Published:Updated:

அந்தரச் செடி - சிறுகதை

அந்தரச் செடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அந்தரச் செடி - சிறுகதை

விஷால் ராஜா - ஓவியங்கள்: ஸ்யாம்

அந்தரச் செடி - சிறுகதை

விஷால் ராஜா - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
அந்தரச் செடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
அந்தரச் செடி - சிறுகதை

லுவலகம் முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, எதிர்வீட்டு வாசலில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதைக் கவனித்தேன். அந்த இடத்தில் இரைச்சலோடுகூடிய பதற்றமான அசைவுகள் தெரிந்தன. எனக்கு முதலில் அக்கறைகாட்டத் தோன்றவில்லை. கூட்டத்தை விலக்கிச் சென்ற ஒருவர், கடப்பாரையால் கதவை உடைத்துத் திறக்க முயல்வதைக் கண்டதும்தான் எனக்கும் தீவிரம் உறைத்தது. பைக்கை நிறுத்திவிட்டு அங்கே சென்றேன். வாசல் தூணையொட்டி பிரமைதட்ட நின்றிருந்தார் வீட்டுக்காரர். குழப்பத்திலும் பயத்திலும் எதையோ பற்றிக்கொள்ளத் தேடுவதுபோல் அவர் கண்கள் அகல விரிந்திருந்தன. அத்தனை பெரிய ஆகிருதி கையறுநிலையில் நிற்பதைப்  பார்க்கவே கூசியது. நிர்க்கதி மிகுந்து பரிதாபமாகக் காட்சியளித்தார். அவர் எனக்கு அறிமுகமான நாள், அனிச்சையாக மனதில் தோன்றி விலகியது. முரட்டுத் தோரணம்கொண்டிருந்த அன்றைய மனிதர், இவரோடு எந்தத் தொடர்பும் இல்லாத அந்நியர் என நினைத்துக்கொண்டேன்.

ன்றைக்கு முன்னிரவு, வாசற்கதவு மூர்க்கத்தோடு ஓங்கித் தட்டப்படும் சத்தம் கேட்கையில், நான் சமையற்கட்டில் நின்று தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தேன். கூடத்தில் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ஒலிகளை மீறி அந்தச் சத்தம் பயமுறுத்தியது. நான் தயக்கத்தோடு நடந்து கூடத்துக்கு வந்தேன். கதவுக்கு மறுபுறம் மிரட்டிக்கொண்டிருந்த குரல், எனக்கு அறிமுகமானதாக இல்லை.

அந்தரச் செடி - சிறுகதை

“யாருடா அது... யாருடா?”

கதவை, ஆத்திரத்துடன் அறைந்துகொண்டே இருந்தது. ஏதோ கலவரச் சூழல்போல.

“யாரு அது... வெளியே வாங்கடா!”

கதவுக்கு அருகில் நின்றிருந்தபோதும் தாழ்ப்பாளைத் திறக்க எனக்குத் தைரியம் இல்லை. மனதில், யோசனையைத் திரட்ட முடியாத நடுக்கம். யார் என்றோ, என்ன எதிர்பார்ப்பது என்றோ புரியவில்லை. மூட்டமான கற்பனைகள், கலக்கத்தை ஏற்படுத்தின. சட்டென வெளியே சத்தம் அடங்கி அமைதி உருவாக, நான் அச்சத்தினூடே நிதானமடைய முயன்றேன். சிறிய இடைவெளியை அடுத்து, நினைத்திராத ஒரு தருணத்தில் மறுபடியும் வலுவோடு கதவு தட்டப்பட, பயத்தின் கூர்மையில் என் உடல் விறைத்துக்கொண்டது. அதிர்ந்து நின்றிருந்தேன். உடனே வாசலுக்கு வெளியே கால்கள் விலகி நடக்கும் ஓசை கேட்டது.

கைப்பிடியை விடாமல் கதவை ஓரத்தில் மட்டும் திறந்து வெளியே பார்த்தேன். என் வீட்டையொட்டி அடுத்த பாகத்தில் இருந்த முத்து அண்ணன் வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டிருந்தார்.

“யாருடா அது... கேக்குறேன்ல வெளியே வாங்கடா!”

அவருடைய சட்டை, மூடுதுணிபோல் தொளதொளத்தது. லுங்கி கட்டியிருந்தார். வெளிச்சம் அடங்கி இருள் சூழ்ந்திருந்த நேரம் அது. தாழ்வாரத்து விளக்கின் மஞ்சள் ஒளியில் அவரது நிழல் பூதாகாரமாகத் தெரிந்தது.

`அலைபேசியில் கூப்பிடலாம்!' என நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, முத்து அண்ணன் வீடு திறக்கப்பட்டது. காய்கறி வெட்டும் கத்தியைக் கையில் பிடித்தவாறு கதவைத் திறந்து பாய்ந்தார் முத்து அண்ணன். கதவை ஓங்கித் தட்டப்பட்ட சத்தத்தையும் மிரட்டிய குரலையும் கேட்டு, அவரும் குழம்பியிருக்க வேண்டும். அவர் முகம் தென்படவும் எனக்கும் தைரியம் வந்துவிட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தேன்.

கத்தியைப் பார்த்ததும், பின்வாங்கியவரின் தொனியில் சிறு மாற்றம் உருவானது. ஆனால், சடுதியில் குரலில் கோபத்தை மீட்டு, “என்ன... என்ன... கத்திய நீட்டுற? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். சொல்லுங்க, யாரு ஸ்நாப் எடுத்தது? குடும்பம் நடக்கிற இடத்துல என்ன நினைச்சுட்டிருக்கீங்க, யாரு ஸ்நாப் எடுத்தது?” என்று கத்தினார்.

முத்து அண்ணனுக்கு அவரை ஏற்கெனவே தெரியும்போல. கத்தியை இறக்கிவிட்டு எரிச்சலோடு, “ரௌடி மாதிரி கதவை உடைச்சா, கத்தியோடுதான் வருவாங்க” என்றார்.

``முதல்ல உங்களுக்கு என்ன வேணும், என்ன பிரச்னை, யாரைத் தேடுறீங்க?”

நான் மெதுவாக முன்னேறி, முத்து அண்ணன் பக்கம் துணைக்கு நின்றுகொண்டேன். அதற்குள் சத்தம் கேட்டு மாடியிலிருந்து வீட்டு உரிமையாளரும் கீழே இறங்கிவந்துவிட்டார். “யாரு ஸ்நாப் எடுத்தது? டீசன்சி இல்லாம பொறுக்கித்தனம் பண்ணிட்டி ருக்கீங்க. நான் போலீஸுக்குப் போகப்போறேன்.”

அவர் பேச்சில் எழும்பிய சாராய நெடி, என் மூக்கில் தொற்றியது. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை.

“என்னங்க ஸ்நாப்? நீங்க பாட்டுக்கு வந்து கதவைத் தட்டி, உடைச்சுட்டு என்னென்னவோ பேசுறீங்க.”

எங்கள் வீட்டு உரிமையாளரும் சமாதானத்துக்கு வந்தார்.

“சார், முதல்ல என்ன பிரச்னைன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு நீங்க பாட்டுக்குக் கத்திட்டிருக்காதீங்க.”

“என் பொண்ணு வாசல்ல நின்னுட்டிருக்கிறப்ப, இங்கேயிருந்து போட்டோ எடுத்திருக்காங்க சார். குடும்பம் இருக்கிற இடத்துல என்ன இது அசிங்கம்? பேச்சுலர் பசங்கன்னா, இப்படித்தான் பொறுக்கித் தனம் பண்ணுவாங்களா? நான் போலீஸ்கிட்ட போறேன். மரியாதையா ஸ்நாப்பைக் காமிச்சு டெலிட் பண்ணுங்க.”

வீட்டு உரிமையாளர், என்னையும் முத்து அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தார். முத்து அண்ணன் “இங்கே இருந்தா?” என்று சந்தேகமாகக் கேட்க, எனக்கு சட்டென ஞாபகம் வந்தது. எதிர்வீட்டை ஒரு தரம் திரும்பிப் பார்த்தேன். தனித்திருக்கும் செடிபோல் ஓர் இளம் பெண்ணின் நிழல் உருவம் தெரிந்தது.

“நான்தான் போட்டோ எடுத்தேன். ஆனா, எந்தப் பொண்ணையும் எடுக்கலை.”

பயப்படாமல் வலுவோடு பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், உள்ளே தயக்கம் பற்றிக்கொண்டது. எல்லோரும் என்னைக் குற்றவாளிபோல் பார்ப்பதாகச் சிந்தனை ஓட, அவசர அவசரமாகப் பதிலை ஒப்பிப்பது போல், “நான் என்னைத்தாங்க போட்டோ எடுத்தேன்... செல்ஃபி” எனக் கூறி கால்சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்து நீட்டினேன். சிறிது நேரத்துக்கு முன்பு வெளிவாசலில் நின்று நான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை செல்பேசியில் காண்பிக்கவும் முத்து அண்ணன், “இதைப் பிடி” என்று கத்தியை என்னிடம் கொடுத்துவிட்டு செல்பேசியை அவர் வாங்கிக்கொண்டார்.

மாலை வானத்தில் சூரியன் மறைந்து, நெருப்பு வரிகள்போல் வெளிச்சத்தின் கடைசிக் கீறல்கள் மட்டும் எஞ்சியிருக்க, அதன் அழகில் லயித்து அதையே பின்னணியாகக்கொண்டு என்னைப் படம் எடுத்திருந்தேன். முத்து அண்ணன் அந்தப் படத்தை எதிர்வீட்டுக்காரரின் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டுபோய், “இதுபோய் ஒரு விஷயம்னு இப்படி ஊரைக் கூட்டிட்டீங்களே. இங்கே பாருங்க அவன் அவனைத்தான் போட்டோ எடுத்திருக்கான். செல்ஃபி” என்று சொல்லி, ஏளனமாக உதட்டைச் சுளித்தார். உண்மை தெரிந்தும் எதிர்த்த வீட்டுக்காரரால் சொடுக்கில் கோபத்தைக் கைவிட முடியவில்லை. திணறினார். செல்பேசியைத் தன் கையில் வாங்கிப் பார்த்தார்.

“தம்பி நல்ல பையன். இப்பதான் புதுசா இந்த ஊருக்கு வந்திருக்கான். அப்படியெல்லாம் போட்டோ எடுத்திருக்க மாட்டான். உள்ளே அவன் பெர்சனல் போட்டோஸ்தான் இருக்கும்” என முத்து அண்ணன் எனக்காகப் பரிந்து பேசினார்.

நான் அவரை மறித்து, “அவருக்கு நம்பிக்கை இல்லைன்னா எல்லா போட்டோக்களையும் பார்க்கட்டும்” என்று கூறி, அவருக்கு அருகில் சென்று தொடுதிரையில் கை வைத்து, ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தள்ளிக் காண்பித்தேன். சாராய வாடை, அவஸ்தையாக இருந்தது. அதை முகத்தில் வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டேன்.

`பரவாயில்லை... பரவாயில்லை' என, அவர் உடல்மொழி வேறுபட்ட தன்மைக்கு வந்து “ஸாரி” என்று அலைபேசியை என்னிடமே திருப்பிக் கொடுத்தார். போதையின் கடுத்த நெடியோடு வார்த்தைகள் வெளிப்பட்டன.

“அது வந்து... நம்ம பொண்ணு ரொம்ப நல்ல டைப். மத்தவங்க மாதிரி இல்லை. அதான் பட்டுனு பயந்து நம்மகிட்ட சொல்லிட்டா. பொம்பளப்புள்ள, நாமளும் கவனமாப் பார்த்துக்கணும்ல. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.ஸாரி” - தன் கனத்த கைகளால் என் வலது மணிக்கட்டை அழுத்திவிட்டுத் திரும்பினார்.

முத்து அண்ணனிடமும் எங்கள் வீட்டு உரிமையாளரிடமும் கையைத் தூக்கிக் காண்பித்து, “ஸாரி சார்... ஸாரி” என்றவாறு லுங்கியை இறக்கி விட்டு வெளியேறினார். மன்னிப்புக் கேட்கும் போதுகூட அவரிடம் அலட்டல் குறையவில்லை.

குறுகலான சாலையைக் கடந்து அவர் எதிர்புறம் சென்றதும் நான், “என்னங்க... அவர் இப்படிப் பண்ணிட்டார்? நான் ரொம்பப் பயந்துட்டேன்” என்றேன்.

முத்து அண்ணன் கத்தியை என் வசமிருந்து வாங்கிச் சுழற்றியபடி, “சரியான கிறுக்கனா இருப்பான்போல” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தரச் செடி - சிறுகதை

“ஆமாங்க... நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க. அவன் குடும்பமே அப்படித்தான். பொண்டாட்டி, அவனை விட்டுட்டுப் போயிட்டா. என்னவோ பொண்ணு ரொம்ப ஒழுக்கம் மாதிரி நம்மகிட்டயே கதை விடுறான். ஸ்கூல்தான் படிக்கிறா. அதுக்குள்ளயே அவ கதையைப் பார்த்து ஊரே சிரிக்குது” - வீட்டு உரிமையாளர் அசட்டையாகச் சொல்லி, விளக்கைச் சுற்றி வட்ட மிட்ட சிறுபூச்சிகளைக் காற்றில் விரட்டியபடியே படியேறி மாடிக்குச் சென்றார்.

டப்பாரை மோதி கதவின் மேல்புற மரத்தோல், அடிப்பட்ட முனையில் விரிசலுற்று நாராகப் பிய்ந்து வந்துகொண்டிருந்தது. கடப்பாரையால் கதவை இடித்துக் கொண்டிருந்தவர், பக்கத்து மனையில் கட்டட வேலைசெய்யும் மேஸ்திரி. அவரது கருத்த உடலில் ஆங்காங்கே சிமென்ட் ஒட்டி வெள்ளை பூத்திருந்தது. ஆக்ரோஷத்தோடு அவர் கதவை உடைக்க, வீட்டுக்காரர் அர்த்தம் கூடாமல் கதவையே வெறித்துக்கொண்டிருந்தார். பிறகு திடீரென துணுக்குற்று, கதவை நோக்கி நடந்தார்.

“சார், மேல பட்டுறப்போகுது. தள்ளிவாங்க” என்று குழுமி இருந்தவர்களில் இருவர், அவரைப் பிடித்து இழுத்தனர். அவர் திமிறியபடி கடப்பாரையை வாங்கப் போனார்.

“இருங்க சார், ஒண்ணும் ஆகாது.”

அவரைக் கையோடு பின்னால் தள்ளி எனக்குப் பக்கத்தில் நிறுத்தினார்கள். பரிவாக ஏதாவது அவரிடம் சொல்ல வேண்டும்போல் இருந்தது. அன்று என் வீட்டு வாசலில் வந்து கலாட்டா செய்து, பின் சமாதானமான பிறகு, சாலையில், கடைகளில் என எங்கு பார்த்தாலும் தவறாமல் அவர் எனக்கு வணக்கம் வைப்பார். எப்போதாவது சிரித்தபடி, `நல்லா இருக்கீங்களா?’ என்றும் கேட்பது உண்டு. என் பதிலை எதிர்பார்க்காமல் கேட்டவாக்கிலேயே தன் வேலைக்கும் திரும்பி விடுவார்.

என்னால் அப்போதைய சூழலை யூகிக்க முடியவில்லை. பலவீனமாக அவரிடம் “ஒண்ணும் தப்பா நடக்காது” என்றேன். ஆனால், மீட்டுத் திருத்த முடியாதபடி, `என்னவோ தவறாக நடந்திருக்கிறது' என மனதில் பட்டது.

தாழ் தெறித்துக் கதவு பிளந்தபோது அந்தரத்தில் அசைவற்று நிலைத்துவிட்ட செடிகள்போல் நடுக்கூடத்தில் இரண்டு கால்கள் தரைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தன.

நா
ங்கள் ஒருவரையொருவர் பார்வையில் எதிர்கொண்டது தற்செயலாகவே நடந்தது. அவள் வாசலில் நின்று யாருடனோ செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்திருந்த நான் வெளிக்கதவைச் சாத்தும்போது யதேச்சையாக அவளைப் பார்த்தேன். சில நாள்களுக்கு முன்பு புகைப்படத்தால் நிகழ்ந்த குழப்பம் மனதில் எழ, `சிநேகமாகப் புன்னகைத்து விலகலாம்' எனத் தோன்றியது. ஆனால், அவளது கண்களோ என்னை அழுத்தமாக ஊடுருவித் துளைக்க முயன்றன. எனக்கு அது தொடக்கத்தில் வித்தியாசமாக இருந்தது. அருகில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என மெள்ள நோட்டமிட்டேன்.

வெயில் தன் உஷ்ணக்கரங்களால் ஒவ்வொன்றையும் தொட்டு எரித்துக் கொண்டிருந்த முன்மதிய வேளை - இடைப்பட்டுக் கிடந்த குறுகல் சாலை ஆள் நடமாட்டமற்று சலனமே இல்லாமல் இருந்தது. சுற்றிலும் மனிதர்கள் அல்ல. அவள் என்னைத்தான் சீண்டும்விதமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளுடைய பார்வைக்கு எந்த அர்த்தமும் கொடுக்காமல் இருக்க முயன்றேன். எனினும், மனம் அந்தப் பார்வையைப் புரிந்துகொண்டது. என்னால் அதற்குப் பதில் சொல்லாமல் இருக்க இயலவில்லை. நானும் அதேபோல் அவளை நோக்கினேன்.

மெல்லிய உதட்டு முனை அசைவுகளால் அவள் தன் செல்பேசியில் ரகசியங்களாக உரையாடிக் கொண்டிருந்தாள். அதே நேரம் என் மீதிருந்தும் அவள் கண்களை விலக்கவில்லை. அது அழைப்பு என்றே மனம் சொல்லியது. குறுகுறுப்பு மேலிட, நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். கனவில் உச்சம்கொள்வது மாதிரி நிர்தாட்சண்யத்திலும் அழகு உச்சம்கொள்கிறது போலும். எதன் மீதும் மதிப்பு இல்லாததால் உண்டான கர்வம் அவளில் ஈர்ப்பாகத் திரண்டிருந்தது. ஒரு கையால் அவள் காதோரத்து முடியை நீவியபடி இருந்தாள். உறுத்தாத வெள்ளை நிறம். எனக்கு சட்டென உள்ளுக்குள் அச்சம் சுரக்கத் தொடங்கியது. தூண்டிலிட்டு இரையை முழுங்கக் கவ்வும் அந்தப் பார்வையைத் தாண்டி, அந்த முகத்தில் இன்னமும் முதிராத சிறுமியின் சாயல் ஒட்டிக்கொண்டிருந்தது.

“அப்புறம் என்ன... போன் பேசி முடிச்சதும் அவ கிளம்பி உள்ளே போயிட்டா” என நான் முத்து அண்ணனிடம் நிகழ்ந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தேன். “ம்... என்ஜாய்!” அவர் கிண்டல் செய்கிற மாதிரி சிரிக்க, நான் “ஏங்க... சின்னப் பொண்ணுங்க அது” என்று நெளிந்தேன். அவளை அப்படிப் பார்த்ததே எனக்குள் அவமான உணர்வாக இருந்தது.

மறுதினம் முத்து அண்ணன் பரபரப்போடு வந்து, என்னை அரசுப் பள்ளி மைதானத்துக்கு தன் பைக்கில் கூட்டிச் சென்றார்.

 “அவளைத்தானே சின்னப் பொண்ணுனு சொன்னே. என்கூட டக்குனு வா.”

ஆற்று மணல் கொட்டி, சமீபத்தில்தான் மைதானத்தைச் சமன்செய்திருந்தார்கள். இருளின் அடர்த்திக் கூடிக்கொண்டேயிருக்க, தெருவிளக்கின் வெளிச்சம் படர்ந்து மணல் பரப்பு மினுங்கிக் கொண்டிருந்தது. மைதானத்தில் சிறுவர்கள் கராத்தே பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். முத்து அண்ணன் விரல் நீட்டிய மறுமுனையில் கைவிடப்பட்ட பழைய பள்ளிக் கட்டடம் துண்டாகத் தனித்துக்கிடந்தது. ஓட்டுக் கூரையின் மரச் சட்டங்கள் இற்று உடைந்து, செங்கற்கள் பெயர்ந்து விழுந்த சிதைவின் ஊடே காய்ந்த செடிகள் புதராக மண்டியிருப்பதை, அந்த வழியே செல்லும்போது அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

“அங்கே என்னங்க?” என்று முத்து அண்ணனைக் கேட்டேன்.

“பார்த்துட்டே இரு” என, அருகில் இருந்த மளிகைக் கடைக்கு சிகரெட் வாங்கச் சென்றார் முத்து அண்ணன். அவர் திரும்பி வந்தபோது பள்ளிக் கட்டடத்தின் முன்னால் மனித நிழல்கள் சரிந்து நீள்வதைக் கண்டேன்.

“அவதான்... அவதான்...” திரைப்படத்தில் முக்கியக் காட்சியை விவரிப்பதுபோல் சிகரெட் புகையை ஊதியவாறு முத்து அண்ணன் ஆர்வத்துடன் கூறினார். அங்கு அவளும் இன்னொரு பையனும் இடிபாடுகளிலிருந்து வெளியேறி வந்தார்கள். தொலைவில் அடையாளம் தெரியவில்லை. பின்னர் நிழல்களாக அசைந்து வெளிச்சத்துக்கு வந்தபோதுதான் முகங்கள் தெரிந்தன.

அந்தரச் செடி - சிறுகதை

“என்னங்க இது?” என்றேன் நான் அதிர்ச்சியோடு.

“ஷாக்கைக் குறை. அதான் அன்னிக்கே ஹவுஸ் ஓனர் சொன்னார்ல...”

“ஏங்க, சின்னப் பொண்ணுங்க அது. ப்ளஸ் ஒன் இல்லை ப்ளஸ் டூதான் படிக்கும்.”

“நீ என்ன சும்மா சின்னப் பொண்ணு... ஸ்கூல் பொண்ணுனு சொல்லிட்டிருக்க. இன்டர்நெட்லாம் பார்க்கிறியா இல்லையா?”

நா
ங்கள் பேசிக்கொண்டிருக்கும்​போதே அவள் எங்களைக் கடந்து சென்றாள். அவளது கண்களில் பட்டுவிடக் கூடாது என நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அவளும் எங்களைக் கவனிக்க​வில்லை. அவளோடு கூடவே சிறிது தூரம் நடந்து சென்ற அந்தப் பையன், அவள் தெருமுக்கில் அகன்று மறைந்ததும் அதே வழியில் திரும்பி வந்தான்.

“இரு. இவனை ஏதாவது பண்ணுவோம்”.

சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைத்து​விட்டு முத்து அண்ணன், “ஏ தம்பி... இங்கே வா” என்று அவனை அழைத்தார்.

அவன் அசிரத்தையாகப் பக்கத்தில் வந்தான். அவனிடம் தயக்கமோ, பயமோ இல்லாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“என்னையா கூப்பிட்டீங்க?”

“உன்னைத்தான்டா. என்ன அந்தப் பொண்ணு பின்னாடியே போற... யார் நீ?”

முத்து அண்ணன் அதட்டியபோதும் அவன் அசரவில்லை.

“கூடப் படிக்கிற பொண்ணுண்ணா... சும்மா பேசிட்டுப் போனோம்.”

“என்னடா, கூடப் படிக்கிற பொண்ணு? உன் வீடு எங்கே இருக்கு? வீட்டுல வந்து சொல்லவா?”

முத்து அண்ணன் மேற்கொண்டு கேள்விகளாகக் கேட்க, அவன் திமிராகவே நின்றுகொண்டிருந்தான். பதில் பேசவில்லை. இறுக்கமான அவனது மௌனம் தெனாவெட்டாக இருந்தது.

“பதில் சொல்றா...” என முத்து அண்ணன் மீண்டும் வினவ, அவன் உதட்டுக்குள் என்னவோ முனகினான். எனக்கு அவன் மீது வெறுப்பு வந்தது. இருட்டுக்குள் அந்தப் பெண் ஒளிந்திருந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் எழுந்த இன்னொரு நினைப்பிலும் நான் தவித்துக்கொண்டிருந்தேன். அவமானத்தில் உடல் கூசியது.

`இன்டர்நெட்லாம் பார்க்கிறியா இல்லையா' என்று முத்து அண்ணன் கேட்டது கவனத்தில் வந்தது. இணையக்காட்சிகள் வெட்டி வெட்டி மாறும்போதே ஞாபகத்தில் வெவ்வேறு பள்ளிச் சீருடைகளும் தோன்றி நகர்ந்துகொண்டிருந்தன. எதிரே அந்தப் பையனும் பள்ளிச் சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கவும் எனக்குக் கட்டுப்பாட்டை மீறி ஆத்திரம் உருவாகிவிட்டது. கோபத்துடன், “கேக்கிறாங்கள்ல... பதில் சொல்லாம நக்கலா நின்னிட்டிருக்கே” என்று அவனைக் கன்னத்தில் அறைந்தேன்.

வேறு யாரோ ஒருவரின் செய்கைபோல் அதை என்னாலேயே விலகி நின்றும் பார்க்க முடிந்தது ஆச்சர்யமாக இருந்தது.

யாரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை  நான் உள்பட. பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்த முத்து அண்ணன் உடனே எழுந்து நேராக நின்று, என்னைப் பிடித்து பின்னால் இழுத்தார்.

“நீ போடா” என்று அவர் அவனிடம் சொல்ல, அவன் கன்னத்தில் கை வைத்தபடி என்னை முறைத்துக்கொண்டே நடந்தான்.

“யோவ் என்னய்யா நீ? நான் ஏதோ சும்மா விளையாட்டுக்குக் கூப்பிட்டு மிரட்டினா. டக்குனு அடிச்சுட்ட. சாதுவான ஆள் நீ, உனக்கு ஏன் இப்படி ஒரு கோவம்?”

“தெரியலை.”

எனக்கு வேறு என்ன விளக்கம் சொல்வது எனப் புரியவில்லை.

வளை மின்விசிறியில் இருந்து இறக்கித் தரையில் கிடத்தியபோது, பெரும் காற்றில் வீசி எறியப்பட்ட செடி எனத் துவண்டிருந்தாள். தொட்டியில் இருந்து வெளியே விழுந்த தங்கமீன்போல் அவள் கண்கள் வெறுமையில் குத்திட்டிருந்தன. அவளைத் தாங்கிப் பிடித்துக் கழுத்தைச் சுற்றியிருந்த துப்பட்டாவைக் கழற்றிய மேஸ்திரியே, அவளது கண்ணிமைகளையும் தாழ்த்தி மூடினார். சுடிதாரையும் சரிசெய்தார்.

எல்லோருக்கும் தெரிந்த, ஆனால், யாரும் சொல்ல விரும்பாத ஓர் உண்மை அங்கே வளர்ந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவரின் குரல், “வண்டியை எடுங்க, ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போலாம்.” அவசரத்துக்கு எந்த வண்டியும் கிடைக்காமல்போக, நான் வேகமாகப் போய் என் பைக்கைக் கொண்டுவந்தேன். சிந்திக்கக் கூட அவகாசம் இல்லை. பைக்கில் பெட்ரோல் டேங்கையொட்டி முன்னால் நான் அமர்ந்து கொள்ள, அவளை என் முதுகின் மேல் சாய்த்து வைத்தார்கள்.

“வேகமா, நம்ம 24 மணி நேர ஆஸ்பத்திரிக்குப் போயிடுங்க.”

அவளுக்கு அடுத்து அவளது அப்பா பைக்கில் ஏறிக்கொண்டார். அவர் என்ன நிலையில் இருந்தார் என்பதையே கணிக்க முடியவில்லை. “நீங்க கூட போங்க” என்று மேஸ்திரி அழுத்திச் சொல்லும் வரை, அவர் வண்டியில்கூட ஏறாமல் சும்மாவே நின்றிருந்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை.

கிக்கரை உதைத்து வண்டியை ஓட்டத் தொடங்கினேன். ஒவ்வொரு கணமும் என்னில் நடுக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. அவள் உடல் மேலே படப்பட, காது மடல்களில் வெப்பம் ஏறி வியர்வை சுட்டது. வேகமாகவும் போக முடியவில்லை. எங்கேயாவது மோதி விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கம். மருத்துவமனையை அடையத் தாமதமாகி, அவளைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டால் என்ன ஆகும் என்ற பயம் மனதை அரித்தது. அந்தக் குற்றவுணர்ச்சியைக் கற்பனை செய்யக்கூட துணிவு வரவில்லை. நொடியில் அந்த எண்ணமே பொருளற்றதாகத் திரிந்தது. நான் யோசனைகளின் கறுப்புச் சுழலில் சிக்கித் துடித்துக்கொண்டிருந்த​போது, “தம்பி...” என்று அவளது அப்பாவின் கை பின்னாலிருந்து என் தோளைத் தொட்டது.
எதிர்பாராத அந்தத் தொடுகையின் அதிர்ச்சியில் நான் தடுமாறி, பின் சுதாரித்தேன். அவர் மீண்டும் “தம்பி...” என்று சொல்ல, நான் “சொல்லுங்க” என்றேன்.

“எழவெடுத்தவ... இவபாட்டுக்கு நாண்டுக்கிட்டுச் செத்துப்போயிட்டா. போலீஸ் வந்து கேஸானா...  என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்களாப்பா?”

அந்தக் கேள்வியின் குரூரம், அடிவயிற்றைச் சுருக்கி நெஞ்சில் கரித்தது. ஒரு கணம் அவளது கண்கள் திறந்து மூட, தாட்சண்யமற்ற அந்தப் பார்வையைப் பனிக்கத்தி என முதுகில் உணர்ந்து உதறலோடு பைக்கை நிறுத்தினேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism