Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

அம்மா

இரண்டு நாள் விடுமுறைக்கு வந்த அம்மா
பூஜை அறையில் எருக்கம்பிள்ளையாருக்கு
மஞ்சள் அரளிப்பூ மாலை போட்டிருந்தாள்.
என் சேலைகளும் சுடிதார்களும்
தரம் பிரிக்கப்பட்டு வரிசையானது.
மல்லிகைப்பூவையும் மிஞ்சிய இட்லி
கொத்தமல்லிச் சட்னியுடன் மணத்தது.
ஒரு துணி விடாமல் துவைத்து
மடித்துக்கொண்டே பேசும் அந்த அரை மணியில்
ஊரில் புதிதாக நட்ட வாழையும்
என் வகுப்புத் தோழியின் விசாரித்தலும்
வெயிலுக்கு இதமாக அண்ணன் எடுத்துத்தந்த
புடவையும் வந்து போகும்.
பூக்கள் சிரித்த தலையணை எனக்கும்
பொம்மைப் படத் தலையணை பேரனுக்கும்
வானவில்லில் நனைத்ததை
அவருக்குமாகக் கொடுத்துவிட்டுக்
கிளம்பும்போது சொன்னாள்...
`பாத்திரம் கழுவிட்டு
குழாய நல்லா அடைச்சிட்டுப் போ
சொட்டிக்கிட்டே இருக்கு
அங்க அமராவதியில தண்ணி இல்ல புள்ள’.
விடுமுறையில் வந்த அம்மா
பழைய விவசாயியின் மகளாகவே தெரிந்தாள்.

- இந்து

சொல்வனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிராசை

மழைக்கால அந்தியொன்றில்
கடந்துகொண்டிருக்கும்
சவ ஊர்வலத்தினிடையே
தொடுவானில்
அரிதாகத் தோன்றும்
வானவில் ஒன்று
இறந்தவனின் கண்களை
ஒரு கணம்
ஒரேயொரு கணம்
திறந்து மூடும்படி
கேட்கிறது.

- கே.ஸ்டாலின்

சொல்வனம்

காணக் கிடைக்காத நிழல்

அப்பத்தா இறந்த ஏழாம் நாள்
பந்தல் பிரித்த இரவில்
துக்கம் விசாரிக்க
வீடு வந்திருந்த பெரியவர்
எங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவர்.
தகவல் தாமதமாகக் கிடைத்ததாக வருந்தியவர்
அப்பத்தாவின் பூர்வீகம் குறித்து
நாங்கள் அறியாத செய்திகளைப் பகிர்ந்தார்.
பழைய நினைவுகளில் மூழ்கிக்
கண்ணீரோடு கொஞ்ச நேரம்
பொட்டாட்டம் அமர்ந்திருந்தவர்,
தன் வயது நண்பர்களில்
அவர் மட்டும் மிஞ்சியிருப்பதாகச் சொன்னார்.
பின் கனத்த நெஞ்சோடு எழுந்தவர்
என்ன நினைத்தாரோ
சற்றே திரும்பி வீட்டுக்குள் எட்டிப்பார்த்து
மாடத்தில் ஏற்றியிருந்த தீபத்தை
வணங்கி விடைபெற்று நடந்தார்
காணக் கிடைக்காத
கடவுளின் நிழல்போல.

- மு.மகுடீசுவரன்

சொல்வனம்

நிதானம்

பந்தயக் குதிரையின் வேகமோ
வேட்டைச் சிறுத்தையின் பாய்ச்சலோ
பகை விலங்கிடமிருந்து தப்பிச்செல்லும்
மான்கள் முயல்களின் அதிவிரைவோ இன்றி
பரபரப்படையாமல் பதற்றமேதும் கொள்ளாமல்
ஒரு முகையவிழும் லாகவத்தோடு
காய்ந்த புழுதியில் பரவும் ஈரக்கரிசனத்தோடு
தூரக் கடல் மீதும்
தடுப்பற்ற நிலத்தின் மீதும்
இருள் துடைத்து
மெள்ள பொன்முலாம் பூசிக்கொண்டிருந்தான்
கோடையின் வருகையை
அறிவித்தலின் பொருட்டுப் புறப்பட்ட
புலர் சூரியன்.
அந்த நிச்சலன நிதானம்
எனக்கு மிகப் பிடித்திருந்தது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism