Published:Updated:

ஜங்கிள்புரி சிங்கம்!

ஜங்கிள்புரி சிங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜங்கிள்புரி சிங்கம்!

ஜெயசூர்யாசு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

ஜங்கிள்புரி சிங்கம்!

ஜெயசூர்யாசு.லலிதா ஸ்ரீநிதி, இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.

Published:Updated:
ஜங்கிள்புரி சிங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜங்கிள்புரி சிங்கம்!

ங்கிள்புரியில் ஒரே சலசலப்பு. சில நாள்களாக அனைவரும் பேசிப் பேசி அலுத்துப்போன விஷயம்தான். சிங்க ராஜாவுக்கு ஸ்கின் அலர்ஜி. அதனுடைய  ஓங்குதாங்கு உடம்பில் ஆங்காங்கே புள்ளிகளாக வரத் தொடங்கின.

ஜங்கிள்புரி சிங்கம்!

‘‘ஒருவேளை புள்ளிமான்களை அதிகம் சாப்பிடறதால இருக்குமோ'' என்றது சிங்க ராணி.

‘‘அதே புள்ளிமானை நீயும்தானே சாப்பிடறே. உனக்கு வரலியே'' என்று கடுப்பானது சிங்க ராஜா.

‘‘உழைக்காம ஒரே இடத்துல உட்கார்ந்து சாப்பிட்டா வருமோ என்னமோ'' என்று முணுமுணுத்தது சிங்க ராணி. (பெண் சிங்கம்தான் வேட்டையாடும் என்ற தகவலை இங்கே மறைமுகமாகக் குறிப்பிடுகிறோம். இந்தக் கதையில் இதுபோல இருக்கும் குறியீடுகளைச் சரியாக கண்டுபிடிப்பவருக்கு, குலுக்கல் முறையில் சிங்க ராஜாவோடு டின்னர் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.)

‘‘என்னது... என்னது?’’ என்று காதில் கையை வைத்து கேட்டது சிங்க ராஜா.

‘‘ஒண்ணுமில்லே... ஒண்ணுமில்லே’’ என்றது சிங்க ராணி.

டாக்டர் காட்டுப்பூனை வந்து பார்த்துவிட்டு, ‘‘இதற்கு உங்கள் ஷாம்பூ மற்றும் சோப்புகளே காரணம்'' என்றது நான்கே வார்த்தைகளில். (ஸாரி, ஆறே வார்த்தைகளில்.)

சிங்க ராஜாவும் சோப் மற்றும் ஷாம்பூவை மாற்றிமாற்றிப் பயன்படுத்திப் பார்த்துவிட்டது. இப்போது அதன் பிடரியும் குறைய ஆரம்பித்தது. ‘‘மூலிகை கலந்தது என்று சொல்கிற, விலை அதிகமான சோப்பையே பயன்படுத்தறேன். அப்படி இருந்தும் சரியாகலையே'' என்று புலம்பி முடிப்பதற்குள் கரடி ஓடிவந்தது.

அதற்கும் முடி கொட்டும் பிரச்னை. முடி இல்லாத கரடியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நாளாக நாளாக காட்டில் உள்ள ஒவ்வொரு விலங்குக்கும் அலர்ஜி வரத் தொடங்கியது.

‘‘இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?'' என்று உறுமிக்கொண்டு வந்தது புலி.

அண்ணன் ஏன் இவ்வளவு கோபப்படறார் என்று பார்த்தால்... பாவம், அதன் உடம்பில் பாதி கோடுகளையே காணவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜங்கிள்புரி சிங்கம்!

‘‘என்னப்பா... எல்லா வரிகளையும் சரியா கட்டற உனக்கே இந்தக் கதியா?'' என்று கிண்டல் செய்தது குரங்கு.

‘நாம குளிக்கிறதே இல்லை. அதனால், சோப்புக்கு வேலையே இல்லை. அதனால், இனியும் பிரச்னையும் வராது’ என்கிற ஆணவம் குரங்குக்கு.

ஆலோசனைக் கூட்டம் கூடியது. டிடெக்டிவ் யானையை அழைத்தது சிங்க ராஜா. ‘‘இதுக்குக் காரணம் என்ன? சோப்பைத் தயாரிப்பது யார்?'' என்று கேட்டது.

‘‘நம்ம காட்டுக்கு சோப்பு தயாரிச்சு கொடுக்கிறது காட்டெருமைதான். ஆளு முரட்டுத்தனமா இருந்தாலும் தொழிலில் ரொம்பச் சுத்தம். நல்ல சோப்பையே அனுப்பறார். நடுவுல எங்கோ போலி சோப் கலந்துடுது'' என்றது டிடெக்டிவ் யானை.

‘‘அப்போ, அது யாருன்னு கண்டுபிடி. 48 மணி நேரத்துக்குள் அந்த ஆள் என் முன்னாடி இருக்கணும். இதுக்கு மேலே என் பிடரியை இழக்க விரும்பலை'' என்ற சிங்க ராஜா, அலர்ஜி க்ரீமை உடம்பில் தடவிக்கொண்டது.

‘‘பார்த்து ராஜா, இந்த க்ரீம் போலியா இருந்து புள்ளிகளுக்குப் பதிலா பொத்தல் வந்துடப்போகுது'' என பீதியைக் கிளப்பியது பாம்பு.

ஜங்கிள்புரி சிங்கம்!

யானை தன்னுடைய அசிஸ்டென்ட் அணிலை அழைத்தது. ‘‘அணில் ராம், நாம ஓய்வெடுக்காமல் உழைச்சாதான் குற்றவாளியைப் பிடிக்க முடியும். கிளம்பு'' என்றது.

தன்னுடைய கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்ட அணில், யானையுடன் கிளம்பியது. இருவரும் கடை கடையாக ஏறி விசாரணையில் இறங்கினார்கள்.

‘‘எக்ஸ்க்யூஸ் மீ... நானும் ஹெல்ப் பண்ணட்டா?'' என்று வந்தது நரி.

‘‘நீயா?'' என்று தயங்கியது யானை.

‘‘அட, பயப்படாதேப்பா. இந்தக் கதையின் ட்விஸ்ட்டா, நானே வில்லனா வர மாட்டேன். எல்லாக் காட்டுக் கதையிலும் வில்லனா இருந்து போரடிச்சுப் போச்சு. ஒரு தொண்டு நிறுவனத்துல வேலை செஞ்சு நான் வாங்கின சர்ட்டிஃபிகேட் இது'' என்று சான்றிதழைக் காண்பித்தது நரி.

‘சரி’ என்று நரியையும் சேர்த்துக்கொண்டார்கள். கிடைத்த தகவல்களை வைத்து சிலர் மீது சந்தேக வட்டங்களைப் போட்டார்கள்.

‘‘ஓநாய் ஒடுக்கன்... கீறி கஜா... கழுகு காளி... மயில் மந்தாகன்...'' என்று அணில் பட்டியலை வாசிக்க, யானை குறுக்கிட்டது.

‘‘சீ... சீ... மந்தாகன் அப்படிப் பண்ணமாட்டான். எவ்வளவு அழகு... எவ்வளவு நளினம்'' என்றது.

‘‘செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் கதையா இருக்கே. நம்முடைய இந்தப் பொதுவான எண்ணத்தையே மயில் தனக்குச் சாதகமா பயன்படுத்தி இருந்தா..?'' என்று கேள்வியில் கொக்கி போட்டது நரி.

சந்தேகத்தை தீர்த்துப்போம் என முடிவுசெய்து மயிலின் இருப்பிடத்துக்குப் போனார்கள். வீட்டின் பின்பக்கம் பலவித வண்ணங்கள் ஒன்று சேர்ந்த கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தது.

‘‘என்னப்பா... மந்தாகன் குளிச்சுட்டு இருக்கானோ?'' என்றது அணில்.

‘‘இது சாயம். சோப்புத் தயாரிக்கிற மெஷின் உள்ளே இருக்கு போல. அதிரடியா நுழைவோம்'' என்ற யானை, கதவை ஓங்கி உதைத்தது.

ஜங்கிள்புரி சிங்கம்!உடைந்த கதவுக்கு அந்தப் பக்கம் சோப்பு மெஷின் அல்ல; ஒரு சோப்பு ஃபேக்டரியே இருந்தது. அத்தனையும் மட்டமான ரசாயனக் கலவைகள். சோப்பை பார்சல் செய்யும் அட்டைப் பெட்டிகள் மட்டும் வேறு வேறு நல்ல கம்பெனிகளின் பெயர்களாக இருந்தன.

கோபமாகப் பார்த்த யானையின் காலடியில் சரண்டர் ஆகி, ‘‘மன்னிச்சுடுப்பா... ஃபாரின் காட்டில் படிக்கும் என் மகள், மகனின் படிப்புச் செலவுக்காக இந்த பிசினஸில் இறங்கிட்டேன்'' என்றது.

‘‘உன் குடும்பம் நல்லா இருக்கிறதுக்காக காட்டையே நாசமாக்கப் பார்த்தியா. நட, சிங்க ராஜா குகைக்கு'' என்றது யானை.

அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து விலங்குகளின் பிரச்னைகளும் மறைந்தன. சிங்க ராஜா தன்னுடைய கம்பீரமான பிடரியைச் சிலிர்த்தபடி, ‘‘ராணி, இன்னுமா சாப்பாடு ரெடியாகலை'' என்று கெத்தாக கேட்டுக்கொண்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism