து ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிக்கொண்டார். நெஞ்சைக் குமுறி வந்த வேதனையை அடக்கிக்கொண்டு தைரியசாலியாக அவர்பட்ட பாடு நன்றாகத் தெரிந்தது.

கும்பகோணம் வந்துவிட்டது.

``போயிட்டு வரேம்மா. குழந்தே, போயிட்டு வரட்டுமா?” என்று ஒரு ரூபாயை அதன் கையில் வைத்தேன்.

``நீங்க எதுக்காகக் கொடுக்கிறேள்?” என்று அம்மாள் தடுத்தாள்.

``எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அழச்சிண்டுதானே போறேள்? இது வாத்தியார் குழந்தைதானே? உங்க குழந்தையில்லையே? நீங்க கொண்டாடுற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன செய்றது. எனக்குக் கொடுக்கணும்போல இருக்கு. எனக்கும் இதுக்குமேலே வக்கில்லை.”

``ஹ்ம்” என்று இரட்டைநாடிச் சரீரத்தில் ஒரு பெருமூச்சு வந்தது. ``வாங்கிக்கோடிம்மா. உங்களுக்கு ஒரு குறையும் வராது, ஸ்வாமி” என்றாள் அம்மாள்.

``யப்பா… இதைக் கொடுத்துட்டு வரேம்பா” என்று என் பையன் ஆரஞ்சைக் காண்பித்தான்.

``கொடேன்டா, கேட்பானேன்?”

``வாண்டாண்டா கண்ணு. குழந்தை பாவம். அம்மா உரிச்சுக் குடுக்கணும்னு சொல்லிண்டிருந்தது.”

``யப்பா… வாங்கிக்கச் சொல்லுப்பா” என்று பையன் சிணுங்கினான்.

``வாங்கிக்கோம்மா.”

பெண் வாங்கிக்கொண்டது.

``ஸ்வாமி, நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்திருக்கேள். வாடா கண்ணு. எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ” என்று அம்மாள் அழைத்தாள். பையன் கொடுத்துவிட்டு ஓடிவந்தான்.

என் மெய் சிலிர்த்தது. முகத்தைக் கூடியவரையில் யாரும் பார்க்காமல் அப்பால் திருப்பிக்கொண்டு கீழே இறங்கி அவனைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவனுக்கு நடக்கவா தெரியாது? எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ளவேண்டும் என உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது.

மானுட அறம் குறித்த அக்கறை அவருடைய பல கதைகளில் வெளிப்படும். சிவப்பு ரிக்‌ஷாவில் வரும் ருக்குவும் சப் எடிட்டரும், கடன் தீர்ந்தது கதையில் வரும் சுந்தர தேசிகர் முள்கிரீடத்தில் வரும் அனுகூலசாமி வாத்தியார் எனப் பல கதைகளைச் சொல்ல முடியும்.

`முள் கிரீடம்' கதையின் சுருக்கம்:

அனுகூலசாமி ஒரு பள்ளி ஆசிரியர். 36 வருடங்கள் ஒரு பள்ளியில் வேலை செய்துவிட்டு ஓய்வுபெறுகிறார். பிரிவு உபசார விழாவில் நாகஸ்வரம் இசைத்து மாணவர்கள் அவரை அழைத்துவந்து மாலை மரியாதை செய்கிறார்கள். அனுகூலசாமி தான் பணியாற்றிய இத்தனை வருடங்களில் எந்த ஒரு மாணவனையும் அடித்ததே இல்லை. ஏன், அதிர்ந்து ஒரு வார்த்தை சொன்னதுகூட கிடையாது. அதுதான் அவர் பெற்ற கௌரவம்!

ஓய்வுபெற்ற மனிதராக வீடு திரும்புகிறார். அவரது மனைவி ஆச்சர்யத்துடன் கேட்கிறார், ``மாணவர்களிடம் உங்களுக்கு ஒருமுறைகூட கோபமே வந்ததில்லையா?''

அவர் புன்சிரிப்புடன், ``உலகத்திலே இருக்கிறது கொஞ்சகாலம். மழைக்கு வந்து ஈசல் மடியறாப்பில அந்தப் பொழுதை அடிச்சுக்கிட்டு, கோவிச்சுக்கிட்டுப் போக்கணுமா?" என்கிறார். 

அவரது மனைவியோ ``ராட்சசன் மாதிரி கோவிச்சுக்க வேண்டாம். ஆம்பிளையா இருக்கிறதுக்காகவாவது ஒரு தடவை கோபம் வரவேண்டாமா?" என்கிறார். 

அவர் பதில் பேசாமல் எப்படியோ கௌரவமாக, எந்தப் பழியுமின்றி ஓய்வுபெற்றுவிட்ட சந்தோஷத்துடன் சிரித்துக்கொள்கிறார்.

அப்போது, அவரது வகுப்பில் படித்த ஆறுமுகமும் அவனோடு இன்னொரு சிறுவனும் அவனது தாயும் தயங்கி தயங்கி வீட்டினுள் வருவது தெரிகிறது. ஆறுமுகத்தோடு வரும் சிறுவன் பெயர் சின்னையா என்று நினைவுக்குவருகிறது.

ஆறுமுகம் தயக்கத்துடன் ``இவங்க சின்னையாவோட அம்மா சார்'' என்று அறிமுகப்படுத்துகிறான். சின்னையா கலக்கத்துடன் தலை கவிழ்ந்தபடி உதடு நடுங்க அம்மா அருகில் நின்றுகொண்டிருக்கிறான். எதற்கு வந்திருக்கிறார்கள் எனப் புரியாமல் அனுகூலசாமி யோசிக்கும்போது ஆறுமுகம் சொல்லத் தொடங்குகிறான்…

``சார், போன வருஷம் இவன் நம்ம வகுப்புல இருந்து ஒரு இங்கிலீஷ் புத்தகத்தைத் திருடிக்கொண்டுபோய் வேற பேர் ஒட்டிக் கடையில பாதி விலைக்கு வித்துட்டான். நான்தான் அதைக் கண்டுபிடிச்சு உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன். நீங்க அதுக்குத் தண்டனையா `இனிமே அவன்கூட யாரும் பேசக் கூடாது'னு சொன்னீங்க!" என்கிறான்.

அனுகூலசாமிக்கு, நடந்தவை லேசாக நினைவுக்குவருகிறது. ஆறுமுகம் தொடர்ந்து சொல்கிறான்… ``அன்னிலேர்ந்து நாங்க இவனை ஒதுக்கிட்டோம் சார்! யாரும் பேசவே மாட்டோம். இப்போகூட உங்க பிரிவு உபசார விழாவுக்குப் பசங்ககிட்ட ஆளுக்கு ஒரு ரூபாய் வசூல்பண்ணினோம். இவன் காசு கொடுக்க வந்தான். வாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். அதுபோல அவனை பார்ட்டிக்கும் வரக் கூடாதுனு சொல்லிட்டோம்" என்கிறான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சின்னையா தன்னை அறியாமல் விசும்பி அழத் தொடங்குகிறான். அவனை சமாதானம் செய்தபடியே சின்னையாவின் தாய் கலங்கிய குரலில் சொல்கிறாள்… ``நல்ல பையன் சார். அன்னிக்கு ஏதோ புத்திபிசகா செஞ்சிட்டான். இந்த ஒரு வருஷமா பிள்ளை சொரத்தாவே இல்லை. வீட்டுல தங்கச்சிக்கிட்டகூட முகம் கொடுத்துப் பேசுறதில்லை சார். இன்னிக்குத்தான் விஷயத்தைச் சொல்லி அழுதான். நீங்கதான் மன்னிப்பு கொடுத்து மத்த பையன்களை இவனோட பேசச் சொல்லணும். அப்படியே இதையும் ஏத்துக்கணும்'' என்கிறாள்.

சின்னையா வியர்த்து வடிந்த தன் கையில் சுருட்டிவைத்திருந்த ஒரு ரூபாயை அவரிடம் நீட்டுகிறான். அனுகூலசாமிக்கு அதுவரை இருந்த மனமகிழ்ச்சி சிதறிப்போய் கையும் களவுமாகப் பிடிபட்டதுபோலிருக்கிறது. அவர் தண்டனையை ஏற்றுக்கொள்வதுபோலக் குனிந்து வாங்கிக்கொள்கிறார். பிறகு, குரல் தழுதழுக்கச் சொல்கிறார்…

``இந்தப் பயக இப்படிச் செய்வாங்கனு தெரியாதும்மா!"

சின்னையாவின் முகத்தில் முதல்முறையாக லேசாகச் சிரிப்பு வருகிறது. அவரும் சிரிக்கிறார். ஆனால், சுவரில் மாட்டப்பட்டிருந்த இயேசுநாதரின் முள்கிரீடம் இடம் மாறி, தனது தலையில் பொருத்தப்பட்டதுபோல வலியை உணர்கிறார் அனுகூலசாமி.

ஏன் எழுதுகிறேன் என்கிற கேள்வியை எழுப்பி அவரே விடை கூறுகிறார் தி.ஜா. ``எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு எனத் தெரியாமல்... இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்.

எனக்கே எனக்காக எழுதும்போது என்ன எழுதுகிறேன், எப்படி எழுதுகிறேன், என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்துகொள்கிறேனோ? பசியே தொழிலாகக்கொண்டிருக்கிற ஏழைகளைப் பற்றி, பிச்சைக்காரர்களைப் பற்றி, பாட்டாளிகளைப் பற்றி, விருப்பமில்லாமல் வழுக்கி விழுந்த பெண்களைப் பற்றி, பள்ளிக்கூடம் போக முடியாமல், பிண ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டு போகிற குழந்தைகளைப் பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்ந்தவர்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று வகுத்துக்கொள்கிறேனா? 

இதையெல்லாம் எழுதி, உன்னைச் சுற்றி சாக்கடை தேங்கிக்கிடக்கிறது… ஏன் பார்க்கவில்லை என்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபித்துக்கொள்ள சங்கற்பிக்கிறேனா அல்லது குடும்ப உறவுகள், உணர்ச்சிகள், கலைஞர்கள், பெரிய உத்தியோகஸ்தர்கள், நடுவகுப்பு, உயர்வகுப்பு மனிதர்கள், அவர்களுடைய ஆச்சாரங்கள், சீலங்கள், புருவம் தூக்கும் பாங்கு, கண்ணிய வரம்புகள், மேல்பூச்சுகள், உள்நச்சுகள் இவற்றைப் பற்றி எழுத வேண்டும் எனத் திட்டம் போட்டுக்கொள்கிறேனா? அல்லது சிம்ம விஷ்ணு, கரிகாலன், ராணாப்பிரதாப், வல்லவ சேனன், அலெக்ஸாண்டர் இவர்களைப் பற்றி எழுதி பழைய காலத்தை மீண்டும் படைக்க வேண்டும்.

இன்றைய மனிதனின் மூதாதையரின் நற்குண, துர்குணங்கள், இவற்றையெல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங்களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழுதும்போது திட்டம் போட்டுக்கொள்கிறேனா?

*

எனக்கே எனக்காக எழுதும்போது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் இத்தனை பெயரைப் பற்றியும் எழுதினாலும் எழுதுவேன், எழுதாமலும் இருப்பேன். யாரைத் தெரியுமோ அவர்களைப் பற்றி எழுதுவேன். அதாவது அவர்கள் அல்லது அவை என் மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந்தரவு தாங்க முடியாமல்போனால்தான் எழுதுவேன். நானாகத் தேடிக்கொண்டு போய் `உன்னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம்’ என்று பேட்டி காண மாட்டேன் – அப்ஸர்வ் பண்ண மாட்டேன். அவர்களாக, அவையாக வந்து என்னைத் தாங்கினால்தான் உண்டு. அதனால்தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வதில் உற்சாகம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப்போக்கலாம். (என்ன காதல் என்று நிர்ணயித்துக்கொள்வது என்னுடைய இஷ்டம், வசதியைப் பொறுத்தது.)

அவர் வாக்குப்போலவே `மெனக்கெடல்’ என்று ஏதுமின்றி இயல்பாக வந்து விழும் கதைகள்தாம் அவருடைய படைப்புகள். அவருடைய நாவல்களில் பாலியல் மீறல்கள் பற்றி கண்ணியத்துக்கும் ஆபாசத்துக்கும் இடையில் கத்திமுனையில் நடப்பது போன்ற கதைகளைச் சொல்லியிருப்பார். `மரப்பசு' நாவல் கொஞ்சம் கீழே இறங்கிய நாவலாக எனக்குப்படும். ஆனால் சிறுகதைகளில் பல்வேறு தளங்களுக்குள்ளும் ஊடுருவிப் பாய்ந்து நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறார். சிறுகதை பற்றி அவர் சொல்ல வாசகத்தோடு நிறைவுசெய்வோம்.

``உணர்வு இல்லாமல் இயந்திரரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்கவைக்க முடியும். ஆனால், மெய்ம்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன். எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி.”

1982-ம் ஆண்டில் அவர் காலமானார்.